Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் யூனியன் போலீசு நடவடிக்கை (1948 செப்டம்பர் 13) — ரஜாக்கர் குண்டர்களை அழித்தல் — மக்கள் போராட்டம் முன்னேறுதல்

யூனியன் போலீசு நடவடிக்கை (1948 செப்டம்பர் 13) — ரஜாக்கர் குண்டர்களை அழித்தல் — மக்கள் போராட்டம் முன்னேறுதல்

  • PDF

1948க்குள்ளாக, தெலுங்கானா மக்கள் இயக்கமானது மிக உயர்நிலையை அடைந்தது; அது பல புதிய இடங்களுக்கும் பரவியது. இயக்கமானது நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பரவியது. இயக்கம் ஏற்கனவே மேடக் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நுழைந்து விட்டது. தெலுங்கானா மக்கள் உறுதியாக நின்றனர். நிஜாமினுடைய ரஜாக்கர் குண்டர்களை அவர்கள் துரத்தி அடித்தனர். நிஜாம் இராணுவமும், ஆயுதந்தாங்கிய ரஜாக்கர்களும் எதிர்த்து நிற்க முடியாமல் ஓடினர். ஆயிரக்கணக்கான கிராமங்கள் விடுவிக்கப்பட்டன. பரந்த அளவில் நிஜாமின் ஆட்சி அழிக்கப்பட்டது.


டெல்லியிலிருந்த காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா மக்கள் இயக்கத்தைக் கண்டு அஞ்சினர். பெருமுதலாளித்துவ, பெரு நிலப்பிரபுத்துவ காங்கிரசு அரசாங்கத்திற்குக் கிராமங்களில் பண்ணையடிமை முறை தேவையாயிருந்தது. இந்த பண்ணையடிமை முறை நிஜாம் அரசில் அழிக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் நடுப்பகுதியிலேயே இது நடைபெற்றது. இந்த இயக்கமானது சேதங்களை ஏற்படுத்துமோ என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அஞ்சினர். அதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடியுமுன்னரே, மத்திய காங்கிரசு அரசாங்கமானது நிஜாம் அரசுக்குள் தன்னுடைய இராணுவத்தை நுழையுமாறு ஆணை பிறப்பித்தது. இந்தப் போலீசு நடவடிக்கை 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. நிஜாம் நவாபை ஆட்சியிலிருந்து விலக்க அது கருதவில்லை. தெலுங்கானா மக்களே இதைச் செய்து வந்தனர். இந்திய இராணுவத் தலையீட்டின் முக்கிய நோக்கம், வளர்ந்து கொண்டிருக்கும் விவசாயப் புரட்சியை இரத்தத்தில்மூழ்கடித்து, அழிந்து கொண்டிருக்கும் சுரண்டல் தன்மை வாய்ந்த பண்ணையடிமை முறையைப் பாதுகாப்பதே. இவ்வளவு சீக்கிரத்தில் மத்திய அரசாங்கத்தின் இராணுவத் தலையீடு நடைபெறும் என்று கட்சித் தலைமை எதிர்நோக்கவில்லை. இவ்வாறாக ஒரு புதிய பிரச்சினை எழுந்தது.


இந்திய யூனியனின் இராணுவம் நுழைவதற்கு முன்னரே ராஜ்பஹதூர் கௌர் மற்றும் பலர் (இவர்கள் தற்சமயம் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளனர்) பொதுக் கூட்டம் கூட்டி தெலுங்கானா சுதந்திரமான மாநிலமாக வேண்டும் என்று கூறினர். யூனியன் அரசாங்கமானது கட்சி முழுவதையும் உலுக்கிய இந்த முழக்கத்தை ஆதரித்து பயன்படுத்திக் கொண்டது. ஆனால் கட்சி இந்த முழக்கத்தை நிராகரித்தது.


கட்சியிலிருந்த சில வலதுசாரிகள் இந்த இயக்கத்தை உடனே நிறுத்த வேண்டுமென்று கூறினர். இவர்கள் ஏற்கனவே வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டனர். அருட்ல ராமச்சந்திரரெட்டி போன்றவர்கள் கைதாக்கப்பட்டு, பின்பு சிறையிலிருந்து கொண்டு இயக்கத்தை நிறுத்துமாறு கடிதங்களை எழுதினர். அவர்களெல்லாம் இன்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலைவர்களாக உள்ளனர். ஆனால் இந்த சரணாகதிப் பாதையை கட்சி முழுமையும் நிராகரித்தது. நிஜாம் அரசாங்கத்தின் இராணுவ மையங்களை அழிக்கத் திட்டத்தை தீட்டியது. நிலப்பிரபுக்களை அழித்து, அவர்களின் நிலங்களைப் பங்கிடுவதற்காகத் திட்டம் தீட்டியது.