ஸ்ரீலங்காவின் தமிழ்பேசும் மக்கள் தொகையில் 28 சதவீதத்திற்கும் சற்று அதிகமான தமிழ்பேசும் முஸ்லிம்கள் இன்று ஸ்ரீலங்கா பேரினவாத பாசிச அரசாலும் புலிகள் என்ற சமூகவிரோத பாசிசகும்பலாலும், தமது பாரம்பரிய(பரம்பரை) பிரதேசங்சங்ளை விட்டு துரத்தப்பட்டுள்ளனர். புலிகள், ஜிகாத் இராணுவமென்றும் அனைத்து மேலாதிக்க கும்பல்களும், முஸ்லிம் தேசிய இனத்துக்கெதிரான காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒரு சர்வதேசிய கலாச்சார இணைப்பைக் கொண்டுள்ள, இந்த முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்சனை தொடர்பாக சமூக உணர்வுள்ள தேசப்பற்றுள்ள, அனைத்து சக்திகளும் அக்கறை கொள்ள வேண்டிய தேவை இன்று எம் முன்னுள்ளது. இந்த அடிப்படையிலேயே புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் எதிரான முஸ்லிம் மக்களின் தேசவிடுதலைப்போராட்டமானது கட்டியெழுப்பப்பட முடியும்.
தமிழ்பேசும் மக்களின் ஒரு பகுதியினரான இந்த முஸ்லிம் தமிழர்களது வரலாற்றின் இன்றைய கட்டத்திற்குரிய நிலை தான் என்ன? முஸ்லிம் மக்கள் தனியான ஒரு தேசிய இனமா? இல்லையா? இக் கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். இந்த அடிப்படையிலேயே மொத்த ஸ்ரீலங்காவினதும், ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களது விடுதலை என்பது சாத்தியமாக்கப்பட முடியும்.
இங்கே இனம் (RACE) என்பது மக்கள் கூட்டங்களை உருவ அமைப்பினூடாக வேறுபடுத்துகின்ற முறையாகும். மூன்று வேறுபட்ட இனங்களை கூர்ப்புக் கோட்பாடு எங்களுக்கு காட்டுகிறது. ஆனால் உலகில் ஒரு இனத்துக்குள்ளேயே பல தேசிய இனங்கள் இருப்பதை, தேசிய இனக் கோட்பாடு விளக்குகிறது.
தேசிய இனம் என்பது ஒரு வரலாற்று வகைப்பட்ட மக்கள் கூட்டமாகும். அதுவும் வரலாற்றின் குறித்த கால கட்டத்துக்குரிய ஒரு மக்கள் கூட்டமாகும். முதலாளித்துவத்திற்கு முன்னைய காலகட்டங்களில் தேசிய இனம் இருந்ததில்லை. இந்தத் தேசிய இனம் என்பது அடிப்படையில் தன்னை மற்றைய தேசிய இனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்க்குரிய குறியீடாகவே கருதப்படுகிறது. குறித்த விதிகளின் அடிப்படையில் மக்களைக் கூட்டங்களாக இணைக்கும் ஒரு அமைப்பே இது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இவ்வாறு மக்களை கூட்டங்களாக இணைக்கும் அமைப்பாக மன்னனும், பேரரசுக்களுமே இருந்தன. இந்தக் கூட்டத்தின் அமைப்பு விரிந்து சுருங்கக் கூடியதாக இருந்தது. மன்னன் யுத்தங்களின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில். தனது எல்லையை மாற்றிக்கொண்ட போது மக்களும் அதற்கு ஒத்திசைவாக மாறிக் கொண்டனர். மக்களுடைய ஆதரவுடன் கூடவே ஒருநாட்டு மன்னன் இன்னோரு நாட்டை ஆண்டிருக்கிறான். ஆனால் தேசிய இனம் என்ற தேசிய உணர்வின் அடிப்படையில் மக்களை இணைக்கும் இந்த அமைப்பானது ஒரு குறித்த எல்லைக்குட்பட்டது. இதுவே தேசிய இனத்திற்குரிய பிரதேசம் எனப்படுகிறது.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தனியே மொழி அடிப்படையில் அரசுகள் மக்களை இணைத்திருக்கவில்லை. ஆனால் தேசிய இனம் மொழியின் அடிப்படையில் மக்களை இணைக்கின்றது.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், குறித்த அரசுகளை அல்லது இராச்சியங்களை நோக்கிய மக்களுடைய பொருளாதார வாழ்வு பிணைக்கப்பட்டிருந்தது. அரசுகள் மாற்றமடையும் போது, அந்தப் பொருளாதார வாழ்வும் மாற்றமடைந்தது. இதனால் ஒரு பொதுவான பொருளாதாரத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் முதலாளித்துவம் உருவான பொழுது, இது குறித்த சந்தையை நோக்கியும், அதனைக் கட்டுப்படுத்தும் அரசை நோக்கியும் பொருளாதார வாழ்வு மையப்படுத்தப்பட்டது. எனவே பொதுவான பொருளாதார வாழ்வு ஒன்று மக்களிடையே உருவானது.
