Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் எப்படி மக்களுக்காக போராடுவது?

எப்படி மக்களுக்காக போராடுவது?

  • PDF


"மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்று கோரிப் போராடினான் என்பதற்காக, விமலேஸ்வரன் 15 ஆண்டுக்கு முன்பு புலிகளால் வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டான்.

 விமலேஸ்வரன் 15 வருட நினைவை ஒட்டி அவன் எதற்காக போராடினான் என்ற நினைவுகளை மீட்பதன் மூலம், எப்படி மக்களுக்காக போராடுவது என்பதை புரிந்து கொள்ள முடியும். எந்த தத்துவமும், எந்த சொல்லலங்காரமும் செய்ய முடியாததை, எதார்த்தத்தில் நடைமுறை ரீதியாக மக்களுக்காக போராடுவதில் முன்னுதாரணமிக்க ஒரு தலைவனாக விமலேஸ்வரன் இருந்தான். அதனால் அவன் படுகொலை செய்யப்பட்டான். அதனால் அவன் நினைவுக்குரிய ஒரு தலைவனாக மதிக்கப்படுவதில்லை. இப்படி முகம் தெரியாத, பெயர் தெரியாத பலரின் நினைவுகள் மீட்கப்படவில்லை.



அவனின் மூச்சு இந்த மண்ணிலி;ருந்த வரை தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பங்காளியாக இருந்தான். இலங்கை அரசின் பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடினான். இயக்கங்களின் அராஜகங்களுக்கும் எதிராக தொடர்ச்சியான விடாப்பிடியான போராட்டங்களை நடத்தினான். சொந்த இயக்கத்தில் இதற்கு எதிராக போராடியதுடன், இயக்கத்தை விட்டு வெளியேறினான். மக்கள் விரோத நடவடிக்கைகளே மாற்று இயக்க உணர்வாக மாறிய போது, அதற்கு எதிராகவும் போராடினான். மக்களின் நலனை ஆணையில் கொண்டு, அதற்காக அனைத்து சமூக நடைமுறைகளிலும் ஈவிரக்கமற்ற போராட்டத்;தை நடத்தினான். பல்கலைக்கழக நிர்வாக ஊழல்களைக் கூட எதிர்த்து போராடுவதில், இவனின் போராட்ட உணர்வு தப்பிவிடவில்லை. இதன் மூலம் உன்னதமான முன்னுதாரணங்களை எமக்காக விட்டுச் சென்றுள்ளான்.



அவனை புலிகள் தம் விசாரணையின் பெயரில் படுகொலை செய்ய முயன்ற போது, தலைமறைவு வாழ்க்கைக்காக சென்றான். தனது தலைமறைவு வாழ்க்கையை தாழ்த்தப்பட்ட வறிய கூலிகளை பெருமளவில் கொண்ட கிராமம் ஒன்றில் தொடங்கினான். விரைவிலேயே அந்த மக்களுடன் கலந்து, இனம் காணமுடியாது ஒருவனாக தன்னை மாற்றி அமைத்தான். பகலில் அவர்களுடன் கூலிக்கு செல்வதும், இரவில் அந்த கிராமத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியனானான். அந்த மக்களின் சமூக வாழ்வியல் பிரச்சனைகளில் ஒன்றுபட்டு ஒன்றி வாழ்ந்தான். தலைமறைவு வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு, அவன் நடைமுறை ரீதியான உதாரணத்தை எமக்கு விட்டுச் சென்றான்.



மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தைக் கோரியும், மக்கள் விரும்பிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் சுதந்திரத்தை கோரி, பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு உயிரைப் பணயம் வைத்து தலைமை தாங்கியவன். இந்த போராட்டத்தை வெறும் மாணவர் போராட்டமாக அல்லாது, பரந்துபட்ட மக்கள் ஜனநாயக அரசியல் போராட்டமாக மாற்றுவதில் முன்நின்று உழைத்தவன். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் அதனடிப்படையிலான கோசங்களை முன்வைப்பதில் தீர்க்கமான மக்கள் திரள் பாதைக்குரிய அரசியல் வழியை ஆணையில் முன்வைத்தவன். தனது தலைமைத்துவ அரசியல் பண்பை உறுதியாக கையாண்டதுடன், அதை பரந்துபட்ட மக்களின் போராட்டமாக மாற்றினான். போராட்டத்தின் போது உறுதிமிக்க போராட்டத்தையும், மாணவர்களின் இயல்பான சோர்வை தகர்ப்பதில் தனது தலைமைத்துவ பண்பைச் சிறப்பாக கையாண்டான்;. மிகச் சிறந்த மக்கள் பேச்சாளனாக விளங்கிய அதேநேரம், அரசியல் நாடகம், சிறுகதைகள் என சிலவற்றை எழுதியவன்;. ஆனால் அவை எதுவும் இன்று இல்லை. ராகிங்கை எதிர்த்து, அதை புரிய வைக்கவும் கூடிய ஒரு நாடகத்தைக் கூட எனது வேண்டுகோளுக்கு இணங்க எழுதியிருந்தான்.



தனது முதல் அரசியல் வாழ்வை புளாட் மாணவர் அமைப்பில் இணைந்ததன் மூலம் தொடங்கினான். புளாட்டின் மக்கள் விரோத அரசியலை விரைவில் இனம் கண்டு கொண்டதுடன், அதற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்ப முதலே ஈடுபட்டான். பல்கலைக்கழகத்தில் இருந்த புளாட் மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், புளாட்டுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினான்;. அத்துடன் தெளிவான அரசியல் ரீதியான ஒரு மாற்று வழியை அடிப்படையாக கொண்டதுடன், 1984 இல் இயக்கத்தை விட்டே விலகினான்;. அவனுடன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட புளாட் மாணவர்கள் பெரும்பாலானோர் அவனுடன் சேர்ந்து விலகினர். நான் பல்கலைக்கழகத்தில் 1985 இல் தனியாக நடத்திய போராட்டத்துடன், விரைவிலேயே தன்னை என்னுடன் அறிமுகம் செய்து கொண்டான். அப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதுடன், உறுதுணையாக கைகோர்த்துக் கொண்டான். நான் பல்கலைக்கழகம் போன அன்றே பகிடிவதை என்னும் ராக்கிங்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய போது, அது ஒரு சில நாளில் பல்கலைக்கழகம் முற்றாக பகிஸ்கரிப்பு மூலம் நிலைகுலைந்தது. எனது துண்டுபிரசுரத்தின் உள்ளடகத்தையும், அதை ஆதரித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்த அறிக்கையையும் வாபஸ் வாங்க கோரி ராக்கிங்கை ஆதரித்த மாணவர்களின் பகிஸ்காரத்தால் பல்கலைக்கழகம் முற்றாக இயங்கவில்லை. இதன் போது என்னுடன் ஒரு பகுதி மாணவர்கள் எந்த முன் அறிமுகம் இன்றி ஆதரித்து பக்கபலமாக இதை எதிர்த்து நின்றனர். இதில் விமலேஸ்வரன் மிக உறுதியாக எனக்கு ஆதரவாக நின்றான். ராக்கிங்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்களை இரண்டாக அது பிளந்தது. இதன் மூலம் பகிடிவதை என்ற நிலப்பிரபுத்துவ அதிகார பண்பாடுகளை எதிர்த்து, ஒரு அணியாக பல்கலைக்கழகம் பிளந்த போது, அதில் விமலேஸ்வரன் உறுதியாக என்னுடன் பங்காற்றினான். மாணவரிடையே பகிடிவதை பற்றி விவாதத்தை பரந்த அடிப்படையில் எடுத்துச் சென்றான். பகிடிவதையை நியாயப்படுத்த முடியாது எமக்கு எதிரான பகிஸ்காரம் தோல்வி பெற்றது.



அதே நேரம் என்னுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ள, விமேலேஸ்வரன்  தன்னை அறிமுகம் செய்து கொண்டான். நாம் ஒரே பாடசாலையில் வௌ;வேறு வகுப்புகளில் கற்று வந்ததை நினைவுக்கு கொண்டு வந்த அவன், எனது தலைமையிலான மாணவர் சங்க நிகழ்ச்சிகளை மற்றும் பாடசாலையை வழிகாட்டும் முதன்மை மாணவர் உறவையும் நினைவு படுத்தினான்;;. பின்னால் அதே பாடசாலையில் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய தற்காலிகமாக நான் விடுதி பொறுப்பாளராகவும், கணித ஆசிரியராகவும் இருந்த போது இருந்த உறவையும் நினைவுக்கு கொண்டு வந்தான். இதன் மூலம் என்னுடன் மிக நெருக்கமான உறவை, அவன் தானாக முன்வந்து ஏற்படுத்திக் கொண்டான். நான் அவனுடன் பல அரசியல் கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக நடத்தினேன். அரசியல் ரீதியாக சமூகத்தை பகுத்தாயத் தொடங்கிய அவன், பல்கலைகழக மாணவர்களின் நலனுகளுடனும் பொதுவான மக்களின் நலன்களுடனும் இணைந்து போராடினான். என்.எல்.எப்.ரி யின் மாணவர் அமைப்பான புதிய ஜனநாயக மாணவர் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டான். அந்த அமைப்பின் மூன்று பேர் கொண்ட கமிட்டியில் ஒரு உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் கொல்லப்;பட்டான்.



அரசுக்கு எதிராக போராடுவதில் தொடங்கி, இயக்கங்கள் மக்களுக்கு எதிராக நடத்திய அராஜக வன்முறைகளை எதிர்த்து போராடுவதில் ஒரு முன்னணி தலைவனாக செயல்பட்டான். சாதிய ஒடுக்குமுறை, பெண் விடுதலையில் அதிதமான கவனத்தை செலுத்தியதுடன், கூலி மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளில் அதிக அக்கறை காட்டினான். அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளில் ஒன்றி நின்றதுடன், அவர்களுடன் அவர்களாகவே வாழ்ந்தான். மக்களின் வாழ்வு மீதான சுமைகளை நீக்கவும்;, அதற்காக போராடவும் என்றும் ஒரு கணம் கூட பின்நிற்கவில்லை. இதற்காகவே படுகொலை செய்யப்படுவேன் என்று தெரிந்த நிலையிலும், அவன் ஒரு நாளும் இதைக் கண்டு அஞ்சி பின்வாங்கவில்லை. மக்களின் மேலான அன்பு, அவர்களுடன் இணைந்து இருக்கக் கோரியது. இதனால் மக்கள் நடமாட்டம் உள்ள வீதி ஒன்றில் புலிகள் சுட்டுக் கொன்று விட்டு கோழைத்தனமாக தப்பி ஓடினர். கொலைகாரர்கள் கொன்றதுடன் மட்டுமின்றி, நக்கிப் பிழைக்கும் உறவினர்களை அனுப்பி உடலைக் கூட கைப்பற்றிச் சென்றனர். அவனை நேசித்த மக்கள் அந்த உடலுடன் ஒரு போராட்டத்தை நடத்துவதை தடுப்பது அவனுக்காக மக்கள் ஒரு சொட்டு கண்ணீர் விடுவதை தடுப்பது, கொலைகார புலிகளின் குறிக்கோளாக இருந்தது.  உறவினர் என்ற பெயரில் இருந்த புலிப்பினாமிகள் உடலைக் கைப்பற்றி அதை கிளிநொச்சிக்கு கடத்திச் சென்றனர். விமலேஸ்வரனின்; தங்கை கொலைகார பினாமிகளை இனங்கண்டு உடலை பல்கலைக்கழகம் எடுத்துச் செல்லக் கோரி பிணத்தின் முன்னே நின்று போராடிய போதும், வன்முறை சார்ந்த சமூக மிரட்டல் மூலம் புலிகள் அதைத் தடுத்தனர். உடல் கொண்டு போனால் கொல்லப்படுவார்கள் என்ற மிரட்டல் பொதுவாகவே விடப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தயங்கி நிற்க, நான் வீதியில் கிடந்த அந்தப் பிணத்தை தங்கையுடன் சேர்ந்து பல்கலைக்கழகம் கொண்டுவரை தீவிரமாக முயன்று தோற்றேன். புலிகள் முன் கூட்டியே உறவினர்கள் என்ற பெயரில் இருந்த பினாமிகளை தயார் நிலையில் வைத்திருந்ததுடன், உடலைக் கடத்திச் செல்ல வாகனத்தையும் கூட தயாராக வைத்திருந்தனர். 30 நிமிடத்துக்கு எல்லாம் நடந்து முடிந்தது. விமலேஸ்வரனின் சொந்த குடும்பம் வாழ்ந்த ஊர் கிளிநொச்சியில் உள்ள பூநகரி என்பது, அங்கிருந்து கொலை நடந்த இடத்துக்கு வந்த சேர ஒரு நாள் தேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் கொலைகாரப்; புலிகள் எல்லாவற்றையும் திட்டமிட்டு தயாராகவே வைத்திருந்தனர். இது நடந்த அடுத்த நாள் புலிகள் என்னைக் கொல்ல, இரண்டு தடவைகள் என் அருகில் வௌ;வேறு நபர்கள் நெருங்கி வந்த போதும், அவற்றை முறியடித்து தலைமறைவானேன். பொதுவான மிரட்டல் படுகொலை முயற்சி மூலமே போராட்டத்தைத் தடுத்தனர். 



விமேலேஸ்வரன் தலைமை தாங்கிய போராட்டத்தில் "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என பல்கலைக்கழக மாணவர்கள் கோரினர். இந்த கோரிக்கைக்கு பகிரங்க துண்டு பிரசுரம் மூலம் 28.11.1986 இல் பதிலளித்த புலிகள், இது "..விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறியது போன்று, விமலேஸ்வரனின் உடலும் கூட புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடும் என்பதால் உடலைக் கூட கடத்திச் சென்ற போதே, எமது மக்களின் சுதந்திரங்கள் எல்லாம் "தேசியத்தின்" பெயரில் காய் அடிக்கப்பட்டது. மலட்டு தேசியத்தின் பெயரில் தேசமும் மூச்சு இழுக்க, துன்பத்தையும் துயரத்தையும் தேசிய சொத்தாக்குகின்றனர். விமலேஸ்வரனின் அரசியல் போராட்டங்கள்;, அவனின் இறந்த போன உடல் கூறும் செய்தி அனைத்தும் எமக்கு கற்றுக் கொடுப்பது, மக்களுக்காக அவர்களுடன் அவர்களின் வாழ்வியல் அடிப்படைகள் மேல் நின்று எப்படி போராடுவது என்பதைத் தான்.

30.4.2003

Last Updated on Friday, 18 April 2008 19:28