Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

சம உரிமை!

  • PDF

வாழ்க்கை இன்பத் துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவச் சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா? இல்லையா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டே யோசிக்காதிர்கள். உங்களுடைய செல்வப்பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும் மனத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

 

இன்று உலகில் கீழ்ச்சாதியார் என்பவர்களுக்குச் சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலைப் பெற்றுச் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?அப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஓப்புக்கொள்வீர்களேயானால் அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன்?

 

புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும், பெண்ணுக்குச் சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படிச் சொல்லப்படுவதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக- நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் மனஉணர்ச்சி- ஆராய்ச்சித்திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமன்று, ஒரு கட்சியன்று, ஒரு மதமன்று. ஆகையால் இத்திருமண முறை மாறுதல்களில் நாஸ்திகத்துக்கு இடமில்லை.

 

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படிச் சொல்வதனால் எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் செய்யும் மற்ற அநேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அர்த்தம். ஆதலால் அதையும் நாம் லட்சியம் செய்ய வேண்டியரில்லை.

 

மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கிற சுயமரியாதை சிலருக்குப் பிடிக்கவில்லையானால் நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்பட்டால் என்ன செய்ய முடியும்?அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்குப் பாத்தியமுண்டு?

 

ஆகையால் வேறு எந்தக் காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கைச் சுதந்திரத்தில் சமச் சுதந்திரம் ஏற்பட்டுத் தான் ஆக வேண்டும்.சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள - ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத் தான் ஆகவேண்டும்.

 

தந்தை பெரியார்

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_7163.html