Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நடைமுறைப் பிரச்சனையில் மார்க்ஸ் கோட்டை விட்டாரா?

  • PDF

சமர் குழுவிலிருந்து ஒருத்தர் வெளியேற்றப்பட்டதையொட்டிய கடிதம் 5-6 சமர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. கருக்கலைப்பு சமூகத்தேவையை ஒட்டியதல்ல எனச் சமரால் முன்வைக்கப்பட்டதாக திரிபுபடுத்தி சரிநிகரில் கார்-மார்கழி-1992 இற்கான இதழில் இது பற்றிய விமர்சனம் அனிச்சா என்னும் பெயரில் வெளியாகியிருந்தது.

 

கருக்கலைப்பு, கருத்தடைக்கும் உள்ள வேறுபாட்டை சரிநிகர் ஆசிரியர் குழு சரியாக ஆராயாமலோ என்னவோ கருத்தடை ஒரு உயிர்க்கொலை என்னும் வியாபார நோக்குள்ள தலையங்கம் கொடுத்திருந்தும் ஒரு கசப்பான உண்மை எனச் சுட்டிக்காட்டுவதோடு மேற்கூறிய நபருக்கும், சமருக்கும் இருந்த பிணைப்பும், பிரிவும் பற்றி தெளிவுபடுத்துவதன் ஊடாக தொடர்ந்து கருக்கலைப்புப் பற்றிய சமரின் கருத்தை தெளிவாக்க முனைகின்றது.

 

1) குறிப்பிட்ட கடிதம் மேற்படி நபருக்கு சமர் குழுவின் ஏகமனதான முடிவோடு அனுப்பப்பட்டது.

 

2) சமர் முன் வைத்த வேலைத்திட்டத்திற்கமைவாக, கருத்தொருமிப்பும், புரிந்துணர்வோடும், சமூகநோக்கம் கொண்டதாக சொந்த வாழ்க்கையில் கறாராக நடந்து கொள்ளுதல் ஆகிய உடன்பாடு இருந்தது.

 

3) மேற்குறிப்பிட்ட நபர், சமர் குழுவில் இருந்த சிலர் மீது சொந்த வாழ்க்கையில் சமூகநோக்கற்று நடந்ததை சுட்டிக்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

4) சமர் இதழ் 2 இல் பெண் என்னும் கட்டுரையையும் மேற்படி நபரே எழுதினார்.(இக்கருத்தே இன்றும் சமருக்கு உள்ளது.

 

5) இவரது கருக்கலைப்பு அந்தரங்கம் இவராலேயே சமர் குழுவுக்கு ஒரு முற்போக்கு வேடத்தில் அறிவிக்கப்பட்டு தனித்தனியாக விவாதித்தார்.

 

6) குழந்தை ஒன்று தேவை என்று தனது குடும்பம் விரும்புவதாகவும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியால் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

 

7) இதுமுதற் தடவையல்ல, இரண்டாவது தடவை என்பதும் இவராலேயே அறிவிக்கப்பட்டது.

 

8) குறித்த காலத்தின் பின் தான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகவும் கூறினார்.

 

மேலே குறிப்பிட்ட இந் நபரின் கருத்துக்களை நிலை நிறுத்தி சமர் குழுவிலிருந்தோர்(தனிநபர்களாக)

 

1) இச்சமகால பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்ல பண உதவி மற்றும் ஏனைய உதவிகளைச் செய்ய முன்வந்தனர்.

 

2) கருக்கலைக்க வேண்டாம் எனக்கோரி குழந்தை பிறக்கும் வரைக்கும் உள்ள பண நெருக்கடியைக் கவனிப்பதாகவும், குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் தந்து விடும்படியும் குழுவில் ஒருத்தர் நட்போடு வேண்டுகோள் விடுத்தார்.

 

3) இக்கருச்சிதைவு பெண்ணின் விருப்பத்திற்க்கு மாறாக நெருக்குதலால் நடக்கிறதா? என்பதை அறிய தோழமையோடு குறிப்பிட்ட நபரை அணுகியபோது அவர் கூறினார், நீங்கள் எனது மனைவியை குழப்பிவிடுவீர்கள் என்று அனுமதிக்கவில்லை.

 

4) நெருக்கடி முற்றிய நிலையில் பெண்ணிலைவாதக் கருத்துக்களோடு உடன்பாடுள்ள மேற்படி நபரின் மனைவியை சமர் குழுவில் ஒருத்தர் தனது மனைவி சகிதம் சந்தித்து நட்புரீதியில்; இது பற்றிக் கதைத்த போது, இப் பெண்ணிலைவாதியானக் கருவைச் சுமந்து நின்ற தாய் எவ்விதமான பதிலும் கூறாமல் ஏக்கமான மௌனம் சாதித்தார்.

