Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்!

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்!

  • PDF

"குடியரசு'' என டாம்பீகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த நாட்டில், பார்ப்பனமேல்சாதிக் கொழுப்பு தட்டிக்  கேட்க ஆளின்றி பொங்கி வழிவதை இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களே நிரூபிக்கின்றன. இந்தக் கொழுப்பின் சகிக்க முடியாத வக்கிரத்திற்கு "டெக்கான் கிரானிகல்'' என்ற ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரத்தை உதாரணமாகக் கூறலாம்.


 ""மண்டல் கமிசன்'' கல்வி இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தால், மாடு மேய்க்கும் பயலுகளெல்லாம், ஐ.ஐ.டி.க்குள்ளும், ஐ.ஐ.எம்.க்குள்ளும் நுழைந்து விடுவார்கள்'' என உழைக்கும் மக்களைப் பரிகாசம் செய்கிறது, அந்தக் கேலிச் சித்திரம். "எப்படியாவது மீண்டும் குலக்கல்வி முறை வந்துவிடாதா?'' என்ற பார்ப்பனிய நப்பாசையின் பச்சையான வெளிப்பாடுதான் அந்தக் கேலிச் சித்திரம. "உலகமய''க் காலக் கட்டத்தில் கூட, இப்படி காட்டுமிராண்டித்தனமாகச் சிந்திப்பதற்காக அந்த ""மேன்மக்கள்'' வெட்கப்படவில்லை.


 தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (அஐஐMகு) மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறதா என்பதே தற்பொழுது சந்தேகத்திற்கு இடமாகி விட்டது. அக்கழகத்தில் பயிலும் பார்ப்பன  மேல்சாதி மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் நடத்தும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை அக்கழகத்தின் நிர்வாகமே ஆதரிக்கிறது. அக்கழகத்தின் நிர்வாகம், பார்ப்பனர் சங்கம் போலச் செயல்படுகிறது. அங்கு சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளை இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசவிட்டு, தங்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறது பார்ப்பன மேல்சாதி கும்பல்.


 தனியார்மயத் தாக்குதலுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தபொழுது, அரசையும் பொதுமக்களையும் ஊழியர்கள் மிரட்டுவதாக (Blackmail) நீதிமன்றங்களும், ஆளும் வர்க்க அறிவுஜீவிகளும் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், இப்பொழுது ஏழை நோயாளிகளின் உயிரோடு விளையாடும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிர்வாகத்தின் மீது அப்படிப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அவர்கள் மீது அத்தியாவசிய பணி பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை. இந்த மென்மையான அணுகுமுறைக்கு, பார்ப்பன பாசம் தவிர, வேறென்ன காரணமாக இருக்க முடியும்?


 "திறமையில் ஒப்புயர்வற்ற தனித் தீவுகள்'' என "தேசிய'ப் பத்திரிகைகளால் புகழப்படும் இந்த உயர்கல்வி நிறுவனங்கள், பார்ப்பனத் தீவுகளாக இருக்கின்றன என்பதே உண்மை. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) வேலை பார்க்கும் 400 பேராசிரியர்களுள், 282 பேர் (70 சதவீதம்) பார்ப்பனர்கள்; மற்ற உயர் சாதியினர் 40 பேர் (10 சதவீதம்); தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் 22.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தும் கூட, சென்னை  ஐ.ஐ.டி.யில், மூன்று தாழ்த்தப்பட்டவர்கள்தான் (0.75 சதவீதம்) பேராசிரியர்களாக  வேலை பார்க்கின்றனர்.


 மேற்கு வங்கம்  காரக்புரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ""நாங்கள் எப்படி மாணவர்களைச் சேர்க்கிறோம் என்பதை வைத்து ஐ.ஐ.டி.யின் தரம் நிர்ணயிக்கப்படவில்லை. எப்படிப்பட்ட மாணவர்களைத் தயாரித்து அனுப்புகிறோம் என்பதுதான் தரத்தை நிர்ணயிக்கிறது'' என்கிறார். ஆனால், பார்ப்பன  உயர்சாதி கும்பலோ, இட ஒதுக்கீடு வழங்கினாலே, உயர்கல்வி நிறுவனங்களின் தரம் தரைமட்டமாகி விடும்; திறமைக்கு எதிரான இட ஒதுக்கீடு நாட்டிற்கே எதிரானது'' எனக் கூச்சல் போடுகுறது.


 இட ஒதுக்கீடால் தரமும், திறமையும் போய்விடும் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்வதன் மூலம், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தகுதியே இல்லாத மாணவர்கள் இந்த நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் போலவும், அவர்கள் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்று பதவியில் அமர்ந்து விடுவதைப் போலவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள்.


 இது அப்பட்டமான பொய். நுழைவுத் தேர்வில் பெற வேண்டிய மதிப்பெண்களில் வழங்கப்படும் சிறிய சலுகையைத் தவிர, வேறெந்த சலுகையும் தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தரப்படுவதில்லை. அதன்பின் எல்லா மாணவர்களுக்குமான பொது அளவுகோலின்படிதான் இவர்களும் தேர்வெழுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார்கள்.


 ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற ""திறமையின் தீவுகள்'' எல்லாம் நிறுவப்பட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனாலும், இந்தியா இன்றும் வறிய நாடாகத்தான் இருக்கிறது. அறிவியல்  தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைச் சொந்தமாக உருவாக்க முடியாமல், ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்திப் பெற்று வருகிறது. அப்படியென்றால் இந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொறியாளர்களில், விஞ்ஞானிகளில், மேலாண்மை நிர்வாகிகளில், நூற்றுக்குப் பத்து பேர் கூட திறமைசாலிகளாக இல்லை எனச் சொல்லலாமா? இட ஒதுக்கீடு சலுகை பெறாதவர்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம்.


 திறமைக்கு மட்டுமே மதிப்பளிக்க வேண்டும் என்பதால்தான், இராணுவத்தில் இட ஒதுக்கீடு கிடையாது எனப் பார்ப்பனக் கும்பல் வாதாடுகிறது. ஆனால், அந்த அரசு நிறுவனத்தில்தான், பீர் பாட்டிலுக்கும், பொம்பளைக்கும் மயங்கி, இராணுவ இரகசியங்கள் விற்கத் துணியும் தேசத்துரோகிகள் இருப்பதை தெகல்கா ஊழல் அம்பலப்படுத்தியது; பீரங்கி முதல் சவப்பெட்டி வாங்கியது வரை, பல்வேறு ஊழல்களில் ""திறமை'' வாய்ந்த உயர்சாதி அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்திய இராணுவம் சந்தி சிரித்தது.


 பார்ப்பனக் கும்பல் கூறுவது போல இட ஒதுக்கீடு தேசத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் திறமைதான் மக்களுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்வதாக இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் மானியத்தில் நடக்கும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கும் மருத்துவர்கள்  பொறியாளர்களில், எத்தனை பேர் கிராமப்புறங்களில் உள்ள அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகிறார்கள்? எத்தனைபேர் அரசின் பொதுப்பணித் துறையில் சேர்ந்திருக்கிறார்கள்? இங்கே படித்து முடித்தவுடன் அமெரிக்காவிற்கும், இலண்டனுக்கும் மூட்டை கட்டும் இந்த ஓடுகாலிதனத்தைதான் "திறமை' என்ற பெயரில் மூடிமறைக்கிறது, பார்ப்பனக் கும்பல்.


 இந்தப் பார்ப்பன மேதாவிகள் ""சமூக நீதி''களின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல, ""நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? பிரதமர், முதல்வர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியதுதானே?'' என எதிர்வாதம் செய்கிறார்கள்.


 நியாயமாகப் பார்த்தால், பார்ப்பன அறிவுஜீவிகள் இந்தக் கேள்வியை முதலில் சங்கர மடத்திடம் தான் கேட்க வேண்டும். சங்கர மடம் உள்ளிட்ட பல்வேறு பார்ப்பன மடங்களிலும், நல்ல வரும்படி வரும் கோயில்களிலும் பல நூறு ஆண்டுகாலமாக பார்ப்பனர்களே மடாதிபதிகளாகஅர்ச்சகர்களாக இருக்கும் சலுகையை ஏகபோகமாக வைத்திருப்பது மட்டும் நியாயமானதா?


 கல்வி  வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதி பார்க்கக் கூடாது என தர்க்க நியாயம் பேசுபவர்கள், இதற்கோ பூணூலை மட்டுமே ஒரே தகுதியாக வைத்திருக்கிறார்கள். இந்த 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கைவிட விரும்பாத பார்ப்பனக் கும்பல், 2016க்குள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூப்பாடு போடுகிறது.


 ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் இவர்கள், இந்த நிறுவனங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதையோ, அந்த இடங்கள் அமெரிக்க டாலர்களுக்காக ஏலம் விடப்படுவதையோ எதிர்ப்பதில்லை. ஏனெனில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது, நடைமுறையில் அமெரிக்கா வாழ் ""அம்பி''களுக்கான இட ஒதுக்கீடுதான்.


 மேலும், தனியார்சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 100 சதவீத இட ஒதுக்கீட்டையும் இவர்கள் எதிர்ப்பதில்லை. தரம், தகுதி, திறமையை முன்வைத்து இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனக் கும்பலின் வாதத்தில் சாதித் திமிரும், கபடத்தனமும்தான் பொங்கி வழிகிறது.
(ஜூன் 2006 இதழிலிருந்து)