Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வழகுரைஞர்கள் மீதான தாக்குதல் : அம்பலமானது போலீசின் உண்மை முகம்! தி.மு.க.வின் பொய் முகம்!

வழகுரைஞர்கள் மீதான தாக்குதல் : அம்பலமானது போலீசின் உண்மை முகம்! தி.மு.க.வின் பொய் முகம்!

  • PDF

பிப்ரவரி 19 காக்கி உடை ரவுடிகளின் லத்திக் கம்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை இரத்தத்தில் முக்கி எடுத்தன. ஜனநாயகத்தின் மற்ற தூண்களெல்லாம் உளுத்து உதிர்ந்துவிட்ட நிலையில், நீதிமன்றம் என்ற ஒற்றைத்

 தூண்தான் அதனைத் தாங்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும், இந்திய ஜனநாயகத்தின் மீதான மக்களின் இறுதி நம்பிக்கையே நீதித்துறைதான் என்றும் ஆளும் வர்க்க அறிஞர்களால் போற்றிப் புகழப்பட்ட நீதிமன்றத்தின் வாயிற்கதவுகளை இழுத்து மூடிவிட்டு, லாக் அப்பில் சிக்கிய கைதியை அடித்துத் துவைப்பதைப் போல வழக்குரைஞர்களைத் தேடித்தேடி அடித்து நொறுக்கியது போலீசுப்படை. இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற நீதிபதிகளும் போலீசின் தடியடிக்குத் தப்பவில்லை. புனிதக் கருவறையின் போற்றுதலுக்குரிய தெய்வங்களைப் போல பாவிக்கப்பட்ட செங்கோல் தாங்கிய நீதிபதிகளை விரட்டியடித்துவிட்டு, "நானே அரசு, நானே நீதி' என்று போலீசின் தடிக்கம்பு பிரகடனம் செய்து கொண்டது.


நீதிபதிகளை போலீசார் ஓட ஓட விரட்டியதையும், அவர்கள் மீது விழுந்திருக்க வேண்டிய அடியைத் தாங்கள் வாங்கிக் கொண்டு, நீதிபதிகளின் உயிரை வழக்குரைஞர்கள் பாதுகாத்ததையும் நேரலை ஒளிபரப்பில் நாடே கண்டது. நீதிபதிகளின் அதிகாரம் செல்லாக்காசாகிவிட்டதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்தான் கண்டனர். எனினும் தமது அதிகாரம் அரசியல் சட்டப் புத்தகத்தில் இன்னமும் பாதுகாப்பாகவே இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கருதுவதால், இப்பிரச்சினையில் தலையிட்டிருக்கிறது.

 

''யாருடைய உத்தரவின் பேரில் உயர்நீதி மன்றத்துக்குள் போலீசார் நுழைந்தார்கள்?'' என்ற ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்குமாறு கோரியது உச்சநீதிமன்றம். தமிழக அரசு அளித்த பதிலில் அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இல்லை. சேது சமுத்திரம் பிரச்சினையில் அரசுக்கு எதிராகச் சீறி வெடித்த உச்சநீதிமன்றம், தன்னைத் துச்சமாகக் கருதும் தமிழக போலீசின் அலட்சியத்தையும் திமிரையும் கண்டு கொதித்திருக்க வேண்டும். மாறாக, ''உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. சொல்ல மறுக்கிறீர்கள்'' என்று முனகிவிட்டு, ''நடந்த சம்பவங்களை நாங்களே விசாரித்துக் கொள்கிறோம்'' என்று கூறி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவை இந்தப் பணிக்காக நியமித்திருக்கிறது.


''தாக்குதலுக்குப் பொறுப்பான போலீசு அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யவேண்டும்'' என்ற வழக்குரைஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக, அவர்களில் நால்வரை இடமாற்றம் செய்ய மட்டுமே உத்தரவிட்டிருக்கிறது. ''ஒரு உறைக்குள் இரண்டு வாட்கள் இருக்கலாகாது'' என்பதைப் பட்டுத் தெரிந்து கொண்டதால், உயர்நீதி மன்ற வளாகத்தினுள் இருக்கும் போலீசு நிலையத்தையும் காலி செய்யச் சொல்லியிருக்கிறது. போலீசோ ''வெளியே வா பாத்துக்கிறேன்'' என்று காத்திருக்கிறது.


இத்தகைய சூழலில் ''வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு நீதிமன்றத்துக்கு உள்ளே செல்லுங்கள்'' என்ற உச்ச நீதிமன்றத்தின் கோரிக்கையை வழக்குரைஞர்கள் யாரும் பொருட்படுத்தக்கூட இல்லை. ''நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம்'' என்று 25ஆம் தேதி மாலையே அறிவித்து விட்டார்கள் வழக்குரைஞர்கள். தனது அதிகாரம் மதிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தபோதும், உச்ச நீதிமன்றம் உணர்ச்சிவயப்படவில்லை. தன் முன்னால் விரிந்து கொண்டிருக்கும் நெருக்கடியின் தன்மை நீதிபதிகளுக்குப் புரிந்திருக்கிறது. சிக்கலான வழக்குகளுக்கு "வாய்தா' மூலமே தீர்வு கண்டிருக்கும் இந்திய நீதித்துறை, தன்னுடைய சொந்த அதிகாரம் குறித்த வழக்குக்கும் "வாய்தா' போட்டிருக்கிறது.


மக்கள் உரிமைக்காகப் போராடும் வழக்குரைஞர்களை போலீசார் கொலை செய்வதும், தங்களது குற்றங்களை அம்பலப்படுத்தும் வழக்குரைஞர்களைக் குறி வைத்துத் தாக்குவதும் நமக்குப் புதிய செய்திகளல்ல. குர்கானின் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், நந்திகிராம் மக்கள் மீதும், ஒரிசாவின் பழங்குடியினர் மீதும், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் புதிதல்ல. ஆனால், அதே அளவு மூர்க்கத்துடன் வழக்குரைஞர்கள் மீது போலீசு பாய்வதற்கான காரணம் என்ன என்பதே கேள்வி. பிப்ர வரி 17 அன்று நீதிமன்ற அறையில் சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்டதுதான் இப்பிரச்சினைக்கு முதற்காரணம் என்று ஊடகங்கள் கூறுவதால் அதிலிருந்தே தொடங்குவோம்.


···


பார்ப்பன ஆதிக்கத்தைக் கட்டிக்காப்பது என்ற பொது நோக்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் தனக்குத் தொடர்பில்லாத சிதம்பரம் கோயில் பிரச்சினையில் மூக்கை நுழைத்தார் சு.சாமி. கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவில் ''தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும்'' என்று கோரி உயர்நீதி மன்றத்தை அணுகினார். இதே வழக்கில் தீட்சிதர்களுக்கு எதிராகத் தன்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரி ஒரு வைணவப் பெரியவரும் மனுச்செய்திருந்தார். பிப்ரவரி 17 வரை ஈழப்பிரச்சினைக்காக நீதி மன்றப் புறக்கணிப்பில் வழக்குரைஞர்கள் ஈடுபட்டிருந்ததால், தனது வழக்கைத் தானே முறையிடுவதற்காக எதிர் மனுதாரரான ஆறுமுகசாமியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.


வைணவப் பெரியவரும், 80 வயதான ஆறுமுகசாமியும் ஒரு ஓரமாக நின்றிருக்க, நீதிமன்றத்தின் உள்ளே ஆர்ப்பாட்டமாக நுழைந்த சு.சாமி, நேரே வழக்குரைஞர்களுக்காகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று தெனாவெட்டாக அமர்ந்தார். தீட்சிதர்களின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை அன்றைய பட்டியலில் 56வது இடத்தில் இருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவே இன்னும் அனுமதிக்கப்படாத நிலையில், அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்திருந்த சு.சாமி, தன்னுடைய வழக்கை முதல் வழக்காக எடுத்துக்கொள்ளவேண்டுமென நீதிபதியைக் கோரினார். நீதிபதி நிராகரித்தார்.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டபடியே வந்து நீதிமன்றத்தினுள் நுழைந்தனர். சிறிது நேரத்துக்குப் பின் எங்கிருந்தோ வந்த முட்டை ஒன்று சு.சாமியின் முகத்தில் மோதி உடைந்தது. சு.சாமிக்கு எதிரான முழக்கங்கள் நீதிமன்ற அறையெங்கும் எழுந்தன. நீதிபதியின் மேசைக்கு அருகே ஓடி ஒளிந்தார் சு.சாமி. வெளியில் நின்றிருந்த போலீசு உள்ளே நுழைந்தது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெறும் என அறிவித்தனர் நீதிபதிகள். நீதிமன்றத்துக்கு வெளியே வந்த சு.சாமி புலி ஆதரவாளர்கள்தான் தன்னைத் தாக்கிவிட்டார்கள் என்றும் தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் கருணாநிதி ஆட்சியைக் கலைக்கக் கோரி தான் உச்ச நீதி மன்றத்துக்குப் போகப் போவதாகவும் ஊடகங்களிடம் அறிவித்தார்.


''முட்டையடிக்கெல்லாம் ஆட்சிக்கலைப்பா?'' என்று ஊடகங்கள் எள்ளி நகையாடவில்லை. சு.சாமியின் முகத்தில் முட்டை வழிவதைக் காணப்பொறுக்காத இந்து நாளேடும் தினமணியும் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக அலறின. வழக்குரைஞர்களைக் கண்டித்துத் தலையங்கம் எழுதின. உடனே முட்டையடித்தவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தது கருணாநிதி அரசு. தனிப்படைகள் அன்று நள்ளிரவே பல வழக்குரைஞர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரை மிரட்டத் தொடங்கின.


"அரசாங்க முட்டை அம்மியையும் உடைக்கும்' என்பது முதுமொழி. அழுகிய முட்டை அரசாங்கத்தையும் உடைக்கும் என்பது புதுமொழி. சுப்பிரமணியசாமி என்ற பார்ப்பனத் தரகனின்மீது முட்டை வீசப்பட்டவுடனே, கருணாநிதி அரசு துடித்து எழுந்து நின்றது. பிப்ரவரி 19ஆம் தேதியன்று சிதம்பரம் வழக்கின் அடுத்த வாய்தாவுக்கு வந்தார் சு.சாமி. அந்த ஒரு நபரின் "ஜனநாயக உரிமையை' பாதுகாப்பதற்காக கமாண்டோக்கள், அதிரடிப்படைகள், ஆயுதப்படைகள் என எல்லாவிதமான படைகளும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டன. இத்தனை ஏற்பாடுகளுக்குப் பிறகும் வழக்கை மீண்டும் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார் தலைமை நீதிபதி. இந்த அதிபயங்கரமான "முட்டை வீச்சு சம்பவம்' குறித்து ஆராய்வதற்கு 5 நீதிபதிகள் கொண்ட ஃபுல் பெஞ்சும் அமைக்கப் பட்டது.


17ஆம் தேதியன்று முட்டை வீச்சு சம்பவத்துக்கு முன்னதாக "வழக்குரைஞர்களை இழிவாகவும், தரக்குரைவாகவும், ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலும் சு.சாமி பேசியதாக' ரஜினிகாந்த் என்ற வழக்குரைஞர் உயர்நீதிமன்றக் காவல் நிலையத்தில் 19ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் புகார் கொடுத்தார். முதலில் புகாரைப் பதிவு செய்ய மறுத்தது போலீசு. பின்னர் வழக்குரைஞர்கள் திரளாகச் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தவே, சு.சாமி மீது தீண்டாமைக் குற்றம் உள்ளிட்ட பல குற்றப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால் அதற்குப் பிணையாக ''முட்டை வீச்சு வழக்கில் நாங்கள் தேடிக்கொண்டிருக்கும் வழக்குரைஞர்களை ஒப்படைக்க வேண்டும்'' என்று நிபந்தனை விதித்தது. போலீசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று எதிர்த்தார்கள் வழக்குரைஞர்கள். காவல் நிலைய வாயிலிலேயே மறியல் செய்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது இந்தப் போராட்டம். இதன் ஊடாக ஏற்கெனவே நீதிமன்ற வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த போலீசு படை தாக்குதலுக்குத் தயாராகி விட்டது. மென்மேலும் போலீசு படைகள் குவிக்கப்பட்டன.
மறியல் போராட்டத்தில் முன்நின்ற வழக்குரைஞர் பார்த்தசாரதியைக் குறிவைத்துத் தாக்கி வேனில் ஏற்றினர். அவருடன் மேலும் 16 பேர் போலீசு வேனுக்குள் தூக்கி வீசப்பட்டனர். எல்லா நீதிமன்றங்களும் இயங்கிக் கொண்டிருந்ததால், பல்வேறு இடங்களில் சிதறியிருந்த வழக்குரைஞர்களை செய்தியைக் கேள்விப்பட்டு பதற்றத்துடன் ஒன்று குவியத் தொடங்கினர். போலீசின் தாக்குதல் தொடங்கியது.


தொலைக்காட்சிக் காமெராக்களில் நாம் கண்ட போலீசின் வெறியாட்டம் மிகவும் குறைவு. வழக்குரைஞர்கள் போலீசின் மீது கல்லெறிவதைப் போலவும், அதற்குப் பதிலடியாகப் போலீசும் கல்லெறிவதைப் போலவுமே பல தொலைக்காட்சிகள் இந்தச் சம்பவத்தைச் சித்தரித்தன. கூடுதலாக அதிரடிப்படையினர் கார்களையும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கும் காட்சியும் ஒளிபரப்பப் பட்டது. போலீசு வன்முறையைப் படம் பிடித்த மக்கள் தொலைக்காட்சியின் காமெராவை உடைத்து, அந்த நிருபரையும் அடித்து அறையில் வைத்துப் பூட்டியது போலீசு. காமெராக்கள் தங்களை நோக்கித் திரும்பவே கூடாது என்பதை போலீசு உத்திரவாதம் செய்து கொண்டது. தப்பித் தவறி பதிவு செய்யப்பட்ட போலீசு வெறியாட்டம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாமல் இருப்பதை அரசு உத்திரவாதம் செய்து கொண்டது.


