Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் இட ஒதுக்கீடு:புரட்சிகர அமைப்புகளுக்கிடையே வேறுபாடு ஏன்?

இட ஒதுக்கீடு:புரட்சிகர அமைப்புகளுக்கிடையே வேறுபாடு ஏன்?

  • PDF

புரட்சிகர அமைப்புகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லையே! ஏன்? (உதாரணமாக மண்டல் கமிசன் மீதான பு.ஜ.வின் நிலைப்பாடு ஆந்திராவில் உள்ள மக்கள் யுத்தக் குழுவினுடையதை விட மாறுபட்டுள்ளது)
வசந்தன், கம்பம்


ஆம்! பல்வேறு அரசியல், சித்தாந்தப் பிரச்சினைகளிலும் இரு அமைப்புகளும் மாறுபாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. பலவற்றிலும் ம.யு. குழுவின் கண்ணோட்டம் மார்க்சிய லெனினிய அடிப்படையிலானவை அல்ல; சந்தர்ப்பவாதமானவை என்று நாம் கருதுகிறோம். உதாரணத்திற்கு மண்டல் கமிசன், இட ஒதுக்கீட்டையே எடுத்துக் கொள்வோம்.


மண்டல் அறிக்கை அமலாக்கத்தை ஒட்டி, "இன்று இந்தியா இரண்டு முகாம்களாக 1. பார்ப்பனிய மேல்சாதி ஆதிக்க சக்திகள், 2. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று சரியாகவே பிளவுபட்டு விட்டன'' என்று ம.யு. குழு எழுதியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி., இந்துமுன்னணி, ஜனதா தளம் (எஸ்), காங்கிரசு, பூநூல் கம்யூனிஸ்டு கட்சி ஆகியன பார்ப்பனிய மேல்சாதி ஆதிக்க சக்திகளின் முகாம் என்கிறது. அப்படியானால், இன்னொரு முகாம் எது? ஜனதாதளம், தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, அம்பேத்கார் பெரியார் இயக்கங்கள் உட்பட மண்டல் கமிசனை ஆதரிக்கும் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களது முகாம் என்கிறது. இதிலே ம.யு.வும் அதன் தலைமையிலான அமைப்புக்களும் அடங்கும் என்கிறது. ஜனதாதளம், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இட ஒதுக்கீடு பிரச்சினைபோராட்டத்தை தமது ஓட்டுக்குப் பயன்படுத்தவும், ஆட்சிக்குப் போனபிறகு அதை நட்டாற்றில் விட்டுவிடவும் வாய்ப்புள்ளது; அவ்வாறின்றி இக்கட்சிகளும், அம்பேத்கார் பெரியார் இயக்கங்களும் உறுதியாகப் போராட வேண்டும்; அதேசமயம் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சிறிய குரல் எங்கிருந்து யார் கொடுத்தாலும் ம.யு.வும் அதன் கீழுள்ள அமைப்புகளும் அவர்கள் தோளோடு தோள் நிற்கும் என்கிறது.


இதிலிருந்து தெரிவதென்ன? ஜனதா தளம், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள், ஆளும் மேல்சாதிப் பிரிவுகளில் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதவில்லை. அதுமட்டுமல்ல; "இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ள முகாமின் பின்னணியை ஆராய்ந்தால் இந்தியாவில் சாதியும் வர்க்கமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதைத் தெளிவாக உணரலாம்'' என்பதன் மூலம் இந்தக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களில் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதவில்லை.


