Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

குற்றங்களை மூடிமறைக்கும் அறிவியலும், அரசியல் பித்தலாட்டங்களும்

  • PDF

மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள். 

 

இன்று புலிப் பாசிசத்தை அழித்துவிட்ட அரச பாசிசம் தானே அனைத்துமாகி, பிசாசாக மாறி நிற்கின்றது. இந்தப் பாசிச அரசைப் பாதுகாக்;கின்ற, அறிவுசார் தில்லுமுல்லு அரசியல் வேலைகள். புனைபெயரில் உலாவும், புலுடாப் பேர்வழிகள்.

 

இவர்கள் மனிதனுக்கு எதிராக இழைத்த குற்றங்களையும், அதன் அரசியல் அடித்தளத்தையும் பாதுகாக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கு விபச்சாரம் செய்யும் ஊடகத்துறை. இழிவான நடத்தைக்கு ஏற்ப, கள்ள மௌனங்கள். வேறு சிலர் நடத்தவற்றை, விவாதம் என்ற பெயரில் அங்குமிங்குமாகப் புரட்டிப் புணருகின்றனர்.

 

அண்மையில் வெளியான நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் பற்றி, சில அரசு சார்பு ஆணாதிக்க கொசுக்கள் குசுவுகின்றனர். பெண்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதே தவறு என்கின்றனர். வேறு சிலர், இதை புலிகள் தம் பிரச்சாரத்துக்காக செய்தனர் என்கின்றனர். கொஞ்சம் அறிவாக, ஏன் அப்படி இப்படி இருக்க முடியாது, என்கின்றனர். இதன் மேல், இப்படி எத்தனை ரகங்கள். மனித விரோதங்கள். 

 

இப்படி மரணித்த பெண்களை இராணுவம் நிர்வாணமாக்கிய படக்காட்சியை, புலிகள் செய்ததாக நிறுவமுனையும் அறிவுசார் புரட்டையும், அரசியல் அபத்தங்களையும் சந்திக்கின்றோம். காட்சிகள், காட்சியில் உள்ள மாறுதல்கள் என்று பலவற்றை, எமக்கு காட்ட முனைகின்றனர்.

 

கடந்தகால புலிப் பாசிச பிரச்சாரங்கள், அதன் நடைமுறைகளை முன்னிறுத்தி, இது புலிப் பிரச்சாரப் படம் என்று காட்ட முனைகின்றனர். ஏன் அப்படி இருக்க முடியாது, இப்படி இருக்க முடியாது என்கின்றனர். 1986 ம் ஆண்டு விஜிதரன் கடத்தப்பட்டானா அல்லது அவன் தானாக காணாமல் போனானா, என்று பாசிசப் புலிகள் விவாதம் செய்தது இந்த இடத்தில் நினைவுக்கு வருகின்றது. இங்கு இந்தக் குற்றத்தில் இருந்து பேரினவாதத்தை விடுவிக்கும் தீவிர முயற்சியே, இதன் பின்னுள்ள அரசியல் சாரமாக உள்ளது.

 

இன்று புலிகள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக செத்துப்போன பின்னணியில், இதை புலிக்கு எதிராக காட்டமுனைகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்துக்கு சார்பான அரசியல் தில்லுமுல்லுகள் ஊடாக, இதை புரிய வைக்கமுனைகின்றனர்.  

 

இதை நியாயப்படுத்த, எமக்கு கதை சொல்ல முனைகின்றனர். மனிதவிரோத வரலாற்றையே கொண்டது, எமது இயக்கங்களின் வரலாறு. இவை யாவும் எமக்குத் தெரிந்ததுதான்;. இதை மீள இதன் மேல், சொல்வது ஏன். தம் அரசு சார்பு அரசியலையும், தம் மனிதவிரோத நிலையையும் நியாயப்படுத்த, புலியின் கடந்தகாலத்தை சொல்லியே, திரித்து புதுக்கதை சொல்லுகின்றனர். இப்படி சாம்பாராக அவித்து, அரசின் குற்றத்தை புலியின் செயலாக காட்ட பல தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர். 