இதனடிப்படையில் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு சேர்ந்தே உருவான தேசிய இனம் என்ற மக்களை இணைக்கும் அமைப்பு உருவானது. மேற்குறித்த அடிப்படையில் தேசிய இனம் பின்வரும் விதிகளுக்கு உட்பட்டதாக அமையும் என ஸ்டாலினால் விஞ்ஞான பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, பிரதேசம் (ஆட்சிப்பகுதி) பொதுவான பொருளாதார வாழ்வு, ஒரு கலாச்சாரத்தை தரக்கூடிய மன இயல்பு, ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்று ரீதியாக உருவான மக்கள் சமூகமாகும்.
இவ்வகையில் குறித்த மக்கள் கூட்டத்தைக் கொண்ட சமுதாயங்கள் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு உருவாகின. இந்த சமுதாய பகுதியையே தேசம் என்கிறோம். இந்த தேசம் என்பது, இன, நிற, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. பிரஞ்சு தேசம் காவியர்கள் ரோமானியர்கள், பிரிட்டானியர்கள், டியூட்டோனியர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானது. ஒரு நூறாண்டுக்கு முன்னர் கூட பிரான்சில் பிரஞ்சு மொழி மட்டும் பேசப்படவில்லை பல மொழிகள் பேசப்பட்டன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியென்பது பல்வேறு தேசிய இனங்களை ஒன்றோடு ஒன்று இறுக்கப் பிணைத்தது. மக்கள் தொகை, உற்பத்திச் சாதனங்கள், சொத்து இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் முடிவு கட்டியது. மக்களைத் திரட்சி பெறச் செய்தது. கிராமத்தவர்களை நகரங்களை நோக்கி துரத்தியது. இதனால் தேசிய இனங்கள் படிப்படியாக அழிந்து போயின.
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடானது ஒரே தேசிய இனமாய் உருவெடுத்தது. இன்று பிரஞ்சுதேசம் முழுவதுமே பிரஞ்சு மொழி மட்டுமே பேசப்படுகிறது. முற்றாக வளர்ச்சியடையாத இலங்கை போன்ற நாடுகளில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளாக உருவெடுத்தன. முதலில் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து வளர்ந்து வந்த காலத்தில், மக்கள் தேசங்களாக இணைந்து அமையப் பெற்றார்கள். இந்தக் காலகட்டத்தில் ஒரு நாட்டினுள் பல தேசங்கள் உருவாகின. இந்த வளர்ச்சி முற்றாக நிலப்பிரபுத்துவத்தை வெற்றி கொண்ட போது, பல தேசங்களை கொண்ட ஒரு நாடே ஒரு தேசமாக உருவெடுத்தது. இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், முற்றாக முதலாளித்துவம் வளர்ச்சியடையாத குறித்த நிகழ்சிப்போக்கானது, ஒரு குறித்த எல்லைக்கு மேலாக மக்களை திரளச் செய்யவில்லை. இந்த எல்லையென்பது தான் வேறு வேறு தேசிய இனங்களை உருவாக்கியது.
ஒவ்வொரு சமுதாய அமைப்பும் மக்களிடையே சமூகப்பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும் போது, புதிய சமுக அமைப்பை உருவாக்க மக்களைத் தூண்டுகின்றன. இவ்வாறே முதலாளித்துவ சமூக அமைப்பானது நிலப்பிரபுத்துவத்தை உடைத்தெறிந்து உருவானது. இந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஒரு குறித்த கட்டத்தின் ஒரு தனிவகையான சமூதாயமே தேசிய இனங்களாகும்.
பிரான்ஸ் தனியான தேசமாக அமையப் பெற்ற பின்பு இப்போது பிரஞ்சு மொழி என்பதே தேசிய மொழி. மக்களிடையே அன்றாடத் தொடர்பு மொழியும் அதுவே. ஆனால் இலங்கையும், இந்தியாவும் அப்படியானவையல்ல. தமிழ் தேசிய இனம், தமிழ் மொழியைப் பொதுமொழியாக கொண்டுள்ளது. சிங்கள தேசிய இனம் சிங்கள மொழியைப் பொது மொழியாகக் கொண்டுள்ளது. எனவே தேசிய இனம் என்பது ஒரே மொழியைப் பேசும் மக்களிடையே காணப்படுவதாகும். வேறு வேறு மொழியை பேசுகின்ற மக்கள் கூட்டங்கள் ஒரே தேசிய இனமாக இருக்கமுடியாது. எனவே ஒரு நிலையான பொதுமொழி என்பது பிரதான அம்சமாகிறது.
