Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

  • PDF

தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ,

சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் வெளியான புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது,  வாசகர்கள்  எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாரியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?

ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.

“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.

“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடருணும் உங்கள் ஆதரவுதான்.

- அன்புடன் ஆசிரியர்.

ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.

குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.

ஆசிரியர் குழு

ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.

செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.

குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து  அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ‘அடுத்தாத்து அம்பு

ஊத்தை கவனிச்சேளா ஓய்’ என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இலாபமே துணை

வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.

குமுதத்தின் இட ஒதுக்கீடு

விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் - 5, அரசியல் - 15, சினிமா - 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு - 2, மருத்துவம் - 5, வாசகர் கடிதம் - 2, உலகச் செய்தி - 2, ஜோக் - 3, சிறுகதைகள் - 9, ஒரு பக்க கதைகள் - 4, புதிர் போட்டி - 2, தொடர் கதைகள் - 15, உணவு - 2, சுற்றுலா - 4, பேஷன் - 4, வேலை, கல்வி - 3, கவிதை - 2, வியாபாரம் சுய முன்னேற்றம் - 5, நூல் அறிமுகம் - 1, பக்தி ஆன்மீகம் - 5, அரசு கேள்வி பதில் - 2, இதரவை - 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.

இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு

படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,

செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை - பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.

இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் - ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு - லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?

புகைப்படங்கள்

குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் - கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.

ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது ‘வாரியா’ என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.

மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

விளம்பரங்கள்

‘பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! - மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.

குமுதவியல்

குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.

குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் - சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் “சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை” என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.

எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு - அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.

அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். “வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் - இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.

இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து - பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.

காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.

முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.

மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி - ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். ‘குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்’, விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் ‘பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.

பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ - பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. ‘இந்து’ உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.

பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய ‘பிசினஸ் மகாராஜாக்கள்’ குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.

பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.

இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான். வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.

தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும். மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.

குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை வளத்தையும் காப்பாற்றுங்கள் !

-புதிய கலாச்சாரம், மார்ச் - 2000

பின் குறிப்பு: இதே ஆய்வு பிற ‘குடும்ப’ பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். டப்பா வேறு, லேகியம் ஒன்று.

 

வினவு

Last Updated on Tuesday, 17 March 2009 06:52