Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன.

இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன.

  • PDF

கேளாதே கண்டு கொள்ளாதே,பேசவும் நினையாதே

 

தமிழ் மக்களின் விடுதலைக்கு மக்கள் போராட்டமும் மக்கள் அரசியலும் பற்றிய பூரண நம்பிக்கை முக்கியமானது

 

>>>"தமிழீழமே தீர்வு" என்று முடிந்த முடிவாகப் பேசி மறுத்த எல்லாருக்கும் துரோகிப்பட்டஞ் சூட்டியவர்களிற் பெரும்பாலானோர் இன்று தமிழ் மக்களின் உரிமையை மறுக்கிறவர்களது எடுபிடிகளாகிவிட்டனர். இது ஏன் நடந்தது என்று நாம் கவனமாக ஆராயவேண்டும். எங்களுக்கு எல்லாந்தெரியும் என்கிற விதமாகவும் யாரிடம் இருந்தும், உலக வரலாற்றில் இருந்தும் கூட எதையுமே கற்க அவசியமில்லை என்று திமிர்த்தனமாகவும் பேசியும் எழுதியும் வந்த ஒரு மரபு இன்னமும் தொடருகிறது. <<<


இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக யாராவது எதைச்செய்தாலும் அது தமிழருக்கு எதிராகவே செய்யப்படுகிறது என்கிற ஒரு மனநிலையிலேயே பல தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் உள்ளனர் போலவே தெரிகிறது. இன்னமும் இலங்கையின் ஒரே பிரச்சினை தமிழர்-சிங்களவர் பிரச்சினை தான் என்ற மன நிலையிலிருந்து பலர் விடுபடவில்லை.


இலங்கையின் இன்றைய அதிமுக்கிய பிரச்சினை தேசிய இனப் பிரச்சினை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அதிற் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான அரச ஒடுக்குமுறையும் விசுவரூபமெடுத்திருக்கிற சிங்கள பவுத்தப் பேரினவாத இனவெறியும் அதன் விளைவான, போகும் விடுதலைப் போராட்டமும் அதி முக்கியமானவை என்பதிலும் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆயினும் அது மட்டுமே தான் பிரச்சினை என்கிற அணுகுமுறை தவறானது என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன்.


அந்தத் தவறான அணுகுமுறை மட்டுமன்றிச் சர்வதேச அரசியல் பற்றிய குறைபாடான அறிவும் இன்று வரை தமிழ் இன விடுதலைப் போராட்டத்தில் பல தவறான போக்குகட்குக் காரணமாக இருந்துள்ளன.


மலையகத் தமிழரதோ, முஸ்லிம்களதோ தேசிய இனப்பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் முகம்கொடுக்கும் இன ஒடுக்குமுறைகள் பற்றியும் தமிழ்த் தலைவர்கள் மத்தியிலோ ஆய்வாளர்கள் மத்தியிலோ எவ்வளவு அக்கறை இருந்து வந்துள்ளது என்பதை நாம் சுய விமர்சனக் கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும்.

 

சிங்களப் பேரினவாத அரசு தமிழ் முஸ்லிம் முரண்பாடுகள் பற்றியும் வடக்கு-கிழக்கு முரண்பாடு பற்றியும் அறிந்து அந்த அறிவின் அடிப்படையிற் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதிற் வெற்றி கண்டுள்ள அளவுக்கு அரச ஒடுக்கு முறைக்கு உட்பட்ட மக்களை ஒன்றுபடுத்திப் போராட்டத்தைப் பலப்படுத்துமளவுக்குத் தமிழ்த் தலைமைகளோ பிற தேசிய இனத் தலைமைகளோ மதியூகத்துடன் செயற்பட்டிருக்கிறார்களா? பகைமைக்கே தேவையில்லாத வேறுபாடுகளை புறக்கணியாமல் கவனித்து அவற்றை நட்பான முறையில் கையாள என்ன முயற்சியாவது எடுக்கப்பட்டதா? இன்று கிளறி விடப்பட்டுள்ள பிரதேசவாதம் தமிழ்-முஸ்லிம் மக்களிடையிலான உறவுக்குங் கேடானது. அதைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? நிச்சயமாகத் தமிழ் முஸ்லிம் தேசிய வாதிகளல்ல.


தினமும் பிரதேசவாதமும் ஒழிக்கப்பட்டு விட்டன என்றும் தமிழ் மக்கள் ஒன்றுபடுத்தப்பட்டு விட்டனர் என்றும் தமிழ்த் தேசியவாதமே அதை இயலுமாக்கியது என்றும் கற்பனைக் கதைகள் கூறப்பட்டன. அதன் விளைவாக உண்மையாக இருந்துவந்த பிரச்சினைகள் பற்றிப் பேச முற்பட்டோர் தமிழரைப் பிரிக்க முயலுவோராகக் காட்டப்பட்டனர். செய்தியைக் கொண்டுவந்த தூதனைத் தண்டித்துவிட்டுச் செய்தியைக் கவனிக்காமல் விட்ட அரசன் மாதிரி தமக்குச் சாதகமற்ற எதையும் பற்றிக் "கேளாதே கண்டு கொள்ளாதே,பேசவும் நினையாதே" என்ற விதமாகவே தமிழ்த் தேசிய வாத அரசியல் பழக்கப்பட்டு விட்டது.

