Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

யுத்தம் சமாதானம் எதை நோக்கி செல்கிறது

  • PDF

 தேசியத்தை ஒடுக்கி அழிக்க முனையும் உலகமயமாதல் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட, எமது போராட்டத்தை சனநாயகப்படுத்துவது நிபந்தனையாகும்.

 

புலிகளின்

 

 சிறீலங்கா அரசு பாரிய இழப்பை சந்தித்துள்ளது. அதே நேரம் நோர்வே மற்றும் கனடா பிரதிநிதிகள் மீளவும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளனர். இந்த யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட தடைகள் மற்றும் நெருக்கடிக்கு, வெறுமனே சிறீலங்கா அரசை நேரடியாக குற்றஞ் சாட்டப்பட்ட போதும், உண்மை அப்படி அல்ல என்பதே இங்கு கசப்பான உண்மையாகும்.

 

யுத்தநிறுத்தை சிறீலங்கா அரசு செய்ய மறுத்ததும், பேச்சு வார்த்தையை முன்னெடுக்க தயாரற்ற தன்மையை, வெறும் புலிகள்  - அரசு என்ற மட்டத்தில் ஆராயமுடியாது. இப்படியான ஆய்வுகள், கருத்துகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையே மறைமுகமாக விலை கூவி விற்பதாகும். தமிழ் மக்கள், தாம் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையைப் போராடிப் பெற வேண்டிய வரலாற்றில், இந்த உரிமைப் போராட்டம் ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் சிக்கித் தவிக்கின்றது. உலகமயமாதல் உலகளாவில் தன்னை விரிவாக்கி வருகின்ற இன்றைய நிலையில்; தேசங்கள், தேசியப் போராட்டங்கள் என்பது திட்டவட்டமாக உலகமயமாதலுக்கு எதிராக இருப்பதை, விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நாம் இன்று புரிந்து கொண்டுதான் ஆகவேண்டும்;. ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்ட உலகமயமாதல், உள்ளடக்கத்தில் தேசிய செல்வத்தை சூறையாடி மூலதனத்தை குவிப்பதில் மையங் கொள்கின்றது. இது உலக செல்வங்களை தனது காலடியில் மிதித்தபடிதான், தன் அதிகாரத்தை மக்கள் மேல் நிறுவுகின்றது. இது தேசங்களின் அனைத்து பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் நாசமாக்கி, அதில் தன்னை நிலை நிறுத்துகின்றது.

 

இந்த நிலையில் எமது தேசியவிடுதலைப் போராட்டம், ஏகாதிபத்தியத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு போராட்டமாகவே உள்ளது. சிறீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம்,  உலகமயமாதலின் மூலதனம் உடுருவிப் பாய்வதற்கு தடையாக உள்ள அதேநேரம், உலகமயமாதலை வரவேற்பதில் சாதகமான நிலைமையை உருவாக்கி உள்ளது. இது சிறீலங்கா அரசு மற்றும் புலிகள் உள்ளிட்ட பொது நிலையில், உலகமயமாதலை வரவேற்கும் கொள்கையில் அகலக் கதவை திறந்தே வைத்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் உலகமயமாதல் முதலீட்டை நடத்துவதன் மூலம் தேசிய செல்வத்தை சூறையாடுவதில், யுத்தம் தடையாக இருப்பது ஏகாதிபத்தியத்தின் குறிப்பான கண்ணோட்டமாகவுள்ளது. இதைக் கடந்து இலங்கையின் பொருளாதாரத்தையும், மக்களின் உழைப்பையும் சூறையாடும் வகையில், உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது அவசியமாகியது. இலங்கையின் அமைதியே உலகமயமாதலின் மூலதனத்தின் சூறையாடும் நிபந்தனையாக இருப்பதால், அதுவே யுத்த நிறுத்தமாகவும் பேச்சு வார்த்தையுமாக மாறியது.

 

நோர்வேயின் வேண்டுகோளை ஏற்று புலிகள் செய்த ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் மற்றும் மூன்றாம் தரப்பு பேச்சு வார்த்தை ஏன் தொடர முடியாமல் போனது. அதேநேரம் இருதரப்பு யுத்த நிறுத்தம், மற்றும் இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற முடியாத நிலைக்கு, ஏன் முன்னேற முடியாத காரணம் என்னவாக இருந்தது. இதை ஆராய்கின்ற போது இந்த நிலை ஏற்பட காரணத்தை உலகமயமாதலின் உள் முரண்பாட்டில் கண்டுகொள்ளமுடிகின்றது. உலகமயமாதல் விரிவாக்கத்தில் அமெரிக்காவுக்கும் மற்றைய ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் கூர்மையாகி வரும் உள் முரண்பாட்டினால், இலங்கை நிலைமையை கையாள்வதில் ஏற்பட்ட இழுபறியே, நீண்ட இடைவிடாத தீவிர முயற்சியை சிதைப்பதில் பிரதிபலித்தது. சர்வதேச மூலதன ஆதிக்கத்தை நிறுவும் ஏகாதிபத்திய நலன்கள் கூர்மையாகி வரும் இன்றைய நிலையில், ஏகாதிபத்திய முரண்பாடுகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் தனது கரங்களை பதித்து வருவதையே, அண்மைய நிகழ்வுகள் பறைசாற்றியுள்ளது.

 

நோர்வே தலையீட்டுடன் கூடிய யுத்த நிறுத்தம் மற்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், உலகமயமாதலின் ஒரு சார்பாக இருந்த நிலைமைதான், நீண்ட இந்த முயற்சி தோல்வி கண்டது. நோர்வேயின் மத்தியஸ்தம் அய்ரோப்பிய உலகமயமாதல் நலன்களுடன் நேரடியாக தொடர்புடையதாக இருந்தது. இந்த ஒரே ஒரு நிலையில் மட்டும் தான் இந்த தொடர் முயற்சி திடீரென எதிர்பாராதவிதமாக தடைபடக் காரணமாகியது. அமெரிக்கா இதற்குகெதிரான வகையில் செயற்பட்டு, ஒரு தலைபட்சமான புலிகளின் யுத்த நிறுத்தத்தை முறியடித்து, பேச்சு வார்த்தையை நடத்த தடையாக மாறியது. இவற்றை அக்காலகட்டத்தில் நடந்த பல தொடர்ச்சியான சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையதாக உள்ளதை, நாம் இனம் கண்டு கொள்ளமுடியும். இந்த உலகமயமாதல் முரண்பாட்டை கவனத்தில் கொள்ளாத போராட்டம் என்பது, எமது போராட்டத்தை ஆழமாக பின்னடைய வைக்கும்.

 

18-19.12.2000 அய்ரோப்பிய உதவி வழங்கும் நாடுகளின் இலங்கைக்கான கூட்டத்தில் சந்திரிகா நேரடியாக பங்கு பற்றிய போதும், உதவி வழங்கப்படவில்லை. அய்ரோப்பிய யூனியன் நிதி வழங்குவதற்கு ஒரு நிபந்தனையை முன்வைத்தது. பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் யுத்தத்தை நிறுத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதை நிபந்தனையாக கொண்டே, நிதி வழங்கப்படும் என்று தெளிவாக அறிவித்தது. பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் மற்றும் யுத்தநிறுத்த நிலமையை பொறுத்தே, நிதி கொடுப்பது பற்றி ஆராயப்படும் என்று அறிவித்தனர். முன் கூட்டியே அய்ரோப்பா நோர்வே பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், நிதி மூலம் அரசை நிர்ப்பந்தித்தது. அதே நேரம், புலிகளின் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வைத்தனர். இந்த நிலையில் உலகமயமாதல் முரண்பாட்டின் சிலவற்றை தொகுப்பாக ஆராய்வதன் மூலம் இதை ஆழமாக புரிந்து கொள்ளமுடியும்.

