Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இந்தியாவும் தமிழீழமும்

இந்தியாவும் தமிழீழமும்

  • PDF

இந்தியாதான் இன்று இலங்கையில் யுத்தம் செய்கின்றது. புலிகளை அழிக்கின்றது. இதனால்தான் புலிகள் தோற்கின்றனர். இப்படி இன்று நிலைமையை சிலர் ஆராய்கின்றனர். இந்த அடிப்படையில் போராட்டங்கள், கோசங்கள் முதல், தம் சொந்த தவறுகளை மூடிமறைக்கும் கைங்கரியங்கள்.

தோல்விக்கான காரணத்தை இராணுவபலம், அன்னிய சக்திகளின் உதவி என்று கூறி நிற்கின்றனர். ஒரு விடுதலை போராட்டத்தை இவர்கள் இன்று பட்டியலிடும் அத்தனை சக்திகளும் ஒடுக்குவார்கள். இதைத் தெரிந்திருக்க வேண்டியது தான் ஒரு விடுதலை இயக்கத்தின் அடிப்படை கூட. அப்படி தெரியாமல், எப்படி போராட முடியும். ஏகாதிபத்தியம் முதல் உள்ளுர் நிலப்பிரபுக்கள் வரை, தேசியத்தின் எதிரி என்பதை சொல்லாத போராட்டம், அவர்களைச் சார்ந்து நின்றது. இப்படி மக்களைச் சார்ந்து நிற்காத வண்ணம் எதிரியைச் சார்ந்து போரட்டத்தை நடத்தியவர்கள், இன்று அவர்களால் அழிகின்றனர்.  

 

இந்த உண்மை உணரப்படாத நிலையில், உணர்த்தப்படாத நிலையில், அறியாமையில் நாம் வாழ்கின்றோம். அன்னிய சக்திகளின் தயவில் அன்று மக்களை தோற்கடித்த போராட்டம், இன்று மக்கள் தோற்கடிக்கும் போராட்டமாகியது. இப்படி அழுகி நாறும் வெற்றுடலைத்தான், பேரினவாதம் இந்தியா துணையுடன் அகற்றுகின்றது. மக்கள் புலிகளை தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்கும் மக்கள் விரோத அரசியல் மூலம், இன்றும் தம் தோல்வியையும் தவறுகளையும் மூடிமறைக்கவே முனைகின்றனர். தம் அடையாளமே இருக்கும் வரை, தமது தவறை தவறாக ஒருநாளும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

 

இன்று இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளை தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அகற்றுகின்றனர் என்பதே உண்மை.

 

இங்கு இதை பல தளத்தில் காணமுடியும்;. புலிகள் எந்த அரசியல் அடிப்படையுடனும் தமிழ் மக்களுடன பிணைந்திருக்கவில்லை. இன்று தேசியம் என்ற அடிப்படை அரசியல் கோசத்தின் சமூகக் கூறுகளுடன், புலிகளுமில்லை தமிழ் மக்களுமில்லை. 1980 இல் விடுதலைக்கென வைத்த அரசியல் எல்லாம், இன்று துரோகத்துக்குரிய அரசியலாக்கப்பட்டுள்ளது. தேசியம் என்ற வெற்றுடல், அர்த்தமற்ற வெறும் கோசமாகியுள்ளது. மக்களை புலிகள் கட்டுப்படுத்தி வைத்திருந்த வடிவமோ, துப்பாக்கி முனையில்தான்.  

 

மக்கள் மௌனமாகி, பார்வையாளராகி, சோலிசுரட்டின்றி ஓதுங்கிக்கொண்டனர். தம் அதிருப்த்திகளை, அபிப்பிராயங்களை புலிக்கு எதிராக மவுனமாக தமக்குள் மாற்றிக்கொண்டனர். இப்படிப் போராட்டம் மக்களைத் தோற்கடிக்க, மக்கள் போராட்டத்தை தோற்கடித்தனர். இந்த வெற்றுடலைத்தான் பேரினவாதமும்-இந்தியாவும் துடைத்தொழிக்கின்றது. இதை இப்படியே விட்டு வைத்தால், அதை மக்கள் செய்துவிடுவார்கள் என்ற அச்சம் இந்தியாவுக்கு. மக்கள் நலன் சார்ந்த ஒன்று, மாற்றாக வரக்கூடாது என்ற கவலை அதற்கு. இதனால் இந்த இடத்தை இந்தியா எடுத்து, இலங்கையின் துணையுடன் அகற்றுகின்றது. 

 

இதை இன்று செய்யும் இந்தியா தான், அன்று இந்தப் போராட்டத்தை ஆயுதப்பயிற்சி மற்றும் வேறு வழிகளிலும் உருவாக்கியது. உருவாக்கி அழித்தல் என்ற தென்னாசிய பேட்டை ரவுடி, அதை உருவாக்கும் போது எதிர்க்காதவர்கள் அழிக்கும் போது ஓப்பாரிவைக்கின்றனர்.

 

அன்று தன் சொந்த அரசியல் பொருளாதார தேவைக்காக இந்தியா உருவாக்கிய போராட்டம், இன்று அந்தத் தேவை முடிந்த நிலையில் அதைத் துடைத்தெறிகின்றனர். தொடங்கியவனே அதை முடித்து வைக்கின்றான்.

 

இந்த வகையில் இந்தியாவின் செயல்பாட்டின் நோக்கம் முடிந்தவுடன், அதன் முடிவையும் நிறைவு செய்கின்றான். பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்கியதால் எழுந்த போராட்டம், மக்கள் போராட்டமாக மாறக் கூடாது என்பதில், இந்தியா எப்போதும் அக்கறையாக இருந்தது. மக்களின் தன்னெழுச்சியான உணர்வுகளும், மக்களை பற்றிய சமூகக் கண்ணோட்டமும் உருவான நிலையில், இந்தியா அதை தடுத்து நிறுத்த விரும்பியது. அதை செய்ததுடன், போராட்டத்தின் தேசியத் தன்மையை இல்லாதாக்கியது. வெறும் கூலிப்படையாக்கியதுடன், மக்களை வெறுப்பதே தேசிய போராட்டமாகியது.

 

இதை உருவாக்கும் வகையில் கோட்பாடும் கொள்கையுமற்ற ஆயுதப் போராட்ட கூலிக் குழுக்களை உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளித்தது, சுயமாக இருக்காத வண்ணம் ஆயுதமும், பணமும் வழங்கியது. மக்களைச் சார்ந்து நிற்காத வண்ணம், தம்மை சார்ந்து நிற்கும் வண்ணம் போராட்டத்தையும் மக்களில் இருந்து பிரித்தனர். மாறாக தமது ஆயுதத்தையும், பணத்தையும் நம்பி போராட வைத்தனர். இப்படி பல குழுக்களை உருவாக்கியதுடன், உள் முரண்பாட்டையும் வளர்த்தெடுத்தனர். மொத்தத்தில் மக்களில் இருந்து அன்னியமானதுடன், மற்றைய குழுவில் இருந்தும் அன்னியமாகினர். தலைமை கீழ் இருந்து அன்னியமாகியது. கூலிக் குழுவாக, மக்களுக்கு வெளியில் தங்கியிருந்தது. போராட்டம் மக்களில் இருந்து அன்னியமாக, மக்களை கொள்ளையடிப்பதும், மிரட்டிப் பணம் பறிப்பதும் போராட்ட வழியாகியது. எச்சசொச்சமாக அமைப்பில் இருந்த, வெளியில் இருந்த மக்கள் சார்பான சக்திகளை கொன்றழிக்க, வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கு இந்தியாவே வழிகாட்டியது.

 

இப்படி போராட்டத்தை மக்கள் விரோத போராட்டமாக இந்தியா வளர்தெடுத்தது. அனைத்து பெரிய இயக்கங்களுக்கும், இந்த எல்லைக்குள் ஒரு மக்கள் விரோத இயக்கமாக இருக்க இந்தியா பயிற்சி வழங்கியது.

 

தென்னாசியாவில் நிலவிய அமெரிக்க ருசிய ஏகாதிபத்திய முரண்பாடும், இதற்குள் ஏற்படத்தொடங்கியது. இந்திய ருசியா ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்றதும், இலங்கை அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்றதும் வெளிபடையானது. இந்தியா ஆயுதம் ஏந்திய தன் கூலிக் குழுக்களை, இந்த எல்லைக்குள் தான் பயன்படுத்தியது. 

 

ஆயுதம் ஏந்திய குழுக்களுக்குள் அமெரிக்கா புலியை வளைத்தது. புலி இந்திய எதிர்ப்பு, அமெரிக்க சார்பு குழுவாக மாறியது. புலிக்கு இஸ்ரேலில் வைத்து பயிற்சி கூட வழங்கியது. புலிகளுக்கும் இலங்கை படைக்கும் ஏக காலத்தில் ஒரே முகாமில், ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம,; இஸ்ரேல் பயிற்சி வழங்கும் அளவுக்கு இது முன்னேறியது. எப்படி தாக்குவது, எப்படி அழிப்பது என்ற எதிர்மறை அம்சங்களுடன், தமக்குள் முரண்;பட்ட பிரிவுக்கு அமெரிக்கா பயிற்சி வழங்கியது.    

