Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தெற்கு ஒசெட்டியா : அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்

தெற்கு ஒசெட்டியா : அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்

  • PDF

ஆகஸ்ட் 7ஆம் நாள் பின்னிரவு. ரஷ்யாவை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு பிராந்தியமான தெற்கு ஒசெட்டியாவின் மீது ஜார்ஜியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. பீரங்கித் தாக்குதலில் அச்சிறு மாநிலத்தின் தலைநகரான ஷின்வெலி தரைமட்டமாக நொறுங்கியது. காகசஸ் மலைப் பிராந்தியமெங்கும் குண்டுகளின் வெடியோசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்த இப்போர்த் தாக்குதலில் தெற்கு ஒசெட்டியாவின் நாடாளுமன்றக் கட்டடம், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், தேவாலயங்கள் என அனைத்தும் நொறுங்கிக் கிடக்கின்றன. இக்கொடிய போர்த் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி ஒசெட்டிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உற்றார் உறவினர், வீடுவாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளனர்.


தெற்கு ஒசெட்டிய மக்களுக்குத் துணையாக ரஷ்ய வல்லரசு தனது படைகளைக் குவித்தது. ரஷ்ய ராணுவம் ஜார்ஜியப் படைகளை தெற்கு ஒசெட்டியாவிலிருந்து விரட்டியடித்ததோடு, ஜார்ஜியாவின் முக்கிய நகரங்கள் மீதும் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தி எச்சரித்தது. அதன்பின்னரே, ஜார்ஜியா போர் நிறுத்தத்தை அறிவித்தது.


···


சோவியத் ஒன்றியம் 1991இல் சிதைந்த போது, அதுவரை ரஷ்யாவுடன் ஐக்கியப்பட்டிருந்த ஜார்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. ஜார்ஜியாவின் வடபகுதியில் ஒசெட்டியர்கள் எனும் தேசிய இனச் சிறுபான்மையினர் உள்ளனர். காகசஸ் மலையின் தெற்கேயுள்ள இப்பகுதி தெற்கு ஒசெட்டியா என்றழைக்கப்படுகிறது. வடக்கு ஒசெட்டியா, ரஷ்யாவுடன் இணைந்துள்ளது.

 

ஜார்ஜியா தனிநாடாகியபோது, தெற்கு ஒசெட்டியர்கள் சுயாட்சி உரிமை கோரிப் போராடினர். அதேபோல ஜார்ஜியாவின் மேற்குப் பகுதியிலுள்ள அப்காசியர்கள் எனும் சிறுபான்மை தேசிய இனத்தினரும் சுயாட்சி உரிமை கோரி போராட்டங்களைத் தொடர்ந்தனர். இவற்றை ஜார்ஜியா அரசு மிருகத்தனமாக ஒடுக்கி, இப்பிராந்தியங்கள் ஜார்ஜியாவின் ஆதிபத்திய உரிமை என்று கொக்கரித்தது.


மறுபுறம், இவ்விரு தேசிய இனச் சிறுபான்மையினர் வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ரஷ்யாவுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டவர்கள் என்று நியாயவாதம் பேசும் ரஷ்ய வல்லரசு, இவ்விரு சிறுபான்மை தேசிய இனத்தவரைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவற்றுக்கு ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்து வந்தது. ரஷ்ய ஆதரவுடன் ஜார்ஜிய ராணுவத்தின் மீது இவ்விரு தேசிய இனங்களின் "போராளிகள்' தாக்குதல் தொடுப்பதும், அதற்கெதிராக ஜார்ஜியா எதிர்த்தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்த நிலையில், பதற்றத்தைத் தணிப்பது என்ற பெயரில் ரஷ்யா மற்றும் ஜார்ஜிய நாடுகளின் "அமைதிப் படைகள்' இப்பிராந்தியங்களில் நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தன.


இந்நிலையில், சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருப்பதையொட்டி உலகின் கவனம் திரும்பியிருந்த நிலையில், ஜார்ஜியப் படைகள் தெற்கு ஒசெட்டியா மீது போர்த் தாக்குதலை நடத்தின. ரஷ்ய "அமைதிப் படைகள்' மீதே ஜார்ஜியப் படைகள் தாக்குதலை நடத்தி பல சிப்பாய்களைக் கொன்றதும், ரஷ்ய வல்லரசு தனது பீரங்கிப் படைகளைக் குவித்து எதிர்த்தாக்குதலை நடத்தியது. ரஷ்யப் போர் விமானங்கள் ஜார்ஜியாவின் தலைநகர் திபில்சி மட்டுமின்றி, பல முக்கிய நகரங்கள் துறைமுகங்கள் மீதும் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியது.