 

1976ல் த.வி.கூ.தமிழ் ஈழம் பிரகடனம் செய்த போது அது பற்றிய ஒரு விவாதத் தொடர் வடக்கின் இடது கம்யூனிஸ்டுகட்கும் தமிழரசுக் கட்சி மரபில் வந்தோருக்குமிடையே நடந்தது. அந்த விவாதம் தமிழ்த் தேசிய வாதிகளிடம் தமிழீழ விடுதலை பற்றி தாங்கள் யாருக்காக எந்த மண்ணை விடுதலை செய்யப் போகிறார்கள், எப்படிப் போராடப் போகிறார்கள் என்பன பற்றி ஒரு விதமான திட்டமும் இல்லை என்பது வெளியாகி அபாயம் தென்படத் தொடங்கிய உடனேயே த.வி.கூட்டணியினர் யாரும் மேற்கொண்டு இவ்வாறான விவாதங்களில் இறங்கக் கூடாது என்று மறித்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

 

1980களின் நடுப் பகுதியில் இளைஞர் இயக்கங்கள் நடுவே பிளவுகள் மோசமாகி ஆளையாள் கொல்லுகிற அளவுக்கு முற்றுவதற்கு முன்பு, தமிழீழத்தை ஏற்காதவர்கள் தமிழ்த் தேசியவாதம் பற்றிய விவாதங்களில் பங்குபற்ற இயலாது என்று தடைவிதித்த "சிந்தனையாளர்களும்" இருந்தனர். தமிழரிடையே ஜனநாயக முறையிலான விவாதத்தை மறித்த அதே சிந்தனையாளர்கள் தமது `நடுநிலையும்' `சுதந்திரமான சிந்தனையும்' கேள்விக்குட்பட்ட போது அது ஜனநாயக மறுப்பு ஃபஸிஸம் என்றெல்லாம் பேசத்தலைப்பட்டனார். தேசியவாதத்தையே நிராகரித்துப் புலம் பெயர்ந்த முதலாளிய சர்வதேச வாதிகளாகவும் மாறினர். உண்மையில் இன்று வரை சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் பேசி வந்துள்ளார்கள். நேர்மையான இடது சாரிகள்தாம் பாராளுமன்ற இடதுசாரிகள் இவ் வகைக்குள் வர மாட்டார்கள் பிரிவினையை அவசியமான ஒரு தீர்வு என்று ஏற்காமல் பிரிந்து போவதற்கான உரிமையை ஏற்றவர்கட்குத் தமிழ் மக்களது பிரச்சினைகட்கும் பிற தேசிய இனங்களது பிரச்சினைகட்கும் ஒரு பொதுவான தீர்வு என்ற விதமாகத் தேசிய இனப் பிரச்சினையை அணுக முடிந்தது; விறைப்பான நிலைப்பாடுகளைத் தவிர்த்து மக்களது நலன் சார்ந்த முடிவுகளை வந்தடைய முடிந்தது. மாற்றுக் கருத்துக்களை நேர்மையாக விவாதித்து மறுதலிக்கவும் பயனுள்ளவற்றை உள்வாங்கவும் தமது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அவற்றை சுயவிமர்சன நோக்கில் ஆராய்ந்து திருத்தவும் முடிந்தது.


"தமிழீழமே தீர்வு" என்று முடிந்த முடிவாகப் பேசி மறுத்த எல்லாருக்கும் துரோகிப்பட்டஞ் சூட்டியவர்களிற் பெரும்பாலானோர் இன்று தமிழ் மக்களின் உரிமையை மறுக்கிறவர்களது எடுபிடிகளாகிவிட்டனர். இது ஏன் நடந்தது என்று நாம் கவனமாக ஆராயவேண்டும். எங்களுக்கு எல்லாந்தெரியும் என்கிற விதமாகவும் யாரிடம் இருந்தும், உலக வரலாற்றில் இருந்தும் கூட எதையுமே கற்க அவசியமில்லை என்று திமிர்த்தனமாகவும் பேசியும் எழுதியும் வந்த ஒரு மரபு இன்னமும் தொடருகிறது. முன்பு ஒரு நிலைப்பாட்டிலிருந்து பின்பு தலைகீழாக மாறினபிறகும் அதேவிதமான "எல்லாந் தெரிந்த" "என்றுமே பிழைவிடாத" தோரணையில் இவர்களாற் பேச இயலும். தூற்றிய ஒன்றைப் புகழ்ந்து போற்றவும், போற்றிய ஒன்றை நிந்தித்துத் தூற்றவும் இவர்கட்கு வாய் கூசுவதில்லை. ஏனென்றால் இவர்கள் நடத்துவது மக்கள் அரசியலல்ல. இவர்களது ஆதரவாளர்கள் சம்பளம் வாங்குகிற ஏவலட்கள் போன்று இவர்கட்கு எங்கிருந்தோ வரக்கூடாத இடங்களிலிருந்தெல்லாம் வருகிற வருமானத்தின் மீது தங்கியுள்ளனர். இந்த அவலம் தீவிர தமிழ்த் தேசியவாதிகளிற் பெரும்பாலானவர்கட்கு நேர்ந்துள்ளதென்றால் அது ஒரு தனி மனிதரோ ஒரு சில தனிமனிதரதோ சுயநலத்தால் நடந்ததாக இருக்க இயலாது.


தமிழ் மக்களின் விடுதலைக்கு மக்கள் போராட்டமும் மக்கள் அரசியலும் பற்றிய பூரண நம்பிக்கை முக்கியமானது என்பது எனது கருத்து. இதை எந்தத் தமிழ் தலைமையும் ஏற்றதில்லை. அதுமட்டுமன்றி அவை சனநாயக முறையில் தமது அரசியலை விருத்திசெய்யவும் இல்லை. மாற்றுக் கருத்துக்கள் தட்டி அடக்கப்பட்டளவுக்கும் புறக்கணிக்கப்பட்டளவுக்கும் பின் நாளில் சுட்டு புதைக்கப்பட்டு வருமளவுக்கும் எது பற்றியுமான திறந்த விவாதம் நடந்ததில்லை. இன்றுங்கூட மக்கள் உண்மைகளைக் கண்டறிய இயலாத விதமாகப் புனைவுகள் மூலம் அவர்களது கவனத்திசை திருப்பப்பட்டு வருகிறது. ஊடகங்கள் சில மிகவும் உடந்தையாக உள்ளன.

 

ஈரான் இலங்கைக்குப் பெருமளவிலான பொருளாதார உதவி வழங்க முன்வந்துள்ளது. அது ஏன் என்ற விளக்கமே இல்லாமல் அது இலங்கை மீதான ஆதிக்க நோக்குடையது. தமிழருக்கு எதிரான நோக்குடையது. அதில் ஆயுத உதவியும் உள்ளடங்கும் என்கிற விதமாகத் தமிழேடுகளில் எழுதப்பட்டு வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் வழங்குகிற உதவிகள் தொடர்பாகவும் மேலாதிக்க நோக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு விடயம் மட்டும் எவராலும் கவனிக்கப்படுவதில்லை. இந்த மூன்று நாடுகளும் இலங்கையின் உள்விவகாரங்களில் என்றுமே தலையிட்டதில்லை. இரண்டு அரசுட்கு இடையிலான நல்லுறவு என்ற எல்லை மீறி எதுவுமே இதுவரை நிகழவில்லை. மாஓ காலத்துச் சீனா விடுதலை எழுச்சிகட்கு ஆதரவு வழங்கியது. இன்றைய சீனாவுக்கு அந்த அக்கறையும் இல்லை. சீனா இந்து சமுத்திரத்தில் எங்கெல்லாமோ ராணுவத் தளங்களை வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கோ இந்திய அரசாங்கத்துக்கோ தெரியாத கதைகள் எல்லாம் ஏதேதோ இணையத் தளங்களிலிருந்து அறுவடை செய்யப்படுகின்றன. ஆனாற் கண்ணுக்கு தெரிகிற இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன. இது ஏன்?

 

ஏனாயிருந்தாலும் ஏமாற்றப்படுவோர் தமிழ், முஸ்லிம் மக்கள் தான். கருணா பொய்க் கடவுச்சீட்டில் லண்டன் போக முன்னமே இங்குள்ள தூதரகம் உண்மையை அறியும். போகவிட்டு அதன்பின் கைது செய்து குறுகியகாலம் சிறைக்கனுப்பிய போது மனிதஉரிமை மீறல் விசாரணைகள் நடக்கும் என்றெல்லாம் கனவுகள் காணப்பட்டன. கருணாவை இலங்கை அரசாங்கத்துடனான தனது அரசியற் பேரங்களில் ஒரு சின்னத் துடுப்புச்சீட்டாகப் பிரித்தானிய ஆட்சியாளர் பயன்படுத்தினரே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கம் அவர்கட்கு என்றுமே இருக்கவில்லை.


இது ஒரு சின்ன நாடகம்.


இது போலப் பெரிய, சிறிய நாடகங்கள் பல நடக்கின்றன. உண்மையென்று நம்புமாறு நமக்கு சொல்லப்படுகிறது. அது நமது அரசியல் நிபுணர்களது இருப்புக்கு அவசியமானது.

 

மறுபக்கம்


கோகர்ணன்

நன்றி :Thinakkural

Last Updated on Thursday, 20 November 2008 07:53