Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் நிலப்பிரபுக்களின் தாசன்

நிலப்பிரபுக்களின் தாசன்

  • PDF

காங்கிரசும், காந்தியும் ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் விசுவாசிகள் அல்லர், நிலப்பிரபுக்களுக்கும் சேவகர்களே. "மன்னர் வாழ்கவே'' என்ற பாட்டை நான் எத்தனையோ தடவை ராகம் போட்டு, வெகு அழகாகப் பாடியிருக்கிறேன்; என்னுடைய நண்பர்களில் பலரையும் பாடச் செய்திருக்கிறேன்'' எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் புளகாங்கிதமடைந்து கூறிய காந்தி, தனது ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது அல்ல; அதேசமயம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளார். பர்தோலியில் கூடிய காங்கிரசு செயற்குழுவின் தீர்மானங்கள் இதுபற்றிய முக்கிய விவரங்களை கொண்டுள்ளன:


"பிரிவு 6: ஜமீன்தார்களுக்கு நிலவரியைக் கொடுக்காமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருப்பதானது தீர்மானத்திற்கு எதிரானது என்றும் நாட்டின் மிக நல்ல நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு காங்கிரசு செயற்குழு, காங்கிரசு ஊழியர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஆலோசனை கூறுகிறது.


பிரிவு 7: ஜமீன்தார்களுடைய சட்டபூர்வ உரிமைகளைத் தாக்குவதை காங்கிரசு இயக்கம் எந்த விதத்திலும் தனது நோக்கமாகக் கொள்ளவில்லை என்று ஜமீன்தார்களுக்கு உறுதியளிக்கிறது.


நிலப்பிரபுத்துவச் சக்திகளுக்குக் காங்கிரசு எவ்வளவு நாணயமாகச் சேவை செய்தது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுவதில்லை. சில ஆண்டுகள் கழித்து, காந்தி ஜமீன்தார்கள் குழு ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னது இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் அமைந்தது:


"சரியான நீதியான காரணமின்றிச் சொத்து படைத்த வர்க்கங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்வோர்களில் ஒருவனாக நான் இருக்கமாட்டேன். உங்களுடைய இதயத்தைத் தொட்டு நீங்களாகவே உங்களுடைய சொத்துக்களை தர்மகர்த்தா முறையில் உங்களுடைய விவசாயிகளுக்கு வைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். வர்க்க யுத்தத்தைத் தடுப்பதற்கு எனது செல்வாக்கின் முழு பலத்தையும் பயன்படுத்துவேன் என்பதைப் பற்றி நீங்கள் உறுதியாக இருக்கலாம்... உங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிக்க அநீதியான ஒரு முயற்சி நடந்தால் அப்போது உங்கள் பக்கம் சேர்ந்து கொண்டு இந்த காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காணலாம்.


(ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்திருந்த ஜமீன்தார் குழுவுக்கு காந்தி அளித்த பேட்டி, ஜூலை 1934, மராத்தா, ஆகஸ்டு 12,1934)


ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களுடைய ச­க அடித்தளமாக விளங்கும் நிலப்பிரபுக்களுக்கும் காந்தி எத்தகைய விசுவாசம் மிக்க அடிமைச் சேவகன் என்பது வெள்ளிடை மலையல்லவா? இத்தகைய துரோகியின் வருகைக்காக நாடு காத்திருந்ததாம்! "காங்கிரசை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு காந்தியின் வருகை வரை நாடு காத்திருந்தது. அவர் காங்கிரசை சாதாரண மக்களின் கட்சியாக, ஏழை, எளியவர்களின் இயக்கமாக மாற்றினார்.'' ராஜீவ் காந்தியின் மொழியில் ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களுடைய தரகர்களான தரகு முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் தான் மக்களாக இருக்க முடியும்.