Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இலக்கிய சந்திப்பும் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரமும்

  • PDF

ஜரோப்பாவில் வருடத்திற்கு முன்று இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதில் 14வது இலக்கியச் சந்திப்பு மார்கழி மாதம் 26ம்- 27ம் திகதிகளில் பாரீஸ்சில் நிகழ்த்தப்பட்டது. முதல் 13 இலக்கியச் சந்திப்புகளுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டம் என்றொன்று இல்லாவிட்டாலும் ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்டது. இவ் இலக்கியச் சந்திப்புகளுக்கு ஒரு வரையறுக்கபட்ட வேலைத்திட்டம் என்றொன்று இல்லாவிட்டாலும் ஜெர்மனியில் நிகழ்ந்த முதல் இலக்கிய சந்திப்பில் இலக்கியச் சந்திப்பின் நோக்கம் பற்றிய ஒரு முக்கியமான விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஜரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகள் மீதான விமர்சனத்தை வாசகர்கள் முன்வைக்கவும், கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்தவுமெனக் குறிப்பிட்டே இலக்கிய சந்திப்பு உருவாக்கப்பட்டது. இச் சஞ்சிகைகள் மண்ணின் நிகழ்வுகளுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. பாரீஸ்சில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் கீழுள்ள விடயங்களைப் பற்றி ஆராய்ந்ததா?

 

1). ஜரோப்பாவில் வெளிவரும் இலக்கியங்கள் மீது கவனம் எடுத்தார்களா?

 

2) இலங்கையில் வெளிவரும் இலக்கியங்கள் மீது கவனம் எடுத்தார்களா?

 

3) நடாத்திய நிகழ்ச்சிகள் மீது அரசியலைப் பிரதிபலித்தார்களா?

 

4) இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டோருக்கு கருத்துச் சுதந்திரம் வழங்கினார்களா?

 

5) தமிழ் மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுத்தார்களா?

 

6) தமிழ் மக்களின் பறிக்கப்பட்ட ஜனநாயகம் பற்றிக் கதைத்தார்களா?

 

7) முஸ்லீம் தேசிய இனம் அழிக்கப்படுவதை கவனத்தில் எடுத்தார்களா?

 

8) சிலரால் வைக்கப்பட்ட கருத்துக்கள் மீது அரசியல் ரீதியில் பதிலளித்தார்களா?

 

இப்படியான விடயங்கள் பற்றிக் கதைக்காமல் விட்டதுடன் கதைக்க முற்பட்டவர்களின் கருத்து சுதந்திரத்தை பறித்ததுடன், கதைக்க முற்பட்டால் தாக்குதலாக மாறும் நிலைக்கே மாறியிருந்தது. இவ் இலக்கியச் சந்திப்பு மேற்குறிப்பிட்ட விடயங்களையெல்லாம் எதிர்நிலைக்குத் தள்ளி (இவற்றை கதைத்தோரை எதிரியாகப் பார்த்தனர்)சில பிரமுகர்களினதும், பிழைப்புவாதிகளினதும் களியாட்ட விழாவாக இலக்கிய சந்திப்பு சீரழிந்துள்ளது. இங்கு தம்மைத்தாமே புகழ்வதுடன், தம்மைத்தாமே இலக்கியவாதிகளென புகழும் சுய அறிமுகத்துடன் தொடங்கிய இலக்கியச் சந்திப்பு பிரமுகர்கள் தமக்கிடையில் புகழ்ந்து தள்ளி, சிலரை பப்பாவில் ஏற்றி(ஓரிரு இலக்கியங்களை விமர்சித்து) புகழ்பெற உண்மையில் மண்ணை நேசிப்பவர்களை பயன்படுத்திக் கொண்டனர். இதை முன்கூட்டியே இந்தியாவில் போராடும் ஒரு புரட்சிகர கட்சியின் பத்திரிகையான புதிய ஜனநாயகம் எச்சரித்திருந்தது.

