Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பேரினவாத கொண்டாட்டங்களும், தமிழினத்தின் பரிதவிப்பும்

பேரினவாத கொண்டாட்டங்களும், தமிழினத்தின் பரிதவிப்பும்

  • PDF

இது தான் தமிழினத்தின் தலைவிதியா!? இதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் போராட்டங்கள். கிளிநொச்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏற்படும் பொதுவான அதிர்வு, இதை அவசரமாக எம்மை எழுதத் தூண்டியுள்ளது.

பாலியல் வதை செய்யப்பட்ட பெண்ணின் உடலம் பற்றிய காட்சியை வெளியிட்டது தவறு என்று எமக்கு வந்த ஈமெயில்களை ஒட்டியும், பேரினவாத அரசு இந்தக் காட்சி மீது ஒரு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ள நாடகத்தை ஒட்டியும், நாம் எழுதிக் கொண்டிருந்ததை தற்காலிகமாக நிறுத்தியே இக்கட்டுரை. 

 

கிளிநொச்சியை பேரினவாதம் கைப்பற்றிய நிகழ்வு, பேரினவாதம் பாட்டாசு வெடிக்கவைத்து கொண்டாடும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. மறுபக்கத்தில் தமிழினமோ கையறு நிலையில் ஏற்பட்டுள்ள பரிதவிப்போ, ஈடிணையற்ற சோகமாக மாறியுள்ளது. ஒரு நாட்டில் வாழும் மக்களின்  இரண்டு விதமான எதிர்வினைகள். தமிழினம் தம்மைத்தாம் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழலில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.

 

இங்கு புலிகளிள் வெற்றி தோல்வி என்பதல்ல, தமிழ் மக்களின் பிரச்சனை. தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் கடந்த 60 வருடத்துக்கும் அதிகமான காலத்தில் எதைச் செய்ததோ, அதை மறுபடியும் கிளிநொச்சி வெற்றி மூலம் செய்துள்ளது. புலிகள் தோன்ற முன்னமே தமிழினம் இலங்கையில் தன் ஜனநாயக உரிமையை இழந்து, அதற்காக போராடியது.  அதை இன்று ஏறிமிதித்துச் செல்வதே பேரினவாதத்தின் கொக்கரிப்பாகியுள்ளது.

 

இதில் இருந்து மீள்வதற்கு எந்த வழியுமில்லை. அதைத்தான் புலிகள் அடைத்துவி;ட்டனர். இப்படி பேரினவாதத்துக்கு உதவும் புலிகளின் அரசியல், இன்று அவர்களை மண் கவ்வச் செய்கின்றது.

 

இன்று புலிகள் தோற்பதும் வெல்வதும் சரி அல்லது பேரினவாதம் வெல்வதும் தோற்பதும் சரி, இவை எந்த விதத்திலும் தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. இந்த உண்மை அரசியல் ரீதியாக உணரப்படாத வகையில், நாம் மலடாக்கப்பட்டு உள்ளோம். மீண்டும் ஒரு போராட்டம் எம் மண்ணில் எழாத வண்ணம், இதைத்தான் பேரினவாதத்துக்கு சார்பாக புலிகள் செய்தனர். ஆம் தமிழினம் பூண்டோடு அழிந்து போக, புலிகளே காரணமாக இருந்துள்ளனர். தமிழ் உணர்வுடன், இதை நாம் ஐPரணிக்க முடிவதில்லை.

 

கிளிநொச்சியை புலிகள் இழப்பதால் அல்லது தக்கவைப்பதால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. ஆனால் பேரினவாதம் வெல்வதால், தமிழ் இனம் தன் உரிமைகளை கேட்க முடியாத ஒரு பரிதாப நிலைக்கே மேலும் தரம் தாழ்கின்றது. தமிழ்மக்களை புலிகள் அடிமைப்படுத்தியதன் மொத்த விளைவு இது.

 

சுயநிர்ணய உரிமையை வழங்க மறுக்கும் பேரினவாதம், சுயநிர்ணய உரிமையை காயடித்த புலிகள் என்ற இரு தளத்தில், தமிழ் மக்கள் பரிதாபகரமாக செய்வதறியாது பதறி நிற்கின்றனர். தம் இழிவை எண்ணி, ஒடுங்கிப் போகின்றனர்.

 

கிளிநொச்சி தோல்வியாகட்டும் புலித் தலைவரின் எதிர்காலமாகட்டும், இவை அனைத்தும்  துரோகத்தின் வரலாறு தான். தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தின் விளைவு தான். தமிழ் பேசும் மக்களின் ஓற்றுமைக்கு வேட்டுவைத்த துரோகம், இன்று அவர்களையே அழிக்கின்றது. தமிழ் மக்களைப் பிளந்து, அவர்களை ஒடுக்கிய புலிகளின் துரோகம் தான், இன்றைய கிளிநொச்சி மீதான பேரினவாதத்தின் வெற்றியும், கொக்கரிப்புமாகும். இதை புலிகள் தான், தமக்கு சாதகமானதாகக் கருதி, தமக்கு எதிரானதை தமக்கு எதிராகவே செய்து முடித்துள்ளனர். தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் சிதைத்து, அதை எதிர்நிலைக்கு தள்ளியதுதான், புலிகளின் ஒரு பக்க வரலாறு, இப்படி தமிழ்மக்களுக்கு புலிகள் செய்ய துரோகம் தான், இன்று ஈவிரக்கமற்ற வகையில் யாரும் அதைப் பாதுகாக்க முடியாத வகையில் அறுவடையாகின்றது.