  

படத்தைச் சுற்றி உள்ளது குண்டு ஏற்படுத்திய புகை, அதனால் அது புலிப் பிரதேசத்தில் இறந்த பெண் என்கின்றனர்? அது கமராவை சுற்றியுள்ள மாசு என்பதை மறுத்து, இப்படி எல்லாம் திரிக்கின்றனர். வேறு சிலர் இது எதையோ மறைக்க எடுத்த, முயற்சி என்கின்றனர். தோற்றவர்கள் தான் இதை செய்யமுடியும் என்கின்றனர். வென்றவர்கள் செய்ய முடியாது என்கின்றனர். இப்படி எத்தனையோ பாசிசக் கதைகள், பாசிசக் கூத்துகள். இதைச் செய்த அரசு, இவைகள் மேல் விசாரணையை மறுக்கின்றது. ஏன் இவர்களும் தான். இதற்கு கடந்தகால கதைகளைச் சொல்லுகின்றனர்.  

  

புலிகள் முதல் இன்றைய கருணா வரை, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியவர்கள் தான்;. இராணுவ வழியிலும், அரசியல் அதிகாரம் மூலமும், பெண்ணை பாலியல் ஊடாகவே பார்த்தவர்கள், நுகர்ந்தவர்கள். பெண்ணின் பாலியலைப் பயன்படுத்தி, அதையே அரசியலாக செய்தவர்கள் தான் இவர்கள்.

 

மக்கள்விரோத அரசியலை அடிப்படையாக கொண்ட இந்தக் குழுக்கள், தம் அரசியலை இழிவான மலிவான குறுக்கு வழியில் கையாண்டு, அனைத்தையும் செய்தவர்கள். அரசுடன் ஓட்டியுள்ள எல்லாம் ஓட்டுக்குழுக்களும் சரி, புலியும் சரி, தம் மக்கள்விரோத நடவடிக்கைகளை தக்கவைக்க பாசிசத்தையே தம் சொந்த அரசியல் வழியாக கொண்ட போது, அவர்கள் எந்த ஈனச்செயலையும் செய்யத் தயாராகவே இருந்தனர்.

 

மணியந்தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண்கள் முதல் பெண் புலிகள் தம் முகாங்களில் சந்தித்த பல பாலியல் வதைகள் வரை, எம்முன் பல ஆணாதிக்க வக்கிரமான கதைகள் உண்டு. இந்த உண்மைகள் ஒருபுறம். 

 

மறுபுறத்தில் இதை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டு, இராணுவம் செய்த பாலியல் குற்றங்களை மூடிமறைக்கின்ற அரசியல் இன்று பல தளத்தில் அரங்கேறுகின்றது. 99.9 சதவீதம் இராணுவம் செய்த ஒன்றை இல்லையென்று மறுப்பது அல்லது 0.1 சதவீதத்தை கொண்ட இதை மூடிமறைக்கவும் திரிக்கவும் முனைவது, இன்று எம்முன் அரசியலாக மாறி நிற்கின்றது. வெட்கம்கெட்ட அரசியல் பித்தலாட்டம். 

 

இப்படி பித்தலாட்டம் மூலம் புலிகள் செய்தது என்கின்றனர். ஏன் புலிகள் செய்திருக்க முடியாது என்றும், அறிவுபூர்வமாக தாம் நினைப்பதாக கருதிக்கொண்டும் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதில் பலர் பேரினவாத பாசிச அரசை விமர்சிப்பது கிடையாது. இதில் பலர் பேர், புனைபெயரில் கில்லாடிகள்.

 

குற்றங்கள் அனைத்தையும் புலியினதாக காட்ட முனையும் இவர்கள், புலிகளின் குற்றத்தை இதற்காக  அள்ளிதெளிக்கின்றனர். இந்தப் பேரினவாத அரசு மக்களின் முதன்மையான எதிரியாக இருந்ததுடன், குற்றத்தின் அளவு மற்றும் அதன் பண்பு புலியை விட பல மடங்கு மிஞ்சியது.

