Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தேசவிடுதலைப்போராட்டமும் தேசிய சக்திகளும்

  • PDF

தேசவிடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலைமை மீண்டும் மீண்டும் எம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. அதன் தொடர்ச்சியாக 3வது பாதை ஒன்றை அமைக்கும் தேவை எம்மெல்லோர் முன்னுள்ளது. இதன் தேவையுடன் எழுந்ததே தேசியசக்திகள் பற்றிய விவாதமும். இவ் விவாதத்தின் ஆரம்பத்தில் புலிகளின் வர்க்க மதிப்பீட்டை ஆராய முற்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக இவ் விவாதம் 3வது பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பல விடயங்களை தொட்டு நிற்கிறது. இவ் விவாதத்தின் தொடர்ச்சியும், ஆரோக்கியமான போக்கும் ஒரு போராட்டத்தின் முன் நிபந்தனையாகவுள்ளது.

 

தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தில் மனிதம், தூண்டில், உயிர்ப்பு, சமர் என்பன தங்கள் கருத்துக்களை கூற முனைந்துள்ளனர். இக் கருத்து விவாதங்களை இருவகையாக பிரிக்கலாம்.

(1) சமர், தூண்டில், உயிர்ப்பு விவாதங்கள் ஆரோக்கியமான வகையில் இணைக்கப்போக்கை நோக்கிய வகையில் அமைந்துள்ளது.

(2) மனிதம் சஞ்சிகையின் விவாதம் இதற்கு எதிர்மறையாக அடிப்படையையே திரிபுவாதத்துக்குள் இட்டுச் செல்லும் வகையில் தம் விவாதத்தை முன்னெடுத்தனர்.

நாம் இச் சஞ்சிகைகளில் வெளிவந்த விவாதத்தின் தொடர்ச்சியாக விவாதிக்க முற்படுகிறோம். அவ் வகையில் மனிதம் இதழ் 15 இல் வெளிவந்த புலிகள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகளுமல்ல என்ற கட்டுரையையும், மனிதம் இதழ் 16 இல் உயிர்ப்பு இதழ் பற்றிய விமர்சனத்தை முதலிலும், அதன் பின் தூண்டில் இதழ்கள் 41-48-49 இல் வெளிவந்த புலிகள் தேசிய சக்திகள் என்ற கட்டுரையை அடுத்ததாகவும், உயிர்ப்பு சஞ்சிகையில் தேசியசக்திகள் பற்றி சில பிரச்சனைகள் என்ற கட்டுரையை இறுதியாகவும் விமர்சனத்திற்குள்ளாக்குகின்றோம்.

மனிதம் 15 இல் தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தின் மீது விமர்சனம்

"மனிதம் இதழ் 15 இல் விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளா? இல்லையா? என்பது பற்றி இப்போது புரட்சிகரமான சக்திகள் மத்தியில் ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? இந்த விவாதத்தின் மூலம் நாம் அடையப்போகும் பயன் என்ன? என்று விளங்கவில்லை. எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மைகளை கடினமாக சொற்பதங்களை பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெறுகின்றன. "

இப்படியாக மனிதம் சஞ்சிகை தனது கட்டுரையை தொடங்குகின்றது. இத் தொடக்கத்தில் புரட்சிகரமான சக்திகள் மத்தியில் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? ஒன்று இவர்கள் புரட்சிகரமானவர்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படியாயின் பிந்திய மனிதத்தின் விவாதம் எதற்காக? அதாவது ஏன் இந்த விவாதம் நடைபெறுகிறது? என்ற கேள்வியிலிருந்து இவர்கள் புரட்சிகரமான சக்திகள் என்னும் பதத்தை வெறும் கேலியாக பயன்படுத்தியுள்ளதைப் பார்க்க முடியும். ஏன் இந்த விவாதம் நடைபெறுகிறது என்ற மனிதத்தின் கேள்வியிலிருந்து விவாதத்தின் தேவையை புரிந்து கொள்ளாமை புலனாகிறது. அப்படி புரிந்து கொள்ளாமலே மீண்டும் தங்கள் கருத்தை சொல்ல நினைப்பது விவாதத்திற்கு தயார் இல்லாமையே, தாங்கள் நினைப்பதை திணிப்பதற்காகவே. இதை உறுதி செய்யும் வகையில், இவ் விவாதத்தின் மூலம் நாம் அடைய இருக்கும் பயன் என்னவென்று விளங்கவில்லை எனச் சொல்லி தங்கள் மேதாவிலாசத்தை காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மைகளை கடினமான சொற்பதங்களைப் பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் தொடர்ச்சியாக விவாதிக்க.... என்று குறிப்பிடும் கரிகாலன், இதழ் 16 இல் உயிர்ப்பு மீதான விமர்சனத்தில் கடினமான சொற்பதங்களை தானே பாவித்துள்ளார். அதை எளிமையாக சொல்ல முடியாமல் போய் விட்ட அவர், இதழ் 15 இல் கடுமை, இலகு பற்றி வாதிட முற்பட்டதேன்? கடுமையான சொற்பதங்களை பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் என்பதில் கடினமான சொற்பதம் என்பது, ஒரு கட்டுரையுடன் தேவையோடு அமைந்ததே. கிராமப்புறத்தில் மக்களுடனும், நகர்ப்புறத்தில் மக்களுடனும் வேலை செய்யும் போது, எப்படி ஒரு கட்சிக்குள் விவாதிக்கும் தன்மையில் கருத்தை வைக்காமல், எளிமைப்படுத்தி, நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் வேறுபடுத்தி வைப்பது போன்றே கட்டுரைகளும். இன்று குறித்த இவ் விவாதம் 3-வது அமைப்பை உருவாக்கும் வகையில், வளர்ந்த சிந்திக்கின்றவர்கள் கூடுதலாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்ததே. இதற்கப்பால் எல்லாத்தரப்பட்ட மக்களின் வாசிப்புதிறனுக்கும் அமைய ஒரு கட்டுரையை வரையமுடியுமா? என்பது சந்தேகமே. ஓரு கட்டுரையை விரும்பின் இலகுவாக பலதரப்பட்ட மக்களுக்கு, பகுதி பகுதியாக விரிவுபடுத்த முடியும். தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் என்று மனிதம் சொல்வதால் சஞ்சிகை வெளியிட்டவர்களையும், கட்டுரையாளர்களையும் குழப்பியுள்ளனர், என்று தாங்கள் சொல்ல வருவது புத்திஜீவித்தனத்தின் வெளிப்பாடே. அவர்கள் சொல்ல வருவதனூடாக தங்களை மேதாவிகளாகவும், இக் கருத்தை சொல்ல வந்தவர்கள், சமூகவியக்கத்தில் சாராத கற்பனைவாதிகளாக பார்க்கிறார்கள். ஒரு கருத்தை சொல்ல முனைந்தவர்கள், குழம்பிப்போயுள்ளார்கள் என சொல்ல எந்த ஆதாரத்தை முன் வைக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை எழுதுவதெனின் அதற்கு ஆதாரம் மிக அவசியம். அதுவும் சமூகவிஞ்ஞானத்துடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். மற்றவர்களையும் குழப்பி என்று சொல்வதனூடாக தாங்கள் குழம்பியுள்ளீர்களா? என சிந்திக்கவே தூண்டுகிறது. எந்த முடிவுக்கும் வராமல் என தாங்கள் கூறுவதனூடாக, தங்களினால் திணிக்கப்பட்ட கருத்து, தாமும் குழம்பியவர்களால் வெளியிட்ட கருத்து, மற்றவர்களை குழப்பியதனூடாக திணிக்கப்பட்ட கருத்து (தங்களது) கேள்விக்குள்ளாகிறது. இதை உங்கள் ஆரம்ப விவாதமே சுட்டிக் காட்டி நிற்கிறது.

"குறிப்பிட்ட பிரச்சனையை இயங்கியல் அடிப்படையில் ஆராய வேண்டும். மாறாக ஏற்கனவே இருக்கும் முடிவுக்கு அல்லது வழிக்கு பொருந்தி வருவதாக குறிப்பிட்டு காட்ட முனையக்கூடாது" என்ற தங்கள் கருத்தில் ஏற்கனவே இருக்கும் முடிவு அல்லது விதிக்கு பொருந்துவதாக இயங்கியல் அடிப்படைக்கு மாறுபட்டதாக சஞ்சிகைகள் ஆராய்ந்ததாக தாங்கள் சொல்வதை இயங்கியலுடன் தாங்கள் எங்கே இக் கட்டுரையில் ஆராய்ந்துள்ளீர்கள்? வர்க்கத்தன்மையற்ற புலிகள் குழு என்ற கருத்தை இயங்கியலுடன் எங்கே ஆராய்துள்ளீர்கள். முடிவு விதிகள் என தாங்கள் கூறுவது, அடிப்படை மார்க்சியத்தை பிழையென தங்களால் காட்ட முடியவில்லை. தங்கள் விவாதம் மூலம் தான் இயங்கியலுக்கு மாறாக ஒற்றைவரிகளில் எந்த ஆய்வு முறையையும், ஆதாரங்களையும் சொல்லாமல் வைத்துள்ளீர்கள்.

மார்க்ஸ் தொடக்கம் மாவோ வரையிலான மார்க்சிய அறிஞர்கள் சொன்ன கருத்து அல்லது முடிவை வைத்தே இப்பிரச்சனைக்கு முடிவு காண முற்பட்டதாக தாங்களே சொல்லி அவர்களது கருத்தை நிராகரித்துள்ளீர்கள். நாம் திட்டவட்டமாக சொல்கிறோம் மார்க்சிய அறிஞர்கள் வைத்த அடிப்படை மார்க்சியத்தில் இருந்தே நாம் சமூகத்தை ஆராய்கிறோம். அது ஒன்றே சமூகத்தை சமூக விஞ்ஞானமாக ஆராய்ந்துள்ளது. அதிலிருந்து மார்க்சிற்கு பின்னைய லெனின் (70ஆண்டுகளின் பின்) மார்க்சிய அடிப்படையை வைத்தே, மார்க்சியத்தை, புரட்சியை ரஷ்சியாவுக்கு ஏற்ற வகையிலும், 100 வருடங்களின் பின் சீனாவில் மாவோவும் மார்க்சிய அடிப்படையிலிருந்தே, மார்க்சியத்தை வளர்த்ததோடு புரட்சியையும் நடாத்தினர். இன்று 140 வருடங்களின் பின் கூட பல நாடுகளில் பல புரட்சி ஸ்தாபனங்கள் பல தளப்பிரதேசங்களை அமைத்து, மார்க்சிச அடிப்படையில் முன்னேறுகிறார்கள். இதற்கு மாறாக மனிதம் மார்க்சியத்தின் அடிப்படையை கேளிவிக்குள்ளாக்கியபடியே, இயங்கியலை மார்க்ஸ் முதல் மாவோ வரை தவறாக கையாண்டனர் என, இயங்கியலுக்கு மாறுபட்ட முறையில் விவாதிக்கின்றனர். தமது கருத்துக்குள்ளேயே முரண்படுகின்றனர். மார்க்சியத்தின் அடிப்படைகள் தவறு எனின் எங்கே? மனிதம் அவைகளை எல்லாம் விமர்சித்து உலகுக்கு வழிகாட்டும் புதிய தத்துவத்தை எடுத்தியம்ப வேண்டும். இப்படிச் செய்யாமல் சும்மா கூறுவது மார்க்சியத்தை திரித்துப் புரட்டுவது தான்.

"தேசிய சக்திகள் ஜக்கிய முன்னணித் தந்திரம் பற்றி மாவோவின் கருத்துக்களை மனத்தில் வைத்துகொண்டு, அவை பற்றி ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு, புலிகளைப்பற்றி யாராவது மதிப்பிட முனைந்தால் அது தவறு. அது சலிப்பூட்டும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும்" என மீண்டும் விவாதத்தின் மீது சலிப்பூட்டுவதாக கூறி புலிகள் வர்க்கமற்றவர்கள் என்பதை ஆராய்வுக்கும், விவாதத்துக்கும் அப்பால் திணிப்பை நிகழ்த்த முயற்சிக்கிறார்கள். விவாதிப்பதற்கு தங்கள் கருத்தின் பலம் இன்மையும் விவாதிக்கத் தயார் இன்மையும் இருப்பதால் எதற்காக விவாதிக்கின்றார்கள் என்ற கேள்வி எழுவதுடன், தங்களால் திணிக்கப்பட்ட கருத்துக்கள் விவாதத்துக்கு முன் வருவதால், தங்கள் சக்திகளை கட்டிக்காக்க முடியாமல் போயுள்ள தன்மையையுமே காட்டுகிறது. தூண்டிலுக்கு பதிலளிக்க தேசிய சக்தி, ஜக்கிய முன்னணி பற்றி சொல்லும் மனிதம் கற்பனாவாதத்திற்குள் உட்படுகிறார்கள். புலிகள் பற்றிய மதிப்பீட்டில் ஜக்கிய முன்னணியை மனதில் வைத்துத்தான் தூண்டில் செயற்படுகிறது என சொல்லும் மனிதம் எந்த இயங்கியல் ஆய்வுமுறையை வைத்து முடிவுக்கு வந்தார்கள். தொடர்ச்சியாக தூண்டில் வெளியிட்ட கருத்துக்கள் ஜக்கிய முன்னணியை வைத்துத்தான் வெளியிடுகின்றார்களா? மாவோ கருத்துக்களை உடனடியாக ஒரு வசனத்திற்கு பொருத்துவது தாங்கள் சொல்லுவது போல் இருக்கும் முடிவுக்கு அல்லது விதிக்கு பொருந்தி வருவதாக அமைத்து தூண்டிலுக்கு பொருத்த முனைவதன் நோக்கம் தான் என்ன? யார் விதி அல்லது முடிவுகளை அப்படியே பயன்படுத்துகிறார்கள் என்பதை தாங்களே திரும்பிப் பார்ப்பது நன்று.

"நாம் புலிகளைப்பற்றி மதிப்பிட வேண்டியது அவசியமானதே" என்ற தங்கள் கருத்து "விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளா? இல்லையா? என்பது பற்றி இப்போது புரட்சிகரமான சக்திகள் மத்தியில் ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கு விவாதத்தின் மூலம் நாம் அடையவிருக்கும் பயன் என்ன? என்பது விளங்கவில்லை" என்று தங்கள் கருத்துக்கு முற்றாக மாறுபட்டுள்ளது. குழப்பம் உங்களுடையதே ஒழிய எங்களுடையதல்ல என்பதை தாங்கள் தங்களுடைய கட்டுரைய+டாக சொல்ல வருகிறீர்களா? "கடந்த கால, நிகழ்கால நடவடிக்கையிலிருந்து ஆராய்ந்து சரியான ஒரு முடிவை நாம் முன்வைக்க வேண்டும். அடையப்பெறும் முடிவானது மார்க்சிய மூலவர்கள் கூறிய முடிவுகளுடன் அல்லது கருத்துக்களுடன் பொருந்தி வருகிறதா? இல்லையா? என்பது அல்ல பிரச்சனை" என்ற கருத்தில் தாங்கள் குழம்பியுள்ளீர்கள். மூலவர்களின் முடிவை வைத்தே கருத்தை சொல்வதாக சொல்லி முன்பே நிராகரிக்க முற்படுகிறீர்கள். தொடர்ச்சியாக எழுதும் போது மூலவர்கள் சொன்னது பொருந்தி வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். தாங்கள் முதலில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் மார்க்சியம் சரியா? பிழையா? என்பதை. பிழை எனின் ஏன் என்பதைக் கூற வேண்டும். அதை விடுத்து இரண்டையும் குழப்பமுயல்வது ஏன்?

"புலிகள் தரகு முதலாளித்துவ சக்திகளின் நலன்களுக்காக போராடுவதால் அவர்கள் தேசிய சக்திகள் இல்லை என்பது சமர் பத்திரிகையினதும், ஒரு சாராரினதும் வாதமாகும். இப் பிரச்சனைகள் சகலவற்றையும் வர்க்க கட்டமைப்பு வர்க்கப் பார்வை என்று கூறப்படுவதற்குள் உள்ளடக்கி விட்டால்...." என்ற தங்கள் கருத்து திரிபுவாதத்தின் மிகத்தெளிவான பக்கங்கள். உலகில் உருவாகும் அனைத்து பிரச்சனைகளும், கருத்துக்களும் வர்க்கத்தன்மைக்கு உட்பட்டதே. இது அடிப்படை மார்க்சிய விதியாகும். இவ்வடிப்படை மார்க்சியம் பிழையெனின் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ மற்றும் மார்க்சிசத்தின் அறிஞர்கள் வெளியிட்ட கருத்துக்களை மனிதம் எடுத்து விமர்சிப்பது தான் ஒரு விமர்சனத்தின் ஆரோக்கியமான அணுகுமுறையாகும். மனிதத்தின் கருத்துக்கு எதிராக பல வெளியீடுகள் உள்ளது. 2-ம் அகிலத்திற்கும், லெனினுக்கும் இடையில் இது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது. இதைப்பற்றி ஒரு விமர்சனத்தை முன்வைக்காமல், வர்க்கத்தன்மையில்லை என ஒற்றை வரியில் சொல்வதென்பது, தமது கருத்துக்கே கருத்துப்பலம் இல்லாதது மட்டுமின்றி, இது கடைந்தெடுத்த அடிப்படைத் திரிபுவாதமுமாகும்.

"தெளிவாகவும் உறுதியாகவும் கூற முடியும் புலிகள் எந்த மக்கள் பிரிவினதும் பிரதிநிதிகளல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுமிடத்தில் குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயகமாவது இருக்க வேண்டும்" என்ற தங்கள் வாதத்தில் எந்த பிரிவினதும் பிரதிநிதிகளல்ல என்ற விடயத்தை உறுதிசெய்ய முதலாளித்துவ ஜனநாயகமின்மையை ஆதாரத்திற்கு முன்னெடுத்து ஒன்றையொன்று குழப்பியுள்ளீர்கள். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளித்துவ சக்திகளுக்கு மட்டுமானதே. அங்கே பாட்டாளிகளுக்கோ, முதலாளித்துவ சக்திகளுக்குட்பட்ட மற்ற வர்க்க சக்திகளுக்கோ எந்த ஜனநாயகமும் கிடையாது. இதே முதலாளித்துவம் சில வேளை தனது சக்திக்கே ஜனநாயகத்தை வழங்காது பாசிசத்தை கட்டவிழ்த்துவிடும். குறிப்பாக 3-ம் உலக நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகம் தோன்றவோ ஆட்சிக்கு வரவோ ஏகாதிபத்தியம் அனுமதிக்காது. இங்கு முதலாளித்துவ சக்திகள் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்திற்கு செல்வதற்கூடாக, தரகு முதலாளிகளாக மாற்றப்பட்டு மக்களை ஒடுக்குபவர்கள், மற்றொரு பிரிவு பாட்டாளி வர்க்க போராட்ட எழுச்சியின் போது ஆதரிப்பார்கள். புலிகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுக்காததால் வர்க்கமில்லை, எந்த மக்களின் பிரதிநிதிகளுமில்லை என்ற வாதத்தினூடாக முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுத்தால் மட்டுமே வர்க்கமுண்டு என்று கூறுகிறீர்கள். அப்படியாயின் முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுக்காத ஸ்ரீலங்கா அரசு, இந்திய அரசு... போன்ற 3-ம் உலக நாடுகளின் எல்லா வல்லரசுக்களும் வர்க்கத்தன்மையற்றவையா? அப்படித்தான் தங்கள் கருத்து எனின் அது அப்பட்டமான திரிபு தான். அந்த நாட்டு அரசுக்களின் வர்க்கத்தன்மை தொடர்பான விடயம் பிறிதோர் விவாதத்தை நோக்கியது.

அனைத்து வர்க்கங்களும் சில புலிகளின் நலன்களை அடையும் வழிகளுடன் பிணைந்துள்ளது என்ற தங்கள் கருத்தில் புலிகளின் நலன்கள் என எதை குறிக்கின்றீர்கள். தங்கள் கட்டுரையில் எதிலும் புலிகளின் நலன்கள் என எதையும் சுட்டிக்காட்டவில்லை. ஏன்? குறித்த புலிகளின் நலன்கள் என அமையப்போகும் விடயங்கள் அனைத்தும் ஒரு குழுவை மையமாக வைத்தே. அக்குழு யர்ர்.? இங்கு அக்குழு என்பது மொத்த சனத்தொகையில் மிக குறைந்தோரால் பிரதிநிதித்துவம் செய்வதே. அவர்களின் நோக்கு சொத்துக்களை சேர்ப்பது, தமது வாழ்வைப் பாதுகாப்பதுமே. இவர்கள் அதற்காக மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, சுரண்டி வாழ்வார்கள். இதனால் எழும் போராட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள ஆயுதங்களுக்காகவும், நிதித் தேவைக்காகவும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருப்பார்கள். தமது வாழ்வை மையப்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு சந்தையை ஏற்படுத்தவும் பக்கத்தில் உள்ள நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஏகாதிபத்தியத்துடன் சாதகமாக செயற்படவும், இன்னொரு ஏகாதிபத்தியத்தை தனக்கு சாதகமான ஏகாதிபத்தியம் ஒடுக்க பயன்படும் வகையில், ஒரு புரட்சிகர சக்தி வளர்ந்து விடாமல் இருக்கவும் எப்பொழுதும் இக் குழு செயற்படும். இத்தன்மையை இக்கட்டுரையின் பிறிதோரிடத்தில் ஆராய முற்படுகிடுறோம். புலிகளின் நலன்கள் இதுவே . இத்தன்மை தரகு முதாலிளித்துவத்தின் மிகச்சிறந்த குணாம்சமாகும். இந்த வகையில் ஸ்ரீலங்கா அரசை(பிரேமாதாசாவை) சுற்றியும் ஒரு குழுவே இன்று(புலிகள் போல்) செயற்படுகிறது.

"புலிகள் தமது தனித்துவத்தை அங்கீகரிக்கச் சொல்வது 3-ம் உலக நாட்டின் முதலாளித்துவத்தின் போர்க்குணம் அல்ல. அது புலிகள் என்ற அமைப்பின் போர்க்குணத்தையும் ஒரு தேசியத்தின் போர்க்குணத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்கின்றார்கள்" என எழுதும் மனிதம் குழப்பிக்கொள்கின்றார்கள் என்ற வாதத்தில் ஒரு தேசியத்தின் போhக்குணம் என்பது சமரசத்தை நாடாது என வாதாடுகின்றார்கள். அதிலிருந்து கொண்டு புலிகள் சமரசத்தை (தங்களை அங்கீகரிப்பதனூடாகவே) நாடுவதால், புலிகள் போர்க்குணம்(வர்க்கமற்ற புலிகளை) என குறிப்பிடுகின்றனர். ஒரு தேசியத்தின் போர்க்குணாம்சம் கூட சமரசத்தை நாடும், இது யார் தலைமை தாங்குகின்றார்கள் என்பதைப் பொறுத்தே தங்கியுள்ளது. மனிதம் சஞ்சிகையினர் வர்க்கமற்ற உலகு பற்றிய கனவுகளில் இருந்து முடிவுக்கு வருகிறார்கள். முதலாளித்துவ தேசியத்தின் போர்க்குணமல்ல சமரசத்தை நாடுவது என சொல்ல வருவது முதலாளித்துவ வர்க்கம் ஊசலாட்:டமற்ற ஒரு போர்க்குணமான பிரிவு எனச் சொல்லுவதாகும். தாங்கள்(முதலாளித்துவ சக்திகள்) ஒரு புரட்சியை சமரசமின்றி கொண்டு செல்ல முடியும் என வாதாடுவதற்கே. இவ் விவாதத்தில், தூண்டில் முதலாளித்துவத்தின் சமரசத்தின் பக்கத்தில் புலிகளின் கோரிக்கை அமைவதாக இருந்ததாக வாதாட முற்படுவதில் நாம் முரண்படுகிறோம்.

இது தொடர்பாக விவாதத்தை தேசிய சக்தி பற்றிய தூண்டில் மீதான விமர்சனத்துடன் விவாதிக்கிறோம். தொடர்ச்சியாக மனிதம் சஞ்சிகை விவாதிப்பதை பார்ப்போம். "புலிகள் தமது எந்த இலக்குகளையும் அடையாது என்றும் இராணுவமுறையையே நம்பியிருக்கும் ஒரு அமைப்பாகும்" இக் கருத்து உண்மைக்கு மாறானது. புலிகள் இராணுவ முறையை கையாளுகின்றனர். அதேநேரம் அரசியல் ரீதியில் அதை அடைய முயல்கின்றனர். இது தொடர்பாக பல உதாரணங்களைப் பார்க்க முடியும். இந்திய, இலங்கை அரசுக்களுடனான பேச்சுவார்த்தை, தனிநபர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை, பத்திரிகைகளில் விடும் அறிக்கைகள், வெளிநாட்டில் செய்யும் பிரச்சாரம்.... இப்படிப் பல, இவை அனைத்தும் இராணுவமுறைக்கு அப்பால் அரசியல் ரீதியில் அணுகப்பட்டவை. இன்னுமொரு பக்கத்தில் இராணுவ வன்முறையை கையாளும், அதாவது அரசியலற்ற குழுக்கள் என மனிதம் கூறுவது போல் பார்ப்போமாயின்: இலங்கை இந்திய அரசுகளும் அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவ ரீதியில் கையாளுகின்றனர். இங்கு தேர்தல் வெறும் மோசடியே. இராணுவ ஆட்சி நடக்கும் 3-ம் உலக நாடுகளின் அரசுகளும் அப்படியே. அப்படியாயின் இவ்வரசுகளுக்கு அரசியல் இல்லையா? மனிதத்தின் இயங்கியல் போக்கற்ற ஆய்வின் வெளிப்பாடாக எழும், இவ்விவாதம் தாம் நினைப்பதை திணிப்பதற்காக கையாளப்படுகின்றது.

அப்படியாயின் இவர்களின் அரசியல் இலக்கு என்ன? என்ற மனிதத்தின் கேள்விக்கு அவர் பின் எழுதியுள்ளதையே பதிலாக வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நலன்களை அடையும் திசையில் நகர்வதை காணமுடியும். அவர்களது சிறந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் அந்த இலக்கு யாதெனில் அந்த அமைப்பின் சொந்த நலன்களை அடையும் இலக்கேயாகும். அவர்களது நடவடிக்கையிலிருந்து இரு விடயங்கள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. தமிழ் மக்களை அடக்கியாளும் உரிமையை அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களது இராணுவக்கட்டமைப்பு தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். பிறிதோரிடத்தில் புலிகள் எந்த ஏகாதிபத்தியத்தினதோ அன்றி தரகு முதலாளிகளினதோ பிரதிநிதிகள் அல்ல. இதன் அர்த்தம் ஏகாதிபத்திய, முதலாளித்துவ எதிர்ப்பு போராளிகள் புலிகள் என்பதல்ல. புலிகள் ஏகாதிபத்தியத்திடமிருந்து உதவிகளை பெறுவார்கள். அவர்களின் நலன்களுக்கு எதிராகப் போகாமல் கண்டும் காணாதிருப்பார்கள். அவர்களது போராட்டத்தின் இறுதி விளைவு ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகு வைப்பதாக கூட இருக்க முடியும். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளல்ல என்ற விவாதம் மனிதம் தமது கருத்துக்கு முரணாகவே வாதாடுகிறார்கள். இவ்விவாதத்தில் எங்கேயாவது இயங்கியலுடன் அணுகியுள்ளார்களா எனின் இல்லையென்றே அடித்துக் கூறமுடியும். குறிப்பிட்ட திசைநோக்கி என்பது ஒரு அரசியல், அதற்கென ஒரு இலக்குள்ளது. அதை பின் சுட்டிக்காட்டும் போது அவர்களின் சொந்த நலன்களை அடையவே. சொந்த நலன்கள் என்பது எவை? புலிகள் தம்மை சுற்றியுள்ளவர்களின் சொத்துக்களையும், வசதியான வாழ்க்கையையும்..... காப்பாற்றவே போராடுவதாக இவர்கள் சொல்கின்றனர். நாம் இக் கருத்துடன் உடன்படுகின்றோம். அதே நேரம் இவ்வுடன்பாட்டில் சுட்டிக்காட்ட விரும்புவது, இவ்வகையான தன்மை அடிப்படையில் சுரண்டலே. இத்தன்மை ஒரு குறித்த வர்க்கத்துக்குரிய சிறப்பம்சமாகும். ஒரு முதலாளியை பார்ப்போமாயின்(நிலப்பிரபு தரகு முதலாளி)தொழிலாளர்களை அடக்கியொடுக்கி தேவையேற்படின் கொன்று தானும் தமக்கு சார்ந்தோர்க்காகவும் திட்டமிட்ட ஒழுங்கமைப்பில் (இராணுவரீதியில்) செயற்படும் பண்பை, புலிகளுடன் ஒப்பிட்டு பார்ப்போமாயின் புலிகளுக்கு அரசியல் உண்டு எனப் பார்க்கலாம். மனிதம் கூறுகிறார்கள்: தமிழ்மக்களை அடக்கியாளும் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இராணுகட்டமைப்பை தொடர்ச்சியாக பேணுவார்கள் என்ற வாதத்தில் இரு விடயமாக இதை பிரித்து பார்க்க முடியாது. அடக்கியாளுவதென்பதில் இராணுவமின்றி சாத்தியமில்லை. இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றானது. தமிழ்மக்களை அடக்கியாளும் உரிமை என்ற விவாதத்தில் ஏன் தமிழ்மக்களை அடக்கியாள வேண்டும்? புலிகளுக்கு என்ன இலாபம்? புலிகள் தாமும் தாம் சார்ந்தோரின் வாழ்வையும் பாதுகாக்கவே மக்களை அடக்கியாளுகின்றனர். தாமும் தாம் சார்ந்தோரின் வாழ்வும் என்பது பொருளாதாரத்தை வசதியான வாழ்க்கையை..... இது சுரண்டலை நடத்தும் எல்லாப் பிரிவினருக்கும் பொதுவானது. இது புலிகள் என்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும், தரகு முதலாளித்துவத்தின் செயற்பாட்டால் ஏற்பட்ட விழைவே. புலிகளின் சிறந்த இராணுவ நடவடிக்கை எனப் பாராட்டுக் கொடுக்கும் மனிதம் இராணுவம் தொடர்பாக இயங்கியலுடன் ஆராய்ந்து அந்தப் பாராட்டைக் கொடுக்கவில்லை. புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் எம் தேசவிடுதலைப் போராட்டத்தில் எப்போதும் சிறப்பாக இருந்ததில்லை. எதிர்பாராத நேரத்திலும். எதிர்பாராத வகையிலும் திட்டமிடாத வகையிலும், குட்டிபூர்சுவா இயக்கமாக ஆரம்பத்திலிருந்தபோது செய்த நடவடிக்கைகளாலும் அதில் ஏற்பட்ட அனுபவரீதியான யுத்தத்தை விரிவாக்கி இன்று ஒரு ஏகாதிபத்திய வழிகாட்டலில், ஏகாதிபத்தியத்தின் நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் யுத்தம் விரிவடைந்துள்ளது. இவர்களின் படுமோசமான யுத்தத் தோல்விகளை ஒரு சில நடவடிக்கைகளை கொண்டே பார்க்கலாம். ஆனையிறவு தாக்குதல், யாழ்கோட்டை தாக்குதல், முல்லைத்தீவு தாக்குதல் .....இப்படிப் பல.

புலிகள் எந்த ஏகாதிபத்தியத்தினதோ அன்றி, தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளோ அல்ல. அன்றி எனச்சொல்ல வருவதன் ஊடாக ஒரு வேறுபாடான விடயமாகப் பார்க்கின்றனர். இக் கருத்தை முதலில் வரையறுத்தது மாவோ. இவர்கள் எங்கே மாவோவின் இக்கருத்தை விமர்சித்து இரு வேறுபாடானது எனக்காட்டியுள்னர். ஏகாதிபத்தியத்தை சார்ந்தோர் தரகு முதலாளிகளே. மேற்குறிப்பிட்ட மனிதத்தின் வாதத்தின் தொடர்ச்சியாக இதன் அர்த்தம் ஏகாதிபத்திய தரகுமுதலாளித்துவ எதிர்ப்பு போராளிகள் புலிகள் என்றல்ல. எவ்வளவு முட்டாள்தனமாக மனிதம் விவாதிக்க முற்படுகின்றனர். இவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட மாட்டார்கள். இலங்கையில் ஏகாதிபத்தியம் தலையிடவில்லையா? தனது சுரண்டலை நடத்தவில்லையா? அப்படித்தான் மனிதம் சொல்வார்களானால் அது பிறிதொரு விவாதம்.

புலிகள் சுரண்டலை (மனிதம் கூறும்போது தனது குழு நலன் சார்ந்து என்று சொல்லுகிறார்கள்) நடத்துகிறது. புலிகளும், ஏகாதிபத்தியமும் சுரண்டலை நடத்தும்போது இருவருக்குமிடையில் சுரண்டல் தொடர்பாக எழும் முரண்பாட்டை இருவிதமாக மட்டுமே தீர்க்கமுடியும்.

(1) ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து இணைந்து சுரண்டலை நடத்துவது. (இன்று இந்தியா, இலங்கை..... போன்ற மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் செய்வது போல்)

(2) அப்படி சுரண்டலில் எழும் போட்டி மோதலாக (மனிதம் குறிப்பிடுவது போல் புலிகளின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டால்) வெடிக்கும். இதிலிருந்து இந்தியா இலங்கையுடன் புலிகள் மோதலைப் பார்க்கலாம்.

ஏகாதிபத்தியத்துடன் மோதல் ஏற்படாமல் இருக்கும் வரை அங்கு ஏகாதிபத்திய சுரண்டலை அனுமதிப்பது என்பது புலிகள் தரகு முதலாளித்துவ (ஏகாதிபத்திய கைக்கூலிகள்) பிரதிநிதிகளாகப் பார்க்கலாம். மோதல் ஏற்பட்டால் பிறிதொரு ஏகாதிபத்தியம் சார்ந்து நிற்கவும் அல்லது மீண்டும் ஏகாதிபத்தியத்துடன் ஜக்கியப்படவும் முடியும்.

மனிதத்தின் ஏகாதிபத்தியம் பற்றிய கற்பனாவாதப் பார்வையைப் பார்ப்போம். புலிகள் ஏகாதிபத்தியத்திடம் இருந்து உதவியை பெறுவார்கள். அவர்கள் நலன்களுக்கு எதிராகப் போகாமல் கண்டும் காணாமல் இருப்பார்கள். அவர்களது போராட்டத்தின் இறுதிவிளைவு ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடைவு வைப்பதாகக் கூட இருக்கமுடியும். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல. ஒன்றுக்குப்பின் ஒன்றாக கருத்துக்கள் உழறிக்கொட்டப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியத்திடமிருந்து உதவியைப் பெறுவார்கள். அவர்களின் நலன்களுக்கு எதிராகப் போகாமல் கண்டும் காணாமல் இருப்பார்கள். போராட்டத்தின் இறுதியில் ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகு வைப்பார்களெனின் இவர்கள் யார்? ஏகாதிபத்தியத்திடம் உள்ள உறவு என்ன? ஏகாதிபத்தியம் உதவி கொடுக்க என்ன காரணம்? ஏன் நாட்டை புலிகள் ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கிறார்கள்? மேலுள்ள காரணத்தில் இருந்தே மனிதம் ஒத்துக் கொள்கிறார்கள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான பிரதிநிதியாக புலிகள் இன்று உள்ளதாக. பின் ஆனால் போட்டு எழுதுகின்றனர். ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல என்று. மனிதம் முன் சொன்னதையே மறுக்கின்றனர். மனிதம் முன் சொன்னது போல்(மற்றவர்களையும் குழப்பி)என்பது மனிதத்தையே குழப்பி, அவர்களாகவே உளறத்தொடங்கியதை பார்க்க முடிகிறது. (தாமும் குழம்பி)சமர்-தூண்டில் உங்களை குழப்பி உளற வைத்ததற்கு, மனிதத்தின் தெளிவான முகத்தை அம்பலப்பட வைத்ததற்கும் மனிதம் வாசகர்கள் நன்றி கூற வேண்டும். குறிப்பிட்ட நலன்களை அடையும் திசையில் நகர்வை காணமுடியும் என வாதிடும் மனிதம் பிறிதோரிடத்தில் முன்னுக்கு பின் முரணாக தான் கூறியவற்றிற்கு முரணான நடவடிக்கையில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது. இது மத்தியதர வர்க்கத்தின் அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் ஊசலாட்டப் பகுதி எனக் கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட நலன்களை அடையும் எனக் குறிப்பிட்டு, முன்னுக்குப்பின் முரணானது என சொல்வதில், புலிகளின் வர்க்க மதிப்பீடு பற்றிய மனிதத்தின் பார்வைக்குறைபாடு தான் இதை சொல்ல வைத்துள்ளது. முன்னுக்குப்பின் முரணாக கருத்து வைப்பது சுரண்டலை நடத்தும் அனைத்துப் பிரிவினருக்கும் உள்ள சிறப்பான அம்சமாகும்.

ஒரு பலம் வாய்ந்த இராணுவம் புலிகளிடம் உள்ளமையால் இந்திய, இலங்கை இராணுவங்கள் தோற்கடிக்க முடியவில்லை என்ற வாதம் இராணுவம் என்பது நிரந்தரமாகவும் அழிவுகள் இன்றி இருப்பதாவும், இயங்கியலுக்கு முரணாக மனிதம் விவாதிக்கின்றனர். இராணுவத்தின் இருப்பு எப்பொழுதும் மக்களின் ஆதரவுடன் மட்டுமே சாத்தியமாகும். ஒரு யுத்தத்தை நடத்தும் குறிப்பான இன்றைய நிலையில், இது மக்களின் நலனுடன் கூடுதலாக இணைக்கப்படுகிறது. இன்று தமிழ்மக்களின் கோரிக்கைகளை புலிகள் தம்முன் வைத்திருப்பதே, புலிகள் தொடர்ந்து நிலைத்திருக்க முடிகின்றது. குறித்த இப் போராட்டத்தை புலிகள் ஏகாதிபத்தியம் சார்பாக (மனிதம் முன் சொன்ன அடிப்படையில்) நின்று மக்கள் மீது வன்முறையை பாவித்தபடி போராடுகின்றனர்.

எந்த ஏகாதிபத்தியமும் புலிகளுடன் முரண்பட்டால் அதாவது புலிகளின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால், எந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கையில் இறங்க புலிகள் தயங்க மாட்டார்கள். இதை புரிந்து கொள்வதற்க்கு சதாம், நோரிக்கோ போன்றோர்கள் அமெரிக்காவின் அடிவருடிகளாக இருந்தபொழுது தமது சொந்த நலன்களுடன் அமெரிக்கா முரண்பட்டபொழுது யுத்தம் புரிய தயாரானதை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற வாதத்தில் மனிதம் சிறப்பாக திரிப்பை முன்வைக்கின்றனர். புலிகளுடன் சாதாம், நோரிக்கோ... போன்றோரை ஒப்பிட்டு யுத்தம் புரிய தயாரானதாக கூறும் இவர்கள், சொந்த நலன்களுக்காக போராட முற்பட்டதாக கூறுவதன் ஊடாக, சொந்த நலன்கள் (என்பது மனிதத்தின் பார்வையில் வர்க்கமற்ற தன்மை) என மீண்டும் வாதாடுகின்றனர். அப்படியாயின் மூன்றாம் உலக அரசுக்கள் எல்லாம் சதாம், நோரிக்கோ...போன்றவையே. அப்படியாயின் அவ் அரசுகளும் வர்க்க அடிப்படையற்ற குழுக்களே. இது மனிதத்தின் கருத்து. இக்கருத்து மனிதத்தின் திரிபை அம்பலப்படுத்துகிறது. மனிதம் உளறிக் கொட்டியதில் வெளிப்பட்டுவிட்ட இவ்விடயம், மனிதம் இது தொடர்பாக என்ன கருத்தை கூறுகிறார்கள் எனப் பார்த்தே, மூன்றாம் உலக அரசுகளுக்கு வர்க்கம் உண்டு என விவாதிக்கலாம்.

சதாம், நோரிக்கோ..... போன்றார் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறப்பான பிரதிநிதிகளாக அந்தந்த நாடுகளில் செயற்பட்டனர். இவர்களின் வர்க்கப் பாத்திரம் தரகுமுதலாளித்துவமே. இவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள மோதல் என்பது சுரண்டல் தொடர்பாக எழுந்தவை தான். அமெரிக்காவுக்கு சென்று கொண்டு இருந்த சுரண்டலை கண்டு, ஆத்திரமுற்ற இவர்கள் சுரண்டலை முழுமையாக பெற மக்களிடமிருந்து அமெரிக்க எதிர்ப்புணர்வை பயன்படுத்த முயன்றனர். இவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் இவர்கள் சுரண்டலை நடத்தியதும், மேலும் சுரண்டலை தான் முழுமையாக பெறும் வகையில் யுத்தத்தை அதற்கிசைவாக நடத்தியதும், ஏகாதிபத்தியம் பற்றிய ஊசலாட்டமுமே. இதுவே இவர்களின் எழுச்சியும் தோல்வியுமாகும். இது போன்றே புலிகளும் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததும், இந்தியாவும் அது சார்ந்த ஏகாதிபத்தியங்கள் புலிகளை அழிக்க முற்பட்டதும், மேற்கத்தைய தரகாக இருந்த புலிகளின் ஊசலாட்டப்போக்கும், இந்தியாவுடன் சமரசத்தை நாட முற்பட்டதும்: இந்தியா புலிகள் தமக்குள் கொண்டிருந்த நம்பிக்கையீனமும் ஒன்றையொன்று மோதும் வகையில் நகர்த்துவதில் மேற்கத்தைய ஏகாதிபத்தியங்கள் வெற்றி பெற்றது. இதன் வெளிப்பாடாகவே இலங்கை, புலிகள் இடையேயான பேச்சுவார்த்தையும், இரண்டும் ஒன்றாக இணைந்து இந்தியாவை வெளியேற்ற முயன்றது.

