Wed06232021

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஈழப்போராட்டத்தை புரிந்துகொள்ள உதவும் 6 நூல்கள்

  • PDF
இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைப்புவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க (புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடுமைகளை உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை.

ஈழத்தமிழரின் இன்றைய அவல நிலைமைக்கு சிங்கள பேரினவாதம் மட்டும் காரணமல்ல. மாறாக பேரினவாதத்தை எதிர்த்து போராடியதாக கூறிய குறுந்தேசிய புலிகளும், எப்படி காரணமாக இருந்தனர் என்பதை இந்த நூல்கள் ஊடாக நாம் புரிந்து கொள்ளமுடியும்.

ஒரு போராட்டம் மக்கள் போராட்டமாக முன்னனெடுக்காத வரை, எந்தளவுக்குத்தான் ஈழத் தமிழருக்கு தார்மீக ஆதரவை தமிழர்கள் வழங்கினாலும், அது ஈழத்தமிழருக்கு பயன்படுவதில்லை. இவைகள் ஏன் என்பதை; புரிந்துகொள்ளவும்இந்த நூலாசிரியரின் பல நூல்கள் உதவுகின்றது.
 
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 - 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும் பெற முடியும்.
 
கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை - 600 002.தொலைபேசி: 044 - ௨௮௪௧௨௩௬௭

1. இரக்கமற்ற கோழைகளின் அரசியலும் மனித அவலாங்களும்

முன்னுரைஅவலமும் துயரமும் நிறைந்த ஒரு சமூகம்தான் தமிழ் இனம். இன்று எனது தமிழ் சமூகத்தின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம்பிக்கையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றி சிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது. இந்தப் போக்கினை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் இது. பல்வேறு மனித அவலங்களை ஒருங்கே பேச முனைகின்ற இந்த நூல், உங்களுடன் இதைபற்றி உரையாடமுனைகின்றது.

சிங்களப் பேரினவாதிகளும், புலிகளும், புலியல்லாத அரசு சார்பு குழுக்களும், தமிழ் மக்களை இரக்கமற்ற வகையில் தமது அடிமைகளாகவே நடத்துக்கின்றனர். மக்கள் அந்த கொடூரத்தை எதிர்கொள்ள முடியாது, அடங்கி ஒடுங்கி கைகட்டி நிற்கின்றனர். இப்படி இருத்தல் தான், தமிழ் மக்களுக்கு அழகு என்று பரஸ்பரம் கூறிக்கொள்கின்றனர்.

இதை மீறி எதையும் ஆக்கபூர்வமாகச் செய்யமுடியாது. அவை செய்யக்கூடாத ஒன்று. இப்படி எதையும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இது மீறப்படும் போது, காணாமல் போதல், கடத்தல், படுகொலை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. காலத்துக்கு காலம், இப்படி மாறி மாறி, தமிழ் இனத்தையே அழித்து சிதைத்து வந்தனர், வருகின்றனர்.

இந்த மனித துயரத்தை மனதால் நினைத்துப் பார்க்க முடியாது. இதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு இந்த துயரம் கொடூமையானது, கொடூரமானது. அன்றாடம் இதை வாழ்வாக அனுபவிப்பவன் படுகின்ற வேதனைகள், படு பயங்கரமானவை. உரிமையை கோரிய சமூகம், இன்று வாழ்வையே பறிகொடுத்து நிற்கின்ற பரிதாபம். சின்னச் சின்ன அற்ப உணர்வுகளைக் கூட, துயரம் நிறைந்த வாழ்வாக அனுபவிக்கின்ற ஒரு இனமாக தமிழினம் சிதைந்துவிட்டது. சாதாரணமான வாழ்வைக் கூட இயல்பாக வாழமுடியாத வகையில், மக்கள் விரோத சக்திகளின் கொடூரமான நடத்தைகள் செயல்கள் பதிலளிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்களை இழந்து புலம்பும் குழந்தை, மனைவி, தாய். இப்படி பல உறவு சார்ந்த சமூகச் சிதைவுகள். அவர்களின் சொந்த அன்றாட வாழ்க்கையில் தொடரும் பற்பல சோகங்கள். இதை அற்பத்தனமாகவே எடுத்து, கண்டும் காணாமல் விட்டுவிடுகின்ற புறக்கணிப்புகள். மனித உணர்வுகள் மீது, உணர்ச்சியற்று கல்லாகிப் போன சமூகத் தன்மை. இதில் கணவனை இழக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும், மனித உணர்ச்சியும் உணர்வும் சார்ந்த பாலியல் நெருக்கடிகள். சமூகத்தில் இதை கண்டு கொள்ளாத அசமந்தமான வக்கிரமான போக்குகள். ஒழுக்கமென்ற பெயரில், சமூக அதிகாரம் கொண்ட அதிகார மையங்கள். இப்படி எண்ணற்ற உளவியல் சார்ந்த, மனம் சார்ந்த மனித துயரங்கள். கண்ணுக்கு புலனாகாத வகையில், சமூகத்தினுள் சீழ் பிடித்து நாறுகின்றது.

இதன் மேல் தான் ஜனநாயகம் தேசியம் என்று, ஒன்றையொன்று எதிராக நிறுத்தியபடி அரசியல் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் மூச்சுக்கு மூச்சு மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகின்றனர். இந்த நூல் இதை அம்பலப்படுத்துவதுடன், சாதாரண மனிதனின் உள்ளடத்துடன் உணர்வுடன் நின்று பேச முற்படுகின்றது. இப்படி மனித அவலங்களை பற்றி, மக்களுடன் பேச முற்படுகின்றது இந்த நூல். நாம் தீர்வாக ஒன்றை மட்டுமே கூற முற்படுகின்றோம்.

நாங்கள் வாழ்வில் உணர்கின்ற எங்களது பிரச்சனைக்கு, ஒரு தீர்வைத் தேடி நாங்கள் போராடாத வரை, மாற்று தீர்வு என எதுவும் எமக்கு கிடைக்கப்போவதில்லை. எப்படிப் போராடுவது என்பது கூட, நாம் எமது சொந்த சூழல் சார்ந்து கற்றுக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது. இதைவிட மாற்று எதையும்யாரும் தங்கத்தட்டில் ஏந்தி வந்து தரப்போவதில்லை.
 
2.மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!
முன்னுரை
 
சமகாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு மனிதவிரோதசெயல்கள் மீதான ஒரு தொகுப்பு நூல் இது. மனிதத்தை நோக்கியும், மனிதத்தை நேசித்தலை நோக்கி முன்னேறுதல் என்பது அன்றாடம் அடிசறுக்குகின்றது. அதுவென்னவென்று கேட்கின்ற அளவுக்கு, அது அர்த்தமிழந்த ஒன்றாக பல்லிளித்து நிற்கின்றது. நாள்தோறும் மனிதனுக்கு எதிரான புதிய சதிகள், திட்டங்கள். பாவம் தமிழ்பேசும் மக்கள். மனிதனுக்கு எதிரான நிலைகளில், நிலைமைகளில் அன்றாடம் நடக்கும் அதிரடி மாற்றங்கள், அதிர்வுகள். அவற்றில் சிலவற்றை இந்த நூல் மூலம் உங்களுடன் பேச முனைகின்றேன்.

சமாதானம், அமைதி தொடங்கிய பின், ஒன்று இரண்டு என்று தொடங்கிய தொடர் கொலைகள்,  இன்று அன்றாடம் இரட்டை இலக்கத்தை எட்டி நிற்கின்றது. பலர் திடீர் திடீரென காணாமல் போகின்றனர். ஏன், எதற்கு காணாமல் போகின்றனர், கடத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்று யாருமே புரிந்துகொள்ள முடியாத வகையில் அவை தொடருகின்றன. இதை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தபடி ஆதரிப்பதே, ஒவ்வொரு அரசியல் எதிர்தரப்பினரதும் அன்றாட அரசியலாக உள்ளது. இந்த மனித அவலங்களை இட்டு அக்கறைப்படுவது கூட கிடையாது. கொலை, கொள்ளை, கடத்தல், இதுவே தமிழ் மக்களின் உரிமையுடன் தொடர்பானதாக காட்ட முனைகின்றனர். இதற்குள் பிரிவுகளும், பிளவுகளும், கோட்பாடு சார்ந்து நிகழ்கின்றது.
 
மக்களின் நலனை எட்டி உதைத்து கொள்வது முதல், மக்களின் எதிரிகளுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதே அரசியலாகி, அதை நியாயப்படுத்துவதே அரசியலாகிவிட்டது என்ற நிலை. மக்கள் நலனைக் கோரினால், அது பலருக்கு ஆச்சரியமான விடயமாகி விடுகின்றது. விசித்திரமான மனிதனைப் பார்ப்பது போல் பார்க்கின்றனர். இது புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத தரப்பு நிலையும் இதுதான். இப்படி இரண்டு தரப்பு பாசிஸ்ட்டுகளுக்கு இது ஆச்சரியமாக அல்லாமல் எப்படித்தான் இருக்கும். எங்கும் எதிலும் பாசிசம. அவர்களின் நடைமுறை முதல் கொள்கை கோட்பாடு அனைத்தும் பாசிசமாகிவிட்டது. பேரினவாதம் இதன் கீழ் தான் பலமடைகின்றது. தனது பாசிச நடத்தையை செங்கோலாக காட்டி, அதையே ஜனநாயகமென்கின்றது. சமாதானம், அமைதி, தீர்வு என்று போடும் அரசியல் வேஷங்கள் எல்லாம் அலங்கோலமாகி நிற்கின்றது.
 
இதில் உள்ள 28 கட்டுரைகள், இதன் ஒருபகுதியை உங்கள் முன் அம்பலமாக்குகின்றது. இவை  www.tamilcircle.net  என்ற இணையத்தில் அன்றாடம் வெளியாகியவற்றில் ஒரு பகுதிதான். சமூகத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், இக்கட்டுரைகள் வழிகாட்டும் என்று நம்புகின்றோம்.

