Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தறிப்பட்டறையா? கொத்தடிமைக் கூடாரமா?

தறிப்பட்டறையா? கொத்தடிமைக் கூடாரமா?

  • PDF

 முன்பணமாக ஓரிரு ஆயிரம் ரூபாய்களை வாங்கிவிட்டு, அதற்கு வட்டியோடு சேர்த்து அசலை அடைக்க முடியாமல் பலகாலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் ஈரோடு  நாமக்கல் மாவட்டங்களின் தறிக்கூடங்களில் கொத்தடிமைகளாக உழன்று வருகின்றனர்.

 இப்படிப் பல கொத்தடிமைக் கூடாரங்கள் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையோடு, அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்கள்  உள்ளூர் குண்டர்களின் பாதுகாப்போடு நடத்தப்பட்டு வருகின்றன. 117 தறிகள் போட்டு இத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் ஒன்றினை நடத்திவரும் மிகப் பெரிய முதலாளிதான், திருச்செங்கோடு அருகேயுள்ள பரமசிவ கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டர்.


 இவனிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 4000 முன்பணமாக வாங்கி, கொத்தடிமையாகக் குடும்பத்தோடு உழன்று வந்தார், ஈரோடு  மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்ற தொழிலாளி. அவரது குழந்தைகளைத் தார் சுற்றச் சொல்லி அடித்தும், அவரை 16 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்யச் சொல்லிச் சவுக்கால் அடித்தும் வதைத்ததால், சாமிநாதன் தனது குடும்பதோடு அங்கிருந்து தப்பி வந்துவிட்டார்.


 அவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் இருப்பதை அறிந்த செல்லப்பன், 12 பேர் கொண்ட தனது அடியாட்களுடன் 10.1.09 அன்று ஜீப்பில் வந்து, அவர் வேலை செய்து கொண்டிருந்த தறிக்கூடத்திலிருந்து அவரை இழுத்து வந்து உருட்டுக் கட்டையால் அடித்து, கடத்திச் சென்றான். இப்பகுதியில் இயங்கி வரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இது பற்றி தகவல் அறிந்ததும், உடனடியாக சாமிநாதனின் மனைவியை ஈரோடு  வடக்கு போலீசு நிலையத்தில் புகார் கொடுக்க வைத்து, மாவட்ட போலீசு கண்காணிப்பாளருக்கும் தொலைபேசி வழியே புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரியது. சாமிநாதனைப் பத்திரமாக மீட்டு செல்லப்பன் கும்பலைக் கைது செய்யக்கோரி பு.ஜ.தொ.மு. போலீசாரிடம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அடுத்த சில மணி நேரத்தில் அத்தொழிலாளி மீட்கப்பட்டார். இருப்பினும், கொத்தடிமைக் கூடாரத்தை நடத்தி வந்த முதலாளி செல்லப்பன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசு தட்டிக் கழித்தது. செல்லப்பனைக் காப்பாற்றத் துடிக்கும் போலீசை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு. அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முற்பட்டதும், வேறு வழியின்றி செல்லப்பன் மீது முதல் தகவல் அறிக்கையைப் போலீசு பதிவு செய்தனர்.


 பணபலமும் சாதிபலமும் அதிகார பலமும் கொண்ட மிகப்பெரிய முதலாளியிடமிருந்து தொழிலாளியைப் பத்திரமாக மீட்டதோடு, அவன் மீது போலீசு நிலையத்தில் புகாரையும் பதிய வைத்த இந்நடவடிக்கையானது, இப்பகுதியெங்கும் தொழிலாளிகளிடம் பெருத்த வரவேற்பைப் பெற்று, பு.ஜ.தொ.மு. மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட நாளேடுகளில் இச்செய்தி பரபரப்பாக வெளியாகி, செல்லப்பன் கும்பல் அம்பலப்பட்டு தனிமைப்பட்டு போயுள்ளது. இக்கொடுங்கோல் கும்பல் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரவும், இத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களை ஒழித்துக் கட்டி தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டவும் பு.ஜ.தொ.மு. முயற்சித்து வருகிறது.


 பு.ஜ. செய்தியாளர்.