 

தமிழ் மக்கள் எதையும் செய்யமுடியாத கையறு நிலையில், பரிதாபகரமாக இதைப் பார்க்கின்றனர். இதில் புலிகள்; விட்டில் ப+ச்சியாக மாறி, மடிவது வேதனைக்குரியது.

 

ஆயிரம் ஆயிரம் அப்பாவி இளைஞர்களின் தியாகமும், போராடும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என அனைத்தும் வீணாவதும் அழிவதும் அர்த்தமற்றுப் போவதும் கண்டு கோபம் கொள்ள வைக்கின்றது. போராட்டத்தை எதிர்மறையில் கற்றுக்கொள்ளத் தூண்டுகின்றது. புலிகள் மக்களுக்கு செய்த துரோகத்தால் ஏற்படும் இந்த நிலை கண்டு, நெஞ்சைக் குமுற வைக்கின்றது. மக்களுக்கான ஒரு விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தத் தெரியாது, பாசிச வழிகளினால் தமிழினத்தையே அடக்கியாள முனைந்ததன் விளைவுதான், பேரினவாதம் பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாக மாறி நிற்பது கண்டு சினம் கொள்ளவைக்கின்றது. தமிழ் மக்கள் தம்மை தாம் பாதுகாத்துக்கொள்ள முடியாத வகையில், புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம், அவர்களையே இன்று நிரந்தரமாக அடிமையாக்கிவிட்டது.

 

புலிகளின் கதி 

 

இன்று புலித் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றிய கவலையாக, போராட்டம் மாறிவருகின்றது. என்ன செய்வது, எதைச் செய்வது என்று தெரியாத பதற்றம். எங்கும் ஒரு வெற்றிடம். இனம் புரியாத கலக்கம். பைத்தியம் பிடிக்கும் பிரமை.

 

புலிகளில் ஒட்டி வாழ்ந்த துரோக ஓட்டுண்ணிகள் சாதுரியமாக, ஆனால் வேகமாக கழன்று ஓடுகின்றனர். அவர்கள் முதற்தரமான புலியெதிர்ப்பாளராக மாறி, புலியைத் தூற்றுபவராக மாறிவிட்டனர். புலிகளோ எதுவுமற்ற வெற்று உடலாக மாறி வருகின்றது.

 

புலிகள் கிளிநொச்சியை இழந்தது, இதை அதிகரிக்க வைக்கின்றது. எங்கும் தூற்றல், புலம்பல், இயலாமை, போராட்டத்தின் மீதான வெறுப்பாக மாறி அதன் மேல் காறி உமிழப்படுகின்றது. அப்பாவி இளைஞர்களின் தியாகங்களை எல்லாம், புலியின் பெயரில் பொறுக்கித் தின்ற கும்பலால் கொச்சைப்படுத்தப்படுகின்றது. மீண்டும் அவர்கள் புலியைத் தூற்றி, தமிழினத்தை தின்ன அனுமதிக்க முடியாது. அப்பாவி இளைஞர்களின் தியாகங்கள், கொச்சைப்படு;த்த முடியாதவை. அதற்கான போராட்டமும், எம் கையில் வந்துள்ளது. 

 

இன்று போராடும் புலியின் ஆற்றல் கிளிநொச்சி தோல்வியுடன், 10 மடங்குக்கு கீழே தள்ளியுள்ளது. புலிகளின் தோல்வி, அது முற்று முழுதாக அழிக்கப்படும் வரை தொடரும், ஒரு தொடர் கதைதான். எமது அரசியல் அனுமானங்களில் இந்நிலை நாம் முன்பே சொன்னவை தான். மக்கள் எப்போதோ புலிகளை தோற்கடித்துவிட்டனர் என்ற உண்மை, இதன் பின் வெளிச்சமாகவே உள்ளது.

 

ஆனால் பார்வையாளனாக மாறிய தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், கிளிநொச்சி இழப்பு ஓரு அதிர்வுதான். புலிகள் பற்றிய பிரமை தகர்கின்றபோது ஏற்படும் பரிதாப உணர்வு, அனைத்தையும் அவநம்பிக்கையாக மாற்றிவருகின்றது.

 

இதனால் போராட்டம் என்பது வெறுக்கத்தக்க ஒன்றாக மாறுவதுதான், பேரினவாதத்தின் மாபெரும் வெற்றியாக மாறும் அபாயத்தை நாம் இனம் காண்கின்றோம். அந்த எச்சரிக்கை உணர்வுடன், இதையும் நாமே அணுக முனைகின்றோம். 

 

பி.இரயாகரன்
03.01.2008


 

Last Updated on Saturday, 03 January 2009 19:52