Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்

இன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்

  • PDF

"நமது நாட்டை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்ட வேண்டும்." இவ்வாறு அரசியல்வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை, ஒரு ஆசிய நாடான சிங்கப்பூர் பணக்கார நாடாக இருப்பதை உதாரணமாக காட்டி, வியந்துரைப்பதை பலர் கேட்டிருக்கலாம். ஆனால் "சிங்கப்பூர் செல்வந்த நாடானது எப்படி?" என்ற இரகசியம் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. ஒரு காலத்தில் மீனவர்களின் தீவாக இருந்து,

 பிற்காலத்தில் சீன கடற்கொள்ளையர்களின் புகலிடமாக மாறிய சரித்திரம் பற்றி பலர் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அண்மையில் ஹோலிவூட் படமான "பைரேட்ஸ் ஒப் கரீபியன்" கதையில் சீன (சிங்கப்பூர்) கடற்கொள்ளையரை காண்பித்த பின்னர், அது குறித்த ஆர்வம் மீண்டும் எழுந்துள்ளது. (பார்க்க :

 


இன்று இந்து சமுத்திரத்தில் வெற்றிகரமாக கப்பல்களை கடத்திச் சென்று, பணயம் வைத்துக் கொண்டு பணம் கேட்கும் சோமாலிய கடற்கொள்ளையரும், நாளை கம்பெனி முதலாளிகளாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. சோமாலியாவில் நிரந்தர அரசமைப்பு உருவாகும் வரை கடற்கொள்ளையரின் பிரச்சினை தொடரவே செய்யும் என்பதை இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதன் படி பார்த்தால் ஒரு சில கடற்கொள்ளையர்களை இப்போது பிடித்து தண்டித்தாலும், மிகுதிபேர் எதிர்கால சோமாலியாவின் முதலாளித்துவ பொருளாதாரத்தில் தமது பங்கை செலுத்துவார்கள்.

கரீபியன் கடற்கொள்ளைக்காரர்களின் உண்மைக்கதையும் இதுதான். "பைரேட்ஸ் ஒப் கரீபியன்" திரைப்படம் சொல்லமுடியாத சேதி அது. அப்போது வடக்கு அமெரிக்க மாநிலங்களில் மட்டுமே சட்டபூர்வ அரசு ஏற்பட்டிருந்த காலமது. தென்பகுதி மாநிலங்கள், இன்று நாம் காணும் சோமாலியாவின் நிலையை ஒத்ததாக இருந்தது. அதனால் அவை கடற்கொள்ளையரின் புகலிடமாக இருந்தன. கடற்கொள்ளையருக்கு பொது மன்னிப்பு மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய வைத்து, அமெரிக்க அரசும் அடித்த கொள்ளையில் லாபம் பார்த்தது. இப்படி எல்லாம் செய்திருக்கா விட்டால், அமெரிக்கா பணக்கார நாடாக வந்திருக்க முடியுமா?

இங்கிலாந்தும் கடற்கொள்ளையால் நன்மையடைந்த ஒரு தேசம் தான். முதலாம் எலிசபெத் மகாராணி (பார்க்க:
"PIRATE QUEEN ELIZABETH") காலத்தில், ஆங்கிலேய கடற்கொள்ளையர்கள் தென் அமெரிக்காவில் இருந்து தங்கம் ஏற்றி வந்த ஸ்பானிய கப்பல்களை தாக்கி கொள்ளையடித்தார்கள். இங்கிலாந்து செல்வந்த நாடானதற்கு, ஒருவகையில் கடற்கொள்ளையருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. இங்கிலாந்திற்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்த காலமது. அதனால் கடற்கொள்ளக்காரருக்கும் பொற்காலமாக இருந்தது. போர் முடிந்து சமாதானம் வந்த பின்னர், இங்கிலாந்து அரசால் இனி தேவையில்லை என்று கைவிடப்பட்ட கடற்கொள்ளைக்காரர்கள் தான் பின்னர் கரீபியன் கடல் பிரதேசத்தில் அட்டகாசம் செய்தார்கள்.

