நாங்கள் சும்மா இருந்தாலும்
நாடு விடுவதாயில்லை...
எழுதுவதால் மட்டுமல்ல
கவிதை வாழ்வதாலும் வந்து சேரும்
எல்லோர்க்கும் ஒருசமயம்
கவிதையாய் வாய்க்கும்.
அடிக்கும் அனலும் தணலும்
நொடிக்குள்மாறி கருத்துருவாக்கும் மேகம்
மண்ணைக் கிளப்பி குளிரும், இலைகள் நடுக்கும்.
அந்த இலைகளில் சிக்கிய காற்று உளறும்
அந்தக் காற்றில், கால் இடறி விழும் தூறல்.
சேர்ந்த சிறகினை
அலகினால் கோதிக் கோதி
நிறம்பிரித்து சிலிர்க்கும் பறவைகள்.
நனையும் குட்டிகளை தன் உடற்சூட்டில்
அணையக் கற்றுத்தரும் ஆடுகள்
பார்க்கும் யார்க்கும்
நனைந்த கவிதை அது!
சக்கரத்தைச் சுற்றி
சூடாக்கி, சூடாக்கி
இரும்புக்குள் மறைந்திருக்கும் நீரை
இறுக வைத்து
விரும்பும் அரிவாள்
வெந்து வரும் நெருப்பழகாய்.
எனக்கு வேலையென்ன?
எனும் கேள்விக்குறியாய்.
சிவந்து நிற்கும் வேளை
தீயின் கவிதை அது! உழைப்பின் செய்யுள் அது!
திமிறும் கடலை இரைக்க வைத்து
உப்புக் காற்றை உலர வைத்து
தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து
களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி
கட்டுமரங்கள் முன்னேறும்.
பரதவர் உழைப்புக்கு
ஈடுகொடுக்க முடியாமல்
நுரை தள்ளும் கடல்புறத்தைக்
காணும் யார்க்கும்
அது வலைகளில் பின்னிய கவிதைகள்!
தசைகளின் உணர்ச்சியை
வாங்கி, வாங்கி
தறிக்கட்டைகளும் தடக் புடக் எனப்
பேசிப் பார்க்கும்.
நெய்திடும் புடவை மட்டுமா?
செய்திடும் கடுமையில்
கைத்தறிச் சூட்டை வாங்கிக் கண்களும் சிவக்கும்.
நுண்ணிய கனவுகள்
நூற்கும் விரல்கள்
கருவினில் இருக்கும் பிள்ளையும்
கால், கை அசைத்து
உயிர் பின்னிடும் கர்ப்ப வெப்பத்தில்
தோற்கும் நூல்கள்
வேலையின்றி சுற்றி வரும் காற்று
வெட்கப்பட்டு
தன் அம்மணம் மறைக்க
நூல்களிடையே நுழையும்
பார்க்கும் யார்க்கும்
நரம்புகள் பின்னிய கவிதை அது!
கருக்கரிவாளின் சுனை பார்த்து
ஓடி ஒளியும் கருக்கல் நிலவு.
உழவனின் காலில் மிதிபட்டு
தூக்கம் கலையும் வாய்க்கால்.
வீசும் கைகளின் வெப்பத்தில்
விலகிக் கொள்ளும் பின்பனி
அடடா! அறுக்கும் அந்நேரம்
உழவன் படைப்பு அது! கவிதை அறுப்பு அது!
தேடித்துளைக்கும் இரசாயனக் குண்டுகள்
தெருவில் சாவின் நகம் பதிக்கும்
இராணுவ வண்டிகள்.
மணல் மூட்டைகளுக்குப் பின்னே
மறைந்திருக்கும்
நவீன ஆயுதங்கள், காலாவதியான இதயங்கள்.
ராடார் வைத்து வேவு பார்க்கும் சாவு.
வாடா! அமெரிக்க நாயே! என்று
வீதியில் செருப்புடன் நிற்கும்
ஈராக் பிஞ்சுகள்.
அந்தச் செருப்புகள்
உணர்ச்சிக் கவிதைகள்!
வறுமையின் கொடுமை எது?
மனிதன் தன் மனித உணர்வுகளை இழப்பது.
மார்க்சோ, மேலும் மேலும் மனிதரானார்
அகதிவாழ்வில் பிள்ளைகள் இரண்டை பறிகொடுத்தும்
தன் ஆடைகளைக் கூட அடகு வைத்தும்
உயரிய சமூகம் படைப்பதிலேயே
அவர் உயிரின் ஆசை திமிறியது.
முடிவிலாத் துயரின், வலிகளை வாங்கி
மூலதன வீக்கத்தை உலகுக்குக் காட்டினார்.
பதுக்கி வைத்திருக்கும்
முதலாளித்துவத்தின் இரக்கமற்ற ஆன்மாவை
விரட்டிப் பிடித்து நிர்வாணமாக்கியது
மார்க்சின் சுருட்டுப் புகை.
அதனால் ஆவிகள் அம்மணமாகவே அலைகின்றன.
மார்க்சும், ஜென்னியும், ஏங்கெல்சும்
லெனினும், ஸ்டாலினும், மாவோவும்
வாழ்ந்த வாழ்வை
உணரும் யார்க்கும்
அது கவிதையாய் இருக்கும்!
தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து
தன் நிழலும் இடறும் கால்கள் உண்டு
காதல் சுகமே கடைசியில் கடைசி என
சுயநலம் வியர்க்கும் தோல்கள் உண்டு,
என் நரம்பும், தசையும்
எலும்பும், தோலும்
இரத்தமெல்லாம் அலைந்து
நான் விரும்பும் ஒரு சுகம்
நாட்டு விடுதலை தவிர வேறில்லை
என்று எங்கள் பகத்சிங் போல யாருண்டு?
தொண்டைக் குழியை
தூக்குக் கயிறு நெறித்த போதும்
என் விடுதலைத் தாகம் விடமாட்டேன்!
வெள்ளை அசிங்கமே! உனக்கு
என் விழிகளின் ஈரமும் தரமாட்டேன்!
என சிலிர்த்த முகத்துடன் செத்தானே?!
கண்டு கண்டு
மரணம் பயந்து போன கவிதை அது!
இன்றோ
எங்கள் நீர்நிலை நிறைந்த
கவிதைகள் காணோம்.
எங்கள் வயல்வெளி வரைந்த
ஓவியம் காணோம்.
நதிகள் சொன்ன கதைகள் இல்லை!
காற்றில் தூவிய உணர்வுகள் இல்லை!
எங்கள் தருக்கள் தந்த கருக்கள் காணோம்.
பறிபோனது எங்கள் இயற்கையம், நாடும்
எழுதத் தூண்டும் இயற்கை இன்றி
இயங்கத் தூண்டும் இயக்கம் இன்றி
கவிதை செய்வது கடினம்! கடினம்!
பஞ்சபூதங்களின்
பௌதீக வடிவம் நாம்.
பரிணாமத்தின்
உயிரியல் கவிதை நாம்.
நாம் நீராலானவர்கள்
நம் நீரை உயிர்ப்போம்.
நாம் நிலத்தாலானவர்கள்
நம் நிலத்தை விதைப்போம்.
நாம் நெருப்பாலானவர்கள்
நம் தீயை வளர்ப்போம்!
உயிர் அத்தனையும் உசுப்பி விடும்
காற்றின் உணர்வு
நம் கவிதையில் தொடங்கும்
நாம் சும்மாயிருக்க முடியாது
ஏனெனில்
நாம் காற்றால் ஆனவர்கள்!
எதுவும் சும்மாயில்லை இயற்கையில்
கரைகள் சும்மா இருந்தாலும்
அலைகள் விடுவதாயில்லை
போய் விவாதிக்க அழைக்கிறது.
பூக்கள் மூடிக்கொண்டாலும்
காற்று விடுவதாய் இல்லை
போய் பேசச்சொல்லி அவிழ்க்கிறது
நதிகள் ஒதுங்கிப் போனாலும்
வயல்கள் விடுகிறதா?
போய்வாய்க்கால் வழியே இழுக்கிறது.
தண்ணீர் நாக்கால்
உயிரொலி எழுப்பி
மலைகளின் மவுனம்
அருவிகள் கலைக்கும்.
அசைந்து கொடுக்காத
மண்ணின் பிடிவாதம் எங்கும்
மரங்கள்
தன் வேர்களை இறக்கும்.
நிலம் சும்மா இருந்தாலும்
மழை விடுகிறதா?
வீழும் துளிகளின் விமர்சனத்தால்
மேடு, பள்ளங்கள் காட்டி நிற்கும்.
புல்லின் நுனியிலும் போய் எழுதி
புதிய கவிதைகள் பனித்திருக்கும்.
சாரல் காற்றோ
மறைப்பினை விலக்கி
பதுங்கிய முகங்களை
பரிகசிக்கும்.