 

18-19.12.2001 அய்ரோப்பிய உதவி வழங்கும் நாடுகளின் இலங்கைக்கான கூட்டத்தில் யுத்தத்தை நிறுத்தவும், பேச்சு வார்த்தையை நடத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் கோரியது. இலங்கையின் அமைதியே விரிவான சூறையாடலை இலங்கையில் செய்ய, அவசியமான உலகமயமாதல் நிபந்தனையாக இருந்தது. அத்துடன் உலகமயமாதலின் அய்ரோப்பிய நலன்களை உறுதி செய்வதில், இந்த நிபந்தனை சார்ந்திருந்தது. அதேநேரம் பேச்சுவார்த்தை மற்றும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், 18.2.2001 இல் அய்ரோப்பிய பாராளுமன்றக் குழு இலங்கை சென்றது. அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் சந்திரிகா அய்ரோப்பிய முன்னணி நாடுகளான Nஐர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியத்துக்குமான பயணம் நடைபெற்றது. அத்துடன் அய்ரோப்பிய நிதியுதவியை மீண்டும் வேண்டிநின்றார். இது மட்டும் தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, மீளவும் யுத்தத்தை தொடர்வதற்கான பாதையாக இருந்தது. இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டே, அய்ரோப்பிய ஏகாதிபத்தியங்கள் தமது நலன்களை அடைய இலங்கை மீதான தனது செல்வாக்கை நேரடியாக பிரயோகித்தன. அதைத் தொடர்ந்து சித்திரை மாதம் 12ம் திகதி சந்திரிகா பிரிட்டன் சென்றார். அதேநேரம் 7.3.2001 இல் பிரஞ்சு துதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி யாழ் சென்று நிலமைகளை அவதானித்தார். மீண்டும் மார்ச் மாதம் சந்திரிகா உதவி வழங்கும் அய்ரோப்பிய  நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், அய்ரோப்பிய நலன்களை உறுதி செய்யும் வகையில் பேச்சு வார்த்தை மற்றும் யுத்த நிறுத்தத்;தில் முன்னேற்றமின்மையால் உதவி வழங்கவில்லை. தொடர்ச்சியாக யுத்த நிறுத்தம் பேச்சு வார்த்தை, அமைதியை நோக்கிய தீர்வு என்ற பாதையில் அய்ரோப்பிய யூனியன் கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் உறுதியாக இருந்தது. இந்த வகையில் பல பத்து முறை நோர்வேயின் பிரிதிநிதி உலகம் முழுக்க பறந்து திரிந்ததுடன், சிறீலங்கா வெளிநாட்டு அமைச்சு மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட, புலிகள் உள்ளிட்ட பலருடன் பேச்சு வார்த்தைகளை நாட்டுக்குள்ளும் வெளியிலும் தொடர்ச்சியாக நடத்தினார். இந்த நிலையில் புலிகளை தமது முடிவுக்குள் கொண்டுவர முடிந்த அளவுக்கு, சிறீலங்கா அரசைக் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. போராட்டக் குழுவை இலகுவாக கையாண்ட அய்ரோப்பா, சிறீலங்கா அரசைக் கொண்டு வர முடியமால் போனமையை, உலகமயமாதலின் உள் முரண்பாட்டில் மட்டுமே நாம் கண்டு கொள்ளமுடியும். சிறீலங்கா அரசின் அனைத்து விதமான மக்கள் விரோதத்துக்கும் தோளோடு தோள் நிற்கும் அமெரிக்காவே, உலகமயமாதலில் தனது நலன்களை சாதிக்க, அய்ரோப்பிய முயற்சிக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் தடை விதித்தது.

 

இதை எப்படி அமெரிக்கா சாதிக்க முடிந்தது? சிறீலங்கா வரவு செலவில், செலவாக 36497 கோடி ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், பற்றக்குறை 11700 கோடியாக உள்ளது. சென்ற வருடம் 8000 கோடியை போருக்காக செலவு செய்த அரசு, இம்முறை 6340 கோடியை ஒதுக்கிய போதும், சென்ற முறை போல் 10000 கோடியை யுத்தத்துக்கு செலவு செய்யத் தயராகவுள்ளது. இவ்வருடம் கடன்படும்தொகை 24700 கோடியாக உள்ளது. சென்ற வருடத்தில் 16900 கோடியாக இருந்த கடன்படும்தொகை 46 சதவீதத்ததால் அதிகரித்துள்ளது. இந்தளவுக்கு அன்னியக் கடனைச் சார்ந்து நாட்டை அடகுவைத்து வாழும் ஒரு நாட்டின் உள்நாட்டு முடிவுகளை, நாட்டை அடகு வைப்பவன் முடிவு எடுப்பதில்லை. அதேபோல் யுத்தத்தைக் கூட அன்னியக் கடனில் நடத்துகின்ற நிலையில், கடன் வழங்குபவர்கள் யுத்தத்தை நிறுத்தக் கோரும் போது, அதை நிறுத்த மறுப்பதை உலகமயமாதலின் ஏகாதிபத்திய முரண்பாட்டில் இனம் கண்டு கொள்ளவேண்டும்;. இந்த இடத்தில் சிறீலங்கா அரசு அய்ரோப்பிய நலன்களைச் சார்ந்த அல்லது அமெரிக்க நலன்களைச் சார்ந்த முடிவுகளை எடுக்கின்றனர் என்பதை பொறுத்தே, யுத்த நிறுத்தம் பேச்சு வார்த்தை, அமைதி என்பன நடை முறை நிகழ்வாகின்றது. சிறீலங்கா அரசு சுயமாக முடிவு எடுக்கும் தன்மை என்பது, முற்றாக கற்பனையானது. அப்படிக் கருதி விமர்சிப்பதும் அரசியல் ரீதியாக தவறானவை.

 

