Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் முன்னுரை : நினைவின் குட்டை : கனவு நதி

முன்னுரை : நினைவின் குட்டை : கனவு நதி

  • PDF

சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னத மான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த  சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்திருக்கும் தேவர்கள் தாங்கள்தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் திரிகிறது. இலக்கிய தரிசனத்தின் ஞானக்கண் தங்கள் முன் மண்டையிலிருந்து பின் மண்டை வரை பரவியிருப்பதாகவும், அதன் மூலம் 360 டிகிரியிலும் ஒரே சமயத்தில் தங்களால் வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றும் சாதாரண வாசகர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள். எவ்வித சித்தாந்தக் கறையும் படியாத காலி மூளைதான் இந்த அழகியல் ஞானக்கண்ணைப் பெறுவதற்கும் அவர்களுடைய இலக்கியத்தை ரசிப்பதற்கும் முன் நிபந்தனை என்றும் கூறுகிறார்கள்.


 ஒரு மனிதனின் அழகியல் பார்வையையும் இலக்கிய ரசனையையும் அவனுடைய வாழ்க்கைச் சூழலும் சமூகப் பின்புலமும் கல்வியும் அனைத்துக்கும் மேலாக அவனுடைய கருத்துச் சார்புகளும்தான் உருவாக்குகின்றன. அரசியல், இலக்கிய, பண்பாட்டு விசயங்களில், தான் கொண்டிருக்கும் பார்வையின் வர்க்கத் தன்மையை அறியாத மனிதர்கள் உண்டு; பிறரது பார்வையின் வர்க்கத் தன்மையையும் அதன் பின்புலத்தில் இயங்கும் சமூக உளவியலையும் அடையாளம் காணத்தெரியாத ரசிகர்களும் உண்டு. ஆனால் அத்தகையதொரு பார்வையே இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. எனவே எவ்வித சித்தாந்த "கலர் கண்ணாடி'யும் இன்றி அழகியல் பார்வை மற்றும் படைப்பு அனுபவத்தின் வழியாக உண்மையை தரிசனம் செய்ய இயலும் என்ற இவர்களது கூற்று ஒரு முழு மோசடி.


 தங்கள் ஞானநிலைக்கு இவர்கள் அளிக்கும் விளக்கமோ நகைக்கத்தக்கது. "நான் வேறு  படைப்பின் பரவச நிலையிலிருக்கும் நான் வேறு; ஆகவே என் வாழ்க்கை வேறு  படைப்பு வேறு' என்பதே படைப்பாளிக்கும் படைப்புக்கும் இடையிலான உறவு குறித்து இவர்கள் தரும் விளக்கம். இந்த விளக்கம் இலக்கியத்தின் மீதும் உண்மையின் மீதும் அவர்கள் கொண்ட காதலிலிருந்து பிறக்கவில்லை. சுயநலமும் கோழைத்தனமும் காரியவாதமும் தளும்பி வழியும் தங்கள் இனிய வாழ்க்கையின் மீது இவர்கள் கொண்டிருக்கும் காதல்தான் இந்த தத்துவத்தைப் பிரசவித்திருக்கிறது.


 தம் சொந்த வாழ்க்கை மீது மட்டுமே நாட்டம் கொண்ட மனிதர்கள் சமூகத்தில் ஏராளம். அவர்கள் பொதுநலனுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த மனிதர்களை எதிர்கொள்ள நேரும்போது கடுகளவேனும் குற்ற உணர்வு கொள்கிறார்கள். ஆனால் இந்த இலக்கிய அற்பர்களோ தங்களுடைய சுயநலத்தை இயல்பானதென்றும் பொது நலநாட்டம் என்பதே பொய் வேடமென்றும் பிரகடனம் செய்கிறார்கள். இது கடைந்தெடுத்த முதலாளித்துவ சித்தாந்தம். இதனை அம்பலப்படுத்த கம்யூனிசத்தால் மட்டுமே இயலும் என்பதாலும், மார்க்சியம் மட்டுமே இதன் மனித விரோதத் தன்மையை அம்மணமாக்குவதாலும், இந்த இலக்கியவாதிகள் தம் இயல்பிலேயே கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். தமது கருத்தை அரசியல் பொருளாதாரத் துறைகளில் நியாயப்படுத்த முடியாதென்பதால் அழகியலுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். ""இலக்கியம் வேறெந்த (அரசியல்) நோக்கத்திற்குமானதல்ல, இலக்கியத்தின் நோக்கம் இலக்கியமே'' என்று கொள்கை வகுக்கிறார்கள்.