 

5) இதன் தொடர்ச்சியாக கருச் சிதைவு நடந்தது. நாம் சமர் குழுவின் ஏகமனதான முடிவோடு வெளியேற்றினோம். அதற்குரிய கடிதமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

 

இக் கருக்கலைப்பு நடைபெற முன்னர், இது பற்றி குழுவாக விவாதிப்பதை தட்டிக்கழித்து வந்த இவர் கருச்சிதைவின் பின்னர் குழுவின் பெரும்பான்மை முடிவோடு செயற்படுமாறும், விவாதிக்கவும் கோரினார். ஆனால் சமர் குழு இதை ஏகமனதாக நிராகரித்து விட்டது. இதை இவர் ஜனநாயகமற்ற செயல் எனக் கூறித் திரிந்தமையால் மாத்திரமே நாம் அக்கடிதத்தைப் பிரசுரிக்க வேண்டி ஏற்பட்டது.

 

இங்கே நாம் உறுதியாகக் கூறும் கருத்து என்னவெனில் நட்பு புரிந்துணர்வு, தோழமை ஆகியவற்றால் கருத்தொருமித்திருந்த எம்மில் ஒருத்தருக்கு (குறிப்பிட்ட நபர்) சமூக முரண்பாட்டிற்கு முகம் கொடுத்து போராடி வாழும் சராசரி மனோபாவம் இல்லாமல் போனமை, நடுத்தர வர்க்கத்திற்கே சொந்தமான வறுமையிலும் வரட்டுக்கௌரவம் என்னும் தன்மையிலிருந்து யதார்த்த நிலைக்கு இறங்கி வராமல் சக நண்பர்களின் உதவியைத் தட்டிக்கழித்தமை, இக் கருக்கலைப்பில் இப் பெண்ணிற்கு எந்தளவு தூரம் உடன்பாடுண்டு என்பதை நேரில் பேசி அறிய எம்மைத் தடுத்தமை போன்ற பிற்போக்கு அம்சத்தை தனது சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்துக் கொண்டு, முற்போக்குச் சாயம் பூசி சமரோடு இருப்பதை சரியாக இனங் கண்டு இவரை வெறியேற்றியமை ஒரு குழு நடவடிக்கையே. இது விடயமாக சமர் 5-6 இல் வெளியாகியிருந்த கடிதம் எந்த விதத்திலும் கருக்கலைப்பு சம்பந்தமான சமரின் ஒட்டுமொத்த கருத்தை வெளியிட்டதில்லை. அனிச்சாவின் விமர்சனம் சமர் பற்றிய ஊகங்கள் அடிப்படையிலேயே அதிகம் எழுந்திருந்த போதிலும் தொடர்ந்து பதிலளிக்கின்றோம்.

 

வளர்முக நாடுகளிலும் சரி வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி கருக்கலைப்பு(சிசுக்கொலை) பெண்விடுதலையில் மையமாக சில பெண்ணிலைவாதிகளால் பூதாகாரமாக்கபபட்டுள்ளதையிட்டு உண்மையில் நாம் அனைவரும் வருத்தமடைய வேண்டியுள்ளது. பரந்துபட்ட துறையில் ஒதுக்கப்பட்டுள்ள பெண்ணின் உரிமையை ஒரு பாலியல் பிரச்சனையாகக் குறுக்கி வைத்துள்ளதும் இவர்களே தான். நிபந்தனையற்ற கருக்கலைப்பை எதிர்ப்போர், பிற்போக்குவாதிகள் என்றும் ஆதரிப்போர் நவீன முற்போக்காளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

 

முன் நிபந்தனையற்ற கருக்கலைப்பு என்னும் கருத்துருவாக்கம் சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, சமூகத்தீர்வாக முன் நிறுத்தும் சமூக நோக்கற்ற செயலே.

 

நிலப்பிரபுத்துவத்தின் இறுக்கமான கலாச்சாரக்கட்டிலிருந்து முதலாளித்துவத்தின் முற்போக்கு அம்சம் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற குறிப்பிட்ட சில உரிமைகளை பெண்களுக்கு வழங்கியிருப்பது உண்மையே. ஆனால் இதுவே பெண்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விடவில்லை. மாறாக முதலாளித்துவம் கொடுத்த உரிமைகளாலேயே பெண் இம்சைப்படுத்தப்படுவதும், அலங்காரப் பொருளாக சித்தரிக்கப்படுவதும் இயல்பாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இவையிலிருந்து ஒருபடி மேலே போய் வரையறையற்ற பாலுறவு, ஓரினச் சேர்க்கை, சமூக வரம்புகளை மீறிய குடும்ப அமைப்பு போன்றவற்றால் இந் நாடுகளில் மனநோயாளர்களை, பாலியல் நோய்களையும் இவ்வுலகத்திற்குத் தந்ததோடு கணவன், மனைவி உறவுக்கே உலை வைக்கக்கூடிய(எயிற்ஸ்) எனும் கொடிய நோயையும் இவர்களே இவ்வுலகுக்கு வழங்கினார்கள்.

 

நிலப்பிரபுத்துவக் கலாச்சார நாடான (பிற்போக்குக்கலாச்சார)இலங்கையிலிருந்தும் ஜரோப்பிய நாடுகளில் குடியேறி பெண்விடுதலை பேசும் இவர்களால் ஏகாதிபத்தியங்களின் சீரழிந்த கலாச்சாரத்தை உரிமையாகக் கோருவதற்கப்பால் வேறு எதுவும் செய்ய முடியாதுள்ளனர். இதனடிப்படையில் நாம் நோக்கும் போது நமது மரபுவழிப் பிற்போக்குக் கலாச்சாரத்துக்குப் பதிலாக மேற்கத்தைய நாடுகளே வெறுக்கும் சீரழிந்த கலாச்சாரத்தை முன் வைக்க முனைகின்றனர்.

 

பெண்விடுதலைக்கு ஆண், பெண் உட்பட ஒட்டுமொத்தச் சமூகமே ஓர் புரட்சிகரச் சூழ்நிலையில் கருத்தால் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை நிராகரித்து மனித இயல்பை மீறிய ஆண், எதிர்ப்பு கோசம் வெளியாகின்றது. பெண்கள் விடுதலையைப் பிரதிபலிக்கும் கலைவடிவங்களாகவும், எழுத்து வடிவங்களாகவும் ஆண்களே அதிகப் பங்காற்றியுள்ளனர். பெண்களைத் தட்டி கொடுப்பவர்களும் இவர்களே.

 

பெண்கள் விரசமான பாத்திரங்களில் பெண் எழுத்தாளர்களால் சித்தரிக்கப் படுவதையும் நாம் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். நாம் இதை எழுதுவதால் தொடர்ந்தும் இநத நிலை இருக்கும் என்பது பொருளல்ல. ஆனால் இதுதான் தற்போதைய உண்மை. இன்று நாம் சார்ந்துள்ள, சமூகப்பொருளாதார, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களின் பிரதிப்பலிப்பாகவே பெண் ஒடுக்குமுறை உட்பட்ட அனைத்து அனைத்து ஒடுக்குமுறைகளும் நடைபெறுகின்றன.(கருக்கலைப்பு உட்பட) சீதனக் கொடுமையால் பெண்கள் தீயில் எரிக்கப்படுதல் (மாமி-மருமகள்) குழந்தை பிறந்தவுடன் பெண் குழந்தையானால் கொல்லுதல் அல்லது அனாதரவாக விடுதல், நிபந்தனையற்ற கருக்கலைப்பு ஆகியவை ஒரே பிரச்சனையின் பல்வேறு வடிவங்களே.

 

கரு உருவாகாமல் கருத்தடை மாத்திரை, கருத்தடைச் சாதனம் மற்றும் கருத்தடை அறிவியலூடாக கருத்தடைப்படுத்திக் கொள்வதும் கருத்தடையாகவே கருதலாம்.(சிசுக்கொலை) சரிநிகர் விமர்சகர் இவை இரண்டையும் குழப்பி இதை முன்னால் செய்தாலென்ன? பின்னால் செய்தாலென்ன? இரண்டும் ஒன்று தானே என்கின்றார். நாம் இவர் பாணியிலே கேட்கின்றோம், பத்து மாதத்தில் குழந்தை பிறக்கின்றது. பிறந்த பின்னர் குடும்பத்தின் பழைய இருப்பைப் பேண முடியாமல் போகுமாயின் அக் குழந்தையைக் கொல்லலாம் தானே? உங்கள் பாணியில் இவைகள் ஒன்று தான்.

 

ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் பெண் குழந்தைகள் சீனாவில் பிறந்தவுடன் கொல்லப்படுகின்றார்கள். ஆண் குழந்தைகளே பிற்காலத்தில் பொருளாதார ரீதியில் உதவுவார்களென்று பெற்றோர் காரணம் கூறுவதாக சீனாவின் பிரபல பெண்ணிலைவாதியான வென் முகுவா கூறுகின்றார்.( நன்றி சுவடுகள் இதழ் 36)

 

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அதிகமான கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் கொன்றுவிடுவதாக செய்திகள் வருகின்றன். 1989ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் புரட்டாதி மாதம் வரை 44 பெண் குழந்தைகள் உசிலம்பட்டி கிராமத்தில் பிறந்தவுடன் கொல்லப்பட்டுள்ளார்கள். இவை இறப்புப் பதிவில் குறிப்பிட்டவை மாத்திரமே. பதிவு செய்யாதவை பலமடங்கு அதிகம் எனக் கூறப்படுகின்றது. இக் குழந்தைகளின் பெற்றோர் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது 10 பவுண் நகையும் 10 ஆயிரம் ரூபா பணமும் இல்லாமல் திருமணம் செய்து கொடுக்க முடியாது அதனாலேயே கொல்லுவதாகக் கூறுகின்றனர். நிபந்தனையற்ற கருக்கலைப்பை ஆதரிப்போர் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதையும் ஆதரித்தேயாக வேண்டும். ஏனெனில் இவை ஒரே பிரச்சனையும் ஒரே வடிவமுமேயாகும்.

 

ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தில் தனி அங்கமாயிருந்த போதும், தனிமனித அபிலாசைகளோடு பொருந்திய தேவை ஒரு சமூகத்திற்கு பொருந்தி வராது. ஒட்டுமொத்தச் சமூகத்துக்குப் பொருந்திய தேவை மாத்திரமே ஒரு தனிமனிதனுக்கும் பொருந்தும்.

 

நிபந்தனையற்றுக் கருவைக் கலைக்கலாம் என்னும் வாதம் சமூகச்சீரழிவையே கொடுக்கும். கருவில் இருக்கும் குழந்தை குறைபாடாயிருந்தால், கருவுற்ற தாய் நோயுற்றிருந்தால், தாயின் உயிருக்கு ஆபத்தாயிருந்தால் போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஒட்டிய வைத்திய ஆலோசனையுடன் செய்து கொள்வது அவசியமானதே.

 

பலாத்காரத்தாலோ, இராணுவ பலாத்காரத்தாலோ உருவான கருக்களையும் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லாத இந் நிலையில் கலைத்தேயாக வேண்டும். இவை பேன்ற சமூகத்தேவைகளையொட்டிய கருக்கலைப்புக்கள் மேற்கூறிய நிபந்தனைகளோடு ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இவை தவிர்ந்த கருக்கலைப்புக்களை சமூகம் வன்மையாக கண்டிக்க வேண்டும். ஆண்கள் எத்தனை பெண்களோடும் தொடர்பு வைத்திருந்தாலும் இயற்க்கையின் சாதகத்தன்மையால் அவர்கள் தப்பிவிடுகின்றனர். இயற்கையாக பெண் கருப்பையைச் சுமந்து நிற்பதால் சமூகத்தின் கொடியப் பார்வைக்குள்ளாகி ஒதுக்கப்படுகின்றாள் என்பது உண்மையே.

 

மது அருந்துதல், போதைப் பொருள் பாவித்தல், பல பெண்களோடு பாலுறவு ஆகியவை ஆண்களின் உரிமையாக இருப்பின் இதே உரிமை பெண்களுக்கும் நிச்சயமுண்டு. ஆனால் இவைகள் ஒட்டு மொத்தச் சமூகத்திலுமிருந்து முடிந்தவரை களையப்பட வேண்டியவையே. மேற்குறிப்பிட்ட உரிமைகளையும் நிபந்தனையற்றக் கருக்கலைப்பையும் கோருவது எவ்விதத்தில் சமூக நோக்காகும். அனைத்து நாடுகளிலுமுள்ள அரசுகளாலும் சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டே தானிருக்கின்றன. இவற்றிற்கு மூல காரணமாக அரசும் சமூக அமைப்புமேயுள்ளன(கருக்கலைப்பு உட்பட). இவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பதால் சமூகம் நடைமுறையில் இவற்றைத் தீர்வாக ஏற்றுக் கொள்ளமுடியாது. இதன் நிமித்தமே சமூகம் ஒட்டு மொத்தமான ஓர் சமூக மாற்றத்தை நாடி நிற்கிறது.

 

அதன் மூலம் மாத்திரமே படிப்படியாக இவைகட்கு தீர்வு காணமுடியும். மற்றும் சில பெண்ணிலை வாதிகள் மணம் செய்யாமலே ஒரு ஆணோடு சேர்ந்து வாழலாம் என்னும் ஜரோப்பிய நாடுகளில் பிரதி பண்ணிய (கொப்பி) ஒரு கருத்தைக் கொண்டுள்ளதோடு மறறவர்களுக்கு போதிக்கவும் செய்கின்றனர்.