சுமார் 3 மணிக்குத் தொடங்கிய போலீசின் கொலைவெறித் தாண்டவம் இரவு 8 மணி வரை நீடித்தது. அகப்பட்ட வழக்குரைஞர்கள் அனைவரும் அடித்துத் துவைக்கப் பட்டனர். பெண் வழக்குரைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தலைமீது இறங்கிய தடிக்கம்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தலைமேல் கையை வைத்து மறைத்துக் கொண்ட வழக்குரைஞர்கள் பலருக்கும் விரல்கள் சுக்கல் சுக்கலாக நொறுங்கின. கால் எலும்பும் பாத எலும்புகளும் முறிக்கப்பட்டவர்கள், மண்டை உடைந்தவர்கள் ஏராளம். போலீசை எதிர்த்து நின்றவர்கள் மட்டும் தாக்கப்படவில்லை. வழக்குரைஞர்களின் அலுவலகங்களுக்குள்ளும், நீதிமன்ற அறைகளுக்குள்ளும், பார் கவுன்சிலிலும், நூலகத்திலும் புகுந்து தாக்கியது போலீசு. நீதிமன்றத்தின் அலுவலக ஊழியர்களும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. நூலகம், மேசைகள், சன்னல்கள், வழக்குரைஞர் சங்கத்தின் தொலைக்காட்சிப் பெட்டி, குழல் விளக்குகள், மின்விசிறிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. கறுப்பு பாண்ட் வெள்ளை சட்டை போட்ட யாரும் அடிக்கு தப்பவில்லை. அவர்கள் பொதுமக்களா, நீதிபதிகளா என்ற என்ற கேள்விக்கே இடமில்லை. வளாகத்திற்குள் இருக்கும் கீழமை நீதிமன்றங்களில் தங்கள் அறைக்குள் அமர்ந்திருந்த நீதிபதிகளும் இழுத்துப் போட்டு அடிக்கப்பட்டனர்.


வெறிக்கூச்சலும், அலறலும், அழுகையும், கண்ணாடிகள் நொறுங்கிச் சிதறும் சத்தமும் நீதிமன்ற வளாகத்தில் நிரம்பியிருந்த அந்த நேரத்தில் தலைமை நீதிபதி முகோபாத்யாயா, தனது அறையில்தான் அமர்ந்திருந்தார். சுற்றிலும் பிற நீதிபதிகள். சட்டத்தின் ஆட்சி தம்மைச் சுற்றிலும் நொறுங்கிக் கொண்டிருப்பதை அவர்களால் கேட்க முடிந்தது. ஆனால் பேச முடியவில்லை. தலைமைச் செயலரையோ, உள்துறைச் செயலரையோ, முதலமைச்சரையோ, டி.ஜி.பி யையோ, காவல் துறை ஆணையரையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச தலைமை நீதிபதியால் இயலவில்லையா அல்லது பேசிய பின்னும் தாக்குதல் நிற்கவில்லையா என்ற கேள்விக்கு வழக்குரைஞர்களுக்கு விடை கிடைக்கவில்லை.


கைகள் நடுங்க, உதடுகள் துடிக்க தமது அறைக்குள் பதுங்கியிருந்த அந்த அதிகாரப் பொம்மைகளை வழக்குரைஞர்கள் வெளியே அழைத்து வந்தனர். சமாதானம் பேச வந்த நீதிபதி ஆதித்தனின் தலையில் லத்தி இறங்கியது. அவரது உயிரைப் பாதுகாத்து அழைத்துச் சென்றார்கள் வழக்குரைஞர்கள். போலீசு வேன்களில் கற்கள் வந்து இறங்குவதைத் தன் கண்ணால் பார்த்தார் நீதிபதி சுதாகர். எனினும் யாரும் எதுவும் செய்ய இயலவில்லை.


''செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்தான் அதிரடிப்படையினர், நீதிபதியைத் தாக்கிவிட்டார்கள் போலும்'' என்று கருதிய தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், தமது அங்கிக்குள் புகுந்துகொண்டு நீதிபதிக்குரிய செங்கோலை ஏந்திய வண்ணம் வெளியே வந்தனர். நீதித்துறையின் அதிகாரம் குறித்து ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் மாயைக்கு ஆட்பட்டிருந்த சில வழக்குரைஞர்கள், சிலுவையைக் கண்ட டிராகுலா போல செங்கோலைக் கண்டவுடன் லத்திக்கோல் ஓடிப் பதுங்கிவிடும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் அத்தகைய அதிசயம் எதையும் தலைமை நீதிபதியால் அங்கே நிகழ்த்த முடியவில்லை.


தங்களது தடிக்கம்பைக் காட்டிலும் பெரிய தடிக்கம்பை ஏந்தி வரும் "வக்கீல்களை' கண்டவுடன் அதிரடிப்படையின் ஆவேசம் மேலும் கூடியது. நிலைமையைப் புரிந்து கொண்ட நீதிபதிகள், தமது செங்கோலின் அதிகாரம் செல்லுபடியாகும் இடமான நீதிமன்ற அறைக்கே திரும்பினர்.


மாலை 6 மணிக்கெல்லாம் உயர்நீதி மன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையம் எரியத் தொடங்கியது. தயாராக வெளியில் காத்திருந்த கூடுதல் படைகள் நீதிமன்ற வளாகத்தை நிரப்பின. தாக்குதல் நீதிமன்றத்துக்கு வெளியேயும் நீண்டது. நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பாரிமுனைப் பகுதியில் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது போலீசு. நீதிமன்றத்துக்கு எதிரில் உள்ள தெருக்களில் இருக்கும் வழக்குரைஞர்களின் அலுவலகங்கள் தேடித்தேடி நொறுக்கப்பட்டன.


வழக்குரைஞர்கள் மீது மட்டுமல்லாமல், நீதிமன்றம் என்ற நிறுவனத்தின் மீதே போலீசுத்துறையின் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் கொலைவெறி, இந்தத் தாக்குதலில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. நீதிமன்ற வளாகத்தின் எல்லா வாயிற்கதவுகளையும் அடைத்துவிட்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கியது போலீசு. ரத்தக் காயங்களுடன் தப்பி ஓடிய வழக்குரைஞர்கள் தவிர மற்றவர்கள், நீதிமன்ற அறைகளுக்குள் சரணடைந்தனர்.


தலைமை நீதிபதியின் தலைமையில் அவசர அமர்வு தொடங்கியது. களத்தில் செல்லுபடியாகாத தமது அதிகாரத்தை காகிதத்தின் மீது செலுத்துவதைத் தவிர நீதிபதிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அன்றிரவுக்குள் நீதிமன்ற வளாகம் முழுவதையும் போலீசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. நீதிமன்றத்துக்கு "விடுமுறை' அறிவித்தார் தலைமை நீதிபதி. உயர்நீதி மன்றத்தில் "அமைதி' நிலைநாட்டப்பட்டு விட்டது என்று அறிவித்தார் காவல்துறை ஆணையர்.


பிப்ரவரி 19 தாக்குதல் பற்றி அறிந்தவுடனேயே தமிழகமெங்கும் வழக்குரைஞர்களின் போராட்டங்கள் தொடங்கின. நீதிமன்றங்கள் முடங்கின. கிரிமினல்களுடனும் ரவுடிகளுடனும் மாமன்மச்சான் உறவு கொண்டுள்ள போலீசு, ஆங்காங்கே பேருந்து எரிப்புகளையும் பெட்ரோல் குண்டு வீச்சுகளையும் அரங்கேற்றி வருகிறது. உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி மார்ச் 2ஆம் தேதிக்குள் நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடாவிட்டால், இதனை தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றே கருத வேண்டியிருக்கும் என்று வழக்குரைஞர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் கருணாநிதி. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் விசாரணையும் தொடங்கியிருக்கிறது.


···


போலீசு நடத்தியிருக்கும் இந்தக் கொலைவெறியாட்டத்தை ''தன் ஆட்சியைக் கலைக்க நடந்த சதி'' என்கிறார் கருணாநிதி. ஈழப்போராட்டத்தை ஆறப்போட்டிருக்கும் ராமதாசோ, ''இது ஈழப்போராட்டத்தைத் திசைதிருப்ப நடந்திருக்கும் சதி'' என்கிறார். ''தி.மு.க. ஆட்சியைக் கலைக்க போலீசு நடத்தும் சதி'' என்கிறார் திருமா.


ஊடகங்களோ இதனை "வக்கீல் போலீசு மோதல்' என்றே சித்தரித்து வருகின்றன. ''சட்டத்தை மீறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள வழக்குரைஞர்களின் மீது சட்டத்தை நிலைநாட்டுவதற்காக, போலீசார் வேறு வழியின்றி எடுத்த நடவடிக்கைதான் இந்த தடியடி; சில வரம்புமீறல்களை வேண்டுமானால் போலீசார் தவிர்த்திருக்கலாம். சட்டக்கல்லூரி பிரச்சினையில் கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள், இப்போது சட்டத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். இரண்டுமே செய்யக்கூடாது என்றால், போலீசார் வேறு என்னதான் செய்யமுடியும்?'' என்று போலீசுக்கு வக்கீல் வேலை பார்க்கின்றன ஊடகங்கள். வழக்குரைஞர்களுக்கு எதிரான பொதுக்கருத்தை ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்கி வருவதால் இந்தத் தாக்குதலின் பின்புலத்தைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.


ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பெறுவதற்காகப் போராடிய சில வழக்குரைஞர்களின் கூட்டத்தைக் கலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தடியடியல்ல இது. முட்டை வீச்சு சம்பவத்தில் தான் கைது செய்ய விரும்பிய வழக்குரைஞர்களை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கைது செய்வது, அதற்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு காட்டினால், இனி அவர்கள் ஒரு நாளும் மறக்கவியலாத வகையில் பாடம் புகட்டுவது என்ற நோக்கத்தில் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டிருக்கிறது.


இந்த வன்முறை களத்திலிருந்த சில போலீசு அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்து அரங்கேற்றியதல்ல. தி.மு.க. அரசின் முழு ஒப்புதலுடன், தலைமை நீதிபதியின் தலையசைப்புடன்தான் இது நடந்திருக்கிறது. ஜனவரி இறுதியிலிருந்து ஈழத்தில் போர்நிறுத்தம் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் புறக்கணிப்புப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி துவக்கத்திலிருந்தே உயர்நீதி மன்றக் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசு குவிக்கப்பட்டிருக்கிறது. தலைமை நீதிபதி அல்லது பதிவாளரின் ஒப்புதலின்றி இது நடந்திருக்க சாத்தியமில்லை. சு.சாமி மீது முட்டை வீசப்பட்ட விவகாரத்தை அங்கிருந்த நீதிபதிகள் கையாண்ட முறையும், மறுநாள் நடைபெற்ற தலைமை நீதிபதி டி.ஜி.பி சந்திப்பும், இன்னும் நாம் அறிந்து கொள்ள முடியாத அவர்களுக்கிடையிலான ரகசியப் பரிமாற்றங்களும் இந்தத் தாக்குதலுக்குப் பின்புலமாக அமைகின்றன.


தாக்குதல் நடைபெற்றவுடனே, ''அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைந்தோம்'' என்று ஆணையர் அறிக்கை விடுகிறார். ''நாங்கள் அனுமதிக்கவில்லை'' என்று தலைமை நீதிபதி அறிக்கை விடுகிறார். இந்த முரண்பாடுகளும், ''5 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையை தலைமை நீதிபதியால் தடுக்கவியலவில்லை'' என்ற கூற்றும் இவர்களுக்கிடையில் கள்ளக்கூட்டு இருந்திருப்பதையே காட்டுகின்றன. தங்களுடைய திட்டத்தை நிறைவேற்ற அவர்களுக்கு ஒரு முகாந்திரம் தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.


கடந்த சில மாதங்களாக கருணாநிதி அரசைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் ஈழப்பிரச்சினையில், வைகோ ராமதாசு அணியினரின் போராட்டங்கள் மெல்ல நீர்த்துப் போய் அடங்கி வரும் நிலையில், தமிழகத்தின் வழக்குரைஞர்கள் அதனைத் தொடர்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் முன்கொண்டு சென்றனர். வழக்கமாக மிகவும் கொடூரமான முறையில் போலீசால் ஒடுக்கப்படும் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை "தமிழர் பிரச்சினை' என்ற காரணத்துக்காக கருணாநிதி அரசு சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் இத்தகைய "வரம்பு மீறிய போராட்டங்களை' வழக்குரைஞர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள் என்பதை அரசு கவனிக்காமல் இல்லை.


ராஜபக்சே கொடும்பாவியைக் கொளுத்துவதை தி.மு.க. அரசால் சகித்துக் கொள்ள முடியும். சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி போன்றோரின் கொடும்பாவிகளும் காங்கிரசு கொடியும் தமிழகம் முழுவதும் எரிவதையும், ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலை விழுவதையும், காங்கிரசுக்காரர்களின் அலுவலகங்கள் தாக்கப்படுவதையும், காங்கிரசு "பிரமுகர்கள்' கேட்பாரின்றி ரோட்டில் ஓடவிட்டு அடிக்கப்படுவதையும் கருணாநிதியால் எவ்வாறு சகிக்க முடியும்?


''தனது வாரிசுகளும் குடும்ப சாம்ராச்சியத்தினரும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்தையும், தி.மு.க. சமஸ்தானத்தையும், ஆட்சியையும் எவ்வித வில்லங்கமும் இன்றி வழிவழியாக ஆண்டு அனுபவித்து வருவதற்கு, காங்கிரசுடனான கூட்டணியை காருள்ளளவும் நீருள்ளளவும் உறுதி செய்து வைக்க வேண்டும்; அதன் பின்னர்தான் கண்ணை மூடவேண்டும்'' என்ற கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு வரும் கருணாநிதியால் காங்கிரசாரின் புலம்பலை எவ்வாறு சகிக்க முடியும்? ஜெயலலிதாவின் எலும்பைக் கவ்விய தமிழக காங்கிரசார் தருணம் பார்த்துக் குரைக்கும் போது, அதை எப்படிப் புறக்கணிக்க முடியும்?