காரிருளின் கர்வத்தை
மின்னல் உதடுகள் எச்சரிக்கும்.
ஊரைவிட்டு ஒதுங்கி
தான்மட்டும் தனியே
பத்திரமாய் இருப்பதாய்
கற்பனையில் இருக்கும்
ஒற்றைப் பனையின் தலையில்
வந்து விழும் இடி.
அட! தண்ணீரும் தரையும்
தான் பாட்டுக்கு கிடந்தாலும்
அடியில் சும்மா இருக்குதா
இந்தப் பாறைகள்.
தாங்கொணா அழுத்தத்தில்
தான் நகர்ந்து
நீங்கொணா துயரத்தில்
நிலமெல்லாம் அதிர்வுகள்
சும்மா இருக்குதோ! எதுவும்
சுற்றிலும் பார்க்கிறேன்...
சிறகுகள் விரித்து காற்றினை முறித்து
திசைகளை வளைக்கும் பறவைகள்
கிளைகளை உரசி சிறுபொறி எழுப்பி
தீப்பழம் காய்க்கும் காடுகள்.
நீரைக்கிழிக்க நீளும் கூரிய கற்களை
கூழாங்கற்களாய்க் குலைத்துவிடும்
ஓடைகளின் முன்முயற்சி.
ஊமத்தம் இலைகளைப் பேசவைக்க
போராடும் பருவக்காற்று.
வரப்புகளைத் தாண்டிக் குதித்து
வாழத் துடிக்கும் குரவை. (மீன்)
புவியீர்ப்பு விசைக்குப் பொருத்தமாக
சிறகுகள் நீட்டி
காற்றின் மீது கால்களை ஊன்றி
கதிர்களைக் கொத்தும்
குருவியின் விடாப்பிடி
குளத்தில் விழுந்த நிலவை
இரவு முழுக்க எடுக்கப் பாய்ந்து
மேலும், கீழும்
தவித்துப் போகும் தவளைகள்.
இப்படி இயங்கியபடியே
ஒன்றுடன் ஒன்றாய்
நட்பும், முரணுமாய்
சும்மா இல்லாத சுழலின் அழகை
விலங்குகள் கூட விளங்கிக் கொண்டதாய்
இயற்கைக் காட்சிகள்
எடுத்துக் காட்டும்.
மனிதர்கள் நாம் உணர முடியாதா?
சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லும்
துறவிகளாவது சும்மா இருந்தானா?
மக்களின் மனங்களை கழிப்பறையாக்கி
முக்கியமானது மதமென்று
மூளைக்கு, மூளை முக்கி வைத்தான்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை
ஜெயேந்திரன் முதல் அய்யப்பன் வரை
சும்மா இருக்கிறானா?
அப்பாவி பக்தனுக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஆலயத்தின் தந்திரிக்கோ
விபச்சார விடுதியில் கட்டில், மெத்தை.
அடைக்கலம் தேடிப் போகும் பெண்களின்
உடல் சுகம் பற்றியே
ஒவ்வொருத்தனுக்கும் புலன் ஆய்வு.
சுற்றித் திரியும் ரவுடிகளின்
கும்பலை விடவும் பயங்கரமானது,
பற்றற்றிருப்பதாய்ச் சொல்லும்
துறவிகளின் தனிமை.
வேண்டுமானால்
எட்டிப்பாருங்கள் காஞ்சிபுரத்தை
தோண்டிப் பாருங்கள்
ஆதீனங்களின் மடத்தை.
சும்மா இருந்ததா அகிம்சை?
வெள்ளையனின் ஆயுதங்களை விடவும்
கொடூரமானது
காந்தியின் புன்னகை.
வேண்டுமானால்
உற்றுப் பாருங்கள் அம்பேத்கரின் எழுத்தை
தொட்டுப் பாருங்கள்
பகத்சிங்கின் கழுத்தை.
சும்மா இருக்குதா பார்ப்பன மதம்?
தர்ப்பை புற்கள்தானே
என்று விட்டு வைத்தோம்
அதுவோ! ஆடுகளை மட்டுமல்ல
நிலத்தையும் சேர்த்தே மேய்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றால்
பிராமண வாயு
பிராண வாயுவை பழிக்கிறது.
சுரப்பற்றுப் போன காவிரி
கரப்பற்றுப் போன மாடுகள்
கோவில் நந்திக்குப் பால் அபிசேகம்
வரப்பற்றுப் போன வயல்கள் பசியில்
உறுப்பற்றுப் போன உடல்கள்
கண்டுகொள்ள ஆளின்றி
காய்கிறது தேசம்,
கையில் பாலும் அருகம்புல்லும்
இறைப்பற்று காட்ட
தெருவுக்கு தெரு பிரதோசம்
தாளிக்க எண்ணெயில்லை
சாமிக்கு ஆயில் மசாஜ்.
நம் சுயமரியாதையில் புல் முளைக்க,
சும்மா இருக்குதா பார்ப்பனியம்?
சும்மா இருக்குதா முதலாளித்துவம்?
தக்காளியை அழுகவைத்து
தற்கொலைக்கு விலையை வைத்து
தறியின் தக்களியை நிற்க வைத்து
நெசவாளி கிட்னிகளை விற்க வைத்து
வேலைக்கு ஏங்கும் இதயத்தை
கூலிக்குப் பிழிந்தெடுக்கும்.
வயிற்றுக்குள் வளரும் கருவையும்
வாட்டும் வேலைப்பளுவால்
வழித்தெடுக்கும் மூலதனம்.
சூளைக்குள் செங்கல்லாய்
சுடுகின்ற மனசெடுத்து சொல்லுங்கள்
சும்மா இருக்குதா முதலாளித்துவம்?
சிவகாசி சிவனே என்று இருந்தாலும்
ஐ.டி.சி. சும்மா இருக்கிறானா?
இந்திய உற்பத்தியை கருக்கும் வரை
எங்கள் கந்தகவெறி அடங்காதென
பன்னாட்டு தீக்குச்சிகள்
பசியெடுத்து அலைகின்றன.
உள்ளூர் உதடுகளை
விரட்டிப்பிடித்து சுரணை பொசுக்கும்
வெளிநாட்டு சிகரெட்டுகள்.
குடிப்பவன் கோலி சோடா கேட்டாலும்
கொக்கோ கோலா சும்மா இருக்கிறானா?
இந்திய நாக்குகளை நனைக்க
அமெரிக்க மூத்திரத்திற்கே அதிகாரம்.
இந்தியன் தாகத்தைக் குடிக்க
பெப்சிகாரனுக்கே பிரம்மதேயம்.
தறிகெட்ட
அனல்வாதம், புனல்வாதத்தால்
சமணர்களையும், பவுத்தர்களையும்
போட்டுத்தள்ளியது பார்ப்பனியம்.
தாராளமயத்தின் புனல்வாதத்தால்
சகலரையும் போட்டுத் தள்ளுகிறது
உலகமயம்.
சிலிண்டரில் மூச்சுவிட்டு
வெடிக்கும் பாட்டிலில் உதடு கிழிந்து
இரத்தத்தில் எசன்சு கலக்கும்
உழைப்பின் தீவிரத்தை
உங்களால் உணரமுடியுமா?
மிதிவண்டியின் இருக்கை தவிர்த்து
மிச்ச இடமெல்லாம்
திரவ உணர்ச்சிகளால்
கனக்கும் பாட்டில்கள்.
வீசும் எதிர்காற்றில்
விலா எலும்பும் வளையும்,
போக்ஸ் கம்பிகளாவது தப்பிக்கும்
போராடும் கால்களில்
வேரோடு பிடுங்கி வருவதுபோல்
பின் நரம்புகள் வளைந்து நெளியும்
அழுத்தம் தாங்காமல்
அடிவயிற்றிலிருந்து தப்பிக்கும் காற்று
வாயில் அலறும்.
மிதிக்கும் உள்ளூர் சோடா கம்பெனி தொழிலாளியே
கொதிக்கும் உன் குருதி தொட்டுச் சொல்
சும்மா இருக்கிறானா கொக்கோ கோலா?
கடன்காரர்களுக்குப் பயந்து
வழியை மாற்றி நடந்தாலும்
சும்மா இருக்கிறாரா அப்துல்கலாம்?
நிலைமை புரியாமல் வழியை மறித்து
கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! என்கிறார்.
பாராளுமன்ற சுள்ளான்கள்
படுத்தும் பாட்டில்
படுத்து தூங்கவே வழியில்லை
கனவுகள் எங்கே காண்பது?
பகலையும் வாங்கலாம்
இரவையும் வாங்கலாம்
வேண்டிய கனவுகளை
விழிகளுக்கு வெளியே காணலாம்.
குஜராத் பிணங்களை கண்களில் புதைக்கலாம்
மண்டை ஓடுகள் கண்டு களிக்கலாம்
அதுக்கெல்லாம் கலாம்.
இரண்டு விழிகளில் இரண்டு கனவு
வர்க்கத்திற்கேற்ப வந்திடும் இரவு.
பிட்சா கார்னரில் நக்கி
மம்மி டாடியில் கக்கி
நைக்கியில் நடந்து கணினியில் விளையாடி
கடைசிவரை
இந்த மண்ணில் கால்படாமலேயே
சாண்ட்ரோவில் ஐ.ஐ.டி நுழைந்து
அப்படியே அமெரிக்க சத்யத்தில் கலந்து
ஏ.சி.யில் உறையும்
காம்ப்ளான் பேபியின் கனவுகள்.
இன்னொன்று:
நீராகõரத்தில் முகம் பார்த்து
நெடுந்தூரப் பள்ளிக்காக
தார்ச்சாலையில் கால் தோல் உரியும்.
வேகவேகமாய்
விறகொடித்துப் பழகிய கைகள்
நிறுத்தி பொறுமையாய்
ஆனா, ஆவன்னா லேசில்
வளைக்க வராமல் அடிவாங்கும்.
வழுக்கும் சிலேட்டை மாற்ற வழியின்றி அது
கறுக்கும் கையாந்தரையாலும், கரித்தூளாலும்.
நடக்கும் களைப்பில் படிக்க விடாமல்
விழிகளை தூக்கம் அரிக்கும்.
குடிக்கலாம் இரத்தமென நம்பி வந்த மூட்டைப்பூச்சி
பையனிடம் கிடைக்காமல் பாயில் கிடந்து துடிக்கும்.
பள்ளிக்குப் போகும் பைபாஸ் சாலையில்
பேருந்து சக்கரத்தில் மாட்டி
பிய்ந்து போன நண்பன்
கழண்டு விழும் காக்கிக் கால்சராயுடன் வந்து
கனவில் வீட்டுப் பாட நோட்டுக் கேட்க
பீதியில் உறைந்து அலறும்
பால்வாடிக் கனவுகள்.
எங்களால் தூங்க முடியவில்லை
கனவிலும் துரத்தும் பிணங்கள்!
எங்களால் விழிக்க முடியவில்லை
நினைவுகள் அறுக்கும் ரணங்கள்!
நாம் ஒதுங்கிப் போனாலும்
நாடு விடுவதாயில்லை
வர்க்கத்தை குறிவைத்து மறுகாலனியாதிக்கம்
வாழ்வை வழி மறிக்கையிலே
வெட்கத்தை விட்டு நாம் விலகி நடக்கலாமா?
இருக்கிறார்கள் சிலர்
சமூகத்தில் இருந்துகொண்டே
இதில் சம்மந்தம் இல்லை என்று.
இவர்கள் தன் வீடு எரிந்தால்
தன்னை மட்டும் அழைக்காமல்
தஞ்சாவூரையே அழைப்பார்கள்.
சாலையில் நகம் பெயர்ந்தால்
தன்னைத் திட்டாமல்
திருச்சியையே திட்டுவார்கள்.
உரைப்பவர்களும் உண்டு!
ஊருக்குப் பிரச்சினை என்றால்
உனக்கேன் வியர்த்து வடிகிறது?
உரைப்பவர்களும் உண்டு.
உண்மைதான்
பிணங்களுக்கு வேர்ப்பதில்லை.
பொதுநலத்திற்காக வாழ்ந்தவர் பிணத்திலும்
புழுக்கள் உணர்ச்சி தேடும்.
சுயநலத்தில் வாழ்ந்தவன் முகத்தை
மலத்தில் மொய்க்கும் ஈக்களும்
வெறுத்து ஓடும்.
சுயநலமா? பொது நலமா?
எந்த முகம்? உங்கள் சொந்த முகம்?
தெரிவு செய்யும் காலமிது!
சொந்த முகம் காண்பதற்கு
உதவி செய்யும் கவிதை இது.
எல்லாத் திசையிலும்
இனப்பெருக்க பாடல்கள்
வழிநெடுக வன்புணர்ச்சிக் கவிஞர்கள்.
படிக்காசுப் புலவர்களை
வழிநடத்தும் காலச்சுவடுகள்.
சீட்டுக்கவிகளுக்கு ரூட்டுக் கொடுக்கும்
உயிர்மைகள்,
குலைக்கும் நாய்களும்
குலை நடுங்கி ஓடும் இப்படி எழுதிப்
பிழைக்கும் நாய்களை
எதிரில் பார்த்தால்.
உணர்ச்சிகளை சுரண்டுவதைவிட
மோசமான சுரண்டல் உண்டா?
