Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

  • PDF

இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்.

 


 

தாமதமாக வரும் அரசுப் பேருந்து, எரிச்சலுடன் வாடிக்கையாளரை விரட்டும் வங்கிப் பணியாளர், சேவையில்லாமலே தெனாவெட்டாக நடக்கும் தபால் துறை, தருமத்துக்கு நடக்கும் அரசுப் பள்ளிகள், வசதிகளற்ற அரசு மருத்துவமனைகள் இப்படி அன்றாட வாழ்வின் இன்னல்களைக் கண்டோரெல்லாம் “இனி எல்லாம் பிரைவேட்தான், பேஷ், பேஷ் ரொம்ப நன்னாகப் போறது” என்று சப்புக்கொட்டினர். கல்வி, காப்பீடு, சுகாதாரம், நிதி, அத்தனையிலும் தனியார் மயம் வெள்ளமென ஓடியது. அரசுக் கட்டுப்பாடுகள் எனும் கோட்டா ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டு தாரளமயம் திறந்து விடப்பட்டது. கோக், பெப்சி முதல் எண்ணற்ற நுகர்வுப் பொருட்கள் ஒரு அடியில் இந்திய நிறுவனங்களை அழித்துவிட்டு கால் பதித்தன.

பங்குச் சந்தை முன்னெப்போதையும் விட பகாசுரமாக வளர்ந்தது. ஒவர் நைட்டில் அம்பானி போன்ற முதலாளிகளெல்லாம் பில்லியனில் இலாபம் பார்க்கத் தொடங்கினார்கள். வளர்ச்சியின் அளவுகோலாக செல்பேசிகளும், வாகனங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தொலைக்காட்சி சீரியல்களும், பேரங்காடிகளும், ஏ.டி.எம்களும் அலையலையாய் வந்திறங்கின. சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் முன் இரவுபகலாய் இருந்த நீண்டவரிசை ஆடு விழுங்கிய மலைப்பாம்பு போல எப்போதும் கிடந்தது.

இப்படி உலகமயம் பூத்துக்குலுங்கிய நாட்டில்தான் இதே காலத்தில்தான் இந்த உலகமயக் கொள்கைகள் காரணமாக ஐந்து இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கிராமப் புறங்களில் வாழ்விழந்த இலட்சக்கணக்கானோர் உதிரிப் பாட்டாளிகளாய் நகரங்களை அப்பிக் கொண்டனர். பின்தங்கிய மாநிலங்களிலிருந்து நாடோடிகளாய் புலம் பெயருவது வாடிக்கையானது. கல்வியும், சுகாதாரமும் காசு உள்ளவனுக்கு மட்டும் என்றானது. இருப்பினும் தனியார் மயத்தின் மகிமைகளை குறிப்பாக நடுத்தர வர்க்கம் மறப்பதற்குத் தயாராக இல்லை. இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை மதவெறியை விட அதிகமான முதலாளித்துவ வெறியுடன் ஆதரித்து வந்தன.

எக்னாமிஸ்ட் போன்ற பத்திரிகைகளெல்லாம் இனி உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது எனவும் யாரும் தனியாக வாழ முடியாது என்றும் பிரகடனம் செய்தன. சோசலிச முகாம் அழிந்த நிலையில் முதலாளித்துவமே இனி உலகின் யதார்த்தம் என்ற கொள்கை முழக்கம் வெற்றிகரமாய் அறிவிக்கப்பட்டது. உலக வங்கியும், ஐ.எம்.எஃப்பும், உலக வர்த்தகக் கழகமும் புதிய உலகின் சக்கரவர்த்திகளாக முடிசூட்டப்பட்டார்கள்.

இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உலகமயம் என்ன விளைவைக் கொண்டு வரும் என்பதை திவாலான அர்ஜென்டினா, மெக்சிகோவும், 95களில் பொருளாதா பூகம்பங்களைச் சந்தித்த தென்கிழக்காசிய நாடுகளும் அவ்வப்போது எடுத்துக் காட்டின. அப்போதெல்லாம் இவையெல்லாம் விதிவிலக்குகள், காலப்போக்கில் பிரச்சினைகள் சரியாகிவிடும், சந்தையின் வளர்ச்சி எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து விடும் என்று ஜோசியம் சொன்னார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.

தனிநபர்களிடம் மேலும் மேலும் சொத்து சேர்வதும், பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், குறிப்பிட்ட தொழிற்சாலையில் திட்டமிட்ட உற்பத்தியும், நாட்டளவில் அராஜக உற்பத்தியும் நிலவுவதும் என முதலாளித்துவ சமூகத்தின் இரு முரண்பாடுகளை காரல் மார்க்ஸ் தனது மூலதனம் ஆய்வில் நிறுவியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் முற்றும்போதுதான் பலவிதமான பொருளாதார நெருக்கடிகளும், போர்களும் வெடிக்கின்றன. உலகில் தற்காலிகமாக சோசலிசம் மறைந்திருக்கலாம், ஆனால் மார்க்சியம் என்ற சமூக அறிவியல் மறையாது. ஆம். தற்பொது அந்த விதிப்படி உலக முதலாளித்துவத்தின் தலைமையிடமான அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசிகளை அளித்திருக்கின்றன. வால்ஸ்டீரீட் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைநகரத் தெரு கடந்த சில நாட்களாக அதிர்ச்சியில் புதையுண்டிருக்கிறது. இது அமெரிக்காவோடு முடியாமல் பிரச்சினையும் உலகமயமாகியிருக்கிறது.

2001இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் அல்காய்தாவால் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு விமானப் போக்குவரத்து, சுற்றுலா என்று பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதை ஈடுகட்ட ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்தது அமெரிக்கா. இதனால் போர்தளவாட உற்பத்தியும், எண்ணெய் தொழிலும் அபராமாக இலாபம் சம்பாதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அப்படி ஒன்றும் நடந்து விடவில்லை. ஈராக் போர் அமெரிக்காவின் பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டது.

இந்நிலையில் உள்நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்த கடன் என்ற போதையை நிபந்தனைகள் இல்லாமல் நிதி நிறுவனங்கள் மூலம் அளித்தார்கள். ஏற்கனவே ஆளாளுக்கு பத்து கடன் அட்டைகள் வைத்திருக்கும் அமெரிக்காவில் இந்த புதிய கடன் வெள்ளமெனத் திறந்து விடப்பட்டது. கொஞ்ச நாளைக்கு எல்லா அமெரிக்கர்களும் தின்று தீர்த்தார்கள். முக்கியமாக வீட்டின் அடமானத்தை வைத்து வாங்கப்பட்ட கடன்கள் பல கைககள் மாறி கடன் குட்டிகள் போட்டு பண செயலாக்கத்தை பன்மடங்காக்கியது. இறுதியில் கடன் வசூலிக்கும் போது நிபந்தனையில்லாத கடன்களை வசூலிக்க முடியவில்லை. வீட்டு மதிப்பும் பாதாளத்தில் இறங்கியது. இதைச் சரிக்கட்ட நல்ல கடன், கெட்ட கடன் எல்லாவற்றையும் கலந்து ஒரு காக்டெயில் மாதிரி ரெடிபண்ணி நிதி நிறுவனங்கள் பிரித்துக்கொண்டன. இதன் மூலம் நட்டத்தை தவிர்க்கலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. மேலும் சரிவை எல்லா நிறுவனங்களும் சேர்ந்து சந்தித்தால்தான் தப்பிக்க முடியும் என்ற காரிய வாதமும் அதில் இருந்தது. இதைத்தான் சப் பிரைம் லோன் நெருக்கடி என்று அழைக்கிறார்கள். ஆனால் லோன் மட்டும் வந்தபாடில்லை.

