Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் காட்ஸ் ஒப்பந்தம் : இறுகுகிறது மறுகாலனியாக்கச் சுருக்கு!

காட்ஸ் ஒப்பந்தம் : இறுகுகிறது மறுகாலனியாக்கச் சுருக்கு!

  • PDF

தண்ணீரைத் தனியார்மயமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் ஏழை நாடுகளின் கையை முறுக்கிக் கையெழுத்து வாங்கியது உலக வங்கி. காட்ஸ் ஒப்பந்தமோ, சுயவிருப்பத்துடன் மனப்பூர்வமாக இதில் கையெழுத்திட்டுத் தருமாறு கோருகிறது.
சேவைத்துறைகளிலான வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (General Agreement on Trade related Services) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், காட் (GATT) ஒப்பந்தத்துடன் (வரி மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம்) இணைந்ததாகும். எனவே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் காட்ஸ் ஒப்பந்தத்தையும் அடிப்படையில் ஏற்றுள்ளன.


பொருள் (Goods) உற்பத்தித் துறையில் ஏற்றுமதி இறக்குமதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதன் மூலம் விவசாயம் மற்றும் தொழில்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவுவது காட் ஒப்பந்தத்தின் நோக்கம். காட்ஸ் ஒப்பந்தமோ, பொருளுற்பத்தி இல்லாத சேவைத்துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கானது. தொலைபேசி, மின்சாரம், காப்பீடு, சாலைகள், ஊடகங்கள் ஆகியவற்றில் தொடங்கி சுற்றுலா, அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் நீதித்துறை வரை அனைத்தும் திறந்து விடப்பட வேண்டிய சேவைத்துறைகளின் பட்டியலில் வருகின்றன. இந்தப் பட்டியலில் பாசன நீர் விநியோகம், நகராட்சிகள் செய்து வரும் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல், குப்பை வாருதல் போன்றவையும் இடம் பெறுகின்றன.


காட்ஸ் வழங்கும் "ஜனநாயக' உரிமை!


"எந்தெந்தத் துறைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடலாமென்று தீர்மானிக்கும் "உரிமை' எல்லா நாடுகளுக்கும் உண்டு'' என்று காட்ஸ் ஒப்பந்தம் கூறுகிறது. எனினும் இது ஒரு சொற்ஜாலம். "நட்சத்திர விடுதியில் விருந்துண்ணும் உரிமை மூட்டை தூக்குபவனுக்கும் உண்டு'' என்று கூறும் நமது அரசியல் சட்ட உரிமையைப் போன்றதே இது.


"எங்கள் நாட்டின் சேவைத்துறைகளைத் திறந்து விட முடியாது'' என்று கூறும் நாடுகள் வல்லரசுகளின் மிரட்டலையும் பதிலடியையும் உலக வர்த்தகக் கழகத்தின் பொருளாதாரத் தடைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.


இந்த விவரங்கள் ஒருபுறமிருக்கட்டும். அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா? உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் "எள் என்று சொல்லுமுன்னே எண்ணெயாய்'' வழிந்து, வங்கி, காப்பீடு, சாலை, ஊடகம், தண்ணீர் என அனைத்தையும் திறந்து விடும் கைக் கூலிகள் நிறைந்த அரசுக்கு "ஒருவேளை மீசை முளைத்தால்' என்று சிந்திப்பதே மடமை.


2005 ஜனவரியில் கையெழுத்திடப்படுவதாக இருந்த காட்ஸ் ஒப்பந்தம் இன்னும் இறுதியாக்கப்படவில்லை. இறுதியாக்கப்படும் போது இந்திய அரசு அதில் கையெழுத்திட்டே தீருமென்பது கல்லின் மேல் எழுத்து. காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாடுகளுடைய நீர்வளத்தின் கதி என்ன, தண்ணீரின் மீது பன்னாட்டு நிறுவனங்களுக்குள்ள உரிமை பற்றி காட்ஸ் ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.


தண்ணீர் வளத்தை விழுங்கும் காட்ஸ்!


* தண்ணீர் இயற்கையின் கொடை என்பதையோ, மனிதனின் வாழவுரிமை என்பதையோ காட்ஸ் ஒப்பந்தம் ஏற்பதில்லை. காட்ஸ்இன் படி தண்ணீர் ஒரு விற்பனைச் சரக்கு.


குடிநீர் விநியோகத்திற்காக நகராட்சிகள் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கின்றன. எனினும் குடிநீர் விநியோகத்துக்கான முழுச் செலவையும் வசூலிக்கும் விதத்திலோ, லாபம் வைத்தோ இந்தக் கட்டணம் தீர்மானிக்கப்படுவதில்லை. தண்ணீர் மனிதனின் ஜீவாதாரத் தேவை என்பதைக் கணக்கில் கொண்டுதான் இது இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ வழங்கப்படுகிறது. நட்டத்தை ஈடு செய்ய அரசின் / மாநகராட்சியின் வரி வருவாயிலிருந்து இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


காட்ஸ் ஒப்பந்தம் குடிநீர் விநியோகம் என்பதை பேருந்துப் பயணம், ரயில் பயணம் போல "காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சேவை' என்கிறது. பன்னாட்டு முதலாளிகள் இதில் "முதலீடு' செய்வதால் அதற்குத் தகுந்த லாபமீட்டும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என்கிறது. அதாவது தண்ணீரின் விலையை நிர்ணயிப்பதில் அரசு எந்த விதத்திலும், எந்தக் காரணத்துக்காகவும் குறுக்கிட முடியாது.


* தனது நகரின் குடிநீர் விநியோகத்தையோ, குப்பை அள்ளும் பணியையோ ஒரு நகராட்சி குத்தகைக்கு விட முடிவு செய்தால் உள்நாட்டு நிறுவனங்களைப் போலவே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு விட வேண்டும்.


* அரசுத் துறையைச் சேர்ந்த குடிநீர் வாரியத்திற்கு மாநில அரசோ, மத்திய அரசோ சிறப்பு சலுகை காட்டக் கூடாது; மானியம் வழங்கவும் கூடாது. அவ்வாறு வழங்கினால் அத்தகைய மானியம் பன்னாட்டு குடிநீர் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.


* தன்னுடைய வர்த்தகத்தை வளர்க்கும் நோக்கில் ஒரு பன்னாட்டு நிறுவனம், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வேறு எந்தப் பகுதிக்கும் தண்ணீரைக் கொண்டு செல்லலாம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதற்கு அரசு தடைவிதிக்க முடியாது. (இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளுக்கு கொச்சியிலிருந்து கப்பல் மூலம் தண்ணீர் ஏற்றுமதி செய்ய சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் முயன்றது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. காட்ஸ் ஒப்பந்தம் இவ்வாறு தடை விதிக்கும் அதிகாரத்தை அரசிடமிருந்து பிடுங்கி விடும்.)


* நிலத்தடி நீர் வற்றுவது, சுற்றுச்சூழல், உயிரியல் சூழல், கலாச்சாரம், மரபு...... என எந்தவிதக் காரணத்திற்காகவும் தண்ணீர் விற்பனையின் மீது அரசு தடை விதிக்கக் கூடாது. அவ்வாறு தடை விதிப்பது சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே கொள்ளப்படும்.


*  குடிநீரின் தரம் குறித்து எந்த அரசும் தன்னிச்சையாகச் சட்டமியற்றவோ, அதனடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கவோ கூடாது. தரத்தை நிர்ணயிக்கும் போது தண்ணீரின் தரம் குறித்த சர்வதேசச் சராசரி அளவுகோலை எந்த நாடும் விஞ்சக்கூடாது. குடிநீரின் தரத்தில் குறையிருப்பின் போதிய அளவுக்குச் சுட்டிக் காட்டி, அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கலாம். அது வணிகத்தை முடக்கும் நோக்கிலானது அல்ல என்பதை அரசு நிரூபிக்க வேண்டும்.
ட் தேசியச் சட்டங்கள் உள்நாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமே பொருந்தும். உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும். பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் ஏதேனும் பிணக்கு தோன்றினால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரைவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்ததைப் போல, உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பாயத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். அது வழங்குகின்ற தீர்ப்பே இறுதியானது. இத்தகைய தீர்ப்புக்கள் இதனையொத்த வழக்குகளில் முன்மாதிரியாகவும், விதியாகவும் கொள்ளப்படும். உள்நாட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது.


* அதே நேரத்தில் ஒரு குடிமகனுக்கு அரசியல் சட்டம் வழங்குகின்ற அனைத்து உரிமைகளும் பன்னாட்டு நிறுவனத்திற்கும் வழங்கப்படவேண்டும். "நிறுவனம்' என்பது உயிருள்ள தனிமனிதனல்ல என்றபோதிலும் "சட்டரீதியில் ஒரு மனிதனே' என்று கருதி இவ்வுரிமைகள் அனைத்தும் வழங்கப்படவேண்டும்.


*  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நிகழ்கால வணிகத்தை மட்டுமின்றி, எதிர்கால லாபத்தைப் பாதிக்கும் வண்ணமும் மைய அரசு முதல் ஊராட்சி வரையிலான அரசு சார் நிறுவனங்களோ, பல்கலைக்கழகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட அரசுசாரா நிறுவனங்களோ எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அந்த நாட்டின் அரசுக்கு எதிராக உலக வர்த்தகக் கழகத்தில் இழப்பீடு கேட்டு பன்னாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடரலாம். இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க மறுத்தால் அந்த நாட்டிற்கெதிராக உலக வர்த்தகக் கழகம் பொருளாதாரத் தடை விதிக்கலாம்.


— தண்ணீர் தொடர்பாக காட்ஸ் ஒப்பந்தம் கூறும் விதிமுறைகளில் முக்கியமானவை இவை. வாசகர்கள் பலருக்கு இவை நம்பமுடியாதவையாகவும், நடக்க முடியாதவையாகவும் தோன்றலாம்.


நம்ப முடியவில்லையா?


"ஒரு பாட்டில் தண்ணீர் 13 ரூபாய்க்கு விற்கும்'' என்று 15 ஆண்டுகளுக்கு முன் யாராவது எண்ணியிருப்பார்களா? "ஒரு ஏக்கர் பாசன நீருக்கு 8000 ரூபாய் வரி கட்ட வேண்டியிருக்கும்'' என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் மகாராட்டிர விவசாயிகளிடம் யாராவது சொல்லியிருந்தால் அவர்கள் தான் நம்பியிருப்பார்களா? வாளியும் கயிறும் இல்லாமல் குனிந்தே கிணற்றிலிருந்து தண்ணீர் மோந்த பிளாச்சிமடா கிராமத்து மக்களிடம் "ஒரு குடம் தண்ணீருக்கு நீங்கள் 5 மைல் நடக்கப் போகிறீர்கள்'' என்று 5 ஆண்டுகளுக்கு முன் கொக்கோ கோலா கம்பெனிக்காரனே சொல்லியிருந்தாலும் அவர்கள் நம்பியிருப்பார்களா?


காட்ஸ் ஒப்பந்தமென்பதோ, தண்ணீர் தனியார்மயமென்பதோ ஆரூடங்கள் அல்ல; நாம் கண்முன்னே காணும் உண்மைகள். வட அமெரிக்கக் கண்டத்தினைச் சேர்ந்த கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையில் அமலிலிருக்கும் "நாப்தா' என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்படி "தண்ணீர்' ஒரு விற்பனைச் சரக்கு. உலகின் நன்னீர் வளத்தில் 20 சதவீதத்தைப் பெற்றிருக்கும் கனடாவிலிருந்து தண்ணீரைச் சூறையாடுகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். கால்பந்து மைதானத்தின் அளவிலான பிரம்மாண்டமான உறைகளில் தண்ணீரை நிரப்பி அதனைக் கப்பலில் கட்டி இழுத்துச் சென்று ஏற்றுமதி செய்கின்றனர் பன்னாட்டு முதலாளிகள்.


நீர்வளம் குறைந்த மெக்சிகோவையும் தண்ணீர் முதலாளிகள் உறிஞ்சுகிறார்கள். அங்கே மக்கள் தமது சொந்தக் கிணற்றிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமென சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது.


மேற்கண்ட நாப்தா ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான் தண்ணீர் தொடர்பான காட்ஸ் விதிமுறைகள் என்பதை தனது "நீலத்தங்கம்' (ஆடூதஞு எணிடூஞீ) என்ற நூலில் நிறுவியிருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் மாட் பார்லோ.


இறையாண்மை வெறும் பேச்சு!


இந்த காட்ஸ் ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தில் இந்திய அரசு கையெழுத்திடப் போவது உறுதி. நாடு, இறையாண்மை, நாடாளுமன்றம், கொடி, தேசிய கீதம் என்ற எல்லா ஜிகினா வேலைப்பாடுகளையும் கலைத்து, இது காலனி ஆதிக்கம் தான் என்பதைப் பாமரனுக்கும் புரியவைக்கிறது இவ்வொப்பந்தம்.


இருப்பினும் இந்த அரசு இதில் கையெழுத்திட்டே தீரும். ஏனென்றால் காட்ஸ் ஒப்பந்தத்திற்கு அடங்கி வருவது போல "தேசிய நீர்க் கொள்கை 2002' என்பதை வகுத்து ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கிறது பா.ஜ.க. ஆட்சி. காங்கிரஸ் அரசோ இதனைத் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.


இந்த காட்ஸ் ஒப்பந்தம் குறித்தும் அதன் ஷரத்துகள் குறித்தும் நாடாளுமன்றம் விவாதிக்கப் போவதில்லை. இதற்கு முன் எப்போதும் விவாதித்ததுமில்லை; விவாதித்துப் பயனுமில்லை.


நாட்டின் அரசியல் பொருளாதாரத் தலைவிதியையே மாற்றியமைக்கக் கூடிய காட் ஒப்பந்தத்தில் 1994ஆம் ஆண்டு கையெழுத்திட்டவர் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அல்லர். நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் சில அதிகாரிகள் கையெழுத்திட்டனர். பிறகு நாடாளுமன்றம் அதனை ஏற்றுக் கொண்டு கைதட்டி நிறைவேற்றியது.


காட்ஸ் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதும், முடிவு செய்வதும் ஜெனிவாவில் இந்திய அரசின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் சில அதிகாரிகள்தான். 100 கோடி மக்களின் உயிர்வாழும் உரிமை, நம் அனைவருக்கும் சொந்தமான நீர்வளம், வரவிருக்கும் தலைமுறைகளின் வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒரு அதிகார வர்க்கக் கும்பல்தான் தீர்மானித்து வருகிறது.


நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அமர்ந்திருக்கும் கைக்கூலிகள் இந்த முடிவை வழிமொழிவார்கள்; நாட்டை வல்லரசாக்கும் பாதை இதுதானென்று நமக்கு விளக்கமும் சொல்வார்கள்.


பன்னாட்டு முதலாளிகளின் கையில் தண்ணீரை ஒப்படைக்கும் நாடு, தனது மண்ணையும் ஒப்படைப்பதாகத் தனியே எழுதிக் கொடுக்கத் தேவையில்லை. தனது உயிரின் ஆதாரத்தையே கைப்பற்றிக் கொள்ள அந்நியனை அனுமதிக்கும் மனிதன், மானத்தையும் வழங்கி விட்டதாக விளக்கம் தரவும் தேவையிருக்காது.


போராட வாருங்கள்!


நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. உடனே செயலில் இறங்க வேண்டிய தருணமிது. இது நேரடிக் காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடிய மறுகாலனியாதிக்கம்!

 

சேவைத்துறை தனியார்மயம் என்ற பெயரில் அரசுத் தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீடு, மருத்துவம், கல்வி, ஊடகங்கள், நூலகங்கள், தண்ணீர்... என அனைத்துத் துறைகளையும் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்கக் கதவைத் திறந்து விடுகிறது காட்ஸ் ஒப்பந்தம். சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் அடிமைத்தனத்திற்குக் கதவுகள் அகலத் திறக்கப்படுகின்றன.


இறையாண்மையற்ற இந்த அடிமைத்தனத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா? நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரும் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த அடிமைத் தனத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் விடுதலைக்குப் போராட நாம் ஒவ்வொருவரும் களமிறங்கியாக வேண்டும்.


சட்டமன்றமும் நாடாளுமன்றமும் நீதிமன்றங்களும் மறுகாலனியாக்கத்தின் கருவிகள். இந்த அடிமைத்தனத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கும் முத்திரைக் கட்டைகள். இவற்றின் நாற்காலிகளை நிரப்புவோர் அனைவரும் பன்னாட்டு நிறுவனங்களிடம் பங்கு வாங்கிக் கொண்டு இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள்.


"காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறி! உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறு!'' என்று முழங்குவது நக்சல்பாரி இயக்கம் மட்டும்தான். வேறு யாருமில்லை. இந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்கவல்லதும் நக்சல்பாரி பாதையொன்றுதான். வேறு பாதையில்லை. சிந்தியுங்கள், செயலில் இறங்குங்கள், போராட வாருங்கள்!