Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் சாதி ஒழிப்பு ஏன்?

சாதி ஒழிப்பு ஏன்?

  • PDF

''ஈ.வே. ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகின்றேன். இதைத் தவிர வேறு பற்றி ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்''.

 

இவ்வாறு ஈ.வெ.ரா. தன்னையும் தன் பாணியையும் குறித்து வெளியிட்ட பிரகடனம் நமது கவனிப்புக்குரியது.

 

தான் எத்தகைய சமுதாயப் பின்புலத்தில் பணி செய்ய வந்தேன் என்பதைத் தெளிவுபடுத்தவே மேற்கண்ட பிரகடனத்தை முன் வைத்தார். பெரியார் பல்வேறு சமயங்களில் பல்வேறு முழக்கங்களையும், குறிக்கோள்களையும் முன் வைத்துப் பிரச்சாரம், இயக்கம், கிளர்ச்சிகள் ஆகியவற்றை நடத்தி வந்தார். இருப்பினும் இவற்றினூடே தொடர் சரடாக இருப்பதும், பிரதானமாக வெளிப்படுவதும் 'சாதி ஒழிப்பு' என்பதாகவே இருந்தது.

 

சாதிப் படிநிலை அமைப்பைத் தகர்க்கக்கூடிய சாதி சமத்துவத்தை நிறுவக்கூடிய கோரிக்கைகளுக்காகப் போராடுவது என்பதை ஒருபுறமும், சாதியக் கருத்தியலின் மொத்தப் பின்புலத்தையும் சாதியத்தின் சட்டமான பார்ப்பனியத்தையும் அவை சார்ந்த குறியீடுகள் புனைவுகள் ஆகியவற்றையும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்பதை மறுபுறமும் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளாய் பெரியார் மேற்கொண்டார். ஆகவே, சாதிய ஒழிப்பைப் பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்பட்ட பாங்கு 'பெரியாரியம்' என்பதாகவும் புரிந்து கொள்ள முடியும்.

 

காங்கிரஸ் கட்சியில் பெரியார் இணைந்து செயல்பட்ட காலத்தில் - திலகர் சகாப்தம் முடிவடைந்து காந்தி சகாப்தம் தொடங்கியதிலிருந்து- சட்டசபையில் நுழையாமை, ஒத்துழையாமை, கதர் வளர்ச்சி, மதுவிலக்கு, தீண்டாமைஒழிப்பு ஆகியவற்றின் காரணமாகக் காங்கிரஸ் மீது ஈடுபாடு இருந்தாலும் எல்லாவற்றையும் விட தீண்டாமை ஒழிப்புதான் தனக்கு முக்கியமானதாகப்பட்டது என்கிறார்.

 

1920-களின் தொடக்கத்தில் திருச்செங்கோட்டில் ராஜாஜி ஒரு ஆசிரமம் தொடங்கியபோது அதனைத் திறந்து வைத்துப் பெரியார் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது.

''மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரிக் கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும் அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ? இம்மாதிரியான மக்கள் இன்றும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட அவர்கள் இம் முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?''

 

என்ற உரத்தக் கேள்வி - சிந்தனை, தீண்டாமை ஒழிப்பு என்பதை மேலும் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்பதுடன் தொடர்புபடுத்திப் பார்த்தார்.தீண்டாமை ஒழிப்பு, தீண்டாதார் முன்னேற்றம் என்பதையே தனது கொள்கையாக வரித்துக் கொள்ளத் தொடங்கினார்.''நம்முடைய முன்னோர்களான அரசர்கள் அனைவரும் சாதியைக் காப்பாற்றினார்கள்.நம் முன்னோர்களான மூவேந்தர்கள் -ஐந்து வேந்தர்கள் - வெங்காய வேந்தர்கள் எல்லாம் சாதியைக் காப்பாற்றித்தான் புகழ் பெற்றார்கள். அவர்களுக்கு எல்லாம் என்ன உயர்ந்த பட்டம் என்றால் 'மனு நீதி தவறாத குணசீலர்கள்' என்பது. இதை யாரும் மறுக்க முடியாது. மனுநீதிக்குப் புறம்பாக அரசன் ஆண்டதாக இல்லை.சாதியைக் காப்பாற்றுகிற கடவுளைத்தானே இன்று நாம் வணங்குகிறோம்?

 

நாம் வணங்குகின்ற கடவுள் சாதியைக் காப்பாற்றும் கடவுள் அல்ல என்று எவராவது சொல்லட்டுமே! நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்; நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்; நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி.இதை உயர்ந்த மொழி என்கின்றனர். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழ் மொழி - சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கின்றது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று.''

 

இவ்வாறு கூறிச் செல்லும் பெரியார் 'சாதி ஒழிப்பு' என்பதன் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.''சாதி ஒழிப்புக்காரர்கள் எங்கே கொசு உற்பத்தியாகின்றதோ அங்கே போக வேண்டும்.சாதிக்கு ஆதாரம் கடவுள்; அதற்கு ஆதாரம் - புராணம்; சாதிக்குத் துணை அதன் பாதுகாப்பாளர்கள். இத்தனை பேரையும் ஒழித்தால்தானே சாதி நோய் வராமலிருக்கும்? கடவுளை வைத்துக் கொண்டு- சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எப்படி ஒழிக்க முடியும்?'' எனக் கேட்டதன் மூலம் சாதிய வேரின் ஆழத்தை நன்கு உணர்ந்து அதனை அடியோடு சாய்க்க வேண்டும் என்பதையே தனது சிந்தனையின் அடிநாதமாகக் கொண்டிருந்தார் என்பது நன்கு தெரிய வருகிறது.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_12.html