Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட களவாடும் உலகமயம்

கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட களவாடும் உலகமயம்

  • PDF

 இவை எதைத்தான் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கட்டியிருக்கும் கோவணத்துக் கூட ஆபத்து என்பதைத் தான். உலக மக்களை ஒன்று அல்லது இரண்டு டாலரை நாள் வருமானமாக பெறும் நிலையைக் கூட இல்லாதாக்கி, அவர்களை அடிமைப்படுத்தி அடக்கியாளும் கொள்கையையே உலகமயமாதல் தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் உலக மக்கள் தொகையில் அரைவாசி மக்களை, இந்த அடிமை நிலைக்குத் தரம் தாழ்த்தியதுடன், கையேந்தும் நிலையை உலகமயமாதல் உருவாக்கி விட்டது. மேலும் மக்களை அடிமைப்படுத்தி, மக்களை பண்ணையில் வளர்க்கப்படும் மிருகங்களாக மாற்றுவதை நோக்கி, உலகமயமாதல் தேசிய வளங்களையும் சூறையாடுவது இன்றைய ஜனநாயகமாகி இதுவே சுதந்திரமாகிவிட்டது.


 இந்த சுதந்திரத்தின் வக்கிரத்தைத் துல்லியமாகப் பார்த்தால், மனித இனத்தின் அலங்கோலம் சந்திக்கு வந்து விடுகின்றது. 2002இல் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (எஈக) எடுத்தால், 32,31,214 கோடி (32.31 டிரில்லியன்) டாலர் பெறுமதியான உற்பத்தியை உலகம் செய்தது. ஆனால் உலகில் உள்ள 619.86 கோடி மக்களிடையே இது பகிரப்பட்ட விதம் என்ன என்று பார்த்தால், ஜனநாயகம் உருவாக்கும் சுதந்திரமான சமூக அவலத்தை புரிந்து கொள்ளமுடியும். உலகில் 84.41 சதவீதம் மக்கள் அதாவது 523.25 கோடி மக்களுக்கு இதில் கிடைத்தது. 6,25,915 கோடி (6.26 டிரில்லியன்) டாலர் மட்டுமே. அதாவது உலக உற்பத்தியில் 16 சதவீதமே கிடைத்துள்ளது. இதை மேலும் துல்லியமாக ஆராய்ந்தால் அடிமட்டத்தில் உள்ள 249.4 கோடி மக்களுக்கு கிடைத்தது 1,12,386 கோடி (1.1 டிரில்லியன்) டாலர் மட்டுமே. அதாவது உலகில் உள்ள 40.29 சதவீதமான மக்களுக்கு கிடைத்தது 3.48 சதவீதம் மட்டுமே. அதேநேரம் உலகில் 15.59 சதவீதமான உயர் வர்க்கங்கள், அதாவது 96.6 கோடி பேருக்கு கிடைத்தது 26,05,281 கோடி (26.05 டிரில்லியன்) டாலராகும். உலக உற்பத்தியில் 84.41 சதவீதத்தை இவர்கள் நுகர்ந்தனர். உண்மையில் இதுவே உலக ஜனநாயகத்தின் அடிப்படையான சமூகப் பிளவின் உள்ளடக்கமாகும். இந்த பிளவு மேலும் உள்நோக்கி அகலமாகிச் செல்லுகின்றது. இதுவே உலகமயமாதலின் சுதந்திரம். இதுவே உலக சமூக அமைப்பின் ஜனநாயகமாகவும் இருக்கின்றது. 