 

பொருளாதாரச் சார்பு நிலையும் ஆணாதிக்கமும் அற்ற ஒரு சமூக மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இயல்பான மனிதத் தேவைகளையொட்டி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் நிலையில் யதார்த்தமான குடும்ப உருவாக்கம் உண்டு என்னும் விஞ்ஞான பூர்வமான ஆய்வினை நாம் மறுக்கவில்லை. மேற்கூறிய பெண்ணிலைவாதிகள் சமகால சமூக அமைப்பிலுள்ள அனைத்து அம்சங்களையும் விட்டுவிட்டு இவ்விடத்தில் மாத்திரம் மிகவும் வேகமாய் போய் விட நினைக்கின்றார்கள். இவைகள் தான் நாம் சமூகச் சீரழிவு என்கிறோம்.

 

நாம் இருக்கும் சமூக அமைப்பின் அனைத்து வரையறைகளையும் உடைத்து எறியப்படும் தறுவாயில் புரட்சிகரமான புதிய சமூக வரம்புகளின் ஊடாகவே பரிணாம வளர்ச்சி பெற்று பூரண விடுதலையை அனுபவிக்க முடியும்.

 

இதைத் தவிர இவர்களது இந் நடவடிக்கை இச் சமூக அமைப்பை மாற்றி அமைக்கப் போராடுவதற்க்கு பதிலாக, இச் சமூகத்தில் ஆண் ஒரு சரியான காரணி என்றே காட்ட முனைகின்றனர். இதன் அடிப்படை வக்கிரமான தனிநபர் சுய தேவைகளையும், சமூக நோக்கற்ற ஆண்களின் நடவடிக்கையை பெண் உரிமையாகக் கோரும் பிற்போக்குவாதமுமேயாகும்.

 

ஜரோப்பிய சமூகப் பெண்கள் சுரண்டும் வர்க்கங்களால் நேரடியாகப் பல முனைகளில் ஒடுக்கப்படுகின்றனர். ஜரோப்பிய பெண் விடுதலை அமைப்புக்களால் கூட இவர்களை அணிதிரட்டி ஒருங்கிணைத்துப் போராடுவதற்கு பதிலாக சுரண்டுவோரின் சுரண்டலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கருக்கலைப்பு கோசத்தை முன்வைக்கின்றனர்.

 

உதாரணமாக இங்குள்ள சந்தைப் பொருளாதார அமைப்பு முறையிலுள்ள சிறுமுதலீட்டாளர்களின் தொழில் நிறுவனங்கள் உட்பட பல்தேசியக் கொம்பனிகள் வரை பணிக்கு அமர்த்தியுள்ள பெண்களைப் பொறுத்த வரையில், நிறுவனம் குறைவாக இலாபம் பெறும் போது, அல்லது ஆள்குறைப்புச் செய்யவேண்டிய தேவையேற்படும் போது 38-40வயதை தாண்டியோர், குடும்ப பெண்கள் போன்றோரே வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்கள் பணிப்பெண்கள், உல்லாசப் பயணிகளோடு தொடர்புபட்ட வேலையாட்கள்(ஹொட்டல்)வரவேற்பாளர், காரியதரிசி விற்பனைப் பகுதியிலுள்ள வெகுசனத் தொடர்பாளர் போன்றோர் முன்னணியிலுள்ளனர். இவற்றுக்குரிய காரணங்கள் கட்டான உடலமைப்பு இழந்தமை, வசீகரமான இளமைத் தோற்றத்தை இழந்தமை போன்றவையே. மேலே குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பெண்கள் மேற்கத்தைய நாடுகளில் இன்னுமோர் வேலை பெறுவது முயற் கொம்பாகவே இருக்கும். ஏகாதிபத்தியங்களின் கவர்ச்சிகரமான இலாப நோக்கம் கொண்ட வேலைத்திட்டத்தால் பெண்கள் உழைப்பு உறிஞ்சப்பட்டு ஒடுக்கப்படுவதை இசைந்து, ஏற்று பழக்கப்படுத்திக் கொள்ளவும் கருக்கலைப்பைக் கோருவது இவர்களுக்கும் அவசியப்பட்டுள்ளது. சுரண்டலுக்கு துணைபோகும் ஒரு நடவடிக்கையாகவே கருக்கலைப்பும் கோரப்படுகின்றது. சில ஏகாதிபத்திய நாடுகளில் இவ்வுரிமையை கொடுக்க மறுத்த போதிலும் அனேகமாகக் கட்சிகள் இவ்வுரிமையை வழங்க முன்வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகளில் அனேக பெண்கள் திருமணம் செய்யாமல் ஒருத்தரோடு சேர்ந்து வாழுதல், அல்லது தங்கள் உடலியல் தேவைக்கு கணவனோடு சோந்து கொள்ளுதல், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையை ஓட்டுதல் போன்றவை இவர்களது தொழில் சார்பு வாழ்நிலையைப் பேணுவதற்காகவே.

 

வளர்முக நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் தான் நாம் கூறுகிறோம் பெண்விடுதலை என்பது பெண்கள் மாத்திரம் சம்மந்தப்பட்ட கோசமாக அமையமுடியாது. சுரண்டலுக்கெதிரான பாட்டாளிவர்க்கப் புரட்சியிலேயே உண்மையான பெண் விடுதலையின்; கருத்து உருவாக முடியும். வளர்முக நாடுகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உள்ள பெண்விடுதலை அமைப்புக்களின் பொதுவானதோர் கருத்து யாதெனில் பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதே. இது உண்மைக்குப் புறம்பான கருத்தல்ல என்ற போதிலும் பெண்கள் தங்களைத் தாங்களே காட்சிப் பொருளாக நினைத்து அலங்கரித்து மற்றவர்களின் பார்வைக்காக பவனிவரும். காலம் மாறும் வரை பெண்விடுதலையின் முதல் படியையேனும் தொடமுடியாது. தொடர்ந்து அனிச்சாவின் விமர்சனத்திலிருந்து பெறப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம்.

 

1) குழந்தைக் கொலையையும், கருச்சிதைவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பியுள்ளது. வர்க்கப் போராட்டமே எல்லாவற்றிக்குமான முடிந்த முடிவு எனக் கூறி நடைமுறைப் பிரச்சனையைக் கோட்டை விடுவது சமரின் பிரச்சனை என்றும் கூறியுள்ளார். உண்மையில் அனைத்து முரண்பாடுகளிற்கும் வர்க்கப் போராட்டத்தின் மூலமே தீர்வு காணமுடியும் என்பது சமரின் உறுதியான முடிவு. ஆனால் இவ்விடயத்தை எழுதுவது, விமர்சிப்பது, நிபந்தனைகளை விதிப்பது, சமூகச் சீரழிவை நோக்கித் தள்ளும் கருத்திலிருந்து விலகி ஆராய்வது, அனைத்துமே நடைமுறையைக் கருத்தில் கொண்டே ஈடுகொடுத்து நகர்வதாகும். இதை விளங்கிக்கொள்வது இந்தச் சமூக அமைப்பில் ஏகாதிபத்தியத்திற்குச் சார்பான வகையில் உள்ள உங்கள் நடைமுறை பிரச்சனையின் தீர்வை அங்கீகரிக்கக் கோரும் இவரது வாதம், இப்பிரச்சனையை இச்சமூக அமைப்பில் தீர்க்க முடியும் என்று கூறுவதாகும். அது எப்படி?

 

.2) மூலிகைகளாலும் மற்றும் பல முறைகளாலும் ஆதிகாலத்திலும் கருக்கலைப்பு நடந்ததாகக் கூறி தற்போதைய சுயதேவைக்குரிய கருக்கலைப்புக்கு ஆதாரம் காட்டியுள்ளார்.

 

இதிலிருந்து இவர் கூறி வருவது காலத்தின் புரட்சிகர வளர்ச்சிக்கேற்றவாறும், சமூக ஆரோக்கியமாகவும் ஆராய இவர் தயாராயில்லை என்பதே. மரபுவழி பழமைகள் யாவற்றையும் ஒதுக்கி அதிசிறந்த பெண்ணிலைவாதியாக விமர்சனம் எழுதிய இவர் கருக்கலைப்பு விடயத்தில் மாத்திரம் பழமையே பேண நினைக்கிறார். இதையே தான் மேலே குறிப்பிட்டோம். இது சமூகநோக்கல்ல சுயதேவையென்று.

 

3) பெண்ணை ஆட்டக்காரி எனவும் அடக்கமற்றவள் எனவும் கூறி அவளை இரண்டாம் தரமாகக் கருதும் இந்த மனப்பான்மையிருக்கும் வரை கருக்கலைப்பை எப்படி தடுக்கமுடியும்.?

 

இக் கேள்வி பெண்விடுதலையை நிராகரிக்கும் கேள்வி மாத்திரமல்ல ஆண் எதிர்ப்புக் கோசத்தையும் முன்வைக்கிறது. மேலே குறிப்பிட்ட ஆட்டக்காரி என்னும் சொற்பிரயோகம் பிரயோகிப்போரின் அறிவின் அளவைப் பொறுத்தது. இதற்கு இன்னும் வேறு நாகரீகமான சொற்களும் பிரயோகிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கும் மாத்திரமல்ல ஆண்களுக்கும் பிரயோகிக்கப்படுகின்றன. (பொருந்தும்) எந்தவொரு சமூகக் கட்டமைபபிலும் குறைந்தபட்சம் தனக்குத்தான் எனும் ஒரு வரம்பமைத்து வாழாமல், மனம் போன படி வாழ்வதும் (நடவடிக்கைகள்) பின்னர் அதன் பிரதிபலிப்பான கருவைக் கலைப்பதும் சமூகத்தேவையா? பெண்விடுதலை என்ற பெயரில் சமூக சீரழிவான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை ஆதரிப்பதோ அல்லது இதற்குச் சமமாக நடந்து கொள்ளும் ஆண்களை அவர்களின் ஆழுமை என்று கூறுவதோ அல்லது இதை ஆராய்ந்து நடைமுறையில் ஏற்பட்ட சூழ்நிலையின் தேவை என்று நியாயப்படுத்த முயற்சிப்பதோ ஒரு போதும் சமூக நியாயமாகாது.

 

4) வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பெருந்தோகையான ஆண்கள் கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் திரும்பவும் சென்று விடுவார்கள். ஆண், பெண், பாலியல் உறவுக்கே ஏற்படுத்தப்பட்ட சட்டரீதியான கல்யாண உறவில் கூடப் பெண்களுக்கு ஆண்களின் உறவு அற்றுப் போய்விடுகிறது. இந்த நிலையில் பெண்களின் இரகசிய உறவுகள் வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப் படுகின்றன. இரகசிய உறவால் உருவாகும் பிள்ளையை சமூகம் ஒருபோதும் அஙகீகரிப்பதில்லை. இந் நிலையில் தனித்து வாழும் பெண்கள் எப்படி வாழவேண்டுமென்று சமூகம் எதிர்பார்க்கிறது? என்றும் கேட்கின்றார்.

 

கணவன் வெளிநாடு செல்வது மத்தியதர வர்க்கத்தின் மனோநிலையை உயர்த்திக் கொள்ளவே. அவர்கள் மனோநிலையில் இருந்து நோக்குமிடத்து குடும்பத்தின் முன்னேற்றம் முதன்மைப்படுகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு முழுக்க முழுக்க படுக்கையறை மாத்திரமே என்று நினைப்பது தவறு. ஆனால் அதை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும் குடும்ப அமைப்பையே தகர்த்துவிடும். அவரவர் சிந்தனை, அறிவு, சூழல் இவைகளைப் பொறுத்த விடயம். கணவன் ஒரு பக்க சார்பு முடிவோடு நீண்ட நாள் வெளிநாட்டில் இருந்தால் தனது நிலையை விளக்கி அவரை திரும்பவும் அழைக்க முயற்சி செய்யவேண்டும். அவர் நியாயமற்று மறுத்தால் விவாகரத்துச் செய்துவிட்டு இன்னுமோர் மணம் செய்து கொள்ளாலாம். இதுவே பெண்ணின் உரிமை. இதைவிடுத்து யாரோடோ இரகசிய உறவை வைத்து பின்னர் கருக்கலைப்பது பெண் உரிமையல்ல. சமூகநோக்குமல்ல. மூன்றாவது மண்டல நாடுகளில் மேற்குறிப்பிட்டவை போன்றன விவாகரத்துக்களால் கிடைக்கு நன்மைகளைப் போன்றே தீமைகளும் உண்டு என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

 

உதாரணமாக நிலப்பிரபுத்துவ குடும்ப அமைப்பிலிருந்தும் சற்றும் மாறாத இந் நாடுகளில் அனைத்து வர்க்கங்களிலும் குடும்பம் சார்ந்த பொருளாதார பலத்தையே கொண்டுள்ளன. இதற்குரிய முக்கிய காரணம் வேலையற்றோருக்கு உதவிப்பணமோ, வயோதிபர், அனாதைகள் போன்றோர்க்கு உதவிசெய்யும் திட்டமேதும் அரசுகளால் செய்முறையில் இல்லாததும், பொது நிறுவனங்கள் கிடையாததுமாகும். இந்நிலையில் இளமைக்காலத்தில் ஏறபடும் விவகாரத்துக்களால் தங்கள் குழந்தைகள் நன்மை பெற தாய் தந்தையர் வாழ்வைத் தியாகம் செய்கின்றனர் அல்லது தாய் தநதையர் வாழ்வு பெற குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கப்படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில் பெண் பூரண உரிமை பெற சமூக அமைப்பையும் அரசியல் அமைப்பையும் மக்களுக்குரியதாக மாற்றியமைக்க வேண்டும். மேலும் நடைமுறையில் நமது பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைமாரைக் கிராக்கிப்படுத்துவதும், விரும்புவதும் அதிகரித்தே வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். நாட்டில் போர்ச்சூழல் ஏற்படும் முன்னரே இதே நிலையிருந்தது.


5) பொருளாதார ரீதியில் குழந்தை பெறுவது சாத்தியமற்றதாக இருப்பதுண்டு. குழந்தையை உருவாக்கி விட்டு பட்டினியாலும் பசியாலும் சாகடிப்பதை விட கருவில் சிதைப்பதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. மார்க்சினாலேயே தனது மகன் எட்காரை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஜென்னியின் முலையில் பாலுக்கு பதில் இரத்தம் கசிந்த போதுள்ள வேதனையை விட பிறந்த பின் உணவூட்ட முடியாமல் சாகடிக்கச் செய்த துன்பத்தை விட கலங்களால் உருவாகிக் பொண்டிருக்கும் சிசுவை கருச்சிதைவு செய்வதை பாரதூரமானதாகக் கருதமுடியுமா? என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கருக்கலைப்பை சட்டபூர்வமாக கோருவது, நடுத்தர வர்க்கம் மாத்திரமே. இது முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனையும் கூட. சொத்து சேகரித்தல், பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையடைதல், சமூகத்தில் நிலவும் சீதனம் போன்ற பிற்போக்கு அம்சங்களை பாதுகாத்தல் போன்றதாகும்.

 

வாழ்க்கைக்கு முகம் கொடுத்தல், அன்றாடம் மனித வாழ்க்கையில் தொடரும் போராட்டத்தை வாழ்க்கையோடு இணைத்தல் போன்றவற்றை நிராகரித்து இயங்கியலை மறுப்பதாகும். மேற்கூறியபடி இவரது கருக்கலைப்பு நியாயப்பூர்வமாகின், பொருளாதாரச் சிக்கலுக்கு முகம் கொடுக்கும் அனைத்துப் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளைக் கொல்லலாம் என்னும் உரிமையையும் கொடுக்க வேண்டும். ஜென்னியின் முலையிருந்து மாத்திரம் இரத்தம் கசியவில்லை, யாழ்ப்பாணத்து பங்கர்களில் குழந்தை பெறும் தாய்மார்களின் முலையிலிருந்தும் இரத்தம் கசிந்து கொண்டுதானிருக்கிறது. நடைமுறையில் கோட்டை விடுவதாகச் சமரைக் குறறம் சாட்டிய அனிச்சா, நடைமுறையில் மூன்றாவது மண்டல நாடுகளில் வாழும் 80 வீதம் மக்களின் வாழ்வை நிராகரிக்கிக்கின்றார். இது எந்தக் கோட்பாடு என்று புரியவில்லை. இதையே தான் அமெரிக்க ஏகாதிபத்தியமும் கூறுகிறது. மேலும் அனைத்து முரணபாடுகளுக்கும் வர்க்கப் போராட்டமே தீர்வு என்றே மார்க்ஸ் கூறினார். அனிச்சாவின் அகராதியில் மார்க்ஸ்சும் வர்க்கப் போராட்டத்தைக் கூறி நடைமுறைப் பிரச்சனையில் கோட்டை விட்டவரே. மார்க்ஸ் வறுமையில் வாடியதற்க்கான காரணமான இச்சமூக அமைப்பை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தும் தத்துவப் பிச்சைக்காரராகவும் இருக்கவில்லை. மாறாக இவ்வுலகை மாற்றும் மாபெரும் தத்துவவாதியாகவும், மனித வாழ்வின் மகிமையை மதித்து முகம் கொடுத்தவராகவும் இருந்தார். இதன் காரணமாகவே ஜென்னியின் முலையில் இரத்தம் கசிந்தும் நீங்கள் கோரும் சுயதேவைக் கொலையைச் செய்யவில்லை.

 

6) கருச்சிதைவைக் கொலை என்று கூறும் சமர் வாக்கப்போராட்டம், புரட்சி எல்லாம் முடிந்து பொருளாதார காரணிகள் சுமூகமாக அமையப் போகிற சோசலிச சமுதாயத்தில் இத்தகைய பிரச்சனை வராது என்று கருதுகின்றதா?

 

சோசலிச சமுதாயத்தில் புரட்சிகள் முடியுமே தவிர இவர் கூறுவது போல் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வராது. மாறாக அது தொடரும் என்பதே உண்மை. ஆனால் இச் சோசலிச சமுதாயத்தில் ஆணின் ஸ்தானங்களுக்காக பெண்கள் போட்டி போட்டு இன்றைய ஆணை ஒரு சரியான காரணி எனக்காட்ட ஒரு போதும் பெண்கள் முன்வர மாட்டார்கள். சமூகத்தேவை தவிர்ந்த, வக்கிரமான சுயதேவைகட்கு கருச்சிதைவு தேவை என்று கோரும் சமூகமற்றப் பெண் உரிமைகளைச் சரியாகப் புரிந்து செயல்படும் ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். குழப்பவாதிகள் தெளிவடைவார்கள்.