ஆனால் ஒரு மக்கள் கூட்டம் தேசிய இனம் என்றவொரு குறித்த காலத்துக்குரிய நிலையான சமுதாயமாக அமைவதற்கு, மொழி என்பது மட்டும் போதுமான அம்சமல்ல. ஒரே மொழியை பேசுகின்ற வேறு வேறு தேசிய இனங்களையும், தேசங்களையும் நாம் பார்க்கலாம். அமெரிக்காவும். இங்கிலாந்தும் ஒருவகை. முஸ்லிம் தேசிய இனமும். மலையக தேசிய இனமும். பூர்வீகத்தமிழ் தேசிய இனமும் தமிழை பொது மொழியாக கொண்ட வேறுவேறு தேசிய இனங்களாகும். அயர்லாந்தும், இங்கிலாந்தும் என்று பல உதாரணங்களை காணலாம்.
தேசம் என்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், மன்னனுக்குக் கீழ் இராச்சியங்களாக பிணைக்கப்பட்டிருந்த மக்கள் அதனை உடைத்துக்கொண்டு முதலாளித்துவத்தின் மூலதனச் சங்கிலியால் பிணைக்கப்பட்டபோது தேசிய இனம் என்ற புதிய தொடர்பு முறை உருவானது. இத்தொடர்பு முறைக்கு மொழியென்பது அவசியமானது. ஆனால் இது மட்டும் போதுமானதல்ல! அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் எடுத்துகொண்டால், இது வேறு வேறு அரசின் எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களாகும். எனவே வேறு வேறு அரசின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், வேறு வேறு தேசிய இனங்களாகவே அமையும். பிரஞ்சு மொழியிருந்து முற்றிலும் வேறுபட்ட பல மொழிகளைப் பேசுகின்ற சுவிஸ், ஜேர்மன், எல்லைகளில் வாழ்ந்த மக்களும் பிரஞ்சு தேசமாக உருவெடுத்தபோது பிரான்சுடன் இணைந்து கொண்டு பிரஞ்சு மொழியை பேசுகிறார்கள். எனவே தேசம் எனப்படும் போது, முதலாளித்துவத்திற்கு பிறகு குறித்த அரசின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசமாக இருப்பது என்பது அவசியமானது. மேலும் இந்த பிரதேசம், மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து அதன் மூலம் ஏற்படும் நீண்ட நெடிய முறையான கலப்பின் மூலம் தேசிய இனங்கள் உருவாகுவதற்கு அவசியமானதாகும். அமெரிக்காவும், இங்கிலாந்தும் வேறு வேறு தேசங்கள். ஆனால் அமெரிக்கர்கள் முன்னர் இங்கிலாந்துக்காரர்களே. (இது பின்னர் அயர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மன், இத்தாலி, ஒல்லாந்து, பிரான்சு, ஸ்பானிஸ் போன்ற நாடுகளிலிருந்து சென்ற பெரும் தொகையானோரின் கலப்பிற்குட்பட்டது).ஆனால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஒரே தேசமல்ல என்பதற்கு வேறுபட்ட அரசுகள் காரணமாகின்றன. தென்னிந்தியரும், இலங்கையின் பூர்வீகத் தமிழ்மக்களும் தமிழ் பேசும் மக்களே. ஆனால் அவர்கள் வேறு வேறு தேசிய இனங்களே. இவர்களை இணைக்க பொதுவான பகுதியிருந்தும், தென்னிந்தியாவுக்கும், இலங்கைத் தமிழருக்கும் காலனியாதிக்கத்துக்கு முந்திய காலத்தில் பலமான தொடர்புகளிருந்தும், இவ்விரு இனங்களும் வேறு வேறு தேசிய இனங்களாக இனம் காட்டின. எனவே பிரதேசம் எனப்படும் பொழுது
(1) முதலாளித்துவ காலகட்டத்திற்கு பிறகு ஒரே அரசின் எல்லைக்குட்பட்ட பிரதேசமாக இருத்தல் வேண்டும்.
(2) மக்கள் செறிவாக அடர்ந்து வாழுகின்ற பிரதேசங்களாக இருத்தல் வேண்டும்.
(தொடரும்)