ஜார்ஜியாவோ அமெரிக்க விசுவாச நாடு. அமெரிக்க ராணுவத்திடம் சிறப்புப் பயிற்சியும் ஆயுத உதவியும் பெற்றுள்ள ராணுவத்தைக் கொண்டுள்ள நாடு. ஜார்ஜிய ராணுவம், அமெரிக்கப் படைகளோடு இணைந்து ஈராக்கை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளது. அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ராணுவக் கூட்டணியில் (நேட்டோ) இணைய ஜார்ஜியா விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க ஏவுகணைத் தளங்களும் ராணுவத் தளங்களும் ஜார்ஜியாவில் நிறுவப்பட்டுள்ளன.


மேலும், பாரசீக வளைகுடாவை இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையில் ஜார்ஜியா அமைந்துள்ளதால், தனது உலக மேலாதிக்க போர்த்தந்திர முக்கியத்துவம் கருதி அமெரிக்க வல்லரசு ஜார்ஜியாவைத் தனது செல்லப் பிள்ளையாகக் கருதுகிறது. அமெரிக்க சார்பு முதலாளித்துவவாதியாக இருந்த போதிலும், அதிபர் ஷெவர் நாட்சேயை 2003இல் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அகற்றிவிட்டு, அமெரிக்க விசுவாச கைக்கூலி சாகாஷ்வில்லியை புதிய அதிபராக்கியதன் மூலம் ஜார்ஜியாவைத் தனது பொம்மை அரசாகவே இயக்கி வருகிறது, அமெரிக்க வல்லரசு. எனவே, அதன் கண்ணசைவு இல்லாமல் ஜார்ஜியா இப்போர்த் தாக்குதலை நடத்தியிருக்கவே முடியாது.


ஜார்ஜிய ராணுவத்தின் எண்ணிக்கை 26,900 பேர்கள்தான். ரஷ்ய ராணுவமோ அதைவிட 25 மடங்கு பெரியது. ஜார்ஜியாவிடமுள்ள ராணுவக் கவச வண்டிகள், போர்விமானங்களை ஒப்பிட்டால் ரஷ்ய வல்லரசு அதைவிட 100 மடங்கு வலுவானது. ரஷ்ய வல்லரசுடன் ஜார்ஜியா மோதினால் அதனை மூட்டைப் பூச்சியைப் போல ரஷ்யா நசுக்கிவிடும் என்பது ஜார்ஜியாவுக்குத் தெரியும். எனினும், தெற்கு ஒசெட்டியா மீதும் ரஷ்ய "அமைதிப் படைகள்' மீதும் ஜார்ஜியா போர்த்தாக்குதலை நடத்தி வம்பிழுக்கக் காரணம் என்ன?


பின்னிலைக்குத் தள்ளப்பட்ட போதிலும் இன்னமும் இராணுவ வலிமை மிக்க ரஷ்ய வல்லரசை ஆத்திரமூட்டி போருக்கு இழுப்பது; போரைக் காரணம் காட்டி பொருளாதார நிர்பந்தங்கள் கொடுத்து முடக்க முயற்சிப்பது; முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் மீதான ரஷ்ய வல்லரசின் பொருளாதார வர்த்தக மேலாதிக்கத்தைத் தகர்ப்பது; ரஷ்யா எத்தகைய அரசியல் ராணுவ உத்திகளை மேற்கொள்ளும் என்பதை அறிவதற்கான வெள்ளோட்டமாக இப்போரை நடத்தி சோதிப்பது என தனது உலக மேலாதிக்க போர்த்தந்திர திட்டத்திற்கேற்பவே ஜார்ஜியாவை ஏவிவிட்டு அமெரிக்க வல்லரசு இப்போரை நடத்தியுள்ளது.


ஏற்கெனவே 1998இல் ரஷ்ய வல்லரசை ஒட்டியுள்ள பால்டிக் நாடுகள் முதல் போலந்து, செக்கோஸ்லாவியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ராணுவக் கூட்டணி நாடுகளாக மாற்றப்பட்டன. 1999இல் ஜார்ஜியா வழியாக பாரசீக வளைகுடாவை இணைக்கும் எண்ணெய் எரிவாயு குழாய்களைப் பதித்து அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவியது. 2002இல் ரஷ்யாவை ஒட்டியுள்ள உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் நிறுவப்பட்டன. 2004இல் ரஷ்யாவை அடுத்துள்ள உக்ரைனில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு அமெரிக்க விசுவாச ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வாறு ரஷ்ய வல்லரசைச் சுற்றிலும் பல நாடுகளில் அமெரிக்க தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர துருக்கி, இஸ்ரேல், ஆப்கான், இந் தியா ஆகிய கூட்டாளி நாடுகளின் துணையோடு ரஷ்ய வல்லரசை அமெரிக்கா சுற்றி வளைக்க முடியும். அதற்கான ஒத்திகையாகவே அமெரிக்கா இப்போரை நடத்தியுள்ளது. எனவேதான், "இனிமேல் இது ஜார்ஜியா விவகாரமல்ல; மாறாக, அமெரிக்க நலன்கள் பற்றிய விவகாரம்'' என்று கூறியுள்ளார், ஜார்ஜியாவின் அமெரிக்க விசுவாச அதிபர் சாகஷ்வில்லி.


அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் ஐ.நா. மன்றமும் இப்போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று பெருங்கூச்சலிட்டனவே தவிர, ஜார்ஜியா மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முன்வரவில்லை. ஐரோப்பாவில் முன்னாள் யுகோஸ்லாவியா நாடு சிதறி பல தேசிய இன நாடுகளாகப் பிளவுபட்டபோது, செர்பிய நாடு தனது ஆதிபத்திய உரிமை என்ற பெயரில் கொசாவோ பிராந்தியத்தை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்ட போது, அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இதனை "ஆக்கிரமிப்பு'' என்று சாடின. அமெரிக்கா ராணுவக் கூட்டணி (நேட்டோ) நாடுகளின் படைகள் 1999இல் செர்பியா மீது பத்து வார காலத்துக்குப் போர் தொடுத்து அந்நாட்டை மீண்டெழ முடியாதபடி நாசமாக்கின. ஆனால், செர்பியாவைப் போலவே இன்று ஜார்ஜியா, தெற்கு ஒசெட்டியாவை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டுள்ளதை அவை வெட்கமின்றி நியாயப்படுத்துகின்றன. இது ஜார்ஜியாவின் தேசிய ஒருமைப்பாடு பற்றிய பிரச்சினை என்று நழுவிக் கொள்கின்றன. தெற்கு ஒசெட்டியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டுமென கூச்சலிடும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், ஜார்ஜியப் படைகளும் வெளியேற வேண்டுமெனக் கோரவோ, தெற்கு ஒசெட்டியாவுக்கு சுயாட்சி உரிமை வழங்கக் கோரவோ முன்வரவில்லை.


தெற்கு ஒசெட்டியர்களுக்கு குடியுரிமையும் பாஸ்போர்ட்டும் வழங்கியுள்ள ரஷ்ய வல்லரசும் அச்சிறுபான்மை தேசிய இனத்துக்கு சுயாட்சி உரிமை வழங்கக் கோரவில்லை. சிறுபான்மை தேசிய இனங்களைப் பாதுகாப்பது என்ற முகமூடியுடன் அவற்றை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறது. கடைசியில், ரஷ்யா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர்த்தந்திர சதுரங்கப் பகடைக் காயாக தெற்கு ஒசெட்டியா மாற்றப்பட்டு விட்டது. அவற்றின் போர்த்தந்திர மேலாதிக்க நோக்கங்களுக்கேற்ப மீண்டும் போர் மூளவோ, தணியவோ செய்யலாம் என்பது நிரந்தர விதியாகி விட்டது.


1991இல் சோவியத் ஒன்றியம் சிதறி, பல்வேறு தேசிய இனங்கள் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தபோது, தேசிய இன விடுதலையே உலகின் முதன்மையான போக்காக மாறிவிட்டது என்று முதலாளித்துவ இனவாதிகள் ஆரவாரம் செய்தனர். ஆனால் அது ஏகாதிபத்தியவாதிகளால் ஊதிப் பெருக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை வரலாறு நிரூபித்துக் காட்டி விட்டது. தனித்தனி நாடுகளாகப் பிரிந்த ரஷ்ய தேசிய இனங்கள், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று சுயசார்புடன் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்கவோ, சொந்த மக்களிடம் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ முன்வரவில்லை. அமெரிக்கக் கூட்டணி நாடுகளாகவும், விசுவாச அடியாள் நாடுகளாகவும், பாசிச ஆளும் கும்பலைக் கொண்ட நாடுகளாகவும் அவை சீரழிந்தன. தேசிய இன விடுதலை என்ற முகமூடியுடன் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இந்நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதுதான் நடந்தேறியுள்ளது. நேற்றைய கொசாவோ போர் மட்டுமல்ல; இன்றைய தெற்கு ஒசெட்டியா போரும் இந்த உண்மையை மீண்டும் மெய்ப்பித்துக் காட்டிவிட்டது.
· குமார்

Last Updated on Saturday, 13 September 2008 07:19