Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஆந்திராக்ஸ் பீதி : அமெரிக்காவே குற்றவாளி!

ஆந்திராக்ஸ் பீதி : அமெரிக்காவே குற்றவாளி!

  • PDF

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதையடுத்த சில தினங்களில், "ஆந்த்ராக்ஸ்'' என்ற நச்சுக் கிருமியின் உயிர் அணுக்கள் தடவப்பட்ட கடிதங்கள், சில அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களைக் குறி வைத்து அனுப்பப்பட்டன. மர்மமான முறையில் நடந்த புதிய வகையான இத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.


தீவிரவாதிகளிடம் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறிவந்த அமெரிக்கக் கூலிப் பிரச்சாரக் கும்பல், ஆந்த்ராக்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள் தொடங்கியிருக்கும் உயிரியல் யுத்தம் எனப் பீதியூட்டின. ஈராக் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க வேண்டும் எனத் திட்டம் போட்டுக் காத்திருந்த அமெரிக்க ஆளும் கும்பல், அமெரிக்க மக்களை மூளைச் சலவை செய்ய ஆந்த்ராக்ஸ் தாக்குதலையும் பயன்படுத்திக் கொண்டது.


ஆந்த்ராக்ஸ் கிருமி தடவப்பட்ட கடிதம் யார் வீட்டுக்கு வருமோ என்ற பீதி ஒருபுறமிருக்க, அமெரிக்க உளவு அமைப்பான "எஃப்.பி.ஐ.'' யார் வீட்டுக் கதவைத் தட்டுமோ என்ற அச்சத்திலும் அமெரிக்க மக்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், எஃப்.பி.ஐ., வெள்ளைத் தோல் அல்லாத அந்நியர்களை மட்டுமல்ல, அமெரிக்க விஞ்ஞானிகளைக் கூட விட்டு வைக்காமல், விசாரணை நடத்தியது. உயிரியல் விஞ்ஞானிகள் அனைவரும் சந்தேகப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.


விசாரணை என்ற பெயரில் எஃப்.பி.ஐ. நடத்திய சித்திரவதை, அவமானப்படுத்தல்களைத் தாங்கிக் கொள்ள முடியாத பல பாகிஸ்தானியர்கள், மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு அமெரிக்காவைவிட்டு வெளியேறிப் போனார்கள். ஒரு மருத்துவரின் திருணம் எஃப்.பி.ஐ. விசாரணையால் தடைப்பட்டுப் போனது; அவரின் தொழிலும் முடங்கிப் போனது. ஒரு நுண் உயிரியல் விஞ்ஞானி விசாரணையின் கடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குடிக்கு அடிமையாகி, அதனாலேயே மாண்டு போனார்.


அமெரிக்க இராணுவ மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்த ஸ்டீவன் ஜே.ஹட்ஃபில் மற்றும் புருஸ் எட்வர்ட்ஸ் இவின்ஸ் என்ற இரு நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். எனினும், ஹட்ஃபில் மீதான சந்தேகமும், குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாமல் போகவே, அவருக்கு அமெரிக்க அரசு 46 இலட்சம் அமெரிக்க டாலர் நட்ட ஈடாக கொடுத்தது.
கடித உறைகளில் தடவப்பட்டிருந்த ஆந்த்ராக்ஸ் கிருமியின் மரபணு வடிவமைப்பும்; இவின்ஸின் ஆய்வுக் கூடத்தில் இருந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் மரபணு வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததை ஆதாரமாகக் காட்டித்தான், எஃப்.பி.ஐ., இவின்ஸைக் குற்றவாளியெனக் கூறியது. இவின்ஸ், எஃப்.பி.ஐ.யால் கைது செய்யப்படுவதற்கு முதல் நாளே தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்.


