Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்

இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்

  • PDF

பிரமிப்பூட்டும் வகையில் உதவிகள், கடன்கள் ஏகாதிபத்தியத்தால் வாரி வழங்கப் படுகின்றது. இதற்கு அக்கம்பக்கமாகவே அன்னிய முதலீடுகள் பெருமளவில் போடப்படுகின்றது. நேரடிச் சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டி என்ற இரு தளங்களில், இலங்கையின் தேசிய வளங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி சூறையாடப்படுகின்றது. கடன் கொடுக்கும் நாடுகளின் கூட்டமைப்பு 450 கோடி டொலரை (45000 கோடி ரூபாவை) அடுத்த மூன்று ஆண்டுக்கு வழங்கியுள்ளது. இது ஒருபுறம் நடக்க இதற்கு வெளியில் நாடுகள், வங்கிகள் தனித்தனியாக கடன் உதவி என்ற பெயரில் பெரும் தொகை நிதிகளை அன்றாடம் வழங்குகின்றன. இந்த நிதி ஆதாரங்கள் பலவற்றை நேரடியாக தனது சொந்த மேற்பார்வையில் செலவு செய்கின்றன. நிதி வழங்கல் பற்றியத் தரவுகளை அன்றாடம் செய்தி பத்திரிக்கையில் இருந்து தொகுத்த போது, பிரமிப்பூட்டும் எதார்த்த உண்மை தௌளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

இலங்கையை தமது சொந்த நாடுகள் போல் ஏகாதிபத்தியங்கள் கருதி ஊடுருவுவது, என்றுமில்லாத வேகத்தில் நடக்கின்றது. இந்தளவு கடன் மற்றும் உதவியை சொந்த நாட்டில் கூட இந்தளவு பரந்த தளத்தில் போட்டதில்லை. சுரண்டலின் பாதுகாப்பான உயர் தன்மையும், அடிமைத்தனத்தை நிபந்தனை இன்றி எற்றுக் கொள்ளத் தயாரான அரசியல் சூழல், இலங்கையை மறுகாலனியாதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய முரண்பாடுகளைத் தாண்டி, ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு நிதியைப் பாய்ச்சுகின்றன. இதை நிறைவு செய்ய பல கோட்பாடுகளையும், மதிப்பீடுகளையும் அது சார்ந்த நடைமுறைகளையும் கூட வெளியிடுகின்றனர்.


உண்மையில் இந்தக் கடன் பிரமிப்பை ஊட்டக்கூடியது. இலங்கை செலுத்த வேண்டிய
ஆண்டு மொத்த வெளிநாட்டுக் கடன்


1999                   65,451.4 கோடி ரூபா
2000                   72,207.9 கோடி ரூபா
2001                   79,591.8 கோடி ரூபா
2002                   84,061.9 கோடி ரூபா


1988-இல் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 11430 கோடியாகவே இருந்தது. வட்டி கடன் மீளமைப்பு ஏற்றுமதி வருமானத்தில் 28 சதவீதமாக மாறியது. 2001 இல் வட்டிக்காக மட்டும் இலங்கையில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 25 சதத்தையும் கட்டத் தொடங்கினர். இதுவே 2002 இல் 35 சதத்தையும் கட்டும் நிலைக்கு இலங்கை தேசியம் மறுகாலனியாகி வருகின்றது. உள்நாட்டுக் கடன் மற்றும் மீள் அளிக்கப்பட வேண்டிய வட்டியுமாக 27,500 கோடியாக அதிகரித்தது.


இந்த கொள்ளையைத் தொடரவும் நாட்டை அடிமைப்படுத்தவும், விரும்பும் உலகம் அறிந்த உலகக் கொள்ளைக்காரர்கள், இனயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை விரும்புகின்றனர். இதன் மூலம் சுதந்திரமாக தடைகளற்ற வகையில் கொள்ளையடிக்கும் உயர் நிலையைத் தக்கவைக்க விரும்புகின்றனர். இதனடிப்படையில் அமைதியை நோக்கிய ஒரு பாதையைச் செப்பனிடுவதில் ஏற்பட்ட மிகுந்த அக்கறைதான், இன்றைய அமைதி மற்றும் பேச்சு வார்த்தையாகும். இதைப் புலிகளோ அல்லது அரசோ உருவாக்கிவிடவில்லை. இதனால் தான் இரு பக்கமும் நீண்ட இழுபறி அக்கம் பக்கமாக தொடருகின்றது.


இந்த அமைதி மற்றும் சமாதானம் பேசும் கதாநாயகர்களின் பிரதிநிதியும் உலகவங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியுமான பீட்டர் ஹால்ட் வழங்கிய பேட்டி ஒன்றில் "இலங்கையில் வென்றவர் தோற்றவர் என்ற நிலை இல்லை. அது அபிவிருத்திப் பணிகளுக்கு சாதகமான அம்சமாகும்" என்று அவர் கூறுவதன் மூலம், புலிகளும் சிங்கள அரசும் கைகோர்த்து வரக்கோரும் அடிப்படையான ஏகாதிபத்திய நலன்களை பேணும் கருதுகோளை முன்வைக்கின்றார். இங்கு வென்றவர், தோற்றவர் யாரும் இல்லை என்ற கூற்றின் ஆழமான அரசியல் உள்ளடக்கம் என்ன? வென்றவர்கள் ஏகாதிபத்தியம் தான் என்பதையும், தோற்றவர்கள் புலிகளும் அரசும் தான் என்ற உண்மையையும் இந்தளவுக்கு நேர்த்தியாகச் சொல்லக் கூடியவர்கள் வென்றவர்கள் மட்டும்தான். இது உலகமயமாதல் பொருளாதார அபிவிருத்திக்குச் சாதகமானது என்பதையும் ஒளிவுமறைவு இன்றி சொல்லிவிடுகின்றார். உண்மையில் இலங்கையில் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று யாரும் மார்புதட்ட இவர்களுக்குள் முடியாது. உண்மையில் வென்றவர்கள் ஏகாதிபத்தியம் தான் என்ற உண்மையை நாம் நிராகரிக்க முடியாது.


