Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் -1

தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் -1

  • PDF

குறிப்பு : தில்லை போராட்டம் - நீண்ட நெடிய போராட்டம். அந்த நீண்ட நெடிய போராட்டத்தில், சில வெற்றிகள் கிடைத்திருக்கிறது.

இதைச் சாதித்தவர்கள் - சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைமையில், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் சகோதர அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, சில தமிழ் அமைப்புகள், ஜனநாயக சக்திகள்.



தில்லையில் தமிழ் ஏற இருந்த தடையை அகற்றினார்கள். அடுத்து, தீட்சிதர்களிடமிருந்து சாவிக்கொத்தை கடைசியாக புடுங்கி, அரசின் கையில் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் அரங்கேற்றம் ஆன சந்தோசத்தை விட, தீட்சிதர்களிடமிருந்து சாவியை பெற்றதில், தில்லை வாழ் மக்களுக்கு நிறைய சந்தோசம்.

தீட்சிதர்கள் அலறியடித்து, இப்பொழுது, சென்னையிலும், தில்லியிலும் டேரா போட்டு, மீண்டும் நடராசர் கோவிலை கைப்பற்ற எல்லாவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

போராட்டம் இத்துடன் முடியவில்லை. இது ஒரு தொடர் போராட்டம்.

இதற்கிடையில், இந்த போராட்டத்தில் சிறு கல்லை கூட எடுத்து போடாத சிலர் இதில் பலன் அடைய துடிக்கிறார்கள். பிறகு, இதன் தொடர்ச்சியில் அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

இந்த போராட்டத்தின் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பி பார்ப்பது தான் இந்த பதிவின் நோக்கம்.

***

தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சிவபக்தன் நந்தன் வாழ்ந்த தமிழகத்திற்கும், தற்போதைய தமிழகத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள். மாற்றங்கள் இருந்தாலும், தில்லைவாழ் தீட்சிதர் பரம்பரை மட்டும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மாறியதாகத் தெரியவில்லை.

ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து,
வழிபாட்டு உரிமைக்காக நடத்தி வரும் போராட்டம் இந்த உண்மையைத் தமிழகமெங்கும் அம்பலப்படுத்தி விட்டது.

ஆறுமுகசாமி, கஷ்டம் வந்தவுடன் இறைவனைத் தேடி ஓடும் சாதாரண பக்தரைப் போன்றவர் 

அல்லர். இல்லற வாழ்க்கையைத் துறந்து, துறவறம் பூண்டு, சைவத் திருமறையான தேவாரம் திருவாசகப் பாடல்களைப் பாடுவதைக் கற்றுத் தேர்ந்து, சிதம்பரம்அருகேயுள்ள குமுடிமூலை என்ற சிற்×ரில் அமைந்திருக்கும் பசுபதி ஈஸ்வரன் கோவிலில் ஓதுவாராக இறைப்பணி ஆற்றி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் நிதி உதவியையும் பெற்று வருகிறார்.

சிதம்பரம் நடராசர் கோவில் கருவறை முன் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, தேவாரம் திருவாசகம் பாடி நடராசரை வழிபட வேண்டும் என்பதனைத் தனது ஆன்மீக வாழ்க்கையின் இலட்சியமாக, குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார், ஆறுமுகசாமி. 73 வயதான, அந்திமக் காலத்தை நெருங்கிவிட்ட, அந்த முதிய சிவனடியாரின் விருப்பம் நிறைவேறத் தடைக்கல்லாக நிற்கிறார்கள், தீட்சிதர்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முயன்ற பொழுது, தீட்சிதர் கும்பல் கோவிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தது.

ஆறுமுகசாமி தம்மைத் தாக்கிய ரவுடி தீட்சிதர்களை உடனடியாக அடையாளம் காட்டிப் புகார் கொடுத்த பின்னும் கூட, சிதம்பரம் நகர போலீசார் 55 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அரசு தரப்பில் வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை ஒழுங்காக நடத்தாததால், ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டிய தீட்சிதர்கள், நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முடியாமல் தடுக்கப்பட்டதை, மனித உரிமை மீறல் வழக்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றது. ஆறுமுகசாமியும், விடுதலை செய்யப்பட்ட தீட்சிதர்களைத் தண்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பார்ப்பன உயர் அதிகாரிகள் மத்தியில் தீட்சிதர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் பணபலம் காரணமாக இவ்விரு வழக்குகளும் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்பொழுது இவ்விரு வழக்குகளில் மனித உரிமை மீறல் வழக்கு மட்டும் உச்சநீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளது.

