Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

வான்

  • PDF
விண்மீன் நிறைந்த வான்

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்; இதைத் தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!

நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை

பாற்புகை முகிலைச் சீய்த்துப்
பளிச்சென்று "திங்கட் சேவல்"
நாற்றிக்கும் குரல் எடுத்து
நல்லொளி பாய்ச்சிப் பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
பொடிவிண்மீன் குஞ்சு கட்கும்
மேற்பார்வை செலுத்திப் "பூனை
இருட்டையும்" வெளுத்துத் தள்ளும்.

பகல் வானில் முகிலோவியங்கள்

பகல்வானிற் கதிரின் வீச்சுப்
பரந்தது! முகிலி னங்கள்
வகைவகை ஓவி யங்கள்
வழங்கின; யானைக் கூட்டம் !
தகதக எனும்மா ணிக்க
அருவிகள் ! நீலச் சாரல் !
புகைக்கூட்டம் ! எரிம லைகள்!
பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை !

இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்

கிழக்குப்பெண் விட்டெ றிந்த
கிளிச்சிறைப் பரிதிப் பந்து,
செழித்தமேற் றிசைவா னத்தின்
செம்பருத் திப்பூங் காவில்
விழுந்தது ! விரிவிளக்கின்
கொழுந்தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள
இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் !

காலை வானம்

கோழிகூ விற்று ! வையம்,
கொண்டதோர் இருளைத் தங்க
மேழியால் உழுதான் அந்த
விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்
ஆழிசூழ் உலகின் காட்சி
அரும்பிற்று ! முனைய விழ்ந்து
வாழிய வைய மென்று
மலர்ந்தது காலை வானம் !

வானவில்

அதிர்ந்தது காற்று! நீளப்
பூங்கிளை அசைந்தா டிற்று!
முதிர்ந்திட்ட முகிலின் சேறு
மூடிற்றுச் ! சேற்றுக் குள்ளே
புதைந்திட்ட கதிரிற் பூத்த
புதுப்புது வண்ண மெல்லாம்
ததம்பிற்றே வான வில்லாய்ப் !
பாரடி அழகின் தன்மை !

மழை வான்

பகல்வான்மேல் கருமு கில்கள்
படையெடுத் தன ! வில்லோடு
துகளற்ற வாளும், வேலும்
சுழன்றன மின்னி மின்னி !
நகைத்தது கலகல வென்று
நல்ல கார்முகில்தான் ! வெற்றி
அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்
இறைத்தாள்பூ மழையை அள்ளி !

எரிகின்ற வானம்

தேன்செய்யும் மலரும் தீயும் !
செந்தீயும் நீறாய்ப் போகும் !
கான், செய், ஊர், மலை, கா, ஆறு
கடலெல்லாம் எரிவ தோடு
தான்செய்த தணலில் தானும்
எரிகின்றான் பகலோன்! அங்கு
வான்செய்த வெப்பத் தால்இவ்
வையத்தின் அடியும் வேகும் !

உச்சிப் போதுக்கும் மாலப் போதுக்கும் இடை நேரம்

உச்சியில் இருந்த வெய்யோன்,
ஓரடி மேற்கில் வைத்தான்,
நொச்சியின் நிழல்கி ழக்கில்
சாய்ந்தது ! நுரையும், நீரும்,
பச்சையும், பழுப்பு மான
பலவண்ண முகில்கள் கூடிப்
பொய்ச்சான்று போல, யானை
புகழும்; பின் மலையைக் காட்டும்.

வான் தந்த பாடம்

எத்தனை பெரிய வானம் !
எண்ணிப்பார் உனையும் நீயே ;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
நீஅதில் சிற்றெ றும்பே
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித் தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm