Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

கடல்

  • PDF

மணல், அலைகள்

ஊருக்குக் கிழக்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம் போல்
மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ கல்வி
நிலையத்தின் இளைஞர் போலஎ
பூரிப்பால் ஏறும் வீழும்;
புரண்டிடும்; பாராய் தம்பி.

மணற்கரையில் நண்டுகள்

வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல
துள்ளியே அலைகள் மேன்மேல்
கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளகள் ஓடி ஆடிப்
பெரியதோர் வியப்பைச் செய்யும்.

புரட்சிக்கப்பால் அமைதி

புரட்சிக்கப் பால் அ மைதி
பொலியுமாம். அதுபோல், ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட் கப்பால்
கடலிடை அமைதி அன்றோ!
பெருநீரை வான்மு கக்கும்;
வான்நிறம் பெருநீர் வாங்கும்!

கடலின் கண்கொள்ளாக் காட்சி

பெரும்புனல் நிலையும், வானிற்
பிணந்த அக் கரையும், இப்பால்
ஒருங்காக வடக்கும் தெற்கும்
ஓடு நீர்ப் பரப்பும் காண
இருவிழிச் சிறகால் நெஞ்சம்
எழுந்திடும்; முழுதும் காண
ஒருகோடிச் சிறகு வேண்டும்
ஓகோகோ எனப்பின் வாங்கும்!

கடலும் இளங் கதிரும்

எழுந்தது செங்க திர்தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூற்றல்!
வெளியெலாம் ஓளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்ப ரப்பின்
முழுதும்பொன் னொளிப றக்கும்.
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!

கடலும் வானும்

அக்கரை சோலை போலத்
தோன்றிடும்! அந்தச் சோலை,
திக்கெலாம் தெரியக் காட்டும்
இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்
கைக்கொள்ள அம்மு கில்கள்
போராடும்! கருவா னத்தை
மொய்த்துமே செவ்வா னாக்கி
முடித்திடும்! பாராய் தம்பி!

எழுந்த கதிர்

இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே
இருளின்மேல் சினத்தை வைத்தான்;
களித்தன கடலின் புட்கள்;
எழுந்தன கைகள் கொட்டி!
ஒளிந்தது காரி ருள்போய்!
உள்ளத்தில் உவகை பூக்க
இளங்கதிர், பொன்னிண றத்தை
எங்கணும் இறைக்க லானான்.

கடல் முழக்கம்

கடல்நீரும், நீல வானும்
கைகோக்கும்! அதற் கிதற்கும்
இடையிலே கிடைக்கும் வெள்ளம்
எழில்வீணை; அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி
வண்கடல் பண்பா டல் கேள்!

நடுப்பகலிற் கடலின் காட்சி

செழுங்கதிர் உச்சி ஏறிச்
செந்தணல் வீசு தல்பார்!
புழுங்கிய மக்கள் தம்மைக்
குளிர்காற்றால் புதுமை செய்து
முழங்கிற்றுக் கடல்! இவ்வைய
முழுவதும் வாழ்விற் செம்மை
வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்
வளர்கின்ற கடல்பார் தம்பி!

நிலவிற் கடல்

பொன்னுடை களைந்து, வேறே
புதிதான முத்துச் சேலை
தன்இடை அணிந்தாள் அந்தத்
தடங்கடற் பெண்ணாள், தம்பி
என்னென்று கேள்; அதோபார்
எழில் நிலா ஒளிகொட் டிற்று!
மன்னியே வாழி என்று
கடலினை வாழ்த்தாய் தம்பி.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm