Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் வரலாற்றில் பிரபாகரன்

வரலாற்றில் பிரபாகரன்

  • PDF

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.

தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய  கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான்.  மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன்.  இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்டணியின் அரசியல் எதிரிகள் மீது, வன்முறையை கையாள்வதைத் தான் இவர்கள் போராட்டமாக கருதினர். இதையே கூட்டணி ஊக்குவித்தது. இப்படி அரசியல் படுகொலைகள் மூலம், அரசிடம் தாம் சலுகைகளைப் பெற முனைந்தனர். இந்த பிழைப்புவாத படுகொலை அரசியலே கூட்டணியின் அரசியலாகியது. இந்தப் படுகொலை அரசியலை தடுக்கவும், அதை கண்டு பிடிக்கவும், விசாரணை செய்த பொலிஸார் மீதான தாக்குதல் தமிழீழப் போராட்டமாகியது. இது தான் பின்னால் தேசிய போராட்டமாகியது.

உண்மையில் அப்பாவி இளைஞர்களை, தமது சொந்த பிழைப்புவாத வலதுசாரிய அரசியலுக்கு கூட்டணி பயன்படுத்தியது. இதன் மூலம் தங்கள் சொந்த சுயநலத்துக்குமாக, அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி நடத்திய அரசியலும், அதையொட்டிய படுகொலைகளும் போராட்டமாக காட்டப்பட்டது. இதை விசாரணை செய்த பொலிசாரையும் கொன்றதன் மூலம், இதன் மீதான விசாரணைகளும், அதனால் முற்றிய நெருக்கடியுமாக மாற அதுவே தமிழீழப் போராட்டமாகியது. இப்படித்தான் வலதுசாரி ஆயுதப் போராட்டம் உருவானது.

அரசியல்வாதிகள் தம் உரைகள் மூலம் உணர்ச்சி வசப்படுத்தப்பட்ட அப்பாவி இளைஞர்களைக் கொண்டு, தம் எதிரிகளை வன்முறை மூலம் பழிவாங்கிய நடத்தை தான், சில பத்தாயிரம் பேரை பலிகொண்ட புலித் தேசியப் போராடமாகியது. இதன் பின் எந்த சமூக நோக்கும், மக்களின் சொந்த போராட்டமும் இருக்கவில்லை. உணர்ச்சி வசப்படுத்தப்பட்ட அலைதான் இருந்தது. இன்று இந்திய சினிமா கழிசடைகளில் இருந்து கோபாலசாமி வரை, தமிழினத்தை அழிப்பதற்காக அதையே அப்படியே திரும்ப செய்கின்றனர். ஆனால் இவர்களோ, கூட்டணியோ புலிப் பாசிச சித்தாந்தத்தை உருவாக்கவில்லை. இவர்கள் கொண்டிருந்த சமூக அரசியல் அடிப்படையில் பாசிசக் கூறு இருந்தது. ஆனால் புலிக்கு பாசிச சித்தாந்தத்தை இவர்கள் வழங்கவி;ல்லை.

இவர்களின் அரசியலோ மக்களை ஏமாற்றி, தாம் பொறுக்கித் தின்பது தான். 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு அப்பாவி சிறுவன், அரசியலின் பெயரில் அரசியல்வாதிகளின் எதிரிகளை கொலை செய்யத் தூண்டப்பட்டான்.

இப்படித்தான் பிரபாகரன் எந்த அரசியல் கல்வியுமற்ற நிலையில், கூட்டணியின் இழிவான மலிவான வன்முறை நோக்கத்துக்கு குறுகிய எல்லையில் பயன்படுத்தப்பட்டான். இப்படி தொடங்கிய பிரபாகரனின் வாழ்வும், அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளும் பிரபாரகரனின் தலைமறைவு வாழ்வாகியது. அதுவே இன்று பங்கர் வாழ்வாகிவிட்டது. மக்களின் முகத்தைப் பார்த்து சொந்தமாக ஒரு வரி தன்னும் எப்படி பேசமுடியாது தலைவனானானோ, அப்படிNயு பங்கரைவிட்டு வெளியில் எட்டிப் பார்க்கக் கூட முடியாது போனான்;. இதைத்தான் பிரபாகரனுக்கு பரிசாகக் கொடுத்தனர், அவரை வழநடத்தியவர்கள்.

8ம் வகுப்புடன் முடிந்த பிரபாகரனின் அடிப்படை அறிவு, அனுபவ அறிவாக கூட மாறமுடியாத சூழலுக்குள்ளும், தனிமைக்குள்ளாக சிறைவைக்கப்பட்டான். மொத்தத்தில் சமூக வாழ்வுடன், மக்களுடன் இணைந்து வாழ்கின்ற வாழ்வியல் அனுபவத்தை பெற்றது கிடையாது. இன்று தமிழ் மக்களுக்கு முன்னால் நிமிர்ந்து பார்த்து, எதையும் சொந்தமாக சொல்லவும் பேசவும் முடியாத அங்கவீனன் ஆனான். இப்படி மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் அவனின் பலவீனம் இருந்தது. சுயமாக வழிகாட்டும் அடிப்படையான அறிவுவற்ற ஒருவனை, தமிழரின் தலைவராக, மற்றவர்களான பாசிட்டுகள் முன்நிறுத்தினர். பலரும் கூறுவது போல், பிரபாகரன் தலைமைக்கு ஆசைப்பட்டவனல்ல. ஆசைப்பட நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு அப்பாவி.

இந்த மற்றவர்கள் தான், அப்பாவியான பிரபாகரனின் வலதுசாரித் தன்மையை பாசிசமாக்கினர். இவர்கள் யார் என்பதை நாம் பின்னால் பார்ப்போம். அப்பாவியான பிரபாகரன், மற்றவர்கள் சொன்னதையே செய்தான். எழுதிக் கொடுத்ததையே, வரிக்குவரி பார்த்தே வாசித்தான். இந்த வகையில் ஒரு அப்பாவி. கூட்டணியில் தொடங்கி இன்று புலி வரை, பிரபாகரன் பாத்திரம் என்பது பொம்மைNயு தான். கொலை செய்யத் தொடங்கிய பிரபாகரன், போக்கு மற்றவர்கள் எழுதியதை பார்த்து வாசிப்பதில் முற்றுப் பெறுகின்றது.