சிவனடியார் ஆறுமுகசாமி, மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்; தமிழில் பாடி நடராசனை வழிபட விரும்புகிறார் என்ற காரணத்துக்காகவேதான், தீட்சிதர் கும்பல் அவரை திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட விடாமல் தடுத்து வருகிறது.

திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; சமஸ்கிருத 
மொழியில் அமைந்த வேதங்களையும், மந்திரங்களையும் தான் அம்மேடையில் பாட முடியுமேயன்றி, பிற மொழி துதிப்பாடல்களைப் பாடி இறைவனை வழிபட அனுமதிக்க முடியாது எனப் பச்சையாக பார்ப்பன சாதிக் கொழுப்பைக் கக்கி வருகிறது, தீட்சிதர் கும்பல்.

இதனை மரபு, சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தி, மயிலாடுதுறையில் உள்ள இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் மூலம், ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமைக்கு எதிரானத் தடையாணையையும் தீட்சிதர்கள் பெற்றுள்ளனர்.

ஆகம விதிகள், மரபு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் புனிதப்படுத்தப்ப டும் இத்தீண்டாமையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆறுமுகசாமிக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தோடு முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காகவே, செப். 2004இல் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் ஆதரவோடு ஆறுமுகசாமிக்கு நீதி கேட்டு, மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், நடராசர் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவின் போதும், பொதுமக்கள் ம

த்தியில் இப்பிரச்சினையின் பின் மறைந்துள்ள தீண்டாமையை விளக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தீட்சிதர்களின் அச்சுறுத்தலையும் மீறி, ஆறுமுகசாமியே பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து, ஆதரவு தேடி வருகிறார்.

இந்நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அறிவிக்கப்பட்ட பின், ஆறுமுகசாமி, ""15.7.06 முதல் 20.7.06 முடிய திருச்சிற்றம்பல மேடையில் ஏறி சிவபுராணம் பாடப் போவதாக'' அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த கடலூர் மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த அறிவிப்பின் பின்னுள்ள நியாயம் உரிமைகளை விளக்கி, 12, 13, 14.7.06 ஆகிய மூன்று நாட்களும் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு, தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முனைந்தது.

ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடப் போவதாக அறிவித்தவுடனேயே, சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம், ஆறுமுகசாமி பாடுவதை 25.7.06 வரைத் தடை செய்யும் ஆணையைத் தீட்சிதர்கள் பெற்றுக் கொண்டனர். எனினும், இத்தடையுத்தரவை மீறுவது என்ற முடிவோடு, 15.7.06 அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை சிதம்பரம் மேல வீதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.

இப்போராட்டத்திற்குத் தலைமையேற்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, வரவேற்புரை நிகழ்த்திய சிதம்பரம் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், மற்றும் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் (தமிழக) இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு. வி.வி.சாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வி.எம். சவுந்திரபாண்டியன்; திராவிடர் கழகத்தின் மாநிலத் துணை பொதுச்செயலர் திரு. துரை சந்திரசேகர்; சி.பி.எம்.இன் மாவட்ட விவசாய அணித்தலைவர் தோழர் டி.ஆர். விசுவநாதன்; சி.பி.ஐ.யின் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் நடராஜன் உள்ளிட்ட பலரும் தீட்சிதர்களின் சாதித் திமிரையும், அவர்களின் ஒழுக்கக் கேடுகளையும் அம்பலப்படுத்தி உரையாற்றினர்.

சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், சிதம்பரம் நகர போலீசோ, சட்டம் ஒழுங்கைக் காட்டி, ஆறுமுகசாமியைக் கோவிலை நெருங்கக் கூட விடாமல் தடுத்து, அவரையும், அவருக்குத் துணையாகச் சென்றவர்களையும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 80 பேரை நடுத்தெருவிலேயே கைது செய்து, தீட்சிதர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது.

""உரிய தகுதி இருந்தால் பார்ப்பனர் அல்லாதவர் கூட அர்ச்சகர் ஆகலாம்; கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு வழிபாடு நடத்தலாம்'' எனக் கூறுகிறது தமிழக அரசின் சட்டம். இதற்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆனால், தீட்சிதர் கும்பலோ, துறவறம் பூண்டு வாழும் ஓதுவார் ஆறுமுகசாமியை, கருவறைக்கு எதிரே இருக்கும் மேடையில் ஏறுவதற்குக் கூடத் தடை போடுகிறது.

""உச்சநீதி மன்ற நீதிபதிகள் மோகன் மற்றும் சி.என்.ரே ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கர்ப்பகிரகங்களில் தமிழ் மந்திரத்தில் அர்ச்சனை செய்யலாம் என்று 2.4.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் தமிழ்நாட்டில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று 17.6.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்'' முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், கருவறைக்கு எதிரேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் சமஸ்கிருதம் அல்லாத பிற மொழிகளில் பாடி இறைவனை வழிபடக் கூடாது எனத் தமிழை தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள் தீட்சிதர்கள்.

சட்டத்தின்படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் பார்த்தால், ஆறுமுகசாமியைத் தடை செய்த தீட்சிதர்கள்; அவர்களுக்குத் துணை நின்ற நீதிபதி, போலீசு அதிகாரிகளைத் தான் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், நடந்திருப்பதோ நேர் எதிராக இருக்கிறது.

1987ஆம் ஆண்டே, சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர புதிதாக விதிகள் உருவாக்கப்பட்ட போதிலும், கடந்த 19 ஆண்டுகளாக இந்தக் கோயிலில் ஒரு நிர்வாக அதிகாரியைப் போட முடியாமல், தமிழக அரசு கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறது.

இந்தக் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொள்வதை எதிர்த்து தீட்சிதர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், ""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள்; 50 கிலோ மதிப்புமிக்க நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால், இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்தார். ஆனால், தீட்சிதர்கள் வழக்கிற்கு மேல் வழக்கு போட்டு இத்தீர்ப்பை நீதிமன்றத்திற்குள்ளேயே பந்தாடி வருகிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்சிதர்கள் தொடுத்த ஒரு வழக்கில், ""இந்தக் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமில்லை என்றும், ஒட்டு மொத்த சைவர்களுக்குச் சொந்தம் என்றும் உயர்நீதி மன்ற நீதிபதி முத்துச்சாமி ஐயரும், இன்னொரு வெள்ளைக்கார நீதிபதியும் தீர்ப்பளித்திருப்பதாக'' முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், தீட்சிதர்களோ,""இந்தக் கோயில் எங்களுக்குப் பாத்யப்பட்ட பரம்பரைச் சொத்து'' எனச் சுவரொட்டி அடித்து ஒட்டும் அளவிற்கு, சட்டம் நீதிமன்றம் எதனையும் மதிக்காமல் திமிரோடு நடந்து வருகின்றனர்.

