Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பழியெல்லாம் புலிவடிவில் புவிகொள்ளினும்...

பழியெல்லாம் புலிவடிவில் புவிகொள்ளினும்...

  • PDF

வாழ்வதற்கு
உனக்கென்றொரு மண்,
சாவதற்கு எமக்கென்றொரு மண்!

 

 

"My own God sent his angel and
shut the mouth of the lions."-Daniel 6:22


நான்,எனக்கெனவொரு வேலையை
எடுத்துக்கொண்டேன்,
மனிதனாக இருப்பதற்கு
மனிதர்களின் அவலத்தைப் பாடுவதென.

என் பாட்டியும்,பாட்டனும் மறந்துபோன
காலடிகளோடு விழிமுன் கூனும்போது
என் சகோதரியின் கச்சைக்குள்
குண்டு புதைக்கும் கயவர்களைக்
காலக் குறியொன்றில்
தொங்க வைக்கும் என் பேனா முனை!

மறுமுனையில் இருப்பதெல்லாம்
பாவங்களைக் கலைத்த பொதுமேடை
எனக்குள் குன்றடித்துக் குருதியூற்றைத் திறப்பினும்
நான் என் மனிதத் தன்மையை இழந்து மௌனிக்கேன்.
மனிதனாக இருப்பதே போராட்டமென்றபோது
பேனாவுக்குள் குருதியூற்றப்பட்ட கணங்கள் ஏராளம்
அது சமீபத்தில்கூட...

வரலாறு மறுமுனையிலிருந்து
என்னைத் தாக்குகிறது!
எனது முனையில் அது முடிந்துவிடாது,
நான் எனது முனையிலிருந்து புதிய கதையைத் தொடர்கிறேன்
அது எனது சரித்திரத்தைக் குருதிவிலத்தித் தொடராது,
வழமைதானெனினும் அஃது தவிர்க்க முடியாது.
தோளில் வலிமையில்லை
எனினும்,
நான் முனைவதே காலமிட்ட வினை.

தொடராது எதுவும் முடிவதில்லை,
தொடராதவொரு சூத்திரம் எங்கும் உண்டா?
வெட்டியும் குறுக்கியும் காலத்தை உன்னால் காண்பிக்க முடியுமெனின்
நான் அதுள் குறைப் பிரசவம் ஒன்றை ஏன் ஈன்றுவிட முடியாது?



என்வரைக்கும் இது சூத்திரமில்லை
உயிர்கொண்டு உலாவுதல்,
முடிந்தால் முற்றுப் புள்ளியை உனது எஜமானைக்கொண்டு
நீ இடுவதற்கு முனையலாம்.
எனினும்,எனது இன்னொரு எழுச்சியில்
என்னைவிட வீரியத்தோடு
குரும்பட்டி பொறுக்கும் சிற்றெறும்பு மேலெழும் மகிந்தா மனிதா!

புரிவதற்குக் கஷ்டமில்லை உனக்கு!
நீ,வகுப்பெடுக்க நான் செவிகொடுக்க
மனிதம் புத்தரின் வாசகமில்லை
உனக்குள் ஊடுகொண்டு உழுவதற்கு எனது தலைமுறை தப்பிழைத்துவிட்டது.
இருந்தும் மேலெழும்
புதிதாய் உதிக்குமொரு சூரியன் இன்னொரு பொழுதில்!

பாரதம் பக்கப் பலமாகினும்,
பாகிஸ்த்தான் போர் விமானம் ஓட்டினும்
பழியெல்லாம் புலிவடிவில் புவிகொள்ளினும்
ஈழத்து மனிதருக்கு எவரும் இரங்காதிருப்பினும்
என்னவர் சிதைந்து குருதியாற்றில் இனித் தத்தளித்திடினும்
ஈரமுள்ள மண்ணொன்று அவர்களுக்கு இலங்கையில் உண்டு!

மகிந்தாவோ அன்றி மகாவம்சமோ
இல்லைப் பாரதமோ பாருக்குள் அதை அழித்திட முடியாது!
வாழ்வதற்கு உனக்கென்றொரு மண்
சாவதற்கு எமக்கென்றொரு மண்
இது காலந்தந்த வினையல்ல
உன்னைப்போன்ற கொள்ளையர்கள் செய்த அவலம்.

யோனி அதிரக் குலைக்கப்படும் என் மகள் கூந்தல்
அள்ளி முடிவதற்கு அவளுக்கென்றொரு காலம்
துள்ளி வரும் அவள் யோனி பிளந்து!
மறந்திடதே,வரலாறு உனக்குள் மட்டும் விரியவில்லை.
வா,வந்து உலகைப் பார்!
பாலஸ்த்தீனம் படிப்புத் தருகிறதா?,
ஈராக்கும் இருக்கிறது.

அழித்தவர்கள் கரங்களுக்கு
அள்ளுவதெல்லாம் பொன்னாகலாம்
ஆனால்,
அதுவே ஒரு நாள் அவருக்கும் அழிவாகும்.
நேற்று அவர்கள்,
இன்று நீ,
நாளை எவரோ?

ஈழப் பச்சை மண்ணே,
எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும்
கூடிக் களிக்கட்டும்!
எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும்,
கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும்
நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும்
தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ஓர் நாள்!
அப்போது,
என் தடத்தில் இன்னொரு உலகம் இருப்பதையும் நீ அறிவாய்,
இழந்ததை நீ மீட்க
உனக்கென்றொரு உறவும் இருக்கக் காண்பாய்.
அது,உலகெல்லாம் விரிந்து மேவுவதையும் நீ உணர்வாய்!

அதுவரை,
நான்,எனக்கெனவொரு வேலையை
எடுத்துக்கொண்டேன்,
மனிதனாக இருப்பதற்கு...


ப.வி.ஸ்ரீரங்கன்
01.02.2009

Last Updated on Sunday, 01 February 2009 17:06