பிரபாகரன் எப்படித் தலைவனாக்கப்படுகின்றான்

பிரபாகரனை கொலை செய்யும் ஒருவனாக உருவாக்கியது கூட்டணி அரசியல். இந்த பிழைப்புவாத தலைமையின் உணர்ச்சிகர உரைகள் தொடர்ச்சியாக வெற்றுவேட்டாக அம்பலமாக, எதிர்மறையில் கொலை செய்தலே விடுதலைப் போராட்டமாக நியாயப்படுத்தப்பட்டது. இப்படி கொலை செய்தலில் உள்ள திறமை, ஈவிரக்கமற்ற தன்மை,  தலைமைக்கான சிறப்புத் தகுதியாகியது. இப்படித்தான் அப்பாவி பிரபாகரன், தலைவனாக்கப்பட்டான். இன்று வரை சொந்த மக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத ஒரு அப்பாவி, தலைவராக நிறுத்தப்பட்டுள்ளான். உண்மையில் மக்களை எதிர்கொள்ள முடியாத ஒரு கோழை.

உண்மையில் பிரபாகரன் தலைமைக்கு ஆசைப்பட்டது கிடையாது. மற்றவர்கள் தலைமை தாங்க, தான் அவர்களின் எதிரிகளை கொல்வதையே தன் கடமை என்றே நம்பினான். இதனால் சமூகம் பற்றிய புரிதல், அதையொட்டிய அரசியல் தனக்கு அவசியமில்லை என்று முழுமையாக நம்பினான். இந்த தகுதியும், அடிப்படை அறிவும் தனக்கில்லை என்று நம்பினான். 'படித்தவர்கள்" (கூட்டணி) அதைப் பார்ப்பார்கள் என்று முழுமையாக நம்பி, அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டான். அதற்காகவும் அவர்களுக்காவும் உழைத்தான்.

தன் தலைமையை நிறுவ, மற்றவனை கொல்லவேண்டும் என்று விரும்பியது கிடையாது. மற்றவனின் தலைமைக்காக, அவர்களின் எதிரியை கொல்லவதே விடுதலைப் போராட்டம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டதன் மூலம், அதை செய்யத் தூண்டினர். இன்று புலிகள் அதைத்தான் செய்கின்றனர்.

இன்று புலியில் உள்ள ஒவ்வொரு இளைஞனையும் விட, பிரபாகரன் அறிவால் சிந்தனையால் வன்மத்தாலும் கூட அப்பாவிதான். அன்று கூட்டணியின் பிழைப்புவாத காரியவாத மேடைப் பேச்சை உண்மை என்று நம்பி, அவர்கள் எதிரியென்றும் துரோகியென்றும் இனம்காட்டி கூறியவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல புறப்பட்டவன் தான் பிரபாகரன். இன்று உள்ளது போன்று கொடுமையான கொடுங்கோலனல்ல. மாறாக அன்று வெறும் அப்பாவி. கூட்டணியின் எதிரிகளை கொல்லது தான் விடுதலை போராட்டம் என்று, மற்றவர்களால் தவறாக வழி நடத்தப்பட்டவன். அதாவது இதை பிரபாகரன் தானே ஒரு கோட்பாடாக தேர்ந்தெடுத்தவனல்ல. இதைத் தாண்டி பிரபாகரன் சிந்தனை மட்டம் வளரவில்லை.

கூட்டணி தன் பிழைப்புவாத காரியவாதத்துக்கு தடையாக இருந்த தம் எதிரிகளை ஒழித்துக்கட்டவே, பிரபாகரனை பயன்படுத்திக்கொண்டனர். இங்கு பிரபாகரன், இதையே உண்மையான விடுதலைக்கான பாதை என்றே முழுமையாக நம்பினான். ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையை, கூட்டணி தனது சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. இப்படி பல அப்பாவிகள் வரலாற்றில் காணமல் போய் உள்ளனர்.

இவர்கள் கண்ட ஏமாற்றங்கள், ஏமாற்றப்படுதல் என்பது இவர்களின் தலைவர்களுடனான  முரண்பாடாகியது. இதுவே பலர் சுயநலத்துடன் சிதையவும், சிலர் தனியான அமைப்பை உருவாக்கவும் காரணமாகியது. இது தூய்மை வாதம், நேர்மை, தியாகம் என்ற கோசத்தின்  அடிப்படையை, மையப்படுத்த இதுவே முதன்மைக் காரணமாகியது. இப்படி கூட்டணியை விட்டு விலகுதல் என்பது படிப்படியாக நிகழ்ந்தது. தனித்தலைமை, தனி அமைப்பு என்று பிரிந்தது. கூட்டணியின் உணர்ச்சிகரமான வெற்று உரைகள், உணர்ச்சிக்கு உள்ளான இளைஞர்களின் வேட்டுக்குள்ளாகியது. உணர்ச்சிவசப்பட்டு கொலைகளைச் செய்தவர்களின் தலைமை, படிப்படியாக கூட்டணியின் வெற்றுவேட்டுத் தலைமைக்கு பதிலாக நிரம்பத்தொடங்கியது.

இப்போது கூட, பிரபாகரன் தலைமைக்கு ஆசைப்பட்டது கிடையாது. 'படித்தவன்" தான் தலைமையில் இருக்கமுடியும் என்று நம்பி, தம் குழுவுக்குள் படித்தவனையே தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரு அப்பாவி தான் பிரபாகரன். மாறாக அவன் எதைப் போராட்டமாக நம்பினானோ, அதில் உண்மையாக இருக்க முனைந்தான். இதற்கு மேல் சமூகம் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. இது அந்தக் குழுவில் இருந்த அனைவரினதும் பொதுவான நிலை கூட.

அவர்கள் தம் தியாகத்தைக் காட்ட, தமக்கு என்று ஒரு ஒழுக்கவிதியை உருவாக்கிக் கொண்டனர். 1970-1980 இல் சினிமாவில் ஒரு கதாநாயகன் எப்படி தான் வாழ்வதாக நடிப்பது தான் கதாநாயகத்தனம் கொண்டதோ, அதை இவர்கள் முன்னிறுத்தினர்.