 

ஒரு இனத்தின் உரிமையை மறுத்து, அது நடத்திய வேள்வியில், புலிகளையும் தங்கள் பூசாரிகள் ஆக்கியவர்கள் இந்த அரசு. இதன் மூலம் பலியெடுத்தனர், பலிகொடுத்தனர். இதன் மூலம் புலிகளை அனைத்தினதும் குற்றவாளியாக முன்னிறுத்தி, அரசைப் பாதுகாக்கின்ற நுட்பமான பாசிச அரசியல் இன்று அரங்கேறுகின்றது. புலிகள் அழிந்துவிட்ட நிலையில், அதன் எச்சங்கள் எஞ்சியுள்ளது. இந்த நிலையில் புலிகள் மேல் காறி உமிழ்ந்து, அரசை பாதுகாக்க முனையும் கூட்டம், இன்று பல தளத்தில் பலவிதத்தில் புழுக்கின்றது.

 

இங்கு இதற்கு எதிரான விசாரணை யாரிடம் என்று கேட்பது, அதை கோர மறுப்பதாகும். அரசை பாதுகாக்க செய்யும் முயற்சிதான். விசாரணை என்பது, இந்த சமூக அமைப்பிடம் தான். போராட்டம் என்பது, நாம் வாழும் இந்த சமூக அமைப்பில் தான். அது அனைத்து ஜனநாயக வடிவத்தையும், அடிப்படையாக கொண்டு கையாளும். இதற்கு வெளியில் யாரும் போராட முடியாது. மக்கள் நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்பது, அது இல்லாத போது அதைக் கோருவது வெறும் வரட்டுவாதமாகும். குற்றத்தை மூடிமறைக்க எடுக்கும் முயற்சியாகும். மக்கள் நீதிமன்றத்தை உருவாக்கக் கோருவது, இதில் இருந்து வேறுபட்டது. இவைகள் ஊடான ஒரு அரசியல் பணி.

 

இந்த இடத்தில் இந்தப் படங்கள் குறித்து மேலதிகமான தகவல்கள் தருவது அவசியம். 

 

குறித்த படத்தை கம்பியூட்டர் தொழில் நுட்பப்படி ஆராயும் போது, படம் எடுத்த இரண்டு திகதி கிடைக்கின்றது. மற்றவைக்கு அவை அறிய முடியவில்லை. குறிப்பிட்ட இரண்டு படத்   தொகுதியில் 1.11.2007 அன்றும் 14.05.2008 அன்றும் எடுக்கப்;;பட்டது தெளிவாகின்றது. மற்றவை கண்டறிய முடியவில்லை. படம் வௌ;வேறு திகதிகளில் இவை எடுக்கபட்டவை. இதில் ஒரு தொகுதி படம், குறைந்தது 10 நிமிட இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த பெண்களைச் சுற்றியிருந்த சில பொருட்களை அகற்றிய பின் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அதிரடிக்கொம் இதை எடுத்தவர்கள், அங்கு போட்டோ எடுப்பவர்கள் என்ற குறிப்பையும், இன்னும் பல படங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் பின் அவர்கள் இணையம் தான், பிரபாகரனின் தலையில் இருந்து ஒரு துண்டு, அகற்றும் வீடியோவையும் வெளியிட்டவர்கள்.

 

இந்தச் சம்பவத்தை ஒட்டி திகதி, மற்றும் இதை அடையாளம் காண, இந்த விபரங்கள் சிலருக்கு உதவலாம்.

 

இதைப் புலிகள் எடுத்ததாக நம்பும் சிலர்கள் சொல்லும் வாதத்தை எடுத்து பார்ப்போம்.

 

1. ஏன் 2007, 2008 எடுத்த படத்தை, புலிகள் தம் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தவில்லை?
       
2. படம் பற்றி அதிரடியின் குறிப்பில், இராணுவ பகுதியில் படம் எடுப்பவர்களால் தமக்கு கிடைத்ததாக கூறுகின்றனர். அங்கு நடந்ததைத்தான் அவர்கள் எடுக்க முடியும்;. இதை அவர்கள் இராணுவப் பகுதியில் வைத்து, எடுத்ததை உறுதி செய்கின்றது. ஒரு படத்தொகுப்பில் இருந்த பொருட்களை அகற்றி படம் எடுத்தமுறை, அவர்களின் தொழில் முறையை வலுவூட்டுகின்றது. (ஈராக் சிறையில் படத்தை எடுத்தவர்களின் நோக்கம் போல், இதுவும் ஓத்துப்போகின்றது.)  

 

3. புலிகள் பிரச்சாரத்துக்காக எடுத்து இருந்தால், இப்படி முரண்பாடாக படம் எடுக்கமாட்டார்கள். நடமாடியவர்களின் கால்கள் தெரிய, பொருட்கள் தெரிய, விதம் விதமாக எடுக்க மாட்டார்கள். அவர்களின் பாசிச கட்டமைப்பிலான கிரிமினல் வடிவம் என்பது, ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்று. அது தவறை அனுமதிக்காது. அரச பாசிசக் கிரிமினல் கட்டமைப்பு, இன்றுதான் அந்த நிலையை எட்டி வருகின்றது.

 

உதாரணமாக பிரபாகனை முன் கூட்டியே கருணா உடனிருக்க படைமுகாம் தளபதியுடன் சேர்ந்து கொன்றவர்கள் தான், மீளவும் வீடியோவுக்கு முன்னால் மீண்டும் நடிக்கின்றனர். இதில் அரச பாசிசம் தன் கிரிமினல் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதில் உள்ள குறைபாடு, பல முரணபட்ட தகவல்களையும் உளறல்களையும் தருகின்றது. இது அதை அம்பலமாக்குகின்றது.

 

இந்த வகையில் புலியின் கிரிமினல் நடிவடிக்கைகள் தன்மையில் வேறுபட்டவை. இதை அதன் வெளிப்படுத்தும் முறையில் இருந்து அனுமானிக்க முடியும்.

இப்படியிருக்க, பேரினவாத இராணுவத்தின் பெண்களின் மேலான பாலியல் குற்றங்களும், ஆணாதிக்க வக்கிரங்களும் வகைதொகையற்றது. கிருஷ்சாந்தி, கோணேஸ்வரி தொடக்கம் எத்தனையோ வகை தொகையற்ற சம்பவங்கள். கொக்காவில் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டனர். ஐ.நா படையாக சென்ற இலங்கை இராணுவம், அங்கு பெண்களைக் குதறியபோது அந்தப் படைப்பரிவு வெளியேற்றப்;பட்டது. அந்த நாய்களும் வன்னியில் தான் மேய்ந்தது. மகிந்த சிந்தனை ஆட்சிக்கு வந்த பின், குறைந்தது 3000 பேர் மகிந்த சிந்தனைப்படி காணாமல் போனார்கள். அதில் பாதிப்பேர் உடல்கள் வீதிகளில் கிடத்தன. அவை அனைத்தும் நிர்வாணமாகத்தான்; கிடைத்தன.

 

பேரினவாத சித்திரவதை முகாங்கள் அனைத்தும் உடல் நிர்வாணத்தையும், பாலியல் சித்திரவதையையும் உள்ளடக்கியது. ஆண், பெண் வேறுபாடுகள் இதில் கிடையாது. இதில் தப்பியவர்களைக் கேட்டுப்பாருங்கள்.

 

அமெரிக்க சிறையில் நடந்த பாலியல் வதைகள் பொய்யென்றும், அவை அல்கைதாவால் பிரச்சாரத்துக்காக செய்யப்பட்டவை என்று, சிங்களப் பேரினவாத எடுபிடிகளின் தர்க்கங்கள் நிறுவினாலும் இனி ஆச்சரியமல்ல.

 

பி.இரயாகரன்
12.06.2009       

Last Updated on Friday, 12 June 2009 12:07