Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

  • PDF

டிசம்பர் 5 ம் திகதி நெதர்லாந்து மொழி பேசும் நாடுகளில் (நெதர்லாந்து, பெல்ஜியம்) "சின்டர் கிளாஸ்" (st. Klaas) என்ற தேசிய தினம் கொண்டாடப்படுகின்றது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் "சாந்தா கிளவுஸ்" என்று அறியப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா தான் இந்த சின்டர் கிளாஸ். இவரைப் பற்றிய சுவையான கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

புனித க்ளாஸ்(st.Klaas)துருக்கியை சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு.( சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் துருக்கி கிறிஸ்தவ நாடாக இருந்தது). துருக்கியில் இருந்து ஸ்பெயின் வரை கப்பலில் வந்த இந்த தாத்தா, பின்னர் வெண்புரவி ஒன்றில் ஏறி நெதர்லாந்து வந்தாராம். அவர் கூடவே ஆப்பிரிக்காவில் இருந்து சில கறுப்பின அடிமைகளையும் கூட்டி வந்தாராம். நெதர்லாந்து நாட்டில் சிறு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பரிசுப் பொருட்களை, தனது கறுப்பின அடிமைகளிடம் கொடுத்து விடுவாராம். வீடுகளின் சமையலறை புகை போக்கி ஊடாக குதிக்கும் அடிமைகள், இந்த பரிசுப் பொருட்களை சிறு பிள்ளைகளின் காலுறைகளினுள் வைத்து விட்டு மறைந்து விடுவார்களாம். எல்லா வீடுகளிலும் பெற்றோர் இந்த பரிசுப் பொருட்களை தமது பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தாலும், சிறு பிள்ளைகள் இப்போதும் சின்டர் கிளாஸ் என்று ஒருவர் வாழ்வதாக நம்புகின்றனர்.

மதச் சார்பின்மை கொள்கையை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் நெதர்லாந்து நாட்டில், "சின்டர் கிளாஸ் தினம்" கிறிஸ்தவ நாளாக அல்லாமல், தேசிய தினம் போல கொண்டாடப்படுகின்றது.

 

டிசம்பர் 5 ம் திகதி, இந்நாட்டில் விடுமுறை தினமாக இல்லாத போதிலும், சிறுவர்க்கான விசேட தினமாக, பாடசாலைகளில் கொண்டாடப்படுகின்றது. வயதான சின்டர் கிளாஸ் போலவும், கருப்பு அடிமைகள் போலவும் மாறுவேடம் பூண்ட வயதுவந்தோர் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி விட்டு செல்கின்றனர். சின்டர் கிளாஸ் தினத்தில் தொக்கி நிற்கும் மத வாத, நிறவாத அம்சங்களை ஏற்றுகொள்ளாத நெதர்லாந்து வெள்ளையின பெற்றோர் கூட, இந்த தினம் வர்த்தகமயப்படுத்தப் பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றனர். அண்மையில் கைத்தொலைபேசி நிறுவனங்கள் இலவச தொலைபேசிகளை வழங்கி கடும் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

முதலாவதாக நெதர்லாந்து/பெல்ஜிய அரசாங்கங்கள் சொல்வது போல சின்டர் கிளாஸ் தினம் மதச் சார்பற்றதா? அப்படியானால் பாப்பரசர் போல சின்டர் கிளாஸ் அணியும் தொப்பியில் சிலுவை அடையாளம் காணப்படுவதேன்? ஆங்கிலேயர்கள் எதற்காக தமிழில் "கிறிஸ்துமஸ் தாத்தா" என்று மொழிபெயர்த்தார்கள்? சின்டர் கிளாஸ் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்று கர்ணபரம்பரைக்கதை சொல்கின்றதே? இரண்டாவதாக வருடந்தோறும் மாறுவேடம் பூணும் வெள்ளையின மக்கள், சின்டர் கிளாசும், அவரது சேவகர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று நடித்துக் காட்டுகின்றனர். இங்கே தான் நிறவாதம் ஒளிந்திருக்கிறது. வெண்தாடியுடன் வரும் சின்டர் கிளாஸ், புத்திசாதுர்யம் மிக்க வயதான நபராக காட்சி தருகிறார். அதற்கு மாறாக அவரது சேவகர்களாக நடிக்கும் கறுப்பின அடிமைகள், முட்டாள்களாக குரங்குச் சேட்டைகள் செய்து குழந்தைகளை குஷிப் படுத்துபவர்களாக காட்சி தருகின்றனர்.

சின்டர் கிளாஸ் தினத்தின் வசீகரத்தால் கவரப்படும் வெள்ளையின குழந்தைகள் மனதில், கறுப்பின மக்களைப் பற்றிய தப்பபிப்பிராயம் பதிந்து விடுகின்றது. வெள்ளையினத்தவர்களை புத்திசாலிகளாகவும், கறுப்பினத்தவர்கள் விவேகமற்ற முட்டாள்களாகவும், மனிதக் குரங்குகளைப் போலவும் கற்பனை செய்கின்றனர். அந்தக் குழந்தைகள் தெருவில் கறுப்பின மக்களைப் பார்க்கும் போது, "கறுப்பு சேவகன்" அல்லது "மனிதக்குரங்கு" என்று அழைப்பதாக, பல வெள்ளையின நெதர்லாந்து பெற்றோர்கள் கூறுகின்றனர். இத்தகைய மறைமுகமான நிறவாத பிரச்சாரம் காரணமாக, சின்டர் கிளாஸ் தினத்தை தடை செய்ய வேண்டும் என்று நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் கறுப்பின மக்களும், இடதுசாரிகளும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பெரும்பான்மை வெள்ளையினத்தவர்கள் இதனை ஒரு "மக்கள் தினமாக" கருதுவதாலும், வர்த்தக நிறுவனங்களின் நன்மை கருதியும், இந்த தினத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.

சாந்தா கிளவுஸ் அல்லது கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கும் ஆங்கிலேயர்கள், இயேசு பிறந்த மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அந்நியமான வட துருவ மனிதனை அறிமுகப் படுத்துகின்றனர். பனி உறைந்த பாதையில், துருவ மான்கள் இழுத்து வரும் வண்டியில் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா, ஸ்கண்டிநேவிய நாடுகளின் வாழ்க்கைமுறையை கொண்டிருக்கிறார். இவருக்கும், அரைப் பாலைவன பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் கிறிஸ்துமஸ் தினத்தில் வீடுகளை அலங்கரிக்கும் "கிறிஸ்துமஸ் மரம்" கூட டென்மார்க் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் மட்டும் தான் காணப்படுகின்றது.


இவையெல்லாம் கிறிஸ்துமஸ் தாத்தா வட ஐரோப்பிய மக்களின் கலாச்சாரம் என்பதையும், இதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதையும் நிரூபிக்கின்றன. மேலும் டிசம்பர் 25 ம் திகதி தான் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் என்று பலர் இன்றும் நம்புகின்றனர். இது தவறு. பைபிளில் எங்கேயும் இது குறிப்பிடப்படவில்லை. இத்தாலியில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர், ரோமர்கள் தமது "மித்திரா" கடவுளுக்கு, டிசம்பர் 25 ம் திகதி விழா எடுத்தனர். இது அனேகமாக சூரியக் கடவுளின் வணக்கமாக இருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தில் குறைந்தளவு சூரிய ஒளி கிடைக்கின்றது. பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் அந்த தினத்தை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக மாற்றி விட்டனர்.

Last Updated on Saturday, 06 December 2008 07:17