இப்படி தூய்மைவாதம், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை என்று, வலதுசாரிய பூர்சுவா தேசியவாத கண்ணோட்டத்திலான ஒரு குட்டிப+ர்சுவா அமைப்பைக் கோரினர். இதில் பிரபாகரனோ தான் அப்படி இருக்க முனைந்ததுடன், மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டுமென்று கருதினான். திருமணம் செய்யாத வாழ்வு, மது அருந்தாத வாழ்வு, புகைத்தலுக்கு எதிரான உணர்வு போன்றவற்றை முன்னிறுத்திய ஒரு அமைப்பை, பிரபாகரன் கோரினான் என்பதற்கு அப்பால், அமைப்பே அப்படித்தான் உருவானது. தியாகமே இலட்சியம், என்று கனவு கண்டான். இங்கு இதில் பிரபாகரன் ஒரு உறுப்பினரே ஒழிய, தலைவனல்ல.

இதைக் கொண்டு வாழ்தலும், இதற்காக போராடுதலும் அரசியலாக, தம் எதிரிகளை கொல்லுதல் போராட்டமாகியது. இதைத் தாண்டி மக்களுள் இணைந்தது போராடியது  கிடையாது.

இப்படி வாழ்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள், சந்தேகங்கள், இணக்கமற்ற வகையில் தனிநபர் சந்தேகங்களை உருவாக்கியது. உளவு பார்த்தல், கண்காணித்தல், நம்பகத்தன்மை, இணக்கமற்ற வகையிலான உள்முரண்பாடாகியது.

கோட்பாட்டுத் தளத்தில் இதை நுணுகிப் பார்த்தால், சமூகத்துடன் தொடர்பற்ற தூய்மைவாதம், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை போன்றன, எதிர்மறையில் பாசிசத்துக்குரிய விளைநிலமாகின்றது. இதனடிப்படையில்  முரண்பாடுகள், சந்தேகங்கள், கண்காணித்தல், உளவுபார்த்தல் என்று, மொத்தத்தில் தனிநபர் சந்தேகங்களை எப்போதும் உருவாக்கிவிடுகின்றது.

இதன் விளைவாக முதலில் தனிநபர்களாக வெளியேற்றல் என்பது, பெரும்பான்மையின் குற்றச்சாட்டுடன் கூடிய ஒரு விருப்பத்துடன் உடன்பாட்டுடன் அரங்கேறியது. இதன் வளர்ச்சி தான், பாசிச அரசியலுக்கு எதிரான அரசியல் கூறுகள் மேலான உட்படுகொலையாக மாறுகின்றது. இது பின்னால் வெளிபடுகொலையாகவும் மாறுகின்றது.

சமூகம் என்ற வகையில், தூய்மைவாதம், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை என்பதெல்லாம், சமூகத்தில் இருந்து அன்னியமாதலின் முதல் படிநிலையாகும். தம்மைத்தாம் சமூகத்தில் இருந்து அன்னியப்படுத்திக் கொள்கின்றனர். தம்மைத் தாம் சமூகத்தைவிட உயர்வானவர்களான கருதிக்கொண்டு, சமூகத்தை வெறுக்கின்றனர். சமூகத்துக்காக சமூகத்துடன் சேர்ந்து உழைப்பதை கோட்பாடாக கொள்ளாத கற்பனையான தனிமனித ஒழுக்கம், ஒழுக்க மீறலாகவே மாறுகின்றது. சமூகத்துடன் வாழ்ந்து சமூகத்துக்கு நேர்மையாக இருத்தல் என்பதற்கு பதில், தனிமனிதர்களின் ஒழுக்கம் மேலான நேர்மை பற்றிய தனிநபர் கதாநாயகக் கோட்பாடு சமூகத்துக்கு எதிரானதாக இயங்கத் தொடங்குகின்றது. சமூகத்தில் இருந்து தனிமனிதர்கள் தம்மைத்தாம் ஓதுக்கிக் கொண்டு, தம்மை தனிமைப்படுத்தத் தொடங்குகின்றனர். எந்த தனிமனித ஒழுக்கக் கோட்பாட்டையும் மற்றவனை கடைப்பிடிக்க கோருவது என்பது, சமூகத்தைக் கோருவதன் ஊடாகத்தான் சாத்தியம்;. சமூகம் தன் வாழ்வின் ஊடாக அதை ஏற்றுக்கொள்ளும் போதுதான், அது சரியானதாகவும் உண்மையானதாகவும் இருக்கும். இதுவல்லாத ஒரு குழு தனக்குத்தானே போட்டுக்கொள்ளும் விதிகள், தனது சொந்த பிளவுக்கான சதிக்கான சந்தேகத்துக்கான அடிப்படையாகிவிடுகின்றது.

பிரபாகரன் கூட தானும் சேர்ந்து போட்ட விதிகளை, என்றும் கடைப்பிடிக்க முடியவில்லை. அவர் திருமணம் செய்தது முதல் பொய்யையும் புரட்டையும் அள்ளித்தெளிப்பது வரை அடங்கும். ஆனால் இதை செய்வதற்காக, இவர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் வரலாற்றில் உண்டு.

உண்மையில் சமூகத்தில் இருந்து அன்னியமான கோட்பாடுகளுடன் உருவான குழு, தன் இலட்சியமாக கருதிய அடிப்படைகள் அனைத்தையும் இன்று இழந்துவிட்டதை நாம் காணமுடியும். தனிமனிதர்களிடம் வலியுறுத்திய தூய்மை, நேர்மை, உண்மை எதிர்மறையில் பொய், புரட்டு, ஒழுக்கமின்மை என்று மாறிவிட்டது. இதுவோ இன்று வெற்றிகரமான ஆதிக்கம் பெற்ற சமூக இயக்கமாக மாறுகின்றது. இதை நாம் புலி ஊடாக காணமுடியும். புலிக்கு பின்னால் பல மட்டத்தில் இருக்கின்றவர்கள், நேர்மையற்ற பொறுக்கிக் கூட்டமாக உள்ளனர். இங்கு அடிநிலையில் சண்டை செய்பவன், இந்த பொறுக்கிகளின் கபடங்களை புரிந்து கொள்ள முடியாத அப்பாவிகள்.