 

"இந்திய பிழைப்புவாத அறிவுஜீவிகள் தான் இப்போது புதிய இடதுபோக்கையும், தாராளவாத அமைப்புசாராத கலைப்புவாதப் போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு ஈழவிடுதலை இயக்கத்தை மேலும் குழப்பியவர்களாகவுள்ளனர். தனது உணர்வுகளை வெளிப்படுத்த ஆர்வத்துடன் பத்திரிகை தொடங்குபவர்கள் இத்தகைய பிழைப்புவாத பழம் பெருச்சாளிகளின் படைப்புக்களை அறிந்தோ அறியாமலோ வெளியிடுவதன் மூலம் மேலைநாட்டிலுள்ள ஈழத்தமிழர்களை குழப்புவதோடு தாமும் குழம்பி திசை தெரியாமல் தத்தளிக்கின்றார்கள்."

-நன்றி புதிய ஜனநாயகம்

 

இவ்விலக்கியச் சந்திப்பில் சமர் மீதும் சில நபர்கள் மீதும் இந்த பிழைப்புவாதப் புத்திஜீவிகள் அரசியலுக்கு புறம்பாக தாக்குதலை நடத்தினர். அரசியல் ரீதியில் எல்லாப்பிரச்சனைகள் மீதும் கருத்துக்கூற முற்பட்டபோது அவர்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதுடன் அவர்களை பார்த்து பயங்கரவாதிகள், சமயவாதிகள்...... எனப் பலத்த கரகோசத்துடன் கூக்குரலிட்டனர். தம்மை இடது சாரிகள் என பறைசாற்றிக் கொள்ளும் சிலர் மார்க்சிசம் இறந்துவிட்டதெனச் சொல்ல, தம்மை இடதுசாரிகள் எனச் சொல்லும் மேலும் பலர் பலத்த கரகோசத்துடன் வரவேற்றனர். ஒரிருவர் இதற்கெதிராக குரல் கொடுக்க முயன்றபோது அவர்களுக்கு கருத்து சுதந்திரத்தை மறுத்து தாம் போலி இடதுசாரிகள் எனக் காட்டிக்கொண்டனர். இங்கு கலந்து கொண்டோர் தம்மை முற்போக்குகளென(முற்போக்குள் விமர்சனமா? எனக்கூறுபவர்கள்) அடையாளம் காட்ட கடந்த காலத்தில் முற்பட்டவர்கள். அவர்கள் கூட மண்ணில் இழந்து போன ஜனநாயகத்துக்கு தமது முற்போக்குவாதத்தை பயன்படுத்த தவறி மீண்டும் ஜனநாயக மீறலுக்கு வித்திட்டனர்.

 

இவ் இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட தூண்டில், ஓசை, சிந்தனை, அ-ஆ-இ, ஊதா, தேனி...... மற்றும் நின்று போன பள்ளம், கண், தேடல்(பிரான்ஸ்) புதுமை, நமது குரல்,.....போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் மற்றும் சில கவிதை கதை தொகுதிகளை வெளியிட்டவர்களும் பல சஞ்சிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுபவர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லோரும் எம்மண்ணில் பறிக்கப்பட்ட மனித உரிமைக்காக அதாவது கருத்து எழுத்து, பேச்சு சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்களாக இனம்காட்டிக் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்க, சிலர் அங்கீகரிக்க சமர் உட்பட சில நபர்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டதுடன், எம்மை மௌனமாக கேட்டுக் கைதட்டும் படி கோரினர். இவ்விலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர் இதற்கு எதிராயிருந்த போதும் அவர்கள் இந்த பிழைப்புவாத சக்திகளால் தவறான வழிக்குள்ளிட்டுச் சென்றுள்ளனர். அல்லது மௌனிக்க வைக்கப்பட்டனர். இவ்விலக்கிய சந்திப்பில் மண்ணை மறந்ததுடன், கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயன்ற நடவடிக்கை மீண்டும் புலிகளை (கடந்த காலத்தில் சுயவிமர்சனம் செய்யாமை மட்டுமின்றி இவர்கள் வெறும் புலி எதிர்ப்பாளர்களாக தனிப்பட தம்மைக் காட்டிக் கொள்பவர்கள்) உருவாக்க முயல்கின்றனர்.

