Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

தாலாட்டு

  • PDF

ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ!

சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது
நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்
செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை
அவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு!

கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில்
மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி
சின்ன இமையைத் திறந்ததேன்? நீயுறங்கு!
கன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு!

குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரர்கள்போல்
துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி
ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு!
வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு!

கன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச்
சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே?
அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச்
சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு!

நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக்
கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீகேட்டால்
ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?

கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில்
பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா?
குப்பைமணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க
அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?

மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல்
தேன்குழல்தான் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்ததைப்போல்
உழுந்துவடை நெய்யழுக உண்ணென்று தாரேனா?

தாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா
ஆழ உரலில் இடித்த அவலைக்
கொதிக்குநெய் தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே

ஏலத்தைத் தூவி எதிர் வைக்கமாட்டேனா?
ஞாலத்தொளியே நவிலுவதை இன்னும் கேள்:
செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக்
கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும்

செதில்அறுத்தால் கொப்பரையில் தேன்நிறைந்த தைப்போல்
எதிர்த்தோன்றும் மாம்பழமும் இன்பப் பலாப்பழமும்
வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்துவிடும்.
பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே!

நெருங்க உறவுனக்கு நீட்டாண்மைக் காரர்
அறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே!
எட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள்
"வெட்டிவா"வென் றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்

என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்?
முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை
ஓர்குடைக்கீழ் ஆண்ட உவகை உனக்குண்டு!
சேரனார் சோழனார் சேர்ந்தபுகழ் உன்புகழே!

ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார்
காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர்
உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்?
பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு!

கற்சுவரை மோதுகின்ற கட்டித்தயிரா, நற்
பொற்குடத்தில் வெண்ணெய்தரும் புத்துருக்கு நெய்யா,நல்
ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப்
போல்நிறைந்த பாலைப் புளியக்கொட்டை தான்மிதக்கும்

இன்பநறும் பாலா, என்னஇல்லை? கண்ணுறங்காய்!
அன்பில் விளைந்தஎன் ஆறுயிரே கண்ணுறங்கு!
காவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும்
பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும்

கேட்ட உழவர் கிடுகிடென நல்லவிழாக்
கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில்
அலுப்பை அகற்றி அழகுவான் வில்போல்
கலப்பை எடுத்துக் கனஎருதை முன்னடத்திப்

பஞ்சம் தலைகாட்டப் பாராப் படைமன்னர்,
நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார்.
வித்துநெல் வித்தி விரியும் களையெடுத்துக்
கொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை

மாற்றி யடித்து மறுகோலம் செய்தநெல்லைத்
தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள்
கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே!
ஞாலம் புகழும் நகைமுத்தோய் கண்ணுறங்கு!

செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர்
கொம்புத்தேன் பெய்து குளிர்முக் கனிச்சுளையோ
டள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யழுக
உள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே!

கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ
நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக்
கொத்தும் மரங்கொத்தி, தாளங் குறித்துவரத்
தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க

மின்னும்பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே
பன்னும் படம்விரித்துப் பச்சை மயிலாடுவதும்,
பிள்ளைக் கருங்குயிலோ பின்பாட்டுப் பாடுவதும்
கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய்நீ

குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற்
கப்பும் கழுவுடையில் கண்மணியும் பொன்மணியும்!
ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்!
சூடாமணி வரிசை தூண்டாச் சரவிளக்காம்!

எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில்
கொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ?
ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும்
வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி

ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில்
உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா?
மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும்
பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள்

எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக்
கண்ணும் கருத்தும் கவருமோர் அன்புநகர்,
ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரிபங்கென்
றோரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு

நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு
பொன்னான தொட்டிலில் இப்போது!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt152