Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தமிழ்த்தாய்!

  • PDF

மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் "தமிழ்த்தாய்"

உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?

(12.08.1971 : பெரியார்)

நம் நாட்டைப் பொறுத்தவரை மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகின்றேன். மனிதன் மனிதனாக இல்லை. மனிதனை மனிதனாக்க இதுவரை இந்தியாவில் எவனுமே தோன்றவில்லை. அப்படிப் பாடுபட வந்தவனை எல்லாம் மக்கள் தடுத்தார்கள். பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக்-கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன.இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்காவண்ணம் அதன் மேல் சாஸ்திரங்கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை ஆனதால், இரு கால்களுடைய மனிதர்களாக இருந்து நாம் மிருகங்களாக இருந்து வருகின்றோம்.

 

இலக்கியம் என்றால் "அறிவு" என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்று பாடினார்கள். எந்தக் காரியத்தை எடுத்தாலும் ஏன் எதற்கு என்று சிந்திக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3,000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் “அ” வருமா என்று கேட்கிறேன்?

 

திராவிட இயக்கம் தோன்றுகிற வரை தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100 - க்கு 5 - பேர் தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது?அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால் உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

 

நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்திரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன? இங்கு எதிரிலிருக்கிற மாணவர்களில் பலர் நெற்றியில் சாம்பலடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள் தான். அவர்கள் அறிவற்றவர்கள் என்பதையே இது காட்டுகின்றது. ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் மாணவர்களைச் சாம்பலடித்துக் கொள்ளச் சொல்லமாட்டார்கள். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை- அன்பை- அறிவைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

 

நம் நாடு முன்னேற்றமடையாததற்குக் காரணம் மாணவர்களுக்கு அறிவைச் சொல்லிக் கொடுப்பதற்கு ஆளில்லாததே ஆகும். இங்குள்ள ஆசிரியர்கள் மடமையை முட்டாள்தனத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்படுவது கிடையாது. அரசியல் கட்சிகளில் சேர்ந்து கிளர்ச்சிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். எதற்காக மாணவர்கள் அரசியல் கட்சியில் ஈடுபட வேண்டும்? மேல் நாடுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு மிகவும் கட்டுப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஏதாவது சிறு தவறு செய்தால் அதனை ஆசிரியர்களிடம் தான் போய்ச் சொல்வார்கள். இங்கு மாணவரை ஆசிரியர் கண்டித்தால் உடனே மாணவனின் பெற்றோர் ஆசிரியரைக் கண்டிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும். நீங்கள் கல்வியை வளரச் செய்த இந்த அரசாங்கத்திற்கு நன்றி செலுத்த வேண்டும், நீங்கள் எல்லாம் படிக்கிற இப்பள்ளி நிறுவனருக்கு, நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அறிவோடு செய்ய வேண்டியதாகும்.

 

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்று கூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை, முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்பவர்கள் நாம் தான் ஆவோம். முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும்.

 

ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்நதெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பது தான். நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்த காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையன அல்ல.

 

இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். மனித சமுதாயத்திற்கு நன்மையாக இருக்கிற ஆட்சியினை ஆதரிக்க வேண்டியது கடமையாகும்.

 

(12.08.1971 அன்று பெரியார்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_25.html