இலங்கையில் ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துக்குக் கிடைத்துள்ள வரைமுறையற்ற வெற்றி, இலங்கையும் சரி அதற்குள் தனிநாடு கேட்கும் வடக்கு கிழக்கும் சரி தோற்றவர்கள் யார் என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகின்றது. அதாவது நடக்கும் அபிவிருத்தி யாருடைய நலனுக்கானது என்ற உண்மையை, இதை நெளிவு சுளிவின்றி பறை சாற்றிவிடுகின்றது. இதையே உலக வங்கி பிரதிநிதி "அபிவிருத்திப் பணிகளுக்குச் சாதகமான அம்சமாகும்" என்று பிரகடனம் செய்கின்றார். புலிகளும் சரி, அரசும் சரி கையேந்தி ஏகாதிபத்தியங்களின் கால்களை நக்கத் தயாராக இருப்பதை, அவர்களின் சமாதானம் என்ற கோசத்தின் கீழ் கையேந்தும் அடிமை அரசியல் மூலம் பல தரம் உறுதி செய்துள்ளனர். இதனடிப்படையில் ஏகாதிபத்தியத் தலையீடு இலங்கையில் என்று இல்லாத வேகத்தில் அதிகரித்துள்ளது. பொருளாதாரத் துறையில் தொடங்கி இராணுவக் கட்டமைப்பு வரை இதன் வீச்சு உள்ளது. உலகமயமாகும் ஏகாதிபத்திய நலன்களை எதிர்த்து, புலிகளும் சரி அரசும் சரி அவர்களின் வால்களும் சரி தேசியம் பேச யாராலும் முடியாது. அனைத்தும் உலகமயமாதல் என்ற எல்லைக்குள் நின்று வாலாட்டி குலைக்கக் கோருகின்றது. இதற்கு அடிபணிந்து அடிமைப் புத்தியுடன் விசுவாசமாக ஒன்றை ஒன்று பார்த்துக் குலைப்பதே இன்று நடக்கின்றது.


இதை மீறுபவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை உலக வங்கியின் இலங்கைகான பிரதிநிதியான பீட்டர் ஹால்ட தெளிவாகவே கூறிவிடுகின்றார். ".. சில அடிப்படையான விடயங்களை நாங்கள் உதவி வழங்கும் அரசுகளால் பின்பற்றப்படாது விட்டால், நாம் அந்த அரசாங்கங்களுக்கு உதவி வழங்குவதை மறுபரீசிலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று கூறுவதன் மூலம், நாடுகளின் அடிமைத்தனத்தையும், மறுகாலனியாதிக்கத்தையும் நிறைவு செய்யும் அடிப்படைக் கோட்பாட்டை நிபந்தனையாக, தெளிவாக பிரகடனம் செய்கின்றார். யாரும் இதை இட்டு மூச்சுக் கூட விடவில்லை. புலிகள் கூட இந்த உலக வங்கியின் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கு இசைவானவர்கள் தான். அதைத் தனியாக விரிவாக ஆராய்வோம். கடன் கொடுத்தவன் கடனை மீளப் பெறும் வலைப்பின்னலில் இருந்து மீற முடியாத உலகமயமாதல் அமைப்பில், நாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. உலக வங்கியின் பிரதிநிதி இதைத் தெளிவாகவே தோற்ற அடிமை நாடுகளுக்குத் தெளிவுபடுத்தி விடுகின்றார். அனைத்து நிகழ்ச்சி நிரலும் இதற்குள் தான் அன்றாடம் வரையப்படுகின்றன. இப்படி இருக்கும் போது தம்மைத் தாம் சுதந்திரமானவர்கள் என்று கூறுவதும், தேசியம் பற்றி பீற்றுவதும் நிகழத்தான் செய்கின்றன. உண்மையில் உலகமயமாகும் தமது சொந்த காட்டிக் கொடுப்பை மூடிமறைக்கவே, இவை அனைத்தும் மேல் பூச்சாக உதவுகின்றன அவ்வளவே.


உலக வங்கியும் சரி, அதை உருவாக்கிய ஏகாதிபத்தியமும் சரி, உலகமயமாக்கும் நிகழ்ச்சி நிரலில் செல்வங்கள் தம்மை நோக்கி வெள்ளமாகப் பாய்ந்து வருவதை உறுதி செய்வதை அடிப்படையாக கொண்டே அனைத்துக் கொள்கைகளையும், நடைமுறைகளையும் கோருகின்றன. இதனடிப்படையில் உலகவங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்த கொள்கை ஒன்று, முக்கியமான மூன்று பிரச்சனைகளை முதன்மையானதாக தள்ளுகின்றது.


1. உலகமயமாதல் கொள்கையை நிர்வாகிக்கும் ஒரு பலமான உள்ளுர் கைக்கூலிகளின் தேவையை உறுதி செய்யக் கோருகின்றார்.


2. இந்தக் கைக்கூலிகள் அம்பலப்படாத வகையில் ஒரு பலமான அதிகார மையமாகத் திகழ, அதிகாரப் பரவலாக்கல் மூலம் உள்ள+ர் முரண்பாட்டை உருவாக்கும் வகையில் அரசியல் அதிகாரத்தை வழங்க கோருகின்றார்.


3. செல்வங்கள் ஏகாதிபத்தியங்களை நோக்கி செல்வதை உறுதி செய்யவும், தேசிய பொருளாதார அடிப்படைக் கட்டுமானங்களை முடக்கவும், முறையாக வரி அறிவிடும் உள்ள+ர் அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்யக் கோருகின்றார்.


இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இன மோதலைத் தீர்க்கக் கோருகின்றார். தமிழ்ப் பிரதேச வரிகளை அரசுக்குப் பதிலாக புலிகள் அறவிடுவது சிறப்பானது என்பது உலகவங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான பீட்டர் ஹால்டடின் தெளிவான உலகமயமாதல் சித்தாந்தம் கோருகின்றது. இந்த வகையில் உலகவங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான பீட்டர் ஹால்ட தனது கோட்பாட்டைத் தெளிவாக்கி விடுகின்றார். அவர் அதை "உள்ள+ர்த் தலைமைகள் வரி எடுக்கும் செலவிடும் அதிகாரம் இருக்கும் போது மிக ஆர்வமாகச் செயல்படுவர். உதாரணமாக வதிவிடங்கள், வியாபாரங்கள், தொழில் இடங்கள் என்பவற்றை கறாராக மதிப்பீடு செய்து அவற்றிக்கு வரியைத் தீர்மானித்து அறவிடுவதில் அவர்கள் அக்கறையாக இருப்பார்." இப்படித் தான் அதிகார பரவலாக்களை பின்நவீனத்துவவாதிகளும் கூறியுள்ளனர். அதையே தான் உலக வங்கியும் கூறுகின்றது. கோட்பாட்டு அடித்தளம் இரண்டுக்கும் ஒன்று அல்லவா!