 

இந்த வகையில் இரண்டு பிரதான ஏகாதிபத்தியம் சார்ந்து, ஆழமான பிளவு மோதலாக மாறியது. ஒன்றையொன்று அழிக்கவும் முனைந்தது. இதில் புலிகள் வெற்றி பெற்றனர். இந்தக் குழுக்களின் மக்கள் விரோத தன்மைக்கு அமைய, தமிழ்நாட்டில் இயங்கிய மக்கள் விரோத கட்சிகளும் கன்னை பிரித்து ஆதரிக்கத் தொடங்கினர். தங்கள் சொந்த தமிழ் மக்களை நம்பியிருக்கக் கூடாது, அதுபோல் இந்திய மக்களையும் சார்ந்து இருக்கக்கூடாது என்பதில், ஆளும் வர்க்கங்கள் கண்ணும் கருத்துமாக இருந்து, இவர்களைப் போசித்தனர்.

 

இந்திய அரசுக்கு எதிராக அமெரிக்கா புலியை பலப்படுத்த சி.ஐ.ஏ ஏஜண்டான எம்;.ஐp.ஆர் உதவினார். அரசில் இருந்தபடி புலிக்கு பணமும் ஆயதங்களையும் வழங்கியதுடன், உள் முரண்பாட்டை பயன்படுத்தி மற்றைய குழுக்களை ஒரம் கட்டினார். இதுவே எதிர்கட்சிகள் ஒரு குழுவை சார்ந்து இருக்கும் நிலைக்கு, குழுக்களை கொண்டுவந்து சேர்த்தது. 

 

இப்படி ஏகாதிபத்திய முரண்பாட்டில் குழுக்கள் மோதிக்கொள்ளவும், அழிக்கவும் தூண்டிவிடப்பட்டன. மக்களைச் சார்ந்திருக்கா வண்ணம், மக்களை எதிரியாக்கியபடி அவை மோதின. 

 

உள் மோதல், மக்கள் விரோதத் தன்மை எல்லா கூலி இயக்கத்தினதும் அரசியலாகியது. ஒன்றையொன்று அழிக்கவும் செய்தன. ருசிய ஏகாதிபத்திய சிதைவுடன், ஆயுதக் குழுக்களை அனுசரிப்பது இந்தியா நலனாக குறுகியது. இதன் பின்னணியில் தான், புலிகளை பின்னால் அமெரிக்கா கைவிட்டனர்.

இதற்கு முன்னம் ஏகாதிபத்திய முரண்பாடு, ஒன்றையொன்று அழித்தொழிப்பாக மாறியது. இந்திய சார்பு குழுக்களை புலிகள் அழித்துவிட்ட நிலையில், இந்தியாவே தலையிட்டு புலியை அழிக்கும் நிலை பின்னால் உருவானது.

 

1987 இல் புலிகளை பேரினவாதம் அழிக்க முற்பட்ட போது, அதை தடுத்து நிறுத்திய இந்தியா, தன் சொந்த நலனை அடைந்ததன் மூலம் தானே புலியை அழிக்க முற்பட்டது. ஆனால் பிரமேதாச தன் நலன் சார்ந்து இந்தியாவின் புலியழிப்பை 1990-1991 இல் தடுத்து நிறுத்;தி, புலியை மீண்டும் பாதுகாத்தார்.

 

இந்தியத் தலையீடு அதில் ஏற்பட்ட தோல்வியின் மறுவிளைவாய், மட்டுப்படுத்தப்பட்ட தலையீடு ஒரு சதியாக மாறியது. புலியின் மக்கள்விரோத செயல்பாட்டை உள்ளிருந்து மேலும் ஆழமாக குலைக்கும் வண்ணம், இந்திய நடவடிக்கைகள் தொடங்கியது. வெளிப்படையாக அல்லாமல், புலியின் உள்ளார்ந்த மக்கள் விரோத தன்மையை ஆதரித்தது. அதன் மூலம் அதை சிதைப்பதில் இந்தியா தன் தமிழ் நாட்டு புலிப் பினாமிக்களைப் பயன்படுத்தியது. புலியின் மக்கள் விரோத தன்மையை, தேசிய போராட்டமாக காட்டி அதைச் செய்ய மேலும் தூண்டினர்.  

 

இப்படி புலிகள் மக்கள் விரோத இயக்கமாக மேலும் மேலும் அன்னியமாகியது. மக்களால் வெறுக்கப்பட்ட, தம் வாழ்வின் இருப்புக்கே அச்சுறுத்தலாக புலியை மக்கள் பார்த்தனர். மக்கள் ஊமைகளாக மாற்றப்பட்டு, கண்ணை மூடிக்கொண்டு ஒதுங்கி வாழும் நிலைக்கு தரம் தாழ்த்தப்பட்டனர். மக்கள் செயலற்ற நடைப்பிணமாகினர். இப்படி புலிக்கு எதிராக நடமாடும் பொம்மைகளாகினர்.

 

புலி மக்களில் இருந்து அன்னியமாகி, இனி மக்களை அணுகமுடியாது என்ற காலம் வரை, இந்தியா திரைமறைவில் இதை ஊக்குவித்தது. இப்படி புலியை அழிக்கும் காலம் வந்தவுடன், மக்கள் தோற்கடித்துவிட்ட புலியை இந்தியா இலங்கையரசின் ஊடாக அகற்ற முனைகின்றது.  

   

போராட்டத்தை வீங்க வைத்து, அதை வெம்பவிட்டு இன்று புதைக்கின்றனர். இதில் தவறு எங்கே? மக்களை நம்பிப் போராடாது, அன்னியரை நம்பியது தானே. ஆயுதமும் பணமும் வாங்கி, போராட்டத்தை ஏகாதிபத்தியங்களின் வாலாய்த் தொங்கி காட்டிக்கொடுத்து அழித்தவர்கள் துரோகிகள்தானே.

 

கூட்டிக்கொடுக்க இந்தியா முதல் பலரும் கொடுத்த பணம், ஆயுதமும், பயிற்சியும், இயல்பாக  மக்களை எள்ளி நகையாடவைத்தது. இந்தத் திமிரில் மக்களை ஒடுக்கி பந்தாடியவர்கள், அவர்களை இழிவாடி போரட்டத்தில் இருந்தும் ஒதுக்கிவைத்தனர். இப்படி போராட்டம் மக்களை தோற்கடிக்க, மக்கள் போராட்டத்தை தோற்கடித்தனர். 

 

இன்று தமது அழிவின் போதும் கூட, தமிழ்நாட்டு பொறுக்கி அரசியல் செய்யும் தமிழ் பினாமிகளை சார்ந்திருக்கவே முனைகின்றனர். அவர்களின் வர்க்க நலன், இந்தியாவின்  வர்க்க நலனுடன் தொடர்புடையது. இதை உடைத்து மீறாத உணர்ச்சி, வாய்வீச்சு அரசியல் மூலம், தமிழ் மக்கள் போக்கு காட்டப்படுகின்றனர். தம் வர்க்க நலனுக்கு ஏற்ப கோசம், தமிழ் மொழியின் பெயரால் மொத்த தமிழ் மக்களையும் ஏமாற்ற முனைகின்றனர்.

 

புலித்தேசியம் திரிசங்கு நிலையில் தடுமாறுகின்றது. கருணாநிதியை நண்பன், எதிரி என்று  அடிக்கடி தடுமாறிய வண்ணம் குழம்ப, கருணநிதியோ புலிக்கு வித்தை காட்டுகின்றார். தமிழக அரசியல் களத்தில் தம்மையும் தமது நிலையையும் தக்கவைக்க, அவரவர் அரசியல் செய்கின்றனர். ஈழத்தமிழன் வாயைப் பிளந்து கொண்டு நிற்கின்றான். சொந்தப் பலத்தில் நம்பிக்கை இழந்து, புலியின் மந்தைகளாகி நிற்கும் சொந்த அவலம்.   

 

இதில் வேடிக்கை என்னவென்றால், புலித்தேசியம் சொந்த மக்களை நம்புவதற்கு பதில், இந்த கழிசடைகளின் தயவில் தொங்க முனைவதும், இதற்குள் மீண்டும் தப்பிப்பிழைக்க முனைவதும்தான்.

 

1987, 1990-1991 இல் புலிகளின் அழிவில் இருந்து மீட்ட ஒரு பொற்காலத்தையே, மீண்டும் குறுக்குவழியில் புலிகள் கனவு காண்கின்றனர். அதற்காக 20 வருடம், உலகம் பின்னோக்கிச் செல்லாது. உலகம் புதிய முரண்பாட்டுடன், புலி அழிப்பு அதன் ஒரு பகுதியாகிவிட்டது. இதைத்தான் இலங்கையூடாக இந்தியா செய்கின்றது.  

 

பி.இரயாகரன்
13.01.2009

 

Last Updated on Tuesday, 13 January 2009 14:32