Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் 1949 இறுதி வரை: அடக்குமுறை, சுற்றி வளைத்துத் தாக்குதல்

1949 இறுதி வரை: அடக்குமுறை, சுற்றி வளைத்துத் தாக்குதல்

  • PDF

1949 இறுதி வரைக்கும் எல்லா இடங்களிலும் மக்களிடமிருந்தும், மக்களுடைய படைகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை இராணுவம் சந்தித்தது. 5060 இராணுவத்தினர் கூட கிராமத்திற்கு வந்து திரும்ப முடியவில்லை. இதனால் இராணுவம் தனது தந்திரங்களை மாற்றிக் கொண்டது. ஒரே சமயத்தில் 5000லிருந்து 6000 வரையிலான இராணுவத்தினர் சேர்ந்து கொண்டு 5 அல்லது 6 கிராமங்களைச் சுற்றி வளைத்து தேடும் படலம் கொண்ட திட்டத்தை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல், சுற்றி வளைத்துத் தாக்குவது என்று சொல்லப்படும். அவர்கள் இவ்வாறாக ஒவ்வொரு பகுதியையும் தேடினர்.


அவர்கள் கிராம மக்களை ஓர் இடத்தில் கூடுமாறு செய்து, கம்யூனிஸ்டுகளைக் காட்டி கொடுக்க வேண்டுமென்றும், கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலக வேண்டுமென்றும், நிலப்பிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை நிலப்பிரபுக்களுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டுமென்றும் கோரினர். இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டுமென்று மக்கள் சித்திரவதைப்படுத்தப்பட்டனர். பிரம்பினாலும், லத்திகளாலும், துப்பாக்கியின் பின்புறங்களாலும் இரக்கமின்றி மக்கள் தாக்கப்பட்டனர். சீதாபதி என்ற இராணுவ அதிகாரி மக்களின் முதுகுகளில் அரிவாள், சுத்தியல் கொண்ட வடிவத்தைப் போல் காயம் உண்டாகும் வரை அடித்துக் கொண்டேயிருப்பான். இந்தக் கேடுகெட்ட நாய் பின்னர் கொரில்லாக் குழுக்களினால் கொல்லப்பட்டான். கட்சி அங்கத்தினர்களுக்கு ஒரு தனிவகையான சித்திரவதை செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தோழர்களை மக்கள் முன்பாகவே மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தனர்.


இந்தத் தாக்குதல்களினால் மக்கள் படைகள் சிறிய அளவிலேயே நகர்ந்து சென்றது. சுற்றி வளைத்துத் தாக்கும் முறையில் அகப்பட்டுக் கொண்ட படைக் குழுக்கள் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை வீரமாகப் போரிட்டனர். மக்களின் உதவியால் சுற்றி வளைக்கும் நடவடிக்கை வருகிறது என்பதை அறிந்தவுடன், சுற்றி வளைக்கப்படும் முன்னரே மக்கள் படைகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிவிடும். அவர்கள் இரகசியமாக இயங்கி, மக்களுக்கு உற்சாகம் ஊட்டினர்.


இருந்தாலும், படைகளை பாதுகாப்பதென்பது மிகவும் சிரமமான காரியமாக மாறியது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். மக்களும் படைகளும் இத்தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. படைகளுக்குப் பக்கபலமாக இருந்த மக்களால் இந்த மனிதத்தன்மையற்ற சித்திரவதையை தாக்குப் பிடிக்க முடியவில்லை. ரஜாக்கர் குண்டர்கள் செய்ததை விட "ஜனநாயக சோசலிஸ்ட்' நேருவினுடைய இராணுவம் செய்த சித்திரவதையானது மிகவும் கொடியதாக இருந்தது. மக்கள் பின்வருமாறு சொல்ல ஆரம்பித்தனர்: "ஆட்டைச் சாப்பிட்டவன் மறைந்து விட்டான்; ஆனால் அவனுடைய இடத்தில் எருமையைச் சாப்பிடுபவன் வந்துவிட்டான்.''