சோமாலியா, அன்றைய சர்வாதிகாரி "சியாட் பாரெ"யின் காலத்தில், சோவியத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரினுள் அகப்பட்டு சின்னாபின்னப் பட்டது. அன்றே அந்த நாட்டை சும்மா விட்டிருந்தால், இன்று அங்கே ஒரு தேசிய அரசு நிலைத்து நின்றிருக்கும். சோமாலியா மக்கள் அனைவரும் இஸ்மாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே மொழியான "சோமாலி" பேசுவதும் மட்டுமே அவர்களை ஒன்று சேர்க்கும் அம்சங்கள். மற்றும் படி பண்டைய காலத்தில் இருந்து, சாதி ரீதியாக பிரிந்துள்ள மக்கள் (ஆமாம், இந்தியா போன்றே அங்கேயும் சாதிகள் உள்ளன) தத்தம் சாதிய தலைவர்களுக்கே விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் ஏகாதிபத்திய தலையீடு காரணமாக சோமாலியாவில் அரச கட்டமைப்பு நிர்மூலமாக்கப்பட்ட போது, கிடைத்த இடைவெளியில் சாதீய சக்திகள் தலையெடுத்தன. ஒவ்வொரு சாதியும் தனக்கென ஆயுதக்குழுவை உருவாக்கி, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. சர்வதேச ஊடகங்கள் அதனை "யுத்த பிரபுக்கள் மோதிக்கொள்வதாக" உலகிற்கு திரித்துக் கூறின.

இருப்பினும் யுத்த பிரபுக்களாக மாறிய சாதீய தலைவர்கள், தமது நலன்களுக்காக மட்டுமே ஆயுதபாணிகளை வைத்துக் கொண்டதும், சொந்த சாதியினரையே வருத்தியதும், யாருமே வெற்றியடையாத நீண்ட போரும், மக்களை விரக்தியடைய வைத்தன. அதனால் பெரும்பாலான மக்கள் புதிதாக தோன்றிய இஸ்லாமியவாத இயக்கத்திற்கு ஆதரவு வழங்கினர். இந்த இஸ்லாமியவாத இயக்கம் "அல் கைதாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக" சந்தேகப்பட்ட மேற்குலக நாடுகள், சோமாலி மக்களின் விருப்பத்திற்கு மாறாக யுத்த பிரபுக்களுக்கு உதவி செய்தனர். இஸ்லாமியவாதிகளை அடக்குவதற்காக, அயல்நாடான எத்தியோப்பியாவை படையெடுக்குமாறு தூண்டினர். இன்று தமது நாட்டில் பொருளாதார பிரச்சினை காரணமாக எத்தியோப்பியபடைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், சோமாலியாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. இது கடற்கொள்ளையில் ஈடுபடும் கிரிமினல் கும்பல்களுக்கு சாதகமான நிலைமை என்பதை சொல்லத்தேவையில்லை.