சதாம், நோரிக்கோ.... ஆகீயோருக்கு இருந்த வாய்ப்புக்களை விட புலிகளுக்கு நீண்டகால யுத்தத்துக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாகவே உள்ளது. அவர்கள் நகர்ப்புற கெரில்லா வடிவத்தில் பல படிப்பினைகளைப் பெற்ற, சயனைற்றை கழுத்தில் கட்டிய ஊழியர்கள. இங்கு நகர்ப்புற கெரில்லாவாக இருந்தால் மட்டும் ஒரு யுத்தத்தை நடத்தி விடமுடியாது. நகர்ப்புற கெரில்லா தொடர்ந்து இருக்க ஆதரவான மக்கள் சக்தி தேவை. அல்லது குழுநலன் சார்ந்தோரின் குறிப்பான ஆதரவு தேவை. குறிப்பான ஆதரவு என்பது ஏகாதிபத்தியம் சார்ந்த தரகு முதலாளித்துவத்தின் ஆதரவே. இவையில்லாத எந்த சக்தியும் ஒரு அரசியல் சக்தியாகவோ அது சார்ந்த இராணுவமாகவோ இயங்க முடியாது அழிந்து போகும்.

இவ் வெளிப்படையான தெளிவாகத் தெரியும் உண்மைகள் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் புலிகளைப் புரிந்து கொள்வதற்கு போதுமானவையே என்ற மனிதத்தின் இறுதிப் பந்தி மேலுள்ள விவாதத்தில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக விவாதித்துள்ளதன் மூலம், புலிகள் பற்றி இலகுவான முடிவுக்கு வந்தடையும் பார்வையை காட்டுகிறது. சமர் தூண்டில் ஆதாரமாக பல விடயங்களை வைத்து விவாதித்தன. அவைகளை ஒவ்வொன்றாக விமர்சனம் செய்யாது, தமது கருத்துக்கும் ஆதாரங்களை முன்வைக்காமல் சொன்னதுடன் மார்க்சியத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்கி, அது பற்றி விமர்சனரீதியாக எதுவும் முன்வைக்காமல் மார்க்சியம் பிழை எனக் கூறியும் உள்ளனர். ஒரு விமர்சகர் தமது கருத்தை முன்வைக்கும் பொழுது தொடர்ச்சியாக விவாதிப்பதற்க்கு தயாராக இருக்கவேண்டும். விவாதத்தை நடத்த தயாரின்மையை இரு சந்தர்ப்பத்தில் சொல்லி, தமது கருத்தை திணித்து விட முயலும் மனிதத்தின் போக்கு போராட்டத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அடிப்படைத் திரிபை பரப்பிவரும் மனிதம் மற்றைய சஞ்சிகைகளை (தாமும் குழம்பி) குழப்பக்காரர்கள் எனச் சொல்லி தமது மேதாவித்தனத்துடன் திரிபுகளைத் திணிக்க முயல்வது மிக மோசமான நடவடிக்கையாகும். இது புலிகள் எப்படி மாற்றுக்கருத்தை கொண்டிருப்பவர்களை கொன்று போராட்டத்தில் தடையாகவிருக்கிறார்களோ அதே போன்று மாற்றுச்சஞ்சிகைகளின் கருத்துக்களை விமர்சனத்திற்க்கு தயாரின்றி ஒற்றைவரியில் பதிலளித்து திரிபை புகுத்த முயல்வது போராட்டத்திற்கு இன்னுமொரு தடையாகும். மனிதம் மார்க்சிய மூலவர்களின் கோட்பாடுகளில் பிழையிருக்கிறது என்ற வாதம், மிகச்சிறப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி(டெங் கும்பல்) 1984 -இல் கூறியதற்கு ஒத்ததே. மார்க்சின் சில கருத்துக்கள் இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றவையல்ல. இப்போதைய நவீன காலத்தின் நிலைமைகள் பற்றி மார்க்சுக்கோ அல்லது ஏங்கல்ஸ்சுக்கோ அல்லது லெனினுக்கோ தெரியாது. (நன்றி இரசிய கரடியின் உண்மை முகம்) என்ற இக் கருத்தை சொல்லியே சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவத்தை மீட்டார்கள். அதே கருத்தை மனிதம் சொல்வதிலிருந்து, மனிதம் எதை செய்ய முயலுகின்றார்கள் என்பதை மனிதம் வாசகர்களே சிறப்பாக புரிந்து கொள்வார்கள்.

உயிர்ப்பு 1..பற்றிய மனிதத்தின் விமர்சனம் தொடர்பான எமது விமர்சனம்

இயற்கையும் சமூகமும் தனிப்பட்ட மனித மனத்திற்கு வெளியே இருந்து அவனது விருப்பு வெறுப்பை சாராது இயங்கிக் கொண்டிருப்பதாகும் என்ற கருத்து கட்டுரையில் கூறப்படுகிறது. ஆனால் அதன் பின் இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் நாம் தனிப்பட்ட நபர்களுக்கும் அவர்களுக்கும் அவர்களது குணநலன்களுக்கும் வரலாற்றில் எந்தப் பாத்திரமும் கிடையாது என கூறவில்லை என்று உயிர்ப்பில் கூறப்படுகின்றது. இயற்கையுடனும் சமூகத்துடனும் மனிதன் கொண்டுள்ள அவனது விருப்பு வெறுப்புக்களை கொண்டுள்ள இயங்கியலை முதல் கருத்து நிராகரிக்க அவனது வரலாற்றுப் பாத்திரத்தை இரண்டாவது கருத்து அங்கீகரிக்க குழப்பமே மீதியாகின்றது . ஒரு ஓட்டமான வாசிப்பில் இரண்டாவது கருத்து அடிபட்டு போகின்றது. கட்டுரையில் இயற்கைக்கும் சமூகத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு என்பது விளங்கப்படவில்லை என்று மனிதம் உயிர்ப்பு கூறியதை முன்னெடுத்து விமர்சிக்க முற்ப்பட்டனர். இருந்தும் மனிதம் கூட குறிப்பிட்ட விளக்கம் தரவில்லை என்ற விடயத்தை விளங்கப்படுத்தவில்லை. இது ஓரு புறமிருக்க உயிர்ப்பின் கருத்து தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதை பார்க்க முடிகின்றது. மனிதம் சஞ்சிகை சமூகப்போக்கு தனிமனிதன் விரும்பியபடி இயங்குவதாக கூற முயலுகின்றனர். அது தான் ஓட்டமான வாசிப்பில் இரண்டாவது கருத்து அடிபட்டு போகின்றது என்ற வாதம் (இது எப்படி என புரியவில்லை?). சமூகத்துக்கும் மனிதர்க்கும் இடையிலான உறவில் தனிமனிதன் அல்லது குணநலன்கள் சமூகத்தின் மீது ஆற்றும் பங்கு, இவற்றுக்கிடையிலான உறவு பற்றியும் கூறி வருகின்றன. இதை உயிர்ப்பு சஞ்சிகை விரிவாகவும் ஆழமாகவும் பதிலளித்துள்ளனர். நாம் இதை மேலும் விளக்குகையில் ஒரு தனி மனிதன் விரும்பும் அனைத்தையும் சமூகம் செயற்படுத்தாது. ஒருவன் விரும்பலாம் கம்யூனிஸ்ட் சமூகத்தை ஆனால் சமூகம் அதை ஏற்க வேண்டுமென்றோ சமூகம் அதை இயக்கி கொண்டிருப்பதாகவோ அர்த்தமல்ல. சமூகம் அதை விரும்பின் மாத்திரமே சாத்தியம். புலிகளில் இணையும் ஒருவன் கொலை செய்யவென இணைவதில்லை. அவன் விரும்புவது தேசவிடுதலை போராட்டத்தை தான். அவன் விரும்புவதற்கு மாறாக கொலை செய்கிறான் எனின் புலிகளின் அரசியல் போக்குக்கு மாற்றப்படுகிறான். யார் எதிர்க்கின்றானோ அவன் தனிமனிதனாக வெளியேற அல்லது கொல்லப்படுகின்றான். இங்கு தான் தனிமனிதப் பாத்திரம் வெளிப்படுகின்றது. இது புலிகளின் போக்கையொற்றி இசைவாக நடப்பதில்லை. அதே போல் இக் கொலையை முன்னின்று நடத்துவதற்கூடாக தனிமனிதப் பாத்திரம் புலிகளின் போக்குடன் நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு சிறந்த உதாரணமாக பிரபாகரனைப் பார்க்கலாம். எனவே சமூகப் போக்கு என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பால் பட்டது. ஒரு மனிதன் விரும்பும் பட்சத்தில் எல்லாம் மாறிவிடாது.

"முன்னணிப் பாத்திரம் வகிக்கும் நபர்களுக்கூடாகவன்றி அவர்கள் எந்த சமூக சக்திகளை வர்க்கப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்| என குறிப்பிடப்படுகின்றது. இது மார்க்சியத்தின் சமூதாய ஆய்வுமுறையை மிகவும் எளிமையாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடே. ஒரு சமூக சக்தியையோ அன்றி வர்க்கங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தாமல் தமது குழுநலனை மையமாக வைத்து சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை தாமே கையிலெடுத்து அத்துடன் கவர்ச்சிவாதத்தையும் சேர்த்து பல குழுக்கள் கும்பல்கள் மக்களை அடக்கியாள்கிறது என்ற மனிதத்தின் வாதத்தில் உயிர்ப்பு குறிப்பிட்டு கூறிய சமூக சக்திகளை வர்க்கங்கள் பிரதிநிதித்துவபடுத்துவதாக சொன்னதை மனிதம் நிராகரிக்காமலேயே இதை இலகுபடுத்திய மார்க்சியம் எனச் சொல்லி, தமக்கு சாதகமாக எடுக்க முயன்ற மனிதம், அதற்குள் குழம்பி, சமூக சக்திகளையோ அன்றி வர்க்கங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தாத குழுக்களைப் பற்றி கூறியுள்ளனர். இது நான்கு வரிக்கு முன்னர் கூறியதை திரித்துப் புரட்ட முயல்வதை பார்க்க முடிகிறது. குழுவை மையமாக வைத்து கவர்ச்சியைக் காட்டி எனச் சொல்லும் இக் கருத்து தொடர்பாக முன்பே விமர்சித்துள்ளோம். மனிதத்தை கேட்க விரும்புகிறோம், இன்று உலகில் குழுநலனுக்கு அப்பால் கவர்ச்சி காட்டாத அரசு ஒன்றைக்காட்ட முடியுமா? இதில் இன்று புரட்சிகர அமைப்பை விடுத்தே கூறுகிறோம். எல்லாம் ஒரு குறித்த வட்டத்துக்குள் செயல்படும் அரசுக்களே.

புலிகளை தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஊசலாட்டம் காட்டுபவர்களாக காட்ட முனைவது தவறு என்று மனிதம் உயிர்ப்பு சஞ்சிகையை விமர்சிக்கின்றனர். அதே நேரம் இக்கருத்தை விரிவான ஆய்வில்லாமல் எடுத்ததாக சொல்லவரும் மனிதம் தன் விரிவான ஆய்வில் புலிகளை தேசவிடுதலைப் போராட்டத்தில் ஊசலாட்டம் அற்றவர்கள் எனச் சொல்லுகின்றனர் .புலிகளின் ஊசலாட்டம் தொடர்பாக சமா, தூண்டில், உயிர்ப்பில் பல ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் ஊசலாட்டம் தொடர்பாக மனிதம் வாசகர் அனுபவத்திலும், சம்பவங்களினூடாகவும் அறிவார்கள்.

பொருளாதார நிலைக்குப் பொருத்தமான சமூக உணர்வாக தேசிய இனங்கள் ஒன்று கலப்பது என்னும் நிகழ்வு தோன்றுகின்றது என்ற உயிர்ப்பின் கருத்தையொட்டி மனிதம் தேசிய இனங்கள் ஒன்று கலக்கும் நிகழ்வு என்ற பிரச்சனையில் பொருளாதாரநிலையின் பங்கு என்ன? என்பது பற்றி மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதில்லை. ஏனெனில் இது பொருளாதார நிலைக்கு மிகவும் கூடிய அழுத்தம் கொடுக்கிறது. தேசிய இனங்கள் ஒன்று கலப்பது என்பது, அதற்கு தேவையான அடிப்படையான பொருளாதார நிலையை கோருமென்பது புரிந்து கொள்ளக்கூடியதே. மாறாக தேசிய இனம் ஒன்று கலப்பது என்பது ஒரு கலாச்சாரப்புரட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை என்ற மனிதத்தின் வாதத்தில் ஒரு பக்கம் மட்டுமே உண்மை. ஒரு கலாச்சாரப்புரட்சி சோசலிச சமுதாயத்தில் மட்டுமே சாத்தியமானது அல்ல. முதலாளித்துவ கலாச்சாரப் புரட்சியும் நிகழுகின்றன. உயிர்ப்பின் விவாதம் முதலாளித்துவ தோற்றத்தில், முதலாளித்துவ முதிர்ச்சியில் தேசிய இனம் ஒன்று கலப்பது பற்றியே. முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து ஒரு கலாச்சாரப்புரட்சி நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக முதலாளித்துவ நாடுகளில் நடத்தப்பட்டது. இது தேசிய இனங்களை ஒன்றிணைக்கும் வகையில் தவிர்க்க முடியாது மையப்படுத்தபட்டது. இது தொடர்பாக சமர்-4 இல் பிரான்சில் இருந்த பல தேசிய இனம் இன்று இல்லாமல் போய், ஒரு மொழி ஆதிக்கத்துக்கு வந்தது தொடர்பான ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு அம்மொழிகள் அழிய அடக்கு முறை மற்றும் பல வழிகளுக்கூடாக இது நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு பெரிய எதிர்ப்பு ஏற்படாமலிருக்க முக்கிய காரணமாயிருந்தது பொருளாதார நிலையே. இந்நிலை மூன்றாம் உலக நாடுகளில் தோன்றாமைக்கு முக்கிய காரணம் அங்கு ஒரு முதலாளித்துவ அரசு இன்மையும், பொருளாதார நிலையின் பலமின்மையுமே. தேசிய இனங்கள் ஒன்று கலப்பது பொருளாதாரவாதத்தின் அடிப்படையிலேயே. இதற்கு மாறாக பொருளாதார இருப்பு இல்லாமல், ஒரு போதும் ஒரு கலாச்சாரப்புரட்சியில் மட்டும் தேசிய இனம் ஒன்று கலக்காது. கலாச்சாரப்புரட்சி பொருளாதார வாழ்வுள்ள இடத்தில் ஒரு ஊக்குவிக்கும் பண்பையும் மாற்றத்தையுமே செய்கிறது.

முதாளித்துவத்தின் ஆரம்பக் கட்டத்தில் தேசிய இனங்கள் விழிப்படைந்ததாகவும், முதலாளித்துவத்தின் முதிர்ந்த நிலையில் தேசிய இனங்கள் ஒன்று கலப்பது பற்றியும் என்று உயிர்ப்பு கூறிய கருத்தை மனிதம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டத்தில் இல்லாத தேசிய இனங்கள் இன்றைய உலகில் விழிப்படைவதையும், முதலாளித்துவ முதிர்ச்சி, வளர்ச்சியடைந்த நிலையிருக்கும் நாடுகளில் தேசிய இனங்கள் ஒன்று கலக்க தயாராகவில்லாததையும் மேற்படி கருத்தானது விளக்கமாட்டாது என்ற மனிதத்தின் கருத்தில் முதலாளித்துவ நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் ஒன்றாகக் குழப்பி தேசிய இனப் பிரச்சனையை ஆராய முற்படுகின்றனர். முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டத்தில் இல்லாத தேசிய இனங்கள் இன்றையவுலகில் விழிப்படைவதையும் என்ற வாதத்தில் ஒரு முதலாளித்துவ நாட்டில் புதிதாக ஒரு தேசிய இனம் உருவாகிறது. எந்த நாட்டில் நடந்தது? அடக்கப்பட்ட தேசிய இனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் ஆரம்பம் முதலே இருந்து வந்த தேசிய இனங்கள் இன்று போராட முற்படுகின்றனர். இது மூன்றாம் உலகநாடுகளுக்கு மிகப் பொருத்தமானது. ஏகாதிபத்தியத்தாலோ, முதலாளித்துவ நாட்டிலோ போராட்டமாக தேசிய இனப்போராட்டம் முன்வர வேண்டுமாயின், அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட வேண்டும். அத்துடன் அங்கு சரியான புரட்சிகர சக்தி இல்லாமல் இருக்க வேண்டும். மற்றும் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருக்கும் நாடுகளில் தேசிய இனங்கள் ஒன்று கலக்காததை சுட்டிக்காட்டும் மனிதம், நாடுகளின் அரசு பற்றிய மதிப்பீட்டை இழக்கின்றனர். இந் நாடுகள் தனித்தனியான அரசுகளாகவிருப்பதையும் இவை ஒன்றான நாட்டுக்குள் இல்லாமலிருப்பதையும் பார்க்கத் தவறி, கலப்பு பற்றி கூறி, தீர்ப்பைப் புகுத்திவிட சம்பந்தமில்லாவிடத்தில் பொருத்த முயலும் இப் போக்கு இயங்கியலுக்கு மாறானது.

பலமான முதலாளித்துவ வளர்ச்சி முற்போக்கான தேசியத்தையே தோற்றுவிக்கின்றது. பலவீனமான முதலாளித்துவ வளர்ச்சி பிற்போக்கான தேசியத்தை தோற்றுவிக்கின்றது. என்ற உயிர்ப்பின் கருத்தை மறுக்கும் மனிதம் இது தவறான கருத்தாகும். முதலாளித்துவம் இல்லாத போது புரட்சியாளார்களால் சரியான முற்போக்கான தேசியத்தை உருவாக்க முடியும் என்ற இவ்விவாதம் உயிர்ப்பின் முன்னைய கருத்தை மறுப்பது என்பது அடிப்படையில் என்னத்தை கூறுகின்றார்கள் எனப் புரியவில்லை? பலமான முதலாளித்துவ சக்திகள் இருப்பின், தனது நலனுக்காக தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக போராட முற்படுவதனால் முற்போக்கு தன்மையையே பிரதிபலிப்பார்கள்.

பலவீனமாதாகவிருக்கும் போது சமரசத்தை தரகுமுதலாளிகளுடன் செய்துகொள்வது அல்லது பாட்டாளிவர்க்கத்துடன் இணைந்து கொள்வது நிகழும். மனிதம் கூறிய புரட்சியாளர்கள் சரியான முற்போக்குத் தேசியத்தை உருவாக்க முடியும் என்பதை உயிர்ப்பு சஞ்சிகையும் சுட்டிக் காட்டியுள்ளது. அதை மனிதம் சஞ்சிகையின் பார்வைக்கு முன் வைக்கிறோம். தேசியமென்பதில் அந்தச் சமூகத்தில் பல்வேறு வர்க்கங்களின் நலன்களும் பிரதிபலிக்கச் செய்கின்றன. தேசியவெழுச்சியில் இணைந்து கொள்ளும் ஒவ்வொரு வர்க்கங்களும் தத்தமது நலங்களை மனதில் கொண்டே செயற்படுகின்றன. எந்த வர்க்கம் (மனிதத்தின் பார்வையில் புரட்சியாளர்கள்) தேசிய இயக்கத்தில் தலைமை தாங்குகின்றது என்பதை பொறுத்து தேசிய இயக்கத்தில் முற்போக்குத்தன்மை அமைகிறது. இக் கருத்து மனிதம் கூறிய 22-ம் பக்கத்தில் அடுத்த பந்தியிலிருந்தது. இது மனிதத்துக்கு புரியாத கடுமையான மார்க்ஸியமாகவிருந்ததோ என சந்தேகமாகவுள்ளது.

உயிர்ப்பு தரகு முதலாளித்துவத்தின் தொழிற்படும் முறை பற்றி கூறப்பட்டதை மனிதம் சஞ்சிகை கூறுகின்றார்கள். கோட்பாட்டளவில் பார்த்தால் தரகு முதலாளி வர்க்கம் இப்படியே தொழில்படும். ஆனால் இலங்கையில் தரகுமுதலாளிவர்க்கம் ஒரு இயங்குசக்தியென்று நாம் பார்க்க முடியுமா? தான் திட்டமிட்டு ஏனையவற்றை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக இலங்கையில் தரகு முதலாளித்துவ வர்க்கத்தைப் பார்க்க முடியுமா? குறிப்பாக தமிழ் தரகு முதலாளித்துவ வர்க்கம் இதை விட மோசமான நிலையிலேயேயுள்ளது. என்ற மனிதத்தின் விவாதம் முன்னைய விவாதத்தில் பதிலளிக்கப்பட்டாலும் மீண்டும் பாhப்போமாயின்: இலங்கையில் தரகு முதலாளித்துவ வர்க்கத்தையும் ஒரு இயங்குசக்தியாக பார்க்கமுடியுமா? என்ற கேள்வியிருந்து இலங்கையரசு உட்பட அனைத்தும் வர்க்கமற்ற தன்மையென கூறும் மனிதம் தனது திரிபை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றனர். திட்டமிட்டு இலங்கையரசு (தரகு முதலாளிவர்க்கம்) செயற்பட முடிகின்றதா? இலங்கையில் ஆளும் வர்க்கம் தரகு முதலாளிகள் என்றில்லாமல் வெறும் குழுவாகவா செயற்படுகிறது? இக் குழு இலங்கையின் பொருளாதார அடிப்படையை முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாற்றி அண்டிப் பிழைக்கின்றனர். இவர்கள் இயங்குசக்தியாகவே இருக்கின்றனர். இவர்கள் இன்று பெரும் தோட்டங்களை கைமாற்றுவதும், அடிப்படை விவசாய உற்பத்திகளை ஏகாதிபத்தியம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி மாற்றுவதும், சுதந்திரவர்த்தக வலயத்தை உருவாக்குவதும் இப்படிப் பல. இக் குழுவின் தன்மை தான் தரகு முதலாளித்துவம். இத்தன்மை தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான அம்சமும் கூட. கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளும் மனிதம் தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாட்டை நடைமுறையில் ஏற்கவில்லையென கூற வருகின்றனர். சொந்த நாட்டை விற்கும் இவ்வரசுகள் தரகு முதலாளிகள் அல்லவென வாதிடுவது ஏன்? இது இவர்களுக்கே தான் வெளிச்சம். தமிழ் தரகுமுதலாளி வர்க்கம் இதை விட மோசமான நிலையில் உள்ளது. இது உண்மை தான். சிங்கள தரகுமுதலாளி வர்க்கத்திற்கும் தமிழ் தரகுமுதலாளி வர்க்கத்துக்கும், இடையில் சுரண்டல் தொடாபான முரண்பாடே இன்று தேசிய இனப் போராட்டத்தை, தமிழ் தரகுமுதலாளி வர்க்கம் தனது கையில் எடுத்து தலைமை தாங்கி போராட வைக்கின்றது.

'பணம் படைத்த வர்க்கங்களான முதலாளி, தரகுமுதலாளி போன்ற வர்க்கங்களுக்கு இன்று ஆயுதம் தாங்கிய மக்களை அடக்கியாளும் பாசிச குழுக்களுக்கிடையே உள்ள உறவு என்ன? என்பதே அக் கேள்வியாகும். இலங்கை போன்றவொரு நாட்டில் பாசிசக்குழுக்கள் மக்களை அடக்கியாள அதிகாரத்திற்கு போட்டி போடுகின்றன. பழைய மரபுத்தனமான வர்க்கப்பார்வை எனக் கூறப்படுவதில் விடைகாண முடியாது. அல்லது இது போன்ற குழுக்களில் வெறும் வர்க்கக்கருவியாக பார்க்க முயல்வது தவறு" மனிதத்தின் இவ் விவாதத்தில் பணம்படைத்த வர்க்கத்திற்கும், பாசிசகுழுக்களுக்கும் இடையே என்ன உறவு? இது பற்றி மௌனமாக கேள்வி கேட்பதில் விட்டுவிடுகிறார்கள். தரகுமுதலாளி வர்க்கத்திற்கும் இக் குழுக்களுடையேயுள்ள இவ்வுறவு என்பதை தரகுமுதலாளித்துவத்தை பாதுகாப்பதே என நாம் கூறியதை மரபுத் தனமான வர்க்கப் பார்வையென ஒற்றைவரிகளில் பதிலளிப்பதிலிருந்து எதையும் சொல்லாமல் விவாதிக்க கருத்தின்றி தனது திரிபுகளை திணிக்க முயல்கின்றனர். மீண்டும் கூறுகின்றோம்: இக்குழுக்கள், தரகுமுதலாளிகள் வேறுவேறு என்பதில்லை. மனிதம் முடிந்தால் இயங்கியல் ஆய்வுகளுடன் மரபு வழியான வர்க்கப்பார்வையை நிராகரிக்கட்டும். அதே போல் மரபுத்தனமான மார்க்சியத்தையும் நிராகரிக்கட்டும். பணம் படைத்தவர்களுக்கும் மனிதம் குறிப்பிடும் குழுவுக்கும் இடையேயான உறவைக் கூறட்டும். இவை மனிதம் சஞ்சிகைக்கு முடியாது. ஏனெனில் திரிபுகள் எப்பொழுதும் வெற்றிபெற முடியாதவை.

எமது மக்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய சரியான ஸ்தாபன வடிவமாக பாட்டாளி வர்க்க கட்சியென்ற ஸ்தாபன வடிவம் தான் சரியானதா? இக் கருத்து மனிதம் தன்னை இனம்காட்டுவதிலிருந்து மனிதத்தின் அரசியல் போக்கு முதலாளித்துவ போக்கே. பாட்டாளிகள் அல்லாத ஒரு பிரிவு முற்போக்கான போராட்டத்தில் இறுதிவரை தலைமை தாங்கமுடியுமாயின் யார்? முதலாளிகளா? குட்டிபூர்சுவா வர்க்கமா? அல்லது யார்? இதே நேரம் பின் குறிப்பிடுகிறார்கள். தற்போது மூன்றாம் உலகநாட்டுப் போராட்டங்கள் பல பாட்டாளிகள் என்போர் இல்லாமலேயே முற்போக்காக முன்னெடுப்பதை அவதானிக்கலாம். அப்படியாயின் எந்த நாட்டில்? தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். அவர்களின் தத்துவம் என்ன? முற்போக்காக (இறுதிவரை) முன்னெடுக்கப்படுகிறது என வாய் கூசாமல் பச்சைப் பொய் கூறும் மனிதம், எதையோ திணித்து விடும் போக்கே தொடர்ந்து காணப்படுகிறது. மூன்றாம் உலகப் போராட்டங்கள் பல பிற்போக்கான அனுபவங்கள் இருந்தபோதும் அதற்கான காரணம் பாட்டாளிகள் தலைமை தாங்கவில்லை என்பதல்ல. அப்படியாயின் எந்த வர்க்கம் தலைமை தாங்கியிருக்க வேண்டும். தொடர்ந்து கூறும் மனிதம் நடைமுறையில் அந்த பழைய தத்துவங்கள் இன்றைக்கு எந்த மூன்றாம் உலக நாட்டுக்கும் தீர்வல்ல என்பதில் எம் முன்னுள்ள கேள்வி பழையதத்துவம் இன்றைய காலத்திற்கு தவறானது எனின். எங்கே இயங்கியலுடன் விமர்சித்துள்ளீர்கள். சும்மா கிடைத்த சங்கு என்பதற்காக ஊதுவது ஏன்? பிற்போக்கான வகையில் போராட்டம் சென்ற நிலையில் அங்கு பாட்டாளித்தலைமை இருக்காததை ஒப்புக்கொள்ளும் மனிதம், அது தீர்க்காது என வாதிடுவது எந்த ஆதாரத்தை வைத்து. இன்று மரபுத்தனமான வர்க்கப்பார்வையை கைக்கொள்ளும் பிலிப்பபைன்ஸ், பெரு, எல்சல்வடோர், பர்மா,மலேசியா..... கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசவிடுதலைப் போராட்டத்தை பிற்போக்காகவா முன்னெடுக்கிறார்கள். பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கின் இப்போராட்டம் பிற்போக்காகவா இருக்கும்?

மார்க்சியத்தின் தோற்றம் பற்றி உயிர்ப்பின் கருத்தில் நாம் முரண்படுகிறோம். தூண்டில் கருத்துடன் உடன்படுகின்றோம். இது தொடர்பாக உயிர்ப்பின் விவாதத்தில் விவாதிக்க முற்படுகிறோம். பாட்டாளிவர்க்க சித்தாந்தம் என்ற ஒன்றை மட்டுமே மார்க்சியமாக குறுக்க முனைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இக் கருத்தில் மார்க்சியம் என்பது உலகை பொருள்முதல்வாத நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தியதே. அதை ஏற்றுக்கொள்ளும் சக்தியாக பாட்டாளி வர்க்கம் இருப்பதால் அதை முழுமையாக நடைமுறைக்கு இட்டுச்செல்லும் ஒரு சக்தியாக இருக்கிறது. இதற்கு அப்பால் கருத்துமுதல்வாத நோக்கில் உலகை ஆய்வு செய்யும் யாரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்சியம் என்பது உலகை உள்ளபடி ஆய்வுக்கு உள்ளாக்குகிறது. இதை நடைமுறையில் செய்வது பாட்டாளிவர்க்கம் மட்டுமே. மனிதம் இந்த மார்க்சியத்தையே பழைய வர்க்கப்பார்வை என கூறி நிராகரிக்கின்றனர். தேவையானதையும், தமக்கு சாதகமானதையும் எடுத்துகொள்ளும் மனிதம் நிராகரிப்பை விமர்சிக்க கருத்துப்பலமின்றி திணிக்க முயல்கின்றனர்.

மார்க்சியமென்பது கிழக்கு ஜரோப்பாவின் வீழ்ச்சியின் பின்பு அதிக வாழ்வைக் கொண்டிருக்கிறது என்பதனூடு மனிதத்தின் விவாதம் முன்னைய கருத்துடன் ஒன்றுக்கொன்று முரண்படும் வகையில் திரித்து புரட்டியுள்ளனர். மார்க்சிய வீழ்ச்சியை கூறியவர்கள் பின் வாழ்வைப் பற்றி கூறுகின்றனர். கிழக்கு ஜரோப்பாவின் வீழ்ச்சியென்பது மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து விலகிச் சென்றமையால் தான். கிழக்கு ஜரோப்பாவில் வாழுகின்றது எனின்: இன்று அது உண்மையானதாகவும், சரியாகதாகவும் (மனிதம் கூறுவது போல் பழைய மரபுத்தனமான மார்க்கியமாகவல்ல) இருப்பதால் தான் மனிதம் சொல்லுவது போல்: அதன் இயங்கியல் அணுகுமுறையே ஏனெனில் மார்க்சியத்தின் விஞ்ஞானபூர்வ அணுகுமுறையையே இயங்கியல் இனம் காட்டுகின்றது. இதை கூறும் மனிதம் இதை மார்க்சியத்தின் மரபுத்தனமானது எனச் சொல்லி நிராகரிக்கின்றனா. .பாட்டாளிவர்க்க சித்தாந்தம் மட்டும் மார்க்சியம் என குறுக்க முனைந்தது எனச் சொல்லும் மனிதம், இன்று ஜரோப்பாவில் மார்க்சியம் உயிர்வாழ்வதை இனம் காட்டுவது பாட்டாளிவர்க்க கட்சி மட்டுமே. மனிதம் எதைச் சொல்லுகின்றார்கள் என்பதே மனிதத்திற்கு புரியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அதையே கீழே உறுதி செய்கிறார்கள் மார்க்சினால் கூறப்பட்ட பாட்டாளிவர்க்க சித்தாந்தம் என்பது இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது எனின் ஜரோப்பாவில் உயிர்வாழும் மார்க்சியம் (இவை மார்க்சினால் உருவாக்கப்பட்டது) தவறானதா? இவையெல்லாம் மனிதத்தின் திரிபுகளும் புரட்டல்களுமே.

இதே கட்டுரையில் 35-ம் பக்கத்தில் எந்தவொரு வர்க்கத்தின் நலனும் மறைந்திராமல் ஒரு குழுவின் நலன்களே மறைந்திருக்க முடியும். பாரிய மூலதனம் கொண்ட குழு தனது நலன்களையோ அரசியல் கோரிக்கைகளையோ முன்வைக்க முடியும். கடந்தகால நடைமுறையிருந்து புலிகள் எந்தவொரு வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் தயாராகவில்லை. தமது குழு நலன்களை வைத்தே அவர்கள் செயற்படுகிறார்கள் என்ற வாதத்துக்கு முன்பே பல தடவை பதிலளித்துளளோம். தனது குழு நலன்கள் என்பது எதை? பாரிய மூலதனத்தை கொண்ட குழு தனது நலன் என்பது எதை? இங்கு சுரண்டல் நடத்தப்படவிலையா? சுரண்டும் தன்மை வர்க்கப் பார்வையில்லையா? எந்த வர்க்கத்தின் நலன்களையும் பிரதிபலிக்க புலிகள் தயராகவில்லை என யார் கூறியது? என்ன ஆதாரம்? குழுநலன் என்பது என்ன? இவர்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் என்ன உறவு. இதை மனிதத்திடம் கோருவதுடன் மனிதம் வாசகர்களுக்கு இதை விவாதிப்பதற்கு முன் வைக்கிறோம். அந்த சமூதாயத்தில் நிலவும் அமைப்புக்கள் என எந்த அமைப்புக்களைக் குறிப்பிடுகின்றீர்கள்? அதன் தத்துவம் என்ன? அரசியல் இலக்கு என்ன?

மேலும் பலர் ஒரு பிரச்சனையில் நேரெதிராக இரு முரண்பாடுகளே இருக்க முடியும் என கருதுகின்றார்கள். அது தவறு மாறாக ஒரு பிரச்சனையில் பல தரப்பட்ட முரண்பாடுகள் நிலவ முடியும் என்ற மனிதத்தின் இவ் விவாதம் அடிப்படையில் தவறானது. ஒரு பிரச்சனையில் எப்போதும் எதிரும் புதிருமான இரு கூறுகள் இருக்கின்றது. இதை மாவோ முரண்பாடுகள் பற்றி... என்ற நூலில் தெளிவாக கூறுகின்றார். மாவோ கூறுகின்றார் இயக்கப்போக்கில் உள்ள முரண்பாடுகள் ஒவ்வொன்றிலும் எதிரும் புதிருமான இரு கூறுகள் உள்ளன. இவற்றைக் குறிப்பான இயல்பை வெளிப்படுத்தும் போக்கில் உட்சாரத்தை கண்டறிவது இயலவே இயலாது. நமது ஆய்வில் மிகக் கூடுதலான கவனம் இதில் செலுத்த வேண்டும். பெரும் நிகழ்ச்சிப் போக்குகள் எதை எடுத்துக் கொண்டாலும் அதன் வளர்ச்சிப் பாதையில் பல முரண்பாடுகள் இருப்பதை காணலாம் இது தொடர்பாக லெனின் இயங்கியல் பிரச்சனை பற்றி என்ற கட்டுரையில் கணிதத்திலும்:- கூட்டுதல், கழித்தல்: நுண்ணெண்ணும், முழுவெண்ணும் எந்திரவியலில்: வினையும், எதிர்வினையும்: இயற்பியலில் நேர்மின்னாற்றலும், எதிர் மின்னாற்றலும்: வேதியியலில்: கருக்களின் சேர்க்கையும், பிரிவும் சமூக விஞ்ஞானத்தில்:-வர்க்கப்போராட்டமும் ஆகும். இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிகழ்ச்சிகள். ஒன்றின்றி மற்றது இருக்க முடியாது. எனவே ஒரு பொருளில் எப்பொழுதும் எதிரும் புதிருமான முரண்பாடுகளின் தன்மையிருக்கும். ஒரு பிரச்சனையில் பல தரப்பட்ட முரண்பாடுகள் மட்டும் இருக்க முடியும் என்பது ஒவ்வொரு வர்க்கதிற்கும் இடையேயான முரண்பாட்டை மனிதம் சுட்டிக் காட்டினர். இதுவும் சரியானது. இவை ஒவ்வொரு வர்க்கத்துக்கிடையிலான முரண்பாடுகள் ஆகும. இவை நேரெதிரான தன்மையில் செயற்பட முடியும். இதை மாவோ,லெனின் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

மனிதம் நிராகரிப்பது ஒவ்வொரு பிரிவுக்குமிடையில் எழும் குறித்த முரண்பாடுகளின் நேரெதிர்த் தன்மையே. தொடர்ந்தும் உயிர்ப்பு கூறுவதை மனிதம் மக்களைப் பொறுத்த வரையில் சிங்களப் பேரினவாதத்துகும், தேசியத்திற்கும் இடையிலான முரண்பாடு பிரதான வடிவம் பெறுவதனால்... என்று கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது. முரண்பாடுகள் பற்றி இவ் அணுகுமுறை தவறானது. சமுதாயத்தில் நிலவும் முரண்பாடுகள் ஒன்று பிரதான இடம் வகிக்கின்றது என்ற கருத்தானது ஏனைய முரண்பாடுகள் சமூதாய வளர்சசியில் செலுத்தும் பங்கை மறைமுகமாக மறுப்பதுடன், ஏனைய முரண்பாடுகள் பிரதான முரண்பாட்டின் அடிப்படையிலேயே நிலவுகின்றன என்ற கருத்து உருவாக்கப்படுகின்றது என்ற மனிதத்தின் கருத்தில், உயிர்ப்பு மிகத் தெளிவாக கூறுகின்றது. சிங்களப் பேரினவாதத்துக்கும், தமிழ் தேசியத்துககும் இடையிலான முரண்பாடு பிரதான வடிவம் பெறுவதனால்... என்று கூறுவதிலுள்ள பிரதான வடிவம் என்பதற்கூடாக அவர்கள் சமுதாயத்தில் பல முரண்பாடுகள் நிலவுவதை அங்கீகரித்துள்ளனர். ஆனால் நீங்களோ அப்படி உயிர்ப்பு கூறவில்லையென பின்வருமாறு கூறுகின்றீர்கள். ஏனைய முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சிக்கு செலுத்தும் பங்கை மறைமுகமாக மறுப்பதுடன் கட்டுரையை புரியாத வகையில் உயிர்ப்பு எழுதியதாகப்படவில்லை. மிகத் தெளிவாக ஒரு முரண்பாட்டின் பிரதான அம்சத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பல முரண்பாடுகள் பிரதான முரண்பாடுடன் செயல்படும் என்பதை ஏற்றுள்ளனர். மனிதம் முரண்பாடுகள் பற்றிய இந்த அணுகுமுறை தவறானது என்று உயிhப்பின் கருத்தை மறுத்து தொடங்கும் பொழுது அதில் இன்னுமொரு விடயமும் தொங்கி நிற்கின்றது. அதாவது பிரதான முரண்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் நிலவ முடியம் என்பதே, அத்துடன் ஏனைய முரண்பாடுகள் பிரதான முரண்பாட்டின் அடிப்படையியேயே நிலவுகின்றன என்ற கருத்து உருவாக்கப்படுகின்றது. இவையிரண்டும் அடிப்படையில் தவறானது. இதை மாவோ சிக்கலான வள்ர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகளை காணலாம். இவற்றில் ஒன்று கட்டாயம் முதன்மை முரண்பாடாக காணலாம். இதன் வாழ்வும் வளர்ச்சியும் இருதர முரண்பாடுகளின் வாழ்வையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றது. அல்லது அவைகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்ற முதன்மை முரண்பாடாகவேயுள்ளது. இதை மாவோ முரண்பாடுகள் என்ற நூலில் உதாரணத்தின் ஊடாக முதலாளிய சமுதாயத்தின் முரண்பாட்டில் உள்ள இரு சக்திகள் பாட்டாளிவர்க்கமும் முதலாளிவர்க்கமும் ஆகும். இவை இங்கு முதன்மை முரண்பாட்டை உருவாக்குகின்றன. இந்த முதன்மை முரண்பாட்டால் நிர்ணியிக்கப்படுகின்றது அல்லது இதன் செல்வாக்குக்கு உட்படுகின்ற இதர முரண்பாடுகள் எஞ்சியுள்ள நிலவுடமை வர்க்கத்திற்கும், முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடு பாட்டாளிவர்க்கத்துக்கும், விவசாய சிறுமுதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடு.... என தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். மனிதம் இவையெல்லாம் தவறு எனின், முதலில் மாவோவின் முரண்பாட்டை விமர்சித்து புதிய தத்துவத்தை முன் வைக்க வேண்டும். இதற்கு அப்பால் இடையில் ஒரு வரிகளுக்கூடாக சொல்லுவது அவர்களின் கருத்துக்களுக்கே கருத்துப்பலம் இன்மையை காட்டுகின்றது.

மீண்டும் மனிதம் கூறுகிறது மேல்நிலையில் இருக்கும் முரண்பாடானது ஏனைய மேலாதிக்கத்துக்காக போட்டி போடும் முரண்பாடுகளின் மேல் காத்திரமான பங்காற்ற முடியாது. மனிதம் மேலும் தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்திற்கும், தமிழ்தேசியத்துக்கும் இடையிலான முரண்பாட்டை பிரதானமான முரண்பாடாக காட்ட முனைவது தவறு என்ற கருத்தை முன் வைக்கின்றனர். இப்படி சுட்டிக் காட்டியுள்ளனர். இதில் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்திற்கும் ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு எனக் குறிபிட்டதற்கு மாறாக மேற் கூறியது அமைந்துள்ளது. இந்த விவாதத்தை ஏன் முன் வைக்கிறார்கள் எனின் ஜக்கிய இலங்கைப் போராட்டமே இன்று எமது இலக்கு என வாதிடவே. ஜக்கிய இலங்கை எனின் மனிதம் வைத்த கருத்துக்கு தூண்டில் அளித்த பதிலுக்கு இன்றுவரை கருத்தியல் ரீதியில் விமர்சனத்தை முன் வைக்காமல் இன்று மீண்டும் மறைமுகமாக தமது கருத்தை திணிக்க முயல்வது ஏன்? இது இயங்கியலுடனான விமர்சன முறையல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இனி மனிதம் கூறிய முதன்மை முரண்பாடாக போட்டியிடும் மூன்று முரண்பாடுகளையும் ஆராய்வோம்.

(1) இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்துக்கும் ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு.

(2) இலங்கையில் நிலவும் பாசிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமிடையிலான முரண்பாடு.

(3) இலங்கை மக்கள் மேல் ஆதிக்கத்தை நிறுவமுனையும், நிறுவியிருக்கும் ஏகாதிபத்தியத்துக்கிடையிலான முரண்பாடு.

இதில் மூன்றாம் முரண்பாடு முன்னைய மனிதத்தின் விவாதமான இலங்கையில் தரகு முதலாளிவர்க்கம் ஒரு இயங்குசக்தியென்று நாம் பார்க்கமுடியுமா? தான் திட்டமிட்டு ஏனையவற்றை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக இலங்கையில் தரகுமுதலாளித்துவத்தை பார்க்க முடியுமா? என்ற கருத்துக்கும் முற்றிலும் மாறுபட்டது. ஏன் மனிதத்திற்கு இந்தக் குழப்பம்? முன் சொன்னதற்கு மாறாக சில உண்மைகளை மீண்டும் சொல்லி விடுகின்றார்கள். இனி மூன்று முரண்பாட்டையும் பாhப்போமாயின்: முதலாவதாக மனிதம் குறித்த முரண்பாடு இன்று பிரதான முரண்பாடாக போராடுகின்றதா? நிச்சயமாகவில்லை. இன முரண்பாடு தீவிரமடைய முன் ஜக்கியத்திற்கும், ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு தமிழ்மக்களுக்கும், சிங்கள பேரினவாதத்திற்கும் இருந்த முரண்பாடுகள் ஒன்றையொன்று மிஞ்சி மேல் நிலையை அடைய போட்டியிட்டது. ஆரம்பத்தில் ஜக்கியம் ஜக்கியமின்மைக்கிடையிலான பிந்திய காலத்தில் தமிழ்மக்களுக்கும் சிங்கள பேரினவாதத்திற்குமிடையிலான இனமுரண்பாடு மேல் நிலைக்கு வந்ததை தொடர்ந்து, இம் முரண்பாடே பிரதான முரண்பாடாக மாறியுள்ளது. இக் கட்ரையில் அடுத்த பந்தியில் ஜக்கியம், ஜக்கியமின்மையின் பகுதி முரண்பாடாக இனமுரண்பாட்டை வரையறுக்க முயல்வது இன்றைய நிலையை, இயங்கியலுடன் ஆராயாது தமது முடிவுகளுடன் பொருத்த முனைவதாகும். நாம் தொடர்ந்து மனிதத்தில் கூறிய மூன்று பிரதான முரண்பாட்டில் முன்னணியில் உள்ளது என குறிப்பிட்டதில் நாம் முதலாம் முரண்பாட்டை தமிழ் மக்களுக்கும் சிங்கள பேரினவாதத்திற்குமானதென வரையறுத்துக் கொண்டே ஆராய்கின்றோம்.

இம் மூன்று முரண்பாடுகளும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவையே. பிரதான முரண்பாடு இல்லாதபோது மற்றவை இருக்க முடியாது. இவற்றின் உருவாக்கம் எப்போதும் ஒன்றை மையமாக வைத்தே உருவானது. இலங்கையில் மக்களுக்கும் தரகு முதலாளித்துவத்துக்கும் (ஏகாதிபத்தியத்துக்கும்) நிலப்பிரபுத்துவத்துக்கும் இடையில் முரண்பாடாக இருந்த போதும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் இரு முரண்பாடுகள் அதற்குட்பட்டவையாக, பிரதான முரண்பாட்டுடன் வாழ்வையும், வளர்சியையும் கொண்டிருக்கின்றது. இப் பிரதான முரண்பாடு இன்று நீங்கள் குறிப்பிட்ட முதலாம் இரண்டாம் முரண்பாடாகவே உள்ளது. இம் முரண்பாடே சிங்களப் பேரினவாதத்திற்கும் தமிழ் இனத்துக்குமிடையிலான தேசியப் போராட்டமாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சியில் இன்று பாசிசம் இல்லாமலோ, ஏகாதிபத்திய ஆதிக்கம் இல்லாமலோ இம் முரண்பாடு உயிர்வாழ முடியாது. இதில் தேசிய பிரதான முரண்பாடாக இன முரண்பாடு மாறிய பின் மற்றைய இரு முரண்பாடுகளும் வளர்ந்து மிக இறுக்கமாக இம் முரண்பாட்டுடன் இணைந்துள்ளது. இன முரண்பாட்டை வெற்றி கொள்வதனூடாக மற்றைய இரண்டும் வெற்றி கொள்ளப்பட முடியும்.

இதைத் தொடர்ந்து மனிதம் இன முரண்பாட்டை பகுதி முரண்பாடாக ஜக்கியம், ஜக்கியமின்மையில் உள்ளதெனச் சொல்லிய பின் சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழ்மக்களுக்கும் இடையேயான முரண்பாடு பிரதான முரண்பாடாகவிருந்தால், தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை எப்படி விளக்குவது எனக் கேட்டுள்ளனர். இதில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான முரண்பாடு வளர்ந்து வருகின்றது. இதன் வளர்ச்சியின் போக்கில் தமிழ் இனவாதிகளுக்கும் முஸ்லீம் மக்களுக்குமிடையிலான முரண்பாடு முன்னிலைக்கு போட்டி போட முடியும். இது சிலவேளை சிங்கள முஸ்லீம் மக்கள் இணைந்து தமிழ்மக்களுடன் ஒரு பிரதான முரண்பாடாக மாறலாம். இது முரண்பாடுகளைக் கையாளுவதிலுள்ள தன்மையைப் பொறுத்தது.

தொடர்ந்தும் மனிதம் அளவில் பெரிதாக தெளிவாகத்தெரிவதாக இருக்கும் இந்த முரண்பாட்டையே பிரதான முரண்பாடாக கருதுவது பிரச்சனையை தீர்க்க உதவாது என்ற வாதம் மேற்குறிப்பிட்ட மாவோ,லெனின் விவாதத்திற்கு மாறுபட்ட கருத்தாகும். திரிபுகளுக்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புவது முதலில் மார்க்சிய நூல்களை வரிக்கு வரியாக விமர்சியுங்கள். அதனூடாக புதிய தத்துவத்தை முழுமையாக வையுங்கள். இதற்கு மாறாக இயங்கியலை நிராகரித்து, ஒற்றைவரிகளில் வாசகர்களை திசைதிருப்புவதும், கருத்துக்களை திணிக்க முயல்வதும் விமர்சனம் ஆகாது. அத்துடன் ஒற்றவரிகளில் வைப்பதை(மார்க்சியத்தை தான் விமர்சிக்காவிட்டாலும் பரவாயில்லை) ஆதாரத்துடன் இயங்கியலுடன் முன்வையுங்கள்.

உயிர்ப்பு குறிப்பிட்ட பாசிசம் என்பது குறிப்பான பிரச்சனையாகவும் தமிழ்மக்களின் தேசவிடுதலையென்பது பொதுவான பிரச்சனையாகவும் கூறப்பட்டதை மனிதம் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறும் இக்கருத்தானது, பாசிசத்தை மட்டும் ஒழித்தால்: தேசிய இனப்பிரச்சனையை தீர்த்துவிடமுடியுமென வாதாடுகிறார்கள். பாசிசம் என்பது வேறு ஒரு பிரதான முரண்பாட்டின் இருப்புடன் ஒன்றானது. இது தேசிய இனமுரண்பாட்டின் வளர்ச்சியில் தன்னகத்தே பாசிசத்தையும் கொண்டிருக்கும். இலங்கையில் தீவிரமடைந்த தேசிய இனப்பிரச்சனையுடன் பாசிசம் வளர்ந்து ஒன்று கலக்கின்றது. மக்கள் தேசிய இன முரண்பாடடுக்கு எதிராக போராடும் பொழுது பாசிசம் மக்கள் மீது கட்டவிழ்து விடப்படுகின்றது. இம்முரண்பாட்டில் எழும் கோரிக்கை இல்லாத போது பாசிசம் இல்லாமல் போய்விடும்.

உயிர்ப்பு மேலும் சொன்ன புலிகள் பாசிசம் பற்றிய விமர்சனங்கள் எதுவும் தமிழ் தேசத்துக்குள் தோன்றியுளள்ள உள்முரண்பாடு என்ற எல்லைக்குள்ளாகவே முன்னெடுக்கப்பட வேண்டும. இதை மனிதம் ஒரு சமுதாயத்தில் நிலவும் உள்முரண்பாடு வெளிமுரண்பாடு என்று பார்க்கலாமா? இல்லை என்ற இக் கருத்து அடிப்படை மார்க்சியத்துக்கு விரோதமானது. இதை மாவோ முரண்பாடு பற்றி என்ற நூலில் பொருட்களின் வளர்ச்சியென்பதே அப் பொருட்களின் உள்ளியக்கம் அவற்றின் இன்றியமையா தன்னியக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படைக்கு காரணம் பொருளுக்கு வெளியே இருப்பதன்று, அதற்குள்ளேயே இருப்பதாகும். இது அதற்குள் நிலவும் முரண்பாட்டில் பொறுத்துள்ளது. ஒவ்வொரு பொருளிலும் இந்த உள்முரண்பாடு(அகமுரண்பாடு) இயல்புள்ளது. இக் கருத்து உள்முரண்பாடு வெளிமுரண்பாடு என ஒரு சமுதாயத்தில் ஒரு போராட்டத்தில்... என அனைத்திலும் இருக்கும். எனவே மனிதம் ஏதோவொன்றை நிறுவும் போக்கில் இயங்கியலுக்கு மாறாக, அடிப்படை மார்க்சியத்தை திரித்தும், மறுத்தும் திணிக்கவே முயல்கின்றனர். இம் முறை மார்க்சிய அடிப்படை(மார்க்சிய அடிப்படை தவறு என கூறுகின்றனர்) விவாத முறைக்கே மாறுபட்டதாகும். இருந்தும், மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புவது உங்கள் கருத்துக்களை ஆதாரத்துடன் முன் வையுங்கள். அத்துடன் விவாதத்தை தொடர்ந்து நடத்தும் அணுகுமுறையை கைக்கொள்ளும்படியும் கோருகின்றோம்.

தேசிய சக்திகள் பற்றிய தூண்டில் மீதான விமர்சனம்

தூண்டில் 41-இல் சமர் கூறுவது போல் புலிகள் தரகுமுதலாளித்துவ போக்குள்ளவை தானா என்பது ஆய்வுக்குரியது. ஏன் என்றால் அப்படியடித்து கூறியிருக்கும் காரணங்களைப் போலவே இன்னும் சரியாக கூறுவதானால் அப்படியில்லையென அடித்து கூறவும் காரணங்கள் இருக்கின்றன. புலிகள் தமிழ் தரகுமுதலாளித்துவத்தின் போக்கை காட்டுபவர்கள் என்றால் ஏன் அவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணி போல இன்று விட்டுக்கொடுத்து சரணடையவில்லை? அவர்களுக்கு ஒரு தேசியவாதம் இருக்கிறது. இதன் பின் புலிகளிடம் இருக்கும் சிந்தனை முதலாளித்துவ தேசியவாதத்தில் எவ் வகைப்பட்டது என்று ஆராய்வது அது தரகுமுதலாளித்துவ வகைப்பட்டதா, தேசியமுதலாளித்துவ வகைப்பட்டதா என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. நாம் இந்த இடத்தில் அவசரப்பட்டு தீர்வு சொல்லவிரும்பவில்லை|| பின்னால் தொடர்ச்சியாக புலிகளையும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஒப்பிட்டு மதிப்பிடும் போது அரசியல் நீரோட்டத்தையிட்டு அவநம்பிக்கையுடன் அணுக வைக்கிறது. ஆயினும் இது அதுவாக முடியாது மாறமாட்டாது என அடித்து கூறமுடியாது|| தொடர்ந்தும் உந்த அபிப்பிராயத்திலே புலிகள் தரகுமுதலாளித்துவவாதிகள் அல்ல என்பது தெளிவுதானே? இன்னும் இல்லை அதாவது இன்றுவரை அவர்கள் அந்தப் பிடிக்குப் போகவில்லை. நாளை போகக் கூடும்|| என்ற தூண்டிலின் கருத்துக்களை பார்ப்போமாயின் "புலிகள் தரகுமுதலாளிகள் தானா என்பது ஆய்வுக்குரியது. புலிகள் முதலாளித்துவ தேசியத்தின் எந்த வகையென ஆராய்வது தமிழ் தரகுமுதலாளித்துவமா? தேசியமுதலாளித்துவமா? இது தொடர்பாக அவசரமாக தீர்வு சொல்ல விரும்பவில்லை. மாற மாட்டாது என அடித்துச் சொல்ல முடியாது. இன்னும் இல்லையென்ற" சொற்களுக்கூடாக தூண்டில் தரகு முதலாளிகள் என்பது ஆய்வுக்குட்பட்டதாகவும் இன்னும் நிராகரிக்காத தன்மையுடன் ஆய்வுடன் நிற்கின்றார்கள். மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தில் எந்தவகையென ஆராய்வதும், அது தரகுமுதலாளித்துவ வகைப்பட்டதா? தேசிய முதலாளித்துவ வகைப்பட்டதா? என்பதையும் சுட்டிக் காட்டியுமுள்ளனர். இக் கட்டுரையில் தூண்டில் புலிகள் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு உட்பட்ட ஒரு பிரிவென மட்டும் எனக் கூறி அவர்கள் தேசிய முதலாளித்துவ பிரதிநிதிகளா? அல்லது தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகளா? என்பதை விவாதத்துக்கு விட்டுவிடுகின்றனர்.

தூண்டில் 48-இல் முதலாளித்துவ தேசியவாதம் போன்ற பதங்களை புலிகள் குறித்து பாவிக்கின்றபோது அவர்கள்( சமர்) மறுத்துரைக்கின்ற வேகத்தைப் பார்த்தால் தேசியவாதம் தொடர்பாக அவர்களுக்கும் ஒரு வித தூய்மைவாத அபிப்பிராயம் இருப்பதாக படுகின்றது. இது தொடர்பாக சமருக்கு தூய்மைவாதம் கிடையாது. முதலாளித்துவ தேசியவாதத்தில் தனக்கே உரிய சுரண்டும் இயல்பை சமர் மறுத்துவிடவில்லை. முதலாளித்துவ தேசியவாதத்தில் நீங்கள் குறிப்பிட்ட இரு பிரிவுகளும் ஒன்றாக ஒரு பிரச்சனையை கையாள முடியாது. இதில் தனித்தனியாக ஒவ்வொன்றும் தேசியப் போராட்டத்தை தனது நோக்குநிலையில் நின்று போராட முற்படும் இரண்டும் தேசிய விடுதலைப் போராட்டத்தை தனக்கு சாதகமான பயன்படுத்த முனையும். அதிலிருந்து மக்கள் மீதான ஒடுக்குமுறையும் மாறுபடும் தன்மையிருக்கும். இதில் புலிகள் எந்தப் பிரிவு என்பதிலிருந்தே எமது விவாதம். அன்று பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் புரட்சி செய்த போது அதிலிருந்த முற்போக்கு அம்சங்கள் பின் அவசியமற்றனவாகி விட்டன என்ற கருத்து சரியானது. இதை மூன்றாம் உலகநாடுகளிற்கும் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்காமல் இருக்கும் நாடுகளுடன் பொருத்துவது சரியானதா? இங்கு நிலபிரபுத்துவத்துக்கு எதிரான சக்திகள் முற்போக்கை ஏன் பிரதிபலிக்க முடியாது. இப்படி உருவாகும் தேசிய முதலாளித்துவ வாதிகள் ஒரு பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் முற்போக்காக இருந்தாலன்றி இன்றைய நிலையில் சாத்தியமா? இது தொர்டபாக கீழே ஆராய்வோம.

பிற வர்க்கங்களின் ஜனநாயக கோரிக்கைகள், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பவை பற்றிய அச்சம்|| இவை கூட முன்னையது போல் முதலாளித்துவ தேசிய சக்திகள் முற்போக்காக இருக்க முடியாது எனக் காட்ட முன்னெடுக்கப்பட்ட விவாதமே. இக் கருத்து சோவியத்தின் சோசலிச புரட்சிக்குப் பின் பல நாடுகளில் இருந்தும் முதலாளித்துவ சக்திகள் இணைந்து போராடியுள்னர். உதாரணம் சீனா, நிக்கரக்குவா, கம்பூச்சியா, பிலிப்பையின்ஸ், வியட்நாம்.... இப்படி பல நாடுகளை காணலாம். தூண்டிலின் விவாதம் முற்போக்கைப்பற்றி தீர்மானிக்க ஒரு பூரணமான முழுமையாகப் பார்க்க முடியாது. அன்றைய தேசியவாதத்தலைவர் சன்யாட் சென்னை முதலாளித்துவ தேசியவாதத்தின் பிரதிநிதியாக கருதுகின்றது. சன்யாட் சென் இன்று இருந்தால் கூட அன்று இருந்தது போல் இருந்திருக்க முடியாது||. இதை நாம் ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்கிறோம். அதாவது ஒரு பாட்டாளிவர்க்கம் பலமான நிலையில், ஜக்கிய முன்னணிக்குள்ளோ, வேறு அமைப்பாகவோ சன்சாட்சென் போல ஒருவர் இருக்கமுடியும். சன்சாட்சென் இருந்த காலம் நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பெரிதாக ஏற்படாத, தரகுமுதலாளித்துவம் என்ற சக்தி ஆதிக்கம் பெரிதாக பெறாத காலம். இக் காலத்தில் முதலாளித்துவ தேசியவாதம் காலனியாதிக்கத்தையும் நிலப்பிரபுத்துத்தையும் எதிர்ப்பதாகவிருந்தது. இன்று தரகுமுதலாளித்துவ ஆதிக்கத்துக்குள் முழுமையாக உட்பட்ட நிலையில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் ஆதிக்கத்தை நிகழ்த்தும் அளவிற்கு பலம் பெற்றுள்ளது. தரகுமுதலாளித்துவதிற்கு எதிராக உறுதியாக கருத்தை வைத்து உருவாகாத எந்த சக்தியும் தரகுமுதலாளித்துவத்தின் நேரடி, மறைமுக ஆதிக்கத்துக்குள் செல்வார்கள். இந் நாடுகளில் தேசியமுதலாளித்துவ பிரிவு எப்போதும் உறுதியாக இருப்பதாயின், பாட்டாளிவர்க்கம் பலமான நிலையில் ஒரு ஸ்தாபனமாக மட்டும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பாட்டாளி வர்க்கக் கட்சி பலமாகவில்லாத நிலையில் அங்கே தேசிய முதலாளித்துவம், தரகுமுதலாளித்துக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவகையில் தரகுமுதலாளித்துவததிற்குள் உள்வாங்கப்பட்டு விடுவார்கள். இது எம் மண்ணில் உருவான அனைத்து இயக்கங்களையும் வைத்தே புரிந்து கொள்ள முடியும். தரகுமுதலாளித்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்த சிறு இயக்கங்களான என்-எல்-எவ்-டி- பி-எல்-எவ்-டி-தீப்பொறி சோரம் போகாமல் இருந்ததும், சில இயக்கங்கள் இந்திய சார்பாகவும் (சோவியத் சார்பாகவும்) மாறியதுடன் புலிகள் மேற்கத்தைய சார்பாகவும் செயற்பட்டு வருவதை பார்க்க முடியும். ஒரு சுதந்திரமான தேசிய சக்தியென ஒன்றுமே எம் மண்ணில் இல்லை. ஆகத் தனிநபர்களாக மட்டுமே உள்ளனர். புலிகள் இன்று போராடும் தன்மையை ஏகாதிபத்தியம் தனது நலன் நோக்கி கையாளுவதே இலங்கையிலுள்ள தேசிய இனமுரண்பாட்டில் எழும் போராட்டம் முற்போக்காக நகர்வை தடுக்கவும், ஒரு வர்க்கப்போராட்டம் உருவாகாமல் தடுக்கவும், இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், தென்னாசியாவின் உறுதித்தன்மையை தடுக்கவும்... மேற்கத்தைய ஏகாதிபத்தியம் முயலுகின்றது. இதில் இன்று பயன்படும் சக்திகளில் புலிகளும் ஒன்று. இந்த நோக்கில் பயன்படுத்தப்படும் போது தமிழ் மக்களின் கோரிக்கையை கையில் எடுப்பது தவிர்க்க முடியாது. தமிழர் விடுதலைக்கூட்டணியினர் 1950 முதல் ஒரு மத்தியதர இயக்கமாக வளர்ந்து அதன் வளர்ச்சியில் ஏகாதிபத்தியம் சார்ந்து சென்றதையும் இன்று நாம் பார்க்கிறோம். இவர்களை அம்பலப்படுத்த 30வருடங்கள் சென்றன. இவர்கள் தமிழ் மக்களின் முழுக் கோரிக்கைகளையும்(ஏகாதிபத்தியத்தின் தரகுவாக இருந்து கொண்டே) வைத்து போராடுவது போல் செயற்பட்டனர். இதைப் போல் இன்று புலிகளின் செயற்பாடுகள் தேசியத்தின் மீது செயற்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளைகளாகவும் உள்ளனர். இதை அவர்களின் பல நடவடிக்கைகள் எமக்கு எடுத்துக் காட்டியதை முன்பு சுட்டிக் காட்டினோம்.

தூண்டில் தொடர்ந்து சமர் சொந்த நலன் குழுநலன் என்ற பதங்களைப் பாவிக்கின்றதே ஒழிய தரகுமுதலாளிய வர்க்க நலன் எவை? அதன் அரசியல் கோசங்கள் எவை? அவை எப்படி புலிகளுடன் கோசங்களுடன் பொருந்துகின்றன எனச் சுட்டிக் காட்டவில்லை|| என்ற கருத்து தொடர்பாக முன்பு ஒரளவுக்கு சொல்லியுள்ளோம். இக் கருத்தையொட்டி மீண்டும் ஆராய்வோமாயின் சொந்த நலன், குழுநலன் என சொல்வது குறித்தவொரு பகுதி மட்டும் தங்களை மையப்படுத்தி செயற்படும் தன்மையைத்தான். இத் தன்மை தரகு முதலாளித்துவப் பிரிவுக்கு ஒரு சிறப்பான அம்சம் கூட. இக் குழுநலன் தரகாக இருக்கும் குறித்த பிரிவினரை சிறப்பாக சுட்டிக்காட்ட பயன்படுத்தியதே. இச் சக்திகளின் நலன்கள் ஒரு நாட்டை முழுமையாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் வகையில் கையாள்வதே. தேசியப்போராட்டம் தீவிரமடையும் முன்பே, இலங்கை தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தும், தேசியவிடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த பின் எந்த மாற்றமும் தரகு முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் மீது நிகழவில்லை. தொடர்ந்தும் பேணப்படுவதுடன் மேலும் நாட்டை அடகு வைக்கவும் முயலுகின்றனர். தேசியவிடுதலைப் போராட்டம் தொடங்கிய பின், இருந்த சில தேசிய முதலாளித்துவ சொத்துக்கள், செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட்டது. தேசியவிடுதலைப் போராட்டத்தின் பின் அறிமுகம் செய்த சில உள்நாட்டு உற்பத்திகள் கூட இன்று அழிக்கப்பட்டு விட்டது. புலிகள் போராடப் பயன்படுத்தும் ஆயுதங்கள் முழுமையாக ஏகாதிபத்தியத்திடமிருந்தே பெறுகின்றனர். உள்ளுரில் சில வகையான ஆயுதங்களை தற்போது செய்த போதும் (அவை பெருமளவில் வெளியிலிருந்து கொண்டுவரும் நெருக்கடியினால் தான்) சில அடிப்படை ஆயுதங்களை சுயமாக செய்ய முனைந்தவர்களை(உள்ளுக்குள்)கொன்றுள்ளனர். ஏனெனில் சுய ஆயுதவுற்பத்தி சுயமான விடுதலைக்கு வித்திடும் என்பதாலேயே. புலிகள் பயிற்சி எடுத்த இடங்கள், இன்று சர்வதேச போதைவஸ்துக்களுடன் உள்ள தொடர்பு, மற்றும் யாழ் கடத்தல்காரர்களின் (அன்னியப் பொருட்களை சிங்கள தரகுமுதலாளித்துவத்துக்கு எதிராக கடத்தும் தமிழ் தரகுமுதலாளித்துவம்) ஆதிக்கம் புலிகள் எதைச் சார்ந்துள்ளனர் என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

இன்று சுயவுற்பத்தி கேள்வி தாள்களில் சுயவுற்பத்தியுடன் அமைந்த கேள்விகள், இவைகளை வைத்துக்கொண்டு தேசியத்தின் பற்றினால் தான் வருகிறது எனச் சொன்னால் தமிழர்விடுதலைக் கூட்டணி இப்படி எத்தனையோ கூறினார்கள். குறிப்பான இச் செயற்பாடுகள் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள பொருளாதார நெருக்கடியும் மக்கள் மீதான புலிகளின் பாசிச நடவடிக்கை ஏற்படுத்தும் எதிர்ப்பு உணர்வும், தங்கள் மீது பாயும் என்ற ஒரு அம்சம் காரணமாகவே சுய பொருளாதாரம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் (சிறைகள், நீதிமன்றங்கள், பொலீஸ் சேவை உருவாக்கி ஒரு சிலவற்றை (அரசியல் கைதிகள் அல்ல) விசாரித்து நாடகமாட முற்படுகின்றனர். இவைகளிலிருந்து தேசியம் பற்றி மதிப்பிட முடியாது. புலிகளின் கோசங்கள் அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி 1980க்கு முன் நடத்தியது போலவே உள்ளது. வெளியில் வைக்கும் கோசத்தை மட்டும் வைத்து (அமெரிக்க ஜனாதிபதியின் ஜனநாயகக் கோரிக்கைகள், சீரழிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கோசங்கள் போன்று) நாம் தரகா தேசியமாவென மதிப்பிட முடியாது. அவர்களின் நடவடிக்கை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் தேசியத்தின் பெயரால் ஏகாதிபத்தியத்திற்க்கு சிறப்பாக சேவை செய்கின்றது.

எமது சொந்த மக்கள் உயிர்வாழ பனம்பழத்தைச் சூப்பும் பொழுது, புலிகள் கொக்கோகோலாவும் சீஸ. இன்றியும் வாழ முடியாது உள்ளனர். சொந்த நாட்டின் உற்பத்தியில் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதவர்கள் சொந்த உற்பத்தி பற்றி அக்கறை காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. தேசிய முதலாளித்துவம் எனின் தேசியத்தன்மை தெளிவானதாக இருக்க வேணடும். சொந்தத் தேசத்தில் தேசியம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தேசியம் கட்டியெழுப்ப ஒரு போராட்டத்தில் மிக சாதகமான(புலிகள் இன்று தளப்பிரதேசத்தை) தன்மையை கொண்டுள்ளனர். இன்று அன்னிய சக்திகளின் தயவில் சொந்த உற்பத்தியை தடுக்கும் வகையில் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

"தமிழ் மக்களின் இன்றைய போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டம்|| இதில் சமருக்கு எந்த கருத்து முரண்பாடும் கிடையாது. இப்போராட்டத்தை ஒவ்வொரு சக்தியும் தனது நோக்கில் கையாளும. இதில் புலிகள் தனது நோக்கில் கையாளுகின்றது. புலிகள் என்னும் போது இவ் வியக்கம் ஆரம்பத்தில் குட்டிபூர்சுவா இயக்கமாக இருந்தது. தனது இருப்பையொட்டி தொடர்ந்து ஏகாதிபத்தியத்துடன் சரணடைந்தது. இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மிகத் தெளிவாக இன்று வெளிவருகின்றது. அவர்கள் எந்தப் பின்தளத்தில் நிற்கிறார்கள் எங்கிருந்து உதவியைப் பெறுகின்றார்கள் இவைகள் தொடர்பாக முன்பு நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

நிலவுகின்ற அரசியல் காலகட்டம் இதை எடுப்பின் இலங்கையில் இனமுரண்பாடு பிரதான முரண்பாடாக உள்ள நிலையில், தமிழ் தரகு முதலாளிவர்க்கம் சிங்கள தரகுமுதலாளித்துவத்தின் பாதிப்பால் இவ் இன முரண்பாட்டை சாதகமாக பயன்படுத்துவதில் முனைந்துள்ளது. இதற்கு இசைவாக சர்வதேச நிலைமையுள்ளது. ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனத்தின் ஊடாக மூன்றாம் உலக நாடுகளை கட்டுப்படுத்துகின்றனர். இன்று ஏகாதிபத்தியம் அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ் வகையில் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. இதை பல உதாரணங்கள் மூலம் பார்க்கலாம். பங்களாதேஷ், சூடான், எரித்திரியா, குர்தீஸ், ஆப்கானிஸ்தான்.... இப்படி எல்லாப் போராட்டத்தையும் முழுமையாக ஏகாதிபத்தியம் பயன்படும் வகையில் உள்ளுர் தரகுமுதலாளித்துவம் பயன்படுத்தப்படுகின்றது.

தேசிய முதலாளித்துவ சக்திகள் இருக்க முடியாது என்ற எடுகோளில் இருந்து கட்டியெழுப்பபடும் இந்த தர்க்கம் சமரை அறிpயாமலேயே நடக்கின்ற போராட்டம் தேசியப் போராட்டம் என அங்கீகரிப்பதில் சமரை கொண்டு போய்விட்டு விடுகிறது என்ற தூண்டிலின் வாதத்தில் தேசிய முதலாளித்துவம் இருக்கமுடியாது என்ற வாதம் எப்படி நடக்கும் போராட்டத்தை தேசிய விடுதலைப் போராட்டமா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கின்றது? ஒரு வர்க்கம் இருக்கின்றதா, இல்லையா என்பதில் இருந்து போராட்டத்தை தேசிய போராட்டமாக வரையறுக்க முடியாது. சமர் இன்று தமிழ் மக்கள் முன்னுள்ள போராட்டத்தை தேசிய விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கின்றது. அதிலிருந்தே நாம் விவாதத்தை நடத்துகிறோம். இப் போராட்டத்தை புலிகள் தம் நலன்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதே போல் எல்லா வர்க்கங்களும் தமது நோக்கில் பயன்படுத்த முயலும். மற்றும் தேசிய முதலாளித்துவ சக்திகள் இருக்கமுடியாது என்ற எமது வாதம், மூன்றாம் உலக நாடுகளில் இன்று ஏகாதிபத்தியத்தின் பிடி இறுகி வரும் இன்றைய நிலையில் ஒரு சுதந்திர முதலாளி உருவாக முடியாது. அவர்கள் தரகுமுதலாளியாகவே அன்றி மத்தியதர நிலைக்கோ மாற்றப்பட்டு வருகின்றனர். மத்தியதரத்துக்கு மாறும் இவர்கள் கூட போராட்டத்தில் உள்ள வெற்றியில் நம்பிக்கையிழந்து தரகு முதலாளித்துவத்துடன் இணைந்து கொள்கின்றார்கள். இதை எம் நாட்டில் உருவான இயக்கங்களைக் கொண்டே பார்க்க முடியும். இக் கருத்தையொட்டி மேலும் தூண்டில் தரகுமுதலாளிவர்க்கத்தின் அரசியல் கோரிக்கைகள் எப்படி அமையும் என்று அது குறித்து காட்டவில்லை|| இது தொடர்பாக நாம் விளக்கியுள்ளோம். தரகுமுதலாளித்துவம் அப்பட்டமாக தாம் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என சொல்வதில்லை. அதே போல் அரசியல் கோரிக்கைகளை நேரடியாக வைப்பதில்லை. அதுவும் ஒரு விடுதலை அமைப்பு மேலும் இதை இரகசியமாக கையாண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும். எப்போதும் அரசியல் கோசங்களில் இருந்து ஓரு அமைப்பு பற்றிய முடிவுக்கு வருவதாயின், சரியான கட்சி ஒரு உண்மையான சோசலிச அரசில் மட்டுமே சாத்தியம். இதற்கு மாறாக சுரண்டல் அமைப்புக்களை சரியாக இனம் காண அவர்களின் நடவடிக்கைகள், யாரை சார்ந்துள்ளார்கள் என்பதைக் கொண்டே அறிய முடியும். இதில் புலிகளின் அரசுக்கு எதிரான செயற்பாட்டை நீங்கள் குறித்துக் காட்ட விரும்பலாம். இச்செயற்பாட்டை முன்பு விளக்கியிருந்தாலும் மீண்டும் ஆராய்வோமாயின் தேசியத்தை சொல்லும் அனைவரும் தேசியவாதியாக இருப்பதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக ஹிட்லர், சதாம்உசையின், பிரேமதாசா........ இப்படிப் பார்க்கலாம். மக்களின் தேசிய உணர்வை சிறப்பாக பயன்படுத்தும் இவர்கள் தரகுமுதலாளிகளே. இவர்கள் யாருடன் சிறப்பான உறவை கொண்டிருக்கிறார்கள் எனப் பார்ப்பின் அவர்களின் வர்க்க மூலத்தை பார்க்கலாம். இதை லெனின் ஒரு மனிதனை அவனது நண்பர்களைக் கொண்டு மதிப்பிடலாம். அவனது அரசியல் கூட்டாளிகள் அவனுக்காக வாக்களிப்பவர்கள் ஆகியோரை கொண்டு ஒரு மனிதனது அரசியல் வண்ணம் இன்னதென கூறிவிடலாம் (லெனின் தேர்வு நூல் தொகுதி-2 பக்கம்-240) இதிலிருந்து புலிகளின் நண்பர்கள் தேசியவிடுதலைப்போராட்டத்தை நேசிக்கும் மக்களல்ல ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளுமே.

தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்றவோர் வரையறை, யாருடைய பிரதிநிதியென சொல்ல முடியாது என்பதை தூண்டில் ஒத்துக்கொள்கிறது. புலிகளின் நண்பர்கள் இன்று தெளிவானது. யாருடைய பிரதிநிதியென சொல்ல முடியாது என்பதில் தூண்டில் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லவில்லை என்கிறார்களே. இது சிக்கலான கேள்விதான். சிக்கலுக்கான காரணம் தேசிய விடுதலைப்போராட்ட காலகட்டத்தில் இது இருப்பதே. உதாரணமாக ஜப்பானிய எதிர்ப்பு போராட்டமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போது கட்சி யாருடைய பிரதிநிதியாக செயற்பட்டது என்று சொல்லலாமா? இல்லை, அது முழு மக்களினதும் அனைத்து தேசியவர்க்கத்தினதும் நலன்களை கருத்தில் கொண்டது||. எனவே புலிகள் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுவதை மட்டும் கொண்டு அதை மதிப்பிட முடியாது. யாரின் கூட்டாளியாக செயற்படுகிறது என்பதிலிருந்தே புலிகளைப் பார்க்க வேண்டும்.

அவர்களது போக்கு முதலாளித்துவ தேசியவாதம் என நாம் கூறுகின்றோம். அவர்களின் பின்னால் உள்ள சக்திகள் யார் என்றால் இந்தக் கோரிக்கைகளின் தேசியத்தன்மையின் காரணமாக முழுத்தேசிய வர்க்கங்களுமே நிற்கின்றனவெனக் கூறவேண்டும் என்ற இவ் விவாதம் தொடர்பாக முதலாளித்துவ தேசியவாதம் தொடர்பாக தூண்டிலின் பார்வையில், தரகுமுதலாளித்துவத்தையா அல்லது தேசிய முதலாளித்துவத்தையா பிரதி செய்கிறது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இவர்கள் பின் எல்லா வர்க்கமும் உள்ளது என அவர்களின் அரசியல் கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகின்றனர். அவர்களின் அரசியல் கோரிக்கைகளில் இருந்து அது அல்லது இது என சொல்லமுடியாது என்பதை முன்பே தூண்டில் ஒத்துக் கொள்ளுகிறது. எல்லா வர்க்கமும் அவர்களின் பின்னுள்ளது என்பது எவ்வளவுக்கு சரியானது என்ற கேள்விக்கப்பால் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பானுக்கு எதிராக போராடிய போது, எல்லா வர்க்கத்தையும் பிரதி செய்ததாக கூறிய தூண்டில், புலிகள் எல்லா வர்க்கத்தினதும் தேசிய கோரிக்கையின் பின் அணிதிரட்டியுள்ளதாக கூறி அதை முதலாளித்துவ தேசியவாதம் என எதை அடிப்படையாக வைத்து கூறுகின்றார்கள். முதலாளித்துவ தேசியவாதம் என அடித்து சொல்ல தூண்டில் என்ன அடிப்படையை முன்னெடுத்ததோ, அதே போன்று புலிகள் முதலாளித்துவ தேசியவாதத்தில் தரகுமுதலாளித்துவத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாக அடித்துச் சொல்ல அவர்கள் நண்பர்களில் இருந்தே முடிவுக்கு வரமுடியும்.

புலிகள் சொந்த நலன் குழுநலன் என்பவற்றிற்கு பின்னால் உள்ள கோரிக்கைகள் தமிழ் மக்களின் தேசிய நலங்களுடன் இணைந்த கோரிக்கைகளாக உள்ளன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் புலிகள் ஊசலாடுகின்றனர் என்பது மட்டுமே ஒருவர் இவற்றிலிருந்து வரக்கூடிய முடிவுகள் ஆகும்|| என்ற வாதத்தில் சொந்த நலன் குழுநலன் என்பது ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் தரகுமுதலாளித்துவத்தின் நலங்களே. புலிகள் தமிழ் மக்களின் தேசிய நலனுடன் இணைந்த கோரிக்கைகளுடன் போராடுவதை தூண்டில் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். புலிகள் போன்ற சக்திகளை தூண்டில் கூறுவது போல் குறிப்பிட்ட கட்சி எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பது பற்றிய கேள்விக்கு இது அல்லது அது என திட்டவட்டமாக அதுவும் இதுபோன்ற ஒரு போராட்ட சூழலில் அறுதியிட்டு சொல்வது சாத்தியமில்லை. ஆனால் தூண்டில் முதலாளித்துவ தேசியவாதத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என அறுதியிட்டு சொல்லுகின்றார்கள். இதை எப்படி சொல்லமுடிகின்றதோ அதேபோல் தரகுமுதலாளித்துவத்தை பிரதி செய்கின்றார் என்பதை அவர்களின் நலன்களை பிரதிசெய்யும் குழுநலன், சொந்தநலன் மற்றும் அவர்களின் கூட்டாளிகளும் உறுதி செய்கின்றனர்.

சமரின் கூற்றுபடி புலிகள் தமது நலன்களுக்காகவே தமிழ்மக்களின் நலனை விற்க துணிந்தார்கள். இது முதலாளித்துவ தேசியவாதத்தின் தன்மை அன்றி வேறொன்றும் இல்லை. இவ் விவாதத்தில் தமிழ் மக்களின் நலன்களை விற்க துணிந்தவர்கள் தேசிய முதலாளித்துவம் அல்ல. இதன் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் குணாம்சமே. நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு விற்க முனைவது என்பது தேசிய முதலாளிகள் செய்வதல்ல. இது தரகுமுதலாளிகளின் செயற்பாடாகும். ஏகாதிபத்தியம், இந்தியா, இலங்கையரசுடன் புலிகளின் உறவு தனித்துவத்தை அங்கீகரிக்கவே|| என்ற தூண்டில் வாதத்தில் தனித்துவம் என்ற உறவு என்ன? அங்கீகரிக்க முயலும் இச்சக்திகள், புலிகள் தரகாக மாறும் பட்சத்தில் மட்டுமே அங்கீகரிக்க முயலும். தனித்துவத்தை அங்கீகரிப்பது என்ற கோரிக்கை தனித்துவமான தரகு தொடர்பான அடிப்படையை கொண்டதே. இஸ்ரேல் பயிற்சி கொடுக்கவும், மேற்கு நாடுகள் ஆயுதம் கொடுக்கவும் தரகு முதலாளிகளாக அங்கீகரித்ததன் பின்பே யொழிய தேசியமுதலாளிகள் என்ற அடிப்படையில் அல்ல. புலிகளின் அரசியல் கோரிக்கைகள், தமிழர் விடுதலை கூட்டணியினுடையதை விட முன்னேறியவை. தமிழீழத்தை பெற இந்தியாவை தலையிடுமாறு தமிழர் விடுதலைக்கூட்டணி கேட்டது. புலிகள் இந்திய தலையீடு தமது தனித்துவத்தை அங்கீரிக்காததே|| என்ற தூண்டிலின் இவ் விவாதம் அரசியல் கோரிக்கைகளில் இருந்து முடிவுக்கு வரமுடியாது. அவர்களின் நடைமுறை செயற்பாட்டைக் கொண்டே முடிவுக்கு வரவேண்டும். இது தொடர்பாக மேல் விவாதித்துள்ளோம். தமிழர் விடுலைக் கூட்டணியின் தரகுத்தன்மையை அங்கீகரிக்கவே இந்தியாவைக் கோரியது. இதில் தமிழர்விடுலைக்கூட்டணி, மற்றவர்களுக்கும் பங்கு கொடுப்பதை புலிகள் எதிர்த்தனா. இதில் தனித்துவத்தை என்ற பதத்தை வர்க்கமற்ற தன்மை என்ற கோட்பாட்டுக்குள் (மனிதம் கூறுவது போல்) பார்க்கவில்லையென எடுக்கிறோம். இது போலவே குழுநலன், சொந்தநலன், தனித்துவம்....என்ற பதத்துக்கும் வர்க்கமூலம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். புலிகளின் தனித்துவ கோரிக்கை தரகுமுதலாளித்துவத்தின் நலன்களில் இருந்து எழுந்ததே.

தமிழர் விடுதலைக் கூட்டணியிடமிருந்த தரகுமுதலாளித்துவ சிந்தனை மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் புலிகளின் முதலாளித்துவ தேசியவாதக்கருத்து மக்களை சென்றடையவில்லை|| என்ற தூண்டில் வாதம், தூண்டில் முதலாளித்துவ தேசியவாதத்துக்குள் தேசிய முதலாளித்துவத்தையே சுட்டிக் காட்டுவதாகவுள்ளது. இன்னும் இது அல்லது அது என முடிவு எடுக்கவில்லைவென இதழ்-41-48- இல் சொல்லும் தூண்டில், தங்களை அறியாமலேயே புலிகள் தேசிய முதலாளிகளே என்பதை கட்டுரை முழுக்க வாதிடுகின்றனர். இது மேற்குறிப்பிட்ட வாதத்தில் தெளிவாக வெளிவந்துள்ளளது. மக்களிடம் தரகுமுதலாளித்துவ சிந்தனையுள்ளது எனின், தமிழ் மக்களின் தேசியவிடுதலைப்போராட்டம் தரகுமுதலாளித்துவ போராட்டமாகவா உள்ளது? அப்படியெனின் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப்போராட்டம் தேசியவிடுதலைப்போராட்டமே இல்லையா? புலிகள் முதலாளித்துவ தேசவிடுதலையை (தேசியமுதலாளித்துவ விடுதலையை) முன்னெடுக்கின்றார்கள் எனின், மக்களா எதிராகவுள்ளனர். மக்கள் ஏகாதிபத்தியதை சார்ந்தும் புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவுமாகவா உள்ளனர். தூண்டிலின் ஆய்வு முறையிலுள்ள தவறு, முன்கூட்டியே ஒரு முடிவும் இவ் விவாதத்தை நடத்தக் காரணமாக உள்ளது.

இராஜதந்திரம் எனக்கூறி பலதடவை படுகுழியில் விழுந்த போதும், தமிழ்ப்பகுதியின் அதிகாரத்தை பிறர் கையில் கொடுத்துவிட தயாராகவிருக்கவில்லை|| என்ற தூண்டிலின் விவாதத்தில் அதிகாரம் என்பது சுரண்டலை நடத்துவதே. இச் சுரண்டலின் பங்கு தொடர்பாக இராஜதந்திரம் (இது மக்களை ஏமாற்ற பயன்படுத்தும் ஒருசெயற்பாடு) என்று நடத்திய பேரங்கள்: தோல்வியையும், படுகுழியில் விழுந்ததாகவும் பார்க்க வேண்டும். இதை விடுத்து அவர்களின் அரசியலுக்கு முடியாதுள்ளது|| என்பது அடிப்படையில் தவறானது. சுரண்டலின் பங்கு தொடர்பாக எழுகின்ற பேரங்களில் தோல்வியே ஒழிய தேசியமுதலாளித்துவம் தொடர்பான அரசியல் அல்ல. தேசிய முதலாளித்துவம் எப்பொழுதும் ஏகாதிபத்தியத்துடன் உடன்பட்டு தீர்வு பெறமுடியாது. இந்தியாவிடம் மாதம் 50 கோடி ரூபா பெறவும், இஸ்ரேலிடம் பெற்ற பயிற்சி என்பன மிகச் சிறப்பாக, அவர்களின் பேரங்களை தெளிவாகவும், ஏகாதிபத்தியத்துக்கு துணை போவதையும் காட்டுகிறது.

புலிகளின் பின்னால் உள்ள சக்திகள் உற்பத்திமுறை காரணமாக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் என குறிப்பிடாவிட்டாலும், உள்ளும் வெளியும் உள்ள அதன் திரண்ட ஆதரவு சக்திகளிடம் இருப்பது ஒரு வகைப் பண்டைய பிரபுத்துவ சாயல் கலந்த முதலாளித்துவ தேசியவாதமே. இனவெறியுடன் கலந்து இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்தும் புலிகளுக்கு வேண்டிய ஆதரவு செலுத்துகின்றது. இவ் விடயத்தில். புலிகளின் பின்னால் உள்ள உற்பத்தி முறை தேசியமுதலாளி வர்க்கம் இல்லையென ஏற்றுக் கொள்ளுகிறது. அப்படியாயின் புலிகளின் பின்னால் உள்ளது தேசிய முதலாளித்துவம் இல்லையெனில் தரகுமுதலாளித்துவமே. இதை தூண்டில் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். உள்ளும் வெளியும் திரண்ட சக்திகள்|| எப்பொழுதும் உற்பத்திமுறையை மீறி தம் போக்கில் எதையும் செய்ய முடியாது. உதாரணமாக நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ புரட்சி நடைபெற்ற நாடுகளில், புரட்சியை முன்னெடுத்தோர் முதலாளித்துவ உற்பத்திமுறையை கொண்டிருந்த போதும் அதற்க்கும் உள்ளும் புறமும் பாட்டாளிவர்க்கம் செயலாற்றியது. இதிலிருந்து எது உற்பத்தி முறையை தலைமை தாங்குகின்றதோ அதுவே அதன் இலக்காகும். பண்டைய பிரபுத்துவ சாயம் கலந்த முதலாளித்துவ தேசியவாதமே|| இதில் பிரபுத்துவம் என்பது ஒரு தேசவிடுதலைப் போராட்டத்தின் எதிரியே. அதனுடன் கூட்டுச் சேர்ந்திருக்கக்கூடிய ஒரே வர்க்கம் தரகுமுதலாளித்துவமே. அதாவது இது மூன்றாம் உலக நாடுகளில் எல்லாவரசுகளிலும் காணப்படும் இயல்பே.

இந்திராவைக் கொன்ற சீக்கியரை மதவெறிப் படுகொலையாளர் என வர்ணித்த புலிகள் தான் ராஜீவையும் கொன்றார்கள் இது புலிகளின அரசியலுக்கும், அதன் நலன்களுக்கும் உகந்த விதத்தில் என்ற விவாதத்தில் புலிகள் இந்தியாவை பயன்படுத்தும் நோக்கில் 1984 இல் வெளியிட்ட கருத்தே. அதாவது புலிகள் ஏகாதிபத்தியத்திடம் முழுமையாக சரணடையாத நிலையில், இந்தியாவின் கால்களில் விழும் நிலையிலிருந்த காலகட்டத்தில் நடந்தவை. இராஜிவ்வின் கொலை என்பது வெறும் புலியின் பழிவாங்கல் என்ற நிலைக்கப்பால், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நிகழ்த்தப்பட்டது. மார்க்சின் மேற்கோளை முன்வைத்து அதன் அடிப்படையில் தனது அரசியல் கோரிக்கையை முன்வைப்பார் என்ற இவ் விவாதம் தொடர்பாக முன்பு விவாதித்துள்ளோம் .இங்கு மார்க்சின் கருத்து முதலாளித்துவ நாட்டில் உள்ள குட்டிபூர்சுவா வர்க்கமும் , அதன் நிலையையொட்டி வைக்கப்பட்டதே. அங்கு குட்டிபூர்சுவா வர்க்கம் தனது அரசியல் கோரிக்கைகளை (அன்று அக் கோரிக்கைகள் முற்போக்காக இருந்தது) நேரடியாக முன்வைத்தனர். மூன்றாம் உலக நாடுகளில் அதுவும் எமது போராட்டம் போன்ற தேசியவிடுதலைப்போராட்டத்தில் துர்ண்டில் கூறியது போல் அது அல்லது இதுவென திட்டவட்டமாக கூறமுடியாத ஒரு நிலையில், அரசியல் கோரிக்கைகளை கொண்டு அதன் வர்க்கமூலத்தை இனம் காண முடியாது. அரசியல் கோரிக்கைகளுக்கப்பால் அவர்களின் செயற்பாடுகளையும் நண்பர்களையும், உற்ப்பத்தியுறவுகளுடன் உள்ள தொடர்புகளையும் கொண்டே அவர்களின் வர்க்க மூலத்தை ஆராய வேண்டும். இன்று கம்யூனிஸ்டுக்கள் என சொல்லும் முதலாளித்துவவாதிகளின் அரசியல் கோரிக்கைகள், அமெரிக்க ஜனாதிபதியின் ஜனநாயக கோரிக்கைகள், இவைகளையெல்லாம் அரசியல் கோரிக்கைகளாக கொண்டு வர்க்க மூலத்தை ஆராய்ந்தால் அவர்கள ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு மாறுபட்ட வகையில் அடங்குவர். எனவே அரசியல் கோரிக்கைகளை ஆய்வுக்கு எடுப்பின், குறித்த சக்தி குறித்த போராட்டத்தில் முற்போக்கான நிலையில் இருந்தால் மட்டுமே அரசியல் கோரிக்கைகளிலிருந்து முடிவுக்கு வந்தடைய முடியும்.

புலிகள் தரகுமுதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்றால் ஒடுக்கப்பட்ட தேசம் ஒன்றின் தரகுமுதலாளித்துவம் போகக்கூடிய உச்சவெல்லைக்கு அது போயிருக்க வேண்டும். இந்தியவரசை முற்றாக நம்பி ஆயுதங்களை ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது இலங்கையரசின் ஒற்றையாட்சி அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கவேண்டும்|| தூண்டிலின் இவ் விவாதத்தை எடுப்பின் புலிகள் சமரசத்துக்கு போகமாட்டார்கள் என்பதை (எதிர்காலத்தில்) தூண்டில் மறுக்கமாட்டார்கள். அப்படி போனவுடன் அவர்களை தரகுமுதலாளிகள் என வரையறுக்க தூண்டில் உடன்படுகிறது. இப்பிரச்சனையில் இபNபாது புலிகள் என்னவென்பதே நாளை போவார்கள் எனின், இன்று அவர்கள் தரகுமுதலாளிகளே. இந்திய விடுதலைப்போராட்டத்தில் காந்தியின் செயற்பாடு தேசிய முதலாளித்துவமா? தரகுமுதலாளித்துவமா? காந்தி தரகுமுதலாளியாகவே செயற்பட்டவர். இதை காந்தி எழுதிய பல கடிதத்தில் ஒன்றை முன் வைக்கின்றோம். 1930-இல் வைசிஸ்ராஜ்வுக்கு எழுதிய கடிதத்தில் தமது இயக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து துவங்கப்பட்டதில்லை என்றும், இந்தியப் புரட்சி இயக்கத்தை எதிர்த்தே என துவங்கப்பட்டது என எழுதியுள்ளார். இன்னுமொரு இடத்தில் காந்தி வர்க்க யுத்தத்தை தடுப்பதற்கு எனது செல்வாக்கின் முழுப்பலத்தையும் பயன்படுத்துவேன் என்பதை பற்றி நீங்கள் உறுதியாகவிருக்கலாம். உங்களிடமிருந்து (நிலப்பிரபுகள், தரகுமுதலாளிகள்) சொத்துக்களை பறிக்க அநீதியாக ஒரு முயற்சி நடந்தால் அப்போது உங்கள் பக்கம் சேர்ந்து கொண்டு இந்தக் காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காணலாம் என காந்தி எழுதியுள்ளார். காந்தியின் போராட்டத்துக்கும் புலிகளின் போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு? ஆக அகிம்சை, ஆயுதப்போராட்டம் மட்டுமே. இதற்கப்பால் ஏகாதிபத்தியத்தின் சிறந்த பிரதிநிதிகளாக இருவரும் இருந்தனர். மேற்குறிப்பிட்ட காந்தி தொடர்பான விடயம் புதியஜனநாயக வெளியீடான காந்தி காங்கிரஸ் துரோக வரலாறு என்னும் புத்தகத்தில் தொகுக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்தை சார்ந்து எப்படி ஒரு விடுதலை அமைப்பு செயற்படுமென்பதற்கு பல விடயங்களை இப் புத்தகத்தில் பார்க்கலாம். இது ஒருபுறம் இருக்க இந்தியாவிடம் முற்றாக அடிபணிய மறுத்ததற்கும், புலிகள் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததும் இந்தியாவிடம் முற்றாக சரணடைய முடியாததற்கு முக்கிய காரணமாகும். தரகை மாற்றுவது தொடர்பாக இந்தியா தொடர்பாகவிருந்த அச்சம் கூட புலிகள் ஊசலாடியது. இலங்கை அரசுடன் ஆன உறவென்பது மேற்கத்தைய நாடுகளின் தேவையோடு அமைவதே. இன்று எழுந்துவரும் தேசிய விடுதலைப்போராட்டத்தை பயன்படுத்தி, தென்னாசியாவின் சமநிலையை உடைக்கவும், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்துக்கு மோதலை நடத்துவது தேவையாகவுள்ளது. ஒரு ஏகாதிபத்தியம் தனது தேவையுடன் முரண்பட்ட சக்திகளைப் பயன்படுத்தும். இதை தூண்டில் மறுக்காது என நினைக்கிறோம். அந்த வகையில் இன்று புலிகளின் மோதலைப் பார்க்க வேண்டும். ஆனால் நாளை தென்னாசியாவின் பலம் பலவீனத்துடன் சமரசம் ஏற்படும். மற்றும் புலிகள் சார்ந்த தமிழ்தரகுமுதலாளிக்கும் சுரண்டலில் பங்கு தொடர்பாக இந்தியா சார்ந்த தமிழ் தரகுமுதலாளிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடு சமரசம் அடையமுடியவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி (தமிழ் தரகுமுதலாளித்துவ வேறு ஏகாதிபத்திய பிரதிநிதிகள்) சிங்கள தரகுமுதலாளித்துவத்துடன் நீண்டகாலமாக மோதியதும் இதன் தொடர்ச்சியாக இனப்போராட்டத்தை நோக்கி விரிவுபட்டு இன்று இனமுரண்பாடாக மாறுபட்டுவிட்டது.

இந்தியப்படையை எதிர்ப்பது என்பது தரகுமுதலாளித்துவத்தின் எல்லை மீறிய அரசியல் நடவடிக்கைகள் அப்படியெனின்|| சதாம் உசையின், கடாபி, பனாமா அதிபர்.... இவர்கள் தேசிய முதலாளிகளா இங்கு ஒரு ஏகாதிபத்தியம் தனது தேவைக்காக புலிகள் போன்ற சக்திகளை பயன்படுத்தும். அந்த வகையில் இந்தியா என்ற பிராந்திய ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராக ஏகாதிபத்தியம் பயன்படுத்தியது. இதே போல் பிரேமதாசாவையும் பயன்படுத்தியது. பிரேமதாசாவின் இந்தியப் படையே வெளியேறு என்ற கோசம், தேசியமுதலாளித்துவத்தின் கோசமல்ல. இது தரகுமுதலாளித்துவத்தின் கோசமே. எனவே தரகுமுதலாளிகளிடையே மோதல்கள் நிகழும். இதைக் காண தூண்டில் தவறிவிடுகிறது. இறுதி முடிவில் தூண்டில் முதலாளித்துவ தேசிய வாதம் என்பதை அது அல்லது இது, அதாவது தரகு முதலாளித்துவமா? தேசிய முதலாளித்துவமா? என வரையறுக்காமால் விட்டுவிடுகின்றனர். இடைக்கிடை தரகுமுதலாளித்துவம் இல்லையென அடித்து வாதிட முற்படுகின்றனர். தூண்டில் இவ் விவாதத்தில் புலிகளின் போக்கை தரகுமுதலாளித்துவம் என ஒரு பக்கத்தில் ஏற்கத்தான் செய்கின்றனர். ஆனால் அதை மறுத்துவிடவும் செய்கின்றனர். ஆனால் மொத்தத்தில் கட்டுரை முழுமையாக தரகுமுதலாளித்துவத்தின் பக்கத்தை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

உயிர்ப்பில் வெளிவந்த தேசிய சக்திகள் பற்றிய என்ற கட்டுரை மீதான எமது விவாதம்.

இக் கட்டுரை தேசியமுதலாளித்துவத்தை பிரதிபலிக்கவில்லையென்பதை சொல்லி விடுவதால் அது பற்றி விவாதிக்க முற்படவில்லை. இங்கு தமிழ் தரகுமுதலாளித்துவம். உதிரி முதலாளித்துவம் என்ற கருத்து தொடர்பாகவே இவ் விமர்சனம் அமைகின்றது.

பக்கம் 22-இல் தமிழ் தேசியமானது சிங்களப்பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்திலேயே உண்மையில் தோற்றம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பின் அதிகாரத்துக்கு வந்த சிங்கள தரகுமுதலாளித்துவ இனவாதக் கண்ணோட்டத்தில் முன்னெடுத்த இனவொடுக்குமுறை இக் கருத்து சரியானதே. ஆனால் தரகுமுதலாளித்துவ வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் திடீரென தோன்றவில்லை. காலனிவாதிகளுடன் பேரளவில் (சிலவேளை) எதிர்ப்பை தெரிவித்தாலும் அவர்களுடன் இணைந்தே சுரண்டியவர்கள் காலனியாதிக்கம் இருந்த காலத்தில் முதலாளித்துவ சக்திகள் மட்டும் இருந்ததாக மட்டும் சுட்டிக்காட்டும் உயிர்ப்பு: பக்கம்-21-இல் காலனிநாடுகளில் பொருளாதாரத்தை தனது நாட்டின் முதலாளித்துவ உற்பத்திமுறையுடன் பலவந்தமாக பிணைத்து விடுகின்றனர். இப்படியாக ஆதிக்க நாடுகளின் நலன்களுக்கு கீழ்ப்பட்ட விதத்திலேயே உள்ளுர் முதலாளித்துவம் தோன்றவும் வளரவும், ஆதிக்க நாடுகள் அனுமதியளிக்கின்றன என்ற வாதம் முன்பு குறிப்பிட்ட சுதந்திரத்தின் பின் தரகுமுதலாளிகள் இருந்தது என்ற கருத்துக்கு முரணானது. வளரவும் தோன்றவும் முதலாளித்துவத்தையல்ல தரகுமுதலாளித்துவத்தை தான் அனுமதித்தது. பக்கம்-21-இல் மீண்டும் சாராய குத்தகைகளிலும், காரீய சுரங்கங்களிலும் மூலதனமிட்டவர்கள் பிரித்தானியருடன் மோதவில்லை. மாறாக தமிழ், முஸ்லீம் வர்த்தகருடனேயே மோதினார்கள்||| என்ற வாதத்தில் குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் தேசியமுதலாளிகள் என்பதைவிட பிரித்தானியா ஆட்சியாளர்களின் கையாட்களாகவே (தரகுமுதலாளிகள்) செயற்பட்டவர்கள் இதன் தொடர்ச்சியாகவே நீங்கள் கூறுவது போல் சுதந்திரம் பெற்ற பின் ஆட்சிக்கு வந்த தரகுமுதலாளிகள் இனவாதத்தை தொடர்ந்து பேணமுடிந்தது.

பக்கம் 24-இல் எந்தவொரு தேசிய இனப்பிரச்சனைக்கும் முதலாளித்துவத்தினுள் முரணற்ற ஜனநாயகத்தின் மூலம் தீர்வு காணலாம் என்ற விவாதம் முதலாளித்துவத்தினுள் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் எனச் சொல்லப்படுகின்றது. இங்கு பிரச்சனையாகவுள்ளது முரணான ஜனநாயகமும், முரணற்ற ஜனநாயகமுமே என உயிர்ப்பு சுட்டிக் காட்டுகின்றனர். முதலாளித்துவத்தில் ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்குமானதல்ல, அது முதலாளிகளுக்கு மட்டுமே உரித்தான ஜனநாயகம். முதலாளித்துவத்துக்கு மட்டுமே உரித்தான ஜனநாயகம் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒருக்காலும் தீர்வுக்கு இட்டுச்செல்லாதது மட்டுமின்றி சுரண்டலை இனப்பிரச்சனையுடன் இணைத்தே மேலும் கூடுதலாக சுரண்டும்.

பக்கம் 24-இல் ஏகாதிபத்தியத்தின் நலன்களுடனும் இந்திய மேலாதிக்க நலன்களுடனும் இது ஏற்கனவே முரண்பட்டுள்ளமை இதன் முற்போக்கு பாத்திரத்தின் வெளிப்பாடாகும்|-| இவ் விவாதத்தில் புலிகள் பாத்திரத்தை இப்படி சொல்லுகிறார்கள். இது சரியானது அல்ல. மோதல்கள் இரண்டு விதமாக இருக்கமுடியும். உயிர்ப்பு குறிப்பிட்டது போல் நிகழும் அல்லது ஒரு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இன்னுமொரு ஏகாதிபத்தியத்தியத்தின் வழிகாட்டலுடன் மோதல் நிகழும். இதில் புலிகளின் பாத்திரம் எந்தவகையானது எனின் ஏகாதிபத்தியத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலானது.

பக்கம் 25-இல்~~குறிப்பிட்ட வரலாற்று சக்தியின் உருவாக்கத்தின் பின்பே குறிப்பிட்ட கருத்துக்களும், தத்துவங்களும் உருவாகின்றன. மார்க்ஸியம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் தோற்றத்திற்கு முன்பே தோன்றியதல்ல என்பது தானே. இக் கருத்தில் தூண்டிலின் கருத்து சரியானதென நாம் பார்க்கிறோம். குறித்த சக்தி யதார்த்தத்தில் இருக்காமையிலேயே கருத்து இருக்கமுடியும். உதாரணமாக கம்யூனிசம் உருவாகாமலேயே கம்யூனிஸ்ட் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. பாட்டாளிவர்க்க கட்சி இல்லாமைலேயே ஒரு நாட்டில் கட்சி குறித்து கருத்திருக்க முடியும். முதலாளித்துவம் தோன்ற முன்பே ( நிலப்பிரபுத்துவக்காலத்தில்) முதலாளித்துவக் கருத்துக்கள் இருந்தன. ஒருவன் முதலாளியாக இல்லாமலேயே அவன் முதலாளித்துவ சிந்தனையை கொண்டிருக்க முடியும். பாட்டாளியாக இல்லாமலேயே பாட்டாளி வர்க்க சிந்தனையிருக்க முடியும். குறித்த சக்தி இல்லாமேயே கருத்து உருவாக முடியும்.

பக்கம்-28-இல்~~ஜனநாயகம் இல்லாததால் தரகுமுதலாளித்துவத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாக கூறுவதோ|| பக்கம்-29-இல்~~ சமர் நாட்டில் தேசிய முதலாளிகள் இல்லாமல் இருப்பதும், புலிகள் முதலாளித்துவ சித்தாந்தத்தை கொண்டிருப்பதால் அவர்கள் தரகுமுதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும், புலிகளின் பாசிசமானது இதன் குறிப்பான குணம் குறி|| என உயிர்ப்பு குறிப்பிடுவது தலைகீழான அகநிலைக் கண்ணோட்டமே. ஏனெனில் சமர் புலிகள் மீதான ஆய்வின் மீது பல ஆதாரங்களை நீங்கள் குறிப்பிட்ட விடயத்துக்கு அப்பால் முன்வைத்துள்ளது. புலிகளின் இன்றைய சர்வதேச உறவுகள், ஏகாதிபத்தியத்திடம் பயிற்சிகள் பெற்றதும், முதலாளித்துவத்துக்குட்பட்ட அனைத்து பிரிவு மக்கள் மீதும் நடத்தும் சுரண்டல் இலங்கை இந்திய அரசுக்களுடன் நடத்திய பேரங்கள் (இவை தமிழ் மக்களின் பிரச்சனைகள் மீதல்ல........) இப்படி பல.

பக்கம்-31-இல் ~~எமது போராட்டத்தில் தோன்றிய பல்வேறு அரசியல் போக்குகளையும் இப்போது இனம் காண முயல்வோம். தமிழ்தேசத்தில் ஆரம்பமான பூர்சுவா ஜனநாயகப் போராட்ட வடிவங்களாக இருந்தன. பாராளுமன்றவாதம், அகிம்சைப் போராட்டங்கள், பேரம் பேசுதல், பேச்சுவார்த்தைகள், அரசுடன் இணக்கங் காணுதல், அரசு உறுதிமொழிகளை கைவிடுதல்|| என்ற இவ் விவாதத்தில் போராட்டவடிவங்கள் என குறிப்பிட்ட சம்பவங்கள் பூர்சுவாவுக்கு மட்டுமானதில்லை. இதிலிருந்து தவறான முடிவிற்கு வந்தடைகின்றனர். குறித்த போராட்டவடிவங்களை தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் கூட முன்னெடுக்க முடியும். ஆரம்ப போராட்டங்கள் தரகுமுதலாளித்துவ கோரிக்கையாகவேயிருந்தது. மேற்குறிப்பிட்ட போராட்டவடிவங்களை தமிழ்தரகுமுதலாளித்துவ வர்க்கம், சிங்கள தரகுமுதலாளித்துவ வர்க்கத்துடன் மேற்கூறிய வழிகளில் போராடினார்கள். இதை நீங்கள் பக்கம்-32-இல் ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். ஆரம்பகால தேசியமானது தமிழ்தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கிறது எனலாம். அரசுடன் சமரசம் செய்தல், சலுகைபெறுதல் போன்றவை ஏகாதிபத்திய சார்புநிலைகளே|| பக்கம்-33 இல் ~~ தமிழ் சமூகத்தில் பலம் பெற்று நிற்கும் வர்க்கங்கள் இவர்களை தனது சித்தாந்த செல்வாக்குள் கொண்டு வருவது கஸ்டமானதல்ல. தனித்துவமான சித்தாந்தம் என்றவொன்று புலிகளிடம் இல்லாத போது இது சிரமமானதில்லை|| இக்கருத்து புலிகளின் வர்க்க அடிப்படையை நிராகரிப்பதாகும். பின்பு பக்கம்-34-இல் புலிகளின் சித்தாந்தம் தொடர்பாக இவர்களின் வர்க்க மூலங்களின் ஒன்றான உதிரி முதலாளித்துவத்தின் தன்மையென்று இன்னுமொரு விளக்கமாகும். புலிகளுக்கு ஏதோவொரு சித்தாந்தம் இருக்கின்றது. அது இல்லையென வாதிட முற்படுபவர்கள் மார்க்ஸிச அடிப்படையையே நிராகரிப்பதற்கு இட்டுசெல்வார்கள்.

பக்கம் 29-இல் சில அமைப்புக்கள் வல்வெட்டித்துறையுடன் கொண்டுள்ள உறவுகளையும் கருத்தில் கொண்டால் கள்ளக்கடத்தலில் ஈடுபடும் உதிரிமுதலாளிகளின் பிரிவு ஒன்று சில அமைப்புக்களுடன் கொண்டுள்ள தொடர்பு. பக்கம்-31-இல் தமிழ்பிரதேசத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கள்ளக்கடத்தல் குறிப்பிட்ட தொழிலாகவே நடைபெற்று வந்தது. கடந்த காலத்தில் தழிழ் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கையில் இதன் பங்கு என்ன? இந்த உதிரிமுதலாளிகள் சமூகத்தில் வகிக்கும் இடமென்ன? பக்கம்-34-இல் சமூகநலன்களின் அக்கறையின்மை தரகுமுதலாளிகளுடன் கூட இணக்கம் காணமுடியாத தன்மை, போதைப்பொருட்கள் மற்றும் பலவிதமான சமூகவிரோத நடவடிக்கைகளுடனான தொடர்பு போன்ற அம்சங்கள் இவர்களது வர்க்கமூலங்களின் ஒன்றான, உதிரி முதலாளித்துவ வாக்கத்தின் தன்மைக்கு இன்னுமொரு விளக்கமாகும். மேற்குறிப்பிட்ட பிரதிநிதிகள் புலிகளென கூற முயல்கின்றனர். தரகுமுதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இல்லையென சொல்லி முன்வைக்கும் இக்கருத்துக்கு மாறாகவே பலதடவை புலிகள் தரகுமுதலாளிகள் எனச் சொல்லியும் விடுகிறார்கள் . பக்கம்-34-இல் குட்டிமுதலாளித்துவ அமைப்பாக தோன்றிய புலிகள் வளர்ந்துவிட்ட தமது சமூகஅந்தஸ்து, அதிகாரம் காரணமாக பெருமளவு மூலதனத்தை திரட்டிக்கொண்டு தரகுமுதலாளிவர்க்கமாக வளர்ந்து வரும் ஒரு வளர்ச்சி கட்டத்திலிருக்கின்றார்கள். பக்கம்-32-இல் தமிழ்சமூகத்தில் பலம்பெற்று நிற்கும் வர்க்கங்கள் இவர்களை(புலிகளை) தமது சித்தாந்த செல்வாக்கிற்குள் கொண்டு வருவது கஸ்டமானதல்ல. பக்கம்-33-இல் புலிகள் ஏனைய அம்சங்கள் சுயசார்பு பொருளாதாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூர்சுவா ஜனநாயகம் போன்றவற்றில் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் பண்புகளுக்கும் எதிராகவேயுள்ளார்கள். .பக்கம்-33-இல் புலிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் செயற்படும் சில சக்திகள் திட்டவட்டமாக அமெரிக்க ஏகாதிபத்திய சார்புடையவர்கள் என்பது கவனிக்கதக்கது. புலிகள் பலவிதத்திலும் முன்னெடுக்கும் தமது அரசியல் மூலம் வெளிப்படுத்தும் அந்த வர்க்கத்தின் உடையவை. பக்கம்-33-இல் திட்டவட்டமான, உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு கிடையாது.(இதில் நாம் உறுதியான ஏகாதிபத்திய சார்பு உண்டு எனக் கருதுகின்றோம். இதில் ஏகாதிபத்தியத்தியத்திற்கு இடையிலான முரண்பாடுகளையும், அதன் முகவர்களையும் ஒன்றாக இருக்கமுடியாததையும் உயிர்ப்பு பார்க்க தவறுகின்றது.)

தமது குழுநலன்களுக்கு ஏற்ப இந்திய அரசையோ, இலங்கையரசையே இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளையே காலத்துக்கு காலம் சார்ந்து நின்று பக்கம் 32-இல் சுயவுற்பத்தி போன்றவற்றில் எந்த அக்கறையும் காட்டாத இவர்கள் இறக்குமதியாகும் அல்லது தென்னிலங்கையிலிருந்.து கொண்டுவரும் பொருட்களுக்கு வரிவிதிப்பதையே. பக்கம்31 இல் தமக்கென (வறியவிவசாயிகள், வறிய மீனவர்கள்) ஒரு வர்க்க ஸ்தாபனத்தையோ தனியான அரசியல் கோரிக்கையோ முன்னெடுக்காது தரகுமுதலாளித்துவ சக்திகளையே பலப்படுத்தி வருகின்றனர். .பக்கம்-30-இல் பணக்கார விவசாயிகள் பணக்கார மீனவர்கள்(மீனவமுதலாளிகள், சம்மாட்டிகள்)போன்றோர்களும் நவீன உற்பத்தி முறைகள் காரணமாக ஏகாதிபத்திய பொருளாதார வலைப்பின்னலுடன் நெருக்கமாக பிணைந்துள்ளார்கள். இவர்கள் தரகுமுதலாளி வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்|-. பக்கம்-30 இல் சந்தையில் தமக்குரிய பங்கை சிங்கள முதலாளித்துவ வர்க்கமானது கொடுக்க மறுத்தனர். தமிழ்தரகுமுதலாளிவர்க்கமானது தேசியத்தை முன்னெடுக்க நேர்ந்துள்ளது.||. பக்கம்-30 இல் இன்னும் கூட தனது பிழைப்புக்காக (தரகுமுதலாளிகள்) பல தொடர்புகளை அரசுடன் கொண்டுள்ளது. அரசுடன் சமரசம் செய்து வைக்க முயலும் தொடர்பாளராக செயற்படும் கொழும்பிலுள்ள பிரமுகர்கள் குறிப்பாக இந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சிங்கள அரசை இவர்கள் எதிர்த்தாலும், ஏகாதிபத்தியத்தையே, அதன் சுரண்டல்களையே எதிர்க்கமாட்டார்கள். பக்கம்-28-இல் தரகுமுதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்திய(புலிகளை ஏகாதிபத்திய சார்பாளர்கள் என உயிர்ப்பு ஏற்றுகொள்கிறது.)சார்பாகவே முன்னெடுக்கின்றது||. பக்கம்-28-இல் பல்வேறு ஏகாதிபத்தியங்கள் முட்டிமோதிக்கொள்ளும் நிலையில் காலனி நாட்டிலுள்ள ஒரு ஏகாதிபத்தியங்களை சார்ந்த: (இது காலனி இல்லாத இலங்கை போன்ற நாடுகளுக்கும்) தரகுமுதலாளித்துவ வர்க்கமானது, இன்னொரு ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தேசியத்தை சார்ந்து நிற்கவோ அல்லது சில வேளைகளில் தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கவே செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட வாதங்கள் உயிர்ப்பு இக்குறியீட்டில் உள்ளவை நாம் உபயோகித்தவை, உதிரிமுதலாளிகள் என்ற கருத்துக்கு எதிரான தரகுமுதலாளித்துவமே என உயிர்ப்பு எழுதிய இக் கருத்துக்களையே, நாம் இனி தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகள் என உயிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் முன்வைக்கிறோம். இருந்தும் தொடர்ந்து விவாதிக்க விரும்புகிறோம்.

உதிரி முதலாளித்துவம் என்ற இப் பதம் சரியானதா? உதிரிப் பாட்டாளிகள் என்பது ஒரு நிறுவனமாகாத வகையில் உதிரியாக ஆங்காங்கே சிதறியிருப்போரை குறிப்பதாகும். இவர்கள் லும்பன் வாழ்வைக் கொண்டிருப்பார்கள். போராட்டத்தில் பாட்டாளிகளுக்கு சார்பாகவும் எதிர்ப்புரட்சிக்காலத்தில் எதிர்ப்புரட்சியாளர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உதிரிமுதலாளிகள் ஒரு வர்க்கமாக இருக்க முடியாது. தொழில் ரீதியாக பல்வேறு உற்பத்திகளைக் கொண்ட முதலாளிகள் எப்பொழுதும் உதிரியாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் மையப்பட்ட அரசை சார்ந்திருக்கும் இவர்கள் முதலாளிகளே. இதில் உதிரி முதலாளித்துவம், முதலாளித்துவத்துத்துக்கு இடையில் எவ்வேறுபாடும் கிடையாது.

இனி நீங்கள் குறிப்பிடுவது போல் உதிரிமுதலாளிகள் என எடுப்போமாயின், கடத்தல்காரர்களை குறித்த வர்க்கத்தின் பிரதிநிதியாக காட்ட முற்பட்டுள்ளீர்கள். இக் கடத்தல்காரர்கள் எப்பொழுதும் ஏகாதிபத்தியத்தின் பொருட்களையே கடத்தியவர்கள். இவர்கள் சட்டபூர்வமாக சிங்கள தரகுமுதலாளித்துவத்துடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாமையினால் அதை சட்டவிரோதமாகவே கடத்தி வருகின்றனர். அந்நியப் பொருட்களின் சந்தையை உருவாக்கவும், ஊக்குவிக்கும் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாடே. இன்னொரு பக்கத்தில் உதிரிமுதலாளிகள் வர்க்கபிரதிநிதிகள் புலிகளெனின், உதிரிமுதலாளிகளின்(முதலாளிகள்)வளர்ச்சிக்கு புலிகள் தடைவிதிக்கின்றனர்.. கடத்தல் பொருட்களில் வரும் இலாபத்தில் அரைவாசியைக் கோருகின்றனர். எனவே புலிகள் உதிரி முதலாளித்துவத்துக்கு எதிரானவர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல் பணக்கார விவசாயிகள், பணககார மீனவர்கள் போன்றோரும் நவீன உற்பத்திமுறைகள் காரணமாக ஏகாதிபத்திய பொருளாதார வலைப்பின்னலுடன் நெருக்கமாக பிணைந்துள்ளனர். எனவே புலிகள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான பிரதிநிதியாக உள்ளனர்.

நாம் இவ் விவாதத்தில் தொடர்ச்சியாக புலிகள் வர்க்கமூலத்தை மேல் வைத்த தொகுப்புக்களில் இருந்து தரகுமுதலாளித்துவத்தை சார்ந்தே என்பதை தெளிவுபடுத்துகின்றது. புலிகளின் கோரிக்கைகளை பார்ப்பதை விட அக் கோரிக்கைகளின் பின மறைந்திருக்கும் வர்க்கநலன் என்ன என்பதை ஆராயவேண்டும். தமிழ் தரகுமுதலாளித்துவம், சிங்கள தரகுமுதலாளித்துவ சக்திகளிடமிருந்து சந்தைக்காக போட்டி போட்டு இன்று தேசவிடுதலைப்போராட்டத்தை (எல்லா வர்க்கங்களும் போராடுவது போல) தனது தலைமையில் முன்னெடுத்துள்ளது. மற்றும் ஏகாதிபத்தியத்துக்கிடையிலான முரண்பாடுகள் ஒரு நாட்டில் இருக்கக்கூடிய தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகள், போராட்டத்தை தலைமை தாங்குவதுடன் முரண்பட்ட ஏகாதிபத்தியத்துடன் மோதவும் முடியும். புலிகள் இன்று வறிய கூலி விவசாயிகள் முதல், கடத்தல்கார பெரும் முதலாளிகள் வரை சுரண்டலை நடத்துவதால், போராட்டத்துக்கு ஆதரவான சக்திகளை விட போராட்டத்திற்க்கு எதிரான சக்திகளை சார்ந்தே போராட முற்பட்டுள்ளனர். புலிகளுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிடையாது என்பதை தூண்டில், உயிர்ப்பு ஏற்றுக் கொள்ளுவதால் புலிகள் ஏகாதிபத்திய சார்பாளர்களாகவே உள்ளனர். இவர்கள் ஏகாதிபத்தியத்திடம் பெற்ற உதவி(ஏகாதிபத்தியங்கள் முட்டாள்கள் அல்ல)இவர்கள் ஏகாதிபத்தியம் சார்ந்தே உள்ளதை தெளிவாக்குகின்றது. இவர்கள் பகிரங்க அரசியல் கோரிக்கைகள் எப்போதும் இவர்களையே பாதித்தது கிடையாது . இவர்களின் இரகசிய அரசியல் கோரிக்கைகளை(தரகுசார்ந்த நலங்களை) இரகசியமாக பெற்றுக்கொள்ள முனைந்ததை கொண்டு இவர்களின் வர்க்கநலன் தரகுமுதலாளித்துவம் சார்ந்ததை, புலிகள் அடிக்கடி நடத்தும் பேரங்கள், அதில் ஏற்படும் தோல்வியும் இன்று இருக்கும் அரசு அமைப்புக்குள் (தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ அரசுக்குள்) சுரண்டல் தொடர்பான பங்குகளுக்காகவே. இது தரகுமுதலாளித்துவத்தின் வெளிப்பாடே. புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் நேரடியாக ஏகாதிபத்தியத்தை சார்ந்தவர்களே. இதுவும் தரகுமுதலாளித்துவத்தை பிரதிபலிக்கிறது. இஸ்ரேல் இந்தியாவிடம் பெற்ற பயிற்சிகள் ஏகாதிபத்தியங்களிடம் பெற்ற இராணுவ உதவிகள் தரகுமுதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுக்கானது. சர்வதேச போதைவஸ்து தொடர்பு(உதிரி முதலாளித்துவத்தை வளர்ப்பதல்ல) இது தரகுமுதலாளித்துவமே.(இதை சில மூன்றாம் உலகநாடுகளின் அரசுகளே செய்கின்றன அல்லது மறைமுகமாக அங்கீகரிக்கின்றனர்)தேசிய விடுதலையை முன்னெடுக்கின்ற முதலாளிகள் (உதிரிமுதலாளிகள்) கூட ஒரளவு ஜனநாயகத்தையும் மற்றைய சிறுதேசிய இனத்துடன் இணக்கப்போக்கையும் கைக்கொள்ளும். ஆனால் புலிகள் முஸ்லீம் தேசிய இனத்தை ஒழிக்க முற்பட்டுள்ளனர். சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் பாசிசம் தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாடே. தமிழ் ஈழத்தில் தளப்பிரதேசத்தை கொண்டிருக்கும் புலிகள் தேசிய பொருளாதாரத்தின் மீது அக்கறையோ, தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கவோ இன்றி அந்நியப் பொருட்களைச் சார்ந்து செயற்படும் இப்போக்கு தரகுமுதலாளித்துவ செயற்பாடே. புலிகள் போராட்டத்துக்கு பாவிக்கும் ஆயுதங்களில் உற்பத்தி செய்யக்கூடிய பகுதிகளைக் கூட சொந்தத்தில் செய்யாமல் வெளிநாடுகளில் இருந்து (இன்று ஏற்பட்ட நெருக்கடியினால் சிலவற்றை செய்கின்றனர்) பெற்றுக்கொள்ளும் இப்போக்கு தரகுமுதலாளித்துவ செயற்பாடே. இவைகள் புலிகள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான பிரதிநிதிகளாக செயற்படுவதைக் காட்டுகிறது. இவ் விமர்சனம் தொடர்பாக வாசகர்களிடமிருந்து விமர்சனங்களை கோருகின்றோம்.

 

 

 

 

Last Updated on Monday, 05 January 2009 22:39