Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்?

  • PDF

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில்  வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

 

இப்படிப் புலிகள் தம் தோல்வியையும், அழிவையும், தாமே தெரிவு செய்து தம் சொந்த வழியில் ஏற்படுத்திக் கொண்டனர். இதை நாம் தீர்மானிக்கும் சக்தியாகவோ, தடுக்கும் சக்தியாகவோ இருந்தது கிடையாது.

 

மறுபக்கத்தில் புலிகளின் சொந்த அழிவையிட்டு சிலர் மகிழ்வது போல், சிலர் அழுவது போல், இதை நாம் எடுக்கவில்லை. அப்படியானல் நாம் இதை எப்படிப் பார்க்கின்றோம்?  மக்கள் இதையிட்டு என்ன நினைக்கின்றனர்? இவையெல்லாம் எம் முன்னுள்ள அடிப்படையான கேள்விகள்.

 

இந்த கேள்விகள், விருப்பங்கள், பார்வைகள், இதையொட்டிய கருத்துகள் இந்த நிலைமையை மாற்றிவிடாது என்ற உண்மை ஒருபுறம். மறுபுறத்தில் இதை பற்றிய தெளிவு தான், மனித குலத்தை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கும். இதன் அடிப்படையில் தான், எம் எதிர்வினைகள் அமைகின்றன.

 

நாம் புலிகளின் சொந்தத் தோல்வியை எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றோம். பல ஆயிரம் ஆயுதம் ஏந்திய உறுப்பினர்கள் முதல் விமானங்கள் கொண்ட ஒரு இயக்கம், ஏன் தோற்கின்றது? இதற்கு நேர்மையானவர்கள், சமூகம் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தெளிவாக பதிலளிக்க வேண்டும். இதற்கு விடை கண்டால் தான், குறைந்தபட்சம் சமூகத்தை விழிப்புற வைக்கமுடியும். 

 

கடந்த 28 ஆண்டுகளாக நாம்(ன்) நடத்திய எதிர்மறை போராட்டம், இந்த தோல்வியை தடுக்க நடத்தியது தான். நாம் எப்போதும் மக்களின் உரிமையை வலியுறுத்தி, அதன் அடிப்படையில் போராட்டத்தைக் கோரியவர்கள். மண்ணில் வாழ்ந்தபோது, மக்களை அணிதிரட்டி அதன் அடிப்படையில் நாம் போராட்டத்தை நடத்திவர்கள். இயக்க(த்துக்கு)ங்களுக்கு எதிரான எமது போராட்டம், அன்னிய சக்திகளின் துணையுடன் தோற்கடிக்கப்பட்டது. இதை நெளிவு சுழிவுடன் கையாள முடியாத வகையில், எமது தவறுகளும் சேர முற்றாக நாம் தோற்கடிக்கப்பட்டோம். இப்படி இந்த தேசவிடுதலைப் போரட்டத்தின் தோல்வியை தடுத்து நிறுத்த முடியாத தவறுக்கு, கம்யூனிஸ்டுகளாகிய நாம் பொறுப்பேற்றுக் கொள்வது தான் எம் மீதான சுயவிமர்சனமாகும்.

 

மக்களின் விடுதலையின் பெயரில், பாசிசம் தமிழ் இனத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. மக்களின் விடுதலையை நேசித்த பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள். பலர் பாசிசத்துக்கு துணை போனார்கள். தப்பிப் பிழைத்து புலம் பெயர்ந்த நம்மில் பலர், வரலாற்றின் ஓட்டத்தில் எதிர்ப்புரட்சிக்கு, பேரினவாதத்துக்கும் துணை போனார்கள்.

 

படிப்படியாக மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக யாரும் குரல் கொடுக்கக் கூட முன் வரவில்லை. அதை கேவலப்படுத்தினர். அதை கொச்சைப்படுத்தினர். அதை வெறும் தனிப்பட்ட என(ம)து பிரச்சனையாக இழிவுபடுத்தினர். மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சி, புலி பாசிசத்துக்கு வெளியில் கொடி கட்டிப் பறந்தது. 

 

மக்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சி வரலாறு இப்படித் தான் எங்கும் அரங்கேறியது. ஒட்டு மொத்தத்தில் அனைவராலும் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டனர். புத்திஜீவிகள் யாரும் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை. இப்படி பல வடிவங்களில், தமிழ் மக்கள் தோற்றுப் போன வரலாறாக எம் அரசியல் வரலாறு உண்டு.

 

இதை எதிர்கொண்ட நாம், எதிர்மறையில் போராடினோம். கொல்லும் முயற்சிக்கு அப்பால், இதற்கு கிடைத்த பட்டங்கள் பல. துரோகி, எட்டப்பன், புலி, ஒரு அப்பனுக்கு பிறக்கவில்லை, மனநோயாளி, கொலைகாரன், பல பெண்களை கற்பழித்தவன், நிதி மோசடிக்காரன் இப்படி ஆயிரம் பட்டங்கள். புலிகள் முதல் புலியெதிர்ப்பு அணிகள் வரை வழங்கியவைகள் இவை. இப்படி வழங்கியவர்கள் தமிழ் மக்களுக்கு கொடுத்தது என்ன? இழிவையும், சமூக அடிமைத்தனத்தையும் தான்.

