Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?

இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?

  • PDF

உலகில் மனிதர் பிறப்பதும், சாவதும் "கடவுள் செயலா?'' மனிதர் செயலா?'' என்பதைப்பற்றி விளக்குவதுதான் இக்கட்டுரையின் தத்துவமாகும். மக்களுக்கு ஆராய்ச்சி அறிவின் தன்மை இல்லாததால் மனித இறப்பு பிறப்புப்பற்றிய விஷயத்தில் சிறிதும் அறிவில்லாமல் "எல்லாம் கடவுள் செயல்'' என்ற கருத்தில் உழன்று வருகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்களாய் இருந்ததால் இறப்பு - பிறப்பு பற்றிய அறிவே இல்லாதவர்களாக, அதைப்பற்றிய கவலையற்றவர்களாக இருந்து வந்தார்கள்.

 

மேல்நாட்டாரின் சம்பந்தம் நமக்கு ஏற்பட்டதற்குப் பிறகே பிறப்புப்பற்றியும், சாவு பற்றியும் நம் மனிதர்கள் சிந்தித்து அது சம்பந்தமான அறிவு பெற வேண்டியவர்களானார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுமார் 2000 - வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து பிறந்து அவர் செத்த காலத்தில் இந்த உலக ஜனத்தொகையே சுமார் 20 - கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது. பிறகு, 1500 (ஆயிரத்து அய்நூறு) வருடம் கழித்து பிறகு உலக ஜனத்தொகை (கி.பி.1500-இல் 45 - (நாற்பத்து அய்ந்து) கோடி மக்களைத்தான் கொண்டிருந்தது. பிறகு, சுமார் 300 வருஷம் கழித்து கி.பி. 1800-இல் 70 (எழுபது) கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது.பிறகு 115 - வருஷம் கழித்து 1915-இல் இந்த உலகம் 165 (நூற்று அறுபத்தைந்து) கோடி மக்களைக் கொண்டதாக இருந்தது. அன்று மக்களுடைய ஆயுள் சராசரி 25 - வருஷமாக இருந்தது.பிறகு கி.பி. 1954-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை 326 - கோடி மக்களாக ஆகி அவர்களுடைய ஆயுளும் சராசரி 60-65 வருஷங்களாகவும், நம் நாட்டில் 37- வருஷங்களாகவும் ஆகி இருந்தது.

 

இன்று 1964-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை சுமார் 350 - கோடி என்பது மாத்திரமல்லாமல் மக்களின் ஆயுள்காலம் சராசரி மற்ற நாடுகளில் 60-க்கு 70 - என்பதாகவும், நம் நாட்டில் சராசரி 50 - வருஷமென்றும் ஆகி இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இறப்பும் - பிறப்பும் பெருமளவிற்கு குறைந்து இருக்கிறது.மனிதநூல் ஆதாரப்படி மக்களுக்கு ஆயுள் 100 - வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் சராசரி ஆயுள் 20 - முதல் இன்று 50- வயது; மேல் நாடுகளில் 60-70 வயதாகவும் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் கடவுள் செயலா, மக்களின் அறிவு வளர்ச்சியும், வைத்திய வளர்ச்சியுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

இங்கிலாந்து நாட்டு சரித்திரத்தைப் பார்த்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்! காரணம் "கடவுளால் உண்டாக்கப்பட்ட நோயை மனிதன் கடவுளுக்கு விரோதமாக மருந்து கொடுத்து சவுக்கியம் செய்வதா?'' என்ற கடவுள் பக்தி காரணத்தால் கொல்லப்பட்டார்கள். நமது நாட்டிலும் காலராவுக்கும், அம்மைக்கும் 1900-ஆம் வருஷம் வரை மருந்தே இல்லாமலிருந்தது, அப்போது காலரா 100 - பேருக்கு வந்தால் 90 - பேர் செத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது 100-க்கு 10 பேர்களைக்கூட டாக்டர்கள் சாகவிடுவதில்லை.

 

அம்மைக்கு மேல் நாட்டார் அம்மை குத்தி அம்மை வராமல் தடுப்பது மாத்திரமல்லாமல், மேல் நாட்டில் வந்த பிறகு சவுக்கியம் செய்ய மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அது மாத்திரமல்லாமல், மக்கள் அதிகமாக பிள்ளை பெறாமல் இருப்பதற்கு மருந்து, இரண சிகிச்சை முதலிய காரியங்கள், மக்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணமென்று. மற்றும் மீன் பண்ணை வைத்து மீன்களை உற்பத்தி செய்கிறான் மனிதன். கோழிப் பண்ணை வைத்து முட்டைகளைப் பெருக்கி கோழிகளை உற்பத்தி செய்கிறான் மனிதன். இவற்றை தினம் கோடிக் கணக்கில் கொன்று தின்கிறார்கள் மனிதர்கள். இந்த ஜீவன்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணம் என்பதைச் சிந்தியுங்கள். தோட்டம் வைத்து காய்கறி, உணவுப் பொருள் உற்பத்தியாக்கி அறுவடை செய்து உண்பதற்கும் இதற்கும் என்ன பேதம்? சிந்தியுங்கள்! எனவே, கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது, ஆபத்தானது, வளர்ச்சியைத் தடுப்பது என்பதை உணருங்கள். இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?

 

(தந்தை பெரியார்- "விடுதலை"-21-05-1967)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_6544.html