சோமாலிய கரையில் இருந்து 200 கடல் மைல் தூரத்திற்குள் வரும் பிரயாணிகள் கப்பலானாலும், சரக்கு கப்பலானாலும், கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டு பெருமளவு பணம் பிணையாக கொடுக்கப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்படுகின்றது. ராக்கெட் லோஞ்சர் போன்ற நவீன ஆயுதங்களுடன், நவீன திசையறிகருவிகளுடனும் சிறு சிறு குழுக்களாக அதிவிசைப்படகுகளில் வந்து சுற்றிவளைக்கும் கொள்ளைகாரருடன், கப்பல் பணியாளர்கள் சண்டை பிடிக்காமல் சரணடைந்து விடுகின்றனர். கப்பலில் உள்ள பயணிகளையும், பல லட்சம் பெறுமதியான கப்பலையும், சரக்கையும் பாதுகாப்பதற்காக அவ்வாறு சரணடயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கப்பலைக் கைப்பற்றும் கொள்ளைக்காரர்களும் மிக அரிதாகவே பணியாளர்கள் மீது வன்முறை பிரயோகிக்கின்றனர். மில்லியன் கணக்கில் கேட்கப்படும் பணம் கொடுக்கப்பட்ட பின்னர் கப்பல்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த வருடம் மட்டும் பல மில்லியன் டாலர்கள் இவ்வாறு சோமாலியாவிற்கு வருமானமாக கிடைத்துள்ளது. நீண்ட கால யுத்தம் காரணமாக, விவசாயம் உட்பட அனைத்து உற்பத்திகளும் ஸ்தம்பிதமடைந்துள்ள சோமாலியாவிற்கு, இந்த கிரிமினல் பொருளாதாரம் மட்டுமே "அந்நிய நிதியை" கொண்டு வந்து சேர்க்கின்றது. அதனால் தான், சோமாலியாவிலும் இன்றைய கடற்கொள்ளையர்கள் நாளைய முதலாளிகளாக வரக்கூடிய சாத்தியம் உள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய கடற்படைகள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தாலும் கடற்கொள்ளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அண்மையில் கனரக ஆயுததளபாடங்களுடன் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய கப்பல், நூறு மில்லியன் டாலர் பெறுமதியான சவூதி எண்ணெய் கப்பல் என்பன, பேரம் பேசலுக்கு பிறகு, சோமாலிய கடற்கொள்ளையருக்கு இதுவரை இல்லாத வருமானத்தை ஈட்டித்தரலாம். கப்பலுக்கும், பணியாளர்களுக்கும் ஆபத்து என்பதால், சர்வதேச கடற்படைகள் தூரத்தில் இருந்த படியே நடப்பனவற்றை அவதானித்து வருகின்றன.

சுயெஸ் கால்வாய் ஊடாக இந்து சமுத்திரத்திற்கு பயணம் செய்வது தற்போது ஆபத்து நிறைந்தது என்று கருதப்படுவதால், ஆப்பிரிக்க கண்டத்தை நன்னம்பிக்கை முனைப் பக்கமாக சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. நோர்வே தனது கப்பல்களை ஏற்கனவே அப்படித் தான் அனுப்பி வருகின்றது. மேலும் "டெல்டா லியோட்ஸ்" போன்ற, கப்பல் கம்பனிகளின் காப்புறுதி நிறுவனங்கள் தான், இறுதியில் கடற்கொள்ளையர் கோரும் பணத்தை கொடுத்து வருகின்றன. இதனால் மாதாமாதம் கட்டப்படும் காப்புறுதிப்பணம் இந்த வருடம் மட்டும் ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இது இன்னும் உயரலாம். ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை காரணமாக காட்டி கப்பல் கம்பெனிகள் சேவைக் கட்டணத்தை கூட்டி விடும். அதன் விளைவு, இவை ஏற்றிச் செல்லும் சரக்குகளின் விலையும் உலக சந்தையில் அதிகரிக்கும். அப்படியானால், நாம் அன்றாடம் நுகரும் உணவுப்பொருட்கள், பிற பாவனைப்பொருட்கள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
The Pirates of Singapore) சிங்கப்பூர் தனிநாடான போது, முன்னாள் கடற்கொள்ளையர்கள் தாம் கொள்ளையடித்து சேர்த்த பணத்தையெல்லாம் வர்த்தகத்தில் முதலீடு செய்து விட்டனர். அவர்களது பிள்ளைகள் இன்று "மதிப்புக்குரிய" கம்பெனி முதலாளிகளாக வலம்வருகின்றனர். இது தான் சிங்கப்பூர் பணக்கார நாடான கதைச் சுருக்கம்.

Last Updated on Wednesday, 19 November 2008 17:25