புலி அரசியல் செத்துப் போகவில்லை. தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது. புலித் தலைமைக்கு என்ன நடந்தது என்பது, எந்த நேரமும் ஒரு அரச செய்தியாக வெளிவரலாம். அது கைது அல்லது மரணம் அல்லது அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பது, இதில் நிச்சயமான ஒன்று.
ஆனால் கடந்த 60 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்த அரசியல் செத்துவிடவில்;லை. கடந்த 30 வருடமாக ஆயுதமேந்தி, தமிழ் மக்களை ஏமாற்ற அது போட்ட வேஷம் கலைந்துவிடவில்லை.
இந்த வேஷத்தை காப்பாற்ற, அது பாசிச சர்வாதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் ஏவியது. ஆயிரம் ஆயிரம் மக்களை, இதற்காக நரை வேட்டையாடியது. இரத்தமும் கண்ணீருமின்றி மக்கள் வாழவில்லை. தேசமோ விடியவில்லை. மக்களின் தேசியத்தை, அதன் ஆன்மாவை குழி தோண்டிப் புதைத்தனர்.
ஆனால் இதை அண்டி பலர் பிழைத்துக் கொண்டனர். கோடிகோடியாக சம்பாதித்துக் கொண்டனர். புலி முதல் புலியெதிர்ப்பு வரை இந்தப் பிழைப்பு அரங்கேறியது. இரு பக்கத்திலும் சிலருக்கு சொத்துக் குவிந்தது.
இப்படி மக்களை ஏமாற்றி ருசி கண்ட பூனைகள், இதை எப்படி தொடருவது என்பதுதான், அவர்களின் புதுப்பிரச்சனை. இதற்காக அவர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ள விடையம், பூகோள மயமாக்கலில் உள்ள முரண்பாடு.
இலங்கை பேரினவாத யுத்தத்தின் மூலம் சீனா மற்றும் ருசியாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துள்ளது. இதற்கு எதிரான மேற்கு மற்றும் அதனுடன் நிற்கும் இந்திய முரண்பாட்டை, தமிழர்கள் ஆதரித்து நிற்கக் கோருகின்ற அரசியல். இதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்கின்றனர். இப்படி அரசியலில் மீளவும் பூச்சூட்டிக் கொள்ளமுனைகின்றனர்.
கடந்த 60 வருடத்திலும், அதில் குறிப்பாக 30 வருட ஆயுதப் போராட்டத்தின் போதும் இந்த வலதுசாரி அரசியல், எப்போதும் மக்கள் அரசியலை நிராகரித்து வந்தது. இதற்கு மாறாக அனைத்து மக்கள் விரோத அரசியலையும் ஆதரித்து வந்தது. இப்படி மக்கள் அரசியலை மறுத்து, மக்கள் விரோத அரசியலை முன்னிறுத்திப் பிழைப்பதே வலதுசாரி அரசியல் அடிப்படையாகும்.
இன்றைய இந்த அவலமான நிலையில் கூட, மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்ய தயாராகவில்லை. மாறாக மேற்கு ஏகாதிபத்தியத்தை ஆதரிக்க கோருகின்றனர். கடந்த காலத்தில் இந்த அரசியல் மூலம், மக்களை நடுத்தெருவில் விட்டு பிழைத்தவர்கள் தான் இவர்கள். மீண்டும் வேஷம் போட்டு குலைக்கின்றனர்.
ஏகாதிபத்திய முரண்பாட்டின் பின் சென்று, தமிழ் மக்களின் நலனை அடைவது பற்றி புதிய கதை கூறத்தொடங்கிவிட்டனர். 30 வருடமாக ஏக தலைவர், எல்லாம் புலிகள் என்று சொல்லி ஒரு இனத்தையே அழித்தவர்கள், அவர்களின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவர முன்பே, இதை சொல்லத் தொடங்கிவிட்டனர்.
ஏகாதிபத்தியம் தங்கள் சொந்த நலனை அடைவதற்கு, இந்த பிழைப்புவாத தமிழ் தலைமை அதற்கு அரசியல் ரீதியாக உதவக் கோருகின்றது. இதன் மூலம் தமிழன் நலனை அடைய முடியும் என்கின்றது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனத்துக்கு உதவக்கோருகின்றது. சொந்தபந்தங்கள் ஊடாக உதவக் கோருவதை அது மறுக்கின்றது. அது எப்போதும் மக்களுக்கு எதிராகவே சிந்திக்கின்றது.
60 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்தவர்கள், இதே போல் எத்தனை கதைகளை சொன்னார்கள். இன்று பூகோள மயமாக்கல் முரண்பாட்டைக் காட்டி, அதில் ஒன்றை ஆதரிப்பதன் மூலம் தமிழன் பிழைக்க முடியும் என்கின்றான்.
இதன் மூலம் தாம் தமிழனை ஏமாற்றி பிழைக்கமுடியும் என்பதுதான், இதன் பின்னுள்ள எதார்த்தம்.
பி.இரயாகரன்
16.05.2009