சிதம்பரம் கோயிலின் வருமானம் ஏறத்தாழ 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தீட்சிதர்களோ, ஊர் பெரிய மனிதர்களிடம் 100, 200 நன்கொடை வாங்கித்தான், பூசையே நடத்துவதாக மோசடிக் கணக்கைத் தயார் செய்து, பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். கோயில் நிலத்தில் இருந்து கிடைக்கும் குத்தகை, கடை ஏலம், அபிஷேகம், ஆராதனைக்காக ரசீது கொடுக்காமல் பக்தர்களிடம் பிடுங்கும் பணம், கோவிலுக்குச் சொந்தமான தங்க நகைகள் இவை எல்லாவற்றையும் தாங்களே ஆண்டு அனுபவிக்கும் வண்ணம் ""அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம்'' என்ற அமைப்பைக் கட்டி வைத்துக் கொண்டு, அலிபாபா கதையில் வரும் கொள்ளைக் கூட்டம் போலக் கொழுத்துத் திரிகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, இரவு நேரமானபின், சிதம்பரம் கோயிலையே தண்ணி அடிக்கும் பாராகவும்; பெண்களோடு சல்லாபம் செய்யும் விடுதியாகவும் தீட்சிதர்கள் மாற்றிவிட்டதாக ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த அசிங்கமான உண்மையை மூடி மறைக்கத்தான் கே.ஆடுரைச் சேர்ந்த செல்வராஜையும்; வீட்டுத் தரகர் ராயரையும் தீட்சிதர்கள் கோயிலுக்குள் வைத்துக் கொன்றுவிட்டதாகவும்; கோவில் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி தீட்சிதரை கோயில் கல்தூணில் மோதிக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீட்சிதர்கள், ""திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட தமக்கு மட்டுமே உரிமையுண்டு; ஆறுமுகசாமியைப் பாட வைத்தால் சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்; கோவிலில் உள்ள விலையுயர்ந்த நகைகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்'' எனப் புளுகித்தான் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கேட்டுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல், நீதிமன்றம் தீட்சிதர்களின் கோரிக்கைக்குத் தலையாட்டியுள்ளது. மேலும், ""ஆறுமுகசாமியை நாத்திகர்கள் தூண்டிவிடுவதாகவும்; இதற்குப் பின்னால் பெரிய சதி நடப்பதாகவும்'' தீட்சிதர்கள் பீதியூட்டுகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி திருச்சிற்றம்பலத்தில் ஏறிப் பாடுவதை மறுக்கும் தீண்டாமையை, நாத்திக ஆத்திகப் பிரச்சினையாகத் திசை திருப்ப முயலுகிறார்கள்.

தேவாரம், திருவாசகம் ஆகிய சைவத் திருமறைகளோடு பின்னிப் பிணைந்த சிதம்பரம் நடராசர் கோவிலை; சைவத் திருத்தலங்களிலேயே ஆகாயத் தலமாகக் கருதப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலை, கிரிமினல் பின்னணி கொண்ட தீட்சிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நாத்திகர்களைவிட, ஆத்திகர்களுக்குத் தான் இரத்தம் கொதிக்க வேண்டும். ஆனால் ஆறுமுகசாமியைத் தவிர, வேறெந்த சைவ மடாதிபதிக்கும் தமிழுணர்வும், ரோசமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால்தான், இப்பிரச்சினையில் ஆறுமுகசாமியை ஆதரிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடு என்ற கோரிக்கையையும் சேர்த்து முன் வைக்கிறது. இதற்கு ஆதரவாகப் பொதுமக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சிதம்பரம் மற்றும் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையம், பிற ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. மேலும், சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்காலத் தடையை நீட்டிக்கக் கூடாது; இவ்வழக்கில் உடனடியாகத் தீர்ப்பளிக்க வேண்டம் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்து, வழக்கும் நடத்தி வருகிறது.

இப்பிரச்சினையில் இன்னொரு உண்மையையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். கோவில்களில் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும் திணிக்கும் தீண்டாமையையும்; கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் காலனிகளின் மீது திணிக்கப்படும் தீண்டாமையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகர் ஆவது, தமிழ் உள்ளிட்டு அவரவர் தாய்மொழிகளில் வழிபட உரிமை கோருவது ஆகிய கோரிக்கைகள், சாதிதீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களோடு இணைக்கப்படாவிடில், அதில் முழுமையான வெற்றியைக் காண முடியாது. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த போராட்டம், மக்கள் மத்தியில் எழவில்லையென்றால், வழிபாட்டு உரிமை தொடர்பாகக் கொண்டு வரப்படும் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் அரைகுறையானதாக, ஒன்றுக்கொன்று முரணானதாக, நடைமுறைக்கு வராத காகிதக் குப்பைகளாகவே இருக்கும்.

மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.

 

http://mahasocrates.blogspot.com/2009/02/1.html

Last Updated on Tuesday, 17 February 2009 08:20