முன்னர் அடக்கி ஒடுக்கப்பட்ட எதிரிகள் இப்பொழுது இராணுவத்தின் உதவியுடன் கிராமங்களில் மீண்டும் தலைதூக்கினர். சந்தர்ப்பவாதிகள் மக்களிடையில் ஒழுக்கமின்மையைப் பரப்ப ஆரம்பித்தனர். இத்தகைய சூழ்நிலைமைகளில் வறிய மக்கள் சித்திரவதையிலிருந்து தப்ப சரணடைய ஆரம்பித்தனர். படைகள், கட்சி ஊழியர்கள் ஆகியோரின் தற்காப்பு மிகக் கடுமையான சூழ்நிலையில் சிக்கியது. இயக்கம் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்தது. பல பிரதேச, மாவட்ட தலைவர்கள், பகுதிவாரிக் கமிட்டிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், படை உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிருகத்தனமான சித்திரவதைக்குள்ளாயினர். படைகள், அமைப்பாளர்கள், கிராமத் தலைவர்கள், உள்ளூர்ப்படை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலுள்ள அமைப்புத் தொடர்பு உடைக்கப்பட்டது. கட்சி முழுமையும் தற்காலிகக் குலைவு ஏற்பட்டது. தற்காப்பு சரியில்லாமையால், கிராமப்படை உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துக் கமிட்டிகளின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். அல்லது அரசாங்கத்திடம் சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் எல்லோரும் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.


1949 பிப்ரவரி இறுதிக்குள், ஆயிரக்கணக்கிலிருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிற்கு தாழ்ந்தது. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு தாலுகாவிலும் 100 அல்லது 200 என்ற அளவிற்கு குறைந்தது. கட்சியுடனும், படைகளுடனும் தங்கிவிட்டவர்களுக்கு சமவெளியில் இருப்பதற்கு இயலவில்லை. தங்களுடைய சொந்த அனுபவங்களின்மூலம், அந்த உறுப்பினர்கள் காடுகளில் ஒன்று சேர்ந்து தங்களை ஒரு அமைப்பாக ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு இயக்கம் புதிய பகுதிகளுக்குப் பரவியது. சுற்றி வளைத்துத் தாக்குதல், அடக்குமுறை ஆகிய போர் நடவடிக்கைகளில் நேரு அரசாங்கமானது கட்சி, படை ஆகியவற்றின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் மீது மனிதத் தன்மையற்ற கொடுமையான சித்திரவதையைச் செய்தது. தோழர் இராமுலுவின் மீதான இராணுவத்தினரின் மனிதத் தன்மையற்ற சித்திரவதை, கொடூரத்திற்குச் சிறந்த உதாரணமாகும்.


தோழர் இராமுலு சூரியபேட்டாவைச் சேர்ந்த மிர்யாலா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு விவசாயத் தொழிலாளி. அவர் கட்சியில் சேர்ந்து, சிறந்த பெயரை மக்களிடம் பெற்றார். சிறிது காலத்திற்குள்ளாகவே அவர் படை உறுப்பினராக ஆனார். பின்னர் கிராமத் தலைவராக ஆனார். பின்னர் கொரில்லாக் குழுவின் தலைவராக ஆனார். சுற்றி வளைத்துத் தாக்குதல், அடக்குமுறை ஆகிய போர் நடவடிக்கைகளில் அவர் மிர்யாலாவிற்கு அருகில் பிடிபட்டார். கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாலும் கட்சியின் இரகசியங்களில் ஒன்றைக் கூட கூற மறுத்துவிட்டார். இராணுவ நாய்கள் அவரை தெரு வழியாக ஒரு லாரியில் கட்டி இழுத்துச் சென்றனர். அவர் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளாக கிழிக்கப்பட்டது. அவர் மக்களின் பெருமை மிக்க தியாகியானார்.


இத்தகைய கடுமையான அடக்கு முறைகள் நடந்தாலும், மக்கள் படைகள் இராணுவத்தினரை எதிர்த்தனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை எதிர்த்து வெறும் இரண்டு அல்லதுமூன்று படைஉறுப்பினர்கள் தீவிரமாகப் போரிட்டனர். கடைசிக் குண்டு இருக்கும் வரைக்கும் அவர்கள் போரிட்டனர் போரிட்டுக் கொண்டே இறந்தனர். உயிருடன் பிடிபட்டாலும், கொடுமையான சித்திரவதைக்குட்பட்டாலும் அவர்கள் கட்சி இரகசியங்களைச் சொல்ல மறுத்தனர். எத்தகைய சிறந்த தீரர்கள்! உண்மையான கம்யூனிஸ்டுகள்!