 ஒருபுறம் மூலதனங்கள் கொழுக்க, தேச எல்லைகளைக் கடந்து எடுத்துச் செல்வது அதிகரிக்கின்றது. இதன் மூலம் மக்கள் உழைப்பு ஆதாரங்களை இழப்பது உலகமயமாதலின் நிகழ்ச்சி நிரலாகி விட்டது. மனித வாழ்க்கை பந்தாடப்படுவது ஜனநாயகமாகி தலைவிரித்தாடுகின்றது. உலகம் சொத்துக் குவிப்பவர்களின் சொகுசு வாழ்வாகின்றது. அதுவே நவீனமாகி விட, சேவைத்துறை அப்பட்டமாகவே பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்யும் ஒரு துறையாகிவிட்டது. பணக்காரக் கும்பலுக்கு மக்கள் சேவை செய்வதே, உலகமயமாதலின் அடிப்படையான சமூக விதியாகின்றது. இன்று மற்றவனுக்குச் சேவை செய்வதே, பணம் கறக்கும் வர்த்தகத் துறையாகி விடுகின்றது. மிகப் பெரிய உற்பத்தி மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த முதல் 100 பன்னாட்டு நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1990இல் 3,10,000 கோடி (3.1 டிரில்லியன்) டாலராக இருந்தது. இது 1995இல் 3,70,000 கோடி (3.7 டிரில்லியன்) டாலராகியது. இதில் 1,30,000 கோடி (1.3 டிரில்லியன்) டாலர், சொந்த நாட்டுக்கு வெளியில் இருந்து சூறையாடப்பட்டது. தேச எல்லைகளைக் கடந்த சுரண்டல், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் கையாளப்படுகின்றது. இதன் முழுமை பிரமாண்டமான சமூக விரோதத் தன்மை கொண்டது.


 இப்படி செயல்படும் உலகின் முன்னணி 2000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 2003இல் 19,00,000 கோடி (19 டிரில்லியன்) டாலராக இருக்கின்றது. உலகளாவிய மொத்த உற்பத்தியில் இவர்களின் பங்கு 58.80 சதவீதமாக இருந்தது. மிகுதியே உலகில் மற்றவர்களின் கையில் இருந்தன. 1991இல் 40,000க்கு மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் இருந்தன. உண்மையில் உலகளவில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மிகப் பெரியளவில் பன்னாட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்தியுள்ளதையே இது எடுத்துக் காட்டுகின்றது.


 உண்மையில் இந்தச் சூறையாடலை, இவைகளை தேசிய வருமானமாகவே காட்டப்படுகின்றது. இதன் மூலம் தேசிய நலன் பற்றி பீற்றி மக்களை ஏமாற்றுகின்றனர். உண்மையில் இவை ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்சியாக உள்ளது. 1998இல் தேசிய வருமானங்களை எடுத்தால் அமெரிக்கா 8,51,100 கோடி டாலரை பெற்றது. ஜப்பான் 3,78,300 கோடி டாலரையும். ஐரோப்பா 8,60,800 கோடி டாலரையும் பெற்றது. 1999இல் அமெரிக்கா 9,29,900 கோடி டாலரையும், ஜப்பான் 4,35,800 கோடி டாலரையும், ஐரோப்பா 8,90,700 கோடி டாலரையும் பெற்றது. ஒரே வருடத்தில் தேசிய வருமான அதிகரிப்பு முறையே 78,800, 57,500, 29,900 கோடி டாலராக இருந்தது. இது உலகில் மற்றைய எந்தப் பிரதேசத்திலும் நிகழ்வதில்லை. உண்மையில் உலகளவில் வருமானம் எப்படி 2002இல் பகிரப்பட்டது என்பதைப் பார்ப்போம். 


1 மக்கள்  தொகை கோடியில் 

2 உலகச்சனத் தொகையில் சதவீதத்தில்

 3.வருமானம் கோடி  டாலரில்

4.உலக வருமானத்தில்    சதவீதம்

 5.சராசரியாகப் பெறுவது டாலரில்

                                                                                                                   1                   2                      3                   4                      5
அதி குறைந்த வருமானமுடைய வறிய மக்கள்       249.46        40.24             1,12,386       3.47                  451
குறைந்த வருமானமுடைய வறிய மக்கள்                   240.84         38.85             3,42,631      10.6               1,423
குறைந்த வருமானமுடைய மேல்மட்ட பிரிவு              32.94           5.31             1,70,882       5.28               5,188
உயர் வருமானம் உடையோர்                                                  96.61        15.58            26,05,281    80.62             26,967
மொத்தம்                                                                                           619.86       100                32,31,214      100                 5,213