இலக்கியத்திலும் இந்த
இழிவான சுரண்டலை எதிர்ப்போம்.
கவிஞர்கள் என்பதால் மட்டுமல்ல
உழைக்கும் மக்களின் உறவுகள் என்பதால்
உங்களுடன் பேச வந்தோம்.
ஏட்டிலடங்காத கருத்துக்கள் நாங்கள்
எழுத்திலடங்காத உணர்ச்சிகள் நாங்கள்
வீட்டுக்கடங்காத சுயநலம் நாங்கள்
சும்மா இருப்போமா?
அம்மாவின் வயிற்றிலும்
சும்மா இல்லாதவர்கள் நாங்கள்,
இரத்தக்கனவினில் மெல்ல வளர்ந்து
இருட்டின் இமைகளை
எட்டி உதைத்து
வெளிச்சம் பார்க்க வெளியே வந்தவர்கள் நாங்கள்
நாடே இருட்டிக் கிடக்கையிலே
நாங்கள் சும்மா இருப்போமா?
பாட வாருங்கள் கவிஞர்களே!
பகலைப் பொழியும் கவிதைகளே
புல்லறுத்துப் பள்ளிக்குப் போய் பின்
நெல்லறுத்துக் கல்லூரிக்குப் போய்
விடுமுறையில்
கல்லறுத்து, மரமறுத்து கல்விப்
பசியறுக்கப் போராடி எங்கள்
பிறப்பறுத்து பின்தள்ளிய சமூகமே
இடம் ஒதுக்கு உயிர் கல்விக்கு
எனக் கேட்டால்?
செருப்புத் தைக்கும் கைகளுக்கு
படிப்பு ஒரு கேடா? என "சூ' துடைத்துக் காட்டி
சொல்லறுக்கும் பார்ப்பனக் கொழுப்பை
கருவறுத்து வீசாமல்
சும்மாயிருக்க முடியுமா?
உங்கள் செருப்பைத் தைத்ததனால்
பிறப்பொதுக்கி வெளியில் வைத்தீர்.
உங்கள் மயிரைச் சிரைத்ததனால்
நாங்கள் மட்டமான சாதியானோம்.
உங்கள் துணிகளை வெளுத்ததனால்
நாங்கள் அழுக்குப்பட்ட வம்சமானோம்
உண்மைதான்
சாதியில் புழுத்த
உங்கள் பிணத்தைத் தொட்டதனால்
தீட்டாய் போனோம்.
எதிர்த்துக் கேட்டவனுக்கு
வாயில் திணிக்கப்பட்டது மலம்
எதிர்க்காதவன் உடம்பிலோ
இரத்தமெல்லாம் மலம்.
மாட்டுத் தோலை உரிப்பவர்
சக்கிலி
மனிதத் தோலை உரிப்பவன்
சங்கராச்சாரியா?
சாதிவெறியன் சங்கமாய் இருக்கையில்
நீதி கேட்பவன் நீ மட்டும் அமைப்பின்றி
சும்மா இருக்க முடியுமா?
சிறீராமன் பெயரால்
எல்லாமும் நடக்கிறது.
இராமன் பிறந்த இடத்துக்காக
இசுலாமியப் பெண்களின்
பிறப்புறுப்புகள் வரை சொந்தம் கொண்டாடின
திரிசூலங்கள்.
அவர்கள் பெண்கள் என்பதற்காக அல்ல
இசுலாமியர்கள் என்பதற்காக
கற்பழிக்கப்பட்டார்கள்.
குழந்தைகளின் சிரிப்பை
உங்களால் கொளுத்த முடியுமா?
மழலைகள் உதடுகளையும்
கிழித்துப்போட்டன இராமஜெயங்கள்.
கருவுக்குள்ளும்
கட்டாரி வீசும் பார்ப்பன மதவெறி
தெருவுக்கு வந்து போராடாமல்
சும்மா இருக்க முடியுமா?
மதம் மாறி காதலித்ததற்காக
ஏழை முசுலீம் பெண்ணை
இழுத்துவைத்து மொட்டையடிக்கும்
முசுலீம் மதவெறி.
எரிக்கிறது பாலஸ்தீனத்தையும், லெபனானையும்.
ஈராக்கியப் பெண்களை இழுத்துவைத்து
சதைவெறியில் கிழிக்கிறது அமெரிக்கா!
அவனுக்கு மதம் மாறி எண்ணெய் விற்று தன்னை விற்று
செழிக்கிறது சேக்குகளின் மணிமுடி.