தேவைக்கு அதிகமான உற்பத்தி, வாங்குவதற்கு ஆளில்லை. அதனால் கடன் கொடுத்து வாங்க வைக்கிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட் தீடிரென்று விண்ணுக்கு பாய்கிறது. தேவை முடிந்ததும் பாதாளத்தில் சரிகிறது. முந்தைய மதிப்பில் கடன் வாங்கியவர்கள் தற்போதைய குறைவான மதிப்பை வைத்துக் கடனைக் கட்ட முடியவில்லை. வீடுகளின் உண்மையான பயன் மதிப்பு செயற்கையாக உப்பவைக்கப்பட்ட போது ஒன்றும் தெரியவில்லை. உப்பியது வெடித்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை.

வராக்கடன்கள் கைமாறி கடைசியில் போய்ச்சேர்ந்த நிறுவனங்கள் கடனை வசூலிக்க முடியாமல் மாட்டிக்கொண்டன. இதில் கொள்ளை இலாபம் அடித்தது யார், சுமாரன இலாபம் சுருட்டியது யார், நட்டமடைந்தது யார், மக்களுக்கு என்ன இழப்பு இன்னபிறவையெல்லாம் தேவ ரகசியங்கள். நமக்கு புரியாத உபநிடதங்களும் கூட. இவற்றை சி.ஐ.ஏ புலனாய்வு செய்தாலும் கண்டுபிடிக்க முடியாத மறை பொருளாகும். மொத்தத்தில் ஊக வணிகமும், எதிர்பார்ப்பு வணிகமும், பங்குச்சந்தைச் சூதாட்டமும் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தின் நீர்க்குமிழ் உடைந்து விட்டது. முதலாளித்துவத்தின் இலாபம் தனக்குத் தானே தோண்டிக்கொண்டுள்ள சவக்கிடங்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மார்க் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியது. அதைத் தொடர்ந்து உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமான் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி எனப்படும் அமெரிக்கன் இன்டர் நேஷ்னல் குரூப் நிறுவனமும் திவாலாகியது. தற்போது அமெரிக்காவின் ஆறாவது பெரிய வங்கியான வாஷிங்டன் மியுட்சுவல் மற்றும் மார்கன் ஸ்டான்லி, கோல்ட் மேன் சாஸ் ஆகிய நிதிக் கழகங்களும் மஞ்சள் கடுதாசி வரிசையில் காத்திருக்கின்றன. மொத்தத்தில் வால் தெருவிலிருக்கும் நிதி நிறுவனங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டன.

சரி தனியார் மயக் கொள்கைப் படி வல்லவன் வாழ்வான், முடியாதவன் சாவான் என்று விட வேண்டியதுதானே? அதுதானில்லை. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பல்லாயிரம் பேர் வேலையிழப்பர், பொருளாதாரம் சீர் குலையும், ஆடம்பர வாழ்க்கை மட்டுமல்ல அத்தியாவசிய வாழ்க்கையைக் கூட இழக்க நேரிடும், அமெரிக்கர்கள் நுகர்வைக் குறைத்துவிட்டால் அதற்காக உலகமெங்கும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நாடுகள் பாதிக்கப்படும் என்று பலவிதமான சென்டிமென்டுகள் சொல்லப்பட்டு அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணததில் கிட்டத்தட்ட 35 இலட்சம் கோடி ரூபாயை கொடுத்து இந்நிறுவனங்களை மீட்கப் போகிறது. அதற்காக புஷ் கையெழுத்திட்டு பாராளுமன்றத்திலும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் சில நிறுவனங்கள் அரசுடைமையாக்கப் படவும் இருக்கின்றன. இந்த நிவாரணப் பணத்தை அந்த நிறுவனங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம, அமெரிக்க சட்டப்படி கணக்கு தணிக்கை தேவையில்லை, என்றெல்லாம் சலுகைகள் வேறு!

எல்லாவற்றையும் தனியார் மயம் என்று பேசியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? இழப்பு என்று வந்ததும் அரசு தலையிட்டு பணம் கொடுத்து அரசுடைமையாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரு சோசலிச நாட்டில் அனைத்தும் மக்களுடைமையாக்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி செய்யும் போது மட்டுமே இந்த பிரச்சினைகளை வரவிடாமல் செய்ய முடியும் என்று மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தை வன்மத்தோடு எதிர்த்த நாடு தனது முதலாளிகளைப் பாதுகாக்க நிறுவனங்களை அரசுடைமையாக்குகிறது என்றால் இதுதான் வரலாற்றின் கவித்துவமான நீதி!

இந்தப் பொருளாதாரச் சரிவால் அமெரிக்காவின் நிதி, காப்பீடு, வங்கி நிறுவனங்களுக்கு அவுட் சோர்சிங் செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதி இலாபத்தை இழக்கும் என்று சொல்கிறார்கள். மேலும் 25,000பேருக்கு மேல் வேலையிழப்பும் நடக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்குறைப்பு, செலவு குறைப்பு என்று மாற்றப்படும் ஐ.டி துறையின் பொற்கால வாழ்க்கையை இனி மலரும் நினைவுகளாய் பாடவேண்டியதுதான். இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் பலநாடுகளிலும் சேவைத் துறைசார்ந்த நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சீர்குலைவால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று முதலாளித்துவ அறிஞர்களே கணிக்கிறார்கள். அடுத்த பலிகடா யார் என்று காத்திருந்து பார்ப்போம். ஓவர் நைட்டில் பில்லியனரான மொள்ளை மாறிகளெல்லாம் அதே ஓவர் நைட்டில் தெருவுக்கு வருவதும் நடக்கப் போகிறது. ஆனாலும் மேற்கண்ட திவாலான நிறுவனங்களின் முதலாளிகளும், தலைமை நிர்வாகிகளும் திவாலாவதற்கு முன்னால் எச்சரிக்கையாக முடிந்த அளவை சுருட்டியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதையெல்லாம் யார் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பது? பின்லேடனையே இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இதில் பணலேடன்களை மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பது?

பூச்சி மருந்து குடித்த விவசாயிகளைக் கொலை செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் நாயகன் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அவல நிலைக்காக கண்ணீர் விடுகிறார். ஏதாவது செய்து உதவ வேண்டுமே எனத் துடிக்கிறார். அமெரிக்கா பொருளாதாரத்தைச் சூறாவளி தாக்கியிருக்கும் இச்சூழலில்தான் இந்தியவை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 123 ஒப்பந்தம் ஒரிரு நாட்களில் நிறைவேறப் போகிறது. எல்லா வகை நிபந்தனைகளையும் கொண்டிருக்கும் இவ்வொப்பந்தம் காலாவதியான அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதற்காக இந்திய மக்களின் சில இலட்சம் கோடி ரூபாய்களை அமெரிக்காவுக்கு தாரை வார்ப்பதோடு, இறையாண்øமையையும் சேர்த்துக் கொடுக்கிறது. மட்டுமல்ல அமெரிக்காவின் நலனுக்கு உட்பட்டு இந்தியா செயல்படுகிறது என்று ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் மதிப்பீடு செய்து இந்த ஒப்பந்தத்தை அமல் படுத்துவராம். இது பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள் என்பதால் விரிவஞ்சி இங்கே தவிர்க்கிறோம். அமெரிக்காவின் தெற்காசிய பேட்டை அடியாளாக இந்தியா மாறப்போவது மட்டும் உறுதி. எதிர்காலத்தில் ஈரானின் மீது அமெரிக்கா படையெடுக்கும் பட்சத்தில் இந்தியா அதன் இராணுவத்தளமாக செயல்படுவது நிச்சயம். இந்திய அரசில் இருக்கும் சில அமெரிக்க கைக்கூலிகளால் இது சாத்தியாமாயிருக்கிறது.

இவ்வொப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அம்பானி முதலான தரகுமுதலாளிகள் பாராளுமன்ற வியாபாரத்தில் இறங்கி காரியத்தை சாதித்தார்கள். அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு கட்சிகளும் ஒன்றுபட்டு ஆதரித்தார்கள். இடது சாரி கட்சிகள் மட்டும் வேறு வழியின்றி அதுவும் காலம் கடந்த எதிர்ப்பைக் காட்டினார்கள். கனிமொழி தி.மு.க சார்பில் சிங்கிற்கு மலர்க்கொத்து கொடுத்து ஒப்பந்தம் நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒட்டுமொத்த அரசியல் உலகும், இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்குவதற்கு கர்ம சிரத்தையோடு வேலை செய்திருக்கிறது என்பதைத்தான். ஆயினும் அமெரிக்காவைத் தாக்கிய பொருளாதாரச் சூறாவளி இந்தியாவையும் தாக்குவதற்கு அதிக காலம் பிடிக்காது. அப்போது இந்த இந்திய அடிமைகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.

பூலோக சொர்க்கமான அமெரிக்காவிலேயே தனியார் மயம், சந்தை, முதலாளித்துவ உற்பத்தி முறை, அபரிதமான இலாபம் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறது முதல் முறையல்ல. ஏற்கனவே 1930களில் உலகப் பெருமந்தம் என்ற பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் தொடங்கி உலகமெங்கும் ஏழைகளை அழித்துச் சென்றது. அப்போது அமெரிக்காவில் ஒரு புறம் கஞ்சித் தொட்டி திறந்தும், மறுபுறம் விலை வீழ்ச்சியடைந்த கோதுமையை கடலில் கொட்டியும் நெருக்கடியை சமாளிக்க முயன்றார்கள். இப்போதோ அதை விட பன்மடங்கு நெருக்கடி வந்திருக்கிறது. தேவனே வந்து மீட்புப் பணி செய்தாலும் காப்பாற்ற முடியாத நெருக்கடி.

ஏழை நாடுகளைச் சுரண்டி தன் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கும் அமெரிக்க நெருக்கடியை மற்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் கவலையோடுதான் பார்க்கின்றன. இதனால் அந்த நாடுகளும் பாதிப்பு அடையும் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஜி எட்டு மாநாட்டிலேயே இதைப் பற்றி பேசி கூட்டாக நெருக்கடியை சமாளிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் நோபல் பரிசுபெற்ற பொருளாதார வல்லுநர்களை அதிபர்களாக நியமித்தாலும் இப்போதைய நெருக்கடி அவ்வளவு சுலபத்தில் தீர்ந்து விடாது. சந்தையின் பாசிசம் உருவாக்கிய அராஜகம் அதன் அழிவுகளை செய்து விட்டுத்தான் தணியும். எனினும் இறுதியில் இந்த அழிவுகளை சுமக்கப் போகிறவர்கள் உலகின் பெரும்பான்மையான மக்கள்தான். அவர்களைப் பற்றி கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

இந்தியாவில் மறுகாலனியக் கொள்கைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் புரட்சிகர அமைப்புக்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அழிவு இப்போது அமெரிக்காவிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இதுநாள் வரையிலும் அறியாமையில் உலகமயத்தை ஆதரித்து வந்த பலர் இனியாவது விழித்துக் கொண்டு எதிர்க்க வேண்டியது அவசியம். தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே உலகமயத்தை எதிர்ப்பதற்கு ஒரே வழி. அந்த வழியை சாதிக்க வேண்டுமென்றால் அரசியல் களத்தில் வெல்லவேண்டும். உலகமயத்தை ஆதரித்து அமல்படுத்திவரும் அரசியல், முதலாளித்துவ வர்க்கங்களை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டுவது ஒன்றே இந்த அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.

http://vinavu.wordpress.com/2008/10/06/திவாலாகும்-அமெரிக்காவிற/

Last Updated on Saturday, 11 October 2008 06:22