இந்த நிலையில் நோர்வேயின் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் அய்ரோப்பிய நலன்களை கொண்டு இருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு எதிரான மறைமுக செயற்பாட்டிலும,; நேரடி செயற்பாட்டிலும் ஈடுபட்டது. அமெரிக்க நலன்களை பாதுகாக்கவும், தனக்கு சார்பான நாடுகளை நேரடியாக பயன்படுத்தியது. நோர்வேயின் வேண்டுகேளுக்கு இணங்க  இரண்டாவது தடவையாகவும் புலிகள் ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்தை அடுத்து, அமெரிக்காவுகான இலங்கைத் தூதுவர் அஸ்லிவில்ஸ் தொலைக் காட்சி ஒன்றிற்க்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் யுத்த நிறுத்தம் போலியானது என்றும், புலிகள் யுத்த நிறுத்தத்தை தமது சொந்த ஆயுத விரிவாக்க நலன்களை அடைய செய்யப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக அறிவித்தார். உண்மையில் யுத்த நிறுத்தத்தை நோர்வே வற்புறுத்தியதால் செய்தாகவே, புலிகள் ஒத்துக் கொண்டனர். புலிகள் யுத்த நிறுத்தத்தை விரும்பியிருக்கவில்லை. நோர்வேயின் முயற்சியை கொச்சைப்படுத்தும் வகையில், அமெரிக்கா தூதுவர் தனது கருத்தை வெளியிட்டார். நோர்வேயின் வற்புறுத்தலினால் புலிகள் செய்த யுத்த நிறுத்தத்;தை கேலி செய்யம் வகையில், அதை புலிகளின் சுய யுத்த நிறுத்தமாக சித்தரித்து அதை போலியானதாக கூறியதன் மூலம், அமெரிக்கா தனது நலன் சார்ந்து அய்ரோப்பிய உலகமயமாதல் விரிவாக்கத்துக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் பின்னால் புலிகளை நேரடியாக சீண்டும் வகையில், 7.3.2001 இல் அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்தில் நேரடியாகவே உரையாற்றினர். இலங்கைத் தூதுவர் அஸ்லிவில்ஸ் புலிகளிடம் கூறுங்கள் என்று மிரட்டும் தொனியில், புலிகள் தொடர்ந்து போராடுவர்களாயின் அவர்கள் எதையும் அடைய முடியாது என்பதை சொல்லுங்கள் என்றார். அத்துடன் வன்முறையை உடன் கைவிட வேண்டும் என்று எச்சரித்தார். இதன் மூலம் தனது உலக பொலிஸ் பாத்திரத்தை மீண்டும் மிரட்டும் தொனியில் கூறியதன் மூலம்,  எச்சரித்தார். இதன் மூலம் நோர்வேயின் முயற்சிகளை புலிகளை சீண்டுவதன் மூலம், நெருக்கடிக்கு உள்ளாக்கினர். புலிகளின் போராட்டத்தை நேரடியாக அவர்களின் சொந்த போராடும் மண்ணிலேயே மிரட்டிய நிகழ்வு, உலகமயமாதலில் நேரடி ஆக்கிரமிப்பை நடத்தத் தயாராக இருப்பதை கோடிட்டுக் காட்டினர். இது அய்ரோப்பிய நலன்களுக்கு எதிராக இருக்கும் என்பதையே, ஒரு யுத்த நிறுத்தம் மற்றும் மூன்றாம் தரப்பு பேச்சு வார்த்தைக்கும் எதிராக இருக்கும் என்பதை மறைமுகமாக எச்சரித்தார். இதன் தொடர்ச்சியில் 14.3.2001 இல் 21 அமைப்புகளை பிரிட்டன் தடை செய்த நிகழ்வுக்குள், புலிகளையும் உள்ளடக்கியதன் மூலம் அய்ரோப்பிய முயற்சிக்கு நேரடியாகவே முட்டுக்கட்டையிட்டனர். அமெரிக்கா, இந்தியா, மலேசியா என்று மூன்று நாடுகள் புலிகளை தடை செய்த நிலையில், பிரிட்டனின் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு பேச்சு வார்த்தை மற்றும் ஒரு தலைப்பட்சமான புலிகளின் யுத்த நிறுத்தம் உள்ள நிலையில், பிரிட்டனின் தடை என்பது உலகமயமாதலின் உள் நெருக்கடியை மீண்டும் ஒருமுறை கோரமாக வெளிப்படுத்தியது. அய்ரோப்பிய யூனியனுடன் முரண்பட்ட, அமெரிக்கா நலன்களுடன் பங்கு போட்டுக் கொள்ளும் பிரிட்டன், அய்ரோப்பிய விரிவாக்க முயற்சிகளை தடை போடுவதன் மூலம், தனது பங்களிப்பை புலிகளின் தடை மூலம் தெரிவித்தது. அய்ரோப்பிய யூனியன் உலகை தனது உலகமயமாதல் விரிவாக்கத்துக்குள் இலங்கையைச் சூறையாட எடுத்த முயற்சிகளை தடுத்ததன் மூலம், பிரிட்டன் தனது சொந்த மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நலன்களை முதன்மைப்படுத்தி, புலிக்கு நெருக்கடி கொடுத்தது. இதன் மூலம் சிறீலங்கா இனவாத சிங்கள அரசை திருப்தி செய்து ஆதரவை தெரிவித்ததன் மூலம், அய்ரோப்பா பற்றிய ஊசலாட்டத்தை தகர்த்து தனக்கு சார்பாக திருப்பியதன் மூலம், நோர்வேயை மத்தியஸ்தை ஆட்டம் காணவைத்தனர். இந்தத் தடையை இந்தியா ஊடாகவும் அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. சித்திரை மாதம் கதிர்காமர் ஷபுரொன்ட்லைனுகு| வழங்கிய பேட்டியில்; புலிகளை பிரிட்டன் தடைசெய்வதில் இந்தியாவின் பங்களிப்பை ஒத்துக் கொண்டதன் மூலம், அய்ரோப்பிய முயற்சிக்கு இயன்ற அணைத்து தடைகளையும், அமெரிக்கா சார்பு நாடுகள் செய்துள்ளது தெளிவாகின்றது. நோர்வே பிரதிநிதி இந்தியாவுக்கு அதிக பறப்புகளை நடத்திய போதும், இந்தியாவின் எதிர்ப்புகள் வெளிப்படத் தவறவில்லை. அய்ரோப்பிய முயற்சிக்கு பல தடைகளை தொடர்ச்சியாக இந்தியா ஏற்படுத்தியது. முன் கூட்டியே இந்த தடைபற்றிய செய்திகள் வெளியான போதும், இந்தியாவும் நோர்வேயும் இதை மறுத்தது தெரிந்ததே. ஒரு தலைப்பட்சமான புலிகளின் யுத்த நிறுத்தம் முறிந்த பின்பு, மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கிய நோர்வே பிரதிநிதி, 30.4.2001 இல் வெளியட்ட கருத்து இதை உறுதி செய்வதுடன், மிகமுக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்;. நோர்வை பிரதிநிதி இந்தியாவுக்கு, இலங்கை விடையத்தில் எந்த 'வீட்டோ அதிகாரமும்|| இல்லை என்று வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு, உலகமயமாதல் முரண்பாடு ஆழமாகி வெளிப்பட்டது.  புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பாக இதை குழப்பி யுத்தத்தை தொடர ஊக்குவிக்கும் வகையில், இந்தியா 10 கோடி பெறுமதியான ஆயுத மற்றும் உதவிகளை தனாகவே முன்வந்து சிறீலங்காவுக்கு வழங்கியது. இதுபோன்று பாகிஸ்தான் இரண்டு கோடி டொலர் ஆயுத மற்றும் உதவிகளை வழங்கியது. இதன் மூலம் அய்ரோப்பாவுக்கு எதிராக அமெரிக்கா தனது உலகமயமாதல் நலன்களை, தனது கைக்கூலி அரசுகள் மூலம் சாதித்தது. அய்ரோப்பிய நலன்களை அடைப்படையாக கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகளை தடுப்பதில் வெற்றி கண்டது. சிறீலங்கா அரசுக்கு யுத்த வெறியை ஊட்டியதுடன், அதற்குத் தேவையான ஆயுதங்களை தாரைவார்த்ததன் மூலம், யுத்த நிறுத்தத்தை செய்ய மறுத்ததுடன், பேச்சு வார்த்தையை இழுத்தடித்து. அதே நேரம் அய்ரோப்பிய முயற்சியை தடுக்கும் வகையில், உலகவங்கியின் இலங்கைகான பிரதிநிதி திருமதி மரியணா ரொடோவா தலைமையிலான குழு புலிகளைச் சந்தித்தனர். 18.4.2001 இல் அமெரிக்கா கொங்கிரஸின் சர்வதேச உறவுகள் சங்கத்தின் ஆலோசகர் அடொல்ப் பிராங்கோ கொழும்புக்கு சென்றதுடன், பல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்களைச் சந்தித்தார். அதே நேரம் கனடா அரசு தான் பேச்சு வார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக நோர்வேயின் முயற்சிக்கு புறம்பாக தீடிரென அறிவித்தது. ஒருபுறம் நோர்வேயின் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், கனடா அரசு புதிதாக மத்தியஸ்தத்தில் ஈடுபட முன்வந்தது. அதாவது அய்ரோப்பிய யூனியன் போன்று அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் கனடா உலகமயமாதல் மகாநாட்டின் அமெரிக்க முயற்சியை தொடர்ந்தே, இந்த அறிவித்தல் வெளிவருவதும் அவதானத்துக்குரியது. இது அமெரிக்க நலனை அடைப்படையாக கொண்ட உலகமயமாதல் விரிவாக்க நோக்கத்தை வெளிப்படுத்தியது. புலிகளுக்கும், சிறீலங்கா அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை திகதி ஒன்று எந்த நேரமும்  அறிவிக்கப்படும் என்ற ஒரு நிலையில், அமெரிக்கா தலைமையிலான உலகவங்கி இதை முறியடிக்கும் வகையில் திடிரென அரசுக்கு பெரும் தொகை பணத்தை உதவியாக கொடுத்தது. அய்ரோப்பா வழங்க மறுத்த பணத்தை உலக வங்கியூடாக அமெரிக்கா வழங்கியதன் மூலம், சிறீலங்கா அரசின் ஊசலாட்டம் முடிவுக்கு வந்தது. சிறீலங்கா அரசு அறிவித்த இடைக்கால யுத்த நிறுத்தத்தை தொடர்வதில்லை என்று சிறீலங்கா அரசு அறிவித்தது. யுத்த நிறுத்தம் என்பதை சாதித்தியமற்றதாக்கிய சிறீலங்கா அரசு, நோர்வேயின் வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் செய்த ஒருதலைபட்சமான யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, உலகவங்கியின் தீடீர் நிதியுதவி வழிகாட்டியது. நோர்வேயின் மத்தியஸ்துடன் கூடிய அய்ரோப்பிய தலையீட்டை, அமெரிக்கா தற்காலிகமாக தடுத்து நிறுத்தியது. இதன் மூலம் யுத்தம் மீண்டும் கொடூரமாக அரசு தரப்பினால் தொடங்கப்பட்டது. அதே நேரம் பேச்சு வார்த்தையையும், யுத்த நிறுத்தத்தையும், அமைதியையும், அமெரிக்கா நலன் சார்ந்து தொடங்குவதை புதிய நடைமுறையாக்கியுள்ளது. இந்த நிலையில் 30.4.2001 புலிகளை கனடிய தூதுவர் வன்னியில் தீடிரென சந்தித்துள்ளார். அதே நாள் நோர்வே பிரதிநிதி சந்திரிக்காவை சந்தித்தார். அதே நாள் இந்தியா புலிகள் உள்ளிட்ட சிறீலங்கா அரசை யுத்த நிறுத்தம் செய்யும் படி கோரியது. இந்த நிலமை தெளிவுபடவே அய்ரோப்பா அமெரிக்கா தனி நலன்களை சார்ந்து தனித்தனியாக இயங்குவதைக் காட்டுகின்றது. இந்தப் பேச்சு வார்த்தை மற்றும் இலங்கையில் ஏகாதிபத்தியங்கள் முகாமிட்டுள்ள தன்மை, மிகவிரைவில் ஒரு யுத்த நிறுத்தத்தையும் பேச்சு வார்த்தைகான நிலமையையும் கொண்டு வரவுள்ளது. இது முற்று முழுதாக சிறீலங்கா அரசோ, புலிகளோ தீர்மானிக்கும் விடையமாக இனியும் இல்லை. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களுடன் நேரடியாக தொடர்புடையதாக உள்ளது. இது சிலவேளை உலகமயமாதல் நலன்களின் அடிப்படையில் ஆழமாகப் பிளவுபட்டு அல்லது கூட்டாகவும் நடக்கும் வாய்ப்பை தனக்குள் கொண்டே உள்ளது. இனியும் இலங்கையில் ஒரு உள்நாட்டு யுத்தம் என்பது, ஏகாதிபத்திய நலன்களுக்கும் உலகமயமாதலின் மூலதன விரிவாக்கத்துக்கும் தடையாக மாறியுள்ளது. இந்த நிலையில் யுத்த நிறுத்தம் மற்றும் ஏகாதிபத்தியம் சுரண்டுவதற்கான அமைதி, கூட்டான ஏகாதிபத்திய தலையிட்டுடன் நடக்கும் வாய்ப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நிகழ்சி நிரலில் காணப்படுகின்றது. இக்கட்டுரை எழுதிய பின்பாக கதிர்காமர் அமெரிக்கா சென்றதும், அதேநேரம் உடனடியாக இருபகுதியையும் யுத்தத்தை நிறுத்த அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் இந்த அமைதிக்கான முயற்சியில், அமெரிக்கா தலையீடு இருக்கும் என்று தெளிவுபடவே அறிவித்துள்ளது. நோர்வே பிரதிநிதி புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்தை சந்தித்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. தொடர் முயற்சிகள் தொடராக வெளிவருகின்றன.

