Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

  • PDF

ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.

இதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.

 

இந்திய இராணுவ நடவடிக்கையின் போது :

- சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.

 

- புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை பெண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை.

 

- மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.

 

-திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.

 

-ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை.

 

கருணா பிளவின் போது கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொத்துக் கொத்தாய் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற முன்னைநாள் போராளிகளை கொடுமையிலும் கொடுமையாய் கொன்றழித்த புலிகள் பாசிட்டுக்களாய் கோரத் தாண்டவமாடிய வேளை.

 

முத்துக்குமரன்களுக்கு முன்னமேயே ஈழத்துத் தெருக்களில் மாற்று இயக்கப் போராளிகள் உயிரோடு தீயில் வெந்து சாம்பலாகும் கோரத்தை நடாத்தி யாருக்காக போராடுவதாக கூறினார்களோ அந்த மக்களின் மனங்களில் அச்சத்தை உறைய வைக்கும் நோக்குடன் தம்மை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை எவ்வாறமையும் என்று கற்பிப்பதற்காக சொந்தமக்களையே எச்சரிப்பதற்காகவே இவ்வாறு தெருவோரங்களில் நாம் இவர்களை தீயிலிட்டு அழிக்கின்றோம் என்ற நியாய குதர்க்கம் கூறிக்கொண்டே நரபலி வேட்டையாடிய கொடிய பாசிட்டுக்கள் தெருவெங்கும் கோலோச்சிய வேளை.

 

யாழ்குடாநாட்டிலிருந்து முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டு போக்கிடம் இன்றி உடமைகள் எதுவுமின்றி துரத்தியடிக்கப்பட்ட அவலம் நடந்தேறிய வேளை.

 

உள்ளியக்கத்தினுள் எழுந்த முரண்பாடுகளால் ஜரோப்பிய நாடுகள் வரை தேடியழிக்கப்பட்ட கொலைகள் பல போராளிகளின் உயிர்களை காவு கொண்ட வேளை.

 

சிங்கள கிராமங்களில் பொதுமக்கள் மேல் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எதுவித பாகுபாடுமின்றி வெட்டியும் குத்தியும் கொலைக்கரங்களை ஏவிவிட்டு போராட்டத்தின் மீதான நியாயப்பாட்டை சிங்களப்பாட்டாளி மக்கள் புரியாத வண்ணம் களங்கப்படுத்திய வேளை.

 

முஸ்லீம்களின் வணக்கத்தலங்களில் (புத்தளம், காத்தான்குடி பள்ளிவாசல்கள்) தொழுகைநேரத்தில் புகுந்து “விடுதலைப் போராளிகள்” இரத்த ஆற்றில் அவர்களை மிதக்கவிட்டு உயிர்ப்பலி கொண்ட வேளை.

 

இந்திய கைக்கூலிகளாய் அநுராதபுரப்படுகொலையை நிகழ்த்தி “விடுதலைப் போராளிகள்” கூலிப்படைகளாய் விலைபோன வேளை.

 

சிங்கள கடற்படை நெடுந்தீவு குமுதினிப்படகுப் பயணிகளை இடைமறித்து வெட்டிச்சாய்த்து இனவெறிக் கொடுங்கரங்களால் கொன்றழித்த வேளை.

 

தமிழ்மக்கள் மேல் இனவெறிப்போர் தொடுத்து இராணுவ அடக்குமுறைகளை நாளும் பொழுதுமாய் பேரினவாதிகள் ஏவிவிட்டு கொக்கரித்து நின்று இன்றுவரைக்கும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை தனது காலில் போட்டு மிதித்து இனத்துவம்சம் செய்யும் பேரினவாதிகள் ” மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கும் ” இராணுவ நடவடிக்கையாய் தமது இனத்துவம்சப் போரை பிரச்சாரம் செய்யும் “தார்மீகத்தை” அவர்கள் பக்கம் தள்ளிவிட்ட தவறுகளை தமது பாசிசக்கரங்களால் தாமே மக்கள் மேல் குந்தியிருந்து உருவாக்கிய வேளை.

 

தமிழ் சிங்கள பாட்டாளி வர்க்க கூட்டை தேசிய இனப்பிரச்சனையில் அப்புறப்படுத்தும் வகையில், சிங்களப்பேரினவாதம் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கேற்ப நடாத்தும் இனவெறிக்கூச்சலுக்கு உரம் சேர்க்கும் ஒரு இனக்கலவரம் ஒன்றை மீண்டும் உருவாக்கி பெரும்பான்மை மக்கள் பகுதிகளில் பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்மக்கள் மேலான கலவரம் ஒன்றை ஏவிவிட்டு அவர்களின் உயிரிழப்பின் மேல் இறந்த உடலங்களின் மேல் மூன்றாம் தரமான கேவலமான பிரச்சாரமேடை ஒன்றை அமைக்க போராளிகளை குண்டுதாரிகளாள வெடித்துச் சிதறச் செய்த வேளை.

 

ஒப்பபாரும் மிக்காருமின்றிய புலித்தலைமை இடதுசாரிகளும் முற்போக்கான அணிகளும் தலையெடுக்காத வண்ணம் ஏகாதிபத்திய கள்ளக்கூட்டுடன் இனவெறி ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து சமாதான காலத்தில் அழித்தொழித்த வேளை.

 

போராட்டம் ஆரம்பமான நாளிலிருந்தே ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்து தங்களின் தாழ்பணிந்த ஊதுகுழலாய் மாற்றிய புலிகளிடமிருந்தே பேரினவாதம் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது எவ்வாறு என பாடம் கற்றுக்கொண்டது. புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மவுனிகளாக்கப்பட்ட வேளை. ( யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்)

 

யாழ் பல்கலைக்கழகத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காய் போராடிய மாணவப் போராளிகளுக்கு மரணதண்டனை பரிசளிக்கப்பட்ட வேளை.

 

பல்கலைக்கழக மாணவர்கள் (விஜிதரன், செல்வநிதி தியாகராஜா, தர்மசீலன் ) கடத்தப்பட்டு காணாமல் போன வேளை.

 

மனித உடற்கூற்று விரிவுரையாளர் திருமதி ரஜனி திரணகமவை பல்கலைக்கழக வாசலிலேயே துப்பாக்கிதாரிகள் கொன்றழித்த வேளை.

 

அன்றைய ஈழ மக்கள் புரட்சிகர முன்னணிப் (EPRLF)போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு சிறைக்குள்ளேயே (கந்தன் கருணை) கைக்குண்டுகளால் கூண்டோடு கொலைசெய்யப்பட்ட வேளை.

 

யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் முன்னணி போராளியாய் இருந்த காரணத்துக்காகவும் மாற்று இயக்க உறுப்பினர் என்ற காரணத்திற்காகவும் இராயகரன் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரைப்பணயம் வைத்து கூரையைப் பிரித்து குதித்து தப்பி வந்த பின் மரணத்தின் நிழல்களால் பின்தொடரப்பட்டு சொந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றதாக மாற பேரினவாத இடர்கள் இருந்தும் கொழும்பு நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உணரப்பட்ட வேளை.

 

அதே பாதுகாப்பின்மை மற்றும் புலிகளால் கண்காணிக்கப்படும் காரணங்களால் தங்கள் சொந்தப்பிரதேசங்களை விட்டு தலைநகர் கொழும்பிற்கு வந்ததன் பின்னாலேயே மூச்சுவிடும் நிலைமைகள் சற்றேனும் கிடைத்ததென ” சரிநிகர்” பத்திரிகை வெளியிட்ட குழுவினர் தமக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட இயல்பு வாழ்வுக்குள்ளும் சிங்கத்தின் குகைக்குள் சிறுமுயலாய் இனவாத அரசின் குகைக்குள்ளேயே பேரினவாத அரசுக்கு எதிரான குரலாய் தம்மை வெளீப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட அவர்களது நடமாட்டங்கள் கொழும்புத் தெருக்களில் “உரிமையாய்” அவர்கள் அநுபவித்தபோது விடுதலைப் பிரதேசங்கள் சிறைவாழ்வாய் படிப்படியாய் மக்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருந்த வேளை.