ஆனால், ஜனதாதளம், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் ஆளும் மேல்சாதி வர்க்கப் பிரிவுகளில் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பு.ஜ. கருதுகிறது. ஆகவே, இந்தக் கட்சிகள் பற்றிய ம.யு.வின் கண்ணோட்டமும், இவற்றின் முகாமில் ம.யு. குழு சேருவதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமென்று கூறுகிறோம். மண்டல் கமிசன் இட ஒதுக்கீடு ஒரு சீர்திருத்தம்தான் என்று ஒருபுறம் ம.யு. குழு ஒப்புக் கொள்கிறது. ஆனால், இப்படிப்பட்ட முதலாளித்துவ சீர்திருத்தப் போராட்டத்தில் ஜனதாதளம், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கும் ம.யு. குழுவுக்கும் இடையிலான வேறுபாடு, அது ஒரு சமூக நீதி அல்ல, சீர்திருத்தம்தான் என்று அம்பலப்படுத்துவதில் இல்லை. அக்கட்சிகளை விடத் தீவிரமாகப் போராடுவதில்தான் காட்டுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய் "மண்டல் கமிசனை எதிர்ப்பவர்கள் மக்கள் எதிரிகள்'' என்றும் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை; விரட்டுவோம்'' என்றும் முழங்குகிறது. அப்படியானால், மக்கள் எதிரிகள் பரட்சியின் எதிரிகள் யார்? இந்தக் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் மேல்சாதி ஆளும் வர்க்கப் பிரிவும் மக்கள் எதிரிகள் புரட்சியின் எதிரிகள் அல்லவா? ஒரு முதலாளித்துவ சீர்திருத்தத்துக்காக இவ்வளவு தூரம் வரிந்து கட்டிக் கொண்டு போராடுவதன்மூலம், அது ஏற்கெனவே அழுந்திப் போயுள்ள போர்க்குணமிக்க பொருளாதார வாதத்துக்குள் மேலும் மூழ்கிப் போகிறது. ஒவ்வொரு பிரிவு மக்களது சொந்தக் கோரிக்கைக்கான போராட்டங்களையே தீவிரமாக நடத்துவதன்மூலம் புரட்சிக்குத் திரட்டிவிட முடியும் என்பதுதான் போர்க்குணமிக்க பொருளாதாரவாதம்.


"பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், மேல் சாதிக்காரர்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு அவர்கள் ஆதிக்கம் ஓரளவு குறையும். இது தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு முதல்படியாக அமையும். எனவே, அனைத்து புரட்சிகர ஜனநாயக சக்திகளும் மண்டல் பரிந்துரையைக் கட்டாயம் வரவேற்க வேண்டும்'' என்கிறது ம.யு. குழு. முன்பு தமிழ்நாட்டில் வர்க்க எதிரிகள் என்று அழித்தொழிக்கப்பட்டவர்கள் பட்டியலில் எவ்வளவு பேர் "பிற்படுத்தப்பட்ட'' சாதி நிலப்பிரபுக்கள் என்பதை இவர்கள் பார்க்கட்டும். தர்மபுரி, வடஆற்காடு புரட்சிகர அமைப்புகள் மக்களுக்கு எதிராக, போலீசுடன் கூட்டுச் சேர்ந்து "தாக்குதல்படை'' அமைத்த "பால் டிப்போ'' வடிவேலு, ரங்கன், வெள்ளக் கவுண்டர் எந்தச் சாதியினர் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்.


பீகாரில் முற்பட்ட சாதிகளான பூமிகார் பார்ப்பனரது பிரம்மரிஷி சேனா, ராஜபுத்திரரது குன்வர் சேனா, "பிற்படுத்தப்பட்ட'' சாதிகளான யாதவரது லோரிக்சேனா, குர்மிகளது பூமிசேனா ஆகிய தனியார் படைகள் அந்தச் சாதிக்களின் நிலப்பிரபுக்களுக்காக புரட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்று வந்தன. சாதி அடிப்படையில் அந்தந்த சாதி உழைக்கும் மக்களும் கூட இந்தப் படைகளில் திரட்டப்பட்டிருந்தனர். மண்டல் கமிசன் அமலாக்கத்தில் இந்த சாதிகள் எதிரெதிராக நின்று போராடினர். ஆனால், இப்போது புரட்சிகர அமைப்புகளுக்கு எதிராக மேற்கண்ட நான்கு சேனைகளும் கிசான் (விவசாயிகள்) சங்கம் என்ற ஒரே அமைப்பாக இணைந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட கூலி ஏழை விவசாயிகள் நான்கு பேரை டிசம்பர் இறுதி வாரம், பாட்னா மாவட்டம் தரியாப்பூரில் கொன்றதன் மூலம் அக்கூட்டுச் சேனை தனது நிறுவன தினத்தைக் கொண்டாடியுள்ளது. இதனால்தான், பீகாரில் உள்ள புரட்சிகர அமைப்புகள் மட்டும் தலைமைக்குக் கட்டுப்பட மறுத்து, இட ஒதுக்கீடுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளன. ஆகவே, இட ஒதுக்கீடு என்பது சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்ட மக்களது ஒற்றுமையையும் கட்டாது; புரட்சிக்கான முற்படியாகவும் இராது.