 

நோர்வேயின் நிர்ப்பந்தத்தால் ஒரு தலைபட்டசமான யுத்த நிறுத்தத்தை புலிகள் நான்கு மாதமாக தொடர்ந்த போதும், அது அரசியல் ரீதியாக என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புலிகளின் வரலாற்றில் ராஜதந்திர ரீதியாக முன்னேறிய ஒரு நிலையை, எப்படி புலிகளால் பேணமுடிந்தது. இங்கு இதன் பரிணாமத்தை புரிந்து கொள்கின்ற போது, புலிகளின் பலவீனம் அரசியல் ரீதியாக மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது தெளிவாகின்றது.

 

நான்கு மாத யுத்த நிறுத்தம் புலிகளுக்கு ஒரு சாதகமான தன்மையை ஏற்படுத்தியது. இது புலிகளின் குறிப்பான அரசியல் ராஜதந்திரத்தில் ஏற்படவில்லை. மாறாக  ஏகாதிபத்திய தரகு கைக்கூலி சிறீலங்கா அரசு உலக மயமாதலின் முரண்பாட்டில் சிக்கி, அதில் ஏற்பட்ட ஊசாலாட்ட அணுகுமுறையினால் மட்டுமே, புலிகளின் போர் நிறுத்தம் புலிகளுக்கு சாதகமான ஒரு தன்மையைக் கொடுத்தது. அத்துடன் நான்கு மாத யுத்த நிறுத்தத்தை  நோர்வேயின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் தொடர்ந்ததே, அரசியல் ரீதியாக தவறானதாகவே உள்ளது. ஒருமாத கால யுத்த நிறுத்தத்தின் பின்பு அதை முடிவுக்கு கொண்டுவராத நிலமை, இராஜதந்திர ரீதியாக புலிகளின் அரசியல் பலவீனமாகவே இருந்துள்ளது. ஏன் இந்த யுத்த நிறுத்தம் தொடர்ந்தது என்ற அரசியல் விளக்கத்துக்கு பதிலளிக்க முடியாது. நான்கு மாத யுத்த நிறுத்தம் புலிகளுக்கு ஒரு சாதகமான அரசியல் அம்சமாக மாறியது என்பது, புலிகளின் சொந்த அரசியலால் அல்ல. மாறாக உலகமயமாதலுக்குள் இருந்த முரண்பட்டால் இது ஏற்பட்டது. ஆனால் எதிர் காலத்தில் அப்படி இருக்காது என்பதை, இதன் ஊடாக அவதானத்துக்கு உள்ளாக்க முடிகின்றது. இதை இன்றுகூட புலிகள் புரிந்து கொள்ளமுடியவில்லை. சிறீலங்கா அரசு ஒரு யுத்த நிறுத்தத்தை செய்திருப்பின், நிலமை தலைகீழாகியிருக்கும்;. சிறீலங்கா அரசு, அமெரிக்க அய்ரோப்பிய முரண்பாட்டில் இன்று அமெரிக்கா சார்பு நிலையை பூர்த்திசெய்ததுள்ளது. சிறீலங்கா அரசு உலகமயமாதலில் தனது கைக்கூலித் தனத்தை பூர்த்தி செய்து தனது விசுவாசத்தை தெரிவித்த நிலையில்தான், அரசு புலிகளிடம் இராஜதந்திர ரீதியாக தோல்வியைச் சந்தித்தது.



ஆனால் சர்வதேச ரீதியாக உள்ள முரண்பாட்டில் தெளிவான ஒரு நிலையை எடுத்தபடி, மறுபடியும் புதிதாக சிறீலங்கா அரசு இராஜதந்திர ரீதியான பலப்பரீட்சையில் ஈடுபடத் தயாரகின்றது. அதே நேரம் புலிகள் இந்த யுத்த நிறுத்தத்தை அரசியல் மற்றும் இரஜதந்திர ரீதியாக, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை உயர்த்துவதில் பயன்படுத்துவதில் சரியாக கையாண்டர்களா எனின், இல்லை என்பதே தெளிவான பதிலாகும்.

 

தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை வென்றெடுக்கும் பாதை என்பது, எந்தளவுக்கு இராணுவ ரீதியாக யுத்தத்தை சரியாக தொடர்வது முக்கியத்துவமுடையதோ அந்தளவுக்கு அரசியலிலும்  முக்கியத்துவமுடையது. இராணுவரீதியாக பயிற்சி, உளவு, ஆயுத சேகரிப்பு, யுத்ததந்திர வடிவங்கள் என்று விரிவான கல்வியும் பயிற்சியும் எந்தளவுக்கு முக்கியமானதோ அதே போன்று, அரசியலிலும் சுயநிர்ணயத்தை விரிவாக்கி விளக்கி அணிதிரட்டுவதும் அவசியமானதாகும். அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அவசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன, தேசியத்தின் உள்ளடக்கம் என்ன, இன்று உலகமயமாதலின் விரிவாக்கம் எப்படி தேசியத்துக்கு எதிராக வளர்ச்சி பெறுகின்றது, ஏகாதிபத்தியம் எப்படி போராட்டத்தை அழிக்க முனைகின்றது என்ற விரிவான தளத்தில் அரசியல் கல்வி போதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது சொந்த அணிகளுக்கும், மக்களுக்கும் இதன் மீதான தெளிவை புகட்டுவதன் ஊடாக நடைமுறையில் மக்களை செயலில் இறங்க முன்தள்ளியிருக்க வேண்டும்;. இதில் இருந்து சர்வதேச ரீதியாக பிரச்சாரத்தை உந்தித் தள்ளியிருக்க வேண்டும்;. இந்த சர்வதேச பிரச்சாரம் என்பது அரசுகளிடம் மட்டும் வேண்டுகோள் விடுவதில்ல, மனுக்கள் கொடுப்பதில்லை. மாறாக சர்வதேச மக்களிடம் சுயநிர்ணய உள்ளடகத்தை விரிவாக்கி, இதற்கு எதிராக அவர்களின் சொந்த அரசுகள் எப்படி அடக்கு முறையை கட்டவிழ்த்து விட தயாராவதை அம்பலம் செய்து, ஆதாரவு தேடியிருக்க வேண்டும்.

 

இன்று உலகம் ஒரே குடையின் கீழ் உலகமயமாதல் எல்லைக்குள் விரிவாகி வருவதை இனம் கண்டு கொள்ள முடியாத தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, தேசிய இன உள்ளடக்கத்தையே புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டும்;. உலகமயமாதல் தேசிய எல்லை கடந்து தேசிய பொருளாதாரத்தை சிதைத்து, மொழியை அழித்து, பண்பாட்டுக் கலாச்சார கூறுகளை சிதைத்து எல்லை கடந்த ஆட்சிகளை உருவாக்கி வருகின்றது. இந்த நிலையில் எமது தேசியம் எதை பாதுகாக்க விரும்புகின்றது. எதை விடுவிக்க எதைப் பாதுகாக்க விரும்புகின்றது. நாம் சுயநிர்ணயம் என்று எதைக் கருதுகின்றோம்;. இந்தக் கேள்விக்கு எல்லாம் பதிலாளிக்காத போராட்டம் எதை பெற்றுத்தரும்;. சந்திரிக்கா என்ற நபரையோ, சந்திரிகாவைச் சுற்றியுள்ள அரசையோ, சிங்கள இனவெறி இயந்திரத்தை மட்டும் எதிரியாக காண்பதன் மூலம், இவர்களிடம் இருந்து எதை மீட்க விரும்புகின்றோம்;. சந்திரிகாவும், அவரின் அரசும், அரசை சுற்றியுள்ள இனவெறி இயந்திரமும் தமிழ் மக்களுக்கு எதிராக தம்மை நிலைநிறுத்தி சிங்கள தேசியத்தை பாதுகாக்கவில்லை. மாறாக அவர்கள் தமிழீழம் உள்ளிட்ட இலங்கையை, ஏகாதிபத்திய உலகமயமாதலிடம் விற்றுவிட்ட நிலையில், எமது போராட்டம் சிங்கள இனவாத அரசிடமிருந்து எதை மீட்டு எடுக்கவுள்ளது.

 

புலிகள் இராணுவ ரீதியாக வரையறை செய்யும் எல்லைக்குள் ஒரு தனி அரசை தமிழனின் தலைமையில் நிறுவுவதன் மூலம், எந்த தேசிய அபிலசைகளை நாம் பெற்றுக் கொள்ள விரும்புகின்றோம்;. சிறீலங்கா அரசு போன்றோ அல்லது உலகில் உள்ள மூன்றாம் உலக ஏகாதிபத்திய கைகூலி அரசுகள் போன்று, தேசியத்தை உலகமயமாதலிடம் விற்றுவிடும் அரசுகளையா? நாம் கோரிப் போராடப் போகின்றோம்;! அதுவா எமது தமிழீழத் தாகம். இதையா தமிழ் மக்கள் கோருகின்றனர். இதுவா தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கை.  சுயநிர்ணயக் கோரிக்கை பற்றிய புலிகளின் விரிந்த பார்வை இன்மையே, தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டத்தை வளர்தெடுப்பதிலும், சர்வதேச ரீதியாக மக்களின் ஆதரவை திரட்டுவதிலும் பிரதான தடையாக உள்ளது. இதனால் இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாத தடையாக மாறியுள்ளது.

 

உலகமயமாதல் உலகளவில் அனைத்துத் தேசியக் கூறுகளையும் ஈவிரக்கமின்றி அழிக்கின்றது. இது பண்பாடு கலாச்சாரத்தையும் பொருளாதார ரீதியாக அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கின்றது. இதற்கு எதிரான போராட்டம் உலகளவில் வளர்ச்சி பெறுகின்றது. உலகமயமாதலுக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்திய நாடுகளிலேயே எழுச்சி பெற்று வருகின்ற நிலையில், அப் போராட்டத்துடன் ஏன் எமது போராட்டத்தை அடையாளம் காணக்கூடாது, காட்டக்கூடாது. ஏன் அவர்களின் போராட்டத்துடன் எம்மை இணைத்துக் கொள்ளக்கூடாது. சிறீலங்கா அரசு கூட உலகமயமாதலின் விரிவாக்கத்தில் கைக் கூலியாக செயற்படுகின்றது. இந்த நிலையில் உலகமயமாதலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டம்; சிறீலங்கா அரசுக்கு எதிரானது அல்லவா. பொதுவான சர்வதேசியப் போராட்டத்தில் எம்மை இனைத்துக் கொண்டு, குறிப்பான தமிழீழப் போராட்டத்தை இனைப்;பதன் ஊடாக, அவர்களையும் ஏன் இனைத்துக் கொள்ளக்கூடாது.

 

உலகமயமாதலை விரிவாக்கும் எகாதிபத்திய அரசுகள் சரி, சிறீலங்கா போன்ற கைக் கூலி அரசுகள் சரி, எமது போராட்டத்துக்கு மக்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு உதவுமா? உதவும் எந்த அரசையாவது அப்படிக் குறிப்பிட்டுக் காட்டமுடியுமா? உலக அரசுகள் அனைத்தும் சிறீலங்கா அரசு சார்பாக, புலிகளுக்கு எதிராகவும், மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் எதிராக உள்ள நிலையில், அவர்களை எதிர்த்துப் போராடவேண்டாமா? இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் அந்த அரசுகளை எதிர்க்கும் அந்த மக்களுடன் எம்மை இனம் காட்டி, அவர்களுடன் தோளோடு தோள் நிற்க வேண்டாமா? எமது போராட்டத்தை எதிர்க்கும், அழிக்க முனையும், ஆக்கிரமிக்க முனையும் அரசுகளை எதிர்க்காது நீடிப்பது இராஜதந்திரம் எனின், அந்த அரசுகளை எதிர்த்துப் போராடும் மக்களுடன் என்ன நிலையை எமது போராட்டம் கையாளுகின்றது. துரோகத்தை அல்லவா கையாளுகின்றது. இந்த துரோக நிலையை எல்லா உலக நாடுகளிலும் உள்ள போராடும் மக்கள் இராஜதந்திரம் என்று கூறி கையாளின், எமது போராட்டத்துக்கு யாருடைய ஆதாரவையும் பெறமுடியாது. இது போல் உலகில் போராடும் மக்கள் தனித்து தாம் மட்டும் போராட வேண்டுமா? இதுதான் போராடும் அரசியலில் இராஜதந்திரமா? (உலக) மக்களின் எதிரிகளை, எமது மக்களுக்கும் இனம் காட்ட மறுப்பது துரோகமல்லவா!

 

உலகளவில் அனைத்து அரசுகளும் தமக்கிடையிலான முரண்பாடுகளைக் கடந்து புலிகளையும், தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும் அழித் தொழிப்பதில், ஒரே கரமாகி வருகின்றது. அவர்கள் தனித்து நின்று இராணுவ ரீதியாக வெற்றி பெற்றுவிட முடியும் என்பது கற்பனையானது. உலகம் அனைத்தும் ஒன்றாக மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் போது, நியாமான போராட்டங்கள்; கூட உலகமக்களுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டு அழித்தொழிப்பது உலக சனநாயகமாகவுள்ளது.. அமெரிக்கா வியட்நாம் ஆக்கிரமிப்பின் போது, 20 லட்சம் வியட்நாமியரை ஈவிரக்கமின்றி கொன்று ஒழித்தது. ஆனால் எந்த சர்வதேச நீதி மன்றமோ, சனநாயக வேடம் போடும் எந்த முதுகு எலும்பற்ற மனிதர்களோ இதை எதிர்த்து கேட்டதுமில்லை, எதிர்த்ததுமில்லை. ஆனால் வியட்நாம் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்த அதேநேரம் உலக எதிரியை தெளிவாக அடையாளம் காட்டிய நிலையில், உலகமக்கள் எல்லா நாடுகளிலும் அவர்களுக்காக போராடினார்கள். சிறைகள் சென்றது மட்டுமின்றி தமது சொந்த அரசை எதிர்த்த போராட்டத்தில் தம் உயிரையும் கூட வியட்நாம் மக்களுக்காக இழந்தனர். வியட்நாமை விட்டு  அமெரிக்காவை ஒட வைத்ததும், அமெரிக்காவின் கொலை வெறியாட்டத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியது வியாட்நாம் மக்கள் அல்ல. மாறாக ஒவ்வொரு நாட்டிலும் அந்த அரசுகளை எதிர்த்து போரிட்ட மக்கள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறின், எமது போராட்ட தியாகங்கள் அர்த்தமற்று போவதுடன், எதிர்கால உலகமயமாதல் ஆக்கிரமிப்பு அழித்தொழிப்புகளைக் கூட எம்மால் உலகுக்கு சொல்ல முடியாத பரிதாபம் நிகழும்;. எமது போராட்டம் உலகமயமாதலுக்கு எதிரான அரசியல் வழிகளில் ஒன்று இணைவதும், இணைப்பதும் அவசியமான உலக வரலாற்று நிபந்தனையாகும்;. இதை மறுத்தால், போராட்டம் ஏகாதிபத்தியத்தால் இலகுவாக அழித் தொழிக்கப்படவும் அல்லது விலைபேசி கைக் கூலியாக்கிவிடுவதும் சமூக யதார்த்தமாகும்;. இதை தனிமனித விருப்பங்கள் திர்மானிப்பதில்;லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.



நோர்வே வேண்டுகோளுக்கிணங்கிய புலிகளின் நான்கு மாத யுத்த நிறுத்தம், இதையே மீளவும் எமக்கு காட்டுகின்றது. யுத்த நிறுத்தத்தை அரசியல் ரீதியாக தாமாகவே புலிகள் செய்திருப்பின் அது இதில் இருந்து வேறுபட்டவை. நோர்வேயின் வேண்டு கோள்கள் மற்றும் நிர்ப்பந்தங்கள் கூட அரசியல் ரீதியாக கையாள வேண்டி வருவது இயற்கைதான்;. ஆனால் எந்தவிதமான அரசியல் இராஜதந்திரமற்ற வகையில் யுத்த நிறுத்தத்தை நீடிப்பதும், நீடித்ததும் என்பது, புலிகள் மீது படர்ந்துள்ள உலகமயமாதலின் கொடூரமான கரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதை புலிகள் புரிந்து கொள்ளத் தவறுவதே இங்கு விமர்சனத்துக்குரியதாக உள்ளது. புலிகளின் சொந்த அணிகளே என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியாத சூனியத்தில் நின்றார்கள்;. தளத்தில் இருந்து புலிகள் ஒரு தலைபட்ச யுத்த நிறுத்தத்தை தொடர்வதில்லை  என வெளியிட்ட குறிப்பிலும், சொந்த அணிகளிடையே யுத்த நிறுத்தத்தினால் ஏற்படும் ஊசலாட்டத்தை குறிப்பிடத் தவறவி;லை. ஆனால் இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படவில்லை. மாறாக யுத்த நிறுத்தத்தை நீடிக்க முடியாத ஒரு காரணமாகவே இது வைக்கப்பட்டது. யுத்த சூழலுக்கு புறம்பாக, யுத்தமற்ற சூழலில் அமைப்பில் ஊசலாட்டம,; தளம்பல் ஏன் நிகழ்கின்றது. இங்குதான் அரசியலின் முக்கியத்துவம் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை மீண்டும் ஒரு முறை வரலாறு கோடிட்டு காட்டுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஏகாதிபத்தியங்கள் அழித்தொழிக்க முனைகின்ற நிலையில், இதை எதிர்கொண்டு போராடவேண்டிய வரலாற்றுக் கடமையை, வெறும் இராணுவ வாதத்துக்குள் மாத்திரம் சாதிக்க முடியாது. இராணுவ வாதம் என்பது அரசியலில் இருந்து மனிதனின் சமூக உணர்வுகளை பிரிக்கின்றது. இது இராணுவத் தாக்குதல், ஆயுதங்கள் என்ற எல்லைக்கு அப்பால் அரசியலில் சூனியமாகின்றது. இதனால் நடைமுறையில் இராணுவ நடவடிக்கையற்ற நிலையில், அவ்வியக்கத்தையே கைவிடுவதும், போராட்ட சிந்தனையை இழப்பதும் ஒரு வடிவமாகின்றது. இராணுவ நடவடிக்கை அற்ற எல்லா நிலையிலும், புலிகளை இது மட்டுமே அரசியல் அநாதையாக்கிவிடும்;. ஒரு சிறந்த மக்கள் இராணுவத்தை உலகமயமாதலுக்கு எதிராக நிறுத்த வேண்டுமாயின், உலகமயமாதலுக்கு எதிரான அரசியல் புரிதல் மற்றும் நடைமுறையும் அடிப்படையானதும் நிபந்தனையானதுமாகும்;. இதன் மீதான தெளிவான உறுதியான சமூகப் பார்வையே, எந்த இராணுவ ஆக்கிரமிப்பையும், எந்த யுத்த நிறுத்தங்களையும், எந்த நெருக்கடிகளையும் தகர்த்துவிடும்.

 

இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடயமாக பிரிட்டன் எகாதிபத்தியம் 14.3.2001இல், புலிகளை தடை செய்யும் பட்டியலில் இணைத்தது. இதைத் தொடர்ந்து புலிகள் இதை எப்படி எதிர் கொண்டனர் என்பதே. புலிகளின் அறிக்கையில் 'ஆங்கில - தமிழ் உறவுகளில் ஒரு கறுப்பு நாளாகவும் இது அமைந்துவிட்டது|| எனப் பிரகடணம் செய்தனர். பிரிட்டன் ; ஏகாதிபத்திய தடை குறித்த பாலசிங்கம் வழங்கிய பேட்டியில் ஷஷ... பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் பிரித்தானிய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை இணைத்துக் கொண்டது குறித்து உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஆத்திரமும் கவலையும் கொண்டுள்ளனர்.|| என்று குறிப்பிடுகின்றார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையான எரிமலை மார்ச் 2001 இதழில், பிரிட்டன் ; தடை ஷஷதமிழ் மக்களுக்கு ஒரளவு ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாகவே இருந்தது. ஆனால், அது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாக இருந்தது என்று சொல்வதற்கில்லை|| என்று புலிகள் குறிப்பிடுகின்றனர். எமது முன்னைய கொலனிய வாதிகளாகவும், உலகை அடக்கியாளும் ஏகாதிபத்தியவாதிகளாகவும் திகளும் பிரிட்டன் இன்று உலகமயமாதலை விரிவாக்கும் நாடுகளில் முன்னணி ஆக்கிரமிப்பு நாடாக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அண்மைய உலகளாவிய பல ஆக்கிரமிப்புகளில், பல மனித உரிமை மீறல்களையே சனநாயகமாக காட்டினர். இதன் மூலம் உலகை உலகமயமாதலுக்கு அடிமைப்படுத்தும் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் தடையை, போராடும் மக்களாகிய நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்;. இது ஒரு கறுப்பு நாளா! இல்லை ஒருக்காலும் இல்லை. இது ஒரு கவலைக்குரிய நாளா! ஒருக்காலும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கும் நாளா! ஒருக்காலும் இல்லை. மாறாக ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மையை, மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றிய நாள் அல்லவா! இந்த உலக ஆக்கிரமிப்பின் பிரகடனத்தை பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமிழ் மக்களுக்கும,; உலக மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை பறைசாற்றிய போது, அதை எதிர்த்துப் போராட அழைப்பு விட்டிருக்க வேண்டும்;. இதை விட்டவிட்டு கவலைப்படுவது என்பது, ஏமாற்றம் அளிப்பது என்பதும், கறுப்பு நாளாகி விட்டது என்பதும் தேசிய அரசியல் உள்ளடகத்தை கைவிடுவதாகும்;. இது மக்களின் போராட்ட உணர்வுகளையும், சுயநிர்ணயக் கோரிக்கை உள்ளடக்கிய தேசிய விடுதலைக்கான தியாகங்கள், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பண்பாட்டு கலாச்சார எல்லைக்குள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பி விடுகின்றது. எதிரியை நாம் மீண்டும் தெளிவாக புரிந்து கொண்டதற்கும், புரிய வைத்தற்காக, அதை அவர்கள் நிர்வாணப்படுத்தியதன் ஊடாக, மீண்டும் தமிழ் மக்களுக்கு ஏகாதிபத்திய தன்மையை உணர்த்தியதற்காகவும் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்;. இந்த ஏகாதிபத்திய தடையை எதிர்த்து ஆயுதம் எந்திப் போராட அழைப்பு விட்டிருக்கவேண்டும்; பிரிட்டன் சனநாயகம் பற்றி தமிழ் மக்களின் மயக்கத்தை, தடை மூலம் தெளிவாக்கியதற்கு  நன்றி தெரிவித்திருக்க வேண்டும். இதை அரசியல் ரீதியாக மக்கள் முன் எடுத்துச் சென்று, ஆயிரமாயிரமாக அணிதிரள அறை கூவியிருக்க வேண்டும்; ஆனால் மாறாக கறுப்பு நாளகவும், கவலைப்படுவதாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் அறிக்கை விட்டு இது அதிர்ச்சி அளிக்கவில்லை என்று கூறுவதை விடுத்து, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையில் மூழ்கிவிடுவது என்பது, எமது தேசியத்தின் உள்ளடகத்தை சரியாக முன்னெடுக்க தவறியதாகும்;. இந்தத் தடை மீண்டும் ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையின், புதிய ஆக்கிரமிப்பு வடிவம் தான் என்பதை விளக்கியிருக்கவேண்டும். இதற்கு எதிராக உலகு எங்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் புலிகள் இதை செய்ய மறுப்பது என்பது, இலங்கையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு மறைமுகமாக துனைபோவதாகும்;. ஆக்கிரமிப்பு ஏற்படும் போது, அதை மக்கள் அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் வலிமை அற்றவர்களாக்கி விடுவது என்பது, அரசியலற்ற எல்லா நிலையிலும் ஒரு பொதுப்பண்பாகும்.

 

உலகமயமாதலுக்கு எதிரான போராட்டம் உலகளாவிய நிகழ்ச்சி நிரலாக இருக்கின்ற நிலையில், அதற்கு எதிரான போராட்டங்கள் உலகு எங்கும் நடக்கின்றன. இந்த நிலையில் வருடாவருடம் புலிகள் ஜெனிவாவை நோக்கி நடத்தும் ஊர்வலத்தை, எந்த வகையில் அழைப்புவிடுகின்றனர் என ஆராயின், அது விசனத்துக்குரியதாகவே உள்ளது. 2.4.2001 இல் புலிகள் நடத்திய ஊர்வலத்தை ||அமைதிப் பேரணி|| என்ற அறிவித்தல் ஊடாகவே  அழைப்பு விடுத்து நடத்தினர். ஏன் ஒரு ஊர்வலத்தை அமைதிப் பேரணி என்ற மீண்டும் மீண்டும் அறிவிக்க வேண்டியுள்ளது. ஏன் ஒரு ஆர்பாட்ட ஊர்வலத்தை நடத்தக் கூடாது. ஒரு ஊர்வலம் அமைதியானதா அல்லது ஆர்ப்பாட்டமானதா என்பது, எதிரி ஊர்வலம் மீது கையாளப்படும் அணுகு முறையிலேயே தங்கியள்ளதே ஒழிய, அதை வலிந்து முன் கூட்டியே கட்டுப்படுத்தி திணிப்பது அல்ல. தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டம் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகி வரும் இன்றைய நிலையில், போராட்டம் என்பது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆர்ப்பட்டமாக இருக்க வேண்டும்;. இது அரசியலில் இருந்து அன்னியமான வன்முறையில் அல்ல, தமிழ் மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமையவேண்டும். அத்துடன் நடக்கும் ஊர்வலங்களில் வைக்கும் கோசங்கள், தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடையதாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். அண்மையில் பிரான்சில் நடந்த மேதின ஊர்வலத்தில் கூட, தமிழ் மக்களின் உணர்ச்சிகளை அவர்களின் அரசியல் கோரிக்கைகளை  உள்ளடக்கிய கோசங்களை வெளிப்படுத்தவில்லை.

 

ஊர்வலங்கள் என்பது தமிழ் மக்களின் நியாயமான போராட்டமான சுயநிர்ணய கோரிக்கைகளை முன்னிறுத்தி அதை கோசமாக்க வேண்டும்;. எமது தேசிய பொருளாதாரத்தை ஏகாதிபத்தியம் சிறிலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஆக்கிரமிப்பதை எதிர்த்தும், எமது கலாச்சார பண்பாடுகள் அன்னிய ஊடுருவல் மூலம் சிதைக்கப்படுவதை எதிர்த்தும், சிங்கள இனவெறி அரசு ஏகாதிபத்தியத்தின் துணையுடன் தமிழ் மக்களின் மீது நடத்தும் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், இதற்கு சர்வதேச நாடுகள் எந்த வகையில் துனை போகின்றன என்பதை அம்பலம் செய்து, ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும். இதை போராடும் மக்கள் மற்றும் இயக்கம் செய்யத் தவறுகின்ற போது, ஆக்கிரமிப்புகள் மற்றும் சமூகச் சிதைவுகள் தேசிய சனநாயகக் கோரிக்கைளைக் கூட இல்லாதாக்கிவிடும்;. தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை பாதுகாக்கின்ற சர்வதேசியப் போராட்டமே, புலிகளையும், புலித் தலைவர்களையும் கூட பாதுகாக்கும். இதை விடுத்த வெற்றுக் கோசங்கள் அல்ல. சரியான அரசியல் கோசங்கள் ஒட்டு மொத்தமாகவே போராட்டத்தையும் அதன் தலைமையையும் பாதுகாக்கும். இல்லாத வரை அப் போராட்டம் தோற்கடிக்கப்படுவதன் மூலம், மக்களின் உரிமைப் போராட்டமும், அதைச் சரியாக தலைமை தாங்கத் தவறிய இயக்கமும், அதன் தலைமையும் அழிக்கப்படும். எந்த நேரத்திலும் உலக ஆக்கிரமிப்பு இலங்கையில் நிகழ்கின்ற ஒரு சூழல் நிலவுகின்ற இன்றைய நிலையில், இது மேலும் ஆழமாக முக்கியத்துவமுடையானவாகும்.

 

 எமது போராட்டம் இழைத்த தவறுகள் தான், இன்று உலகம் தழுவிய ஆக்கிரமிப்பின் எல்லை வரை கொண்டு வந்துள்ளது.  உதாரணமாக சிறீலங்கா இராணுவத்தில் இருந்து 25000 பேர் ஒடியுள்ளதாக சிறீலங்கா அரசே ஒத்துக் கொள்கின்ற போது, எமக்கு சில உண்மைகள் பளிச்சென்று வெளிப்படுத்துகின்றது. சிறீலங்கா இராணுவத்தின் நாலில் ஒன்று அல்லது ஐந்தில் ஒரு பகுதி இராணுவம் ஒடியுள்ளது. இருந்தும் சிறீலங்கா இராணுவம் தொடர்ந்தும் யுத்தம் செய்ய முடிகின்றது. இங்கு தான், புலிகளின் அரசியல் தவறுகள் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரத் தடையாக இருந்தைக் காட்டுகின்றது. 25000 இராணுவம் ஒடிய போதும், ஒடிச் சென்றவர்கள் தமது பின்னணிப் பிரதேசத்துக்குள் தப்பிச் சென்றதே ஒழிய, புலிகளின் முன்னணி பிரதேசத்தில் சரணடையவில்லை. புலிகள் எதிரி பற்றி சரியான அனுகுமுறையைக் கையாண்டு, எதிரியை யுத்தத்தில் வெல்வதும், மறுபுறம் சரணடைய வைப்பதை ஒரு அனுகுமுறையாக கைக்கொண்டிருப்பின், இராணுவம் முற்றாக சரணடைந்தோ அல்லது பெரும் பகுதி சரணடைந்தோ இருக்கும். சிறீலங்கா அரசு இன்று போல் ஒரு உறுதியான யுத்தத்தை ஒருக்காலும் செய்திருக்கவே முடியாது. எதிரிகளை பற்றிய புலிகளின் மதிப்பீடு, அதிகமான எதிரிகளை தொடர்ச்சியாக உருவாக்கியது மட்டுமின்றி உற்பத்தி செய்தது. தம்முடன் உடன்பாடு அற்றவர்களை அல்லது அடிபணிய மறுத்தவர்களை எல்லாம் எதிரியாக காட்டி நடத்தும் மிகமோசமான அழித் தொழிப்பு, எதிரிகளைச் சார்ந்தும், தனியாகவும் அதிக எதிரிகளையே எமது விடுதலைப் போராட்டம் உருவாக்கியுள்ளது. இந்தத் தவறு தமிழ் மக்களின் போராட்டத்தை ஆழமாக சிதைத்து பின்தள்ளியுள்ளது. அரசியல் ரீதியாக ஒரே கோட்பாடு கொண்ட குழுக்களை தனது ஒரு பகுதியாக இணைக்கும் கனநாயக பண்புக்கு பதில், அழித் தொழிப்பு அவர்களை எதிர் நிலைக்கு தள்ளியது. இது போன்ற நடவடிக்கைகள் எமது போராட்டத்தை அதாள பாதாளத்தில் சிதைத்துள்ளது. தமிழ் மக்களின் போராடும் சுதந்திரத்தை அங்கீகரித்து அவர்களையும் இனைத்துக் கொள்ளும் போராட்டம் கையாளப்படாத வரை, உலக ஆக்கிரமிப்புகள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அழித்துவிடுவது தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாகிவிடும்;. உலகளவில் இந்த ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியங்களால் திட்டமிடப்படும் போது, குறைந்த பட்சம் அந்த ஆக்கிரமிப்பை வெளிக் கொண்டு வருவதற்கு புலிகளை விட்டால் எந்த அமைப்புகளும், புலிகளுக்கு சார்பாக இல்லை. தமிழ் மக்களிடையே கூட, தமிழ் மக்களின் போராட்டத்தை வெளிக் கொண்டுவருவதற்கு எந்த சுதந்திரமான அமைப்புகளும், புலிகளுக்கு வெளியில் இல்லை. இதுபோல் உலகளாவிய மக்கள் சார்ந்த எந்த அமைப்புகளும், புலிகளின் நிலையை வெளிக் கொண்டு வரும் நிலையில் இன்று இல்லை. புலிகள் தாங்களும்;, தாம் மட்டும் என்ற குறுகிய எல்லைக்குள் இருக்கின்றனர். இதற்கு வெளியில் சனநாயக மறுப்பை அடிப்டையாக கொண்டுள்ளனர். இது உலக ஆக்கிரமிப்புகளை குறைந்த பட்சம் வெளிக் கொண்டு வர முடியாத அவலம் ஏற்படும். இதனால் எமது நியாயமான உரிமைப் போராட்டத்தை அழிப்பதை சனநாயகப்படுத்திவிடும்;. இதை நாம் கவனத்தில் கொண்டு போராட்டத்தை சனநாயகப்படுத்தி, உலகமயமாதல் ஆக்கிரமிப்புக்கு எதிராக எம்மை ஆயுதபாணியாக்கி, உலகமக்களின் பொதுப் போராட்டத்துடன் கை கொடுக்க வேண்டிய வரலாற்றுப் பணி, போராடும் அனைத்து சக்திகள் முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும்.

ஒருதலைபட்ச யுத்த நிறுத்தமும், நோர்வேயின் சமாதனப் பேச்சு வார்த்தையும் எதிர்பாராத விதமாக உலகமயமாதல் உள் முரண்பாட்டால் நெருக்கடிக்குள்ளானது. இக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நிலையில் யுத்தம் மீள ஊக்கிரமாகிய நிலையில்,

Last Updated on Friday, 18 April 2008 19:09