 

இவ் இலக்கிய சந்திப்பை நடத்தவென ஒரு குழு உருவான போதும் அக்குழுவிலிருந்த ஒசை ஆசிரியர் இந்நிகழ்ச்சிகளுடன் முரண்பட்ட நிலையில் அவரைப் புலிகளின் உளவாளியெனக் கூறி வெளியேற வைத்தனர். இந்நிகழ்ச்சி தொடர்பாக புலிகள் கூறியதை பார்ப்போம். எனது தாய்க்கு ஏதாவது நடந்தால் நான் விடமாட்டேன். இதை புரிந்து கொள்வீர்கள். இதை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சொன்ன புலிகள் இது போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தலாம் என்றனர். இப்படிக் கூறியதன் மூலம் இந்நிகழ்ச்சி எம்மை பாதிக்காது. எங்கள் பக்கமே நீங்களும் என்றார்கள். அதாவது தாய்க்கு ஏதாவது நடந்தால் என்பதனூடாக புலிகளைப்பற்றி கதைக்காவிட்டால் சரியென்றே மறைமுகமாகக் கூறினார்கள். இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களும், கலந்துகொண்டோரும் இவ் வேண்டுகோளை ஏற்று நிகழ்ச்சியை நடத்தியதுடன், அதற்கெதிராக கதைக்க முற்பட்டவர்களை பயங்கரவாதிகள், சமயவாதிகள்.....எனச்சொல்லி தமது பலத்தை கரகோசத்தில் மூலம் மனிதவுரிமைக்கெதிராக இலக்கியச் சந்திப்பை சீரழித்தனர்.

 

இக்கூட்டத்தில் கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர்களைப் பற்றி இவர்கள் இக்கூட்டத்தைக் குழப்ப முயன்றவர்களெனப் பிரச்சாரம் செய்கின்றனர். ஜரோப்பாவில் எம்மவர்களால் நடத்தப்படும் சினிமா களியாட்டங்கள், மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்ட ஒரு நிகழ்ச்சியாக இவ் இலக்கியச் சந்திப்பு இருக்குமென்ற நோக்கிலேயே நாம் கலந்து கொண்டோம். பல எழுத்தாளர்கள் எம் மண்ணின் நிகழ்வுகளின் மீது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக நாம் மதிப்பிட்டு வந்தமைக்காக நாம் பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்கிறோம். இக்கூட்டத்தையொரு களியாட்டவிழாவாக எண்ணியவர்களும், தம்மை புகழும் பிரமுக பிழைப்புவாதிகளும் தம்மைக் குழப்ப முயன்றனரெனக் குற்றம் சாட்டியுள்ளனர். தம்மைத்தாம் புகழும் ஒரு நிகழ்ச்சியாகச் சீரழிந்த போதிலும் நாம் கூட்டத்தின் ஒழுங்கைக் கடைப்பிடித்தோம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் மீதும் சபையோர் கருத்துக்கூற வழங்கப்பட்ட நேரத்தில் தமது கருத்தை சொல்ல முயன்றபொழுது அவர்களுக்கு கருத்து சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது. இக்கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதைச் சமர் மட்டுமின்றி சில நபர்களும் சுட்டிக்காட்டினர். எமது கருத்துக்கு பதிலளிக்க தகுதியிழந்து அவதூறுகளைப் பொழிந்தனர். அதற்கு பதிலளிக்க முயன்ற போது முற்றாக கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டது. இதை அவர்கள் பதிவு செய்த வீடியோ பதிவின் மூலம் அறியலாம்.