அன்று பிரபாகரன் தூய்மை, நேர்மை, உண்மை என்று முன்னிலைப்படுத்தியவை, இன்று அவரின் தலைமையின் கீழ் பொய், புரட்டு, ஒழுக்கமின்மையாகவும் மாறிவிட்டது. ஊரையே சுருட்டிக்கொள்ளும் ஓநாய் கூட்டம், போராட்டத்தை பயன்படுத்தி சமூகத்தையே குதறித்தின்னுகின்றது. உண்மையில் இதன் மேல்தான் பாசிசம் கொலுவேறியது. இதை பிரபாகரன் தனித்து தேர்ந்தெடுத்ததல்ல. பிரபாகரன் குட்டிபூர்சுவா மனவியல்பு கொண்ட, ஒரு அப்பாவி வலதுசாரி. இதைப் பயன்படுத்தி பாசிட்டாக்கியவர்கள் யார் என்பதை இனம் காண்பது தான், இந்தக் கட்டுரையின் நோக்கம்;. அதற்கு முன்னம் நாம் அதை புரிந்துகொள்ள, இதை சற்று மேலும் ஆராய்வது அவசியம்.

அன்று பிரபாகரனோ மற்றவர்களோ, மக்களிடமிருந்து அன்னியமான தனிமனித ஒழுக்கம் சாத்தியமற்றது என்பதை புரிந்து கொள்ளும் அறிவும், சமூக வாழ்வியல் அனுபவமும் அவர்களிடம் இருக்கவில்லை. இதில் 8ம் வகுப்பு படித்த சிறுவனான பிரபாகரனால், அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பின்னால் தலைமறைவு, பங்கர் வாழ்வு ஒரு பொந்துக்குள் ஒளித்துக் கொள்வதே போராட்டமாகியது. மொத்தத்தில் சமூகத்தில் இருந்து அன்னியமான சூனியத்துக்குள் வாழ்ந்த பிரபாகரன், சமூகத்துக்கு தலைமை தாங்க முனைந்தது, மொத்த தமிழ் சமூத்தின் அவலத்துக்கும் முதல் காரணமாகியது. சுயமற்றதும், சிந்தனை தெளிவற்றதும், சமூக தொடர்புமற்ற, வன்முறை மூலம் போராட்டத்தை நடத்தமுடியும் என்ற தத்துவம் தான் இன்று வெம்பி தொங்குகின்றது.

உண்மையில் பிரபாகரன் அதே அப்பாவி தான். பிரபாகரன் பாசிட்டுகளால் இயக்குவிக்கப்படுகின்றான் என்பதே உண்மை. பிரபாகரன் கொண்டிருந்த வன்முறை மீதான காதலை பலமானதாகவும்;, சுயமற்ற சமூகக் கூறுமுமற்ற இயலாமையை பலவீனமாக கொண்டு, பாசிட்டுக்கள் போராட்டத்தையே தவறாக வழிநடத்தினர்.

இன்று சிலர் கூறுவது போல், பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது, அவர் நல்லவர் வல்லவர் என்ற அர்த்தத்தின் அடிப்படையையும் இது மறுதலிக்கின்றது. தனது கொடுங்கோலாட்சி என்ன என்பதை, தனது கொடுமைகள் என்ன என்பதையும் அவர் நன்கு தெரிந்து தான், அதை பிரபாகரன் தலைமை தாங்குகின்றார். பிரபாகரனின் அப்பாவித்தனத்தையும், அறியாமையையும், ஒரு கோட்பாடாக்கி, அது கொடுமையும் கொடூரங்களும் நிறைந்த பாசிச சித்தாந்தமாகிவிடுன்றது. அதாவது அறிவே, அதுவாகி விடுகின்றது. நாங்கள் இங்கு விவாதிப்பது பிரபாகரனின் அறிவும் சிந்தனை பற்றியதும், அதை பயன்படுத்திய பாசிட்டுக்களை இனம் காண்பது பற்றியதும் தான். கோட்பாடு வழங்கும் பாசிட்டுகளோ, காலத்துக்கு காலம் புற்றீசல் போல் தொடர்ச்சியாக தோன்றி வருகின்றனர். இந்த இடத்தில் பிரபாகரன் அப்பாவி தான். தவறான தலைமையின் கீழ் சிதைவுக்கான போராட்டத்தை, ஆதரித்து தொங்கும் பாசிட்டுகள் தான், மொத்த சமூக கொடுமைகளுக்கும் கோட்பாடு வழங்கியவர்கள். பிரபாகரன் சமூக கோட்பாடற்று, வன்முறை மீது காதல் கொண்ட தனிமனித கோட்பாடு கொண்ட ஒரு ஒழுக்கவாதி. பாசிச சமூக கோட்பாட்டை, தனது தத்துவமாக வரிந்து கொண்டவனல்ல. பாசிச சித்தாந்தவாதியாக அல்லாது, அதற்கு தலைமை தாங்கும் வெறும் பொம்மை.

