Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் தர்மகர்த்தா அணுகுமுறை வேண்டாம்!

தர்மகர்த்தா அணுகுமுறை வேண்டாம்!

  • PDF

தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறை நிர்வாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள். இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகே தான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் போது எந்தக் கண்ணோட்டத்தில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!

சட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளிகள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும் போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்குவதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.

அரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக்குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.தந்தை பெரியார் அறிவுரை:

ஏற்றத் தாழ்வை விரும்புவோர் "உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.

(பெரியார் 85 -ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் : 92)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_4103.html