 

இவ் இலக்கியச் சந்திப்பில் நின்று போன சஞ்சிகைகள் உட்பட ஜரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகளை பார்வைக்கு வைத்தவர்கள், பிரான்சில் வெளிவரும் சமர், ஓசை போன்றவைகளை திட்டமிட்டே பார்வைக்கு வைப்பதை தவிர்த்தனர். இந்நிகழ்ச்சி நிரலிலுள்ள எந்த விடயத்தின் மீதும் அல்லது ஏதாவது விடயத்தையும் இட்டு கருத்துக்கூற சமர் உட்பட ஒசையிடமும் கோராமையினூடாக இவ்விலக்கியச் சந்திப்பு பிரமுகர்களுக்கேயென சீரழித்தனர். இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு விடயத்தில் சிலர் ஒரே கருத்துப்பட பேச முற்பட்டபோது பாரதியென்பவர் கேட்டார் எத்தனை பேர் வந்தீர்கள் என்று. முதல் நாள் நிகழ்ச்சி தொடர்பாக இக்கூட்டத்தை நடத்தியவர்களில் ஒருவரான முரளியிடம் சமர் சார்ந்த ஒரு நபர் முதல் நாள் நிகழ்ச்சியில் பறிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தைச் சுட்டிக்காட்டிய போதே நீ இறந்து போவதே சிறப்பானது என்றார். மாற்றுக்கருத்துக்களை சொல்லும் நபர்களை அழிப்பது, கருத்துச் சொல்வதை தடுப்பது சஞ்சிகைகளை பார்வைக்கு வைக்காமல் தடுப்பது....... என இலக்கிய சந்திப்பை நடத்தியவர்கள் செய்வதொன்றும் புதிதல்ல. கடந்த கால இயக்கவரலாற்றை நாம் மறந்து விடவில்லை.


இவ்விலக்கிய சந்திப்பில் கருத்துக்கள் மீது கருத்துச் சொல்வதற்கு முடியாமல் வாயில் வந்தபடி உளறிக் கொட்டிய இப்பிழைப்புவாதப் பிரமுகர்கள் புகழ் தேடி தமது அறியாமையை வெளிப்படுத்தினர். இவ்வறியாமையில் (சமூக இயக்கம் தொடர்பாக) இருந்து கொண்டு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை தமது பிழைப்புவாத நோக்கில் பயன்படுத்தும் பச்சோந்திப் பிரமுகர்களின் அறியாமையை வெளிப்படுத்தினர். இவர்களினால் அல்லது தவறான மார்க்கத்தால் சென்றவர்கள் இன்று தமது விமர்சனத்தைத் திரும்பிப்பார்க்க வெகு நாட்களாகாது. இது எமது கடந்தகால அனுபவத்தினூடாக மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் சொல்ல விரும்புகிறோம்.

 

ஒருவன் அறிவைப் பெறவிரும்பின் "யார் ஒரு விசயத்தை அறிய விரும்பினாலும் அவருக்கு அத்துடன் தொடர்பு கொள்ளுவதை தவிர, அதாவது அதன் சூழ்நிலையில் வாழ்வதை(நடைமுறையில் ஈடுபடுவதை) தவிர வேறு வழியில்லை... நீங்களும் அறிவு பெற விரும்பினால் யதார்த்தத்தை மாற்றும் நடைமுறையில் பங்கு பெறவேண்டும். பேரீக்காயின் சுவையை அறிய விரும்பினால் அதை நீங்கள் சொந்தமாக தின்று சுவைத்துப் பார்க்கவேண்டும். புரட்சியின் தத்துவமும், வழிமுறைகளும் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் புரட்சியில் பங்காற்றவேண்டும். உண்மையான அறிவு முழுவதும் நேரடி அனுபவத்திலிருந்தே பிறக்கின்றது."

 

நன்றி-- -நடைமுறை பற்றி (மாவோ ஆடி 1937)