இனத்துரோக சேக்குகளின்
மயிரைப் புடுங்க மாட்டாமல்
பள்ளிவாசல் கட்ட அவனிடமே
பணம் புடுங்கும் வக்கிரங்கள்.
எல்லாமும் நடக்கிறது
அல்லாவின் திருப்பெயரால்.
ஐந்து வேளை தொழுக
பள்ளிவாசலுக்கு வா!
ஐந்து வட்டிக்கு பணம் வாங்க
பைனான்சுக்கு வா!
ஆயிரமாயிரமாய் சூதாட
பங்குச் சந்தைக்கு வா!
எல்லாமும் நடக்கிறது
அல்லாவின் திருப்பெயரால்
ஏழை வர்க்கத்தை
மதத்தின் பெயரால் ஏறி மிதிப்பதை
எதிர்க்க வர்க்க மார்க்கம் சேராமல்
ஒரு "மார்க்கமாய்' ஒதுங்க முடியுமா?
பல வழிகளிலும் பணம் வருவதால்
பளிங்கு மண்டபத்திலிருக்கும்
அவளுக்கென்ன?
எப்போதும் ஆரோக்ய மாதாதான்.
பருக்கைக்கு வழியின்றி
வாசலில் பிச்சையெடுக்கும்
இவர்கள்தான்
குட்டங்குளி மாதா
டி.பி. மாதா
ஏசுவின் அப்பத்தைத் தவிர
அவர்களுக்கு
எதிலும் பங்கில்லை.
எதிர்த்துக் கேட்டால்
பாவத்தின் சம்பளம்
கட்டாயம் உண்டு.
சிலுவை செய்த செலவையும்
பங்குத் தந்தைகள்
ஏசுவின் கணக்கிலேயே எழுதி விடுவதால்
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஏசு
மூர்ச்சையாகிப் போனார்.
பாருங்கள்! ஆலயத்தில் அவர் கிடக்கும் பாவனையை.
பரிசுத்த ஆவிகளும்
அணி, அணியாய் சேருகையில்
பார்த்துக் கொண்டு தனியுடம்பாய்
நாம் மட்டும் சும்மா இருக்க முடியுமா?
இரண்டாயிரத்தில் ஏசு வரப்போகிறார்
இது கிறிஸ்தவப் பிரச்சாரம்
இரண்டாயிரத்து இருபதில்
இந்தியா வல்லரசாகப் போகிறது
இது கிருத்துருவப் பிரச்சாரம்.
நல்லரிசி கொடுக்கவே வக்கில்லை
இந்தியா வல்லரசாகப் போகுதாம்
சில ஊரில் ரேசன் அரிசியில் வடித்த சோற்றை
நாய்களும் தின்ன மறுக்குது
அதைக் கழனிப் பானையில் போட்டால்
மாடும் மனிதனை வெறுக்குது
எடுத்துக் குப்பையில் போட்டால்
குடும்பத்தையே கோழி முறைக்குது
கோழிகளே கோபித்துக் கொள்ளாதீர்கள்
2020இல் இந்தியா வல்லரசாகிவிடும்.
கிட்டிவைத்து எலிகளைப் பிடிக்கிறான்
கீழத்தஞ்சை விவசாயி
வயல்களைக் காக்க அல்ல
வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள
எலிகளே எங்கள் அரசியலை நோண்டாமல்
இரைப்பையில் காத்திருங்கள்
இந்தியா வல்லரசாகப் போகிறது!
விளைவித்த வெங்காயம்
விலைபோகாமல்
அழுகிப் போகும் அவலம் தாங்காமல்
நிலைகுலைந்து சாகும் சிறுவிவசாயி
அழுகும் பிணங்களே மிச்சமிருங்கள்
2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது!
கம்பி வளைக்க நகரத்துக்கு வந்து
கட்டிட, உச்சியிலிருந்து கீழே விழுந்து
சாக்குமூட்டையில் ஒரு பிணம்.
சாவதற்கு முன் ஏதோ சொல்ல வந்ததாய்
எஞ்சியிருக்கும் அதன் விழிகளில் மட்டும்
ஏதோ ஜாடை தெரியுது
குறிப்பறிந்தவர்களே கொஞ்சம் இருங்கள்!
இந்தியா வல்லரசாகப் போகுது!
பார்க்க முடியாத கொடுமைகளால்
ஏசுவே எட்டி ஓடினாலும்
பாவிகளை இரட்சிக்க
ப.சிதம்பரம் இருக்கிறார்.