அதிகாரப் பரவலாக்கல் மூலம் உள்ள+ர் அளவில் கண்காணிப்பையும், வரி அறவிடுதலையும் ஒழுங்கு செய்யக் கோருவதே இதன் சாராம்சமாகும். இதன் மூலம் அரசு நேரடியாக மக்களின் கோபத்தில் இருந்து தப்பிவிட முடிகின்றது. குற்றத்தை உள்ளுர் அதிகாரப் பிரிவுகளின் மீது சுமத்திவிட முடியும். இந்தப் பணியில் தன்னார்வக் குழுக்கள் ஊக்கமாகச் செயல்பட வேண்டும் என்று அரசியல் ரீதியாக வழிகாட்டுகின்றார். ஏகாதிபத்திய நலனுக்கு மிகச் சிறப்பாகச் சேவை செய்யும் தன்னார்வக் கைக்கூலிகளைப் பாராட்டுகின்றார். அந்த வகையில் "... அரசுசார்பற்ற நிறுவமான "சேவா லங்கா" வடக்கு கிழக்கில் பலருக்கு அபிவிருத்தி வேலைக்கான நல்ல பயிற்சியை வழங்க திட்டங்களைச் செயற்படுத்துகின்றது" என்று புகழாரம் சூடுகின்றார்.


கோட்பாட்டு ரீதியாக உலக வங்கியின் சமாதானம், அபிவிருத்தி, அதிகாரம் போன்றவற்றைத் தெளிவுபடுத்திவிடுகின்றார். உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒரு புள்ளி கூட விலகி விட முடியாது. இதை மிகத் தெளிவாக அவர் வெளிப்படுத்தி விடுகின்றார். இதனடிப்படையில் உதவி, கடன், மூதலீடு என்ற பல முனைகளில் நிதியும், மூலதனமும் இலங்கைக்குள் வெள்ளமாகப் பாய்கின்றது. இந்த மூலதனப் பாய்ச்சலில் அனைத்து ஏகாதிபத்தியங்களும் தத்தம் பங்குகளுக்காக போட்டியிடுகின்றன. அத்துடன் மூலதனத்தை முதலிடக் கூடிய வௌவேறு நாடுகளும் கூட களமிறங்கியுள்ளது. இந்த உதவி மற்றும் கடன் அனைத்துத் துறையிலும் புகுகின்றது. இலங்கையின் சமூக நலத் திட்டங்கள் முதல் எதுவாக இருந்தாலும், அது வெளிநாட்டுத் தலையீட்டுடன் அவர்களின் நிதி ஆதாரத்துடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டதாக மாறிவிட்டது.


இதைவிட அரசு சாராத நிறுவனங்களான ஏகாதிபத்திய நிதி ஆதாரத்தில் இயங்கும் தன்னார்வக் குழுக்களின் தலையீடு பிரமாண்டமானது. அரசுசார நிறுவமான தன்னார்வக் குழுக்கள் 2003 இல் 10000 திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. 23 திட்டக் கூட்டங்களை நடத்தியுள்ளது. இது போன்று அதிக எண்ணிக்கையில் திட்டங்களை இலங்கையில் நடைமுறையில் நடத்தியது இதுவே முதல் தடவையாகும். ஏகாதிபத்திய நிதி ஆதாரத்தில், அவர்களால் உருவாக்கப்பட்ட தன்னார்வக் குழுக்கள் 2003 இல் மட்டும் 10 ஆயிரம் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது என்றால், அதன் பலம் மிகப் பெரியது. ஒரு அரசியல் இயக்கத்தை விட பலமான அடித்தளத்தைக் கொண்டது என்பது தெளிவானது. அரசுக்கு நிகரான ஒரு பலமான அடிப்படையைக் கொண்டது. பல பத்தாயிரம் உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டுள்ள, பெரும் நிதி மூலதனங்களை ஆதாரமாகக் கொண்ட இதன் வலைப் பின்னல் உலகளாவியது. அரசுக்கு மேலாக ஏகாதிபத்திய வழிகாட்டலுடன் இயங்கும் இந்த தன்னார்வக் குழுக்கள் நிழல் அரசாங்கமாகவே இயங்குகின்றது. இவர்கள் அரசு மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் எங்கும் தம்மை நிலைநாட்டி உள்ளனர். அரசியல் பொருளாதாரத் துறையில் ஒரு சமூக இயக்கமாக, தேசிய அடிப்படைகளுக்கு எதிராகத் திட்டமிட்டு இயங்குபவர்களாக உள்ளனர். இது ஒருபுறம் இருக்க 2003 முதல் பல்வேறு நிதிகளை உதவி, கடன், முதலீடு என்ற பெயரில் பல நூறு திட்டங்களில் ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு வழங்குவது அதிகரித்துள்ளது. அவற்றில் ஒரு சிலவற்றைப் பாhப்போம்.


ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் கூனி வடமராட்சி கிழக்கு, வடமராட்சி வடக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 3 கோடி ரூபாவைக் கையளித்து, சுழற்சிமுறைக் கடனை வழங்க கோரியுள்ளார். 2003-இல் ஜப்பானின் அம்டா அமைப்பு மட்டுவில் வடக்கில் ஸ்ரீவேற்பிள்ளை சனசமூக நிலையத்திற்கு 10 லட்சம் ரூபாவை வழங்கியது. இதைவிட தளவாடங்கள், தொலைக்காட்சி போன்ற பொருள்களை வழங்கியது. இப்பகுதி தெரிவு செய்யப்பட்ட 15 விவசாயிகளுக்கு நீரிறைக்கும் இயந்திரத்தை வழங்கினர். இதேபோல் கைத்தடி, நாவற்குழி தெற்கில் 10 லட்சம் ரூபா செலவில் புதிய சனசமூக நிலையம் ஒன்றைக் கட்டினர். இப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 மீனவக் குடும்பங்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபா பெறுமதியான வலை உட்பட மீன்பிடி உபகரணங்களையும் வழங்கினர். அத்துடன் இப்பகுதிகளில் உள்ள மக்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுபட வேண்டும் என்ற பெயரில் தலை முடி அலங்காரம், கேக் ஐசிங் போன்ற வகுப்புக்களை நடத்தினர். அத்துடன் தென்னைப் பயிர்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு என்ற பெயரில் கருத்தரங்குகளை நடத்தினர். ஏகாதிபத்தியத் தலையீடும், அரசு சாராத நிறுவனங்களும் மக்கள் மத்தியில் ஆழமாகவே தலையிடுகின்றது. அரசியல் கட்சிகளும், தேசிய இயக்கங்களும் இங்கு இவர்களின் கூலிபட்டாளமாகவே இயங்குகின்றனர்.


டென்மார்க் அரசு யாழ் குடாநாட்டில் 1.2 கோடி அமெரிக்க டொலர் (அண்ணளவாக 120 கோடி ரூபாவை) செலவில் மூன்று செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிவியல், கண்ணி வெடி அகற்றுதல், "சிரானின்" மீள் குடியமர்வுத் திட்டங்களுக்கு உதவுதல் ஆகிய மூன்று திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நிதி கையாளப்படுகின்றது. மனித உரிமை மீறல் பற்றிய ஏகாதிபத்திய விளக்கங்கள் சார்ந்த கல்வி எதைத்தான் உற்பத்தி செய்யும்? ஏகாதிபத்திய அடிமைகளையும், ஏகாதிபத்திய மனித உரிமை அறிவுஜீவிகளையும் உற்பத்தி செய்யவே இந்த நிதி பயன்படுகின்றது. கைக்கூலிகளைக் கொண்ட ஒரு இலங்கைச் சமூகத்தைக் கட்டமைப்பதே, இதன் அடிப்படையான உள்ளடக்கமாகும். உலகில் அதிகளவில் மனித உரிமை மீறல்களைச் செய்யும் ஏகாதிபத்தியங்கள் தான், மனித உரிமை மீறல் குறித்தும் போதிக்கின்றது. உலகமயமாதல் போக்கில் மனித உரிமை மீறல் என்பது இதற்கு எதிரானது என்பதைச் சொல்லிக் கொடுப்பதும், உலகமயமாதலை எதிர்ப்பது மனித உரிமை மீறல் என்பதை போதிப்பதுமே இதன் மைய அடிப்படையாகும்.


கண்ணிவெடி அகற்றுதல் என்று கூறுவதன் மூலம், சர்வதேசத் தலையீட்டை ஏற்படுத்தல் இதன் அடிப்படையாகும். கண்ணிவெடியை உலகளவில் உற்பத்தி செய்வதையும், அதை விற்பதையும் பேசாத, அதை ஜனநாயக உரிமையாக அங்கீகரிக்கும் இவ் அரசுகள், கண்ணிவெடி அகற்றுதல் என்ற பெயரில் பிறநாடுகளில் தலையிடுகின்றன. அமெரிக்க அரசின் மனித முன்னேற்றம் பிரிவு, கண்ணி அகற்றல் என்ற போர்வையில் 1993 முதல் 7000 கோடி ரூபாவை ஒதுக்கி அதைச் செலவு செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 2004 இல் 1.2 கோடி பெறுமதியான ஆறு கண்ணி அகற்றும் நாய்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தானிகராலயத்துக்கு 12 கோடியே 10 லட்சம் ரூபாவை வழங்கியது. இலங்கை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது திட்டங்களுக்குச் செலவிடுவதற்காக ஜப்பான் 7கோடி 28லட்சம் ரூபாவை வழங்கியிருக்கிறது. மீள் குடியேற்றம் என்ற பணியைச் சொந்தத் தேசமே கையாள முடியாதவர்களாக, வக்கற்றவர்களாக மாற்றுவதன் மூலம் எதை செய்ய முனைகின்றனர். ஏகாதிபத்தியம் நிதி அளிப்பதன் மூலம், ஏகாதிபத்திய சந்தையை மையமாக வைத்து மீள் குடியேற்ற பகுதிகள் கட்டமைக்கப்படுவதைக் கண்காணிக்கவே இந்த நிதி வழிகாட்டுகின்றது.


ஏகாதிபத்தியச் சார்புத் தகவல் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க ஏகாதிபத்தியங்கள் நிதியை முதலீட்டுள்ளன. சர்வதேசத் தகவல் அபிவிருத்திக்கான சுவீடிஸ் நிறுவனமும், தகவல் அபிவிருத்திக்கான நோர்வைய நிறுவனமும் இணைந்து தகவல் மற்றும் செய்தி அமைப்பை ஏகாதிபத்திய மயமாக்கம் பணிக்காகவும், கைக் கூலிகளை உருவாக்கவும் 24 லட்சம் டொலரை (24 கோடி ரூபாவை) முதலிட்டுள்ளது.


இது போன்று அடுத்த மூன்று வருடத்துக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு என்ற பெயரில் ஜெர்மானிய ஏகாதிபத்தியம் 24 லட்சம் ஈரோவை (அண்ணளவாக 30 கோடி ரூபாவை) வழங்கியுள்ளது. உண்மையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்பது ஐரோப்பியச் சந்தையை நோக்கி திருப்பும் வகையில் இது வழங்கப்பட்டுள்ளது. உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக, யுத்தத்தை நிறுத்தி முழுமையாக நாட்டைச் சூறையாட இது நிர்பந்திக்கின்றது.


பரஸ்பர வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் கைச்சாத்திட்ட போது, சமாதான முன்னெடுப்புக்காக 90 லட்சம் டொலர்களை (அண்ணளவாக 90 கோடி ரூபாவை) அவுஸ்திரேலியா வழங்கியது. இதைவிட 2 கோடி ரூபாவை இடிந்த பாடசாலையின் அபிவிருத்திக்கு என 2004 தை மாதம் வழங்கியுள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் 40 லட்சம் ஈரோவை (அண்ணளவாக 48 கோடி ரூபாவை) அமைதி மற்றும் அதை ஒட்டிய தேவைகளுக்கு வழங்கியுள்ளது. இது போன்று ஐரோப்பிய யூனியன் 60 லட்சம் ஈரோவை (அண்ணளவாக 75 கோடி ரூபாவை) வடக்கு கிழக்கில் புலம் பெயர்ந்தவர்களின் நலனுக்காக வழங்கியுள்ளது. ஜெர்மனி 2003-2004 ஆண்டுக்கு என 50 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. அட என்ன அக்கறை! ஐரோப்பியயூனியன் 32.7 லட்சம் ஈரோவை (அண்ணளவாக 40 கோடி ரூபாவை) அமைதியைப் பேண வழங்கியுள்ளது. உலகவங்கி 2003-இல் அடுத்த மூன்று வருடத்துக்கு அமைதியைப் பேண 80 கோடி டொலரை (800 கோடி ரூபாவை) வழங்கி உள்ளது. உண்மையில் இலங்கையில் தொடரும் அமைதியை எது பேணுகின்றது? பணம்! அனைத்தும் பணமே. அதுவும் குறிப்பாக ஏகாதிபத்தியப் பணம் அமைதியை பேணுகின்றது. பணம் தேசியத்தின் அனைத்துக் கூறுகளையும் ஏப்பமிடுகின்றது என்ற உண்மையை நாம் பூசிமொழுக முடியாது. இந்த நிதிகள் எமக்கு சில்லிடும் உண்மைகளை முன்வைக்கின்றது. தேச மக்களின் நலன்கள் அல்ல, பணம் கொடுப்பவனின் நலன்கள் உறுதி செய்யப்படுவதை யாரும் இனியும் நிராகரிக்க முடியாது.


இந்த அமைதிக்கான உல்லாசப் பயணங்களை ஏகாதிபத்தியங்கள் பெரியளவில் திட்டமிடுகின்றன. இதற்கான பெரியளவிலான செலவுகளைக் கூட ஏகாதிபத்தியமே செலவு செய்கின்றன. அமைதிப் பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடத்திய ஒரு நாடகத்திற்கான செலவை இலங்கை அரசோ, புலிகளோ செலவு செய்யவில்லை. அந்தந்த நாடுகளே செலவு செய்தன. தாய்லாந்தில் 2002 செப்ரெம்பர் 16முதல் 18வரை நடந்த பேச்சுக்களுக்காக 10.38 லட்சம் ரூபாவை செலவு செய்தது. தாய்லாந்தில் 2002 ஒக்ரோபர் 31 முதல் நவம்பர் 3வரை வரையிலான கூத்துக்கு 18.82 லட்சம் ரூபாவையும், தாய்லாந்தில் 2003 ஜனவரி 6 முதல் 9வரையிலான கூத்துக்கு 17.40 லட்சம் ரூபாவையும் தாய்லாந்தே செலவு செய்தது. நோர்வேயில் 2002 டிசெம்பர் 2முதல் 5வரையிலான கூத்துக்கு 33.65 லட்சம் ரூபாவை நோர்வை செலவு செய்தது. அமைதி மீது என்ன அக்கறை! இதைவிட விமானப் பயணங்கள் தொடங்கி பல்வேறு தொடர் செலவுகளை அமைதி என்ற நாடகம் உள்ளடக்கியது. இந்த அமைதி என்ற நாடகத்திற்கு பெரும் தொகை நிதியை ஏகாதிபத்தியங்களும், அவர்களின் கைக்கூலி அரசாங்கங்களும் செலவு செய்கின்றது ஏன் என்றால், அமைதிப் பேச்சு வார்த்தையின் முடிவு ஏகாதிபத்திய நலனுடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பதால் தான்.


ஏகாதிபத்தியங்கள் அமைதிக்காக மட்டுமல்ல, பல்வேறு துறைகளுக்கும் நிதி வழங்குகின்றனர். உலகவங்கி கல்விக்காக 4.03 கோடி டொலரை (அண்ணளவாக 400 கோடி ரூபாவை) வழங்கியுள்ளது. இதைவிட உலகவங்கியும், ஆசியா அபிவிருத்தி வங்கியும் இணைந்து கல்விக்கு என 172 கோடி ரூபா வழங்கியுள்ளது. இதில் 100 கோடி ரூபா தெரிவுசெய்யப்பட்ட 80 பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. இதில் 72 கோடியை வழங்கும் ஆசிய வங்கி, வடக்கு கிழக்கில் உள்ள இரண்டாம் தரப் பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளது. யாழ் குடாநாட்டிலுள்ள 34 பாடசாலைகளுக்குத் தேவையான தளவாடங்களுக்கு நெதர்லாந்து அரசு ஒரு கோடி ரூபாவை யாழ்மாவட்ட "நிக்கொட்" அமைப்புக்கு ஊடாக வழங்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் அக்கறை மூக்கில் வியற்க வைக்கின்றது. தமது சொந்த மக்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு அக்கறை அற்ற தேசிய அரசியல் ஒருபுறம் இருக்க, அதற்குப் பதிலாக அன்னியன் அக்கறைப்படுகின்றான். வேடிக்கையான விசித்தரமான உலகம் தான். உலகளவில் கல்வியைத் தனியார்மயமாக்க கோரும் நிபந்தனைகளை முன்வைக்கும் ஏகாதிபத்தியம், இலங்கையில் வழங்கும் நிதிக்கு திட்டவட்டமான பின்னணி நோக்கம் உண்டு. கல்வியை உலகில் மறுப்பது ஒரு நிபந்தனையாக இருக்க, அதற்கு மாறாக கல்விக்கு என்ற பெயரில் நிதியளிப்பது ஆச்சரியமானது அல்ல. இவை பல தளத்தில் இயங்குகின்றது. போராட்டத்தைக் கைவிடக் கோரவும், எதிர்காலத்தில் கல்வியைத் தனியார்மயமாக்கவும், அறிவியல் தளத்தை தனக்கு சார்பாக மாற்றவும், அன்னியத் தலையீட்டுக்கு ஆதரவான ஒரு அறிவியல் குழுவை உருவாக்கவும், கல்வி மூலமான ஏகாதிபத்திய ஆதரவு மாணவர் குழுக்களை கட்டமைப்பதை அடிப்படையாக கொண்டது. இதன் மூலம் உலகமயமாதல் கட்டமைப்பை பலப்படுத்துவது இதன் அடிப்படையாக உள்ளது.


ஏழைகள் மேலான ஏகாதிபத்திய கரிசனை சொல்லிமாளாது. 2.3 கோடி ரூபாவை உணவு பற்றக்குறையான குடும்பத்துக்கு என ஜப்பான் மற்றும் நெதர்லாந்து வழங்கியது. இதைவிட நெதர்லாந்து அரசாங்கம் 27 லட்சம் ரூபாவை வறிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு என வழங்கியுள்ளது. இதே போல் அவுஸ்ரேலிய அரசாங்கம் 20 லட்சம் ரூபாவை குழந்தைகள் நலனுக்காகக் கொடுத்துள்ளது. குழந்தைகள் மேல் என்ன அக்கறை? குழந்தை உழைப்பு உட்பட, அவர்களின் உலகளாவிய வறுமையை கட்டிப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்களின் அக்கறை மோசடித்தனமானது. குழந்தைகளின் நலனைப் பெற்றோரிடம் இருந்து புடுங்கும் அதியுயர் சுரண்டல் கொள்கையைப் பின்பற்றும் ஏகாதிபத்தியங்கள், குழந்தை நலனில் அக்கறைப்பட்டு நிதி கொடுக்கும் பின்னணி வேடிக்கையானது தான். ஒவ்வொரு குழந்தையின் நலனிலும் பெற்றோரின் பொறுப்பான பங்களிப்பை கைவிடச் செய்தபடி, உதவுவது என்பது சொந்த வக்கிரத்தை மூடிமறைக்கத்தான். மிருகங்களுக்கு நலமலடித்த பின் ஏற்படும் வலிக்கு மருந்து கொடுப்பவன் எதைச் செய்கின்றானோ, அதையே ஏகாதிபத்தியமும் செய்கின்றது. நலமடித்தவன் நோக்கம் சார்ந்த நலன்கள், இதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றது அல்லவா!.