இது தான் பிரபாகரனின் பலமும் பலவீனமுமாய்  அன்று தாம் வரிந்துகொண்ட தனிமனித ஒழுக்கக் கோட்பாடும், அதை மீறுவதற்கு எதிரான தண்டனையுமாகியது. கற்பனையான வாழ்வும், இலட்சியமும், தியாகமும் என்று தனக்குள்ளேயே முடிவுவெடுக்கும் கோட்பாடு, தண்டிக்கும் உரிமையை தனக்குரியதாக்குகின்றது.  இதை மீறுவதை இலட்சிய குற்றமாக கருதி, அதைத் தண்டிக்கும் உரிமை அப்படி மீறாது வாழ்பவர்களுக்கு உண்டு என்று பிரபாகரன் கருதினான். இப்படி தனிமனித ஒழுக்கக் கோட்பாடு உருவானது. தன் தூய்மைவாதம், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை மூலம்,  மற்றவர்களுக்கு தண்டனை  வழங்க போதுமான உரிமையுண்டு என்று கருதினான். இதை பிரபாகரனே மீறிய போது, தனக்கு ஏற்ப அதைத் திருத்தினான். (பார்க்க அடல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை என்ற நூலை)

தனிமனித ஒழுக்கக் கோட்பாட்டின் அடிப்படையில், சொந்த இயக்கத்துக்குள் முரண்பாடுகளையும் படுகொலைகளையும் பிரபாகரன் செய்ததன் மூலம், இதற்கு தலைமை தாங்கினான்;. இந்தத் தகுதியைக் கொண்டு, பாசிட்டுகள் போராட்டத்துக்கு தலைமைதாங்க வைத்தனர். பாசிச கோட்பாட்டாளர்களுக்கு அப்பால், பிரபாகரன் நடத்தை அப்பாவித்தனமானது. இதில் எந்த சதியும் இருக்கவில்லை. அவன் புரிந்து கொண்ட வாழ்வின் அடிப்படையில், இவை நடந்தேறியது. அறியாமை, வாழ்வியல் அனுபவமின்றி, சமூகத்துடன் தொடர்பின்மை, பூர்சுவா மனவியல்பு, இதை வழிநடத்தியது. இதனடிப்படையிலான விடுதலை பற்றி நம்பிக்கை, இதைச் செய்யத் தூண்டியது. இதற்கு பாசிச சக்திகள் கோட்பாடு வழங்கினர்.  பிரபாகரனின் வன்முறை மீதான காதலுக்கும், ஒழுக்கக் கோட்பாட்டுக்கும், பாசிட்டுகள் கோட்பாடு வழங்கி அவனை தலைவனாக்கினர். இப்படி பிரபாகரனின் தனிமனித நடத்தைகளை தலைமை தாங்க வைத்து, அதை பாசிச போராட்டமாக்க முன் இந்த நடத்தைகள் மேல் அமைப்பில் முரண்பாடு உருவானது.

தனிமனித ஒழுக்கத்துக்கு எதிரான பிரபாகரன் தனித்து நடத்திய படுகொலைகள், எதிரியை சுடுவதால் விடுதலை கிடைக்கும் என்ற வலது கோட்பாடு கேள்விக்குள்ளாகியது. இதனால் பிரபாகரன் பெரும்பான்மையால் நிராகரிக்கபட்டான். பிரபாகரன் தனித்து வெளியேறி, ரெலோவில் போய் சேர்ந்தது வரை அது அரங்கேறியது. பிரபாகரன் வெளியேறிய போதும், மாற்று அரசியல் வழி இருக்கவில்லை. பழையபடி அது இயங்கியது. இதனால் பிரபாகரன் மீளவும் இதில் இணைய முடிந்தது.

ஆரம்பத்தில் தனிமனித ஒழுக்கத்தை கண்காணிக்கும் வன்முறையை இயல்பாக நியாயப்படுத்தியது.  இவர்கள் இடையே மொத்தத்தில் சுடுவதால் விடுதலை கிடைக்கும் என்ற கோட்பாடு;, மக்களை அணி திரட்டுவதன் மூலம் தான் விடுதலை சாத்தியம் என்பதை மறுத்தது. ஓடி ஓடி சுடுவதும், ஒளிப்பதும், அலைக்கழிவதுமாக இலக்கற்ற கற்பனை எப்படி விடுதலையை அடைவது என்பதில் சுய முரண்பாடாகின்றது. இதுவே மீளவும் படிப்படியான, பிளவாக மாறுகின்றது. தனிமனித ஒழுக்கத்தில் அடிப்படையில் உருவான இயக்கம், விடுதலை பற்றிய விடையத்தில் கருத்து முரண்பாட்டை எதிர்பார்க்கவில்லை. இதனால் பழிவாங்கும் வன்மமாக, திசையறியாத காழப்;பாக மாறுகின்றது.

மக்களை அணிதிரட்டாமல் விடுதலை சாத்தியமில்லை என்பதை, பிரபாகரன் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பிரபாகரனின் அறியாமை, இயலாமை, சமூகத்துடன் இணைந்து வாழாமை, இயல்பாகவே இதை நிராகரித்தது. இப்படி பிளவுகள் கோட்பாட்டு அடிப்படையில் உருவானது. தனிமனிதனை சுடுவது விடுதலைக்கான பாதை என்றும், மக்களை அணிதிரட்டுவது விடுதலைக்கான பாதை என்றும் பிளவுகள் உருவானது.  இதன் போது பிரபாகரன் தான் நம்பியது சரி என்ற அடிப்படையில், மக்களை நோக்கி செல்வதை துரோகம் என்று கருதினான். மக்களை செயலுக்காக அணி திரட்டுவது செயலல்ல, தனிமனிதனை சுடுவதே செயல் என்ற அடிப்படைக் கோட்பாட்டுப் பிளவு உருவானது. காலாகாலமாக கதைத்தும் உணர்ச்சி வசப்படுத்தியும் வந்த கூட்டணி அரசியலை, மக்கள் செயல் சார்ந்த வடிவமாக கொச்சைப்படுத்தி, தனிமனித படுகொலை அரசியலே செயலுக்குரிய பாதை என்று மாற்றப்பட்டது. இன்று இதற்கு கோட்பாடு வழங்கும் சில பாசிட்டுகள், கூட்டணி அரசியலை வன்முறை தோன்றுவதற்கான தம் அரசியலின் நீட்சியாக சித்தரிக்கின்றனர்.

பிரபாகரனின் அறியாமையும், அதைப் புரிந்து கொள்ளும் சமூகக் கண்ணோட்டமின்மையும், பிளவை எதிர்நிலையில் நிறுத்தியது. வன்மம் நிறைந்த பழிவாங்கும் உணர்வாக மாற்றியது. தனிமைவாதம், மற்றவனின் நம்பிக்கையற்ற தன்மை, சுய அறிவற்ற வரட்டுத்தனம் சூனியத்துக்குள் முடங்க வைத்தது. தான் மட்டும் தான் சரியாக இருப்பதாக நம்ப வைத்தது. தன் தலைமையை நிறுவுவதே சரி என்ற சிந்தனை, தலைமை பற்றிய முன் முனைவை ஏற்படுத்துகின்றது. இதை அவனின் நிலையை ஆதரித்த பாசிச கோட்பாட்டாளர்களின், முன் முயற்சி ஊடாக பெறுகின்றான். இப்படி பிரபாகரன் தானே தலைவர் என்ற கோட்பாட்டுடன், இயக்கத்தைக் கட்டமைத்தான். இதற்கு வழிகாட்டிய கோட்பாட்டாளர்கள் வெளியில் இருந்ததால், முதன் முதலில் பிரபாகரன் அமைப்புக்கு வெளியில் அரசியல் தலைமை வழிகாட்டல் இருந்தால் போதும் என்ற வடிவம் கோட்பாடாகியது. இப்படி நிலையான சர்வாதிகார தலைமை, அரசியலற்ற வன்முறை, விவாதம் செய்ய முடியாத இறுகிய இராணுவ அமைப்பு என்று புலி அமைப்பு வடிவம் பெற்றது. இதற்கு ஏற்ப கோட்பாட்டை வழங்கி, அந்த அமைப்பை பாசிச வடிவமாக்கியவர்கள் வரலாற்றில் புகுகின்றனர். யார் இவர்கள்?

புலியை பாசிச இயக்கமாக்கியவர்கள் யார்?

இவர்கள் வலது கோட்பாட்டாளர்கள் அல்ல. மாறாக வேஷம் போட்ட இடதுசாரிகள். இடதுசாரியத்தை பயன்படுத்தி வாழ முனைந்த கும்பல், புலிக்கு பாசிச சித்தாந்தத்தை வழங்கினர். தம் அரைகுறை இடதுசாரிய அறிவைக் கொண்டு, புலியை நியாயப்படுத்தியதே புலிக் கோட்பாடாகி அது பாசிசமாகியது. இடதுசாரி வேஷம் போட்ட இந்தக் கும்பல், புலிகள் செய்வதை நியாயப்படுத்தியது. அதை அவர்களது அரசியலாக்கியது. இதை ஒரு கோட்பாடாக்கியதன் மூலம், புலிப்பாசிசம் புலியிசமாக தளைக்கத் தொடங்கியது.

இதற்கு முண்டு கொடுத்தவர்களின் அன்று முதல் இன்று வரையான ஒரு நீண்ட பட்டியலே உண்டு, இப்படி மாற்றுக் கருத்து, இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் வரை பேசியவர்கள் தான், வலதுசாரிய புலி செய்ததை நியாயப்படுத்தி ஒரு புலியிசத்தை வழங்கினர். இப்படி இவர்கள் பேசிய இடது கலந்த பாசிசம், புலிகளை சமூக பாசிச இயக்கமாகியது. சமூக இயக்கத்துக்குரிய 'யாழ்" சமூகத்தன்மை இதன் பின்னணியில் இருந்ததா இல்லையா என்பதை, நாம் மற்றொரு கட்டுரையில்  பார்ப்போம். இங்கு இடதுசாரியம் பேசியவர்கள் தான், வலதுசாரி பாசிசத்தின் உண்மைக் கோட்பாட்டாளர்களானார்கள்.

வலதுசாரியக் கோட்பாடு என்றொன்று வடக்கு கிழக்கில் ஆதிக்கம் பெற்று இருக்கவில்லை. இடதுசாரியம் தான் கோட்பாட்டளவில் சமூகத்தன்மை பெற்று இருந்தது. வலதுசாரியம் வெறும் உணர்ச்சி வசப்படுத்திய எல்லைக்குள் தான், சமூகத்தை தன் பின்னால் தக்க வைக்க முனைந்தது. சுதந்திரன் பத்திரிகை தான் அதன் உச்சம். இதனால் வலது பாசிசத்தை ஒரு சமூகக் கோட்பாடாக, அதற்கு என்று ஒரு சமூக தளத்தை வழங்க முடியவில்லை. இதை செய்து முடித்தவர்களும், அதை பாதுகாக்க முனைபவர்களும் இடதுசாரியம் பேசியவர்கள் தான். ஒரு சமூகத்தின் தேசிய விடுதலைக்கான போரைத் தடுத்து, சமூகத்தின் அவலத்தை சமூக இயக்கமாக்கியவர்கள் இந்த இடதுசாரி வேஷதாரிகள் தான். அவர்கள் வலதுசாரிய புலிப்பாசிசத்தைத் உருவாக்கி, தமிழ் மக்கள் மேலான அடக்குமுறையை தேசியப் போராட்டம் என்றனர்.

இவர்கள் எதை நியாயப்படுத்தினர். பிரபாகரனின் வன்முறை மீதான காதலை, தனிமனித ஒழுக்கம் சார்ந்த தண்டனை முறைகளை, மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து அதை ஒடுக்குவதையும், சர்வாதிகாரத் தலைமையையும், விவாதமற்ற இராணுவ அமைப்பையும், அரசியலற்ற வன்முறைக் கும்பலையும் ஆதரித்து, அதற்கு தத்துவம் வழங்கியவர்கள் தான் இந்த இடதுசாரி வேஷதாரிகள். இப்படி தமிழ் இனத்தை அழித்த முதல் குற்றவாளிகள் இவர்கள் தான். இதில் பிரபாகரன் இவர்களால் வழி நடத்தப்பட்ட வெறும் பொம்மை.

இதை செய்து முடித்தவர்கள் யார்? இதை தக்க வைக்க முனைபவர்கள் யார்? அன்று பாலசிங்கம் தொடங்கி இன்று சரிநிகர், தேடகம், சுவடுகள் வரை என்று ஒரு நீண்ட பட்டியலில் பலர் உள்ளனர். இவர்கள் எல்லோரும் தீவிரமாக இடதுசாரியம் பேசியவர்கள். ஆனால் போலிகள் என்பதும், புரட்டுப் பேர்வழிகள் என்பதும் வரலாற்றால் அம்பலமாகியுள்ளது. இவர்களால் தான் புலிப்பாசிசத்துக்கு எதிரான, மாற்று மக்கள் போராட்டம் உருவாகாது சிதைநத்து என்பதை, இவர்களின் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. இதைத்தான் மாற்று என்று சமூகம் நம்பியது.

