Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் நீலம், ருமானிக்குப் பதிலாக இனி பிர்லா, அம்பானி மாம்பழங்கள்!

நீலம், ருமானிக்குப் பதிலாக இனி பிர்லா, அம்பானி மாம்பழங்கள்!

  • PDF

காய்கறி விற்பனையில் ரிலையன்சும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதென்பது வியாபாரிகளையும் விவசாயிகளையும் மட்டும் பாதிக்கின்ற பிரச்சினை அல்ல. நுகர்வோர் அனைவரையும், மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்சினை. கீரைகளில் பலவகை, காய்களில் பலவகை, மாம்பழத்தில் பலவகை என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய விவசாயிகள் உருவாக்கி வைத்திருக்கும் ரகங்கள் எல்லாவற்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் அழித்துவிடும்.

 பல வகையான ரகங்கள், பல வகையான சுவைகள், பல வகையான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கனிகள் எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு, எந்த ரகத்தை விளைவித்தால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அந்த ரகத்தைத் தவிர வேறு எதுவுமே உற்பத்தியாகாமல் செய்துவிடும்.


பங்கனபள்ளி, நீலம், சிந்தூரா, ருமானி என்ற மாம்பழங்களின் வகைகள் எல்லாம் அழியும். "ரிலையன்ஸ் மாம்பழம்', "பிர்லா மாம்பழம்' என்று இந்த முதலாளிகள் உற்பத்தி செய்யும் பழங்கள் மட்டுமே சந்தையில் இருக்கும். இதெல்லாம் கட்டுக்கதையல்ல. மேற்கத்திய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் இதைத்தான் செய்திருக்கின்றன. பல்வேறு சுவைகள், பல்வேறு ரகங்கள் என்பதெல்லாம் அழிந்து பருத்திக் கொட்டையும் பிண்ணாக்கும் தவிர வேறு எந்தச் சுவையும் அறியாத மாடுகளாக நுகர்வோரெல்லாம் மாற்றப்பட்டு விடுவார்கள்.


இது என்றோ நடக்கவிருக்கும் கதையுமல்ல. இன்று நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் கதை. இந்தியாவில் சிகரெட் உற்பத்தி செய்யும் ஐ.டி.சி. என்ற நிறுவனம் இன்று தானியக் கொள்முதலும் செய்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் "ஆசீர்வாத் ஆட்டா' நாடு முழுவம் ஒரே சுவையுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்ற விதையை விநியோகித்து ஒரே விதமான கோதுமையைப் பயிரிடும்படி பல மாநிலங்களின் விவசாயிகளை அந்நிறுவனம் மாற்றிவிட்டது. பலவிதமான ருசிகளைக் கொண்ட கோதுமை ரகங்கள் இப்படி திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன.


தான் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கு வறுவலுக்குப் பொருத்தமான ஒரே வகை உருளைக் கிழங்கை மட்டும் உற்பத்தி செய்யும்படி பஞ்சாபின் சில மாவட்டங்களையே மாற்றியிருக்கிறது பெப்சி நிறுவனம்.