 

நாம் எது நடக்ககூடாது என்று நினைத்துப் போராடினோமோ அது நிகழ்கின்றது. தமிழ் மக்களின் அடிமைத்தனம் இன்று விளைவாகின்றது. இதன் பின்னணியில் தான் நாங்கள் புலிகளின் தோல்வியைப் பார்க்கின்றோம்.

    

ஒரு போராட்டம் எப்படி நடத்தக் கூடாதோ, அதை இதில் இருந்து கற்றுக்கொள்வது தான் எம்முன்னுள்ள வரலாற்றுக் கடமை. இதை கற்றுக்கொள்ளா விட்டால் நாம் சுய அறிவுள்ள மனிதர்களல்ல. நாம் இதைக் கொண்டாடுவதுமல்ல, இதற்காக புலம்பி அழுவதுமல்ல. இதை படிப்பினையாகக் கொண்டு, மக்களுக்காக எப்படி போராடுவது என்பதைக் கற்றுக்கொள்வதே  எம் முன்னுள்ள கடமையாகும். 

 

ஆயிரம் மக்களைப் பலி கொண்டு, பல துடிப்பான இளமையை விடுதலையின் பெயரில் பறிகொடுத்த, இழிந்து நசிந்து சிறுமைப்பட்டு கிடக்கும் சமூகத்தின் பிரதிநிதிகள் நாங்கள். இந்த வரலாற்று காலத்தின் தேவையை மீளவும் தெளிவாக பறைசாற்ற முனைகின்றோம். தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டம் எதிர்ப்புரட்சியாகி, அது அரங்கேற்றிய வரலாற்றைக் கற்றுக்கொள்வதன் அவசியமே எம் முன்னுள்ள நிபந்தனையாகும்.

 

இன்றைய புலியின்  தோல்வி தவறான ஒரு போராட்டத்தினால் ஏற்பட்டது என்பதை புரிந்தால் தான், அனைத்தையும் விட இன்று, முதன்மையானது. மக்களின் உரிமைக்கான நியாயமான போராட்டம் அப்படியே தான் இன்னமும் உள்ளது. இதையே எம் போராட்டம் முன்னெடுத்து அதில் தோற்றுப் போனதா!? என்பதை கற்றுக்கொள்வது அவசியமானது.

 

சாதாரண மக்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொண்டுள்ளனர். புலிகள் அழிந்தால் சிங்கள பேரினவாதம் எதையும் தராது என்பதையும், அதேநேரம் புலிகள் இருந்தால் எதையும் பெற முடியாது என்ற உண்மையை எதிர்மறையில் தெளிவாக புரிந்துள்ளனர்.

 

மக்களைப் பொறுத்தவரை புலிகள் அழிந்தால் எதுவும் கிடைக்காது என்பதும், புலிகள் இருந்தாலும் எதுவும் கிடைக்காது என்ற உண்மையையும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்கு புரிந்துள்ளனர். மக்கள் எதையும் ஆதரிக்கவும் முடியாது, சொந்த வழியை தீர்மானித்து செல்லவும் முடியாத நிலையில் பரிதவிக்கின்றனர். உண்மையில் மொத்த இழப்பும் மக்களுக்குத்தான். துயரமும் மக்களுக்குத்தான்.

 

மக்களின் பெயரால் உள்ளவர்கள், அனைவரும், மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கப் போவதில்லை. புலிகள் முதல் பேரினவாதம் வரை, இதை தெளிவாக தம் வரலாறு முழுக்க நிறுவி வந்துள்ளனர். இதை மக்கள் சொந்த அனுபவம் மூலம் கண்டு வந்துள்ளனர்.

 

நாம் இதை இப்படித்தான் எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றோம். எதிர்காலத்தில் மக்கள் தம் பிரச்சனைகளுக்காக போராடுவது தவிர்க்க முடியாது. அவர்களின் மொத்த வாழ்க்கையும் இன்று போல் என்றும் போராட்டத்தாலானது. போராட்டமே சரி வராது என்று சொல்கின்ற தோல்வி மனப்பாங்கை முன் கூட்டியே எதிர்த்துப் போராடுவது, எம் முன்னுள்ள உள்ள வரலாற்றுக் கடமையாகும். புலியின் போராட்டத்தில் இருந்து பார்த்தால், அதைப் போராட்டம் எனப் பார்த்தல் தவறானது. இன்று நடப்பது போராட்டத்தின் தோல்வியல்ல, எதிர்ப்புரட்சியின் தோல்வி. இதைக் கற்றுக் கொள்வதை, நாம் வலியுறுத்திக் கோருகின்றோம்;. புலிப்போராட்டம்  மக்கள் போராட்டமேயல்ல என்பதை புரிந்தால் தான், அதை எதிர்மறையில் கற்று நாம் மீண்டும் மக்களுக்காக சரியாகப் போராட முடியும்.

 

பி.இரயாகரன்
17.11.2008

   

Last Updated on Monday, 17 November 2008 07:44