இந்த பாசிசக் கோட்பாட்டை புலிக்கு முதலில் வழங்கியவர்கள் பாலசிங்கம், மு.நித்தியானந்தன் முதல் சிவத்தம்பி வரை அடங்குவர். இவர்கள் செய்தது, புலியின் செயலை நியாயப்படுத்தி அதற்கு இடது கலந்த பாசிச கோட்பாட்டை வழங்கியது தான் இப்படி புலிக்கு ஒரு கோட்பாட்டை வழங்கி, அதை சமூகத்தின் முன் தூக்கி நிறுத்தினர். வலதுசாரிய செயலுக்கும் அரசியலுக்கும், இடதுசாரியத்தை அள்ளித் தெளித்தனர். அதை இடதுசாரி இயக்கமாக காட்டி, மக்களை ஏமாற்றி அணிதிரட்ட இவர்கள் மார்க்சியத்தையே பயன்படுத்தினர். இப்படி இடதுசாரியத்தை பயன்படுத்தி, வலதுசாரி பாசிச இயக்கத்தைக் கட்டினர். இப்படி வேஷம் போட்ட இந்த இடதுசாரிகள், படிப்படிப்யாக பாசிச மொழியில் உறுமத் தொடங்கினர். விளைவு தொடர்ந்து இடதுசாரியமாக, மக்களை ஏமாற்ற இவர்களால் முடியாது போனார்கள்.

இதைத் தொடர்ந்து அதைNயு செய்ய, அடுத்த அணி வருகின்றது. ஈரோஸ் பாலகுமார் முதல்  கி.பி அரவிந்தன் வரை, சிவராம் முதல் ஜெயபாலன் வரை, புதுவை இரத்தினதுறை தொடங்கி நோர்வே சண்முகரத்தினம் வரை என்று ஒரு நீண்ட பட்டியல் இதற்குள் அடங்குகின்றது. பாசிசத்தின் மூலை முடுக்குகளை இவர்கள் நக்கியே சுத்தப்படுத்தினர். அதை மக்கள் போராட்டமாக காட்ட முனைந்தனர். உள்ளும் புறமுமாக இவர்கள் வேஷம் போட்டனர். பாலகுமார் உள்ளே இருந்து செய்ததை கி.பி அரவிந்தன் வெளியே இருந்து செய்தார். இப்படித்தான் இவர்களிடையே உள்ள வேறுபாடுகள் இருந்தன.

சிவராம் முதல் ஜெயபாலன் வரையான இந்தக் கும்பல், புளாட்டில் வலதுசாரியத்தை நியாயப்படுத்தி, அங்கிருந்த இடதுசாரி பிரிவினைரைக் கொன்று குவிக்க உதவியவாகள். அங்கு வலதுசாரிகளாக பதவி பட்டங்களுடன் பாசிசத்தை பிரச்சாரம் செய்தவர்கள். இவர்களின் கொலைகார புளாட் கும்பல் உள் மற்றும் வெளிக் காரணங்களால் சிதைந்து போக, அதற்கு பாசிசத்தை வழங்கிய இந்த ஒட்டுண்ணிகள் படிப்படியாக புலியில் ஓட்டிக்கொண்டனர். அங்கு அதை நக்கத் தொடங்கினர்.

புதுவை இரத்தினதுரை பாடலால் பாசிசத்தை தாலாட்ட, நோர்வே சண்முகரத்தினம் தன் திறமையால் பாசிசத்தை ஆதரிக்கவும் வழிகாட்டவும், மற்றவர்களை ஆதரிக்கவும் வைத்தார். இவர்கள் பாசிசத்துக்கு இடது மூகமுடியை போட்டு ஆடி ஆட்டம், தொடர்ச்சியாக அம்பலமாகி நாறுகின்றது.

இவர்கள் கோட்பாடு வழங்கி வழிகாட்டிய புலியின் இன்றைய அழிவில் இருந்து அதைப்  பாதுகாக்க, இறுதிச்சுற்றில் பல இடதுசாரி வேஷதாரிகள் குதித்துள்ளனர். இவ்வளவு காலமும் புலிக்கு எதிரான மாற்றுக் கருத்து தளத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த இந்த வேஷதாரிகள், தாமும் கடைந்தெடுத்த பாசிட்டுகள் தான் என்பதை இனம் காட்ட தொடங்கியுள்ளனர். புதுசு ரவி முதல் சேரன் வரை. குரு முதல் சரிநிகர் சிவகுமார் வரை, நோர்வே சுவடுகள் முதல் நோர்வே "பறை" வரை, டென்மார்க் சஞ்சீவி முதல் கனடா தேடகம் வரை, பலர், பாசிசத்தை அதன் சொந்த அழிவில் இருந்து பாதுகாக்க, தம் சொந்த இடது வேஷத்தை போர்த்தியபடியே களமிறங்கியுள்ளனர். அன்றாடம் பலர் புதிதாக, பாசிசத்தின் அழிவில் இருந்து பாதுகாக்க தம் பெயர்களை பதிவு செய்கின்றனர். இதற்காக பெரும் தொகையான பணமும், பயணங்களும் சந்திப்புகள் பிரச்சாரங்கள் அரங்கேறுகின்றது.

இவர்கள் சொல்வது என்ன? புலிகள் அழிந்தால் தமிழனுக்கு எதுவும் கிடையாது. அதனால் நாம் புலியை ஆதரிக்க வேண்டும். அதைப் பலப்படுத்த வேண்டும் என்கின்றனர். புலிகள் இருந்தால் தமிழனுக்கு என்ன தான் கிடைக்கும்? அதைச் சொல்வது கிடையாது. புலிகள் இருந்தால் தமிழனுக்கு ஏதும் கிடைப்பதற்கு முன்னம், தமிழ் இனமே அழிந்து போகும் என்பதே எதார்த்தம்.

தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும், தமிழனின் உரிமையை பெறவும் உண்மையாகவே முனையும் ஒருவன், குறைந்தபட்சம் புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கின்ற தவறுகளை இனம்காட்டி அதை களையக்கோருவான். அந்த அடிப்படையில் தன் செயலை, கருத்தை தமிழ் மக்களுக்கு எதிரான பாசித்துக்கு முன்னால் முன் நிறுத்துவான். தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் பேரினவாதத்துக்கு எதிராகவும், புலிப்பாசிசத்துக்கு எதிராகவும் குறைந்தபட்சம் குரல் கொடுப்பான்.

பேரினவாதத்தின் இன்றைய வெற்றி என்பதும், தமிழ் இனத்தின் அழிவு என்பதும், புலிப்பாசிசத்தின் விளைவால் நிகழ்கின்றது. புலி தன் மக்களுக்கு எதிரான பாசிசத்தை கைவிடாத வரை, தமிழினம் எதையும் பெறமுடியாது. ஏன் தன் சொந்த அழிவில் இருந்தும் மீளமுடியாது.

இப்படி விடையம் இருக்க, மாற்றுக் கருத்தாக தம்மை இடது வேஷம் போட்ட இந்த புல்லுருவிகள், இன்று தமிழ் இனத்தை அழிக்கும் பாசிசத்தை ஆதரிக்கின்றனர். இதன் அர்த்தம் அரசை ஆதரிப்பதல்ல, அரசையும் எதிர்த்து தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும்  கோர மறுக்கும், இந்த புதிய பாசிசக் கும்பலை நாம் அம்பலப்படுத்துகின்றோம்.

இவர்கள் படிப்படியாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை கோருவதை கைவிடுகின்றனர். பேரினவாத பாசிசத்தை முன்னிறுத்தி, புலிப்பாசிசத்தை ஆதரிக்கின்றனர். தமிழ் மக்களுக்கு சொல்ல, புலிக்கு வெளியில் இந்த புதிய பாசிசக் கும்பலிடம் எதுவும் இருப்பதில்லை. தமி;ழ் மக்களை ஒடுக்கியதால் தான் புலிப்பாசிசம் செத்துக்கொண்டிருக்கிறது. இதனால் பேரினவாத பாசிசம் தன் 'ஜனநாயக" வடிவங்கள் மூலம் வெல்லுகின்றது. இதைத் தடுத்து நிறுத்த, புலிப்பாசிசத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறிக்கொள்கின்றனர். இதை தம் இடதுசாரி வார்த்தைகள் மூலம், பாசி;ச கோட்பாட்டை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். புதிதாக தம் சொந்த இடதுசாரிய வேஷத்தை களைந்து, பாசிசத்துக்காக களத்தில் இறங்கியுள்ளனர்.

அன்று இடது வேஷம் போட்டவர்கள் உள்ளே சென்று, அதை இடதாக மாற்றப் போவதாக தம்பட்டமடித்து பாசிசக் கோட்பாட்டை வழங்கி அதைப் பலப்படுத்தினர். இன்று இடது வேஷம் போட்டவர்கள் புலிகளைத் திருத்தப் போவதாக பீற்றிக் கொண்டு, பாசிச அழிவில் இருந்து அதை பாதுகாத்து பலப்படுத்தும் கோட்பாட்டு பங்களிப்பை வழங்க முனைகின்றனர்.

இப்படி புலி பாசிசத்தை பலப்படுத்தியது முதல் இன்று அதன் அழிவில் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில், இடதுசாரிய வேஷம் போட்டவர்கள் தான் பாசிச கோட்பாட்டை வழங்கினர், வழங்குகின்றனர்.

எம் இனம் உண்மையில் தோற்றுப்போனதும், அழிந்ததும் வலதுசாரிகளால் அல்ல. இடதுசாரிய வேஷம் போட்டு நாடகமாடிய பொறுக்கிகளால் தான்;. இலங்கை அரசை ஆதரிக்கும் புலி எதிர்ப்புக்கும், புலிப் பாசிசத்தை ஆதரிக்கும் புலிக்குள்ளும், இந்த இடதுசாரி  வேஷதாரிகள் இன்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.  தமிழ் இனத்தை ஏமாற்றிக் கொண்டிருந்த இந்தக் கும்பல், உண்மையில் மக்களைச் சார்ந்து போராட்டம் உருவாகாமல் தடுத்து நிறுத்தி அதைச் சிதைத்தது. இந்த கும்பல் இன்று பாசிசத்துடன் (புலி – அரசு) தன்னை வெளிப்படையாக்கி வரும் இன்றைய காலத்தில், அதற்கு முன்னம் செய்ததெல்லாம் என்ன? மக்கள் சுயமாக போராட முடியாத வண்ணம், கோட்பாட்டுத் தளத்தில் அதை சிதைத்தது தான். மாற்றுக் கருத்தின் பெயரில் மக்களின் போராட்டத் தத்துவமான மார்க்சிசத்தை திருத்தியும், வெட்டிச் சுருக்கியும், அதை இழிவாடி கொச்சைப்படுத்தியது தான், இவர்களின் இன்றைய பாசிசத்துக்கு முந்தைய வரலாறாகும்.

இப்படி தமிழ் இனத்தை ஏமாற்றி, எதுவுமற்ற கையறு நிலைக்கு இட்டுவந்தவர்கள்,  இந்த வேஷம் போட்ட இடதுசாரிகள் தான். இன்று பாசிசத்தை ஆதரித்து, முற்றாக தமிழினத்தை அழித்து விட முனைகின்றனர். இடதுசாரிய வேஷம் போட்டு அதை செய்தவர்கள், இன்று வலது பாசிசத்தை ஆதரித்து அதை செய்ய முனைகின்றனர். இப்படி புலிப் பாசிசத்தை ஆதரித்து, பேரினவாத வெற்றிக்கு உதவமுனைகின்றனர்.

இன்று இந்த இடது வேஷத்தை புரிந்து, அதன் போலித்தனத்தை இனம் காண்பதன் மூலம் தான், தமிழினத்தைக் காப்பாற்ற நாம் சுயமாக போராடமுடியும்.

பி.இரயாகரன்
07.12.2008

Last Updated on Tuesday, 23 June 2009 20:15