Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மோதல் : ஆதிக்கசாதித் திமிருக்கு விழுந்த-பதிலடி!

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மோதல் : ஆதிக்கசாதித் திமிருக்கு விழுந்த-பதிலடி!

  • PDF

கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல், தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சாதிதீண்டாமையின் கோரத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சட்டக் கல்லூரியில் சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பதிலடி கொடுத்துள்ளதன் வாயிலாக, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

 

 தென்மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்ற போதிலும், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆதிக்க சாதித் திமிர் நீறுபூத்த நெருப்பாகவே நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்க சாதிவெறி அமைப்புகள் சட்டக் கல்லூரியில் வேர்விடத் தொடங்கின. "முக்குலத்தோர் மாணவர் பேரவை'' அதில் ஒன்று. தாழ்த்தப்பட்ட மாணவர்களால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிகண்ணன், அதன் முக்கிய பிரமுகர்.


 கடந்த 2007ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் தகராறு செய்து அடிதடியில் இறங்கியவர்தான் பாரதி கண்ணன். ஆறு மாதங்களுக்கு முன்பு கல்லூரியின் பெயரில் இருக்கும் "அம்பேத்கர்'' என்ற வார்த்தையை நீக்கச் சொல்லி பாரதிகண்ணன் தலைமையில் ஆதிக்கசாதி மாணவர் கும்பல் தகராறு செய்தது. "சிங்கங்களே, ஒன்று சேருங்கள்!'' என்று தேவர் சாதி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, கல்லூரி வளாகத்திலேயே இக்கும்பல் சுவரொட்டிகளையும் ஒட்டியது. இதற்குத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தேவர் சாதிவெறி மாணவர் கும்பல் கொடுவாள்களுடன் வந்து மிரட்டியது. இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டு, பாரதிகண்ணனிடமிருந்து மூன்று கொடுவாள்களைப் போலீசார் கைப்பற்றினர். இருப்பினும், அவர் மீதோ, ஆதிக்க சாதிவெறி மாணவர்கள் மீதோ வழக்கோ, நடவடிக்கையோ இல்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது போலீசு வாகனங்கள் மீது கல்லெறிந்தார்கள் எனப் பொய்வழக்கு போடப்பட்டது. சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில், பாரதிகண்ணன் தலைமையிலான ஆதிக்க சாதிவெறி பிடித்த மாணவர்கள் மின்விளக்குகளை அடித்து நொறுக்கியும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கியும் வெறியாட்டம் போட்டனர். இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


 அண்மையில், தேவர்சாதி வெறியர்களின் குலதெய்வமான முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவரொட்டிகளைக் கல்லூரி வளாகத்தில் ஒட்டிய தேவர்சாதி மாணவர்கள், திட்டமிட்டே கல்லூரியின் பெயரில் அம்பேத்கர் பெயரை நீக்கியிருந்தனர். இது பற்றிக் கேட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்தி, ஆத்திரமூட்டவும் செய்தனர். நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து சட்டக்கல்லூரி தேர்வுகள் தொடங்கிய நிலையில், "எந்தவொரு கீழ்ச்சாதிப் பயலும் தேர்வு எழுதக் கூடாது; மீறி எவனாவது தேர்வு எழுத வந்தால் வெட்டிச் சாய்ப்போம்'' என்று எச்சரித்து, பாரதிகண்ணன் தலைமையிலான கும்பல் கத்தி, அரிவாள், இரும்புத்தடிகளுடன் கல்லூரி வளாகத்தில் சுற்றி வந்து அச்சுறுத்தியது. இதனால், "பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை'' என்று கல்லூரி நிர்வாகமே அறிவித்தது. ஒருசில தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வுகள் எழுதியுள்ளதைக் கண்டு ஆத்திரமடைந்த பாரதிகண்ணன், ஆறுமுகம், அய்யாபிள்ளை ஆகியோர் தலைமையிலான கும்பல், நவம்பர் 7ஆம் தேதியன்று அம்மாணவர்களை பாரிமுனை பேருந்து நிலையம் அருகே சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளது.


 மீண்டும் 12ஆம் தேதியன்று தேர்வு எழுத வந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்க இச்சாதிவெறிக் கும்பல் திட்டமிட்டுள்ளதை அறிந்து, அவர்கள் கல்லூரி விடுதி மாணவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கிரிக்கெட் மட்டை  கொம்புகளுடன் அணிதிரள்வதைக் கண்ட பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி, சுவரேறிக் குதித்தனர். பாரதிகண்ணன் மதில் சுவரில் தனது கத்தியைக் கூர்தீட்டிக் கொண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது வெறியோடு பாய, அதில் சித்திரைச் செல்வன் என்ற மாணவரது காது துண்டானது. பலர் படுகாயமடைந்தனர். அதன்பிறகு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாரதிகண்ணனைச் சுற்றி வளைத்துத் தாக்கியதை ஊடகங்கள் வாயிலாக உலகமே பார்த்தது.


 இந்த உண்மைகளை, மாணவர்கள் மோதலின் நேரடி சாட்சியங்களான வழக்குரைஞர் ரஜினிகாந்த் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புக் குழுவில் செயல்படும் கல்பாக்கம் அணுமின் நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி கோபால் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலங்களும், பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினர் அளித்துள்ள அறிக்கையும் உறுதிப்படுத்துகின்றன.


 சட்டக் கல்லூரி மாணவர் மோதலுக்கு நேரடி சாட்சியமான வழக்குரைஞர் ரஜினிகாந்த் அளித்த வாக்குமூலத்தில், ""அ.தி.மு.க. தலைவர்களின் ஆதரவு பாரதிகண்ணன் குழுவினருக்கு இருப்பதை உணர முடிந்தது'' என்று கூறியிருப்பதும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அறையில் இக்குழுவினர் தாக்குதலுக்கு முன் சதித்திட்டம் தீட்டியதாகச் செய்திகள் கசிந்திருப்பதும், சன் டி.வி.ஜெயா டி.வி. களின் ஒளிபரப்புகளும் மிகப் பெரிய சாதிக் கலவரத்துக்கு இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளதை நிரூபிக்கின்றன. சட்டக் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் நடப்பதற்கு முதல் நாளன்று, புழலில் உள்ள அம்பேத்கர் சிலை அசிங்கப்படுத்தப்பட்டு, சிலையின் நெற்றியில் நாமம் போட்டு, ""ஹே ராம்'' என்று எழுதி விட்டுப் போயுள்ளதும் இதை மெய்ப்பிக்கிறது.


···


"என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே, இது என்ன நியாயம்?'' என்ற உருக்கமான "நடுநிலை' முறையீடும், திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன. ""தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குகிறார்கள்; நம்மாளு அடிபடுகிறான்; போலீசு வேடிக்கைப் பார்க்கிறது'' என்கிற "பொதுக் கருத்து' கடைசித் "தமிழனின்' மண்டை வரை இறக்கப்பட்டது. திட்டமிட்டபடி, தென்மாவட்டங்களில் மாணவர்களைத் தூண்டி சாதிக் கலவரத்தைப் பற்ற வைக்க ஆதிக்க சாதிவெறியர்கள் முயற்சித்தனர்.


 ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பன  வருணாசிரம வழியில் அடிமைப்படுத்தி தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறையை ஏவியவர்கள், இன்று அரிதினும் அரிதாக தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஆதிக்க சாதிவெறியர்களுக்குப் பதிலடி கொடுத்ததைக் கண்டு, "ஐயோ! வன்முறை!'' எனறு பெருங்கூச்சல் போடுகிறார்கள். பாப்பாபட்டி  கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், கயர்லாஞ்சி... என இச்சாதிவெறியர்கள் நடத்தியவையெல்லாம் வன்முறையில்லை என்றால், இதுவும் வன்முறை இல்லைதான்!


 மேலவளவில் தாழ்த்தப்பட்ட ஊராட்சித் தலைவரை வெட்டி எறிந்ததைப் போல, தேவர் ஜெயந்தி சுவரொட்டியில், சட்டக் கல்லூரியின் முன்னால் உள்ள அம்பேத்கர் பெயரையும் வெட்டுவோம் என்று கொக்கரிக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். ஏற்கெனவே மகாராஷ்டிராவில், மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டபோது, அதை நீக்கச் சொல்லி மராத்தா ஆதிக்க சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டதற்கும், தற்போது இவர்கள் சென்னை சட்டக் கல்லூரியிலிருந்து அம்பேத்கர் பெயரை நீக்கி சுவரொட்டி வெளியிட்டதற்கும் தொடர்பேதும் இல்லை என்று கருத முடியுமா?


 இவ்வளவுக்குப் பின்னரும், ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக எந்தவொரு தாழ்த்தப்பட்ட தலைவரும் வாய்திறக்கவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்கெதிராக வீரவசனம் பேசும் எந்தவொரு "தமிழினத் தளபதி'யும், இங்கே ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவுமில்லை.
 "சூத்திர' கருணாநிதி அரசோ, கல்லூரி முதல்வரையும் போலீசு அதிகாரிகளையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, விசாரணைக் கமிஷன் நாடகமாடிக் கொண்டே, சட்டக்கல்லூரி மோதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோர் உறவினர்களையும் குறிவைத்து கைது செய்து வதைக்கிறது. சாதிவெறி பிடித்து கொலைவெறித் தாக்குதலில் இறங்கிய பாரதிகண்ணன் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ள மு.க. அரசின் போலீசு, தாக்குதலுக்கு ஆளான சித்திரைச் செல்வன் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு, ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளது. மறுபுறம், சட்டக் கல்லூரி மாணவர் மோதலைச் சாக்காக வைத்து, மாணவர்கள் அரசியல்  சமூக  பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பெயரளவிலான ஜனநாயக உரிமையையும் பறித்து, சுயநிதிக் கல்லூரிகளைப் போல கொத்தடிமைக் கூடாரங்களாக மாற்றி விடவும், சட்டக் கல்லூரியை ஆளரவமற்ற இடத்திற்கு மாற்றி விடவும் ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.


 இந்நிலையில், சாதிமதவெறி அமைப்புகளைத் தடைசெய்து, கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறியர்களையும், அவர்களின் புரவலர்களான சாதிவெறித் தலைவர்களையும் கைது செய்து, அவர்களின் வாக்குரிமை, இட ஒதுக்கீடு உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ரத்து செய்யக் கோரி அனைத்து மாணவர்களும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தைத் தொடர வேண்டும். இத்தகைய போராட்டங்களைக் கட்டியமைக்காமல், ஆதிக்க சாதிவெறியர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள அரசையும் ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்தாமல், சாதிதீண்டாமையை ஒழிக்க முடியாது. தமிழகம் சாதிவெறியர்களின் சொர்க்க பூமியாக மாறுவதையும் தடுக்க முடியாது.


· குமார்

Last Updated on Sunday, 21 December 2008 08:41