Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் "தொழிலாளர்களின் வயிற்றலடிக்கும் ஐ.டி.சி.ஏ.டி.சி. பொருட்களைப் புறக்கணிப்போம்!'' — பு.ஜ.தொ.மு.வின் ஆர்ப்பாட்டம்

"தொழிலாளர்களின் வயிற்றலடிக்கும் ஐ.டி.சி.ஏ.டி.சி. பொருட்களைப் புறக்கணிப்போம்!'' — பு.ஜ.தொ.மு.வின் ஆர்ப்பாட்டம்

  • PDF

பன்னாட்டு ஏகபோக சிகரெட் நிறுவனமான ஐ.டி.சி.யின் துணை நிறுவனமான ஏ.டி.சி. எனப்படும் ஏசியன் டொபாக்கோ கம்பெனி, ஓசூரில் 273 தொழிலாளர்களைக் கொண்டு 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நாளொன்றுக்குக் கோடிக்கணக்கில் சிகரெட் உற்பத்தி செய்து, கோடிகோடியாய் இலாபத்தை அள்ளும் இந்நிறுவனம், கடந்த 20 மாதங்களுக்கும் மேலாகத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. இதனைத் தட்டிக் கேட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேரைப் பணிநீக்கம் செய்து பழிவாங்கியது.

இதைக் கண்டு கொதித்தெழுந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து நடத்திய ஆலை நிர்வாகம், தொழிலாளர்களை வெளிப்படையாக மிரட்டியது. தொழிற்சங்கத்தை உடைக்க, ஆலை நிர்வாகத்துக்கு விசுவாசமான சங்கத்தை திடீரென உருவாக்கியது. ஆனால், தொழிலாளர்கள் இத்தகைய சதிகளையும் துரோகத்தனங்களையும் முறியடித்து, தமது சங்கத்தில் ஓரணியில் திரண்டு நின்று உறுதியாகப் போராடினர். அதன் பின்னரும் இச்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்கவோ பேச்சுவார்த்தைக்கு அழைக்கவோ செய்யவில்லை.

 

 

இந்நிலையில், ஓசூரில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஏ.டி.சி. ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து, பிற ஆலைத் தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடமும், துண்டறிக்கை, சுவரொட்டிகளோடு வீடுவீடாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, ஊதிய உயர்வைச் சட்டவிரோதமாக நிறுத்தி வைத்தும், தொழிற்சங்க முன்னணியாளர்களைப் பழிவாங்கியும் திமிரோடு கொட்டமடிக்கும் ""ஏ.டி.சி. நிர்வாகத்தைச் சட்டப்பூர்வ வழிகளால் பணிய வைக்க முடியாது; நிர்வாகத்தை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களைக் கட்டியமைப்போம்! உழைக்கும் மக்களே, தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் ஏ.டி.சி மற்றும் ஐ.டி.சி. நிறுவனங்களின் நுகர்பொருட்களைப் புறக்கணிப்போம்! தமிழக அரசே, ஏ.டி.சி. ஆலையை ஏற்று நடத்து!'' எனும் முழக்கங்களுடன் தொழிலாளர்களை அணிதிரட்டி 6.9.08 அன்று ஆலை வாயிலருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

 

தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தாலும், பு.ஜ.தொ.மு.வின் வீச்சான பிரச்சாரம்  ஆர்ப்பாட்டத்தாலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்ட ஏ.டி.சி. நிர்வாகம், தற்போது தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளது. கொட்டை போட்ட பெரிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் முடங்கிவிட்ட நிலையில், ஏ.டி.சி. தொழிலாளர் போராட்டத்தை முன்னிலைக்குக் கொண்டு வந்து, உழைக்கும் மக்களிடம் ஆதரவைத் திரட்டி பு.ஜ.தொ.மு. நடத்திய பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் புதிய போராட்ட உத்தியாக அமைந்து, தொழிலாளர்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

 பு.ஜ. செய்தியாளர்கள், ஓசூர்.