 

வெறும் சுத்த இராணுவக் கண்ணோட்டத்தினையும் குவியத் தத்துவத்தினையும் வழிமுறையாய் கொண்டு ஆயுதங்களை வணங்கிய துப்பாக்கி மனிதர்களிடம் எமது போராட்டத்தின் கடிவாளம் ஏகாதிபத்தியங்களால் பறித்துக் கொடுக்கப்பட்டதன் பின்னால் தமிழ் தேசியப் போராட்டம் இனவெறிப்பாதைக்கு இழுத்துச்செல்லப்பட்ட தருணங்களில் எல்லாம் இன்றைய முடிபுகளை அன்றே முன்னெதிர்வு கூறிய விமர்சனங்கள் ஓற்றை வரிகளில் இனத் துரோகிகள் என்று ஒதுக்கி அழிக்கப்பட்ட வேளைகளில்

 

மூதூரிலிருந்து முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வேளைகளில்

 

இன்றிந்த வேளை நடக்கும் மக்களை மாய்விக்கும் போரின் ஆரம்பம் கிழக்கிலங்கையில் தான் தொடங்கியது. பிரதேச இழப்புகள், மக்கள் இடம் பெயர்ந்த மனித அவலங்கள் அன்றே ஆரம்பித்து விட்டது. அன்று அந்த மக்களின் அவலங்கள் புலம் பெயர் தழிழர்களால் புறக்கணிக்கப்பட்ட வேiளை

 

இந்திய மண்ணிலேயே கொன்றழிக்கப்பட்ட பத்மநாபா குழுவினரின் குருதியின் மேல் தமிழ்மக்கள் போராட்டத்தை தடம் புரளச் செய்ய சத்தியப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட புலிகள் தலைதெறித்து ஆடிய வேளைகளில்

 

இந்த இந்த வேளைகளில் எல்லாம் வேதனை, வலி கொள்ளாத இந்திய தமிழின உணர்வாளர்கள் மற்றும் திரையில் நடித்தது போதாதென்று இந்திய பாட்டாளி மக்களின் விடுதலைக்கே வேட்டுவைக்க புறப்பட்டிருக்கும் கட்சித்தலைவர்களாயிருக்கும் நடிகர்களின் கூக்குரல்கள் என்றுமே புலிகளை எதிர்நிறுத்தி எழாது என்பது தெரிந்ததே.

 

இன்று வன்னிமக்களை கேடயமாக்கி அந்த மக்களின் இறப்புகளை பிரச்சாரமாக்கி தப்பிப்பிழைக்க முனையும் புலியின் மூன்றாம்தர வலதுசாரி பாசிச அரசியலை இவர்கள் யாருமே அம்பலப்படுத்தப் போவதில்லை. அது இந்த இன உணர்வாளர்கள் குணாம்சம். அவர்களும் தங்கள் அரசியலை அவ்வாறே அறுவடை செய்து கொள்வார்கள்.

 

தேசம் இனம் கடந்த உணர்வுகளின் மேலால் நிறுவப்படும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஓருமைப்பாடு முத்துக்குமரனின் தற்கொலையோடு இனவுணர்வுடன் இழுபட்டு சென்று தமிழ் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் கால்களை வாரிவிட முனையக் கூடாது.

 

இலங்கை பேரினவாத அரசுக்கும் இந்திய வல்லாதிக்க அரசுக்கும் தமிழ்மக்கள் துரும்பும் தூசும் தான். புலிகளுக்கும் அவர்கள் சொந்தமக்கள் அவ்வாறே தான் என்பதுவும் அவர்கள் நடாத்துவது தேசிய விடுதலைப் போராட்டமல்ல என்பதுவும் ஏகாதிபத்தியங்களினால் அவர்களது கள்ள உறவில் பிறந்த குழந்தை இன்று தோழர் மருதையன் மிகச் சரியாகவே குறிப்பிட்டபடி இந்திய டாட்டா அம்பானிகளுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டியிருப்பதால் கைவிடப்படுகிறார்கள் என்பதுவும் தான் யதார்த்தம். இவர்கள் தேசிய போராட்டசக்திகள் இல்லையென புரட்சிகர அணிகளுக்கு இனம் காட்டப்படுவதை விடுத்து அவர்களோடு வளைந்து செல்வது அணிகளை தவறாக வழிகாட்டும் என்ற விமர்சனத்தை நாம் முன்வைக்கின்றோம்.

 

எதிர்ப்புக் கோசங்களை தெளிவாக இந்திய இலங்கை அரசுகளுக்கெதிராகவும் எதிர்த்தரப்பில் புலிகளை வர்க்க அடிப்படையில் இனம் காட்டியும் மக்களின் இன்றைய அவலங்களுக்கு அவர்களும் பொறுப்பாளிகளே என்பதை தெளிவாக இனம் காட்டியும் உங்கள் போராட்டங்கள் அமையட்டும்.

 

சிறி

01.02.09

Last Updated on Monday, 02 February 2009 08:51