 இந்தக் கொள்கையாளர்களிடையே நடைபெற்று வருகின்ற கருத்துப் போராட்டங்களின் தன்மையைப் பார்த்தாலே இவர்களுடைய அற்பத்தனத்தைப் புரிந்துகொள்ள முடியும். பிரமிள்சு.ரா., ஞானக்கூத்தன்சு.ரா., ஜெயமோகன்சு.ரா என்ற இந்த குழாயடிச் சண்டை, நாச்சார்மட விவகாரத்தில் அதன் உச்சத்தை எட்டியது. திருவாவடுதுறை சின்ன ஆதினத்தின் கொலை முயற்சிக்கு இணையான இந்த அற்பத்தனம் சுந்தர ராமசாமி செத்த உடனே சென்டிமென்ட்டுக்கு மாறிக் கொண்டது. ""நினைவின் நதியில்'' என்ற சின்ன ஆதினத்தின் இந்த "சுய விமர்சனத்திற்கு' வாசகர்கள் செலுத்திய காணிக்கை தலா ரூபாய் 100. இந்த அற்பவாதக் குட்டையில் குளிப்பதற்கு காசும் கொடுத்து கண்ணீரையும் கொடுத்த வாசகர்களின் ரசனைத்தரத்தை என்னவென்று சொல்ல? தமிழகமே வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது மியூசிக் அகாடமி பிடில் வாசித்துக் கொண்டிருந்தது; சு.ரா. அபிமானிகளோ அவருடைய சாவுக்கு அழுது கொண்டிருந்தார்கள். விசிலடிச்சான் குஞ்சுகள் என்று இவர்களால் இகழப்படும் ரசிகர் மன்ற இளைஞர்கள் கூட தங்களால் இயன்ற மட்டில் மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள்.


 பொதுவாக இளைஞர்களின் இலக்கிய நாட்டம் என்பது அவர்களுடைய சமூக அக்கறையின் ஒரு வெளிப்பாடாகவே முகிழ்க்கிறது. அவர்களை இலக்கியத்தில் ஆழ அமிழ்த்தி முத்தெடுக்கக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் சு.ரா.க்கள் தங்களது கழிவுகளால் நிரம்பியிருக்கும் அற்பவாதக் குட்டையில் இளைஞர்களை ஊறப்போடுகிறார்கள். சமூக உணர்வு மரத்த, தடித்த தோல்கொண்ட வாரிசுகளை உருவாக்குகிறார்கள். இலக்கியத்தின் உன்னதத்தையோ ரசனையின் நுண்திறனையோ இந்தக் குட்டையில் கிடப்பவர்கள் ஒருக்காலும் எட்ட முடியாது. சமூக அக்கறையும், மக்கள் நலன்மீது மாளாக் காதலும், இதயத்திலிருந்து பெருக்கெடுக்காத வரை தாங்கள் கிடக்கும் இடம் அற்பவாதக் குட்டை என்பதை யாரும் உணரக்கூட முடியாது. கம்யூனிசம் என்பது மனித குலத்தின் ஆகச் சிறந்த கனவு. அது சூக்குமமான அற உணர்வோ, சொல்லில் பிடிபடாத அழகோ அல்ல. திண்ணையும் உறக்கமும் இந்தக் கனவைத் தோற்றுவிப்பதில்லை. விழிப்பில், செயலில், வீதியில், இழப்பில், போராட்டம் எனும் உலைக்களத்தில் மட்டுமே உருகிப் பெருகும் கனவிது.


 இந்நூலின் முதற்கட்டுரை அற்பவாதத்தின் நினைவுக்குட்டையை, அதன் முடைநாற்றத்தை உணரச் செய்கிறது. இது சு.ரா.வைப் பற்றியது மட்டுமல்ல, இந்தக் குட்டையில் தோன்றியிருக்கும் மற்றும் தோன்றவிருக்கும் சு.ரா.க்களுக்குமானது என்பதை வாசகர் புரிந்து கொள்ள முடியும். மற்ற கட்டுரைகள் புதிய கலாச்சாரம் இதழில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியானவை. கம்யூனிச எதிர்ப்பு அவதூறுகளால் நிரம்பியிருக்கும் இலக்கிய மனங்களைத் தூர்வாற இவை உதவும்; உயிர்த் துடிப்புள்ள மனிதவாழ்வின் மணத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்யும். அற்பவாதக் குட்டையில் கிடப்பவர்கள் கரையேறுங்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள் சேற்றிலிருந்து காலை எடுங்கள்.


—  ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்.