 சமூகப் பிளவுகள் சமூகக் கட்டமைப்பில் உள்ள அதேநேரத்தில், ஒவ்வொரு சமூகப் பிரிவிலும் ஆழமான உள் பிளவுகள் உண்டு. பணக்காரப் பிரிவை எடுத்தால் உலகில் முதல் 497 பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து 2002இல் 1,60,000 கோடி டாலராகும். அதாவது பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த 100 கோடி டாலருக்கும் அதிக சொத்துடைய 497 பேரின் மொத்தச் சொத்து, உயர் வருமானத்தைப் பெறும் 96.61 கோடிப் பேரின் மொத்த வருமானத்தில் 16இல் ஒரு பங்கை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இப்படி, சமூகப் பிளவுகள் ஆழமானவை, அகலமானவை.


 வருமானத்தினால் ஏற்படும் சமூகப் பிளவுகள் தொடர்ந்தும் தேசங் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் வீக்கத்துடன் மேலும் ஆழமாகி, அகலமாகின்றது. மூலதனங்கள் வீங்கிக் கொழுப்பது என்பது, உலகமயமாதலின் அடிப்படையான ஒரு விதி. இந்தக் கொழுப்பு பெரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றது. 2002யை எடுத்தால் அமெரிக்காவின் முதல் 500 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 6,70,000 கோடி (6.7 டிரில்லியன்) டாலராகும். இது 2001டன் ஒப்பிடும் போது ஐந்து சதவீதத்தால் குறைந்து இருந்தது. இந்தக் குறைவு ஏகாதிபத்திய முரண்பாடுகளால் இடமாற்றப்பட்டது. ஆனால் இந்நிறுவனங்களின் மொத்த நிகர லாபம் 43,100 கோடி (431 பில்லியன்) டாலராக இருந்தது. இது உலகத் தொழிலாளி வர்க்கத்திடம் நேரடியாகக் கொள்ளை அடித்தவை. நிகர லாபம் 2001உடன் ஒப்பிடும் போது 13.4 சதவீதத்தால் அதிகரித்து இருந்தது. வர்த்தகம் 2001உடன் ஒப்பிடும் போது குறைந்து காணப்பட்டது. ஆனால் 2001உடன் ஒப்பிடும் போது 5,775 கோடியாக நிகரலாபம் அதிகரித்தது என்றால், தொழிலாளி வர்க்கத்தின் வறுமையில் பெரும் செல்வந்தர்கள் செழித்ததைக் காட்டுகின்றது.


 வேலை நீக்கத்தையும், கூலிக் குறைப்பையும், விலை அதிகரிப்பையும் அடிப்படையாகக் கொண்டே நிகர லாபத்தைப் பெற்றுக் கொண்டனர். இந்த அமெரிக்க நிறுவனங்களின் நிலையான சொத்தின் மதிப்பு 20,50,000 கோடி (20.5 டிரில்லியன்) டாலராக இருந்தது. இது 2001உடன் ஒப்படும் போது 5.4 சதவீதத்தால் அதிகரித்தது. அதாவது உலகை சூறையாடி தேச வளங்களை அமெரிக்கா கைப்பற்றியதன் முலம், முதல் 500 தேசங் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் நிலையான சொத்து 1,10,700 கோடி டாலரால் வீங்கியது. இந்த பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தோர் எண்ணிக்கை 2.52 கோடி பேராவர். இது 2001உடன் ஒப்பிடும் போது 2.3 சதவீதம் குறைவானதாகும். அதாவது 5.79 லட்சம் பேரை வேலையை விட்டு மூலதனம் துரத்தி இருந்தது. உலகமயமாதலில் நவீன தொழில் நுட்பம் ஆட்களை நீக்கும் அதே நேரம், லாபத்தை அதிகரிக்க வைக்கின்றது. நிலையான சொத்தையும் பெருக்குகின்றது. இந்தளவுக்கும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சர்வதேச வர்த்தக நெருக்கடிகள் இருந்த இக்காலத்திலேயே, இவையும் நடந்துள்ளன.


 மற்றைய ஏகாதிபத்தியங்களுடன் ஒப்பிட்டு இதை ஆராயும் போது, 2002இல் உலகின் அமெரிக்கா அல்லாத மற்றைய தேசங்கடந்த பன்னாட்டு முன்னணி முதல் 500 நிறுவனங்கள் நடத்திய வர்த்தகம் 9,10,000 (9.1 டிரில்லியன்) கோடி டாலராகும். இது 2001யுடன் ஒப்பிடும் போது 3 சதவீதத்தால் அதிகரித்தது. அதாவது 27,300 கோடி டாலராக அதிகரித்தது. இக்காலத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய 500 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய வர்த்தகம் 6,70,000 கோடி (6.7 டிரில்லியன்) டாலராகும். 2001இல் அமெரிக்கா அல்லாத பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் 8,80,000 கோடி (8.8 டிரில்லியன்) டாலராக இருந்தது. இது 2000உடன் ஒப்பிடும் போது 4 சதவீதத்தால் குறைந்தது. அமெரிக்காவின் முன்னணி 500 தேசங் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் 2001இல் 7,10,000 கோடி (7.1 டிரில்லியன்) டாலராகும். அமெரிக்காவுக்கு அதிகரிப்பை 2000உடன் ஒப்பிடும் போது கொடுத்தது. 2000ஆம் ஆண்டில் அமெரிக்கா அல்லாத 500 மிகப் பெரிய தேசங் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 9,20,000 கோடி (9.2 டிரில்லியன்) டாலராகும். அமெரிக்காவின் முதல் 500 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் 7,00,000 கோடி (7.0 டிரில்லியன்) டாலராகும்.


 1.2000இல் கோடி டாலரில் மொத்த வர்த்தகம் 

 2.2000-2001 கோடி டாலரில் இழப்பு அல்லது அதிகரிப்பு

 3.2001 கோடி டாலரில் மொத்த வர்த்தகம் 

 4 .2001-2002 கோடி டாலரில் இழப்பு அல்லது அதிகரிப்பு

 5.2002 கோடி டாலரில் மொத்த வர்த்தகம் 
                                                                                                                                          1                  2                     3                     4                     5
முன்னணி 500  அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகம்                7,00,000      + 10,000      7,10,000          - 40,000           6,70,000
அமெரிக்கா அல்லாதமுன்னணி 500பன்னாட்டு நிறுவனங்களின்வர்த்தகம்  9,20,000      - 40,000       8,80,000          + 30,000          9,10,000


 அமெரிக்கா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தனித்தனியான முன்னணி 500 தேசங்கடந்த பன்னாட்டு  நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 2000இல் 16,20,000 கோடி (16.2 டிரில்லியன்) டாலராகும். இது 2001இல் 15,90,000 கோடி (15.9 டிரில்லியன்) டாலராகவும், 2002இல் 15,80,000 கோடி (15.8 டிரில்லியன்) டாலராகவும் இருந்தது. 2002 நூற்றாண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தை நெருக்கடிகள், பொருட்களை வாங்கும் திறனில் ஏற்பட்ட இழப்பு சர்வதேச மொத்த வர்த்தகத்தில் நெருக்கடியை உருவாக்கியது. 20002001இல் இழப்பு 30,000 கோடி டாலர். இது போன்று 20012002 இழப்பு 10,000 கோடி டாலர். இந்த நெருக்கடியான காலத்தில், மொத்த வர்த்தகத்தில் இழப்புகளை சந்தித்த போதும், தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வீதங்கள் அதிகரித்ததுடன், நிலையான சொத்துக்களின் பெறுமதியும் அதிகரித்தது என்ற உண்மை எதை நமக்கு உணர்த்தி நிற்கின்றது. அடிப்படையில் பலர் வேலையை இழந்ததன் மூலமும் கூலி குறைப்புக்குள்ளானதை பறைசாற்றி நிற்கின்றது. இக்காலத்தில் தான் தனிப்பட்ட செல்வந்தர்களின் சொத்துக்கள் பெருகி வீங்கியதை நாம் மேலே விரிவாக பார்த்தோம். உலகளவில் நிலையான சொத்துக்களை மக்கள் இழந்ததை எடுத்துக் காட்டுகின்றது. இது சர்வதேச வர்த்தகத்தில் வாங்கும் திறனை நேரடியாக வீழ்ச்சியுறவைத்தது. அதேநேரம் நிலையான சொத்துக்களின் பெறுமானம் அதிகரித்தது. வாங்கும் திறனை மக்கள் இழக்கும் போது, மக்கள் தமது அடிப்படையான வாழ்வியல் சொத்துக்களை விற்று வாழ நிர்பந்திக்கப்பட்டதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துக்கள் வீங்கியது. மூலதனத்தின் கொழுப்பை ஏற்படுத்தும் வகையில் மக்களின் சேமிப்புகள் மீதான வட்டி வீதங்களை உலகளவில் குறைத்தனர். இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு திடீரெனத் திட்டமிட்ட அதிர்ஷ்ட தேவதையாக வானில் இருந்தே செல்வம் கீழ் இறங்கி மக்களுக்கு எதிராக சதிராட்டம் போட உதவியது.


 ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் சர்வதேச சந்தையில் ஏற்படும் வர்த்தக முரண்பாடுகள், வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியது. இதை ஈடுகட்ட மக்களைச் சூறையாடுவதன் மூலமே, ஏகாதிபத்திய முரண்பாடுகளைத் தற்காலிகமாக மூடி மறைக்க முடிகின்றது. ஆனால் உலகைச் சூறையாடிக் கொள்ளையடிக்கும் போது, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்படுவதையும், அவை அங்கும் இங்குமாக பந்தாடப் படுவதையும் மூடிமறைக்க முடிவதில்லை. 2002இல் உலகத்தில் மிகப் பெரிய உள்நாட்டு வீட்டு உற்பத்தியில் (எஈக) அமெரிக்காவின் பங்கு 10,38,310 கோடி (10.38 டிரில்லியன்) டாலராக இருந்தது. இது உலக உற்பத்தியில் 31.13 சதவீதமாக இருந்தது. அமெரிக்கா, உலக உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஒரு ஏகாதிபத்தியமாக இருப்பதையும், அதை தக்கவைக்க போராடுவதையும் தொடர்ச்சியான உலக நெருக்கடிகள் காட்டுகின்றன. அமெரிக்க மேலாதிக்கத்தின் மறுபெயர் தான் உலகமயமாதல் என அமெரிக்காவின் முன்னாள் அரசு செயலர் "கிஸ்ஸிங்கர்' கூறியது உண்மை என்பதையே, இது பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றது. இராணுவ ரீதியாக இதைப் பாதுகாக்கவும், உலகை மேலும் ஆழமாக ஊடுருவிக் கைப்பற்ற தொடர்ச்சியாக முனைகின்றது. இதையே அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை ஆலோசகர் ரிச்சாட் ஹால் அழகாகவே கூறிவிடுகின்றார். மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மை வரம்புக்கு உட்பட்டது. ஒரு நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவு தருவதாக, அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாக நாங்கள் கருதினால், அந்த நாடுகளில் தலையிட எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று உலகமயமாதலின் அடிப்படை நோக்கத்தை பிரகடனமே செய்து விடுகின்றார். இங்கு அமெரிக்காவின் பொருளாதார நலன்களே முதன்மையாக உள்ளது. இதுவே உலகின் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் பூத்துக் குலுங்குகின்றது. இதனடிப்படையில் 20ஆம் நூற்றாண்டு முழுக்க ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டில் அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் நேரடியாகவே அமெரிக்கா தலையிட்டது. இவைகளை நாம் பின்னால் விரிவாக மற்றொரு நூலில் ஆராய இருக்கின்றோம்.