அதேசமயம் இவின்ஸோடு வேலை பார்த்துவந்த சகோதர விஞ்ஞானிகளோ, "இவின்ஸைக் கைது செய்ய ஒரே மாதிரியாகத் தெரிந்த மரபணு வடிவமைப்புதான் ஆதாரமென்றால், அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களையும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும். ஏனென்றால், இவின்ஸின் ஆய்வகத்தில் மட்டுமின்றி, வேறு சில ஆய்வகங்களிலும், விஞ்ஞானிகளிடம் கூட கடித உறையில் தடவப்பட்டிருக்கும் ஆந்த்ராக்ஸை ஒத்த ஆந்தராக்ஸ் கிருமிகள் இருக்கின்றன'' எனக் கூறி, இவின்ஸின் மீதான எஃப்.பி.ஐ.யின் குற்றச்சாட்டை மறுத்தார்கள்.


மேலும், "இவின்ஸ்தான் எஃப்.பி.ஐ.க்காகக் கடித உறைகளில் தடவப்பட்டிருந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளை ஆய்வு செய்து, அதன் கொடிய நச்சுத்தன்மை பற்றி அமெரிக்க அரசுக்குத் தெரிவித்தார். அந்த ஆய்வின் மூலமாகக் கூட, கடித உறையில் காணப்பட்ட ஆந்த்ராக்ஸ் கிருமிகள் அவரின் ஆய்வுக் கூடத்துக்குப் பரவியிருக்கலாம்'' என்றும் இவின்ஸுக்கு ஆதரவாகப் பல விஞ்ஞானிகள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.


இவின்ஸ் குற்றவாளியா, இல்லையா என்பது குறித்து எஃபி.பி.ஐ.க்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையே வாதப் பிரதிவாதங்கள் நடந்து வந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 16 உயிரியல் பாதுகாப்பு விஞ்ஞானிகளும், நிபுணர்களும், "கடித உறையில் தடவப்பட்டிருக்கும் ஆந்த்ராக்ஸ் உயிரணுக்கள் சாதாரண ரகத்தைச் சேர்ந்தவை அல்ல; அக்கிருமிகள் ஆயுத வகையைச் சேர்ந்தவை'' என அமெரிக்க மருத்துவக் குழு இதழில் அம்பலப்படுத்தி எழுதினார்கள்.


எஃபி.பி.ஐ. விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட இவின்ஸும், "அமெரிக்காவின் ஆயுத ஆராய்ச்சி நிறுவனமான ஃபோர்ட் டெட்ரிக்கில்கூட இந்த ரக ஆந்த்ராக்ஸ் கிருமிகள் கிடையாது'' என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். மேலும், ஆந்த்ராக்ஸ் தாக்குதல் பற்றி நடந்த பல்வேறு ஆய்வுகளிலும், "கடிதத்தில் தடவப்பட்டிருந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளை அவ்வளவு எளிதாக யாரும் தயாரித்து விட முடியாது. நவீன வசதிகளைக் கொண்ட உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிக் கூடங்களில் இருந்துதான் இந்தக் கிருமி வெளியேறியிருக்கக் கூடும்'' எனக் கருத்துக் கூறப்பட்டிருந்தது.


ஆனால், எஃப்.பி.ஐ.யின் விசாரணையோ, தனிநபர்களைக் குற்றஞ்சுமத்திக் கைது செய்வதில்தான் குறியாக இருந்தது. அமெரிக்க அரசியல்வாதிகளோ அல்காய்தா மீது பழிபோட்டு, முசுலீம் மத வெறுப்பைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் பிரதான ஆயுத ஆய்வுக் கூடமான ஃபோர்ட் டெட்ரிக்கில் இருந்து ஆந்த்ராக்ஸ், இபோலா உள்ளிட்டப் பல நச்சுக் கிருமிகளின் மாதிரிகள் காணாமல் போனது பற்றியோ, நுண்ணுயிர் பற்றி "ஆய்வு'' நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வுக் கூடங்களையோ, எஃப்.பி.ஐ. தனது விசாரணை வட்டத்துக்குள் கொண்டு வரவேயில்லை. அதனால்தான் என்னவோ, இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது கண்டுபிடிக்கப்படாமல் இன்றும் "மர்மமாகவே'' இருந்து வருகிறது. விசாரணை வேறு மாதிரி நடந்திருந்தால், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை'' என்ற உண்மை ஒருவேளை அம்பலமாகியிருக்கலாம்.


இந்தத் தாக்குதலை நடத்திய குற்றவாளியை மும்முரமாகத் தேடிக் கண்டுபிடிப்பதைவிட, அமெரிக்க அரசு உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்துக் கொள்ள இந்தத் தாக்குதலை ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை.


· 2001க்கும் 2007க்கும் இடைபட்ட ஆறு ஆண்டுகளில் அமெரிக்க அரசு உயிரியல் ஆயுதப் பாதுகாப்பு தொடர்பாகச் செலவழித்த தொகை 3,600 கோடி பில்லியன் டாலராக (1,44,000 கோடி ரூபாய்) அதிகரித்தது.


· நுண்ணுயிர் தொடர்பான ஆய்வுகளை நடத்துவதற்கு 20 நவீன ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன.


· தற்பொழுதுள்ள தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத நோய்களை உருவாக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை, மரபணு மாற்று முறையில் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடம் அமெரிக்காவின் நெவேதாவில் நிறுவப்பட்டது.


· உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதைக் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க நடந்த முயற்சிகளை, அமெரிக்க அரசு இந்த ஆந்த்ராக்ஸ் தாக்குதலைக் காட்டிச் சீர்குலைத்தது.


மனித குலத்திற்குப் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய அமெரிக்க அரசின் இந்த ஆயுத வெறியை, அந்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 750 நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்க அரசின் தேசிய சுகாதாரக் கழகத்திற்கு எழுதிய கடிதத்தில், "உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கக் கோடி கோடியாகச் செலவழித்து வரும் அமெரிக்க அரசு, மக்களைத் தாக்கி நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர் பற்றிய ஆய்வைப் புறக்கணிப்பதன் மூலம், மக்களின் நலவாழ்வு, சுகாதாரத்தை அபாயகரமான நிலைக்குத் தள்ளி விடுவதாக''க் குற்றம் சுமத்தியுள்ளனர்.


ரிச்சர்ட் இபிரைட் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள், "உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பது தொடர்பாக புதிது புதிதாக ஆய்வுக் கூடங்களைத் திறப்பதும்; அந்த ஆராய்ச்சியில் நூற்றுக்கணக்கான பேரை ஈடுபடுத்துவதும் அமெரிக்க மக்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தந்து விடாது; தீவிரவாதிகளைக் கண்டு பயப்படுவதைவிட, இந்த ஆய்வுக் கூடங்களில் நடைபெற வாய்ப்புள்ள விபத்துக்களையும், அதை மூடிமறைக்க அரசு செய்யும் எத்தணிப்புகளையும் கண்டுதான் அமெரிக்க மக்கள் மிகவும் அச்சம் கொள்ள வேண்டியிருக்கும்'' என எச்சரித்துள்ளனர்.


இட்லரின் நாஜிக் கும்பல், ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குத் தாங்களே தீ வைத்துக் கொளுத்திவிட்டு அந்தப் பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. அதுபோல, இந்த ஆந்தராக்ஸ் தாக்குதலின் பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகூட மறைந்து கிடக்கலாம். போர் வெறியையும், ஆயுத வெறியையும் நியாயப்படுத்திக் கொள்ள, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு காரணம் வேண்டுமே!


— இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் "பொறுப்புணர்வுமிக்க மரபியல் கவுன்சிலின்'' முன்னாள் தலைவர் திரு.சுஜாதா பைரவன், 13.08.08 ஹிந்து நாளிதழில் வெளியிட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 25 September 2008 05:09