எப்படி இருந்தாலும், தி.மு.க.வின் தேசபக்தியும் ஒருமைப்பாட்டு உணர்ச்சியும் ஈழப்பிரச்சினையில் டெல்லிக்குக் காவடி எடுக்கும் திசையில்தான் அதனை நகர்த்தியிருக்கும் என்ற உண்மை ஒருபுறமிருக்க, ஈழப்பிரச்சினை கருணாநிதியின் சொந்தப் பிரச்சினையாக மாறியதற்கு இப்படியொரு காரணமும் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் சு.சாமியின் முகத்தில் வீசப்பட்ட முட்டை, கருணாநிதியின் முகத்தில் வழிந்ததில் வியப்பில்லை. சு.சாமிக்கும் தி.மு.க.வுக்கும் பதினெட்டுப் பொருத்தம்தான் என்றபோதிலும், முட்டை வீசப்பட்ட உடனே, சு.சாமியிடம் போய் போலீசு அதிகாரிகளை வருத்தம் தெரிவிக்கச் சொன்னாராம் கலைஞர். தினகரன் அலுவலகத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அந்த எரிப்பு நடவடிக்கையை வேடிக்கை பார்த்த அதிகாரிகள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை இங்கே நினைவுகூர வேண்டும்.


சந்தர்ப்பத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு சாமியாடின தமிழகத்தின் பார்ப்பனப் பத்திரிகைகள். தமிழ் வெறுப்பு, ஈழத்தமிழர் போராட்டம் குறித்த வெறுப்பு, பார்ப்பனர்களுக்கே உரிய "கவுரவமான' வழக்குரைஞர் தொழிலில் கோட்டா பேர்வழிகள் நுழைந்து நீதித்துறையின் கவுரவத்தையே பாழ்படுத்திவிட்டதால் வழக்குரைஞர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பு, அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையில் முன்நிற்பதால் ஏற்பட்ட கூடுதல் ஆத்திரம், ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் இந்திய தேசியத்தையும் தேசியத் தலைவர்களையும் கட்சிகளையும் மென்மேலும் இழிவு படுத்துவதால் அவர்களது உள்ளத்தில் வெடித்த தேசபக்தி குமுறல்... அனைத்தையும் முட்டைக்குள் திணித்து எழுதின பத்திரிகைகள்.


போலீசின் ஆத்திரமோ வேறு விதமானது. ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும்பொருட்டு பயிற்றுவிக்கப்பட்ட தனிவகைச் சாதி என்ற முறையில் அது ஆளும் வர்க்கக் கருத்துகளைத் தனது சொந்தக் கருத்துகளாகவே கொள்வதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை போலீசின் கீழ்நிலை ஊழியர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினையில் அனுதாபம் இருந்தாலும், அது தொடர்பான போராட்டங்கள் போலீசு வகுத்த எல்லையை மீறுவதை அவர்களும் விரும்புவதில்லை. பிரச்சினை எத்தனை நீதியானதாக இருந்த போதிலும், அதற்காக நடைபெறும் போராட்டம் தங்களது அதிகாரத்தை எள்ளளவுக்குக் கேள்விக்குள்ளாக்கினாலும், அத்தகைய போராட்டத்தை அவர்கள் தங்களுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கிறார்கள்.


நீதிமன்றத்தில் ஒரு போலிப்பணிவுடன் அடங்கி நிற்கும் நிலையைத் தமது தொழிலின் தவிர்க்கவியலாத இடர்ப்பாடாகக் கருதி அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் வழக்குரைஞர்கள் வீதியில் தங்களுக்கு சவால் விடும்போது அதனை அவர்களால் சகிக்க முடிவதில்லை. அது, ஈழப்பிரச்சினையாக இருந்தாலென்ன, வெறு எந்தப் பிரச்சினையாக இருந்தாலென்ன? பிரச்சினையின் தன்மை கருதி ஈழம் தொடர்பான போராட்டங்களில் நடந்த "அத்து மீறல்களையெல்லாம்' சகித்து சகித்து ஒரு கொதிநிலைக்கு வந்திருந்தது போலீசு.


''போலீசார்தான் சட்டம் ஒழுங்கின் காவலர்கள், எனவே அவர்கள் சொல்வது தான் சட்டம், சட்டத்துக்குப் பணிந்து நடப்பது என்பது போலீசுக்குப் பணிந்து நடப்பதுதான்'' என்ற சுருக்கமான சூத்திரம் ஒரு பொதுக்கருத்தாகவே மக்கள் மத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது. ஆளும் வர்க்க நலன் பேணும் பத்திரிகைகள் இதனை வழிமொழிகின்றன. தமது கொள்ளைகளுக்கும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் போலீசையே சார்ந்திருக்கும் ஓட்டுக் கட்சிகளும் இதனை வழிமொழிகின்றன. தமது அதிகாரத்தையும் அன்றாடச் சொகுசுகளையும் போலீசின் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் நீதியரசர்களும் இந்த உண்மையை உணர்ந்தே இருக்கிறார்கள்.


அதனால்தான் உயர்நீதிமன்றப் பிரச்சினையில் போலீசு கடைப்பிடிக்கத் தவறிய சட்ட வழிமுறைகள் குறித்து கட்சிகளோ ஊடகங்களோ கேள்வி எழுப்பவில்லை. அதனால்தான் அடிபட்டு எலும்பு நொறுங்கிய வழக்குரைஞர்களின் பேட்டிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில்லை. அதனால்தான் சேதுசமுத்திரம் பிரச்சினைக்கு சாமியாடிய உச்சநீதி மன்றம், தன் தலையிலேயே அடி விழுந்த போதும் அடக்கி வாசிக்கிறது. ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படவில்லையென்றாலும், அதனை முன்னிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் இங்கே ஒரு போருக்குத் துவக்கவுரை எழுதியிருக்கின்றன. லத்திக் கம்புக்கு எதிராகக் கையில் கல்லை எடுத்ததன் மூலம், இந்தச் "சட்டத்தின் ஆட்சியை' எதிர்கொள்ள வேண்டிய முறையை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள் வழக்குரைஞர்கள். அதுவும், கைக்கெட்டும் தூரத்தில் நீதி கிடைக்கும் வாய்ப்பு இருந்த உயர்நீதி மன்ற வளாகத்திலிருந்து.


· பாலன்

 

”சுப்பிரமணிய ”சுவாமியின் பார்ப்பனத் திமிர்


 பிப். 17 மாலை 5 மணிக்கு, வழக்குரைஞர்கள் இரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கப்படும் காட்சிகளை ஒளிபரப்பிய சி.என்.என்; ஐ.பி.என், சு.சாமியின் தொலைபேசி பேட்டியை ஒளிபரப்பியது. அதில் சு.சாமி வாயிலிருந்து தெறித்த கொழுப்புத் துளிகள் வருமாறு: ""இவர்கள் வக்கீல்களே அல்ல, மாமாப்பயல்கள். புலிகளிடம் காசு வாங்கிக்கொண்டு கத்துபவர்கள். வக்கீல் சமூகத்தை இவர்கள் பிளாக் மெயில் செய்கிறார்கள். போலீசு நடவடிக்கை நியாயமானது, தேவையானது. சட்டத்தை நிலைநாட்ட நீதிமன்றம் உள்ளிட்டு எங்கே வேண்டுமானாலும் போலீசு நுழையலாம்.''


 தமிழகத்தின் நீதிமன்றங்களில் சொறிநாய் நுழைவதைக்கூட அனுமதிக்கலாம். சு.சாமி எனும் இந்தப் பிராணியை அனுமதிக்கலாமா? 

 

போலீசின் திமிர்


 சென்னை அருகேயுள்ள பொன்னேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் ஏறத்தாழ 20 பேர், இந்திய மேலாதிக்க அரசின் துணையோடு நடந்துவரும் ஈழத் தமிழின அழிப்புப் போரை எதிர்த்தும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர்களைத் தாக்கிய போலீசின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்தும், கடந்த 20.2.09 அன்று தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்பிரச்சாரத்தின் போது, ""வினவு'' இணையதளத்தில் வெளியான போலீசை வெறிநாயாகச் சித்தரிக்கும் கருத்துப்படத்தை (இவ்விதழின் அட்டைப்படத்தை) பெரிய டிஜிட்டல் தட்டியாக்கி காட்சிப்படுத்தியிருந்தனர்.


 இதைக் கண்டு ஆத்திரமடைந்த பொன்னேரி போலீசு, தோழர்களின் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தி, டிஜிட்டல் தட்டி, ஒலிபெருக்கி, துண்டுப் பிரசுரம் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்து முன்னணியாளர்கள் 5 பேரைக் கைது செய்துள்ளது. பின்னர், கூட்டம் கூடி கலகம் விளைவித்தல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் முதலான பிணையில் வெளிவர முடியாத பல பிரிவுகளில் பொய்வழக்கு சோடித்து நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளது.


 வழக்குரைஞர்களின் போராட்டம் நடைபெறுவதால், நீதிமன்றங்கள் செயல்படாத நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, பழிவாங்கும் வெறியோடு கொடிய பிரிவுகளில் பொய்வழக்கைச் சோடித்துள்ளது, போலீசு. உயர்நீதி மன்றத்திலேயே வழக்குரைஞர்களின் மண்டையை உடைத்து விட்டோம்; பொன்னேரியில் இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற திமிரோடு கொக்கரிக்கிறது போலீசு.
 போலீசின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து கேலிச் சித்திரங்கள்  கருத்துப்படங்களுடன் உழைக்கும் மக்கள் போராடுவதன் மூலம் மட்டுமே, போலீசின் திமிரை முறியடிக்க முடியும். போலீசின் கொட்டத்தை ஒடுக்க, தமிழகமெங்கும் வழக்குரைஞர்களோடு இணைந்து உழைக்கும் மக்களின் போராட்டங்கள் பெருகட்டும்!

Last Updated on Tuesday, 17 March 2009 06:53