Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

  • PDF
லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.

சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.

அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.

இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடி விழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால் குடும்பம் நிலைகுலைந்து போனது.

அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.

Last Updated on Sunday, 15 March 2009 18:52