2004-இன் ஆரம்பத்தில் ஜப்பான் கொழும்பு நகரசபைக்கு, 50 லட்சம் ரூபாவை ஏழைகளின் நலனுக்கு என்ற பெயரில் வழங்கியுள்ளது. சுவீடன், இலங்கைக்கு 300 கோடி ரூபாவை அபிவிருத்திக்கு என்ற பெயரில் வழங்கி உள்ளது. வவுனியா மாவட்டத்தின் முன்னேற்றம் என்ற பெயரில் ஆசிய அபிவிருத்தி வங்கி 24.4 கோடி ரூபாவை முதலிட்டுள்ளது. 2004-இன் ஆரம்பத்தில் இதில் நூற்றுக்கணக்கான திட்டங்களைக் கொண்டது. இதே போன்று கிராமப்புற அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 100 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் மனித முன்னேற்றம் என்ற பெயரில் ஜப்பான் 59 லட்சம் ரூபாவை கொடுத்துள்ளது. மனிதனின் முன்னேற்றம், அபிவிருத்தி என்பது, ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்துக்கு வெளியில் விளக்கம் நிச்சயமாக இருப்பதில்லை என்ற உண்மையை நாம் மறுத்துவிட முடியாது அல்லவா!. இப்படி மனித முன்னேற்றம், கல்வியை முன்னேற்றுவது, மனித உரிமை பாதுகாத்தல், வறிய மக்களுக்கு உதவி, அமைதியைப் பேண பணம் என்று தடபுடலாக வாரிவழங்கும் இந்த ஏகாதிபத்தியக் கும்பல் வேறு எவற்றுக்குப் பணம் வழங்குகின்றது தெரியுமா!


மக்களின் தேசியச் சொத்துகளை, வளங்களைத் தனியார்மயமாக்கவும் நிதி கொடுக்கின்றது. உலகவங்கி அரசுதுறையைத் தனியார்மயமாக்க 60 லட்சம் டொலரை (60 கோடி ரூபாவை) ஊக்குவிப்பாக வழங்கியுள்ளது. இதற்கு என மேலதிகமாக 19.6 கோடி டொலரை (அண்ணளவாக 1960 கோடி ரூபாவை) வழங்கவுள்ளது. 2003 முதல் வாரத்தில் ஐரோப்பிய யூனியன் தனியார்துறையை ஊக்குவிக்க 392 கோடி ரூபாவை வழங்கியது. இவை எல்லாம் எதைக் காட்டுகின்றது? தேசத்தின் தேசியச் சொத்துகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை அமுல்படுத்த கோருகின்றன. அதை ஏகாதிபத்தியங்கள் கொள்ளையிடும் உரிமையை அமுல்படுத்தக் கோருகின்றனர். இதனால் ஏற்படும் மனித துயரத்துக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்பதை மூடிமறைக்க, சில உதவிகள் மூலம் வண்ணப் பூச்சடிக்கின்றனர்.


தனியார்மயமாக்கலை எதிர்க்கும் ஊழியர்களைப் பணம் கொண்டு சரிக்கட்டவும், தேசிய வாதிகளை விலை பேசி வாங்கவும், லஞ்சத்தையும் ஊழலையும் கொண்டு சரிகட்டவும், மக்களின் சில அடிப்படையான பணிகளைப் பணத்தைக் கொண்டு மாற்று வழிகளை உருவாக்குவதன் மூலம், மக்களின் சொத்தை எதிர்ப்பற்ற வகையில் தனியார்மயமாக்க சிறப்பு நிதியைத் தாரைவார்க்கின்றனர். ஏகாதிபத்தியம் தங்குதடையற்ற சூறையாடலை நடத்த பணம் கைக்கூலிகளுக்குத் தாரைவார்க்கப்படுகின்றது அவ்வளவே.


வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு இலங்கை மீது என்ன அக்கறை? உலகவங்கி யாழ்குடா நாட்டுக்குக் குளங்களைப் புனரமைக்க எட்டுகோடி ரூபாவை வழங்கியுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி கரையோரச் சமூக அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் 28.4 கோடி அமெரிக்க டொலரை (2840 கோடி ரூபா) வழங்கியுள்ளது. சீன அரசு 50 கோடி ரூபா செலவில் இலங்கையில் மிகப் பெரிய கண்காட்சிக் கூடம் ஒன்றைக் கட்டியுள்ளது. இலங்கைக்கு உடனடி உதவி என்ற பெயரில் 76 கோடி ரூபாவை சீன அரசு வழங்கியுள்ளது. இதைவிட 768 கோடி ரூபா செலவில் எண்ணை சேமிப்பு குதங்களை சீனா அரசு கட்டுகின்றது. 31 கொள்கலன்களைக் கொண்ட 250 ஆயிரம் மெற்றிக் தொன் எண்ணையை இதில் சேகரிக்க உள்ளனர். இதைவிட வேறு இரு ஒப்பந்தத்தையும் சீனா அரசு செய்துள்ளது. கிராமப்புற மின்சாரத் திட்டம் ஒன்றை 288 கோடி ரூபா செலவில் அமைக்கவுள்ளது. இதற்கான இரண்டு 10,000 மெற்றிக் தொன் டீசல் குதங்களை அமைக்க 57.6 கோடி ரூபா வழங்கியுள்ளது. இதைவிட சீனா அரசு 12.5 கோடி டொலரை (அண்ணளவாக 1,250 கோடி ரூபாவை) கடனாக கொடுத்துள்ளது. இதில் 7 கோடி டொலர் (அண்ணளவாக 700 கோடி ரூபா) சீனா பொருட்களை வாங்கவேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டது.


சவுதி அரசு 1.07 கோடி டொலரை (அண்ணளவாக 107 கோடி ரூபாவை) இலங்கைக்குக் கடனாக வழங்கியுள்ளது. 19 கிலோ மீற்றர் வாய்க்கால் ஒன்றை வெல்லவாவில் அமைக்க ஜப்பான் 85.9 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. ஆசியா அபிவிருத்தி வங்கி இரண்டு வேலைத் திட்டங்களுக்குக் கடனாக 10.5 கோடி டொலரை (அண்ணளவாக 1050 கோடி ரூபாவை) முதலிட்டுள்ளது. இந்த வேலைத் திட்டங்கள் ஆராய்ச்சி கல்விக்கும், சுத்தமான தண்ணீரை வழங்குவதற்கு என்ற பெயரில் கடன் வழங்கியுள்ளது. குடிக்கும் தண்ணீரை காசுக்கு விற்கும் திட்டம் உட்பட, நாட்டில் எதை எல்லாம் கொள்ளையிட முடியும் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சித் திட்டங்களை வரையவும் கடன் வழங்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவின் பெற்றோலிய நிறுவனம் ஒன்று இலங்கையின் பெற்றோலிய வளம் குறித்து அக்கறை கொண்டதை அடுத்து, இலங்கையின் வடமேற்கிலும், வடகிழக்கிலும் எண்ணெய் வள ஆய்வினை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 3.25 லட்சம் அமெரிக்க டொலரை (அண்ணளவாக 32 கோடி ரூபாவை) கொடுத்துள்ளது. இயற்கை வாயுவை எடுக்கவும், எண்ணை ஆழ் கிணறுகளைத் தோண்டவும் பன்னாட்டு நிறுவனத்துக்கு மன்னார் கடற்கரை வளங்களை இலங்கை அரசு தாரைவார்த்துள்ளது. அவுஸ்ரேலியா அரசாங்கம் 58 கோடி ரூபாவை வறண்ட பிரதேச அபிவிருத்திக்கு என வழங்கி உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி சிறிய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க 6 கோடி டொலரை (அண்ணளவாக 600 கோடி ரூபாவை) வழங்கி உள்ளது. ஐரோப்பிய முதலீட்டு வங்கி 390 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. சிறிய நடுத்தர உற்பத்திகளைக் கட்டுபடுத்தவும், விவசாயத்தை அழிக்கவுமே இவைகளை வழங்கி உள்ளனர்.


12 கோடி ரூபாவை ஜப்பானின் சர்வதேச வங்கியும், ஆசிய வங்கியும் பண்ணை அபிவிருத்திக்கு என வழங்கியுள்ளது. ஐந்து வருடத்துக்கான இப்பணம் நிலத்தைப் பண்படுத்தக் கோருகின்றது. அதாவது ஏகாதிபத்தியத் தேவையை நிறைவு செய்யும் உற்பத்தியை நோக்கி, மண்ணையும் மக்களையும் பண்படுத்தக் கோருகின்றனர். தேசத்தின் தலைவிதி இது என்றால், தாய்லாந்து அரசோ தனது நாட்டில் இருந்த பொருட்களை இறக்குமதி செய்ய 2 கோடி டொலரை (அண்ணளவாக 200 கோடி ரூபாவை) கடன் வழங்கியுள்ளது. சந்தையில் சீண்டுவார் அற்று தேங்கிப் போகும் பொருட்களைத் தலையில் கட்டிவிடுவதற்கும் கடன் வழங்கப்படுகின்றது.


மலேசியா அரசாங்கம் தொலைபேசி தொடர்பானத் துறையில் 9 கோடி டொலர் (அண்ணளவாக 900 கோடி ரூபாவை) முதலீட்டை செய்யும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ள அதேநேரம், 20 கோடி டொலர் வரை (அண்ணளவாக 2000 கோடி ரூபா) விரிவுபடுத்தவும் ஒப்பந்தம் வழி செய்கின்றது. அத்தியாவசியமான சமூகத் தேவைகளை நிராகரிப்பதும், ஆடம்பரமான பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் உலகமயமாதல் சந்தைக் கட்டமைப்பு விரிவாக்கப்படுகின்றது. இலங்கையில் ஆறு வேலை திட்டங்களில் ஜப்பான் 2600 கோடி ரூபாவை முதலீட்டுள்ளது. இதே போன்று அமெரிக்கா 12 கோடி டொலரை (அண்ணளவாக 1200 கோடி ரூபாவை) முதலீட்டுள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க ஜப்பான் 1.81 கோடி ரூபாவை வழங்கியது. அதேநேரம் இதன் அடிப்படையில் ஏற்கனவே 537.3 கோடி ரூபா கடனைக் கொடுத்து இருந்தது. ஐ.எம்.எஃப் கடனாக 8.1 கோடி டொலரைக் (அண்ணளவாக 810 கோடி ரூபாவைக்) கொடுத்த அதேநேரம் 2006க்கு இடையில் 56.7 கோடி டொலரை (அண்ணளவாக 5670 கோடி ரூபாவை) வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. உதவி, கடன், முதலீடு என்று இலங்கையில் பெருகிவரும் ஏகாதிபத்தியப் பணவரவு, இலங்கையின் மறுகாலனியாதிக்கத்தை விரைவுபடுத்தி வருகின்றது. கொள்ளை அடிப்பதை விரைவாக நகர்த்திச் செல்ல விசேட முதலீடுகளை ஏகாதிபத்தியம் செய்கின்றது.


ஆசிய வங்கி 100 கோடி டொலர் (அண்ணளவாக 10000 கோடி ரூபாவை) கொழும்பு துறைமுகத்தை விரிவாக்க வழங்கியுள்ளது. இதை பிரிட்டிஷ் கம்பெனிகள் கட்டமைக்கின்றன. 160 கோடி ரூபா செலவில் 6 நகரங்களை அபிவிருத்தி செய்ய ஆசியா அபிவிருத்தி வங்கி நிதி வழங்கியுள்ளது. ஆசியா அபிவிருத்தி வங்கிக் கடனாக கண்டி யாழ் வீதியை நவீனப்படுத்த 50 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. நோர்வை 20 கோடி ரூபாவை வீதி அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கியுள்ளது. புத்தளத்துக்கும் திருகோணமலைக்குமான நவீன வீதி அமைப்பை உருவாக்க கொரியா 12 லட்சம் அமெரிக்க டொலரை (அண்ணளவாக 12 கோடி ரூபாவை) முதலீட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை நவீனப்படுத்த சர்வதேச ஜப்பானிய நிறுவனம் ஒன்று 310 கோடி ரூபாவை முதலீடுகின்றது.


ஏகாதிபத்திய நலன் சார்ந்த உலகமயமாதல் நலன்களை விரிவாக்கவும், அதன் குறிப்பான நலன்கள் சார்ந்த திட்டங்கள் உருவாக்கப்படுகின்றது. இதற்கு உதவி, கடன், முதலீடு என பல பெயர்களில் நிதி வெள்ளமாக நாட்டினுள் பாய்ந்து வருகின்றது. இந்த நிலையில் எமக்கு அருகில் உள்ள பிராந்திய வல்லரசான இந்தியாவின் பங்கு தனிச் சிறப்பானதாக உள்ளது.


இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய விஸ்தரிப்பு ஊடாக, இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கையை உருவாக்குவதே தனது இலட்சியம் என்பதை அண்மையில் அறிவித்தார் கொழும்பிலிருந்து தென்னிந்தியாவின் பெங்களுர் சென்னை வரையிலும் - மும்பை வரை புதியபாதை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார். இலங்கையின் தென்முனையில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்க உள்ளதாக அறிவித்தார்.


இதை அடுத்து இந்தியா இலங்கைக்கான பாலம் அமைப்புக்கு அமெரிக்கா நெக்ஸன்ற் இங் நிறுவனம் தனது திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. 50 முதல் 90 கோடி டொலர் செலவில் (5000 கோடி முதல் 90000 கோடி ரூபா) நான்கு பிரதான பாதையைக் கொண்ட திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளது. வீதிக்குப் பணம் செலுத்தியே செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன், மிக வேகப் புகையிரதப் பாதை அமைத்தல். 500 மெகாவாட்ஸ் மின்சக்திக் குழாய் அமைத்தல். பைபர் பொருட்களை ஏற்றிப் பயணிக்கும் விசேட உபகரணங்கள் பொருத்தல், இரு பக்கத்திலும் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், நிலவாயு குழாய் அமைத்தல். சுதந்திர வர்த்தக வலையங்கள் அமைத்தல். திருகோணமலை எண்ணை குதத்துக்கு நேரடி பயண வழி அமைத்தல் மற்றும் பல உதிரித் திட்டங்கள் அமைக்க முன்வைந்துள்ளது. இதை 36 மாதத்தில் ப+ர்த்தி செய்ய ஒத்துக் கொண்டது.


இப்படி இந்தியாவின் சந்தைக் கட்டமைப்பு இலங்கைக்குள் விரிவாகி வருகின்றது. அண்மையில் இந்தியா இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தம், வரிகள் அற்ற சுதந்திரமான வர்த்தக இணைப்பைக் கொண்டு ஆறு நாடுகளை இணைக்க உள்ளதை அறிவித்துள்ளனர். இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறையில் விரிவாகி வருகின்றது. இந்தியப் பொருட்களின் இறக்குமதியை இலகுபடுத்தும் ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவும் இலங்கையும் 2003 இன் ஆரம்ப மாதங்களில் கையெழுத்திட்டது. இதன் படி பால் உணவு, மரக்கறி எண்ணெய், இனிப்பு வகைகள், மரக்கறி வகைகள் உட்பட 84 பொருட்களுக்கு மட்டும் வரைமுறைக்கு உட்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்படும். மிகுதி அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளது. மிகமலிவான கூலியைக் கொண்ட இந்தியப் பொருட்கள், இலங்கை உற்பத்திகளை அழித் தொழிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. சென்னையில் இருந்து கொழும்புக்கு குழாய்வழியாக எண்ணையை அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றை இந்தியா செய்துள்ளது. மக்கள் விரோத ஒப்பந்தங்களை மூடிமறைக்க, 50 கோடி ரூபாவை இந்திய அரசு, இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு என்ற பெயரில் கொடுத்துள்ளது.


"இந்தியாவுடன் கட்டுப்பாடற்ற வர்த்தகம் மேற்கொள்ள இலங்கை விரும்புகிறது" என்று இலங்கை வர்த்தக மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இந்தியாவில் உள்ள 60 இற்கும் மேற்பட்ட பல தனியார் நிறுவனங்கள் இலங்கையில் ரூ.600 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாகக் கூறினார். மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக முரசொலிமாறன் இருந்தபோது, வர்த்தகத்தில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் 6000-க்கும் மேற்பட்ட பொருள்கள் வரியின்றி இறக்குமதியாகின்றன. இப்படி இந்தியாவுடன் கட்டுப்பாடற்ற வர்த்தகம் மேற்கொள்ளவே இலங்கை விரும்புகிறது என்றார். வரியில்லா வர்த்தகம் மூலம் இந்தியாவுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இலங்கை ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று கூறினார். இந்தியா 10 கோடி அமெரிக்கா டொலரை (அண்ணளவாக 1000 கோடி ரூபாவை) இலங்கை பொருளாதார கூட்டு ஸ்தாபனத்துக்கு ஊடாக முதலீடாக வழங்கியுள்ளது.


2003-க்கான ஐ.நா சர்வதேச முதலீட்டு அறிக்கை ஒன்று இந்த துரோகத்தை பட்டியல் இட்டுள்ளது. இந்தியா இலங்கை ஒப்பந்தம் 14.5 கோடி டொலர் (அண்ணளவாக 1450 கோடி ரூபா) முதலீட்டில் 37 உற்பத்திக்கான அடிப்படையை உருவாக்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளது. அதே அறிக்கையில் இலங்கையினது 2001-இல் இந்தியாவுக்கான ஏற்றுமதி 7.1 கோடி டொலர் (அண்ணளவாக 710 கோடி ரூபா). இது 2002 இல் 16.8 கோடி டொலராகும் (அண்ணளவாக1680 கோடி ரூபா) என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவின் இலங்கைக்கான ஏற்றுமதி 60.4 கோடி டொலராக (அண்ணளவாக 6040 கோடி ரூபா) இருந்தது. இது 2002-இல் 88.1 கோடி டொலராக (அண்ணளவாக 8810 கோடி ரூபாவாகி) உள்ளது.


உதவி, கடன், முதலீடு என்ற போர்வையில் தேசம் விற்கப்படுகின்றது. வட்டி, ஏற்றுமதி என்ற பெயரில் தேசம் கற்பழிக்கப்படுகின்றது. இறக்குமதி என்ற பெயரில் உலக கழிவுகளும், ஆடம்பரப் பொருட்களும் கொட்டும் இடமாக இலங்கை மாற்றப்பட்டுவிட்டது. தேச மக்களின் அடிப்படையான வாழ்வை வரைமுறையின்றி சூறையாடி கற்பழிக்கின்றனர். மக்களை அடக்கி ஒடுக்கும் ஒரு அடக்குமுறைக் கருவியாக தேசியக் கைக்கூலி அரசுகள் செயல்படுகின்றன. இலங்கையை மறுகாலனியாக்கும் நிகழ்ச்சித் திட்டம், இனயுத்தத்தின் மேலான தலையீட்டின் ஊடாக விரைவுபெற்று வருவதை நாம் பார்ப்போம்.

Last Updated on Friday, 29 August 2008 21:43