இட ஒதுக்கீடு எந்த நோக்கங்களுக்காக, எந்த அடிப்படையில், எந்த சாதி, வர்க்க நலன்களுக்காகக் கொண்டு வரப்படுகிறது? இந்த அரசு ஆட்சி நியாய உரிமை பெறவும், தனது சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தவும், அதன்மூலம் நீடித்திருக்கவும், பல்வேறு சாதி, மத, இன, மொழிப் பிரிவினருக்கும் பொதுவானது; அவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அனைவரும் அரசில் பங்கேற்க உரிமை உண்டு என்கிற மாயையை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் அம்பேத்காருடன் சேர்ந்து குன்சுரு, நேரு போன்ற பார்ப்பனத் தலைவர்களும் வாதிட்டு இட ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்தில் சேர்த்தனர். இப்போதும் பார்ப்பனத் தலைவர் மது தண்டவதே, ராஜபுத்திர வி.பி.சிங் ஆகியோர் ஆதரிக்கின்றனர். ஆனால், தமது சொந்த உடனடி, நலன்கருதி பார்ப்பனமேல்சாதிகளலேயே ஒரு பிரிவினர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர். அனைவருக்கும் பங்கேற்பு, பிரதிநிதித்துவம், ஜனநாயகம் என்கிற மாயையை உருவாக்குவதற்காகவே, புரட்சிகர மக்கள் எழுச்சியைத் திசை திருப்புவதற்காகவே ம.யு. குழுவை ஜனநாயக வழிக்கு, ஜனநாயக நீரோட்டத்திற்கு வரும்படி ஆந்திராவில் சென்னாரெட்டி, என்.டி.ஆர். ஆட்சிகள் அழைப்பு விடுத்தன. புரட்சிகர மக்களும் அமைப்புகளும் அதை ஏற்க முடியாது; அது வெறும் பித்தலாட்டம் என்று சரியாகவே ம.யு. குழு நிராகரித்தது. ஆனால், அதே நோக்கத்துக்காக இட ஒதுக்கீடு மூலம் அரசில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம், பங்கேற்பு, ஜனநாயகம் என்கிற ஆளும் வர்க்க அழைப்பை சாதிவகுப்புரிமை என்கிற பெயரில் தீவிரமாக ஆதரிக்கிறது ம.யு. குழு. மேற்கு வங்கம், கேரளாவில் போலி கம்யூனிஸ்டுகள் அரசாங்கங்கள் அமைத்து, மேலிருந்து அரசில் பங்கேற்பதைச் சாடும் ம.யு.குழு, இட ஒதுக்கீடு மூலம் கீழிருந்து பங்கேற்பதை ஏற்கிறது. சாராம்சத்தில் இரண்டுமே ஒன்றுதான்! மார்க்சிய லெனினியக் கண்ணோட்டத்தை நிராகரித்து, பொருளாதார வாதம், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை மேற்கொள்வதன் விளைவுதான் இது!


(115 பிப்ரவரி 1991 இதழில் வெளியான கேள்விபதில் பகுதியிலிருந்து)