பி. இரயாகரன்.
25.02. 2000
 
முன்னுரை

இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது, சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே, மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.

இதற்கு நேர்மாறாக யாரும் கற்பனை செய்ய முடியாத, ஒரு பாரிய மாற்றம் ஒன்று நடந்து முடிந்து விட்டது. உண்மையில் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், அதன் விளைவுகளையும்; யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. உண்மையில் என்றைக்கும் இல்லாத ஒரு மாற்றம் நடந்து முடிந்துவிட்டது. இலங்கை அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் எந்த சக்தியாலும், மீண்டு வரமுடியாத ஒரு மாற்றம் நடந்துவிட்டது. உதாரணமாக நாட்டில் பொது கக்கூஸ் கட்டக் கூட ஏகாதிபத்தியங்களின் உதவி அவசியமாகிவிட்டது. யுத்த சிதைவில் இருந்தது மீள உலகவங்கியின் அனுமதி ஒவ்வொருத் துறைக்கும் கெஞ்சிக்கேட்க வேண்டிய நிலையுள்ளது. வடக்கு - கிழக்கில் யுத்தம் சிதைத்த வீடுகளைப் புனரமைக்க நஷ்டஈடு கொடுப்பதற்காக, ஒரு வீட்டுக்கு 75 ஆயிரம் ரூபாவை உலகவங்கி வழங்க அனுமதித்தது. இது போதாது என்று கூறி உலக வங்கியிடம் கெஞ்சிய நிலையில், அதை 1,10,000; ரூபாவாக உயர்த்த உலக வங்கி இணக்கம் தெரிவித்ததை பெருமையாக அறிவிக்கின்றனர். இந்த வகையில் வடக்கு - கிழக்கில் மூன்று லட்சம் வீடுகளைப் புனரமைக்கும் திட்டம் ஒன்று, உலக வங்கியின் நிதியுடன் அனுமதி பெறப்பட்டுள்ளது. மார்ச் 2004-ல் வெளியான மற்றொரு அறிக்கையில் 2500 ரூபாவுக்கு குறைவான வருமானம் உடைய, 1983-க்கு பின் யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு வீடுகளை அமைத்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவை ஒன்றும் கற்பனை அல்ல.

இதில் உலக வங்கிக்கு என்ன சமூக அக்கறை? கடந்த இரண்டு வருடமாக சாதாரண பத்திரிக்கைச் செய்தியில் இருந்து, மிகக் குறைந்தபட்ச தரவுகளை அடிப்படையாக கொண்டு, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக ஆதாரமாக இந்த நூலின் முதல் பாகம் விவாதிக்க முற்படுகின்றது. ஒரு நாடு எப்படி மறுகாலனியாக்கத்தின் உள் சென்று விட்டது என்பதை, மறுக்க முடியாத ஆதாரத்துடன் உங்களுக்கு முன்வைக்கின்றது. அமைதி, சமாதானம் என்ற விரிந்த தளத்தில், இந்நூல் உங்களை சுயமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றது.

இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் என்ன நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டது. முதல் பகுதி ஒரு வருடத்துக்கு முன்பு எழுதப்பட்டது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னான முதல் வருடத்திய நிலையை ஆராய்கின்றது. இரண்டாம் பகுதி பிந்தைய வருடத்தை அடிப்படையாக கொண்டு முழுமையை ஆராய்ந்து அம்பலப்படுத்துகின்றது. மூன்றாம் பகுதி சம காலத்தில் நடந்த முக்கிய விடயங்கள் மற்றும் முக்கியமான பல கட்டுரைகளை உள்ளடக்கியது.

2004 தேர்தல் யூ.என்.பி வேட்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு முதல் கண்டனத்தையும், மிரட்டலையும் அமெரிக்காவே புலிக்கு எதிராகவிடுத்தது. இந்தக் கொலையைச் சொந்தக் கட்சி (U.N.P) முதல் இலங்கையின் ஜனநாயகக் கட்சிகள் என்று சொல்லும் எந்தக் கட்சிகளும் கூட இதைக் கண்டிக்கவில்லை. ஏகாதிபத்தியமே இலங்கையை ஆட்சி செய்கின்றனர் என்பதையே இவை காட்டுகின்றன. இந்தக் கண்டனம் அமெரிக்கா வெளியுறவு அமைச்சில் வைத்து விடப்பட்டது. இது ஒவ்வொரு சிறிய சம்பவமும் அமெரிக்காவால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும், கண்காணிக்கப்படுகின்றது என்பதையும் உணர்த்தியது. புலிகளுக்கு எதிரான குறிப்பான மிரட்டல் என்பது, எதையும் அமெரிக்கா செய்யும் தயார் நிலையில் உள்ளது என்பதையும் கோடிட்டுக் காட்டியது.

பொதுவாக அமைதி, சமாதானம் நோக்கிய பயணங்கள், உலகெங்கும் அங்கும் இங்குமாக தொடர்கின்றது. இலங்கையை நோக்கி ஏகாதிபத்திய பிரதிநிதிகள் இடைவிடாத தொடர் பயணங்களை நடத்துகின்றனர். ஏகாதிபத்தியம் கடன், உதவி, முதலீடு என்ற பெயரில் நிதியை வெள்ளமாக இலங்கையை நோக்கி நகர்த்துகின்றனர். இலங்கையின் ஏற்றுமதி பெருக்கெடுத்துள்ளது. இறக்குமதி கட்டுக்கடங்காத வகையில் பெருகியுள்ளது. அன்னிய முதலீடுகள் பல மடங்காகியுள்ளது. தன்னார்வக் குழுக்களின் தங்குமிடமாக இலங்கை மாறிவிட்டது.

புலிகள் அன்னியப் பொருட்களை வாங்கி விற்கும் தரகு வர்த்தகத்தில் கால் பதித்துவிட்டனர். எதிர்கால முதலீட்டை நோக்கி அசையா சொத்துகள் வாங்கி குவிக்கப்படுகின்றது. உள்ளுர் உற்பத்திகள் மற்றும் சேவைத்துறையை புலிகள் படிப்படியாக தமது தனிப்பட்ட சொத்தாக்கி வருகின்றனர். புலிகள் புதிய முதலீட்டாளராக மாறிவிட்டனர். பல புதிய புலி முதலாளிகள் உருவாகி வருகின்றனர். அதற்கான நிதியை வரைமுறையற்ற வரி மூலம் திரட்டுகின்றனர். எங்கும் பணத்தை மையமாக வைத்த நடவடிக்கைகள், பெருகுகின்றது. பெரும் சொத்துக் குவிப்பின் ஊடாக, புதிய பணக்கார புலிகள் படிப்படியாக மிதக்கின்றனர். யாழ்குடா மேட்டுக்குடி சார்ந்த பிரான்ஸ் நகராகிவிட்டது. யாழ்நகரக் கடைகள் ஆடம்பரப் பொருட்களை விற்கும் தரகுச் சந்தையாகிவிட்டது. புலிகள் பல பத்து முதலீட்டை பல்வேறு வழிகளில் முதலீடு செய்துள்ளனர். பலவற்றை கட்டுப்படுத்தி பலாத்காரமாக அடிபணிய வைக்கின்றனர்.

மறு தளத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்கள் என்றுமில்லாத ஏழைகளாகியுள்ளனர். வாழ வழியற்ற நிலையில் மக்கள் வெளிநாடு செல்வது கடந்த இரண்டு வருடத்தில் பெருகி வருகின்றது. உள்ளுர் சிறு உற்பத்திகள் அழிக்கப்பட்டு நலிந்து போய்விட்டது. வேலை இழப்பும், வருமானம் இன்மையும் பெருகிவருகின்றது. மக்களின் நுகர்வுகள் ஏற்றுமதியாகின்றன. இறக்குமதிகள் பெரும் பணக்காரர்களின் நலன்கள் சார்ந்து மாறிவிட்டது. வறுமை ஊடாக கல்வி மறுப்பு தேசிய கொள்கையாகிவிட்டது. மக்களின் சொத்தான அரசுத்துறைகளை அன்னியருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தனியார் மயமாகிவிட்டது. தேசிய உற்பத்திகள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. சமுதாயப் பிளவு விரிந்து அகலமாகிவிட்டது.

இந்த நூல் எழுதி அச்சுக்கு அனுப்ப இருந்த நேரத்தில் கருணா-பிரபாகரனின் பிளவு அரங்குக்கு வந்தது. இந்த நிலையில் இந்த நூல் இரண்டு பக்கத்திற்கும்; விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வேறுபாடற்ற இவர்கள், பிரதேசவாதிகளாகவே இரண்டு பகுதியிலும் அரங்கில் புகுந்துள்ளார்கள். மக்களைப் பற்றி இருவருக்கும் சிறிதும் அக்கறை கிடையாது. ஏகாதிபத்தியத்தின் தொட்டில் தாலாட்டு பெறும்; உரிமையையே, தத்தம் தரப்பில் உரிமையாகக் கோருகின்றனர். இங்கு இரட்டைப்பிள்ளை தாலாட்டை கருணா கோர, பிரபாகரன் ஒரு குழந்தைதான் ஏகாதிபத்திய தாலாட்டில் வாழ முடியும் என்கின்றார். இதையொட்டி ஒரு கட்டுரை இந்த நூலில் இணைத்துள்ளேன்;. இக்கட்டுரை ஒரு சஞ்சிகையில் வெளிவருவதற்காக எழுதப்பட்டது. இக் கட்டுரையுடன் பின்னிணைப்பு அவசியம் கருதி இணைக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தில் மக்களை மந்தை நிலைக்கு தாழ்த்தி, அறியாமையைத் தமது மூலதனமாக்குகின்றனர்.

ஒட்டு மொத்தமாக இவை அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் மந்தை நிலைக்குள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ், சிங்களத் தலைவர்கள் விதிவிலக்கின்றி ஏகாதிபத்தியத்திடம் எப்படி நாட்டை விற்றுள்ளனர் என்பதை, இந்த நூல் ஆதாரத்துடன் நாட்டுப் பற்று உள்ளவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது. புலிகளும், துரோகக் கட்சிகளும்கூட தமது குறைந்தபட்ச அடையாளத்தை எப்படி தொலைத்து வருகின்றனர் என்பதை ஆராய்ந்தளிக்கின்றது. மேலும் சிங்களக் கட்சிக்கு இடையில் வேறுபாடுகள் மறைந்து விட்டதையும் ஆராய்ந்தளிக்கின்றது. நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்பதில், தமிழ் மற்றும் சிங்கள (முஸ்லீம், மலையக கட்சிகளும் கூட) கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்பதை இக்கட்டுரை துல்லியமாக அம்பலப்படுத்துகின்றது. துரோகக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக தம்மை அடையாளம் காட்டியவர்களும் எப்படி தம்மை அரசியல் ரீதியாக இனம் காட்ட முடியாது போயுள்ளனரோ, அது போல் புலிகளுக்கும் துரோகக் குழுக்களுக்கும் இடையில் அரசியல் வேறுபாடுகள் அற்றுப் போனதை இந்த நூல் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. மக்களுக்கு எதிரான இவர்களின் துரோகத்தை இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது.

இலங்கையில் நடக்கும் ஒட்டு மொத்த காட்டிக் கொடுப்பை, இலங்கையில் யாரும் அம்பலப்படுத்தி போராட முன்வரவில்லை. அந்தப் பணியின் அங்கமாகவே இந்த நூல் உங்களுக்கு பல்வேறு தடைகளைக் கடந்து கிடைக்கின்றது. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்த கொள்ள விரும்பும், சமூகத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் இந்த நூல் ஒன்றிணைய அறைகூவுகின்றது.
 
முன்னுரை

"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகி விடுகின்றான்.'' மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிஸ்ட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதைச் செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர். இது குறித்து கார்ல் மார்க்ஸ் "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்'' என்கிறார்.
 
சதி, சூழ்ச்சி, நேர்மையீனம், வக்கிரம், அராஜகம், சூறையாடல், தரகுத்தனம், வன்முறை என ஒட்டு மொத்தமும் ஒருங்கிணைந்து இலங்கை அரசியலில் குடிகொண்டுள்ளது. அடிப்படையான நேர்மை, மக்கள் பற்றிய அக்கறை, விமர்சனம், சுயவிமர்சனம் என எதையும் எமது மண்ணில் இனம் காண முடியாத ஒரு வறண்ட சூனியத்தில், விதைக்கப்படும் விதைகள் தான் இக்கட்டுரைகள். இந்த நிலையில் மனித இனம் சந்திக்கும் மனித அவலங்களை உள்ளடக்கிய வகையில், பல தலைப்புகளைக் கொண்டதே இந்த நூல். சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகுப்பே இந்த நூல். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை, மரணதண்டனைக்கு உரியவையாகவே உள்ளது. மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு தயார்நிலையில் தான், இந்தக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. இவை www.tamilcircle.net என்ற எமது இணையத்தளத்தில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டு வந்தன.

இந்தநூல் இலங்கை முதல் சர்வதேச நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. இருந்தபோதும் இந்த நூல் இலங்கையை மையமாகக் கொண்டே உள்ளது. சுனாமி, இலங்கையில் தொடரும் படுகொலைகள், சில மரணங்கள், புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், இழுபறியான மக்கள் விரோதப் பேரங்கள் முதல் ஏகாதிபத்தியங்களின் சதிராட்டங்கள் வரை பலவற்றை இத்தொகுப்பு நூல் கொண்டுள்ளது.

உலகளவில் மனித இனம் சந்திக்கும் தொடர் அவலங்களின் ஒரு பகுதியாக இலங்கை மக்கள் அனுபவிக்கும் அவலங்களையிட்டு யாரும் வாய்திறப்பதில்லை. இது எமது சொந்தத் தலைவிதியாக உள்ளது. பினாமியமும், வாய் திறவாது சூழலுக்கு இசைந்து போகும் மௌனங்களும், மக்களின் அனைத்துவிதமான வாழ்வியல் சமூக ஆதாரங்களையும் அழித்து வருகின்றது. மறுபுறம் மிகக் கடும் எதிர்தரப்பாக மாறி நிற்போர் கூட, மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒரு கைக்கூலிக் கும்பலாகவே சீரழிந்து, அன்றாடம் சிதைந்து வருகின்றனர். ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், மறுகாலனியாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத்தரப்பும் ஏதோ ஒரு வகையில் தமக்குள் முரண்படுகின்றனர். இந்த முரண்பாடு பல படுகொலைகளைக் கூட நடத்தி முடிக்கின்றது. அவை அனைத்தும் மக்களின் நலன் என எதையும் முன்வைப்பதில்லை.

தமது கருத்துக்கள், உரைகள், திட்டங்கள், பேச்சு வார்த்தைகள், நிகழ்ச்சிகள், நடைமுறைகள் என்று அனைத்து விதமான நிகழ்வுகளிலும், மக்களின் சமூகப் பொருளõதார வாழ்வியல் உள்ளடக்கத்தைப் பேச மறுத்து நிற்கின்றனர். மக்களுக்கு எதிராகவே அனைத்தையும் திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் மக்கள் விரோதக் கும்பலின் அனைத்து விதமான பிரிவுகளையும் போக்குகளையும் இந்த நூல் அம்பலப்படுத்த முனைகின்றது. மக்களின் நலன் என்பது, என்ன என்பதை எடுத்துக் காட்ட முனைகின்றது. ஒரு புரட்சிகரமான விமர்சன அணுகுமுறை எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதை, இந்த நூல் புரட்சிகர உணர்வுடன் கற்றுத் தரமுனைகின்றது.
 
தோழமையுடன்
பி. இரயாகரன்
 
5.இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
முன்னுரை

தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனை தேசிய போராட்டமாகத் தவறி, ஒரு இனவாத யுத்தமாக பரிணமித்த வரலாற்றுப் போக்கை இந்த நூல் அம்பலம் செய்கின்றது. இதன் மூலம் குறுந் தேசிய இனவாதப் போராட்டத்தை தேசிய போராட்டமாக மாற்றுவதன் தேவையை, மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இந்த சிறு நூலின் ஊடாக உங்கள் முன் வைக்கின்றேன்.
 
பெரும்பான்மை இனங்கள் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படையான தேசிய நலன்களை, சகல இனவாத தேசியவாதிகளும் எப்படி குறுகிய நலனில் வைக்கின்றனர் என்பதையும் இந்த நூல் தெளிவாக்குகின்றது. இதன் மூலம் இலங்கையின் தேசிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவாக்குகின்றது. பரஸ்பரம் இனங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதும், மக்களின் நலனை முதன்மைப்படுத்திய தேசியத்தை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அரசியல் ரீதியாக தெளிவாக வைப்பது நூலின் மைய நோக்கமாகும்.
 
சுயநிர்ணயம் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு இலங்கையின் சுயநிர்ணயம் அவசியமானது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், அவர்கள் நடைமுறைப்படுத்தும் மறுகாலனியாக்க உலகமயமாதலுக்கு எதிராகவும் தேசியத்தை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, இந்த நூல் தெளிவுபடுத்துகின்றது. மக்களின்; இன ஐக்கியம் இதற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துன்றது. இனவாதிகள் பிரித்தாளும் இனவாதக் கோசங்களின் ஊடாக தேச விரோதிகளாக இருப்பதுடன், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருக்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்திய உலகமயமாதலின் உற்பத்தி கூறுகளையும், அதன் பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் எதிர்ப்பவர்கள் அல்ல. இது அவர்களின் தேசியம் பற்றி அளப்பதற்கு ஒரு அடிப்படையான அளவு கோல் மட்டுமின்றி, உலகமயமாதலை வரவேற்பவர்களாகவும் ஒரு தரகர்களாகவும் இருக்கின்றனர்.
 
இடைக்கால தீர்வு என்ற போர்வையில் முன்வைக்கின்ற அனைத்தும் வரலாற்று ரீதியாக இனவாதத்தையும், தொடர்ந்த நிரந்தரமான ஒரு அரசியல் பிழைப்புவாத வழியாகவே முன்வைக்கின்றனர். உலகமயமாதல் தேசியத்தை அழிப்பதற்குரிய தூண்களாக இனத் தேசியத்தை பயன்படுத்துகின்றனர். இனபிரச்சனைக்கு ஒரு ஜனநாயக பூர்வமான தீர்வை முன்வைப்பதற்குப் பதில், அதீதமான சலுகைகளை முன்வைப்பது அல்லது மற்றொன்றை மறுப்பது இலங்கையின் எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளினதும் இன்றைய நிலையாகும்;. இது சமாதானத்துக்கும், மக்களின் அடிப்படையான வாழ்வியலுக்கும் எதிரானது. ஒரு சமாதானத்துக்கு அவசியமானது, இனவாத யுத்தத்தின் மீதான அனைத்து ஜனநாயக விரோதமான கோரிக்கைகளையும் செயல்களையும் இவற்றுக்கிடையில் பக்கம் சாராது விமர்சிப்பதும் செயற்படுவதுமாகும்;. ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கை இனவாத அரசியல் களத்தில் உள்ளவர்கள், இதில் ஏதோ ஒன்றைச் சார்ந்து நின்று, மற்றையவற்றை அதீதமாக விமர்சிப்பதன் மூலமும், செயற்படுவதன் மூலமும் இனவாதம் ஆழமாக மேலும் புரையோடுகின்றது. சமாதானமும், மக்களின் வாழ்வியலும் மேலும் இனவாத யுத்த கொடூரங்களால் பலியிடப்படுகின்றது.
 
விமர்சனமும், மாற்று செயல்முறையும் மட்டுமே சமாதானத்துக்கும், அடிப்படையான மக்களின் விடுதலைக்கும், மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் அடிப்படையான செயல் முறையாகும்;. இது இனவாதம் மற்றும் குறுந்; தேசிய இனவாதம் என்று அனைத்தையும் எதிர்த்து ஜனநாயகக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி போராடி இனத்தேசியத்துக்கு பதில் தேசியத்தை உருவாக்க வேண்டும்.
 
இந்த சிறு நூலுக்குரிய கட்டுரைகளை சமர் கட்டுரைகளாகயாக எழுதத் தொடங்கினேன். சமூக முக்கியத்துவம் கருதி அவை சிறு நூலாகவே வெளிவருகின்றது. இந்த நூலில் பயன்படுத்திய புள்ளிவிபரங்கள், பத்திரிகைகள் மற்றும் வேறு நூல்களில் எடுக்கப்பெற்றன. இந்த புள்ளிவிபரங்கள் சில முழுமையற்றவையாக இருந்தாலும், இதன் பொதுத் தன்மைகளும் சமூக விளைவுகளும் சரியானவையாகும்;. நூலின் மையமான அரசியல் செய்தியை இவை எந்த விதத்திலும் பாதிக்கமாட்டாது. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையில் தொடங்கிய இந்த சிறு வெளியீடு, பல்வேறு விடையங்களை முழுமையாக இங்கு ஆய்வுக்கு எடுக்கவில்லை. ஆனால் குறிப்பான விடையத்தை முதன்மைப்படுத்தியே இதை எழுத நேர்ந்தது
 
6.தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.
முன்னுரை

அண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பை விட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்தபட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர். பெயர்கின்றனர்.
இந்தப் புலப் பெயர்வின் நீடித்த சமூக அக்கறை, அவர்களின் பொருளாதார வசதியுடன் சிதையத் தொடங்கியது. முன்னைய சமூக அக்கறைக் குரியவர்கள் பலர் இளம் வயது இளைஞர்களாக இருந்ததுடன், உழைப்பில் ஈடுபடாது கவர்ச்சிகரமான இராணுவ செயற் தளத்தில் புகுந்தவர்கள், முதன் முதல் பணத்தை தமதாகக் கண்டது முதல் அவர்கள் சமூக அடிப்படையுடன் தமது நிலைக்கு ஏற்ப ஒரு புதிய கோட்பாட்டுத் தளத்தைத் தேடத் தொடங்கினர், தொடங்கி உள்ளனர்.
 
இதே நேரம் இந்தியாவில் உள்ள புரட்சிகரப் பிரிவுகளுடன் நெருங்கிய பல முன்னைய தொடர்புகளை முன்பு பேணியவர்கள், தமது சமூக அடிப்படை மாற்றத்துடன் புதிய கோட்பாட்டுத் தளத்தை தேடி அலைந்தனர்.
 
இந்தியாவில் எழுந்து வரும் சமூக நெருக்கடிகளும் அதனால் எழும் போராட்டங்கள் அடிப்படை மார்க்சிய வரையறைக்குள் எழுவது தவிர்க்க முடியாத போக்காக இருந்தது. இந்தியாவில் ஏகாதிபத்தியமும் உள்ளுர் ஆளும் தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவுகளும் மார்க்சியத்திற்கு எதிரான பல வண்ண வகை கோட்பாடுகள், மனித உரிமை அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் ...... என பலவகைச் செயல் தளத்தை உருவாக்கி வறுமையில் வாழும் மக்களுக்குள்ளும், போராடும் மக்களுக்குள்ளும் அனுப்பி வைத்தன, வைக்கின்றன. இதில் கோட்பாட்டுத் தளத்தில் தன்னார்வக் குழுக்கள் மற்றம் மார்க்சியத்தின் பெயரில் பல வண்ண வகைக் கோட்டுபாடுகளை முன் தள்ளினர், தள்ளுகின்றனர். இதன் மூலம் முன்னணி சமூகப் புரட்சியாளர்களை வென்றெடுத்து சீர் அழித்தல், அல்லது குறைந்த பட்சம் மார்க்சியம் மீது ஐயசந்தேகத்தை எழுப்புவது, வர்க்கப் போராட்டத்திற்கு பதில் வேறு போராட்ட வடிவத்தை முன் தள்ளுவது என பல வகைக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர்.
 
இந்த வகையில் மார்க்சியத்திற்கு பதிலீடாக வர்க்கமற்ற போராட்ட அமைப்புகள், தனக்குள் சாதியடிப்படையைத் தக்கவைத்துக்கொண்ட தலித்திய அமைப்புகள், வர்க்கம் கடந்த பெண்ணிய அமைப்புகள், வர்க்க முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்க முன் தள்ளும் தேச விடுதலை அமைப்புகள் எனப் பலவகை உருவாக்கி வௌவேறு கோட்பாட்டு அடிப்படையை மார்க்சியத்துக்கு புறம்பாக முன்வைக்கப்படுகின்றது, முன்வைக்க முயல்கின்றனர்.
 
இன்று இந்தியாவில் இப்படிப் பல மொழியில் பலர் உள்ள நிலையில், தமிழில் ரவிக்குமார் -அந்தோனிசாமி மார்க்சை குருவாகக் கொண்ட நிறப்பிரிகை குழு, எஸ், வி இராஜதுரையைக் கொண்ட குழு எனப் பலவாக பல உள்ளது. இதில் அ.மார்க்ஸ் - ரவிக்குமார் போன்றவர்கள் மிகத் தீவிரமாக மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டுத் தளத்தை உருவாக்குவதில் இயங்குகின்றனர். ஒரு புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்துக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அமைப்பு வடிவங்கள் இந்தியாவில் உள்ளன. அவர்களால் ஒரு பெரிய நிதியைச் செலவழித்து தமது அரசியல் கருத்து தளத்தை விரிவு படுத்த முடியாத புரட்சிகர நிலை உள்ள போது, அ. மார்க்ஸ் போன்றோர் மிகப் பெரிய நிதி ஆதரவுடன் தொடர் வெளியீடுகளை தனிநபர்களாக வெளியிடும் மர்மத்தை காலம் தான் அம்பலப்படுத்தும்.
 
இவர்களின் ஐரோப்பிய பயணங்கள், ஏகாதிபத்திய கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் என்பன உடனுக்குடன் இவர்களிடம் கிடைப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வெளியீடுகளை வெளியிடும் செயலின் மர்மமும், அதன் நிதிப்பலமும் மர்மமாகவே உள்ளன.
 
இங்கு (பிரான்ஸ்) கம்யூனிச எதிர்ப்பு கோட்பாடு தொலைக்காட்சியில் காட்டப்படவுடன் அல்லது வெளிவந்தவுடன், அதை சிறிது காலத்தில் அ.மார்க்ஸ் சார்ந்த கும்பல் தமிழில் எழுத்து வடிவம் கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் சர்வதேசமயமாகி உள்ள தொலைக்காட்சியில் இவர்கள் தோன்றி தமிழில் மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய நீண்ட காலம் செல்லாது என்பதை நாம் முன்கூட்டியே கூறிவைக்க விரும்புகின்றோம்.
 
ஈழத்து முன்னாள் முன்னணி சமூக அக்கறைக்குரியவர்கள், தமது சமூக அடிப்படையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, தேடிய கோட்பாட்டு அடிப்படையை அ.மார்க்ஸ்சும் அவரது கும்பலும் இவர்களுக்கு வழங்கினர். இவர்கள் அ.மார்க்ஸ்-ரவிக்குமாரின் கோட்பாட்டை பல தளத்தில் முன்னெடுத்து "மனிதம்", உயிர்ப்பு, "சரிநிகர்" என பல தளத்தில் தமது சிலந்தி வலை விரித்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.
 
இதைவிட ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் தமது தன்னார்வக் குழுக்குள் பலரை இணைத்து பெரும் நிதித் தளத்துடன் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் அனுப்பி எடுக்கின்றனர். ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பில் ஈடுபட்ட பலர் இந்த சிலந்தி வலையில் சிக்கி உள்ளதுடன், மேலும் பலர் இதில் சிக்கிவிடும் நிலையில் உள்ளனர். மறுபுறம் மார்க்சியத்திற்கு எதிரான கோடுபாட்டுத் தளத்தை ஏதோ ஒரு வகையில் பெறுகின்றனர். இன்னுமொரு பிரிவினர் ரொக்சியக் கோட்பாடுகளுக்குள் சென்று வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, தீவிரமாக வர்க்கப் போராட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் கொழும்பு தப்பி வந்த பலர் இன்று ஏகாதிபத்திய நிதித்தளத்துக்குள் விழுந்து தாளம் போடத்தொடங்கியுள்ளனர். இன்று மார்க்சிய விரோத மற்றும் மார்க்சியத்தை திரித்தும், புதிய கோடுபாடுகளை முன்தள்ளுவதை எதிர்த்தும் இந்த சிறிய பிரசுரத்தை எழுதுகின்றோம்.
 
இது அவர்கள் முன்வைக்கும் சில எல்லா வண்ண மார்க்சிய விரோதக் கோட்பாட்டையும் எடுத்து கேள்விக்கு உள்ளாக்கின்றது. குறிப்பாக குரு அ. மார்க்ஸின் கோட்பாட்டையும், மற்றவர்களின் கோட்பாட்டுத் திரிபுகளையும், கேள்விக்கு உள்ளாக்கி அம்பலமாக்கும் வகையில் இச்சிறு பிரசுரம் முயல்கிறது.
 
முதலில் அந்தோனிசாமி மார்க்ஸ் -ரவிக்குமார் உட்பட நிறப்பிரிகை குழு சார்பாக வெளியிட்ட "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற புத்தகத்தில் உள்ள மார்க்சிய விரோதக் கோட்பாட்டை இப்பிரசுரம் கேள்விக்கு உள்ளாக்கி அம்பலப்படுத்துகின்றது.

Last Updated on Tuesday, 06 January 2009 22:29