நல்லவர்களே உங்களுக்கு
நக்சல்பாரிகளை விட்டால்
வேறு வழியில்லை.
பயங்கரம் எது?
பாட்டி சொன்ன கதைகளில் வரும்
பேய்களின் அலறல்களா?
இல்லை
நாட்டில் நடக்கும் கொடுமைகள் கண்டும்
சும்மா இருப்பவர்களின் மௌனங்களே!
ஆபத்து எது?
அம்மா சொன்ன கதைகளில்
நம் சோற்றைப் புடுங்க வரும்
அஞ்சு கண்ணர்களா?
இல்லை
நம் நாட்டையே புடுங்க வரும்
தனியார்மயம் தாராளமயம் உலகமயம்
எனும்
பன்னாட்டுக் கம்பெனிகளின்
மூன்று கண்ணர்களே!
பார்த்துக் கொண்டு
சும்மாயிருக்க முடியுமா?
மீன்வலையைக் காயப்போட்டால்
கடற்கரைகள் நாறுதாம்
மீனவர்களை விரட்டிவிட்டு
தனது ஆணுறைகளை
அவிழ்த்துப் போடுது தாஜ் ஓட்டல்.
நமது இறையாண்மையின் முகத்தில்
வீசப்படும் ஆணுறைகளை
எதிர்த்துப் போராடாமல்
நாம் கடலின் முகத்தில் முழிக்க முடியுமா?
பல்லுயிர்க்கெல்லாம் தாய்போல
பரிந்து ஓடும் எங்கள் தõமிரவருணி.
பக்கத்தில் தாகம் கொண்டு அலையும்
கங்கைகொண்டான் கழனி.
ஊர்போய்ச் சேர
கரையேரத் துடித்து
தவிக்குது ஆறு
நம் தாய்முகம் தழுவிய ஆறு இது
அதைத் தட்டிப் பறிக்கும் அநியாயம் பாரு!
கூசாமல் குழாயில் உறிஞ்சி
காசுக்கு விற்கும் கொக்கோ கோலா
நம் தாயின் மார்பை உறிஞ்சுபவனை
உதைத்து விரட்ட பதைத்து வராமல்
சும்மாயிருக்க முடியுமா?
எங்களுக்கு கொக்கோ கோலா வேண்டாம்
ஆற்றைக் கொடு!
எங்களுக்கு வலைகள் வேண்டாம்
கடலைக் கொடு!
எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம்
விவசாயத்தை கொடு!
எங்களுக்கு விபூதி வேண்டாம்
கருவறை கொடு!
எங்களுக்கு தரிசனம் வேண்டாம்
தில்லைக் "கோயில்' கொடு!
சொர்க்க வாசல் வேண்டாம்
சிறீரங்கம் கொடு!
எங்களுக்கு சலுகைகள் வேண்டாம்
அதிகாரம் கொடு!
சும்மாயிருக்க மாட்டோம் நாம்!
சுவாசம் நமக்கு உயிர்ப்பழக்கம்
அதுபோல் சும்மாயின்றி
இயக்கம் இருந்தாலே
யார்க்கும் உயிர் இருக்கும்
கலைஞன், விவசாயி, தொழிலாளி
மாணவன், நெசவாளி, அறிவாளி
அனைவர்க்கும் பொது எதிரி
நாடு நமதல்ல எனப்
பழிக்கும் பன்னாட்டுக் கம்பெனி
போராடும் உழைக்கும் மக்கள்
ஏற்கெனவே வீதியிலே
அவர்கள் தோளோடு தோள் நிற்க
முன்செல்வோம் கவிதைகளே!
எத்தனை பேர் நம்மை நம்பி
ஒப்படைத்த கனவு இது
எத்தனை பேர் நம்மை நம்பி
கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது.
கண்கள் உறங்கலாம்
இரத்தம் உறங்குமோ!
அளவுக்கதிகமாகவே சிந்திய இரத்தம்
இனி புரட்சிக்கும் குறைவாக
வேறெதை விரும்பும்?
முன்னோர்கள் கனவுகள்
நம் எல்லோர் கவிதையிலும்
முன்னோர்கள் துடிப்புகள்
நம் எல்லோர் இதயத்திலும்
கவிதை
எழுதிக் காட்டுவது மட்டுமல்ல
இயங்கிக் காட்டுவோம்.
(25.7.2006 - 26.7.2006 நாட்களில் தஞ்சாவூர் - திருச்சியில்
துரை சண்முகம்