Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

அழகு

  • PDF

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm