Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் எரிமக் கலன் - பகுதி 8. பிற பயன்கள் (Fuel Cell, Part 8. Other Uses)

எரிமக் கலன் - பகுதி 8. பிற பயன்கள் (Fuel Cell, Part 8. Other Uses)

  • PDF

நாம் இதுவரை எரிமக் கலனில் 2 H2 + O2--> 2 H2O என்ற வகையான வினைகளை மட்டும் பார்த்தோம். இதில் ஹைட்ரஜன் ‘எரிந்து' தண்ணீர் வெளிவருகிறது. மாசு எதுவும் வராது. பெரும்பாலும் இந்த தண்ணீருக்கு குறிப்பிட்டு பயன் என்று இருக்காது. விண்வெளி கலங்களில் (அப்பல்லோ / Apollo போன்ற விண்கலங்களில்) இப்படி வரும் தண்ணீர், விண்வெளி வீரர்கள் குடிக்கப் பயன்பட்டது.



எப்படி ஹைட்ரஜனுக்கு பதில் மெத்தனால் போன்ற பொருள்களையும் எரிபொருளாக பயன்படுத்தலாமோ, அதைப் போலவே ஆக்சிஜனுக்கு பதிலாக வேறு பொருளையும் பயன்படுத்தலாம்.


உதாரணமாக,

     

  • H2 + Cl2 --> 2 HCl
  • C2H2 --> C2H2Cl2

    இங்கு HCl அல்லது C2H2Cl2 என்பது வினையின் முடிவில் கிடைக்கிறது. எனவே, எரிமக்கலனை மின்சாரம் எடுப்பதைத் தவிர, புதுப் பொருளைத் தயாரிக்கும் (synthesis) கலனாகவும் பயன்படுத்தலாம்.



தற்போது அம்மோனியா (NH3) தயாரிக்க ஹேபர் முறை (Haber Process) உபயோகத்தில் உள்ளது. இது மிக அதிக அழுத்தத்திலும் (100 atmosphere) வெப்ப நிலையிலும் (500 டிகிரி செல்சியஸ்) நடைபெறும். இந்த வினை



N2 + 3 H2 --> 2 NH3

என்று இருக்கும். இவ்வினையில் ஆற்றல் வெப்பமாக வெளிப்படும்.


இதையே எரிமக்கலன் வழியே செய்ய ஆராய்சி நடந்துகொண்டு இருக்கிறது. அவ்வாறு செய்ய முடிந்தால், பெருமளவு லாபம் கிடைக்கும். தற்போது இருக்கும் ஹேபர் முறையில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் அம்மோனியாவை தயாரிக்க செலவும் அதிகமாக இருக்கின்றது. எரிமக் கலனில் சாதாரண அழுத்தம் மற்றும் வெப்ப நிலையில் தயாரிக்க முடிந்தால், செலவு குறைவாக இருக்கும். அம்மோனியா உரங்கள் தயாரிக்க தேவைப்படுகிறது. நமது நாட்டில் பெருமளவு அம்மோனியா தயாரிக்கப்படுகிறது. எரிமக்கலனில் தயாரிக்க முடிந்தால், பெரிய அளவில் மின்சாரமும் கிடைக்கும்!.


நமது வீடுகளில் இருக்கும் கழிவுகளை பல சமயங்களில் சரியான முறையில் நீக்கப்படுவதில்லை (treatment). அவற்றை நகராட்சிகளிலேயே எரிக்கப் படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதை தென் சென்னையில் வசிப்பவர்கள் பள்ளிக்கரணைக்கும், வட சென்னையில் வசிப்பவர்கள் R.K. Nagar/ கொடுங்கையூரிலும் சென்று கண்டு களிக்க(!)லாம். அவ்வாறு எரியும் குப்பையில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால், நச்சுப் பொருள்கள் உருவாகி காற்றில் கலந்துவிடும். பிளாஸ்டிக் இல்லாவிட்டாலும் கழிவுகள் (உதாரணமாக இலைச் சருகுகள்) நன்றாக எரியாவிட்டால் புகை வரும். தவிர, இவற்றில் வரும் வெப்பமும் வீண்தான்.


அதற்கு பதிலாக, அவற்றை எரிமக் கலனில் ‘எரித்தால்' மாசு வராது. ஓரளவு மின்சாரமும் கிடைக்கும். ஆனால், தற்சமயம் அவற்றை (அதாவது வீட்டுக் கழுவுகளை) எரிபொருளாகப் பயன்படுத்தும் அளவு எரிமக் கலன் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையவில்லை.


தற்சமயம் வீட்டுக் கழுவுகளை எரிவாயுவாக மாற்றும் தொழில் நுட்பம் இந்தியாவில் இருக்கிறது. அதை லாபகரமாக செய்ய முடியும். ஆனால், அரசாங்கம், அதிகாரிகள், மற்றும் பொதுமக்களின் மெத்தனப்போக்காலும், அறியாமையினாலும், ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த முறை பின்பற்றப் படுகிறது. ஒருவேளை எரிமக் கலன் மூலம் இதை மின்சாரமாக மாற்ற முடிந்தால், இன்னும் லாபகரமாக இருக்கும்.


கழிவுகலை எரிமக்கலனில் எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் என்றால், முதலில் அதன் வெப்ப நிலையை உயர்த்த வேண்டி இருக்கும். கழிவுகளைத் திரவ நிலைக்கு கொண்டு வர வேண்டி இருக்கும். இது நடைமுறையில் வருமா, பொருளாதார ரீதியில் ஆதாயம் தருமா (economical) என்று இப்பொழுது சொல்ல முடியாது.

 

http://fuelcellintamil.blogspot.com/2008/01/8-fuel-cell-part-8-other-uses.html