Tue11282023

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பிளாட்டோவின் குடியரசு கனவுகள்!

  • PDF

"மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும். அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று சொத்துக்கள் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது. சம்பளமும் கிடையாது. பொது உணவு நிலையங்களில் உணவும்,

 அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்க கட்டடத்தில் தங்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும். அப்படி செய்வதால் சுயநலம் அவர்களிடம் இருக்காது. இலஞ்சங்களுக்கு விலை போகமாட்டார்கள். அவர்களுடைய குறிக்கோள் சமூதாயத்தில் ´நேர்மை´ என்னும் அறத்தை நிலைநாட்டுதல் ஒன்றையே குறியாக கொண்டு செயல்பட வேண்டும்."

* பிளாட்டோவின் "இலட்சிய குடியரசு"வில் இருந்து...கிறிஸ்து பிறப்பதற்கு 469- ஆண்டுகளுக்கு முன்னால் கிரீஸ் நாட்டில் ஆதென்ஸ் நகரத்தில் பிறந்தவர் சாக்ரடீஸ். சாக்ரடீஸிம் அவருடைய நண்பர்களும் தத்துவ விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் உன்னிப்பாக கவனித்து எழுத்துக்களால் அவற்றை பதிவு செய்தவர் பிளேட்டோ. இப்படி 20- க்கும் மேல் சாக்ரடீசின் உரையாடல்கள் மட்டும் நூல்களாக எழுதி இருக்கிறார் பிளாட்டோ.

சாக்ரடீஸ் தன் தத்துவங்களையும், சிந்தனைகளையும் எழுதவில்லை. பிளாட்டோவின் மூலமே சாக்ரடீசின் வரலாறு உலகத்திற்கு தெரிகிறது. சாக்ரடீசின் மாணவனான பிளாட்டோ ஆற்றல் மிக்க இளைஞன்; குத்துச் சண்டை வீரன்; பேரழகன்; வசதிப்படைத்தவன்; அறிவில் சிறந்தவன்; கவிதை, நாடகங்கள் எழுதும் திறன் உண்டு.

கி.மு. 399- இல் இருந்து 12- ஆண்டுகள் இத்தாலி, ஆப்பிரிக்கா, எகிப்து, யூதேயா மற்றும் சில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். காரணம் மற்ற சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பண்பாடு, கலாச்சாரங்கள் அது குறித்த ஆராய்ச்சிகள் என உலக மக்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துணரும் ஆர்வம் அவருக்குள் இருந்தது.

12- வருடங்கள் உலகம் சுற்றிய வாலிபன் பிளாட்டோ சொந்த நாட்டுக்கு வந்த பின்பு மக்களுக்கு கல்வி அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் அதிகரித்தது. ´அகடெமியா´ என்ற பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தினார் பிளாட்டோ. அந்த காலத்தில் அகடெமியா (Acadamus) என்ற மாவீரன் இருந்தான். அவனுடைய நினைவாகவே பல்கலைக்கழகத்திற்கு அப்பெயர் வைக்கப்பட்டது. பள்ளி படிப்பை முடித்த இளைஞர்களின் அறிவுத் தேடலுக்கு அவை முக்கியத்துவம் கொடுத்தன. உலகின் முதல் பல்கலைக்கழகம் ´அகடெமியா´ தான். கி.மு.387- இல் பிளாட்டோவினால் உருவாக்கப்பட்ட அகடெமியா 200- ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியது. அதில் அறிவியல், தத்துவஞானம் என்ற இரண்டு பிரிவுகள் இருந்தன.

நாட்டின் அரசியலில் எதிர்காலத்திற்கு தக்க பயிற்சியுடைய இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பது பிளாட்டோவின் கருத்து.

வசதிப்படைத்த இளைஞர்கள் அந்தக் காலங்களில் குடியும், கூத்தும், பெண்களுடன் பாலீயல் தொடர்புகளிலும் இருந்த கிரீஸ் நாட்டு இளைஞர்களில் இருந்து பிளாட்டோ மிகவும் மாறுபட்டு இருந்தார். உலகத்தின் மானுட சமத்துவம், அறிவுடைய மானுட வம்ச விருத்தி,  சமதருமம், பொதுவுடமை, பெண் உரிமை, குடும்பக்கட்டுப்பாடு, கட்டற்ற காதல் உரிமை, பேச்சு சுதந்திரம், ஒழுக்க நியதி நெறிமுறைகள், சொத்துரிமை, பொதுவுடமைக் குழந்தைகள் என சாக்ரடீஸ் தன் நண்பர்களுடனும், மாணவர்களுடனும் விவாதித்துக் கொண்டிருந்தார். சங்கம் அமைத்து ஆதென்ஸில் விவாதித்ததை பிளாட்டோ கல்வி அறிவுக்குள் புகுத்திவிட்டார்.

வரலாறுகளில் காணப்படும் கிரேக்க நாகரீகத்தின் முன்னோடிளாகவும், பெரிகிளீஸ் (Pericles) ஆட்சியின் காலமான நாகரீக அரசியல் காலத்திற்கு பிறகே சாக்ரடீஸ் பிறந்தார் என்றாலும், அந்தக் காலத்தியே மற்ற சமூகத்திற்கு முன்னோடியான சமூதாயமாக இந்தாலும், நேர்மையற்ற முறை பிளாட்டோவுக்கு அப்படியொரு சிந்தனை வரக்காரணமாக இருக்கிறது.

நீதி, நியாயம், உண்மை, அழகு, பொதுநலம் எல்லாமே Rightness இல் அடக்குகிறார் பிளாட்டோ. அவரிடம் அந்தக் கட்டுப்பாடுகள் இருந்ததால் தான் ஆதென்ஸ் இளைஞர்களுக்கு பள்ளிப்படிப்புடன் தர்க்கவியல், அறிவியல் அறிவுக்கு பழக்கி விட்டால் மேன்மையடையும் சமூகம் உருவாகலாம் என்ற சிந்தனை இருந்தது.

தனிமனித சுதந்திரத்தை ஸொஃபிஸ்டுக்கள் (Sophist) வேறு நோக்கில் கையாண்டார்கள். பலசாலியின் கருத்தே நீதியின் அடிப்படை என்றார்கள். பிளாட்டோவுக்கு அவை சகிக்க முடியாதவைகளாக இருந்தன. அப்போது உருவாக்கியவைதான் பிளாட்டோவின் ´இலட்சியக் குடியரசு´ என்ற நூல்.

அரசு நிர்வாகத்தை நடத்தும் உரிமை திறமையும், அறிவும் உள்ளவர்களே நிர்ணயிக்க வேண்டும் என்றார்.

"மனிதர்களின் பிளவுக்கு ´நான்´ என்னும் உணர்ச்சியான தன்னலம் ஒழிய வேண்டுமானால், நான், எனது, என் மனைவி, என் மக்கள், என் குடும்பம், என் வீடு, என் நிலம் என்ற தன்னல உணர்வுகளை ஒழித்து விட்டால் எல்லாம் பொதுவாகி விடும். தன்னலத்திற்கு இடம் இருக்காது என்று பிளாட்டோ கருதினார்.

பொதுவுடமை வாழ்க்கையில் தன்னலமின்மையால் ஏற்படும் நேர்மை என்னும் சமன்பாடு ஏற்படும். தனி மனிதன் சிறந்த நிலையில் இருப்பான் அதுவே இலட்சியக் கூட்டுறவு An Ideal Commonwealth என்ற பிளாட்டோவின் கூற்றுக்கள் குடியரசு என்னும் உரையாடல்களில் ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் விளக்கி இருக்கிறார். இருப்பினும் பிளாட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் (Aristotle) உள்பட பல மாணவர்களிடம் இலட்சியக் கூட்டுறவு சிந்தனையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.

எல்லாவற்றையும் குறிப்பிட வேண்டுமானால், சிறுபுத்தகமாக எழுத வேண்டும் என்பதால் சிலவற்றை மட்டும் பார்ப்போம்...

"கட்டற்ற ஆண், பெண் உறவு, ´பொதுவுடமைக் குழந்தைகள்´ போன்ற பிளாட்டோவின் கோட்பாடுகள் அடிப்படை மனிதப் பண்புகளை தகர்ப்பதாக  இருக்கின்றது" என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. மனிதனின் அடிப்படைப் பண்புகளை ஒழிக்கும் போது, சமூதாய சமத்துவம் ஏற்படும் என்ற பிளாட்டோவின் சிந்தனை பல முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. குழந்தை வளர்ப்பு பொதுவுடமை ஆக்கும் போது பெற்றோரின் வளர்ப்பு முறைகளை விட, ஏனோ தானோ என்ற போக்குகளை அதிகரித்துக் காணப்படும் போது ஒரு குழந்தை சமத்துவ சிந்தனையுடன் வளர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இது ஒருபுறம் இருக்க பிளாட்டோவின் அரசியல் சீர்திருத்த சிந்தனைகளை குடியரசு தொகுதிகளாக்கி வைத்திருப்பதை கேள்விப்பட்டு கிரேக்க நகர மன்னன் ´டையோனிஸஸ்´ பிளாட்டோவை அழைத்து குடியரசு சித்தாந்தங்களை பார்த்தான். பிளாட்டோவின் சிந்தனைகள் அவனுக்கு தீவிரவாதத் திட்டங்களைப் போன்று இருந்திருக்க வேண்டும். கடும் கோபத்தை கொடுத்தது மன்னனுக்கு. பொது பொண்டாட்டி, பொது புருஷர்கள், பொது குழந்தைகள் என்று என்ன கண்டபடி கிடக்கிறது என்ற கோபம். மன்னன் அதை தத்துவஞானமாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிளாட்டோவை பிடித்து சிறையில் அடைக்கச் சொல்லி உத்தரவு போட்டான். தலையை வெட்டியெறியும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதிர்ந்து போன பிளாட்டோவின் நண்பர்கள் சிலரின் தலையிட்டினால் பிளாட்டோ உயிர் தப்பினார். அவரை பிடித்து அடிமையாக வேறு நாட்டுக்கு விற்க கட்டளையிட்டான் மன்னன்.

பிரபு வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் பிளாட்டோவை அடிமையாக விலைக்கு வாங்கினார். தன்னுடைய குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கு உபயோகித்த அவர் சில காலங்களில் பிளாட்டோவை விடுவித்தார். இனி தனக்கு அடிமையில்லையென்றும், இனி சுதந்திர மனிதனாக இருக்கலாம் என்றும் அனுப்பிவிட்டார். மீண்டும் ஆதென்ஸ் வந்த பிளாட்டோவுக்கு கிரேக்க மன்னரான டையோனிஸஸ் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ஓர் கடிதம் அனுப்பினான்.

அகடெமியா பல்கலைக்கழகத்தில் தன் இறுதிக் காலம் வரையில் இளைஞர்களுக்கு தத்தவம், அறிவியல் விவாதத்தில் கவனஞ்செலுத்தினார் பிளாட்டோ. அவர் இறக்கும் போது வயது 81.

பிளாட்டோ தத்துவங்கள் அவர் வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. கிரேக்க நாகரித்தில் ஒருபுறம் செல்வச் செழிப்புகளும், மறுபுறம் ஏழ்மையும், பட்டினி, பஞ்சமும் உடைய மற்றொரு சமூகமும் இருந்தது. செல்வந்தர்கள் ஆடம்பரம், மது, பெண்கள் தொடர்பு, கொண்டாட்டங்கள் என ஆடம்பரமாக இருந்தனர். திடீர் திடீரென இதர நாடுகளின் படையெடுப்பு; வெற்றி கட்டயாயம் பெற்றாக வேண்டிய சூழல். தோல்வியடைந்தால் தங்களுடைய செல்வங்கள், உடமைகள் அனைத்தையும் பறி கொடுத்தாக வேண்டிய கட்டாயங்கள் போன்ற சூழல்களால் பிளாட்டோவின் சித்தாந்தம் கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் போல் இருந்ததோ என்னவோ?


தமிழச்சி
08/01/2009

Last Updated on Friday, 09 January 2009 08:37